பஷீரின் மதில்கள்

basheer-drawing-by-josh-1sநீங்கள் என்றாவது கேட்டுப்பார்த்ததுண்டா?

ஒரு வண்ணத்துப்பூச்சியை அறிய என்ன வழி? ஒரு சராசரி ரசனை கொண்டவன் சொல்லலாம். வண்ணத்துப்பூச்சியின் இறக்கைகளை அகற்றிப்பார்க்க வேண்டும். பின்னர்  நுகர்ந்து பார்க்க வேண்டும். அவற்றைக் கசக்கிப் பார்க்க வேண்டும். எஞ்சியதில் மிஞ்சியதில் அவற்றைக் கண்டுக்கொள்ளலாம். ஆனால் ஒரு கலைஞன் அவ்வாறு சொல்ல மாட்டான். அவன் வண்ணத்துப்பூச்சியை அறிய அதனருகில் காத்திருக்க வேண்டும் என்பான். வண்ணத்துப்பூச்சியை உணர நிதானமாக அதை பின் தொடர வேண்டும் என்பான். அது எங்காவது மலரில் அமரும். தேனை உரிஞ்ச தனது குழாயை நீட்டும்.  பிறகு மெல்ல சிறகசைத்துப் பறக்கும். கலைஞன் அந்தச் சிறகசைபின் மென் காற்று தன் கன்னத்தைத் தீண்டியது என்பான். அவன் வண்ணப்பூச்சியை அறிந்துகொண்டிருப்பான்.

பெரும்பாலோருக்கு இலக்கிய வாசிப்பு கைக்கூடாதது இந்தப் பிரித்துப்பார்க்கும் நிலையால்தான். நமது கல்வி கூடங்கள் நமக்கு அவ்வாறு போதித்திருக்கின்றன. ஒரு செய்யுளின் ஒரு குறளில் உள்ள கவித்துவத்தை எவ்வாறு ரசிப்பது என நமக்கு போதிக்கப்படவே இல்லை.

‘குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்’ என்றவுடன் அதன் பொருளை நோக்கி மூளை பயணிக்கிறது. அதற்கான விளக்க உரையில் பொருளை அறிந்துகொண்டு குறளை ரசிக்கத் தவறுகிறோம். அதன் மொழி, மொழியில் உள்ள குழைவு, குழல் மற்றும் யாழுடன் ஒப்பிடுகையில் குழந்தையின் குரலுக்கு இருக்கின்ற உயிர்ப்பு என எல்லாவற்றையும் தவறவிடுகிறோம். உண்மையில் வாசிப்புக்குத் தேவை நெகிழ்வான ஒரு மனநிலை. அதன் மூலமே ஒரு பிரதியை முழுமையாக உள்வாங்க முடியும். அதனுடன் உரையாட முடியும். வைக்கம் முகம்மது பஷீரை வாசித்து அவரை உள்வாங்க முடியவில்லை என்பவர்களை நான் வண்ணத்துப்பூச்சியைக் கசக்குவர்களாகவே கற்பனை செய்துக்கொள்கிறேன்.

ஆம். பஷீரின் ஆளுமையை முதலில் சுவீகரித்து அதன் விசாலத்தன்மையை அறிந்து முதல் முதலாக அவரது புனைவை வாசிக்க வருபவர்களுக்கு ஒரு மெல்லிய ஏமாற்றம் மிஞ்சும். இதற்கு முன் தலையில் முடிக்கொட்டும் அளவுக்குப் புனைவுகளைப் புரிந்துகொள்ள முயன்றவர்களுக்குப் பஷீரின் மொழி ஒரு இசை அசையாமல் இருந்தால் என்னவாகுமோ அதை உணர்வார்கள்.

அவரது மதில்கள் நாவலை ஏற்கனவே சுரா மொழிப்பெயர்ப்பில் வாசித்திருந்தாலும் காலச்சுவடு பதிப்பகத்தில் கவிஞர் சுகுமாரனின் மொழிப்பெயர்ப்பு இன்னும் நெருக்கத்தைத் தருகிறது.

எழுத்தாளர் பஷீரே கதையின் நாயகனாக வருகிறார். அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் சிறையில் அடைக்கப்பட்ட  பஷீருக்கு நாராயணி என்ற பெண்ணுடன் காதல் ஏற்படுகிறது. சிறையில் அவர் நட்டுவைத்த வளர்க்கும் ரோஜா செடிகளில் ஒன்றை நாராயணி கேட்பதிலிருந்து அந்தக் காதல் தொடங்குவதாகக் கொள்ளலாம். ஆண், பெண் சிறையை பிரிக்க ஒரு மதிலே இருக்கிறது.மதிலுக்கு அந்தப் பக்கம் இருக்கும் பெண்கள் சிறையில் இருக்கும் நாராயணியும் பஷீரும் பேசுகிறார்கள். காதல் அடையாளமாக வறுத்த கருவாடு, பொரித்த ஈரல், முட்டை, ரொட்டி என பலவும் பரிசுகளாகப் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. சுவருக்கு அப்பால் காய்ந்த கம்பு ஆகாயத்தை நோக்கி பறந்தால் மதிலுக்கு அப்பால் நாராயணி நிற்பதாக அர்த்தம். அவள்தான் அதை அடையாளத்துகாக வீசுவாள். இருவரும் வார்த்தைகளால் அன்பை பரிமாறுகிறார்கள். இருவரும் சந்தித்து கொள்ள மருத்துவமனை மட்டுமே ஒரு இடமாக இருப்பதால், ஒரு குறித்த நாளை சொல்லி அன்று எப்படியாவது அங்கு வருமாறு பஷீரிடம் நாராயணி சொல்கிறாள்.

இருவரும் சந்திக்கும் போது ,  நாராயணி  முகத்தில் மச்சம் இருப்பதை வைத்தும்  பஷீர் கொஞ்சம் வலுக்கையாகவும் கையில் ரோஜாப்பூ வைத்திருப்பதைக்கொண்டும்   ஒருவரை ஒருவர் அடையாளம் காண  நினைக்கிறார்கள். பஷீரும் அந்த நாளை எதிர்பார்த்து காத்திருக்க, அன்று எதிர்பாராமல் அவர் சிறையில் இருந்து விடுதலையடைகிறார். சிறையிலிருந்து விடுதலையாக யார் தான் விரும்ப மாட்டார்கள். ஆனால் அவர் சொல்கிறார்.  (வை  ஷூட் ஐ பி ஃப்ரீ ?ஹூ வாண்ட்ஸ் ஃப்ரீடம்?) நான் ஏன் விடுதலையாகனும்? யாருக்கு வேண்டும் இந்த விடுதலை? அவருக்கு விடுதலை அறிவிக்கும் அதே சமயம் நாராயணி மருத்துவமனைக்குப் போகும் முன்பாக ஏதோ பேச வழக்கம் போக மதிலுக்கு அப்புறத்திலிருந்து காய்ந்த குச்சியை வீசுகிறாள். ஊருக்குப் போய் சேர்வதற்கான காசுடன் அவர் சிறையை விட்டு வெளியேறுகிறார். தனியனாக நிர்க்கிறார். கையில் நாராயணிக்கு அடையாளம் காட்ட பறித்த ரோஜா. பெரும் பாதையில் அசைவில்லாமல் நிர்க்கிறார்.

உண்மையிலேயே இந்திய சுதந்திரப்போர் நடைபெற்ற காலங்களில் போராட்டங்களில் கலந்து கொண்ட பஷீர் 1941-42 காலப்பகுதிகளில் அதற்காக சிறை சென்றவர். இது அவரது வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவமா என்பதெல்லாம் இங்கு அவசியமில்லை. ஆனால் இந்த நாவலில் விடுதலை என்பது என்ன என்ற கேள்வி வலுவாக நிர்க்கிறது.

நாவலின் ஒரு பகுதியில் அரசியல் கைதிகள் அனைவருக்கும் விடுதலை என அறிவிக்கப்படுகிறது. அனைவருடனும் பஷீரும் ஆர்வமாகப்புறப்படத் தயாராகிறார். அவர் மீசையையெல்லாம் சரி செய்துக்கொள்கிறார். ஆனால் அவர் ஒருவரை தவிர மற்றவர் அனைவருக்கும் விடுதலை வழங்கப்பட ஜெயிலிலிருந்து தப்பிக்க திட்டமிடுகிறார். தனிமை அவரை வாட்டுகிறது. நாவலின் ஒருபகுதியில் துன்பமாகத் தெரியும் சிறைச்சாலை சூழல் நாவலின் இறுதியில் விடுபட முடியாத பிணைப்பை பஷீருக்குக் கொடுத்துவிடுகிறது. அவர் ஒரு பெண்ணின் குரலுக்கு அடிமையாகி இருக்கிறார். இன்னும் பார்க்காத தொட்டுணராத ஒரு பெண். அந்தப் பெண் சுவரை அர்த்தப்படுத்துகிறாள். நாவலின் ஒரு இடத்தில் பஷீர் சொல்கிறார், ‘சுவருக்கு ரத்தம் இல்லாமல் இருக்கலாம். அதற்கு ஆன்மா இருக்கும்.’

நாவல் முடிந்தப்பின் நாம் நாராயணியை நினைத்துக்கொள்கிறோம். அவள் காய்ந்த குச்சியை வீசி வீசி கைகள் ஓய காத்திருப்பாள். மருத்துவமனையில் பஷீரைத் தேடியிருப்பாள். அதற்குப் பின் அவள் இருப்பது சிறையென உணர்ந்திருப்பாள். சிறை தற்காலிகமாகக் கொடுத்த இன்பத்தை அவளிடமிருந்து மீட்டிருக்கும். அவளுக்கு அந்த கனம் மதில் அர்த்தம் இல்லாததாக இருந்திருக்கும். வெளியில்  மதிலற்ற அகன்ற சாலையைப் பார்க்கும் பஷீருக்கு வெட்டவெளி அர்த்தமற்றிருக்கும்.

உண்மையில் நாம் அர்த்தங்களாகச் சொல்வது எதை? சூழல் எதையும் அர்த்தமாக்குவதையும் அர்த்தங்களை அழிப்பதையும் ஒரு வேடிக்கையாக நின்று பார்ப்பதுதானே வாழ்க்கையோ எனத் தோன்றுகிறது.

(Visited 465 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *