எமிலி நஸ்ரல்லா (emily nasrallah) ‘பெய்ரூட் கதைகள்’ என்ற சிறுகதை தொகுப்புக்கு எழுதிய முன்னுரையை முன்பு பிரான்ஸிலிருந்து வெளிவந்த ‘மௌனம்’ என்ற சிற்றிதழில் முதன் முதலில் வாசிக்கக் கிடைத்தது. எஸ்.வி.ராஜதுரை அதை தமிழில் மொழிப்பெயர்ந்திருந்தார். உண்மையில் நான் அதை எஸ்.வி.ஆர் மொழிப்பெயர்த்ததால்தான் படித்தேன் என்றுக்கூறலாம். அதன் பின்னர் எஸ்.வி.ஆரும் வ.கீதாவும் இணைந்து மற்றுமொரு ‘மௌனம்’ இதழில் எமிலி நஸ்ரல்லா சிறுகதை ஒன்றையும் மொழிப்பெயர்த்திருந்தனர். அக்கதைக்கு ‘முட்டைகோஸ் பொம்மை’ எனத் தலைப்பிட்டிருந்தார்கள். இதே சிறுகதையை எழுத்தாளர் சாரு நிவேதிதாவும் மொழிப்பெயர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் எஸ்.வி.ஆரின் மொழிப்பெயர்ப்பு வாசிக்க இக்கதை இன்னும் நெருக்கமானது.
பொதுவாகவே சிறுகதைக்குள் நுழையும் இளம் தலைமுறைக்குக் கதையின் கட்டமைப்புக்குறித்து ஒரு திட்டவட்டமான முன்முடிவு இருக்கும். கதையில் திடீர் திருப்பம் வர வேண்டும். முடிவு வாசகனை வாய்ப்பிழக்கும் வகையில் அதிர்ச்சி கொடுப்பதாய் இருக்க வேண்டும் என யோசித்து அதன் படி எழுதத் தொடங்குவார்கள். வாசிக்கும்போதும் அவ்வாறான அமைப்பு இல்லாத கதைகள் மேல் பெரும் ஏமாற்றம் இருக்கும். ஒரு படைப்பு அவ்வாறான கட்டமைப்புக்கு உட்பட்டதா என ஒருதரம் சிந்திக்க வேண்டியுள்ளது. இதற்கு விடைகாணும் முன் எமிலியின் ‘முட்டைகோஸ் பொம்மை’ சிறுகதையைப் பார்ப்போம்.
சிறுகதையின் தொடக்கம் ஒரு விடுகதையைப்போல வளர்கிறது.
‘இந்தச் சொற்களை எனக்காகப் பதிவு செய்வது எது என்று எனக்குத் தெரியாது.எனது மகளை எனக்குப் பின்னால் தரதரவென இழுத்துக்கொண்டு பாதுகாப்பிடம் தேடி ஓடும் போது என்னிடமிருந்து நழுவி விழுந்த பேனாவா? அல்லது பெரும் தீயின் இடிபாடுகளுக்கிடையில் தூக்கி எடுக்கப்பட்டு தனது புதிய சருமமான பிளாஸ்டிக் பையில் திணிக்கப்பட்ட என் உடலா?’ எனக்கேட்கிறார் கதைச்சொல்லி.
இந்தவரியில் கதையில் ரகசியங்கள் கலன்றுவிடுகின்றன. உண்மையில் வாசகனுக்குத் தீனி போட நினைக்கும் மலிவான ஆக்கங்களே கடைசிவரியில் சஸ்பென்ஸ் என்று திருப்புமுனைகளை ஏற்படுத்த முயல்கின்றன. அதில் வாசகன் அடைவது எளிய அதிர்ச்சி. இந்தக் கதையில் எமிலி நஸ்ரல்லா அதை செய்ய முயன்றிருக்கலாம். கடைசியில் கதையைச் சொல்வது ஓர் ஆவி என முடித்து வாசகனை அதிர்ச்சி அடைய வைக்கலாம். ஆனால் அவர் தீவிர படைப்புகள் கதையின் முடிவாக வைக்கும் வாழ்வின் புதிரையும் அவலத்தையும் ஒரு சேர வைக்கிறார்.
நைனார் என்ற சிறுமியின் முட்டைகோஸ் பொம்மை மீதான ஆசையிலிருந்து தொடங்குகிறது சிறுகதை. அவள் தன் அம்மாவை அன்று பொம்மை வாங்கியே தீரவேண்டும் என பேரங்காடிக்கு அழைக்கிறாள். ஒரு வேலை செய்யும் தாயான கதைச்சொல்லிக்கு வீட்டுக்குத் தேவையான பொருள்கள் வாங்கவேண்டிய தேவை இருக்கவே புறப்பட்டு செல்கின்றனர். நகரில் ஆங்காங்கே பாதுகாப்பு குறைந்துவருவது கதைச்சொல்லி மனதில் வந்து வந்து போகிறது. ஆனால் நைனாருக்கு பொம்மை மீதே கவனம் இருக்கிறது. அந்தச் சிறுமிக்கு அந்த பொம்மையின் மீது எவ்வளவு ஆசை என ஒரு இடத்தில் கதாசிரியர் சொல்கிறார்.
பேரங்காடிக்குச் சென்ற அம்மா முதலில் வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கிவிடுவோம் இறுதியில் பொம்மை வாங்குவோம் என்கிறாள். அதற்கு அந்தக் குழந்தை கோபத்துடனும் குழப்பத்துடனும் கேட்கிறது. “அப்படியானால் பொம்மை வீட்டுக்குத் தேவையான பொருள் இல்லையா?”
இந்த வரி ஒரு கவிதை போல என்னைத் துரத்திக்கொண்டே இருந்தது. இந்த ஒரு வரிதான் அந்தச் சிறுமியிடம் நம்மை நெருங்க வைக்கிறது. அந்த குழந்தை உள்ளத்தையும் அதன் அசட்டுத்தன்மையும் அக்குழந்தை உலகைப் புரிந்து வைத்துள்ள கோணங்களையும் நெருங்கிப்பார்க்க வைக்கிறது. ஆனால் இறுதியில் பணம் செலுத்த அம்மா செல்லும் போது குண்டு வெடிக்கிறது. உடல்கள் சிதறுகின்றன. அம்மாவுக்கு அந்த நிமிடம் தோன்றுகிறது… ‘என் செல்லக்குழந்தை தனது பொம்மையை எடுத்துக்கொள்ளாமல் எப்படி இந்தக் கடையைவிட்டு வெளியேறுவாள்…நான் அதற்கு இன்னும் பணம் செலுத்தவில்லையே…’ இந்த வரியுடன் கதை முடிகிறது.
நமக்கு முதலிலேயே தெரிந்த முடிவுதான். எந்த திருப்பமோ திடுக்கிடலோ இல்லை . ஆனால் சிறுகதை நம்மை உலுக்குகிறது. ஒரு நல்ல சிறுகதைக்கு வடிவத்தைவிட வாழ்வை பற்றிய ஆழ்ந்த பார்வைதான் முக்கியம். வெகுசனக்கதைகளை திட்டமிட்ட வடிவங்களால் வாசகனைக் கட்டிப்போட முயல்கின்றன. தீவிர இலக்கியம் வாழ்வின் அசலான பாதையை திறந்து காட்டுகின்றன. சிறுகதைக்குத் அதன் தொடக்கமும் முடிவும் முக்கியம்தான். சரியான இடத்தில் கதையை முடிப்பதன் மூலமே வாசகன் தொடர்ந்து அந்தக் கதையோடு பயணிக்கிறான். எழுத்தாளன் சிறுகதையில் விடும் மௌனங்களின் இடைவெளியே வாசகன் தன்னைக் கண்டடைகிறான். இவ்வாறு ஒரு சிறுகதை தனக்கான உருவத்தை தானே அமைத்துக்கொள்ளும் தன்மை கொண்டது. மாறாக அதை எழுத திட்டவட்டமான ஒரு சூத்திரம் இல்லை.
உலகெங்கிலும் அங்கீகாரம் பெற்றுள்ள லெபனானிய பெண்ணிய எழுத்தாளர் எமிலி நஸ்ரல்லா . இலக்கியத்துக்காகப் பல விருதுகளைப் பெற்ற இவர் பள்ளி ஆசிரியராகவும் கல்லூரி விரிவுரையாளரகவும் பணியாற்றியவர். லெபனானில் போர்ச்சூழலில் வளர்ந்த இவர் புலம்பெயர்வால் உண்டாகும் பாதிக்கப்புகளையும் அடையாளம் இழத்தலையும் குறித்து அதிகம் பேசுகிறது . பெண் விடுதலை குறித்து பேசும் இவரின் அகப்பக்கத்தை இணையத்தில் வாசிக்கலாம்.
http://www.emilynasrallah.com/ எமிலி அகப்பக்கம்