எதார்த்தமான கதை சொல்லும் முறை ஒரு புறம் இருக்க மிகையான கற்பனை மூலம் உருவாக்கப்படும் புனைவுகள் சமூகத்தின் மத்தியில் பெரும் அதிர்ச்சியைத் தரக்கூடியது. அதிகாரத்தால் கலைஞர்கள் கட்டுப்படுத்தப்படும் சூழலில் பெரும்பாலும் நுட்பமான அரசியலைப் பேசவும் பூடகமாக நடப்பு அரசியல் சூழலைக் கிண்டல் செய்யவும் இதுபோன்ற படைப்புகள் உருவாக்கப்படுகின்றன. காலம், தேசம், மொழி ஆகியவற்றை கவனத்தில் கொள்ளாமல் வாசிக்கும் போது காலம் கடந்த அதுபோன்ற படைப்புகள் புதிய அர்த்தங்களையும் கொடுப்பதுண்டு. ஆனால் பெரும்பாலும் விமர்சகர்கள் ஒரு படைப்பை இந்த மூன்று கூறுகளின் அடிப்படையில் அணுகி ஒரு புனைவு உருவான பின்புலத்தை உள்வாங்க முயல்கின்றனர்.
க்யூபாவைச் சேர்ந்த விர்ஜிலியோ பினேரா(Virgilio Piñera) சிறுகதை எழுத்தாளர் மட்டுமல்ல. அவர் ஒரு கவிஞருமாவார். அவரது ‘மாமிசம்'(Meat) பலவாராக விமர்சிக்கப்பட்டு பரந்த கவனத்தைப் பெற்ற சிறுகதையாகும்.
ஒரு நகரம் இறைச்சி பற்றாகுறையால் பாதிக்கப்படுகிறது. மக்களிடையே மெல்ல கலவரம் எழுந்து பின் அது அமுங்குகிறது. அவர்கள் காய்கறிகளை உண்பதில் ருசி காண்கின்றனர். ஆனால் அன்சால்டோ எனும் ஒருவன் மட்டும் விதிவிலக்காக ஒரு புதிய உத்தியைக் கையாள்கிறான். அவன் தனது இடதுபுற பிருஷ்டத்திலிருந்து ஒரு துண்டு சதையை வெட்டி எடுக்கிறான். உப்பையும் வினிகரையும் போட்டு அதை சுத்தம் செய்து வறுக்கிறான். பின்னர் அதை சுவைத்து சாப்பிட ஆரம்பிக்கிறான். தற்செயலாக அங்கு வந்த ஒருவர் அதைப் பார்த்து நெகிழ்ந்து மேயரையும் அழைத்து வந்து காட்டுகிறான். மேயரின் வேண்டுகோளின் படி சில சின்ன சின்ன எதிர்ப்புகளுக்கு மத்தியில் தன் இறைச்சியை தானே சமைத்துச் சாப்பிடும் உக்தியை நகரத்தின் மத்தியில் செய்துக்காட்டுகிறான் அன்சால்டோ.
அன்சால்டோ புகழப்படுகிறான். நகரத்தில் அனைவரும் அவரவர் இறைச்சிகளை வெட்டிச் சமைத்து சாப்பிட ஆரம்பிக்கின்றனர். யாரும் நகரத்தில் பேசுவதில்லை காரணம் அவர்கள் நாக்குகளை விழுங்கி தின்றுவிடுகின்றனர். யாரும் யாருக்கும் முத்தமிடுவதில்லை. காரணம் உதட்டின் குழம்பு அவ்வளவு ருசியாக இருக்கிறது. சிறை தண்டனை யாருக்கும் வழங்கப்படவில்லை. காரணம் நீதிபதி தனது விரல் சதையைத் தின்று தீர்த்துவிட்டார். கொஞ்ச நாள்களில் அவர்களுக்கு வாய் இருந்த இடத்தில் வெறும் ஓட்டை மட்டுமே இருந்ததால் இறைச்சியை அதற்குள் போட்டுக்கொண்டனர். யாருக்கும் காதுகள் கேட்கவில்லை. காதுகளையும் அவர்கள் சாப்பிட்டனர். கொஞ்ச நாள்களில் அந்த நகரில் ஆட்கள் காணாமல் போவதாகத் தேடத்தொடங்கினர். ஆட்கள் இருப்பதாகச் சொல்லப்பட்ட இடங்களில் கழிவுகள் மட்டுமே இருந்தன.
இப்படியாகச் சிறு சிறு சிக்கல்கள் இருந்தாலும் தங்கள் பசியைப் போக்க வாய்ப்பளித்த அந்த நகரத்தை யாரும்குறை சொல்லவில்லை என்பதாகக் இக்கதை முடியும்.
இந்தக் கதையை வாசிப்பவரும் அதிர்ச்சி ஏற்படுவது உறுதி. காரணம் இது யதார்த்த வாழ்வுடன் தொடர்பில்லாதது. ஆனால் இந்தக் கதை கொடுக்கும் கொடூர காட்சி அச்சத்தை தரக்கூடியது. ஆனால் கதாசிரியர் எங்குமே அந்தக் காட்சியை அவலட்சனமாகக் காட்டாமல் மிக அழகான ஒன்றாக வர்ணிக்கிறார்.
இந்தக் கதையை வாசிக்கும் ஒருவருக்கு இக்கதை வறுமை குறித்து கூறுவதாக எளிதில் தோன்றலாம். அது கதையை மேலோட்டமாகப் புரிந்துகொண்டவர்களின் அர்த்தம் மட்டுமே. உண்மையில் இக்கதை மக்கள் நலன் காப்பதாக சொல்லப்படும் புரட்சிகள் மற்றும் அரசியல் அதிகார நிறுவனங்களை கேலி செய்கிறது. மக்கள் ஒரு தீர்வுகாக மற்றொன்றை நாடி பின் அந்த தீர்வுகளாலே தங்களை அழித்துக் கொள்கிறார்கள். சதை தின்பதை தீர்வாக கொள்ளும் மக்கள் தாங்கள் அழிவதையும், தொடர்ந்து மனித எண்ணிக்கை குறைவதையும் கவனிக்கத் தவறுகிறார்கள். புதிய தீர்வை சரியானதா எனக்கூட சிந்திக்க முடியாத குழப்பவாதிகளாகி சட்டத்தை அப்படியே ஏற்பவர்களாகவும் நடைமுறைபடுத்துபவர்களாகவும் இருக்கிறார்கள். அம்மக்கள் தங்கள் அழிவையும் பொருட்படுத்தாமல் தங்கள் தேர்வில் மட்டும் மகிழ்ச்சி காண்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் தவறான தேர்வினை குறித்து அவர்களுக்கு தெளிவில்லாததைச் சொல்லவோ, அதுபற்றி விவாதிக்கவோ கடைசியில் அவர்களே இல்லாமல் போய்விடுகிறார்கள் என்பதாக கதை முடிகிறது.
இக்கதை வெறும் ஆட்சியாளர்களை மட்டும் கேலி செய்யாமல் மக்கள் தங்களது சிக்கலுக்குத் தேர்ந்தெடுக்கும் தீர்வுகளையும் கேலி செய்கிறது. அரசியல் வேறுபாடுகளால் கைது செய்யப்பட்டார் என விர்ஜிலியோ பினேரா வாழ்க்கைக் குறிப்பிலிருந்து அறிய முடிகிறது. இதன் அடிப்படையில் கியூபா கம்யூனிச நாடு என்பதையும் வெளிநாட்டு வர்த்தகம், வளர்ச்சி அங்கு இல்லை என்பதை அறியலாம். அவ்வகையில் விர்ஜிலியோ பினேரா இக்கதையை கம்யூனிஸத்தை எதிர்த்து எழுத்தியுள்ளாரோ என்றும் சிந்திக்கத் தோன்றுகிறது.
முதலில் சொன்னது போல ஒரு சிறுகதை எழுதப்பட்டக் காலத்தில் எவ்வாறான காரணங்களால் தோன்றியிருந்தாலும் அது வாசிக்கும் ஒவ்வொரு வாசகனுக்கும் காலம்,தேசம், இனம் கடந்த புதிய அர்த்தங்களைக் கொடுக்கும். ஒரு புனைவுக்கு ஒரு அர்த்தம்தான் என்பதும் அதிகாரத்தின் குரல்தான்.