தினசரிகளை விடாமல் படிப்பவர்களிடம் இலக்கியம் குறித்த ஒரு மனப்பதிவு உண்டு. இலக்கியம் வாசிப்பதற்கும் தினசரி வாசிப்பதற்கும் பெரிதாக பேதம் ஒன்றும் இல்லை எனப் பேசத்தொடங்குவார்கள். இலக்கியம் வாசிப்பவர்களைவிட தங்களுக்கு இன்னும் அதிகமாக நாட்டு நடப்பும் உலக நிலவரமும் தெரியும் என வாதிடுவார்கள். இன்னும் இணையம் வழி உலகை அறிபவர்கள் இலக்கியம் எதையும் சுற்றி வளைத்துச் சொல்கிறது மூன்றே வரிகளில் உலகின் முக்கியத் தகவல்கள் விரல் நுனியில் கிடைக்கின்றன என தங்களை தாங்களே மெச்சிக்கொள்வார்கள். இலக்கியம் வாசிப்பதும் தினசரிகளை வாசிப்பதும் ஒன்றா என்ற கேள்வியை ஓர் எழுத்தாளன் பல இடங்களில் சந்திக்க வேண்டியுள்ளது.
கலவரம் நடக்கும் ஒரு பகுதியில் ஒரு செய்தி சேகரிப்பாளன் தனது காமிராவைக் கூட்டத்தைக் கொத்துக்கொத்தாகப் பதிவு செய்யப் பயன்படுத்துகிறான். அவன் காமிராவின் தர்மம் அதுதான். அவனுக்கு இடப்பட்ட உத்தரவும் அதுதான். அவன் கூட்டத்தைப் பதிவு செய்ய வேண்டும். ஓலங்களை ஒட்டுமொத்தமாக குவித்து தரவேண்டும். செய்தியைப் பார்ப்பவருக்கு கலவரத்தின் பொதுத்தன்மை தெரிய வேண்டும். அவன் அதற்காக உழைக்கிறான். ஆனால் ஒரு நவீன கலைஞன் காமிராவை கூட்டத்திலிருந்து விலக்கி யாரோ ஒருவரை உற்றுப்பார்க்கிறான். கலவரத்தில் சிந்தும் கண்ணீரைப் படம் பிடிக்கிறான்.
இப்போது அவன் கையில் உள்ளது காமிராவாக இல்லை. அது உடலைத்தாண்டி உற்றுப்பார்த்தலின் மூலமாக மனதை அளக்கும் மந்திரக்கோளாகிவிடுகிறது. அவன் அந்த ஒருவரின் மூலமாக ஒட்டுமொத்த கலவரத்தையும் கணிக்கிறான். அதை அவன் கண்ணீரின் மூலம் அர்த்தமில்லாமல் ஆக்குகிறான். அவ்வாறு கலவரத்தில் பெட்ரோல் குண்டு எறிபவர்கள், யாரோ ஒரு பெண்ணை வன்புணர்ச்சி செய்பவர்கள், கொலைக்காரர்கள், பயந்து ஓடுபவர்கள் என அனைவரையுமே உற்றுப்பார்க்கிறான். அவர்கள் அந்த நிமிடத்துக்கு முன்பு யாராக இருந்தார்கள் என்றும் கணக்கில் எடுத்துக்கொள்கிறான். அவர்கள் மீதும் இரக்கப்படுகிறான். அவன் காதுகளில் ஓலங்கள் ஓங்கி ஒலித்து அடங்குகிறது. எல்லோருமே முன்பு ஒரு சமயம் நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் இருந்தவர்கள் என முடிவுக்கு வந்து அழுகிறான். வாழ்க்கையை அத்தருணமும் அறிந்துகொள்ள விளைகிறான்.
கலைஞனின் பார்வையில் கலவரம் என்பது வெறும் செய்தியல்ல; வாழ்க்கை.
ஒரு சமயம் ஜெயமோகன் மேடையில் உரையாற்றும் போது சொன்னார். ‘காட்டைத்தின்னும் யானைக்குத் தேனின் ருசி தெரியாது’. செய்தி சேகரிப்பாளர் காட்டைத் தின்பவர். அவரால் அத்தனைத் தகவலையும் சொல்ல முடியும். ஆனால் கலைஞன் தேனி. அவனால் மட்டுமே வரலாற்றில் புகுந்து வாழ்வை அறிய முடியும்.
குல்ஸாரின் ராவி நதியில் சிறுகதையை இதற்கு ஓர் உதாரணமாகப் பார்க்கலாம். இந்தியப் பிரிவினையை மையப்படுத்திஎழுதப்பட்ட சிறுகதை. இந்தியப்பிரிவினை என்பது செய்தி வாசிப்பவர்களுக்கு ஒரு தகவலாக இருக்க, குல்ஸார் போன்ற எழுத்தாளர்கள் அதன் தீவிரத்தை வேறுவிதமாக உணர்கிறார்கள்.
இரட்டைக் குழந்தைகளை ஈன்றெடுத்த இந்து தம்பதிகள் பாகிஸ்தானில் இருந்து ரயிலில் ஏறி இந்தியா வருகிறார். இரயிலில் உக்கிரமான நெரிசல். மூச்சு விடவே சிரமம். நெரிசலில் ஒரு குழந்தை செத்துவிடுகிறது. ரயில் நிற்க சாத்தியமில்லை. பயங்கரமான நெரிசலில் கழிவுகள் அங்காங்கே கழிக்கப்படுகின்றன. துற்வாடையின் கொடுமை இன்னும் அதிகரிக்காமல் இருக்க செத்த குழந்தையை தூக்கி வீச சொல்கிறார்கள். தாய் பிடிவாதமாக மறுக்கிறாள். அவள் எந்தக் கூச்சலுக்கும் செவி சாய்க்கவில்லை. ராவி நதி வருகிறது. தாய் தூங்கிக்கொண்டிருக்கிறாள். நாளை அழுகினால் நிலை மோசமாகிவிடும் என்றும் உடனே குழந்தையைத் தாய்க்குத் தெரியாமல் வீசி விடும்படியும் கணவனை கூட்டத்தினர் அழுத்துகின்றனர். கணவன் கைநடுங்க சட்டென்று பிள்ளையை பிடுங்கி வீசுகிறான். குழந்தையிடமிருந்து மெல்லிய முனகல் சத்தம் வந்தது என கதை முடிகிறது. அதாவது கணவன் தவறுதாக உயிருடன் இருந்த குழந்தையை வீசிவிட்டான்.
ஓர் அரசியல் சிக்கல் புதிதாகப் பிறந்த குழந்தைவரை எவ்வாறு பாதிக்கிறது என இக்கதை சொல்கிறது. ஒரு சமுதாய சிக்கல் இவ்வாறான ஆயிரம் ஆயிரம் இழப்புகளைக் கொண்டவைதான். செய்திகளுக்கு அவை அவசியமற்றவை. ஆனால் இலக்கியத்தின் மையமே இதுதான்.
ஓர் இந்திய கவிஞர், பாடலாசிரியர் மற்றும் திரைப்பட இயக்குனராகவும் இயங்கியவர் குல்ஸார். குல்சாருக்கு 2002இல் சாகித்திய அகாதமி விருதும் 2004இல் பத்மபூசண் விருதும் வழங்கப்பட்டுள்ளது. இவரது சிறுகதைகள் சிவசங்கரி மொழிப்பெயர்ப்பில் ‘ராவி நதியில்’ என்ற தலைப்பில் ‘சாகித்திய அகாதமி’ வெளியீடாக வந்துள்ளது.