ஹெமிங்வேயின் மீன்

hemiஒரு நதியில் இரு குச்சிகள் விழுகின்றன. ஒன்று குறுக்காகவும் மற்றது நேர்கோட்டிலும் மிதக்கின்றன. நேர்கோட்டில் விழுந்த குச்சி நதிக்கு தான்தான் பாதை காட்டுவதாக ஆனந்தத்தில் நதியுடன் இணைந்து பயணித்தது. குறுக்கே விழுந்த குச்சி தான் நதியின் ஓட்டத்தைத் தடைப்படுத்தப் போவதாகக் கடைசி வரை சாகசங்கள் செய்து பார்த்தது. இறுதியில் இரு குச்சிகளுமே பெரும் பள்ளத்தில் போய் விழுந்தன. நதிக்குக் குச்சிகள் குறித்து ஒன்றுமே தெரியாது. ஓஷோ சொன்ன இந்தக் கதையை நான் பலமுறை நினைவு படுத்தியுள்ளேன்.

ஒருவகையில் இந்தச் சின்னக் கதை ஒட்டுமொத்த வாழ்வையும் சொல்கிறது. நதி ஒரு மனநிலை என்றால் இதற்கு எதிர்மாறான லட்சியங்கள் கொண்ட குச்சிகள் மற்றுமொரு மனநிலை. வாழ்வு அத்தனை சாகசம் நிறைந்தது எனச்சொல்லும் அனுபவமே வாழ்வு அர்த்தமற்றது என சொல்லவும் செய்கிறது. இவை இரண்டையும் ஒரே கோட்டில் சொல்லும் புனைவுகள் பேரிலக்கியங்களாக மதிக்கப்படுகின்றன. தமிழில் அவ்வாறான ஒரு புனைவாக சட்டென நினைவுக்கு வருவது ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ என்ற நாவல்தான். ஆனால் அதற்கு முன்பே எனக்கு அதுபோன்ற ஒரு மனநிலையை ஏற்படுத்தியது ‘கிழவனும் கடலும்’ என்ற நாவல்தான்.

அமெரிக்க எழுத்தாளரன ஹெமிங்வேயின் படைப்புக்குறித்து பேசலாம் என முடிவெடுத்தவுடன் அவரது சிறுகதைகளைவிட  1953 ல் புனைவுக்கான புலிட்சர் விருதும் 1954 ல் இலக்கியத்திற்கான பங்களிப்பை வழங்கியதற்காக நோபல் பரிசு வழங்கப்பட காரணியாக இருந்த ‘கிழவனும் கடலும்’ என்ற நாவல் குறித்து பேசுவதே தகுந்ததாகத் தோன்றியது.

‘கிழவனும் கடலும்’ வாசிக்க எளிமையான சின்னஞ்சிறிய நாவல். எவ்வித உணர்ச்சியம்சமும் இல்லாமல்  காட்சி அமைப்புகளால் விரியும் நாவல் அது. ஆனால் அத்தனை எளிதாக ஒற்றைவரியில் சொல்லும் கதையில்லை. வெளித்தோற்றத்தில் சமமாகத் தெரிந்து; விரிக்கும் போது முற்றுபெறாத உள்மடிப்புகளைக்கொண்ட ஒரு திரைச்சீலையாக அந்நாவலைக் கற்பனை செய்துக்கொள்ளலாம்.

மீன் ஏதும் கிடைக்காமல் எண்பத்தி நான்கு நாட்களாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் சான்டியாகோ எனும் கிழவர் அதிஷ்டம் இல்லாத மீனவனாகக் கருதப்படுகிறார்.  அவர் மீது பரிவு கொண்டு அவரை கவனிக்கும் மனோலின் எனும் சிறுவனுக்கும் அவருடன் கடலுக்குச் செல்ல பெற்றோரால் தடைவிதிக்கப்படுகிறது. தன்னந்தனியாக கடலுக்கு செல்லும் கிழவனின் தூண்டிலில் மாட்டும் பிரம்மாண்டமான மார்லின் வகை மீனின் இழுப்பிற்கு ஈடுகொடுத்து இரண்டு இரவுகள் இரண்டு பகல்கள் தனது சின்னஞ்சிறிய படகில் பயணிக்கிறார் கிழவர். முடிவில் அதை கொன்று படகுடன் சேர்த்துக் கட்டி உற்சாகத்துடன் திரும்பும்போது மீனின் இரத்த வாடையில் ஈர்க்கப்பட்ட சுறாக்களால் குதறி எடுக்கப்படுகிறது அவனுடைய மீன். தொடர்ந்து சுறாக்களுடன் போராடுகிறான். வெறும் எலும்புக்கூடுடன் இறுதியில் சோர்ந்து கரையொதுங்குகிறார்

இந்தக்கதையை மீன் பிடிப்பது பற்றிய கதையாக மட்டும் வாசித்துவிட்டு நகர்ந்துவிடுவது அபத்தம். அதைத்தாண்டி எண்பத்தி நான்கு நாள்கள் மீன் கிடைக்காமல் இறுதியில் கிடைத்தும் தக்க வைக்க முடியாத வாழ்வின் இரக்கமற்ற தன்மையை பேசும் கதையாகவும் காணலாம். படகில், அவ்வப்போது சிறுவன் வந்திருந்தால் தேவலாம் என நினைத்து ஏங்கும் கிழவரின் வெல்ல முடியாத தனிமையையும், காதடைக்கும் சூன்யத்தையும் சொல்வதாகவும் காணலாம். முன்பு தேர்ந்த மீனவராக இருந்தவரின் அத்தனை சாகசமும் முதுமையில் கண்டுக்கொள்ளப்படாத நிலையில் நாம் சாதித்தவை என நம்பியிருக்கும் அனைத்தையும்  காலம் கருணையற்று மறக்கும் எனவும் புரிந்துகொள்ளலாம். இவற்றையெல்லாம் மீறி, எல்லாம் போனப்பிறகும் வெறும் எலும்பைத் தன் படகில் கட்டிக்கொண்டு வரும் முதியவர் நிரூபிக்க நினைக்கும் அடையாள நிலைநாட்டலையும் அதன் மூலம்  இன்னும் கௌரமாகப் பெரும்  சிறுவனிடம் மதிப்பையும்கூட இந்த நாவலின் கதையம்சமாகச் சொல்லலாம்.

ஆனால் முன்பே நான் சொன்னதுபோல இவை மட்டுமே இந்த நாவலை அறியும் வழியல்ல. கிழவனுக்கு நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன், தன்னிரு கரங்கள் என அனைத்துமே சகோதரர்கள் தான். அவரைத் துன்பப்படுத்திக்கொண்டிருக்கும் பிரம்மாண்ட மீனுக்குக்கூட சகோதர ஸ்தானம் கொடுக்கிறார். .  அதை முழுவதுமாக நேசிக்கிறான். ஆனால் நேசிக்கும் ஒன்றிடும் தோற்று மடிவது சாத்தியம் இல்லை. வேறு வழியில்லாமல் அந்தப்பெரிய கொல்கிறான்.

நாவல் முழுவதும் வாழ்வின் இறுதி காலத்தில் எதையோ நிரூபிக்க போராடும் கிழவன். நிரூப்பிக்க அவசியமற்று தன்னியல்பில் வாழ்வுக்குப் போராடும் மீன். அன்பையும் அதே சமயம் போராட்டத்தை அர்த்தமிழக்க வைக்கும் சுறாக்கள், பயனற்ற எலும்புகளை சுமக்கும் படகு, இந்த மாறுபட்ட அனைத்து அம்ச நிலைகளுக்கும் அர்த்தம் புரியாது அலையெழுப்பும் கடல் என இந்த நாவல் வாழ்வின் அபத்தங்களை படிமங்களாகச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. அதனாலேயே இன்றும் இந்த நாவல் வாசிப்புக்குப் புதுமையாக இருக்கிறது. மீண்டும் மீண்டும் வாசித்து வாழ்வின் புதிய கண்டடைவுகளைக் கொடுப்பதாலேயே இது பேரிலக்கியமாக மதிக்கப்படுகிறது,

ஒருவகையில் இந்த நாவல் மூலமே ஹெமிங்வே வாழ்வின் சூட்சுமத்தை அறிய முயன்றிருக்கலாம். கிழவன், மீன், சுறா, படகு என எதற்குமே அர்த்தம் தெரியாத கடல்போன்ற வாழ்வு அவருக்கு வியப்பளித்ததோ என்னவோ, தன்னிடமிருந்த பல துப்பாக்கிகளில் அவருக்கு மிகவும் பிடித்தமான பொஸ் துப்பாக்கியை எடுத்து அதற்குள் இரண்டு ரவைகளைப் போட்டு நிறைத்தார். துப்பாக்கி குழலை வாய்க்குள் விட்டு விசையை அழுத்தி தற்கொலை செய்துகொண்டார்.

வயது செல்லச் செல்ல அவரால் எழுத முடியாமல் போனது. அதை அவர் எதிர்ப்பார்க்கவில்லை. ‘ இன்னும் பெரிய படைப்பு ஒன்றை படைக்கலாம் என நினைத்தார். புது சிந்தனைகள் தோன்றாமல் ’ஒரு நல்ல வசனம் வேண்டும்’ என்பதே அவரது பிரார்த்தனையாக இருந்தது. மீனுடன் போராடிய கிழவனாகவே ஹெமிங்வே வாழ்ந்துள்ளார்.

நாவலில் வரும்  ஒருவரியை அவர் கிழவனுக்கும் பெரிய மீனுக்கும் சொன்னதாகப் படவில்லை. வாழ்வுக்கும் தனக்கும் சொல்லியிருக்கிறார்.

“என்னால் அதை ஒன்றும் செய்துவிட முடியாது. அதுவும் என்னை எதுவும் செய்துவிடாது என்று நினைக்கிறேன், இப்படியே போய்க்கொண்டிருந்தால்.’’

இயக்கவூட்டு படமாகக் காண

(Visited 121 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *