காலணியில் கதை சொல்பவள்

சிறையிலிருந்து மீண்டு
தனியாக வாழும் அவள்
தன் வீட்டு வாசலில்
காலணிகளைச் சேகரித்து வைக்கிறாள்
பல வண்ணங்களில்
பல பிராண்டுகளில்
பல அளவுகளில்

தனியாக வாழும் அவள் வீட்டு வாசலில்

ஆண்களின் காலணிகள் இருப்பது குறித்தும்
குழந்தைகள் காலணிகள் இருப்பது குறித்தும்
அதிகவிலை உயர்ந்த பெண் காலணிகள் இருப்பது குறித்தும்
கடப்பவர்கள் வினோதமாகப் பேசிக்கொள்வார்கள்.

இன்னும் சிலர்
பூமத்தியரேகையில் இருக்கும்
அவள் வீட்டின் முன்
கோடை மற்றும் பனிக்காலத்துக்கான
காலணிகள் இருப்பதை
ஆட்சேபித்தனர்

காலணிகள் அவ்வப்போது
இடமாறி இருக்கும் போது மட்டும்
பார்ப்பவர்கள் பதற்றமடைவார்கள்

கண்கள் மங்கிய ஒரு மூதாட்டி மட்டும்
அவள்
காலணிகள் மூலம்
கதை சொல்வதை கண்டுப்பிடித்தாள்.
தன் பேரன்களுக்கு
அக்கதையை
ஒவ்வொரு நாளும்
விவரித்தாள்

காலணி கதை 1

பிரிந்திருந்த
இரு ஜோடி காலணிகளில்
இடப்பக்கம் ஆண்
வலப்பக்கம் பெண்…
அதிக இடமாக வளைந்திருந்த
பெண்ணின் இடது கால் காலணி
அதிக வலமாக வளைந்திருந்த
ஆணின் வலது கால் காலணியின்
நாணத்தை
இரகசியமாய் இரசித்தது.

காலணி கதை 2

இடம்மாறி இணைய முனைந்த
இரண்டு காலணிகளும்
உரசியபோது
ஆண் மாட்டுத்தோல் எனவும்
பெண் ரப்பர் எனவும்
அடையாளங்கண்டே
அனைத்துக்கொண்டன
தத்தம் அடையாளம்
அசையாத படி

காலணி கதை 3
இரு ஆணின் காலணிகளுக்கு
நடுவில்
கவிழ்ந்திருக்கும் பெண் காலணிகள்
அத்தனை வசீகரமானது

காலணி கதை 4
பிரிந்திருந்து நின்ற
இரு ஜோடி காலணிகளில்
இடப்பக்கம் ஆண்
வலப்பக்கம் பெண்…
அதிக வலமாக வளைந்திருந்த
ஆணின் வலது கால் காலணி
அதிக இடமாக வளைந்திருந்த
பெண்ணின் இடது கால் காலணியின்
கண்ணீரை
இரகசியமாய் தவிர்த்தது.

காலணி கதை 5

புதிதாக  வாங்கப்பட்ட
குட்டிக்காலணிகள்
ஓரிடத்தில் நிர்ப்பதில்லை…
அவை ஒவ்வொரு நிமிடமும்
இடமாறுகின்றன.
இறுதியாய் அன்று இரவில்
ஒன்று ஆண் காலணி மீதும்
மற்றது பெண் காலணி மீதும்
தூங்கிப்போயின.

காலணி கதை 6

மாட்டுத்தோலால் செய்யப்பட்ட
பெண்ணின் காலணி
அன்று காலையில்
ஆணின் காலணிக்கு இடப்பக்கம்
உரசியிருந்தது.
அவை பிராண்டால்
மூலப்பொருளால்
விலையால்
ஒத்திருந்தன.

காலணி கதை 7

ஒரு ஜோடி குழந்தைக் காலணி
தனது குதூகலங்களை
தொலைத்துவிட்டு
பழைய பெண்ணின் காலணியின் மேல்
அன்று
பகல் முழுதும்
தூங்கிப்போனது.

காலணி கதை 8

நசிந்து
கிழிந்த நிலையில்
குழந்தை காலணி…

கவிழ்ந்தும்
பிறழ்ந்த நிலையில்
பெண்ணின் காலணி

காலணி கதை 9

இப்போது
பெண்ணின் காலணி
தனியாக
தியானத்தில் இருக்கிறது

இறுதியாக காலணி

கண்கள் மங்கிய மூதாட்டியின்
விவரிப்பு முடியும் போது
காலணியில் கதை சொல்பவள்
வீட்டிலிருந்து வெளிவருகிறாள்
தனியாக இருக்கும்
இரு காலணிகளையும் அணிகிறாள்
கிழிந்திருக்கும்
குழந்தை காலணியின் பின்புறம்
ஒட்டியிருக்கும் இரத்ததை
முகர்ந்து பார்க்கிறாள்
தரையிலிருந்த அவற்றை
சொர்க்கத்துக்கு நகர்த்துவதாகச் சொல்லி
ஒரு பெட்டியின் மேல்
ஏற்றி வைக்கிறாள்
பெட்டிக்குக் கீழ் இருந்த
இருண்ட சந்தில்
அவள் ஆணின் காலணிகளை எட்டி உதைக்கிறாள்
கண்கள் மங்கிய மூதாட்டி
அந்த இருண்ட சந்துதான் நரகம் என்றாள்.

(Visited 158 times, 1 visits today)

One thought on “காலணியில் கதை சொல்பவள்

  1. நரகத்தில் இருந்துகொண்டு நகரத்தை உதைக்கும் கவிதை. அருமை. நான், வேறுமாதிரி வாசித்து கலங்கினேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *