காம்யூவின் அந்நியன்

103006-camus

காம்யூ

உலக இலக்கியங்களை வாசிக்க ஆர்வம் துளிர்த்தபோது நான் முதலில் தேர்வு செய்தது ‘அந்நியன்’ நாவல்தான். சிறிய நாவல். எளிமையான அட்டைப்படம். பிரஞ்சிலிருந்து ஆங்கிலத்தில் The Outsider என மொழிப்பெயர்க்கப்பட்ட நாவல். வெ. ஶ்ரீராம் பிரஞ்சிலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்த்திருந்தார். அப்போது எனக்கு இருபத்து ஐந்து வயதிருக்கும். மிக உற்சாகமாக அந்த நாவலை வாசிக்க ஆரம்பித்தேன். தொடங்கியபோதே ஆல்பர் காம்யூவினால் கடும் உளைச்சல் ஏற்பட்டது.

நாவல் இப்படித் தொடங்கியது.

“இன்று அம்மா இறந்துவிட்டாள். ஒருவேளை நேற்றாகவும் இருக்கலாம்; எனக்கு தெரியாது. முதியோர் இல்லத்திலிருந்து எனக்கு ஒரு தந்தி வந்தது. “தாயார் மரணம். நாளை அடக்கம். ஆழ்ந்த அனுதாபங்கள்” இதற்கு ஒன்றும் அர்த்தமில்லை. ஒருவேளை நேற்றாகவும் இருந்திருக்கலாம்.”

மெர்சோ எனும் கதாபாத்திரம் இந்த நாவல் முழுக்க உணர்ச்சியின்றி சிந்திக்கும் விதம் ஒருவகையில் நம்மை அச்சமுற செய்துக்கொண்டே இருக்கும். கடுமையான பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக அவனால் தன்னுடைய அம்மாவை தன்னுடன் வைத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் அவரை ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டிருக்கிறான். இப்படிப்பட்ட நிலையில்தான் அவனுக்கு மேற்கண்டவாறு தந்தி வருகிறது. இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக அவன் இரண்டு மணி நேரம் பயணம் செய்து முதியோர் இல்லத்தை அடைகிறான்.

அவனுடைய அம்மாவின் உடலடங்கிய சவப்பெட்டி உள்ள அறைக்கு செல்கிறான். காவல்காரன் உள்ளே வந்து மூடியுள்ள சவப்பெட்டியை திறக்க முற்படுகிறான். ஆனால் மெர்சோவோ திறக்கவேண்டாம் என்கிறான். காவல்காரன் “நீங்கள் பார்க்க விரும்பவில்லையா? என்று கேட்கிறான். மெர்சோ “இல்லை” என்கிறான். ஒரு நாற்காலியை போட்டு சவப்பெட்டிக்கு அருகிலேயே உட்கார்ந்துக் கொள்கிறான். காவலாளியிடம் வேறு விடயங்களைப் பேசிக்கொண்டிருக்கிறான். பயணம் செய்தபோது அவனுக்கு அவன் அம்மாவைப் பார்க்கத்தூண்டிய உள்ளுணர்வு இப்போது அவனிடம் இல்லை. அதனால் அவன் அதை செய்யவில்லை.

மெர்சோ அப்படித்தான். உள்ளுணர்வு இல்லாமல் அவன் எதையுமே செய்வதில்லை. அதற்கு முன்புவரை அவசியமாகத் தோன்றிய ஒன்று அந்த நிமிடம் அவசியமற்றதாகத் தோன்றினால் அவன் அதை செய்வதில்லை. அதே போல யாராவது ஒன்றைச் செய்யக்கோரி அதனால் யாருக்கும் எந்தச் சங்கடமும் இல்லையென கருதினால் அவன் அதை எளிமையாகக் கடைப்பிடிக்கிறான்.

இந்த இடத்திலிருந்து நாம் மெர்சோவை அறிய முயலலாம்.

ஒரு பெண்ணை நீங்கள் பார்க்கிறீர்கள். உங்களுக்கு அவரைப் பிடிக்கிறது. ஆனால் அன்று மட்டுமே பிடிக்கிறது. மறுநாள் முதல்நாளைப்போல பிடிக்காத உண்மையை அவரிடம் சொல்லும் துணிவு உங்களுக்கு வருமா? உறவுகளில் நாம் நமது முதல் அபிப்பிராயத்தைத் தக்க வைத்துக்கொள்ள அவ்வளவு போராடுகிறோம். நமக்கே தெரியாத ஒரு நாடகத்தை மிக தீவிரமாக நடத்துகிறோம். முந்தைய நிமிடத்தின் உணர்வுகளைச் சுமந்து திரிகிறோம். அப்படி சக மனிதனால் செய்ய இயலாவிட்டால் அவனை அந்நியமாகப் பார்ப்போம் இல்லையா? ஆம் அவன்தான் மெர்சோ. மெர்சோ ஓர் துறவு மனம் கொண்டவனெல்லாம் இல்லை.  உடல் சார்ந்த உணர்ச்சிகளுக்கு மட்டுமே இடமளித்து, நிகழ்கால செளகரியங்களை மட்டுமே பேணி வாழ்பவன். அவனைப் பொறுத்தவரை உலக நியதி, உறவுகள், வாழ்வின் அர்த்தம் எல்லாம் மனிதனால் கற்பித்துக் கொள்ளப்படுபவை.

மெர்சோ எல்லா விசயத்திலும் இத்தகைய மனப்போக்கையே கடைப்பிடிக்கிறான். அவன் தாய் மரணம் தொடங்கி காதல் வசப்படுவதுவரை அவனிடம் போலி முகங்களே இல்லை. மெர்சோவைக் காதலிக்கும் மேரி, அவனும் தன்னைக் காதலிக்கிறானா, திருமணம் செய்துகொள்ளலாமா எனக் கேட்கிறாள். அதற்கு மெர்சோ, காதலிக்கவில்லை ஆனால் திருமணம் செய்துகொள்வதைப் பற்றி ஆட்சேபம் ஏதும் இல்லை என்கிறான். மெர்சோவின் இயல்பினைப் புரிந்துகொள்ள முடியாமல் மேரி திணருகிறாள்.

இப்படிப் போகும் அவன் வாழ்வில் ஒரு அசம்பாவிதம் நடக்கிறது.

மெர்சோ ஒரு நாள் நண்பர்களுடன் கடற்கரைக்குச் செல்கிறான். அங்கு ஒரு அரேபிய கும்பலுடன் ஏற்படும் சண்டையில் அவனது நண்பனுக்குக் காயம் ஏற்படுகிறது. அந்தச் சிக்கலின் நீட்சியில் மெர்சோ ஓர் அரேபியனை சுட்டுக் கொன்றுவிடுகிறான். அக்கொலை தற்செயலாக நிகழ்ந்துவிடுகிறது . காவல் துறையினர் மெர்சோவை கைது செய்து அழைத்துச் செல்வதுடன் முதல் பகுதி முடிகிறது .

இரண்டாவது பகுதி வழக்கு விசாரணையையும், சிறையில் மெர்சாலின் வாழ்க்கையையும் விவரிக்கிறது. மெர்சோ நீதிபதியால் விசாரிக்கப்படுகிறான். தனது குற்றத்தை முழுமையாக ஒத்துக்கொள்கிறான். சிறையில் இருப்பது அவனுக்குச் சங்கடமாக இல்லை. அவன் தப்பிக்கும் வழிகள் இருந்தும் அவன் அதை மறுக்கிறான். சுற்றி நிகழும் பொய் கட்டமைப்புகள் அவனுக்குத் தேவையற்றதாக இருக்கிறது. அவன் தாயின் மரணத்துக்குகூட கண்ணீர் சிந்தாதது அவன் ஒரு  வினோதமான இயல்பு உள்ளவன் என அடையாளம் காட்டுகிறது. அனைவரும் ஆச்சரியப் படுகிறார்கள். அவனது தாய் தங்கியிருந்த காப்பகத்தின் அதிகாரி, சவ அடக்கம் செய்தவர், மேரி, அவனது நண்பர்கள் யாவரும் விசாரிக்கப் படுகிறார்கள். விசாரணை கொலைக்கு சம்பந்தமில்லாத திசையில் மெர்சோலின் போக்கைப் பற்றியதாக இருக்கிறது. அவன் செய்த கொலையைக் காட்டிலும் அவனது மாற்று இயல்புகள் பாதகமானவையாகப் பார்க்கப் படுகின்றன. ‘இத்தகைய வினோத போக்குடையவர்கள் சமுதாயத்திற்கு ஆபத்தானவர்கள்’ என முடிவுசெய்யப்பட்டு அவனுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது.

‘தி மித் ஆப் சிசிபஸ்’ என்ற ஆல்பர் காம்யூவின் கட்டுரை ஒன்று உண்டு. சிசிபஸ் (Sisyphus) கடவுளை மீறி, இறப்பைச் சங்கிலிகளில் கட்டி வைக்கிறான். பிறகு இறப்பு தன்னை அச்சங்கிலியிலிருந்து விடுவித்துக் கொண்டு சிசிபஸை நோக்கி வருகிறது. பிறகு அவன் இறப்பால் பிடிபட்டு கடவுள் முன் கிடத்தப்படுகிறான். கடவுள் அவனுக்கு ஒரு முடிவற்ற தண்டனையை வழங்குகிறார். அந்த தண்டனையானது, அவன் தொடர்ந்து ஒரு கல்லை மலை உச்சிக்கு தள்ளி செல்ல வேண்டும். கல் உருண்டு கீழே விழுந்துவிடும். சிசிபஸ் மீண்டும் அந்த கல்லை உருட்டி மலை உச்சிக்கு செல்ல வேண்டும். இதுவே அவனது தண்டனை. காம்யூ, சிசிபஸை ஒரு அபத்தமான கதாநாயனாக காட்டுகிறார். அவன் மரணம் என்ற ஒன்றை வெறுப்பவனாகவும், தொடர்ந்து வாழ்ந்தும் வாழ்வின் அர்த்தமற்றவைகளைச் செய்பவனாகவும் சாடுகிறார். மனித வாழ்வின் அபத்தங்களை இப்புராண மனிதனின் செயல்பாட்டின்வழி உணர்த்த முயல்கின்றது.

காம்யூ, சிசிபஸை தற்போதை நாகரீக வாழ்க்கை வாழும் மனிதர்களோடு உருவகப்படுத்திக் காட்டுகிறார். நாகரீக மனிதன் வாழ்வதற்காக தினமும் அர்த்தமற்ற வேலைகளை தொடர்ந்து செய்யும் அபத்தங்களைச் சாடுகிறார். மனிதர்கள் அதனை உணரும் தருணம் மிகப் பெரும் துயரத்தை தருகிறது என்கிறார்.

‘அந்நியன்’ நாவல் மனிதர்களின் மனங்களின் அபத்த நிலைகளையும், அதுக்குறித்த மனிதனின் பிரக்ஞையையும் மிக ஆழமாகப் பேசுகிறது. அர்த்தமற்ற இந்த வாழ்வின் சுழற்சியிலிருந்து விடுதலையாவது மரணத்தின் மூலம் சாத்தியம் என்றால் விரைவில் வரட்டும் எனக்கூறும் இருத்தலியத்துடன் இந்நாவல் ஒத்துப்போகிறது. மெர்சோ வாழ்வில் அதையே தேர்வு செய்கிறான். இந்த வாழ்வில் தொடர்ந்து அர்த்தமற்றவைகளுடன் உழல்வதைவிட மரணம் அவனுக்கு மகத்தானதாகத் தோன்றியிருக்கலாம்

(Visited 870 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *