அம்ருதா இதழில் வரும் தொடர்…
மனிதன் நம்பிக்கைகளால் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஒரு கொடும் துன்பத்துக்குப் பிறகு எப்படியும் எங்காவது ஒரு நற்செய்தியை வாழ்வின் நீண்ட பயணத்தில் எதிர்க்கொள்வதே சாத்தியம் என்ற நிபந்தனையில் நிகழ்கால கசப்பிலிருந்து சிந்தனைகளை மடைமாற்று செய்துகொள்கிறான். நம்பிக்கைக்கு வசப்படாத தொடரும் இழப்புகளின்மீதும் உளைச்சல்களின் மீதும் அடுக்கடுக்காக நம்பிக்கைகளை ஏற்றி தன் வாழ்வை தானே உயிர்ப்பித்துக் கொள்கிறான்.
ஒருவகையில் இந்த நம்பிக்கை மட்டுமே மனித மனம் பிறழ்வுக்கு உட்படாமல் காக்கின்றது.
அண்டன் செகாவின் ‘வான்கா’ சிறுகதை இந்த நம்பிக்கை தரும் வாழ்வின் கடைசி அர்த்தத்தை சொல்கிறது. 1886ல் தனது 26ஆம் வயதில் செகாவால் எழுதப்பட்ட இச்சிறுகதை மனம் வாடி ஏதோ ஒரு நம்பிக்கையில் கடிதம் எழுதும் சிறுவனுடைய வாழ்வை நம்முன் கொண்டுவருகிறது.
ஒன்பது வயது வான்கா, வேலை பயிலுவதற்காகக் காலணி தொழிற்சாலையில் சேர்த்து விடப்படுகிறான். மூன்று மாதங்களுக்குப் பிறகு எஜமானர் வீட்டிலிருந்து வெளியேறும் வரை காத்திருந்து தன் தாத்தாவான கன்ஸ்தந்தீன் மக்காடிக்கு ஒரு கடிதம் வரைகிறான். கடிதம் எழுத எழுத அவன் தாத்தா குறித்த பிம்பங்கள் காட்சிகளாக அவன் மனதில் ஓடுகிறது. தாத்தா உற்சாகமானவராக இருக்கிறார். ஒரு பண்ணையில் காவலாளராக வேலை செய்யும் அவர், வேலைக்காரிகளிடம் கிண்டல் செய்வதும் கிள்ளுவதும் கும்மாளமடிப்பதுமாக இருப்பார் என்பது மீண்டும் மீண்டும் அவன் கற்பனையில் வருகிறது.
வான்கா தன் தாத்தாவிடன் தன்னை அழைத்துச்செல்லும்படி மன்றாடுகிறான். கடிதத்தில் எஜமான் அவனை அடித்து நொறுக்கிவிட்டார், முடியைப் பிடித்து வெளி முற்றத்துக்கு இழுத்துச்சென்று குதிரையின் கடிவாள வாரால் நையப்புடைத்தார், கெண்டை மீனை தவறுதலாக வால் பக்கத்தில் இருந்து சுத்தம் செய்ததால் எஜமானி அந்த மீனைப் பிடுங்கி அதன் தலையை அவன் முகத்திலேயே தேய்த்துவிட்டாள், மற்ற பயிற்சி ஊழியர்கள் தன்னைக் கேலி செய்கிறார்கள் என்று புகார்களை அடுக்குகிறான். அவன் வேண்டுகோளும் இறுதி நம்பிக்கையும் ஒன்றுதான். தாத்தா தன்னை எப்படியாவது மீண்டும் அவரிடமே அழைத்துச்செல்லவேண்டும்.
கடிதம் வான்கா எனும் சிறுவனின் மனநிலையிலேயே பதிவாகிறது. தந்தை , தாய் இருவரும் இல்லாத அவனை அழைத்துச் சென்றால் அவன் தாத்தாவுக்காகச் செய்ய சில விடயங்களை வைத்திருக்கிறான். தாத்தா எவ்வளவு அடித்தாலும் வாங்கிக்கொள்வான், அவரை கருத்துடன் கவனித்துக் கொள்வான். முக்கியமாக தாத்தா இறந்த பிறகு அவருடைய ஆத்மாவுக்காக பிரார்த்தனை செய்வான் என அவனுடைய பட்டியல் நீள்கிறது. மறுநாள் கிரிஸ்மஸ் என்பதால் அவனுக்கு ஒரு தங்கப்பழமும் எடுத்துவைக்கச் சொல்கிறான்.
அவன் எழுதிய கடிதத்தில் அவனுக்குப் பரம திருப்தி. கடிதத்தைப் படித்தது தாத்தா நிச்சயம் தன்னை மீட்பார் என்றே நம்புகிறான். கடித உறையில் அதையிட்டு மூடி முகவரியை எழுதும்போது சிறு குழப்பம். பின்னர் ஏதோ ஒரு நம்பிக்கையுடன் ‘கிராமத்தில் இருக்கும் தாத்தா கன்ஸ்தந்தீன் மக்காடிச் ‘ என பெயரை எழுதி தபாலில் சேர்க்கிறான் . அன்றைய இரவு தாத்தா வேலைக்காரியுடன் கிண்டலில் ஈடுபடுகிறார். வான்கா காலாட்டிக்கொண்டு அதை ரசிப்பதாய் கனவு வருகிறது. கதை முடிகிறது.
ஒரு சிறுகதையில் இடைவெளிகளில் இருக்கின்ற மௌனமே பிராதனமானது. நல்ல சிறுகதை எந்த ஒன்றையும் சொல்ல எத்தனிப்பதில்லை. அது ஏதோ ஒன்றை உணர்த்த விரும்புகிறது. இந்தக் கதையில் தாத்தாவின் முகவரி தெரியாமலேயே கடிதம் எழுதி அது மறுநாளே தாத்தாவின் கையில் கிடைக்கும் என்று நம்பும் குழந்தையின் மனநிலை வாசிப்பவரை உறைய வைக்கிறது. கதையை வாசிக்கும் ஒவ்வொருவரும் அந்தக் கடிதத்தைச் சேர்க்கும் தபால்காரராகி விடுகிறோம். ஒரு நல்ல கதை அவ்வாறான ஒரு தவிப்பையே நமக்குள் ஊட்டுகிறது. அதோடு ஒரு தேர்ந்த சிறுகதையில் அத்தனைக் கதாபாத்திரங்களுமே கவனம் செலுத்தக்கூடியவைதான். அதிலும் செகாவ் போன்ற உலகப்புகழ்ப்பெற்ற எழுத்தாளர்கள் தங்கள் புனைவுகளில் சொற்களை விரையம் செய்வதில்லை.
இந்தச் சிறுகதையில் ஒரு நாய் வருகிறது. அந்த நாய் பணிவு மிக்கதாய் வாலைக் குழைத்துக்கொண்டு வரும்; தெரிந்தவர்களாயினும் தெரியாதவர்களாயினும் எல்லோரையும் அன்பு ஒழுகும் பார்வை கொண்டுதான் உற்று நோக்கும்.ஆயினும் யாராலும் அதை நம்ப முடியாது. அதன் அடக்கமும் பணிவும் வெளிவேஷமாக இருக்கிறது. அவ்வப்போது குறும்பு செய்து அதற்கான தண்டனைப்பெற்றதற்கான தடையங்கள் அதன் கால்களில் உள்ளன. ஆனால் அது யாவற்றையும் சமாளித்துக் கொண்டு உயிர் வாழ்வதாகவே கதையில் வர்ணிக்கப்படுகிறது.
சிறுகதையை வாசிப்பவர்கள் இந்த நாயை எளிதில் கடந்து செல்லலாம். ஆனால் இந்த நாய்தான் சமூகத்தில் மனிதன் வகிக்கும் போலிமுகத்தின் படிமமாக கதையில் உலாவருகிறது. சமரசமும் போலி அன்பும் எப்படியோ வாழ்ந்தால் போதும் என்ற இலக்கும் எப்படி ஏற்படுகிறது? சிறுகதையில் உள்ள சிறுவன் துயரத்திலிருந்து முட்டி வெளியே பிதுங்கி வர முனைகிறான். அது சாத்தியமில்லை. காரணம் கடிதத்தின் உறையில் சரியான முகவரி இல்லை. கடிதம் போய் சேராது. சங்கடங்களில் இருந்து தப்பிப்பதற்கு மனித மனம் எடுக்கும் முயற்சிதான் வான்காவின் முயற்சி. மனித இனத்தின் முயற்சியும் அதுவே.
செகாவின் சிறுகதைகளில் வரும் நாய்கள் சுவாரசியமானவை. ‘பச்சோந்தி’ என்ற செகாவின் சிறுகதை முழுக்கவே நாயை மையமாக வைத்து நகர்ந்தப்பட்டிருக்கும். நாய் ஒருவரைக் கடித்துவிடுவதிலிருந்து கதை தொடங்குகிறது. அவ்வழியாக வரும் இன்ஸ்பெக்டர், அந்த நாய்க்கு உரியவரை தண்டிக்கவேண்டும் என்கிறார். ஆனால் போலீஸ்காரர் ஒருவர் அந்த நாய் ஜெனரலுடையது என்கிறார். உடனே இன்ஸ்பெக்டர் மனம் மாறுகிறார். நாயால் கடிபட்டவனைக் குற்றம் சாட்டுகிறார். மீண்டும் நாய் ஜெனரலுடையது அல்ல எனும்போது, நாயின் சொந்தக்காரனை விடக்கூடாது என்று சட்டம் பேசுகிறார். இப்படியே அவர் மூன்று நான்கு முறை தன் கருத்தை எவ்வித சங்கடமும் இல்லாமல் மாற்றுகிறார். கடைசியில் நாய் ஜெனரலின் சகோதரருடையது என்றறிருந்து கடிபட்டவனை எச்சரித்து அனுப்புகிறார். சிறுகதையில் வரும் இன்ஸ்பெக்டருக்கு ஒரே மாதிரியான சீரியஸ் முகத்தை செகாவ் கதை நெடுகிலும் பொறுத்துகிறார். இருதரப்புக்கும் சாதகமாக மாறி மாறி பேசும்போது அவரிடம் எவ்வித சலனமும் இல்லை. குற்ற உணர்ச்சியும் இல்லை. அவமானங்கள் இல்லை. கடமையை நிறைவேற்றுவது மாதிரி பாவனை மட்டுமே செய்கிறார். அந்த பாவனைதான் அதிகாரத்தின் மூலம் பெறப்படும் பயத்தின் நிழல்.
செகாவின் ‘வான்கா’ சிறுகதை சொல்லும் அபத்தமான நம்பிக்கையை உள்வாங்கியதுமே உடனடியாக சுஜாதாவின் ‘நகரம்’ சிறுகதை நினைவுக்கு வரும். மனிதனின் அபத்தமான உணர்ச்சிகள் எந்த நாடானாலும் அந்நிலத்திற்கேற்ப தன்னை ஒரு புதர்போல வடிவமைத்துக்கொள்கிறது.
நகரத்து மருத்துவமனைக்கு தன் மகள் பாப்பாத்தியை கடும் ஜுரத்தின் காரணமாக அழைத்துச்செல்லும் வள்ளியம்மாவுக்கு மருத்துவமனைச் சூழல் அந்நியமாகிவிடுகிறது. மருத்துவமனையின் ஒவ்வொரு கட்டளையும் அவளுக்குப் பயத்தைக் கொடுக்கிறது. தன் மகள் பாப்பாத்தியைத்தூக்கி மார்பின் மேல் சார்த்திக்கொண்டு ஆஸ்பத்திரியைவிட்டு வெளியே வருகிறாள்
“வெறும் சுரம்தானே ? பேசாமல் மூனாண்டிப் பட்டிக்கே போயி விடலாம். வைத்தியரிடம் காட்டிவிடலாம். கிராம ஆஸ்பத்திரிக்கு போக வேண்டாம். அந்த டாக்டர்தான் பயங்காட்டி மதுரைக்கு விரட்டினார். சரியாக போயிவிடும். வெள்ளைக்கட்டி போட்டு விபூதி மந்திரித்து விடலாம்.” என நம்பிக்கையோடு புறப்பட்டு விடுகிறாள். ஆனால், ரத்தப்பரிசோதனைக்குப் பிறகு அந்தப் பெண்ணுக்குக் கொடும் நோய் இருப்பதையும் உடனே மருத்துவம் செய்யாவிட்டால் அவள் இறந்துவிடக்கூடும் என்றும் அவர்களைக் காணாது மருத்துவமனையே பதறுகிறது என்பதாகக் கதை முடிகிறது.
மனித லட்சியங்களை அதன் வெற்றிகளை மட்டுமே பேசுவதுதான் இலக்கியத்தின் நோக்கமாக மலேசிய போன்ற நாடுகளின் கல்விக்கூடங்களில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இலக்கியம் மொழியின் மூலமாக வாழ்வை அறியும் நுட்பமான வேலையைச் செய்கிறது. அது அப்பழுக்கற்று சொல்லும் உண்மை ஒரு துடிக்கும் இருதயத்தை கைகைளில் ஏந்தும் பதற்றத்தைக்கொடுக்கக்கூடியது. கலைஞர்கள் எல்லோருமே அதை நம் கைகளில் தரும் வேலையைதான் ஓயாமல் செய்கின்றனர்.
செகாவை தனது ஆசான் என்று கூறும் ரேமண்ட் கார்வர் செகாவைப் போலவே ஒரு கதையைப் பலமுறை திருத்தி எழுதுங்கள் என்பதை உறுதிபட சொல்கிறார். செகாவின் சிறுகதைகளில் காணப்படும் துள்ளல், எள்ளல் கார்வரின் சிறுகதைகளில் இருப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் சந்தோஷமில்லாத குடும்பங்களைப் பற்றிதான் ரேமண்ட் கார்வர் அதிகம் எழுதியிருக்கிறார், குடும்ப உறவின் விரிசல் , தனிமனித துயரங்கள், இயலாமை ஏற்படுத்தும் குற்றவுணர்ச்சி என அவரது கதைகள் தொடர்ந்து மனித மனங்களின் வீழ்ச்சிகளை வெளிப்படுத்துகின்றன. தேர்ந்த வாசிப்பின் மூலம் மட்டுமே அவரிடம் அணுகிச்சென்று பார்க்க முடியும் வெளிப்பாடு இது.
நான் சந்திக்கும் பலரிடமும் வாசிப்புப்பழக்கம் இருப்பதைப் பார்க்கிறேன். ஆனால் அவர்கள் நுண்வாசிப்பாளர்களாக இருக்கிறார்களா என்பது சந்தேகம். வாசிப்பு என்பது ஒரு போட்டியில்லை. அதிகமான நூல்களை வாசித்துவிட்டோம் என்ற பட்டியலைச் சுமப்பதில் என்ன பெருமை இருந்துவிடப்போகிறது? வாசிப்பில் தனி ஒருவன் அடையும் மாற்றமே அவனை எதிக்கொள்ளும் ஒவ்வொருவரையும் தீ போல பற்றுகிறது. இந்த உள் மாற்றம் என்பதை மனவிசாலம் என சுருக்கமாக அடையாளம் காணலாம். தேர்ந்த வாசிப்பாளர்களுக்கு சமூகத்துக்கு இன்னல் தரும், சமுதாயத்தைச் சுரண்டும் நபர்கள் மேல் அறச்சீற்றம் எழுமே தவிர , தனிப்பட்ட வாழ்வில் யாரையும் நல்லவர் – கெட்டவர் எனப் பட்டியலிடமாட்டார்கள். இந்த மனவிசாலம் அடைய வகை செய்யும் நுண்வாசிப்பை பழக்கத்தில் கொள்ளாமல், சுமந்து திரியும் நூல் பட்டியல் என்பது வீண்.
நுணுக்கமான வாசிப்பும் புரிதலும் இல்லாவிட்டால் கலையம்சத்தையும் அதன் அழகியலையும் தவறவிடும் கதைகளில் ரேமண்ட் கார்வரின் ‘கதீட்ரல்’ என்ற சிறுகதையும் அடங்கும்.
‘கதீட்ரல்’ என்பதை பேராலயம் என அர்த்தம் கொள்ளலாம். ‘கனவுகளுடன் பகடையாடுபவர்’ என்ற தொகுப்பில் தமிழில் ஜி.குப்புசாமியின் மொழிப்பெயர்ப்பில் இந்தக் கதை வந்துள்ளது. இதே கதை செங்கதிர் மொழிப்பெயர்ப்பில் வந்துள்ள ‘வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு’ என்ற தொகுப்பில் உள்ள மொழிப்பெயர்ப்பே சிறந்தது.
இந்தச் சிறுகதை கண் பார்வையற்ற மனைவியின் தோழனான ராபர்ட்டுடன் அவள் கணவன் கொள்ளும் நட்பின் தொடக்க பொழுதுகளைச் சொல்கிறது. ராபர்ட் , மனைவி இறந்த பிறகு மனச்சோர்வோடு வருகிறான். கண்பார்வையற்றவனை எவ்வாறு எதிர்கொள்வது என்பதறியாமல் சலித்துக் கொள்ளும் கணவன், அவன் வருகைக்கு பிறகு மெல்லமெல்ல அவன் உலகிற்குள் எப்படி நுழைகிறான் என்பதை கதை காட்டுகிறது. கதைசொல்லியின் புலம்பலிலிருந்து தொடங்குகிறது கதை.
கதைச்சொல்லியான கணவனுக்கு நிறைய சந்தேகங்கள் வருகிறது. குறிப்பாக அந்தக் குருடன் ஒரு பெண்ணை மணந்துகொண்டிருந்தான் என்பதும் தனது பிரியமானவரிடமிருந்து தன் தோற்றம் பற்றி எந்த ஒரு பாராட்டுமின்றி தினம்தினம் அந்தப் பெண் எப்படி வாழ்ந்திருப்பாள் என்பதும் அவனுடைய குழப்பங்களில் முதன்மையானது.
இரவில், கணவனும் கண்பார்வையற்ற நண்பனும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். தற்செயலாக ‘கதீட்ரல்’ (பேராலயம்) என்று கணவன் உரையாடலின் போது சொல்கிறார். பிறவியிலேயே கண் தெரியாதவருக்கு அந்த சொல் புரியவில்லை. இவர் விதவிதமாக விளக்கிப் பார்க்கிறார். கடைசியில் குருடரின் ஆலோசனைக்கு ஏற்ப கணவன் ஒரு பென்சிலை எடுத்துக்கொள்கிறார். அவர் கையை கண் தெரியாதவர் பற்றிக்கொள்கிறார். கணவன் இப்போது கதீட்ரலை வரைகிறார். குருடரும் கூடவே மனதால் வரைகிறார். இடையில் கண்களை மூடிக்கொண்டு வரையும்படி குருடர் பணிக்க எதற்கோ கட்டுப்பட்டவர்போல அவ்வாறே செய்கிறார். அவருக்கு எல்லாமே புதிதாய் இருக்கிறது. இருவரும் கதீட்ரலை பார்த்துவிடுகிறார்கள். கண் தெரியாதவருக்கு இவர் ஒரு பேராலயத்தைக் காட்டுகிறார். இவருக்கு அவரும் ஒரு பேராலயத்தைக் காட்டுகிறார். இருவரும் ஒரு மையத்தில் சந்திக்கிறார்கள். அது ‘ஒரு உரையாடல்தான். மொழியில்லா உரையாடல்.
இந்த உரையாடலோடு கதை முடிகிறது. ஆனால் கதை வாசிப்பவரின் மனதில் வளர்கிறது. கணவனின் அத்தனை கேள்விக்கும் பதில் கிடைத்திருக்கும். அறிதல் என்பது பார்வையால் மட்டுமானதல்ல என்பதும் பார்வையற்ற புரிதல் இன்னும் விசாலமானது என்பதும் தன் மனைவியை அந்தக் குருடன் இன்னும் ஆழமாக ரசித்திருப்பான் என்பதையும் கதைச்சொல்லியான கணவன் புரிந்திருப்பார். வாழ்வின் அர்த்தம் என்னவாக இருக்கிறது? யாருடைய பார்வையில் அது எவ்வாறெல்லாம் மாறுகிறது? ஆனால் அந்தப் பார்வைக்கு ஏதேனும் ஒரு அர்த்தம் இருக்கிறதா? உண்மையில் இத்தனை காலம் நாம் புரிந்துவைத்துள்ள உலகத்துக்கு ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா? நாம் சேமித்த அறிவுலகத்துக்கு ஏதேனும் மகத்துவம் இருக்கிறதா? என்ற கேள்வியையே கதை மீண்டும்மீண்டும் நம்முன் வைக்கிறது.
தன் கதைகளைப் பற்றி அமெரிக்க எழுத்தாளரான ரேமண்ட் கார்வர்(Raymond Carver) “வெற்றி அடையாத மனிதர்களைப் பற்றி தான் நிறைய எழுதியிருக்கிறேன், அவர்கள் எனது சகாக்கள், எதை அடைவதற்காக வாழ்க்கையில் உயிரை கொடுக்கவும் தயாராக இருந்தோமோ, அது ஒரு அற்ப விஷயம் என்று பின்னாளில் தோன்றுகிறதில்லையா, அந்த முரண் தான் எனது கதைகளை உருவாக்குகின்றன” என்று கூறுகிறார்.
20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்காவின் முக்கியமான சிறுகதையாளராகவும் கவிஞராகவும் விளங்கியவர் கார்வர். உலகச் சிறுகதை வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்குகிய கார்வர் ஐம்பதாவது வயதில் நுரையீரல் புற்றுநோயால் இறந்தார்.
செகாவை தன் குருவாக நினைக்கும் கார்வரின் இக்கதையை வாசிக்கும் போது செகாவின் ‘பந்தயம்’ கதை உடனடியாக நினைவுக்கு வரும். இரண்டு சிறுகதைகளுமே நாம் கண்டு கொண்டதாக நம்பும் வாழ்வையும் அடைந்துவிட்டதாக நினைக்கும் அறிவையும் விமர்சனம் செய்பவையே.
மரண தண்டனை கொடியதா? இல்லை ஆயுள் தண்டனை கொடியதா என்ற விவாதம் வங்கி அதிபருக்கும் வக்கீலுக்கும் இடையே நடக்கிறது. அப்போது வங்கி அதிபர் ஆயுள் தண்டனையே கொடியது என்கிறார். வக்கீலோ சாவதைவிட உயிரோடிருக்கம் ஆயுள் தண்டனை மேலானது என்கிறார். விவாதம் பந்தயமாகிறது. வங்கி அதிபர் 2 மில்லியன் ரூபிள் பந்தயம் வைக்கிறார். வக்கீல் அதற்காக 15 வருடம் தனிமைச் சிறையில் கழிக்க வேண்டும் என்கிறார்.
வங்கி அதிபர் தன் பணத்தையும் வக்கீல் தன் சுதந்திரத்தையம் பந்தயமாக வைக்கிறார்கள். வக்கீல் தனிமைச் சிறையில் அடைக்கப்படுகிறார். வெளி உலகத்தோடு அவருக்கு எந்தவிதமான தொடர்பும் இருக்கக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்படுகிறது.
வக்கீல் தனிமை சிறையில் வாடுகிறார். முதலாண்டில், தனிமையும் மன அழுத்தமும் அவரை வாட்டி வதைக்கின்றன. அவரது அறையிலிருந்து பியானோவின் இசையொலி இரவும் பகலும் கேட்டுக் கொண்டே இருக்கிறது. புகையிலையையும், ஒயினையும் அவர் மறுத்துவிடுகிறார். முதல் வருடத்தில் எளிமையான காதல் கதைகள் கொண்ட நாவல்கள், புத்தகங்கள், வீரதீர சாகசக் கதைகள் கொண்ட புத்தகங்களைப் படிக்கிறார்.
இரண்டாம் ஆண்டில் அந்த அறையிலிருந்த பியானோ அமைதியாக இருந்தது. தனக்கு செவ்வியல் இலக்கியங்கள் வேண்டும் என்று கேட்டுப் பெற்று வாசிக்கிறார். அவருக்கு வேண்டியதைக் கேட்டுப்பெற கடித வழி தொடர்பே உள்ளது. ஐந்தாவது வருடத்தில் அந்த அறையில் மீண்டும் பியானோ இசைத்தது. குடிப்பதற்கு ஒயின் பெற்றுக்கொண்டார். ஆறாவது ஆண்டின் பிற்பகுதியில் அந்த இளைஞர் புதிய மொழிகளையும், தத்துவம், வரலாறு ஆகியவற்றையும் வெறிகொண்டதுபோலப் படிக்கிறார். அடுத்த நான்கு ஆண்டுகளில் 600 புத்தகங்களை அவர் படித்து முடித்தார். வங்கி அதிபர் தேடித்தேடி அந்தப் புத்தகங்களை அவருக்காக வாங்க வேண்டியிருந்தது. அதற்குப் பின் இறையியலும், மதங்களின் வரலாறும் பற்றிய புத்தகங்களைப் படிக்கிறார். கடைசி இரண்டு வருடங்களில் ஏராளமான நூல்களை வகை தொகை இல்லாமல் வாசிக்கிறார். ஒரு சமயம் இயற்கை அறிவியல் நூல்களையும் சில சமயம் பைரன், ஷேக்ஸ்பியர் நூல்களை கேட்கிறார். வேதியியல், மருத்துவம், நாவல், தத்துவம், இறையியல் ஆகிய நூல்களையும் வாசிக்கிறார்.
இவ்வாறு 15 ஆண்டுகள் கடந்தது. வங்கி அதிபர் இப்போது அவ்வளவு வசதியாக இல்லை. 2 மில்லியன் ரூபிளை தோற்றால் அவர் பிச்சைதான் எடுக்க நேரும். எனவே அந்த வக்கீலைக் கொல்ல நினைத்து சிறைக்குள் நுழைகிறார். சிறையில் மேசை மீது தலை வைத்து படுத்திருந்த அந்த வக்கிலின் உடல் எலும்பை சுற்றி வைத்த போர்வை போலிருந்தது. நீண்ட முடியுடன் தாடியுடனும் வெளிறிய முகத்துடனும் காணப்படுகிறார். அவர் மேசையில் எழுதப்பட்ட ஒரு கடிதத்தை வங்கி அதிபர் வாசிக்கிறார். அதுதான் வாழ்வின் ஒட்டுமொத்த சாரத்தையும் சொல்கின்றன.
‘இவ்வாழ்க்கையும், இச்சுதந்திரமும், நீங்கள் எனக்களித்த எல்லா புத்தகங்களில் இருக்கும் எல்லா நல்ல விசயங்களும் ஒன்றுமே இல்லை. இப்பதினைந்து வருட வாழ்க்கையில் நான் உலக வாழ்வை ஊன்றிப் படித்தேன். ஆனால் அவை எல்லாவற்றையும் நான் புறந்தள்ளுகிறேன். இவ்வுலகம், இந்த ஞானம் அனைத்தும் மாயை, கானல் நீரைப்போல. நீங்கள் ஞானியாக, சிறந்தவராக இருக்கலாம். ஆனால் மரணம் அனைத்தையும் துடைத்தெறியும். உங்களது வரலாறு, வளம்,முடிவிலா அறிவுஜீவித்தனம் எல்லாவற்றையும் இவ்வுலகுடனேயே உறையச் செய்திடும்.’ என்றத்தொணியில் தொடரும் கடிதத்தில் அவர் ஒரு காலத்தில் விரும்பிய இரண்டு 2 மில்லியன் ரூபிள்களையும் வேண்டாம் என எழுதியிருந்தது மட்டுமல்ல பணம் வெறும் காகிதம் என்று எழுதியிருந்தார்.
சிறுகதை இலக்கியம் தோன்றிய முதல் காலகட்டத்து எழுத்தாளர் செகாவ். அதன் உச்ச சாதனைகளைப் புரிந்தவர். ஒரு மருத்துவரான அண்டன் செகாவ் சமூக அக்கறை கொண்டு வாழ்ந்த ரஷ்யர். ஏழைகளுக்கு இலவச மருத்துவம் செய்ததோடு இரு பள்ளிக்கூடங்களையும் ஒரு மருத்துவமனையும் கட்டியுள்ளார். 206 சிறுகதைகள் எழுதியிருக்கிறார். கடுமையான காசநோய்ப் பாதிப்பிற்கு ஆளாகி, 44 வயதில் இறந்தார்.
“நோயாளிகளின் உடலை பரிசோதனை செய்து பார்க்கும் நான் எழுத்தாளராக அவர்களின் மனதைப் பரிசோதனை செய்கிறேன். பல சமயங்களில் எழுத்துமருந்தை விடவும் அதிக சக்தி உள்ளதாக இருக்கிறது” என்ற செகாவின் பிரபலமான கூற்று சக மனிதனை அவர் எவ்விதத்திலாவது நேசித்தே தீருவது என்ற அவருடைய மனதை பிரதிபளிப்பதாய் உள்ளது.
இலக்கியம் வாழ்வில் எந்த முனையில் தோன்றினாலும், அது சக மனிதனை நேசிக்கும் மையத்தில் வந்தே இறுதியில் சேர்கிறது.
“நான் சலிப்புற்று இருக்கிறேன். துப்பாக்கியை ஏந்தும் நீங்கள் இலக்கியம் பற்றி அறிய அவா கொண்டுள்ளீர்கள். ஆனால் நானோ துப்பாக்கி வேட்டு சத்தத்தைக் கேட்க ஆர்வம் கொண்டுள்ளேன். ஏனெனில் துப்பாக்கி வேட்டுகளின் சத்தம் இலக்கியத்தைவிட கேட்பதற்கு நன்றாக இருக்கிறது” என்று சொன்ன ஒருவர்தான் 1918 ல் தனது முதல் சிறுகதையான ‘பைத்தியக்காரனின் குறிப்புகளை’ எழுதினார். 1917ல் சீனாவில் இராணுவக் கல்வி நிலையம் ஒன்றில் லூ சுன் சொன்ன இவ்வரிகளின் காத்திரம் குறையும் முன்பே அடுத்த ஆண்டில் அவர் எழுதிய ‘பைத்தியக்காரனின் குறிப்புகள்’ நவீன சீன இலக்கியத்தின் தொடக்கமாகவே கருதப்படுகிறது. எண்ணற்றப் புனைவுகளோடு பிற நாட்டு இலக்கியங்களை சீனத்துக்கு மொழிப்பெயர்ப்பு செய்த லூ சுன் பின்னர் சீன இலக்கியத்தின் வரலாறையும் எழுதினார்.
இலக்கியம் என்பது பொழுதுபோக்கு அம்சம் என கருதுபவர்களுக்கு லூ சுன்னை மீண்டும்மீண்டும் நினைவு படுத்த வேண்டியுள்ளது. போதை வஸ்து தரக்கூடிய மயக்கநிலையையும் வெற்றுக்கற்பனையையும் ஒரு கலைப்படைப்பு தருமாயின் அதற்கான மதிப்பு ஒரு போதை வஸ்துவுடையது மட்டுமே. அவ்வாறான ஒரு படைப்பாளி தன் சமூகத்தைத் தொடர்ந்து மயக்கத்தில் மட்டுமே வைத்திருப்பான். எழுத்தின் மூலம் அவர்களைக் கிரங்கடிப்பான். அவ்வாறான இலக்கியத்தால் சமூகத்திற்கு எந்தப்பயனும் இல்லை.
லு சுன் போன்ற போராளிகள் தங்களின் போராட்டத்தின் முக்கியமான ஆயுதமாகவே இலக்கியத்தை கையில் எடுக்கின்றனர். ஜப்பானுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற அவர் பாட வேளை முடிந்து, திரையில் காட்சி ஒன்றை திரையில் பார்க்கிறார். ரஷ்யாவுக்கு உளவு சொன்ன ஒரு பலசாலியான சீனரை ஜப்பானியர்கள் கயிற்றில் கட்டி தலையைத் துண்டிக்க இருக்கின்றனர். சுற்றிலும் பலசாலியான பல சீனர்கள் வேடிக்கைப் பார்க்கின்றனர். வலிய உடல் மட்டுமே கொண்டவர்களுக்கு எத்தனை மனித உயிர் நோயினால் இறந்தாலும் அதன் வருத்தம் தெரியாது. அவர்களுடைய மனப்பாங்கை மாற்ற இலக்கியமே சிறந்த சாதனம் என முடிவு செய்கிறார் லூ சுன்.
மருத்துவத்தைவிட இலக்கியம் உயர்ந்தது என்பதை செகாவ் ஒரு புள்ளியிலிருந்து அடைகிறார் என்றால் லூ சுன் மற்றுமொரு முனையிலிருந்து அதைவந்து சேர்கிறார்.
விட்டுக்கொடுக்காத நேர்மையும், அண்டிப்பிழைக்கும் அடிமைத்தனமும் இல்லாத லூ சுன் 1909 ல் ஆசிரியராகப் பணியாற்றினார். தனது மாணவர்களை சீனப்புரட்சியில் பங்கெடுக்கத் தூண்டினார். சீனப்புரட்சி ஏகாதிபத்தியவாதிகளால் தோல்விகண்டதும் லூ சுன் பெரும் மனசோர்வு அடைந்தார் என்பது 1981ல் பொதுமை பதிப்பகத்தில் வெளிவந்த அவரது போர்க்குரல் என்ற சிறுகதை தொகுப்பின் முன்னுரையின் மூலம் தெரியவருகிறது.
லூ சுனின் கதைகள் கலை செரிவுள்ளதா எனக்கேட்டால் ‘இல்லை’ என்பதே பதிலாக இருக்கும். லூ சுன்னும் அதை ஒப்புக்கொள்கிறார். “என் கதைகள் கலைப்படைப்புகள் என்ற தரத்திலிருந்து மிகவும் தள்ளியிருப்பவை. இருப்பினும் அவை இன்னும் கதைகள் என கருதப்படுபவை.” இதுதான் மகத்தான கலைஞனின் நேர்மையான சான்று.
‘ஒரு நிகழ்ச்சி’ என்ற சிறுகதை லூ சுன் தன் சுய அனுபவத்திலிருந்து சொல்வதாய் தொடங்குகிறது. ‘நான்’ என்று தன்னிலையிலேயே கதை சொல்கிறார். அவரது பல கதைகளிலும் இந்தத் தன்னிலைப்போக்கை நாம் பார்க்கலாம்.
கொடூரமான குளிர்கால வாடைக்காற்று வீசிக்கொண்டிருந்த ஒரு பனிக்காலத்தின் அதிகாலையில் தன் வேலை நிமித்தமாக வீட்டிலிருந்து வெளியேறுகிறார் கதைச்சொல்லி. அரவம் இல்லாத சாலையில் அவரை ஏற்றிச்செல்ல ஒரு ரிக்ஷா கிடைக்கிறது. அப்போது ஒரு கிழவி அவர்கள் ரிக்ஷாவில் மோதி கீழே விழுகிறாள். சம்பவத்தை யாரும் பார்க்கவில்லை. கதைச்சொல்லிக்கோ அவசரம். மாட்டிக்கொள்ளாமல் இருக்க, ‘வண்டியை விடு’ என அவசரப்படுத்துகிறார். அந்தக் கிழவிக்கு அடிப்பட்டதாகத் தெரியவில்லை இருந்தாலும் அவள் ‘அடிப்பட்டு விட்டது’ என்கிறாள். கதைச்சொல்லி வலியப்போய் ரிக்ஷாகாரன் மாட்டிக்கொண்டதாகக் கருதுகிறான். ரிக்ஷாக்காரன் சற்றும் தாமதியாது அருகில் இருக்கும் காவல் நிலையத்துக்குக் கைத்தாங்கலாய் அவளை அழைத்துச்செல்கிறான். சற்று நேரத்தில் காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த போலிஸ்காரர் ஒருவர், ‘ அவரால் தொடர்ந்து இழுக்க முடியாது; வேறொரு ரிக்ஷாவில் அமர்ந்துக்கொள்ளுங்கள்’ என்கிறார். கதாசிரியரும் மறுப்பேச்சு பேசாமல் மேல்கோட்டில் இருந்த நாணயங்களை கைநிறைய அள்ளி ரிக்ஷாக்காரனிடம் கொடுத்துவிடப்பணிக்கிறார்.
கதை இங்கேயே முடிந்திருந்தால் அது நன்னெறி கதை ஆகியிருக்கும். ஒரு சிறுகதை நன்னெறிக்கதைபோல வெறும் உடலுடன் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. அது மனதின் சிடுக்கில் புகுந்து கீரிப்பார்க்கக் கூடியது.
கதாசிரியருக்கு பணம் கொடுத்தப்பின் தன்னைத்தானே அருவருப்பாகப் பார்க்கிறார். அவர் பணம் கொடுத்தனுப்பிய நோக்கம் என்னவென்று யோசிக்கிறார். ஒரு ரிக்ஷாக்காரனின் தரத்தை மதிப்பிட தனக்கு என்ன தகுதியென வெட்குகிறான் கதை ஆசிரியன். கதை முடிந்துவிடுகிறது.
எல்லாவற்றையும் பணத்தால் சரிகட்டிவிடலாம் என்ற மனம் தொடங்கும் இடம் எது என்ற வலுவான கேள்வியை இக்கதை நம்முன் வைக்கிறது. பணம் உட்புகுந்து செல்ல முடியாத இடங்கள் இன்னும் உலகில் இருக்கவே செய்கின்றன. அதுமாதிரியான வாழ்வை வாழ்பவர்கள் மிக எளிய மனிதர்களாக நம்முன் நின்றுக்கொண்டிருக்கலாம். ஆனால் உலகில் பணத்தை மிஞ்சிய மகிழ்ச்சி கொடுக்கும் ஏதோ ஒன்றை அவர்கள் நம் கண்களுக்குத் தெரியாமல் கைவசப்படுத்தியிருக்கிறார்கள்.
செகாவ், சுஜாதா, கார்வர்ட், லூ சுன் என அனைவரையும் ஒரே தர வரிசையில் வைத்து மதிப்பிட முடியாது. ஆனால் ஒரு படைப்பாளி வாழ்வை தீராமல் விசாரணை செய்துக்கொண்டே இருக்கிறான். அவனுக்கு சக மனிதன் மீதே கவனம் குவிகிறது. மனிதனின் அத்தனை குணங்களும் அவனுக்கு புதிராகவே இருக்கிறது. அந்தப் புதிரைக் கண்டுப்பிடிக்க முயல்பவைதான் இலக்கியப்படைப்புகள். விநோதம் என்னவென்றால் புதிர்களை அவிழ்க்க முயன்றவர்கள் புதிய புதிய புதிர்களை உருவாக்கியதுதான்.