சாகாத நாக்குகள் – 2

சாகாத நாக்குகள் – 2

.நவீன்

 

“சிகரெட்டிலிருந்து

வெளியே தப்பிச்செல்லும்

புகையைப் போல்

என் உடன்பிறப்புகள்

நான்

சிகரெட்டிலேயே

புகை தங்க வேண்டுமெனக்

கூறவில்லை

வெளிச்செல்கையில்

என்னை நோக்கி

ஒரு புன்னகை

ஒரு கையசைப்பு

ஒரு மகிழ்ச்சி

இவைகளையே

எதிர்ப்பார்க்கிறேன்

அவ்வளவு தானே

00012004ல் மலேசியாவில் நடந்த கவிதைப்பற்றிய கருத்தரங்கில் ஆத்மாநாமின் இந்தக் கவிதையைப் பகிர்ந்துகொண்டபோது கடுமையான எதிர்ப்பு வந்தது. வாழ்வில் நம்பிக்கையை விதைக்காத ஒரு படைப்பு எப்படி நல்ல படைப்பாக இருக்க முடியும் என ஆரம்பித்து அன்பின் மகத்துவம் பற்றி சிலாகித்துப் பேசப்பட்டது. நான் கூனிக்குறுகிப்போனேன். அன்பு ததும்பும் மனிதக்கூட்டத்துக்கு மத்தியில் நான் ஓர் அரக்கனாக அங்கே உட்கார்ந்திருந்தேன். மனித உறவுகளின் பிணைப்பாக இருக்கும் அன்பைச் சந்தேகிக்கும் சொற்கள் எவ்வளவு சீக்கிரமாக எளிய மனங்களைப் பாதிக்கச் செய்கிறது என உணர்ந்த கணம் அது. அவர்கள் உண்மையை எதிர்க்கொள்ளத் தயாராக இல்லை. ஆனால் இலக்கியம் அதைதான் மீண்டும் மீண்டும் செய்கிறது.

இலக்கியம் எதை நிரூப்பிக்க எழுதப்படுகின்றது என்ற கேள்விக்கு அபத்தமான பதில்களை நமது கல்விக்கூடங்கள் திட்டமிட்டு உருவாக்குகின்றன. உண்மையில் இலக்கியம் எதையும் நிரூபிக்க எழுதப்படவில்லை. அது சகஜமாக நம்மிடம் உறவாடுகிறது/ உரையாடலை தொடர்வதும்; தவிர்ப்பதும் அவரவர் மனநிலையை பொருத்து மாறுபடுகிறது.

பல சமயங்களில் என்னை உலுக்கிய, அழவைத்த ஒரு படைப்பு சக நண்பர்களை ஈர்ப்பதில்லை. நான், நாள் கணக்கில் எனக்குள் விவாதிக்கும் ஒரு படைப்பை ஒரே வரியில் சிலர் கதைச்சுருக்குமாகச் சொல்வது ஆச்சரியமாக இருக்கும். மொழியால் உருவானதாலேயே இலக்கியம் எல்லோருக்குமே புரிந்துகொள்ளக்கூடியதாகி விடும் என நம்பப்படுகிறது. வீட்டுக்கு வரவு செலவு கணக்கு எழுதுவது தொடங்கி உறவினருக்குக் கடிதம் அனுப்புவது வரையில் ஒத்திருக்கும் ஒரே எழுத்துரு வேறென்ன புதிய அர்த்தத்தை இலக்கியத்தில் மட்டும் கொடுத்துவிடப்போகிறது என்ற எண்ணம் வெகுமக்களிடம் எப்போதுமே பதிந்துள்ளது.

வாசிப்புப் பயிற்சி மட்டுமே இலக்கியப் படைப்பின் நுட்பமான மொழியை அறிந்துகொள்ள உதவும். நமக்குள் ஏற்கனவே ஏற்பட்ட அனுபவங்களை ஒப்பிட்டுப்பார்க்கிறது. இலக்கியம் எதையும் நிரூபிக்காவிட்டாலும் அதனுடன் ஒரு நல்ல வாசகன் ஒத்துப்போக முடிவது இந்த ஒப்பீடுகளால்தான். நமது நினைவடுக்கில் ஆழப்பதிந்து மறைந்து போன ஒரு நினைவை இலக்கியப் படைப்பு மீண்டும் மீள்வாழச் செய்கிறது. மனதை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

சாதத் ஹசன் மண்ட்டோவின் ‘அவமானம்’ சிறுகதையைப் படித்தபோது நான் அவ்வாறுதான் உணர்ந்தேன். அக்கதையை வாசிக்கும்

யாருக்கும் மிக அந்தரங்கமான நமது மனதின் உள்ளடுக்கில் யாரோ எட்டிப்பார்ப்பது போல தோன்றும்.

சுகந்தி என்ற பாலியல் தொழிலாளியிடம் அன்பு செலுத்துகிறான் மாது என்ற கடைநிலை போலிஸ்காரன். தொடக்கத்தில் அவனது பேச்சு சுகந்தியிடம் ஆழமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதனால் கற்பனையில் அவனுடைய மனைவியாகத் தன்னைக் காட்சிப்படுத்தியெல்லாம் பார்க்கிறாள்.

மாது புனேவில் உள்ளவன். மாதத்திற்கு ஒருமுறை வந்து போகும்போதெல்லாம், “இங்கே பார் சுகந்தி, நீ உன் தொழிலை மறுபடியும் தொடங்கினால் நீயும் நானும் நண்பர்களாக இருக்க முடியாது. இனி ஒரே ஒரு முறை நீ எந்த ஆணையாவது இந்த அறைக்குள் நுழையவிட்டால், உன் முடியைப் பிடித்திழுத்து இந்த வீட்டை விட்டு வெளியே விட்டெறிவேன்… நான் புனே போய்ச் சேர்ந்தவுடன், உன் மாதச் செலவுக்கான பணத்தை மணியார்டர் மூலம் அனுப்பி வைக்கிறேன்… ஆமாம், இந்த அறைக்கு எவ்வளவு வாடகை” என்ற வசனத்தைச் சொல்லத் தவறியதில்லை. ஆனால் மாது புனேவிலிருந்து பணமும் அனுப்பியதுமில்லை. சுகந்தி தன் தொழிலை நிறுத்தியதுமில்லை. அவன் ஏன் பணம் அனுப்புவதில்லை என சுகந்தி கேட்காதது போலவே அவளுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது என்று மாதுவும் சுகந்தியிடம் ஒருபோதும் கேட்கவில்லை. இருவரும் ஓர் உண்மையின் மீது நின்று அறிந்தே நாடகம் ஆடிக்கொண்டிருந்தனர்.

ஒருமுறை சுகந்திக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுகிறது. தன் சக தோழிக்குக் கொடுத்து உதவ அவள் மாதுவிடம் உதவி கேட்க நினைக்கிறாள். ஆனால் மாது வரும் வரை காத்திருக்க முடியாது. சேட் ஒருவன் அழைப்பதாகக் கூறி தரகர் அழைக்கவே கடுமையான உடல் நோவிலும் உடன் செல்கிறாள். சேட் அவளைப்பார்த்து ‘நோ’ எனக்கூறி காரை எடுத்துக்கொண்டு வேகமாகப் போய்விடுகிறான். சுகந்தியைச் சேட்டுக்குப் பிடிக்கவில்லை என தரகன் கூறுகிறான்.

சுகந்திக்கு அந்தச் சொல் சுடுகிறது. கடும் அவமான உணர்ச்சி ஏற்படுகிறது. தனது அழகு குறித்து தனக்குள்ளேயே விவாதம் செய்கிறாள். அவளால் அவ்வளவு எளிதில் அந்த அவமானத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அலைந்து திரிந்து அதிகாலையில் அறைக்கு வரும்போது மாது அங்கே இருக்கிறான். அவன் “இப்படித்தான் காலையில் நடக்க வேண்டும் அது உடலுக்கு நல்லது” என்ற தொணியில் ஒன்றும் அறியாதவன் போல பேசுகிறான். பின்னர் அவளிடம் அவசரமாக ஐம்பது ரூபாய் கேட்கிறான்.

தனது நாடகத்திலிருந்து அந்நிமிடம் வெளியேறிய சுகந்தி அந்தப் போலிஸ்காரனையும் அதிலிருந்து வன்மமாக வெளியே பிடுங்கி எறிகிறாள். அவனை அவமானப்படுத்துகிறாள். அத்தனை நாள்கள் அவர்கள் லாவகமாகப் போட்டு வந்த நாடகத்தின் அபத்தத்தின் மீது காறி உமிழ்கிறாள். அவன் இனி அங்கு வந்தால் அவனைச் சட்டசிக்கலில் மாட்டிவிடக்கூடும் என மிரட்டி துரத்தி அடிக்கிறாள். பின்னர் அங்கிருக்கும் ஒரு சொறிநாயின் அருகில் படுத்துக்கொள்வதில் அவள் தன் மேல் வைத்திருந்த அத்தனை கற்பனைகளையும் களைத்துப்போடுகிறாள் எனப் புரியவைக்கிறாள். ‘அவமானம்’ சிறுகதை அதோடு முடிகிறது.

இச்சிறுகதையைப் படிக்கும் பலரும், மாது தன்னை ஏமாற்றுவதை அறிந்து அவள் கோபம் கொள்கிறாள் என ஒற்றை வரியில் கதையை புரிந்துகொள்ள முயல்வதைப் பார்த்துள்ளேன். ஒரு பாலியல் தொழிலாளியின் எழுச்சி, புரட்சி என தட்டையாகச் சிறுகதையைக் கற்பிதம் செய்துக்கொள்ளும் பண்பு நம் மத்தியில் அதிகம். சுகந்திக்கு மாதுவின் மீது கோபமில்லை. அவளுக்கு உண்மையின் மீது கோபம். சேட் சொன்ன உண்மை அவளை உலுக்கிவிட்டது. அது சேட்டின் குரல் மட்டும் அல்ல. ஒட்டுமொத்த ஆண்களின் குரல். மாதுவின் குரலும் அதுதான். ஆனால் சுகந்தியால் பயனடையும்வரை மாது அந்த உண்மையைச் சொல்லவே மாட்டான். அவனுக்கும் அவளைப் பிடிக்காதுதான். உண்மைகள் சில நேரங்களில் சலுகைகள் கிடைக்க இடையூறாக இருக்கலாம். உண்மையைச் சொல்லாத மௌனங்களினால்தான் மனித உறவுகள் இன்றளவும் அத்தனை உன்னதமாய் வர்ணிக்கப்படுகின்றன.

‘நமது உறவு முடிந்துவிட்டது என்றோ அல்லது இத்தோடு போதும் என்றோ காதலிப்பவர்களிடம் சொல்லத் துணிவற்ற அடிமையாக, தமக்குப் பிடிக்காதவர்களோடு விருந்துண்ணும் கட்டாயத்தை நிறுத்தச் சக்தியற்றவர்களாக பலரும் இருந்துவிடுகின்றனர்.’ என பாவ்லோ கொய்லோ (Paulo Coelho) ‘சஹீர்’ என்ற நாவலில் இதே அபத்தத்தைச் சொல்லும் வரியைச் சங்கடத்தோடுதான் கடக்க வேண்டி வருகிறது.

ஏறக்குறைய இதே பாணியிலான ஓர் சிறுகதையை ஆண்டன் செகாவும் எழுதியுள்ளார். ‘நாடகக்காரி’ என்ற அக்கதை புதுமைப்பித்தனால் தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டது.

கோல்ப்பக்கோவ் என்பவனுக்கு வைப்பாக இருக்கிறாள் பாஷா என்ற நாடக்காரி. அன்றும் அவள் வீட்டுக்கு வந்து சிடுசிடு என்று பேசிக் கொண்டிருக்கிறான். திடீரென அந்த வீட்டின் கதவு தட்டப்படவே தனது உடமைகளை எடுத்துக்கொண்டு உள் அறைக்குள் செல்கிறான். கதவைத் தட்டியது கோல்ப்பக்கோவ் மனைவி. வந்தவள் கோல்ப்பக்கோவ் ஆபீசில் பணத்தைக் காணவில்லை. அவர் பணத்தைத் திருடிவிட்டார் என்றும் அவளுக்கு (நாடகக்காரிக்கு) கொடுக்கத்தான் அவர் திருடி விட்டார் என்றும் குற்றம் சாட்டுகிறாள். திருடப்பட்ட மொத்த தொகை 900 ரூபிள்கள் என்றும் உடனே அப்பணத்தைத் திரும்பக்கொடுக்கும் படியும் மன்றாடுகிறாள். கோல்ப்பக்கோவ்லுக்குக் கடும் தண்டனைக் கிடைத்தால் தானும் தன் குழந்தையும் நடுத்தெருவில் நிர்ப்போம் எனக்கூறி அவள் காலில் விழச்செல்கிறாள். அவள் குனிவதைக் கண்டு பாஷா பயந்து வீரிடுகிறாள். குழந்தைகள் நடுத்தெருவுக்கு வருவதெல்லாம் அவள் கற்பனை செய்ய முடியாதது. அவளது சேகரிப்பில் இருந்த கோல்ப்பக்கோவ் ஒருபோதும் கொடுக்காத அவ்வளவு பணத்தையும் கொடுத்து அனுப்புகிறாள். வெளிவந்த கோல்ப்பக்கோவ் “தெய்வமே! பெருமையையும் மதிப்பையும் விட்டுவிட்டு உன் காலிலா அவள் விழ வேண்டும்” என கவலைப்படுகிறான். மேலும் “கிட்ட வராதே! மூதேவி” என்று பாஷாவை உதறித் தள்ளிவிட்டு, “உன் காலிலா விழ வேண்டும்! உன் காலில்! ஐயோ தெய்வமே! உன் காலில்” எனக்கூறியபடியே வெளியேறுகிறான்.

0003‘நாடகக்காரி’ என்ற சிறுகதையின் தலைப்பு குறிப்பிட்ட ஒருவரை சொல்வதாக இல்லை. அவரவர் தத்தம் தேவைக்காக வலிந்து திணித்துகொள்ளும் பாத்திரங்களையும், அப்பாத்திரங்களின் முகமூடிகளையும் உண்மை இரக்கமே இல்லாமல் கிழித்துப்போட்டு நகர்வதையும் உலக இலக்கியவாதிகள் ஒவ்வொரு கணமும் எழுத்தின் மூலம் நினைவுறுத்தி வருகின்றனர். மனிதன் போலியாகத் தரித்துள்ள புனித கவசங்களை ஓயாமல் இலக்கியப்படைப்புகள் கேலி செய்தே வந்துள்ளன. ஒருவகையில் அது மானுடத்தின் கற்பிதங்களை கலைக்கவும் சீரமைக்கவும் மாறிமாறி தன் சக்தியைப் பாய்ச்சுகிறது. வாசகன் வெறும் நுகர்ச்சிகான தரப்பாக இல்லாமல் அவனை இழுத்து உலுக்கி பின்னர் மீண்டும் வாழ்க்கைக்குள் தள்ளி விடுகிறது.

இதுபோன்ற பாவனையை உள்வாங்காமல் மானிட வாழ்வு சாத்தியமா என சிந்திக்கும்போதுதான் நம்மால் ‘அந்நியன்’ நாவலில் வரும் மெர்சோவை புரிந்துகொள்ள முடிகிறது.

ஒரு பெண்ணை நீங்கள் பார்க்கிறீர்கள். உங்களுக்கு அவரைப் பிடிக்கிறது. ஆனால் அன்று மட்டுமே பிடிக்கிறது. மறுநாள் முதல்நாளைப்போல பிடிக்காத உண்மையை அவரிடம் சொல்லும் துணிவு உங்களுக்கு வருமா? உறவுகளில் நாம் நமது முதல் அபிப்பிராயத்தைத் தக்க வைத்துக்கொள்ள எவ்வளவு போராடுகிறோம். நமக்கே தெரியாத ஒரு நாடகத்தை மிக தீவிரமாக நடத்துகிறோம். முந்தைய நிமிடத்தின் உணர்வுகளைச் சுமந்து திரிகிறோம். அப்படி சக மனிதனால் செய்ய இயலாவிட்டால் அவனை அந்நியமாகப் பார்ப்போம் இல்லையா? அந்த வகையான மனிதன்தான் மெர்சோ. மெர்சோ ஓர் துறவு மனம் கொண்டவன் இல்லை. உடல் சார்ந்த உணர்ச்சிகளுக்கு இடமளித்து, நிகழ்கால செளகரியங்களை பேணி வாழ்பவன். அவனைப் பொருத்தவரை உலக நியதி, உறவுகள்,வாழ்வின் அர்த்தம் எல்லாம் மனிதனால் கற்பித்துக் கொள்ளப்படுபவை.

அவன் எல்லா விசயத்திலும் இத்தகைய மனப்போக்கையே கடைப்பிடிக்கிறான். அவன் தாய் மரணம் தொடங்கி காதல் வசப்படுவதுவரை. அவனிடம் போலி முகங்களே இல்லை. மெர்சோவைக் காதலிக்கும் மேரி, அவனும் தன்னைக் காதலிக்கிறானா, திருமணம் செய்துகொள்ளலாமா எனக் கேட்கிறாள். அதற்கு மெர்சோ, மேரியைத் தான் காதலிக்கவில்லை. ஆனால் திருமணம் செய்துகொள்வதைப் பற்றி ஆட்சேபம் ஏதும் இல்லை என்கிறான். மெர்சோவின் முரணான இயல்பினைப் புரிந்துகொள்ள முடியாமல் மேரி திணருகிறாள்.

நாவலின் தொடக்கத்திலேயே அவனுடைய அம்மாவின் உடலடங்கிய சவப்பெட்டி உள்ள அறைக்கு செல்கிறான். காவல்காரன் உள்ளே வந்து மூடியுள்ள சவப்பெட்டியை திறக்க முற்படுகிறான். ஆனால் மெர்சோ திறக்கவேண்டாம் என்கிறான். காவல்காரன் “நீங்கள் பார்க்க விரும்பவில்லையா?” என்று கேட்கிறான். மெர்சோ “இல்லை” என்கிறான். ஒரு நாற்காலியை போட்டு சவப்பெட்டிக்கு அருகிலேயே உட்கார்ந்துக் கொள்கிறான். காவலாளியிடம் வேறு விடயங்களைப் பேசிக்கொண்டிருக்கிறான். பயணம் செய்தபோது அவனுக்கு அவன் அம்மாவைப் பார்க்கத்தூண்டிய உள்ளுணர்வு இப்போது அவனிடம் இல்லை. அதனால் வெறுமனே உட்கார்ந்திருக்கிறான்.

இறுதியில், அவன் தற்செயலாகச் செய்த ஒரு கொலையைக் காட்டிலும் அவனது மாற்று இயல்புகள் பாதகமானவையாகப் பார்க்கப் படுகின்றன.அபத்தத்தின் உச்சக் கட்டமாக, ‘இத்தகைய வினோத போக்குடையவர்கள் சமுதாயத்திற்கு ஆபத்தானவர்கள்’ என முடிவுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் அவனுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது.

ஆல்பர் கம்யூவின் ‘அந்நியன்’ நாவலில் வரும் மெர்சோ ஒரு துருவம் என்றால் மாதுவும் சுகந்தியும் மற்றுமொரு துருவம். உண்மையில் அந்த அபத்த நாடகத்தில் பங்கெடுத்து லாவகமாக வாழ்வை ஓட்டும்வரை உறவுகளில் சிக்கல் இருப்பதே இல்லை. நாடகத்திலிருந்து வெளியேற்றப்படும் ஒருவருக்கே கசப்பு நிறைந்த வாழ்வு காத்திருக்கிறது.

தி மித் ஆப் சிசிபஸ் என்ற ஆல்பர் கம்யூவின் கட்டுரையில் கிரேக்க புராண கதாபாத்திரமான சிசிபஸ்(Sisyphus) எனும் மனிதன் கடவுளை மீறி, இறப்பை சங்கிலிகளில் கட்டி வைக்கிறான். பிறகு இறப்பு தன்னை அச்சங்கிலியிலிருந்து விடுவித்துக் கொண்டு சிசிபஸ்ஸை நோக்கி வருகிறது. பிறகு அவன் இறப்பால் பிடிபட்டு கடவுள் முன் கிடத்தப்படுகிறான். கடவுள் அவனுக்கு முடிவற்ற தண்டனையை வழங்குகிறார். அந்த தண்டனையானது, அவன் தொடர்ந்து ஒரு கல்லை மலை உச்சிக்கு தள்ளி செல்ல வேண்டும். கல் உருண்டு கீழே விழுந்துவிடும். சிசிபஸ் மீண்டும் அந்த கல்லை உருட்டி மலை உச்சிக்கு செல்ல வேண்டும். இதுவே அவனது தண்டனை. ஆல்பர் கம்யூ சிசிபஸை ஓர் அபத்தமான கதாநாயனாக காட்டுகிறார். அவன் மரணம் என்ற ஒன்றை வெறுப்பவனாகவும், தொடர்ந்து வாழ்ந்தே ஆக வேண்டும் என்பதற்காக மனிதத்தன்மையிழந்திருக்கும் இயந்திரமாக மாறிவிட்டிருப்பதாகவும் சாடுகிறார். மரணத்தைத் தள்ளிப்போட மனிதன் தனது மொத்த வாழ்விலும் அர்த்தமற்ற ஒன்றைச் செய்துகொண்டேயிருக்க மெனெக்கெடுகிறான் என்கிறார்.0004

“அந்நியன்” நாவல் மனிதர்களின் மனசாட்சிகளையும், சில தத்துவ பிரச்சனைகளையும், மனித மனங்களின் அபத்த நிலைகளையும், அதுக்குறித்த மனிதனின் பிரக்ஞையையும் மிக ஆழமாக பேசுகிறது. சிசிபஸ் கல்லை உருட்டிச்செல்வதுபோல நாமும் வாழ்வை உருட்டிக்கொண்டே இருக்கிறோம். நாம் தொடர்ச்சியாகச் செய்வது ஓர் அபத்த நாடகம் எனத்தெரியும். ஆனாலும் அதை நிறுத்துவதில்லை. ஏதோ ஒரு தேவைக்காக நாம் கற்பனைகளை உருவாக்கி வைத்துக்கொண்டு அதை மெய்யாக்க அத்தனை பாடுபடுகிறோம். சுகந்திக்கு நிகழ்ந்ததுபோல நமது முகத்துக்குநேராக உண்மை நிற்கும் போது நமக்கு வாழ்வு கசக்கிறது. துறுத்தியிருக்கும் நூலை இழுத்து மொத்தப்பின்னலையும் பிரிப்பது போல வாழ்வை நிர்வாணமாக்குகிறோம். பின்னப்பட்ட நூலின் அழகு கலைந்தாலும் அதன் வெறுமைதான் இறுதி உண்மை என அப்போதும் நமக்குத் தெரிவதில்லை.

வாழ்வின் இந்த இரக்கமற்ற நகர்ச்சியின் ஒட்டுமொத்தப் படிமமாகத்தான் Life of Pi நாவலில் வரும் புலியை எண்ணத்தோன்றுகிறது.

பாண்டிச்சேரியில் மிருகக்காட்சிசாலை ஒன்றை நடத்தி வரும் வணிகரான ‘Pi’ யின் அப்பா தொடர்ந்து அதை நடத்த முடியாத சூழலில் கனடாவுக்குச் சென்று வாழ்வாதாரத்தைத் தேடிக்கொள்ள முடிவெடுக்கிறார். தனது பராமரிப்பில் இருக்கும் அனைத்து விலங்குகளையும் கனடாவில் விற்றுவிட முடிவு செய்கிறார். விலங்குகளை ஏற்றிச்செல்லும் கப்பல் ஃபசிப்பிக் பெருங்கடலில் புயலால் மூழ்குகிறது. கடல் புயலின் அழகை தரிசிக்க கப்பலின் மேல் தளத்துக்கு வரும் ‘Pi’ அதன் ஆபத்தை உணர்ந்து மீண்டும் தன் குடும்ப உறுப்பினர்களைத் தேடி கீழ் தளத்துக்குச் செல்லும் போது கடல் நீர் அவனுக்கு முன்பே அங்குக் காத்திருக்கிறது.   கப்பல் மாலுமிகள் அவனைக் காப்பாற்றும் பொருட்டு ஒரு படகில் அவனை இறக்குகின்றனர். அதில் ஏற்கனவே ஒருவர் அமர்ந்திருக்கிறார். உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் வேகத்தில் மேல் தளத்திலிருந்து படகை நோக்கி குதிக்கும் ஒரு வரிக்குதிரையால் அவர் நிலைதடுமாறி கடல் நீரில் விழுந்து மூழ்குகிறார். படகு இணைப்பிலிருந்து துண்டித்து அலையில் ஆக்ரோஷத்தோடு நகர்கிறது. தொலைவில் கப்பல் மூழ்குகிறது.

அந்தக் கடல் புயலில் ஓர் உருவம் மிதந்து வருவதை ‘Pi’ பார்க்கிறான். சட்டென உதவி வளையத்தை எடுத்து வீச அவ்வுருவம் நெருங்கும் போதுதான் அது Richard Parker என்பது தெரிகிறது. Richard Parker என்பது ஒரு வங்காளப் புலி. அதி வேகமாக அது படகில் ஏறுகிறது. ‘Pi’ பயந்துபோய் கடலில் குதிக்கிறான். இங்கிருந்து கதை வேறொரு தளத்தில் பயணிக்கிறது.

புலியைப் பார்த்ததும் படகுக்கு வெளியே ‘Pi’ ஒரு தற்காலிக சிறு மிதவையை உருவாக்கி அதில் ஏறிக்கொள்கிறான். துடுப்புகளை இணைத்து, பாதுகாப்பு அங்கியை அதன் முனைகளில் புகுத்தி, அதன் மையத்தில் அமர்ந்துகொள்கிறான். அதில் புலிக்கும் அவனுக்கும் எவ்வித உறவும் இல்லை. தனக்கு வேண்டிய சைவ உணவுகள் ஏற்கனவே படகில் சேமிக்கப்பட்டிருந்ததால் அவற்றை தன் தற்காலிக மிதவையில் வைத்துக்கொண்டு புலியுடன் தொடர்ப்பற்றிருக்கிறான். அவன் மனதில் இருப்பது புலியின் கொடூரக் கண்கள் மட்டுமே. பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் புலிக்குப் பசிக்கும் என உணர்ந்தபோது அதற்காக மீன் பிடிக்க முயல்கிறான். புலி அவன் உதவியை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கவில்லை. அதை பொருத்தவரையில் அவனும் அதுவும் தனித்தனி. அவனும் அவ்வாறே இயங்குகிறான். சட்டென தெளிந்த நீரில் நீந்தும் மீன் ஒன்றை பிடிக்க கடலில் பாய்கிறது புலி. ஒரு மீனைப் பிடிக்கிறது. தொடக்கத்தில் உயர்ந்த அலைகளில் உதவியால் படகினுள் நுழைந்த அதனால் நடுக்கடல் அமைதியில் ஏற இயலவில்லை. ஆனால் தொடர்ந்து முயல்கிறது.

இவ்வளவு நேரம் தன்னை படகிலிருந்து ஒதுக்கி வைத்தப் புலி படகில் ஏறுவதை விரும்பாத ‘Pi’ ஒரு கோடரியுடன் அதை தாக்கச் செல்கிறான். படகின் ஓரக்கயிற்றை நகங்களால் பிடித்தப்படி புலி அவனை இறுதி நம்பிக்கையுடன் பார்க்கிறது. அது உயிர்ப்பிச்சைக்கான பார்வை. ‘Pi’ தன் செயலை நொந்துகொண்டு புலி ஏற வசதி செய்வதுடன் கதை புதிய பரிணாமத்திற்குச் செல்கிறது. ‘Pi’ இப்போது ‘Richard Parker’ எனும் புலிக்காக வேட்டையைத் தொடங்குகிறான். கடும் புயல், மழைக்கு மறுநாள் ‘Pi’ மற்றும் ‘Richard Parker’ ஒவ்வொரு மூலையில் முடங்கி கிடக்கின்றனர். முதலில் ‘Pi’ எழுகிறான். ‘Richard Parkerயை முதன் முறையாகத் தொடுகிறான். அதன் நிலை கண்டு வருந்துகிறான். அதன் தலையைத் தன் மடியில் வைத்து கொண்டு அழுகிறான்

வாழ்க்கை சொல்ல வருவதுதான் என்ன? என்ற மிகப்பழமையான கேள்விக்கு ஒவ்வொருவரிடமும் உள்ள மாறுபட்ட பதில்களில் ஒன்றாக ‘Life of Pi’ யும் இடம்பெறுகிறது. அன்பினாலும் கருணையினாலும் உருவானதாகக் கூற முடியாத ஓர் உறவை, வாழ்க்கை சட்டென திணித்து விடுகிறது. வாழ்க்கை முழுதும் பிரிந்தே இருக்க வேண்டிய வெவ்வேறு குணாதிசியங்கள் கொண்ட இரு உயிர்கள் ஒரு படகில் பயணிக்கின்றன. ஒருவேளை ‘Pi’ தனியனாக இருந்திருந்தால் வெகு எளிதில் மரணித்திருப்பான் ; மனப்பிறழ்வு ஏற்பட்டிருக்கலாம். தொடக்கத்தில் தன்னை தொடர்ந்து பிரக்ஞை உள்ளவனாய் ஆக்கிக்கொள்ள ஏதேதோ செயல்பாட்டில் இயங்குகிறான். டைரி போல ஒன்றை எழுதுகிறான். ஒரு பென்சில், ஒரு கத்தி, சின்னஞ்சிறிய இடம் தன் வாழ்வில் எவ்வளவு முக்கியமானதாகவும் அர்த்தம் உள்ளதாகவும் மாறிவிட்டது என வியக்கிறான். புலியிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள தோன்றும் எச்சரிக்கை உணர்வு ஓயாமல் அவனை தன்னிலை உள்ளவனாக மாற்றுகிறது. ஒருவேளை புலி இல்லாத படகு அவனை சொகுசாக்கியிருக்கும். கைக்கு எட்டிய தூரத்தில் உணவும், பாதுகாப்புமே அவனை மரத்துப்போகச் செய்திருக்கும். ஆனால் புலி அவனை ஒவ்வொரு நிமிடமும் உணர்வுள்ளவனாக மாற்றுகிறது.

அந்த இடைகால உறவு எவ்வித அர்த்தமும் இல்லாமல் கரைக்கு வந்ததும் அகல்கிறது. புலி அவனைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் கானகத்தினுள் செல்கிறது.

புலி என்பது புலிதான். கானகத்தைப் பார்த்தப் பின்பு அதனிடம் நட்பை எதிர்ப்பார்க்க முடியாது. அதற்கு மனிதனின் தேவை இல்லை. இன்னும் சொல்லப் போனால் அது தன் வாழ்வில் இன்றியமையாததாக இருக்கும் உணவுக்கான இருப்பிடம் அதன் முன் விரிந்துகிடக்கிறது. அது இனி அவனைத் திரும்பி பார்க்க வேண்டியதில்லை. அந்த உறவின் பின்னல் அத்துடன் துண்டிக்கப்பட்டுவிட்டது. அவனும் சில மீனவர்களால் காப்பாற்றப்படுகிறான். தேவைகளாலும் சந்தர்ப்பங்களாலும் பின்னிபின்னி விரிந்துள்ள உறவுகளில் அன்பின் மதிப்பை மீண்டும் ஒருதரம் மறுபரிசீலனை செய்ய Life of Pi தூண்டுகிறது.

Pi, புலிக்கும் தனக்குமான உறவு அன்பின் பிடியில் இருப்பதாக நினைப்பது, வாழ்வில் மனிதன் தொடர்ந்து நம்பிக்கையுடன் வாழ்வதற்கான கற்பிதங்களின் மிச்சமே. அந்த நம்பிக்கையும் அதில் லாவகமாகப் பங்கெடுப்பதும் மட்டுமே வாழ்வை பிடிப்புடன் வாழ்ந்து முடிக்க தேவையான துடுப்பாகிறது. இல்லையேல் திடுக்கென திரும்பும் , நெளியும் , தவழும், தாவும் வாழ்க்கையை வெறுமனே பஷீர் போல வெறித்துப்பார்க்கவே நேரும்.

மலையாள மொழியின் முதன்மையான இலக்கிய படைப்பாளிகளில் ஒருவராகக் கருதப்படும் வைக்கம் முகமது பஷீரின் மதில்கள் நாவலை ஏற்கனவே சுரா மொழிப்பெயர்ப்பில் வாசித்திருந்தாலும் காலச்சுவடு பதிப்பகத்தில் கவிஞர் சுகுமாரனின் மொழிப்பெயர்ப்பு இன்னும் நெருக்கத்தைத் தந்தது.

இந்நாவலில் எழுத்தாளர் பஷீரே கதையின் நாயகனாக வருகிறார். அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் சிறையில் அடைக்கப்பட்ட பஷீருக்கு நாராயணி என்ற பெண்ணுடன் காதல் ஏற்படுகிறது. சிறையில் அவர் நட்டுவைத்த வளர்க்கும் ரோஜா செடிகளில் ஒன்றை நாராயணி கேட்பதிலிருந்து அந்தக் காதல் தொடங்குகிறது. ஆண், பெண் சிறையைப் பிரிக்க ஒரு மதிலே இருக்கிறது. மதிலுக்கு அந்தப் பக்கம் இருக்கும் பெண்கள் சிறையில் இருக்கும் நாராயணியும் பஷீரும் பேசுகிறார்கள். காதல் அடையாளமாக வறுத்த கருவாடு, பொரித்த ஈரல், முட்டை, ரொட்டி என பலவும் பரிசுகளாகப் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. சுவருக்கு அப்பால் காய்ந்த கம்பு ஆகாயத்தை நோக்கி பறந்தால் மதிலுக்கு அப்பால் நாராயணி நிற்பதாக அர்த்தம். அவள்தான் அதை அடையாளத்துகாக வீசுவாள். இருவரும் வார்த்தைகளால் அன்பை பரிமாறுகிறார்கள். இருவரும் சந்தித்து கொள்ள மருத்துவமனை மட்டுமே ஒரு இடமாக இருப்பதால், ஒரு குறித்த நாளை சொல்லி அன்று எப்படியாவது அங்கு வருமாறு பஷீரிடம் நாராயணி சொல்கிறாள்.

இருவரும் சந்திக்கும் போது , நாராயணி முகத்தில் மச்சம் இருப்பதை வைத்தும் பஷீர் கொஞ்சம் வலுக்கையாகவும் கையில் ரோஜாப்பூ வைத்திருப்பதைக்கொண்டும்   ஒருவரை ஒருவர் அடையாளம் காண நினைக்கிறார்கள். பஷீரும் அந்த நாளை எதிர்பார்த்து காத்திருக்க, அன்று எதிர்பாராமல் அவர் சிறையில் இருந்து விடுதலையடைகிறார். சிறையிலிருந்து விடுதலையாக யார்தான் விரும்ப மாட்டார்கள். ஆனால் அவர் சொல்கிறார். (வை ஷூட் ஐ பி ஃப்ரீ ?ஹூ வாண்ட்ஸ் ஃப்ரீடம்?) நான் ஏன் விடுதலையாகனும்? யாருக்கு வேண்டும் இந்த விடுதலை? அவருக்கு விடுதலை அறிவிக்கும் அதே சமயம் நாராயணி மருத்துவமனைக்குப் போகும் முன்பாக ஏதோ பேச வழக்கம் போக மதிலுக்கு அப்புறத்திலிருந்து காய்ந்த குச்சியை வீசுகிறாள். ஊருக்குப் போய் சேர்வதற்கான காசுடன் அவர் சிறையை விட்டு வெளியேறுகிறார். தனியனாக நிர்க்கிறார். கையில் நாராயணிக்கு அடையாளம் காட்ட பறித்த ரோஜா. விரிந்துகிடக்கும் பெரும் பாதையைப்பார்த்தபடி அசைவில்லாமல் நிர்க்கிறார்.

உண்மையிலேயே இந்திய சுதந்திரப்போர் நடைபெற்ற காலங்களில் போராட்டங்களில் கலந்து கொண்ட பஷீர் 1941-42 காலப்பகுதிகளில் அதற்காக சிறை சென்றவர். இது அவரது வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவமா என்பதெல்லாம் இங்கு அவசியமில்லை. ஆனால் இந்த நாவலில் விடுதலை என்பது என்ன என்ற கேள்வி வலுவாக நிர்க்கிறது.

நாவலின் ஒரு பகுதியில் அரசியல் கைதிகள் அனைவருக்கும் விடுதலை என அறிவிக்கப்படுகிறது. அனைவருடனும் பஷீரும் ஆர்வமாகப்புறப்படத் தயாராகிறார். அவர் மீசையையெல்லாம் சரி செய்துக்கொள்கிறார். ஆனால் அவர் ஒருவரை தவிர மற்றவர் அனைவருக்கும் விடுதலை வழங்கப்பட ஜெயிலிலிருந்து தப்பிக்க திட்டமிடுகிறார். தனிமை அவரை வாட்டுகிறது. நாவலின் ஒருபகுதியில் துன்பமாகத் தெரியும் சிறைச்சாலை சூழல் நாவலின் இறுதியில் விடுபட முடியாத பிணைப்பை பஷீருக்குக் கொடுத்துவிடுகிறது. அவர் ஒரு பெண்ணின் குரலுக்கு அடிமையாகி இருக்கிறார். இன்னும் பார்க்காத தொட்டுணராத ஒரு பெண். அந்தப் பெண் சுவரை அர்த்தப்படுத்துகிறாள். நாவலின் ஒரு இடத்தில் பஷீர் சொல்கிறார், ‘சுவருக்கு ரத்தம் இல்லாமல் இருக்கலாம். அதற்கு ஆன்மா இருக்கும்.’

நாவல் முடிந்தப்பின் நாராயணியும் பஷீரும் இருவேறு அர்த்தங்களை வாழ்க்கைக்குக் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். அந்நிமிடம் அர்த்தமே கொடுக்காத குச்சியை நாராயணி அத்தனை உற்சாகத்துடன் வீசுகிறாள். சிசிபஸ் கல்லை மலை உச்சிக்கு நகர்த்திச் செல்வது போல அவள் எந்த அர்த்தமும் கொடுக்காத அந்த நடவடிக்கையை வாழ்வின் இறுதி நம்பிக்கை உள்ளவரை தொடரலாம். காட்டைக்கண்டவும் Pi புலிக்கு அர்த்தமற்றுப் போவதுபோல அகன்ற வெளியைக் கண்டவும் பஷீருக்கும் கல்யாணி அர்த்தமற்றுப் போகலாம்.

ஆனால், மெர்சோ தன் வாழ்வில் சொன்ன அப்பட்டமான உணர்வுகளைச் சொல்லாதவரை மானுடத்தின் மகத்துவம் குறித்து நாம் பேசிக்கொண்டே இருக்கலாம்.

(Visited 220 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *