1917ல் சீனாவில் இராணுவக் கல்வி நிலையம் ஒன்றில் லூ சுன் இவ்வாறு சொல்கிறார். “நான் சலிப்புற்று இருக்கிறேன். துப்பாக்கியை ஏந்தும் நீங்கள் இலக்கியம் பற்றி அறிய அவா கொண்டுள்ளீர்கள். ஆனால் நானோ துப்பாக்கி வேட்டு சத்தத்தைக் கேட்க ஆர்வம் கொண்டுள்ளேன். ஏனெனில் துப்பாக்கி வேட்டுகளின் சத்தம் இலக்கியத்தைவிட கேட்பதற்கு நன்றாக இருக்கிறத.”
இவ்வாறு சொன்ன ஒருவர்தான் 1918 இல் தனது முதல் சிறுகதையான ‘பைத்தியக்காரனின் குறிப்புகளை’ எழுதினார். நவீன சீன இலக்கியத்தின் தொடக்கமாகவே அக்கதை கருதப்படுகிறது. எண்ணற்றப் புனைவுகளோடு பிற நாட்டு இலக்கியங்களைச் சீனத்துக்கு மொழிப்பெயர்ப்பும் செய்த லூ சுன் பின்னர் சீன இலக்கியத்தின் வரலாறையும் எழுதினார்.
இலக்கியம் என்பது பொழுதுபோக்கு அம்சம் என கருதுபவர்களுக்கு லூ சுன்னை நினைவு படுத்த வேண்டியுள்ளது. ஒரு போதை வஸ்து தரக்கூடிய மயக்கநிலையையும் வெற்றுக்கற்பனையை மட்டும் ஒரு கலைப்படைப்பு தருமாயின் அதற்கான மதிப்பு ஒரு போதை வஸ்துவுடையது மட்டுமே. அவ்வாறான ஒரு படைப்பாளி தன் சமூகத்தைத் தொடர்ந்து மயக்கத்தில் மட்டுமே வைத்திருப்பான். எழுத்தின் மூலம் அவர்களைக் கிரங்கடிப்பான். அவ்வாறான இலக்கியத்தால் சமூகத்திற்கு எந்தப்பயனும் இல்லை.
லு சுன் போன்ற போராளிகள் தங்களின் போராட்டத்தின் மாற்று ஆயுதமாகவே இலக்கியத்தை கையில் எடுக்கின்றனர். ஜப்பானுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற அவர் பாட வேளை முடிந்து, திரையில் காட்சி ஒன்றை திரையில் பார்க்கிறார். ரஷ்யாவுக்கு உளவு சொன்ன ஒரு பலசாலியான சீனரை ஜப்பானியர்கள் கயிற்றில் கட்டி தலையைத் துண்டிக்க இருக்கின்றனர். சுற்றிலும் பலசாலியான பல சீனர்கள் வேடிக்கைப் பார்க்கின்றனர். வலிய உடல் மட்டுமே கொண்டவர்களுக்கு எத்தனை மனித உயிர் நோயினால் இறந்தாலும் அதன் வருத்தம் தெரியாது. அவர்கள் மனப்பாங்கை மாற்ற இலக்கியமே சிறந்த சாதனம் என முடிவு செய்கிறார் லூ சுன்.
விட்டுக்கொடுக்காத நேர்மை, அண்டிப்பிழைக்கும் அடிமைத்தனமும் அற்ற அவர் 1909 ல் ஆசிரியராகப் பணியாற்றினார். தனது மாணவர்களை சீனப்புரட்சியில் பங்கெடுக்கத் தூண்டினார். சீனப்புரட்சி ஏகாதிபத்தியவாதிகளால் தோல்விகண்டதும் லூ சுன் பெரும் மனசோர்வு அடைந்தார் என்பது 1981ல் பொதுமை பதிப்பகத்தில் வெளிவந்த அவரது போர்க்குரல் என்ற சிறுகதை தொகுப்பின் முன்னுரையில் தெரியவருகிறது. மொத்தம் 9 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு அது. New Century Book House 2013ல் வெளியிட்ட தொகுப்பைவிட நேர்த்தியாக 1981ல் குறைந்த எழுத்துப்பிழையுடன் செய்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியம். அதேபோல ‘போர்க்குரல்’ தொகுப்பில் இல்லாத கதைகளே New Century Book House மூலம் தொகுக்கப்பட்டுள்ளது.
லூ சுனின் கதைகள் கலை செரிவுள்ளதா எனக்கேட்டால் இல்லை என்பதே பதிலாக இருக்கும். லூ சுன்னும் அதை ஒப்புக்கொள்கிறார். அவர் சொல்கிறார், “என் கதைகள் கலைப்படைப்புகள் என்ற தரத்திலிருந்து மிகவும் தள்ளியிருப்பவை. இருப்பினும் அவை இன்னும் கதைகள் என கருதப்படுபவை.”
‘ஒரு நிகழ்ச்சி’ என்ற சிறுகதை லூ சுன் தன் சுய அனுபவத்திலிருந்து சொல்வதாய் தொடங்குகிறது. ‘நான்’ என்று தன்னிலையில் விழித்தே சொல்கிறார். அவரது பல கதைகளிலும் ‘நான்’ என்று சொல்வதில் கதைக்குள் அவர் இருப்பதாகவே வாசிக்கும் போது தோன்றுகிறது.
கொடூரமான குளிர்கால வாடைக்காற்று வீசிக்கொண்டிருந்த ஒரு பனிக்காலத்தின் அதிகாலையில் தன் வேலை நிமித்தமாக வீட்டிலிருந்து வெளியேறுகிறார் கதைச்சொல்லி. அரவம் இல்லாத சாலையில் அவரை ஏற்றிச்செல்ல ஒரு ரிக்ஷா கிடைக்கிறது. அப்போது ஒரு கிழவி அவர்கள் ரிக்ஷாவில் மோதி கீழே விழுகிறாள். சம்பவத்தை யாரும் பார்க்கவில்லை. கதைச்சொல்லிக்கோ அவசரம். மாட்டிக்கொள்ளாமல் இருக்க, ‘வண்டியை விடு’ என அவசரப்படுத்துகிறார். அந்தக் கிழவிக்கு அடிப்பட்டதாகத் தெரியவில்லை இருந்தாலும் அவள் ‘அடிப்பட்டு விட்டது’ என்கிறாள். கதைச்சொல்லி வலியப்போய் ரிக்ஷாகாரன் மாட்டிக்கொண்டதாகக் கருதுகிறான். ரிக்ஷாக்காரன் சற்றும் தாமதியாது அருகில் இருக்கும் காவல் நிலையத்துக்குக் கைத்தாங்கலாய் அவளை அழைத்துச்செல்கிறான். சற்று நேரத்தில் காவல் நிலையத்திலிருந்து வெளிவந்த போலிஸ்காரர் ஒருவர், ‘ அவரால் தொடர்ந்து இழுக்க முடியாது; வேறொரு ரிக்ஷாவில் அமர்ந்துக்கொள்ளுங்கள்’ என்கிறார். கதாசிரியரும் மறுப்பேச்சு பேசாமல் மேல்கோட்டில் இருந்த நாணயங்களை கைநிறைய அள்ளி ரிக்ஷாக்காரனிடம் கொடுத்துவிடக்கூறுகிறார்.
ஒருவேளை இக்கதை இங்கேயே முடிந்திருந்தால் அது நன்னெறி கதை ஆகியிருக்கும். ஒரு சிறுகதை நன்னெறிக்கதைபோல வெறும் உடலுடன் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. அது மனதின் சிடுக்கில் புகுந்து கீரிப்பார்க்கக் கூடியது.
கதாசிரியருக்கு பணம் கொடுத்தப்பின் தன்னைத்தானே அருவருப்பாகப் பார்க்கிறார். அவர் பணம் கொடுத்தனுப்பிய நோக்கம் என்னவென்று மீண்டும் மீண்டும் யோசிக்கிறார். ஒரு ரிக்ஷாக்காரனின் தரத்தை மதிப்பிட தனக்கு என்ன தகுதியென வெட்குகிறான் என கதை முடிகிறது.
கதையைப் படிக்கும் நமக்கு மேலும் சில கேள்வி எழுகிறது. அவர் பணம் கொடுத்தது உண்மையில் பாராட்டவா? அல்லது தனது சரிவை சரிசெய்துக்கொள்ளவா? உதவிகள் என்பதும் வெகுமதிகள் என்பதும் உண்மையில் அன்பின் நிமித்தமாக மட்டுமே நிகழ்கிறதா? அல்லது அவ்வாறு பாவனை செய்கிறதா? கதாசிரியர் வெட்கம் அடைகிறார். ரிக்ஷாகாரரின் நேர்மைக்கு மதிப்பிட்டதால் மட்டுமல்ல தனது சரிவை இந்த வெகுமதியின் மூலம் சமன் செய்ய முடியாது என அவருக்கே தெரிந்திருக்கும். அதன் அபத்தத்தை அவர் கொடுத்த அடுத்த நிமிடமே உணர்ந்திருப்பார்.
எல்லாவற்றையும் பணத்தால் சரிகட்டிவிடலாம் என்ற மனம் தொடங்கும் இடம் எது என்ற வழுவான கேள்வியை இக்கதை நம்முன் வைக்கிறது. பணம் உட்புகுந்து செல்ல முடியாத இடங்கள் இன்னும் உலகில் இருக்கவே செய்கின்றன. அவ்வாறு வாழ்பவர்கள் மிக எளிய மனிதர்களாக நம்முன் நின்றுக்கொண்டிருக்கலாம். ஆனால் உலகில் பணத்தை மிஞ்சிய மகிழ்ச்சி கொடுக்கும் ஏதோ ஒன்றை அவர்கள் நம் கண்களுக்குத் தெரியாமல் கைவசப்படுத்தியிருக்கிறார்கள்.