கடவுள் எனும் கருத்தாக்கம் குறித்த விமர்சனங்களோடு தமிழில் சில திரைப்படங்கள் வந்திருக்கவே செய்கின்றன. உடனடியாக எனக்கு இருவர் நினைவுக்கு வருகிறார்கள். முதலாமவர் வேலுபிரபாகரன். மற்றவர் கமலஹாசன்.
வேலுபிரபாகரன் ஆக்கங்கள் எவ்வித கலை உணர்வும் இல்லாதவர்கள் அல்லது எதுகுறித்தும் சிந்திக்காமல், உரத்து எதிர்ப்பதாலேயே அது புரட்சியாகிவிடும் என நம்புபவர்களுக்குத் தோதான திரைப்படங்களாக இருக்கும். அவை வெறும் கடவுள் எதிர்ப்புப் பிரச்சாரத்தை மட்டும் நம்புபவை. கமல் படங்கள் அப்படியல்ல. மேலோட்டமாகப் பார்க்கும் போது கலை போல தோன்றும். ஆனால், அவை ஆபத்தானவை. இஸ்லாமிய வெறுப்பை உமிழ்பவை. கடவுள் எனும் பிம்பத்தை எதிர்த்துக்கொண்டே மதச்சார்போடு அரசியல் பேசுபவை.
பொதுவாகவே நம்மிடம் இதுபோன்றவர்களின் குரல்களை வகுத்துப்பார்க்கும் பழக்கம் இருப்பதில்லை. மிக மேலோட்டமாக ஒரு கலைப்படைப்பை அணுகி ஒரு வகைமைக்குள் கொண்டுவர மெனக்கெடுகிறோம். புரட்சியாளர்களைக் காண்பதில் அத்தனை ஆர்வம் நமக்கு.
ஒரு கலைப்படைப்பு முதலில் தன்குரலை அப்பட்டமாக வெளியிடுவதில்லை. காரணம் ஒரு கலைஞன் அடிப்படையில் சிந்திக்கக்கூடியவனாக இருக்கிறான். சிந்தனை என்பது பின்பற்றுவதல்ல. ஒரு கோட்பாட்டை, ஒரு தத்துவத்தை ஏற்று அதன் பின் செல்பவன் ரசிகன் அல்லது தொண்டன். ரசிகனுக்கும் தொண்டனுக்கும் சிந்தனை வெளியில் இடமே இல்லை. அவர்கள் கூட்டத்துடன் சேர்ந்து கோஷமிடுவார்கள். சிந்தனையாளன் முரண்பட்டுக்கொண்டே இருக்கிறான். எல்லா கருத்தாக்கத்தையும் கேள்வி எழுப்பிக்கொள்கிறான். ஒருவகையில் அவன் அணுகுமுறை மூர்க்கமாகவே தொடங்குகிறது. ஆனால், அதில் தெளிவடையும்போது நிதானம் கைக்கூடி விடுகிறது.
இதை நான் என் அனுவத்திலிருந்தே கற்றேன். தீவிரமாக இலக்கியத்தில் நுழையும் தருணம் எதன் மீதும் ஒரு தீராத கோபமும் வெறுப்பு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். உண்மையில் அந்தக் கோபம் புறச்சூழலைவிட எனது இயலாமைகளின் போதாமைகளின் கோபமாகவே இப்போது நான் நினைத்துப்பார்க்கிறேன். ஆனால் நமக்குள் நாம் விவாதித்து விவாதித்து முரண்பட்டு கலையை ஒட்டிய சிந்தனைகள் ஓரளவு முழுமையான வடிவம் பெறும்போது அந்தக் கோபம் நகைச்சுவையாக உருப்பெறுகிறது. நாம் மிக எளிதில் சிரிக்கப்பழகிக்கொள்கிறோம். சட்டென ஒரு ஆழமான கிண்டலின் மூலம் அவ்விடத்தைக் கடக்கிறோம். நமது மொத்தப்பார்வையையும் நிதானத்துடன் நகைச்சுவைத்ததும்ப கூறிச்செல்ல முடிகிறது.
சந்தேகமும் முழுமையும் ஒரு நாணயத்தின் இருப்பக்கம் போலத்தான்.
சந்தேகம் இருக்கும் இடங்களில் பதற்றம் கூடுகிறது. நிறைவு பெறாமல் இருக்கும் பகுதியைப் பதற்றத்தைக் கொண்டு நிரப்புகிறோம். இதை நமது நண்பர்கள் மத்தியில் கூட பார்க்கலாம். தனது ஆற்றல் மீது சந்தேகம் கொண்ட ஒருவரே அதிகமான கவனத்தைக் கோரிக்கொண்டே இருப்பார். யாருடைய கவனமும் தன்மீது படாத தருணம் மூர்க்கமாக எதையாவது செய்ய விளைவார். தனது சோகம் மூலமாக, தனது சாதனைகள் மூலமாக, தனது மகிழ்ச்சிகள் மூலமாக கவனம் கிடைக்கப் போராடுவார்.
தேர்ந்த கலைஞர்கள் கூடியிருக்கும் திசைகளில் நான் சிரிப்பொலியைத்தான் கேட்கிறேன். ஒன்றை முழுமையாக அறியும் போது அங்கு இறுக்கம் இருப்பதில்லை. மனம் தளர்கிறது. அங்கு அதற்குமேல் இரகசியங்கள் இல்லை. இரகசியம் இல்லாத இடத்தில் எதுவும் நிதானத்துடன் நிகழ்கிறது. சாதாரணமாகவே நம்மூர் பெரிசுகளிடம் இந்த நிதானத்தைப் பார்க்கலாம். வாழ்வை முழுமையாக அறிந்த ஒருவரிடம் எந்தச் சிக்கலைச் சொன்னாலும் எளிமையாக்கிச் செல்வதைக் காணலாம்.
அமீர்கான் நடித்து வெளிவந்துள்ள ‘பிகே’ திரைப்படத்தைப் பார்த்தபோது எனக்கு அவ்வாறுதான் தோன்றியது. சர்ச்சையான ஒரு கருவை அனைவரும் இரசிக்கும்படி திரைக்கதையாக்கியுள்ளனர். அதில் அவர்களுக்கு சந்தேகமோ குழப்பமோ துளியும் இல்லை. கட்டுரையாக எழுதி வாசித்தால் மதவாதிகள் பொங்கியெழும் ஒரு கருவை வயிறு குலுங்க சிரிக்கும் படி திரைக்கதை அமைத்தவர்களைப் பாராட்டத்தான் வேண்டும்.
வேற்றுகிரகத்திலிருந்து வந்து , தனது கிரகம் திரும்ப பயன்படும் தொலைவியக்கியை ஒருவனிடம் பரிகொடுத்து அதை தேடி அழைகிறார் அமீர்கான். அனைவரும் அவரிடம் கடவுள்தான் உங்களுக்கு உதவுவார் எனக்கூற கடவுளைத் தேடி அலைகிறார். மதங்களும் சடங்குகளும் அவரைக் குழப்புகின்றன.
ஒரு மதம் மாட்டை கடவுள் என்கிறது. ஒரு மதம் அதை உணவு என்கிறது. ஒரு மதம் கடவுளுக்கு ‘வைனை’ படைக்கிறது. ஒரு மதம் மதுவை வெறுக்கிறது. ஒரு மதத்தில் காலணி அணிந்து வணங்க அனுமதி உண்டு. ஒரு மதத்தில் இல்லை. வெள்ளையாடை விதவைக்கான உடையென ஒரு மதம் சொல்கிறது. வெள்ளையாடையே ஒரு மதத்தின் திருமண உடையாக இருக்கிறது. மதமும் சடங்களும் வேற்றுக்கிரகவாசியான அமீரை பந்தாட அவர் கடவுள் காணாமல் போய்விட்டதாகப் போஸ்டர் அடித்து தேடுகிறார். மதங்களுக்குள்ளான இந்த முரண்நகையும் அதை அறியாது பின் செல்லும் ஒரு குழந்தையைப் போன்ற அமீர்கானுக்கு நடக்கும் சம்பவங்களும் முதல் பகுதி என்றால் அதன் குழப்பங்களை பகிரங்கமாக வாதிடுவது இரண்டாம் பகுதி.
கடவுளின் தூதுவர்களாக உலாவும் காப்பிரட் சாமியார்களைக் கடுமையாக விமர்சித்து உருவாகியுள்ளது இரண்டாம் பகுதி. “உங்களைப் படைத்த கடவுளை நான் எதிர்க்கவில்லை; நீங்கள் படைத்த கடவுளைதான் நான் மறுக்கிறேன்” என பேசும் அமீர்கானின் வசனத்தில் அரங்கம் கைத்தட்டுகிறது. “நாமெல்லாம் கடவுளின் குழந்தைகள் என்றால் கடவுள் ஏன் இத்தனை சிக்கலான பரிகாரங்களைக் கேட்க வேண்டும். உன் அம்மா உன்னை தரையில் உருளச்சொல்வாரா?” என சாட்டையடியாக விழும் வசனங்கள் தொடர்ந்து அதிர்ச்சியலையை திரையரங்கில் ஏற்படுத்துகிறது. ஆனால் இந்த அத்தனைக் கேள்வியையும் அமீர்கான் ஒரு குழந்தையாக இருந்து கேட்கிறார். அவர் விவாதிக்கவில்லை. பூமிக்கு புதிதாக வந்த அவருக்கு எழுந்துள்ள குழப்பங்களை பச்சையாக கொப்பளித்து நமது முகத்தில் உமிழ்கிறார். என் சந்தேகத்துக்கு பதில் சொல்லுங்கள் என உலுக்கியெடுக்கிறார்.
“நீ செய்த பாவங்களால்தான் ஏசு கிருஸ்து இறந்தார்…” எனச்சொல்லும் மதவாதியிடம் “நான் இப்பதானே பூமிக்கே வந்தேன்” என அப்பாவியாக கேட்கும் இடமெல்லாம் குற்ற உணர்ச்சியைத் திணித்து மதத்தை வளர்க்கும் எந்த அமைப்பும் கோவம் கொள்ளவே முடியாமல் போகிறது. ஒரு கல்லியில் வெற்றிலை எச்சிலைத் தடவிய கொஞ்ச நேரத்தில் அது எவ்வாறு பக்தியின் மையமாக ஆகிறதென்றும், அதைச் சூழ்ந்து எவ்வாறு வணிகம் வளர்க்கிறதென்றும் அமீர்கான் செய்து காட்டும் இடம் ஒரு சிறுகதைபோல வடிவமைக்கப்பட்டுள்ளது.
கலை வெளிபாடு சுதந்திரமானது. பிகே திரைப்படத்துக்கு கடுமையான எதிர்ப்புகள் இந்துத்துவ அமைப்புகளிடையே வந்துகொண்டே இருக்கின்றன. ஆனாலும் படத்துக்கு அரங்கம் நிறைந்துள்ளது.
ஒரு மனிதன் கடவுள் எனும் கருத்துருவாக்கத்தை நம்புவதையோ அந்த நம்பிக்கையின் மூலம் கிடைக்கும் சுய திருப்தியையோ படம் எங்குமே சாடவில்லை. அதையெல்லாம் வேலுபிரபாகரனும் சத்யராஜும் புரட்சி என்ற பெயரில் நக்கலடித்துக்கொண்டிருப்பார்கள். மன ரீதியாக அவரவருக்கு உத்வேகம் தரும் பட்சத்தில் உண்மையில் யாரின் பக்தியையும் யாரும் தடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால், பிகே இறுக்கிப் பிடிக்கும் குரல்வளை மதத்தினுடையது.
மதம் என்ற நிருவனத்தின் கீழ் நடக்கும் வணிகம் பற்றியது. வணிகத்தில் இருக்கும் பொய்மை பற்றியது. பொய்மைகளை மையமாக வைத்து நிகழும் வன்முறைகள் பற்றியது. வன்முறைகளைத் தூண்டும் அதிகாரம் பற்றியது.
அதிகாரத்தை கேள்வி எழுப்பும் எழுதுவுமே எனக்கு உவப்புதான்.