சிறுகதை: அடிப்படையான கேள்விகளும் புரிதல்களும்

00314.3.2015 – ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் முதுகலை மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடல் பதிவு இது. இந்நிகழ்வை நூலகர் விஜயலட்சுமி அறிமுகம் செய்து பேசியப்பின் சிறுகதை குறித்த அடிப்படையான கேள்விகளுடன் நான் வழிநடத்தினேன். நூலகத்தின் அழைப்பின் பெயரிலேயே இந்தக் கலந்துரையாடலை நான் வழி நடத்தினேன். என்னுடன் பூங்குழலி,  மணிமொழி , யோகி ஆகியோர் உடன் வந்தனர்.


நிகழ்வில் பேசியதில் ஒரு பகுதி :

0004நண்பர்களே, சிறுகதைகள் குறித்து பார்ப்பதற்கு முன் இலக்கியம் ஏன் அவசியமாகிறது என்ற அடிப்படையான கேள்விக்குப் பதில் தேடுவோம். இலக்கியம் குறித்து நம்மிடம் சில முன் முடிவுகள் உண்டு. உண்மையில் அவை போலியானவை. யாரோ நம் மனதில் ஏற்றிவிட்டவை. நாம் அந்த முடிவுகள் குறித்து ஆராய்ந்ததே இல்லை. எந்தக் கேள்வியும் இல்லாமல் கல்விக்கூடங்களிலோ நூல்களிலோ சொல்வதை ஏற்றுக்கொள்கிறோம். இன்று அதன் சில அம்சங்களை ஆராய்வோம்.

அரங்கத்தில் உள்ளவர்களிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டு அந்தக் கேள்விக்கு கொடுக்கப்பட்ட பதில்களைக் கொண்டு மேலும் சில கேள்விகள் உருவாகி கலந்துரையாடல் நடந்தது. அதன் தொகுப்பு (கொஞ்சம் விரிவாக்கத்துடனும் கூடுதல் தகவல்களுடனும்)

1. இலக்கியம் இன்பத்தைக் கொடுக்கக்கூடியது.

இலக்கியம் மன இன்பத்திற்காக வாசிக்கப்படுவது என்றால் கொடுமைகளைக் கூறும் படைப்புகள் இலக்கியமாகாதா? இன்று இலக்கியங்களில் அதிகமாக மனிதனின் கீழ்மைகளும் அவலங்களுமே பேசப்படுகின்றன. மனித சிதைவுகளைக் கூறும் படைப்புகளும் அதிகம். அப்படி இருக்க அவற்றை நாம் புறக்கணிக்க முடியாது அல்லவா? அப்படியானால் இலக்கியம் வெறும் இன்பத்தை நுகர்வதற்காக அல்ல என உணரமுடியும். ஆனால், மனிதனை எதைக்குறித்தும் சிந்திக்கவிடாமல் போதையில் வைத்திருக்கும் கதைகள் ஒருரகம். இக்கதைகளின் நோக்கம் பொழுதைப் போக்கி இன்பம் தருவது மட்டுமே. அல்லது வாழ்வை ஆழமாக அறிவதிலிருந்து தப்பிக்க விரும்புபவர்கள் இதுபோன்ற கதைகளைப் படிப்பார்கள். இதுபோன்ற சிறுகதைகளை ஜனரஞ்சக இலக்கியம் என்கிறோம்.

மற்றொன்று வாழ்க்கையை இன்னும் கொஞ்சம் ஆழமாகவும் ஈடுபாட்டுடனும் பார்க்க பயன்படும் சிறுகதைகள்.  இதுபோன்ற சிறுகதைகள், வாழ்வை நுண்ணியமாக அறிய ஒரு முயற்சியாக இருக்கும். இதன் வாசகர்கள் சிறுகதையிலிருந்து ஒற்றை கோட்பாட்டை (ஒரு நீதியை) அடையாளம் காணாமல் கதையினூடாக வாழ்வின் நுட்பங்களை அறிய முயல்வர். இதுபோன்ற சிறுகதைகளை தீவிர இலக்கியம் என்கிறோம்.

ஓர் பிரமாண்டமான அரங்கம். அங்கே அதிநவீன மின் விளக்குகளின் கீழ் இருவர் சண்டையிடுகிறார்கள் (WWF போன்றவற்றைக் கற்பனை செய்துக்கொள்ளுங்கள்). அவர்கள் சண்டையிடுவது உண்மை போலவே உள்ளது. அதற்கு ஏகோபித்தக் கைத்தட்டல். அவ்வளவு சண்டையிலும் திட்டமிடப்பட்ட சில பொருள்களைத் தவிர வேறெதுவும் உடையவில்லை. சண்டைப்போட நேர அவகாசமெல்லாம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்துமே திட்டமிட்டு செருகப்பட்டுள்ளது. யார் எங்கு அடித்தால் எங்கு விழவேண்டும் என்ற வரையறை உள்ளது.

சண்டை முடிந்து அரங்கின் கதவைத் திறந்து வெளியே வந்தால் அங்கே கலவரம். கொலைகள் நடக்கின்றன. தலைகள் துண்டித்து கீழே கிடக்கின்றன. யார் யாரோ அழுகிறார்கள். இராணுவம் எவ்வளவு கூறியும் கலவரம் நிர்ப்பதாய் இல்லை. இருள். எல்லோரும் எங்கோ ஓடுகிறார்கள்.

இப்போது நீங்கள் பார்த்தது இரண்டும் சண்டைதான். உடல்வதைதான். ஆனால் முன்னது திட்டமிட்ட ஒரு வெளிபாடு. அதில் உங்களை எங்கே கோபப்பட வைக்க வேண்டும் என்பதும் உணர்ச்சியடைய வைக்க வேண்டும் என்பதும் அழவும் சிரிக்கவும் பயப்படவும் வைக்க வேண்டும் என்பதெல்லாம் அதன் ஏற்பாட்டாளர்களுக்குத் தெரியும். ஆனால் கலவரம் அப்படியல்ல. அதன் ஒவ்வொரு நிமிடமும் யாராலும் தீர்மானிக்கப்படாதது.

ஜனரஞ்சக இலக்கியம் பிரமாண்ட அரங்கம் போன்றது. தீவிர இலக்கியம் சாலையோர கலவரம் போன்றது. ஆயிரம் பிரமாண்ட அரங்கத்தில் சாகசங்கள் நமக்கு மறந்துவிடுகின்றன. சாலையோர கலவரம் வாழ்வு முழுக்க உடன் வருகிறது.

2. இலக்கியம் நல்ல நெறிகளைச் சொல்வதற்கு உதவக்கூடியது.

நல்ல நெறிகளைச் சொல்ல ஏராளமான வழிகள் உள்ளன. தினசரிகளில் வரும் செய்திகளைக் கூட ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் புரிந்துகொள்கின்றனர். இத்தனைக்கும் அதன் மொழி எளிமையானது. ஆக, புனைவு இன்னொரு மொழித்தளத்தில் இயங்குகின்றது. அப்படி இருக்க நாம் நற்கருத்துகளை எல்லோருக்கும் புரியும் படி நேரடியாகவே சொல்லிவிட்டுப் போகலாம். புனைவில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. நல்லவற்றை நேரடியாகச் சொல்லிவிட்டு போகாமால் நுண்மையான மொழியைப் பயன்படுத்துவதால் அது பரவலான மக்கள் பரப்புக்கும் சேராது. ஆக, இலக்கியத்தின் தேவை நல்ல நெறிகளைச் சொல்வதற்காகவும் உதவக்கூடியதாக இல்லை.

3. எல்லோரையும் சென்று சேர்வதே நல்ல இலக்கியம்.

எல்லோருக்குமான ஒரு இலக்கியம் என ஒன்று இல்லை. இலக்கியம் தனக்கென ஒரு மொழியைக் கையாள்கிறது. தமிழில் பாண்டியத்துவம் பெற்றவர்களுக்கு ஒரு எளிய சிறுகதை புரியாமல் போகக்கூடிய வாய்ப்பு உண்டு. எல்லோரையும் அடையும் ஒரு கலை வடிவம் சாத்தியமே இல்லை. நாம் பரவலாக சென்றுச்சேர்வதாக நம்பும் திரைப்படங்கள் கூட அனைவரையும் அடைவதில்லை. ‘கற்றது தமிழ்’ திரைப்படம் கூறும் உலகமயமாக்கல் அரசியலை அறியாமல் அது தமிழ் அழிவு குறித்து பேசுவதாகவும் ‘தங்க மீன்கள்’ திரைப்படம் கூறும் நுகர்பொருள் கலாச்சாரத்தை அறியாமல் அது தந்தை மகள் உறவு பற்றி சொல்வதாகவும் அறிந்து வைத்திருக்கும் ரசிகர்களை நாம் இன்றும் காண்கிறோம். திரைப்படத்துக்கே அத்தகைய நிலை என்றால் இலக்கியம் எல்லோருக்கும் புரியும் என்பது அபத்தமானது.

மற்றுமொன்று இலக்கியம் புரிய நாம் என்ன செய்கிறோம் என்பதே முக்கியமான கேள்வி. தொடர் வாசிப்பு என்பது புரிதலுக்கான பயிற்சியாக இருக்கும். நவீன ஓவியம் வண்ணம் என்ற மூலப்பொருளால் உருவாகியிருந்தாலும் அதை அறிய தனித்த பயிற்சி தேவை. இசை சப்தங்களால் உருவாகியிருந்தாலும் அதை இன்னும் ஆழாமாக அறிய சில பயிற்சிகள் உதவும். அதே போல இலக்கியம் மொழியால் உருவாக்கப்பட்டிருந்தாலும் அதற்கும் பயிற்சி தேவையாகிறது. தொடர் வாசிப்பு மட்டுமே அந்தப் பயிற்சியைக் கொடுக்கும்.

002மேலும் சில கேள்விகளும் சில பதில்களும் வழங்கப்பட்டப்பின்னர் கங்காதுரையின் ‘ஆதிசேடன்’ சிறுகதை அரங்கில் வாசிக்கப்பட்டது. அந்தக் கதையை அறிந்து கொள்ளும் முறை குறித்து விவாதிக்கப்பட்டது. பல்வேறு விதமான புரிதல்கள் அரங்கிலிருந்து வந்தது. எழுத்தாளர் கங்காதுரை அச்சிறுகதை தனக்குள் உருவான விதம் குறித்து பேசினார்.

ஒருசிறுகதை ஒரு கருத்தைக் கூறுகிறது என்பது தவறானது. கதை ஒரு நீதியைக் கூறத்தான் உருவானவை என்பது கலை குறித்து அறியாதவர்களின் சித்திரம். அப்படிப்பார்த்தான் பஞ்சத்தந்திரக் கதைகள், நீதிக்கதைகள், ஈசப் கதைகள் என எல்லாமே சிறுகதை என்றாகிவிடும். அவை ஒரு நன்னெறியைச் சொல்லவேண்டும் என எழுதப்பட்ட கதைகள். அவ்வாறான ஒரு கதை  சிறுகதையாக முடியாது. அவை ஒரு நீதியைச் சுற்றி உருவாக்கப்பட்ட கதை அவ்வளவே. புரியும்படி சொல்வதென்றால் சுவரில் ஒரு ஆணியை அடித்து அதில் படத்தைத் தொங்க விடுகிறீர்கள். அதில் ஆணிதான் நீதி. அந்த நீதியில் ஒரு படத்தை மாட்டுகிறீர்கள். நீதியினால்தான் அந்தப் படம் நிர்க்கிறது. ஆணி கலன்றால் படம் விழுந்துவிடும். நீதியை எடுத்தால் நீதிக்கதை உதிர்ந்துவிடும்.

நல்ல சிறுகதைகள் யாரின் நீதி யாருக்கான நீதி என்ற கேள்வியை முன்வைத்து ஆராய்கின்றன. அவை முடிவுகளைச் சொல்லவில்லை. உதாரணம் பெண் என்பவள் புனிதமானவள் என்பது ஒரு நீதி. ஆனால் இதை சொல்லும்  சமூகத்தில் பெண் மாமியாரால் எரிக்கப்பட்டால் இரு பெண்களில் யார் புனிதமானவர். யார் யாரை புனிதமாக நினைத்தது என்ற கேள்வி வருகிறது. சிறுகதை வாழ்வை விசாரணை செய்கிறது. வாழ்வின் வெளிச்சங்களைப் பேசுவதுபோல அதில் உள்ள இருட்டையும் பேசுகிறது. ஒரு வீடு என்பது எப்படி வரவேற்பறை மட்டும் இல்லையோ அப்படியே ஒரு சிறுகதை வெளிச்சமான பகுதி மட்டுமே இல்லை.

கங்காதுரையின் இக்கதையின் முடிவை எடுத்துவிட்டாலும் அதில் பேசுவதற்கு ஏராளமான விசயங்கள் உள்ளன. ஒரு001 நல்ல கதையின் தன்மை அது. ஒரு பெண் சமூக கட்டமைப்புக்கு ஏற்ப எப்படி வாழ்கிறாள், அதன் பின் தனக்கான உரிமையைக் கேட்கும்போது என்னவாக இருக்கிறாள், அது கிடைக்காமல் போகும் போது அதன் உக்கிரம் என்னவாக உள்ளது, இறுதியில் ஆணாதிக்கத்தின் கோபம் எங்கே சரணடைந்து அது தன் வடிவை எவ்வாறு மாற்றிக்கொள்கிறது என மிக தெளிவாகச் சொல்லும் கதை இது. உண்மையில் மலேசியாவில் எழுதப்பட்ட மிக முக்கியமான சிறுகதை இது. பெண்ணியத்தைப் பிரச்சாரம் செய்யாமல் அது சரணடையும் இடத்தைக் காட்டுகிறார் கங்கா. ‘பச்சோந்தி’ என்ற செகாவின் சிறுகதையின் உக்தி கங்காவின் இந்தச் சிறுகதையைப் படிக்கும் போது நினைவுக்கு வருகிறது. அதிகாரத்துக்கு அடங்கி போகும் அரசு அதிகாரியை விமர்சனம் செய்யாமல் நகைச்சுவை பாணியில் நகர்த்தும் நடை கங்காவுக்குச் சிறப்பாக வந்துள்ளது. சிறுகதையை வாசிக்க

இதன் பின்னர் என்னுடைய ‘இழப்பு’ என்ற சிறுகதை வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. முழுக்கவே புனைவாக இருக்கும் சிறுகதைக்கும் உண்மையில் நாட்டில் நடந்த ஓர் அரசியல் சூழலை விமர்சனம் செய்து எழுதப்படும் சிறுகதைக்குமான வித்தியாசம் விளக்கப்பட்டது. குல்சார் எழுதிய ‘ராவி நதி’ சிறுகதை இவ்விடத்தில் மேற்கோள் காட்டப்பட்டது. சமகால அரசியல் சூழலைப் பிரச்சாரம் இல்லாமல் எவ்வாறு புனைவாக மாற்றுவது என விவாதிக்கப்பட்டது.  இழப்பு சிறுகதையை வாசிக்க

0005நண்பர்களே, நவீன இலக்கியம் ஒரு பெரும் திரளைக்காட்டி ஒரு சமூகத்தின் முன் முடிவான இலக்கை நோக்கி நகர்வதில்லை. நவீன எழுத்தாளன் தனது காமிராவை எங்கும் செலுத்துவான். அது எந்தக் கட்டளைக்கும் காத்திருப்பதில்லை. ஒரு போரில் தனக்கும் தன் சமூகத்துக்கும்  எதிரான ஒருவனின் முகத்தைக் கூட அது கூர்ந்து பார்க்கும் . அவன் மனதை ஊடுறுவி பார்க்கும். தனக்கு எதிராக துப்பாக்கியைத் தூக்கியிருக்கும் அவனின் நியாயங்களையும் அது பேசும். நவீன இலக்கியம் மனிதத்தைப் பேசுகிறது.

நிகழ்வின் தொடர்ச்சியாக பூங்குழலி வீரன் பறை இதழ் குறித்தும் அதன் உருவான தேவை குறித்தும் பேசினார். பறை இதழில் பங்கெடுக்க மற்ற ஆசிரியர்களைக் கேட்டுக்கொண்டார்.

நிகழ்வில் நூலகர் விஜயலட்சுமி ஆய்வுக்கட்டுரைகள் எழுதும் முறை குறித்து விரிவாகவும் விளக்கமாகவும் பேசினார். கல்விக்கூடங்களின் தேவையையும் ஆய்வாளர்கள் கவனம் கொள்ள வேண்டிய பகுதிகளையும் சுட்டிக்காட்டினார். விஜயாவிடம் கேட்டுப்பெற வேண்டிய தகவல்கள் ஆய்வுமாணவர்களிடம் அதிகமே இருந்தது.

மூன்று மணிநேரம் நடந்த இந்நிகழ்வு சில புதிய கேள்விகளை வந்திருந்தவர்கள் மத்தியில் உருவாக்கி நிறைவடைந்தது.

(Visited 443 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *