மண்டோவின் துப்பட்டா

நீங்கள் எந்தக் கதையையாவது படித்து குற்ற உணர்ச்சி அடைந்ததுண்டா? உங்களை நீங்களே கீழான மனோநிலைக்கு நகர்த்தி வைத்ததுண்டா? உங்கள் மனதில் உள்ளிருக்கும் மிருகத்தை அடையாளம் கண்டதுண்டா?

என்னை அப்படியொரு படைப்பு செய்தது என்றால் அது மண்ட்டோவின் சிறுகதையாகத்தான் இருக்கும். ஒரு சிறுகதையில் வாசகனின் பங்களிப்பு என்ன என்பது மிக முக்கியமான கேள்வி. அவன் கதை கேட்பதை மட்டுமே வேலையாகச் செய்கிறான் என்றால் நிச்சயம் சிறந்த வாசகனாக இருக்க முடியாது. நாம் இன்று காணும் பெரும்பாலோர் சிறுகதையை வாசித்து அதன் சாரத்தை மட்டுமே அறிந்துகொண்ட சாரசரி வாசகர்கள்தான். அவர்களால் கதையை மட்டுமே சொல்ல முடியும். கதையில் பயன்படுத்தப்பட்டுள்ள சில வார்த்தைகள் பிரயோகத்தைச் சுட்டிக்காட்டமுடியும். வெகுசிலரே சிறுகதையுடன் உரையாடல் நடத்துகின்றனர். ஒரு சிறுகதையை வாசித்து முடித்தப்பின் உடன்பட்டும் முரண்பட்டும் தான் யாராக இருந்திருக்கிறோம் என்று மீளாய்வு செய்கின்றனர்.

உண்மையில் ஒரு நல்ல சிறுகதை ஒரு நல்ல வாசகனுக்காகக் காத்திருக்கிறது.

பாகிஸ்தான் எழுத்தாளரான மண்டோவின் ‘திற’ என்ற சிறுகதை தமிழில் பலரால் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. ராமாநுஜம், மா.இராமலிங்கம், கோரா போன்றவர்கள் உருது மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்ட இச்சிறுகதையைத் தமிழ்ப்படுத்த முயன்றுள்ள பட்சத்தில் அவற்றில் எது உண்மையான சிறுகதை வடிவத்தை அடைந்துள்ளது என அறிய பலமுறை வாசித்துள்ளேன். என் வாசிப்பில் புலம் பதிப்பில் ராமாநுஜம் அவர்கள் மொழிபெயர்த்த ‘மண்ட்டோ படைப்புகள்’ எத்தனை முறை வாசித்தாலும் முதல் வாசிப்பில் கொடுத்த அதிர்ச்சியையும் பதற்றத்தையும் கொஞ்சமும் குறைக்காமல் தன்னகத்தே வைத்துள்ள கச்சிதமான வடிவம் என்பேன்.

மயக்கத்திலிருந்து எழுந்த சிராஜூதினுக்கு தன் இருப்பிடன் சூரையாடப்பட்டது, தீவைக்கப்பட்டது, அவர் கண் முன்பே அவர் மனைவி கொல்லப்பட எப்படியாவது தங்கள் மகளான ஷகினாவை காப்பாற்றிவிடும்படி கெஞ்சியது, வேறு இடம் செல்ல இரயிலில் ஏறியது என ஒவ்வொன்றாக நினைவுக்கு வருகிறது. கடைசியாக அவள் தன் மகளைப் பார்த்த நிமிடம் மட்டும் நினைவுக்கு வருகிறது. அவரும் ஷகினாவும் வெறும் காலோடு ஓடிக்கொண்டிருக்கின்றனர். அப்போது அவள் துப்பட்டா கீழே விழுந்தது. அந்தப் பதற்றதிலும் அவர் தன் மகளின் துப்பட்டாவை எடுக்கக் குனிகிறார். நிமிரும் போது அவள் கூட்டத்தில் காணாமல் போயிருந்தாள்.

அவள் அந்தக்கூட்டத்தில் ரயிலில் ஏறினாளா இல்லையா என்ற குழப்பமே அப்போது அவரை வாட்டியது. அவர் தன் மகளைத் தேடி தேடியே ஆறு நாள்கள் கடந்தன. ஒருநாள் அவர் ஒரு இளம் சமூக சேவகர்கள் குழுவைப் பர்க்கிறார். அவர்களால் அவளை மீட்க முடியும் என நம்புகிறார். அவர்களிடம் தன் மகளின் அடையாளங்களைக் கூறி உதவி கேட்கிறாள். தன் மகள் எவ்வளவு அழகானவள் என சொல்கிறார். அவள் கன்னத்தில் மச்சம் இருப்பதை அடையாளமாகச் சொல்கிறார். அந்த எட்டு வாலிபர்களும் நிச்சயம் மீட்பதாக உறுதி கொடுக்கின்றனர். அதே போல அவர்கள் உயிரை பணயம் வைத்து மீண்டும் அந்தக் கலவரம் நடந்த பகுதிக்குப் போகின்றனர். அங்கு ஏற்கனவே துன்பத்தில் இருக்கும் பல ஆண்கள், பெண்கள், குழந்தைகளைப் பாதுகாப்பான இடத்தில் சேர்த்து உதவுகின்றனர். ஆனால் ஷகினாவை மட்டும் காணவில்லை.

ஒரு சமயம் தற்செயலாக ஷகினா அவர்கள் கண்களில் தட்டுப்படுகிறாள்.அவள் கன்னத்தில் இருக்கும் மச்சம் அவர்களுக்கு அடையாளம் சொல்கிறது. அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். துப்பட்டா இல்லாத அவளுக்கு ஒருவன் தனது மேல் சட்டையைக் கொடுத்து உதவுகிறான்.

இவ்வாறு கதை போய்க்கொண்டிருக்க சிராஜீதின் இன்னும் தன் மகள் காணவில்லை என தேடிக்கொண்டிருக்கிறார் என தொடரும் போது நமக்கு அதிர்கிறது. அவர் மீண்டும் அந்த இளம் சமூக சேவகர்கள் குழுவைப் பார்க்கிறார். அவரைப்பார்த்ததும் அவர்கள் லாரி நகர்கிறது. “உன் மகள் வருவாள்’ என அவர்கள் கூச்சல் இடுகின்றனர். சிராஜீதினும் அவர்கள் வெற்றிபெற பிரார்தனை செய்கிறார்.

நான்கு நாள்களுக்குப் பின் சிலர் கூட்டமாக ஒரு பெண்ணைத் தூக்கி வருகின்றனர். ரயில் தண்டவாளம் அருகே கிடந்தது என்கின்றனர். அந்த உடலை மருத்துவமனைக்குள் சேர்க்கின்றனர். சிராஜூதினும் அவர்களைப் பிந்தொடந்து சென்று உயிரற்ற உடலாக இருக்கும் அந்தப்பெண்ணைப் பார்த்து ‘ஷகீனா’ என அலருகிறார். ஆம் அவள் ஒரு பிணம் போல இருக்கிறாள். நாடித்துடிப்பை பரிசோதித்த மருத்துவர் இருளாக இருக்கும் அந்த அறைக்கு வெளிச்சம் வர வைக்க ‘திற’ என்கிறார்.

செயலற்றுக் கிடந்த அந்த உடலில் அசைவு ஏற்பட்டு அதன் கைகள் இடுப்பில் கட்டியிருந்த நாடாவை அவிழ்த்து சல்வாரை கீழே இறக்கியது. மருத்துவருக்கு உடல் வியர்க்க சிராஜூதின் “என் மகள் உயிரோடு இருக்கிறாள்” என சந்தோசத்தில் கத்துவதாக சிறுகதை முடிகிறது.

இந்தச் சிறுகதையில் அவள் வன்புணர்ச்சி செய்யப்பட்டதாக எந்த இடத்திலும் ஒருவரிக்கூட இல்லை. சிறுகதையின் முடிவு அவள் ஆழ்மனம் வன்புணர்ச்சிக்கு பழகும் அளவுக்கு மனம் எவ்வாறு சிதிலமடைந்துள்ளது என்பதைத் துள்ளியமாகக் காட்டுகிறது. தன் மகளின் மானம் காக்க துப்பட்டாவை தேடி எடுத்த அப்பா அவளிடம் எஞ்சி இருக்கும் உயிருக்காக மட்டுமே சந்தோஷப்படும் அளவுக்கு வாழ்வு கசங்கியியிருக்கிறது. இவை ஒரு புறம் இருக்க, இக்கதையை வாசிக்கும் எந்த வாசகரும் மகள் மீட்பவர்களிடம் கிடைத்தப்பின்பும் தகப்பனிடம் சேராததற்கு அவர்களாகவே ஒரு காரணத்தைக் கண்டடைகின்றனர்.

சிறுகதையில் அவள் வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டதை சிறுகதை ஆசிரியர் சொல்லாதபோதும் அவ்வாறுதான் நடந்திருக்கும் என நம்மை ஒரு முடிவுக்கு நகர வைப்பது எது?

ஒரு தீவிரமான வாசகன் சிந்திக்க வேண்டிய கனம் இதுதான். எத்தனையோ எண்ணற்ற சம்பவங்களை கற்பனை மூலம் சொல்ல முடிகின்ற மனித மனம் ஆசிரியர் விடும் இடைவெளியை நிரப்ப பயன்படுவது வாசகன் கொண்டுள்ள வன்முறை மனம்தான். இந்தக் கதையை வாசித்து முடித்தபோது நான் என்னை அந்த இளம் சமூக சேவையாளர்களில் ஒருவனாகவே கற்பனை செய்துக்கொண்டேன். எனக்கு கடும் குற்ற உணர்ச்சியை இக்கதை கொடுக்க அதுவே காரணம்.

அந்த சேவையாளர்கள் கெட்டவர்கள் அல்ல. அவர்கள் அனைவருக்கும் உயிரை பணையம் வைத்து உதவுகிறார்கள். ஆனால் சட்டங்கள் இல்லாத கலவர தேசம் அவர்களுக்குள் இருக்கும் மனிதத்தை வெளிக்கொணர்வது போலவே மிருகத்தையும் ஒருகனம் வெளிக்கொணர்கிறது. மனிதத்தால் நன்மை அடைந்தவர்கள் சில பெண்கள், ஆண்கள், குழந்தைகள் போல மிருகத்தால் நிந்திக்கப்பட்டவர்கள் ஷகினா அல்லது அவளைப் போல சிலர்.

மனிதன் என்பவன் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட விலங்கு. சமூக அறம் அவனை கட்டுப்படுத்தியுள்ளது. ஆனால் அந்த மனம் ஓயாத மிருக ஓலத்தை மௌனமாக வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறது. நமது மனதில் இருக்கின்ற மிருகத்தின் ஒரு பகுதிதான் இந்தக் கதையில் இடைவெளியை நிரப்புகிறது. நமக்குள் இருக்கும் மிருகத்தை இரக்கம் இல்லாமல் அடையாளம் காட்டுகிறது.

(Visited 174 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *