டோட்டோ சானின் தொப்பி

F201212011327141194012301உண்மைக்கு நிகரான கதை ஒன்று உள்ளதா என பலமுறை கேள்வி எழுந்துள்ளது. ஒருவர் தன் கற்பனையில் சொல்லும் ஒரு கதைக்கும் தன் வாழ்விலிருந்து சொல்லும் அனுபவத்துக்கும் அதை வாசிக்கும் வாசகர்களின் மனநிலையில் மாற்றம் நிகழ்வதுண்டு. உதாரணமாக கற்பனையால் வடிவமைக்கப்படும் ஒரு நவீன கட்டத்தைவிட வரலாற்றில் அம்பெத்காரோ அல்லது தந்தை பெரியாரோ பயன்படுத்திய ஒரு பேனாவைத் தொடும்போது ஏற்படும் சிலிர்ப்பு வித்தியாசமானது.

ஜப்பானிய தொலைக்காட்சியில் தோன்றும் புகழ்ப்பெற்ற நடிகை மற்றும் அறிவிப்பாளரான Tetsuko Kuroyanagi எழுதிய டோட்டோ சான் – சன்னலின் ஓரம் சிறுமி என்ற ஜப்பானிய நூல் முதல் ஆண்டிலேயே 45,00,000 விற்பனையானது. ஒருவகையில் இது Tetsuko Kuroyanagi அவர்களின் அனுபவக் கதை. அவருக்கு இப்போது வயது 82.

திரு.கோபயாஷி என்பவரின் சுய முயற்சியில் உருவான ‘டோமோயி’ எனும் பள்ளியைப் பற்றியும் அப்பள்ளியில் தான் பயின்ற அனுபவம் குறித்தும் இந்நூல் சுவாரசியமாக விவரிக்கிறது.

டோட்டோ – சான் ஒரு பள்ளியிலிருந்து நீக்கப்படுகிறாள். அதற்குப் பள்ளி நிர்வாகத்திடம் சில காரணங்கள் உள்ளன. முதலாவது காரணம், அவள் அடிக்கடி மேசை டிராயரை இழுத்து மூடுகிறாள். அது மற்ற மாணவர்களுக்குத் தொல்லையாக இருக்கிறது. இரண்டாவது காரணம், அவள் அடிக்கடி எழுந்து சன்னலின் ஓரம் சென்று விடுகிறாள். அங்கு செல்லும் வீதி இசைக்கலைஞர்களை அழைக்கிறாள். இவை அவளை பள்ளியிலிருந்து நீக்க போதுமான காரணங்களாகின்றன. அவள் தாய் அவளிடம் அவள் செய்கைக்கான காரணம் கேட்கிறாள். டோட்டோவிடம் காரணம் இல்லாமல் இல்லை.

 “வீட்டிலுள்ள என் மேஜையை நீ இழுப்பியே, அதில டிராயர்தான் இருக்கு… ஆனால் ஸ்கூல்ல உள்ள மேஜையின் மேல் பகுதியை நீ தூக்கி விடலாம். அந்த மேஜையே ஒரு பெட்டி மாதிரி இருக்கு. அதை திறந்து மூட நல்லா இருக்கு,” என தனது நியாயத்தைக் கூறுகிறாள். அதோடு இல்லாமல், புதிதாக அவள் சேரப்போகும் பள்ளிக்கு ‘இசைக்கலைஞர்கள் வருவார்களா?’ என ஆவல் பொங்க பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட வலி தெரியாமல் கேட்கிறாள். அம்மாவுக்குதான் வருத்தம். அவள் குணத்துக்கு ஏற்ற ஒரு பள்ளியைக் கண்டடைகிறாள். அதுதான் ‘டோமோயி’.

‘டோமோயி’ என்ற அந்தப் பள்ளி மற்ற பள்ளிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. கைவிடப்பட்ட ரயில்பெட்டிகள் வகுப்பறைகளாக மாற்றப்பட்டுள்ளன. சுதந்திரமான பாடத் திட்டம், சரிவிகித உணவு முறை, உடல் ஊனமுற்ற குழந்தைகளும் பங்குபெறும் வகையில் விளையாட்டுப் போட்டிகள், இயற்கையிலிருந்து நேரட்டியாக கற்பிக்கும் முறை, கேளிக்கைகள், இசையுடன் கூடிய உடற்பயிற்சி வகுப்புகள், திறந்தவெளி, சமையல் வகுப்புகள் என திரு.கோபயாஷின் முழு கற்பனையில் குழந்தைகளுக்குக் குதூகலம் கொடுக்கவே அப்பள்ளி உருவாக்கப்பட்டுள்ளது.

திரு.கோபயாஷிக்கும் டோட்டோ- சானை மிகவும் பிடித்துப் போய் விடுகிறது. அவளை பேச விட்டு கேட்கிறார். அது அவளுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவளை அவ்வளவு பேசவிட்டுக் கேட்ட முதல் ஆசிரியர் அவர்தான். அதனாலேயே அவள் ஆர்வமாகப் பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறாள். தனதுஒவ்வொரு தவறுகளின் விளைவுகளை அறிந்து , அந்த அனுபவங்கள் மூலமே அதை திருத்தும் வகை செய்கிறார் திரு. கோபயாஷி.

பொதுவாகவே எல்லாப்பள்ளிகளிலும் உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்குப் பிரத்தியேக போதனா முறை இருக்கும். ஆனால் டோமாயில் எல்லா குழந்தைகளும் ஒன்று தான். டோட்டோசானும் மாற்றுத்திறனுடைய நண்பர்களுடன் கலந்து பழகுகிறாள். மதிய உணவின் போது, எல்லாக்குழந்தைகளையும் ஒன்றாக அமர்த்தி, “கடலில் இருந்து கொஞ்சம், மலையில் இருந்து கொஞ்சம் ” என அவரவர் உணவுகளைப் பகிர்ந்து கடல் மற்றும் நிலத்திலிருந்து கிடைக்கும் உணவை சரிசமாக உண்ண பழக்கப்படுத்தும் பள்ளி நமக்குப் புதிதாகவே உள்ளது.

முடிவில்லாத பயணத்தைத் தொடர்வது போல அந்த ரயில் பெட்டி வகுப்பறை மாணவர்களுக்கு காட்சி கொடுக்கிறது. பக்கத்து ஜன்னல் ஓரம் காற்றில் அசையும் செடிகள் மாணவர்களை அவ்வாறு யோசிக்க வைக்கிறது. மாணவர்கள் விரும்பிய இடத்தில் அமரலாம். எந்தக் கட்டுப்பாடும் இல்லை. ஆசிரியர் அன்று படிக்க வேண்டிய பாடங்களைப் பட்டியலிட முதல் பாடத்தை மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப தொடங்கலாம். அதோடு மாணவர்கள் நீச்சல் குளத்தில் முழு நிர்வாணமாக நீந்தவும் அனுமதிக்கப்படுகிறார்கள். உடல்கூறு வித்தியாசம் கொடுக்கும் ஆர்வத்தை அகற்றும் திட்டத்திற்காகக் கோபயாஷி இந்த நீச்சல் நேரத்தைப் பயன்படுத்துகிறார். குழந்தைகளைப் பாடத்திட்டத்திற்குள் முக்கி எடுக்காதப் பள்ளியாக அதை மாற்றுகிறார். பள்ளி முடிவதற்குக் காத்திருக்கும் மாணவர்கள் மத்தியில் அந்தப் பள்ளி தொடங்குகின்ற நேரத்திற்காக அவர்கள் எதிர்பார்ப்பை இதயத்தில் ஏற்றுக் கொண்டு காத்திருக்க வைக்கிறார்.

டோட்டோ சான் அனுபவத்திலிருந்தே பலவற்றைக் கற்றுக்கொள்கிறாள். ஒரு சமயம் அவள் மலக்கூடம் செல்லும் போது அவள் அணிந்திருந்த தொப்பி குழியில் விழுந்து பின்னால் இருக்கும் மலக்குட்டைக்குள் சென்றுவிடுகிறது. அவள் நேராக அந்த மலக்குட்டிக்குச் சென்று ஒரு வாளியால் குட்டையிலிருந்து அசுத்தங்களை வெளியே எடுத்துப்போட்டு தொப்பியைத் தேடுகிறாள். துற்நாற்றத்தால் அங்கே வந்த திரு.கோபயாஷி அவள் செய்கைக்கான காரணம் கேட்க அவளும் காரணம் சொல்கிறாள். அவர் ஒன்றும் சொல்லாமல் தொடரச் சொல்லி செல்கிறார். தொப்பி கிடைக்காதச் சோகத்தில் டோட்டோ சான் சோர்வாக இடத்திலிருந்து அகல திரு.கோபயாஷி வெளியே எடுத்துப்போற்றவற்றை மீண்டும் உள்ளே போடும்படி சொல்கிறாள். அவ்வறு செய்வது சாத்தியமில்லை எனப் புரிந்து கொண்ட டோட்டோ சான் இனி ஒழுங்காக இருக்கும் எதையும் கலைப்பதில்லை என முடிவுக்கு வந்து அது போல நடக்கிறாள். இவ்வாறு ஒழுக்கங்களை அனுபவம் மூலமாகவே போதிக்கும் ஓர் ஆசிரியராக திரு.கோபயாஷி இருக்கிறார்.

‘டோமோயி’ குறித்தும் கோபயாஷி குறித்தும் மிகப்பெரிய ஆர்வம் நம் மனதில் இந்நூலின் மூலம் வளர்ந்துகொண்டே போக, இரண்டாம் உலகப் போரில் பள்ளி அறைகளாகப் பயன்பட்ட ரயில்பெட்டி வகுப்புகளின் மீது விமானங்கள் ஏராளமான குண்டுகளை வீசி பள்ளியை அழிந்தது. கோபயாஷி தன் பள்ளி எரிவதை அமைதியாகப் பார்க்கிறார். போர் சூழலால், டோட்டோ – சான் வேறு ஊருக்குக் குடும்பத்துடன் செல்கிறாள். கோபயாஷி அவளை வழியனுப்புகிறார். அப்போதும் டோட்டோ-சானுக்கு அவர் முன்பு சொன்ன சொற்கள் மனதில் மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது…

“உனக்குத் தெரியுமா? நீ உண்மையிலேயே நல்லப் பெண்.”

வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்ட ஆசிரியர்களிடம் நான் ஒரு நாவலைப் பரிந்துரைப்பேன் என்றால் அது நிச்சயமாக சன்னலின் ஓரம் சிறுமியாகவே இருக்கும்.

(Visited 98 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *