மலேசியாவில் கோ.புண்ணியவான் முக்கியமான படைப்பாளி. அண்மையில் அவருடன் ஒரு சிறிய கருத்து விவாதம் நடந்தது. எழுத்தாளர்கள் தமிழ் சமூகத்தால் அங்கீகரிக்கப்படவில்லை என்பது விவாதத்தின் சாரம். எழுத்தாளன் ஏன் அங்கீகரிக்கப்படவேண்டும் என்பதே என்னுடைய அடிப்படையான கேள்வியாக இருந்தது.
நாம் எல்லோருமே கதை சொல்கிறோம். பாட்டி பேரனிடம் கதை சொல்வதுபோல எழுத்தாளன் சமூகத்திடம் கதை சொல்கிறான். காலம் காலமாக கதை சொல்லும் பழக்கம் சமூகத்துடன் பேச்சு மொழியில் கலந்திருந்தது. அச்சு ஊடக வருகைக்குப் பின் எழுத்து நூலாக்கப்படுகிறது. நூல் ஒரு பண்டமாகிறது. ஆனால் எழுத்தாளனின் அகங்காரம் அப்படி சொல்ல ஒப்புவதில்லை. தனது எழுத்துக்கு விலை இல்லை என தன் எழுத்தைப் புனிதப்படுத்த மெனக்கெடுகிறான். அந்தப் புனிதத்தை அறியாதவனைப் பாமரன் என வைகிறான். இவர்கள் வசைப்பாடும் எளிய மனிதனின் வாழ்வைப்பற்றி துளியும் தான் அறிந்து வைத்திருக்காதது குறித்து எழுத்தாளன் ஒருபோதும் வருந்துவதே இல்லை.
உண்மையில் வாசகன் தனக்கான எழுத்தாளனை தானே தேர்ந்தெடுக்கிறான். தன் வாழ்வை சொல்பவனிடம் உரையாடத்தயாராக இருக்கிறான். அவனைப் பின் தொடர்கிறான். ஆர்வம் பொங்க கையெழுத்து வாங்குகிறான். மற்றபடி எழுத்தாளனின் பணி எழுதுவதாகவே உள்ளது. அதனாலேயே அவன் சமூகத்தில் உயர்ந்தவன் என்று கட்டமைக்கப்படுவது அதிகார மனோநிலை. தொடக்கத்தில் சமூகத்தில் கற்றவருக்கான தனி மரியாதையைக் கோரிய இந்தச்சமூகம், கல்வி ஜனநாயகமாகிவிட்ட சூழலில் இலக்கியத்திற்கு அந்த மதிப்பைக் ஏற்றியுள்ளது. இலக்கியம் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினருடையது என கட்டமைக்க முயன்றது. இலக்கியத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நுழைவுக்குப்பிறகு புதிய புனிதங்கள் கட்டுடைக்கப்பட்டுள்ளன.
இன்று எழுத்தாளன் ஒரு கதைச்சொல்லி. அவன் எந்தச் சமூகத்திலிருந்தும் எவ்வகையான பழக்க வழக்கங்களில் இருந்தும் எவ்வாறான மொழி பரிமாறல்களைக் கொண்டும் தமிழ் இலக்கியத்தில் நுழையலாம். மக்களை வெற்றுக்கற்பனையில் மூழ்கடிக்கும் ஜனரஞ்சக எழுத்தாளன் ஒருபுறம் என்றால் வாழ்வை நுண்மையாக ஆராயும் தீவிர எழுத்தாளன் மற்றுமொரு புறம். இவ்விருவிதமான இலக்கியப்பிரதிகளையும் தேர்ந்தெடுப்பதும் வாசிப்பதும் வாசகனின் தேவையையும் மனநிலையையும் பொறுத்ததாகிறது. இன்னும் சொல்லப்போனால் இலக்கிய வாசிப்புக்காகத் தேர்வு செய்வதற்கே வாசகன் பல்வேறு சுய தடைகளைக் கடக்க வேண்டியுள்ளது.
தினசரிகளை விடாமல் படிப்பவர்களிடம் இலக்கியம் குறித்த ஒரு மனப்பதிவு உண்டு. இலக்கியம் வாசிப்பதற்கும் தினசரி வாசிப்பதற்கும் பெரிதாக பேதம் ஒன்றும் இல்லை என்பதுதான் அது. இலக்கியம் வாசிப்பவர்களைவிட தங்களுக்கு இன்னும் அதிகமாக நாட்டு நடப்பும் உலக நிலவரமும் தெரியும் என வாதிடுவார்கள். இணையம் வழி உலகை அறிபவர்கள் இலக்கியம் எதையும் சுற்றி வளைத்துச் சொல்கிறது. மூன்றே வரிகளில் உலகின் முக்கியத் தகவல்கள் விரல் நுனியில் கிடைக்கின்றன என தங்களை தாங்களே மெச்சிக்கொள்வார்கள். இலக்கியம் வாசிப்பதும் தினசரிகளை வாசிப்பதும் ஒன்றா என்ற கேள்வியை எழுத்தாளன் பல இடங்களில் சந்திக்க வேண்டியுள்ளது.
கலவரம் நடக்கும் ஒரு பகுதியில் ஒரு செய்தி சேகரிப்பாளன் தனது காமிராவைக் கூட்டத்தைப் பதிவு செய்யப் பயன்படுத்துகிறான். அவன் காமிராவின் தர்மம் அதுதான். அவனுக்கு இடப்பட்ட உத்தரவும் அதுதான். அவன் கூட்டத்தைப் பதிவு செய்ய வேண்டும். ஓலங்களை ஒட்டுமொத்தமாக குவித்து தரவேண்டும். செய்தியைப் பார்ப்பவருக்கு கலவரத்தின் பொதுத்தன்மை தெரிய வேண்டும். அவன் அதற்காக உழைக்கிறான். ஆனால் ஒரு நவீன கலைஞன் காமிராவை கூட்டத்திலிருந்து விலக்கி யாரோ ஒருவரை உற்றுப்பார்க்கிறான். கலவரத்தில் சிந்தப்படும் கண்ணீரைப் படம் பிடிக்கிறான்.
இப்போது அவன் கையில் உள்ளது காமிராவாக இல்லை. அது உடலைத்தாண்டி உற்றுப்பார்த்தலின் மூலமாக மனதை அளக்கும் மந்திரக்கோளாகிவிடுகிறது. அவன் அந்த ஒருவரின் மூலமாக ஒட்டுமொத்த கலவரத்தையும் கணிக்கிறான். அதை அவன் கண்ணீரின் மூலம் அர்த்தமில்லாமல் ஆக்குகிறான். கலவரத்தில் பெட்ரோல் குண்டு எறிபவர்கள், பெண்ணை வன்புணர்ச்சி செய்பவர்கள், கொலைக்காரர்கள், பயந்து ஓடுபவர்கள் என அனைவரையுமே உற்றுப்பார்க்கிறான். அவர்கள் அந்த நிமிடத்துக்கு முன்பு யாராக இருந்தார்கள் என்றும் கணக்கில் எடுத்துக்கொள்கிறான். அவர்கள் மீதும் இரக்கப்படுகிறான். அவன் காதுகளில் ஓலங்கள் ஓங்கி ஒலித்து அடங்குகிறது. எல்லோருமே முன்பு ஒரு சமயம் நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் இருந்தவர்கள் என முடிவுக்கு வந்து அழுகிறான்.
கலைஞனின் பார்வையில் கலவரம் என்பது வெறும் செய்தியல்ல; நிகழ்வு அல்ல; வாழ்க்கை.
குல்ஸாரின் ‘ராவி நதியில்’ சிறுகதையை இதற்கு உதாரணமாகப் பார்க்கலாம். இந்தியப் பாகிஸ்தான் பிரிவினையை மையப்படுத்தி எழுதப்பட்ட சகதை. இந்தியப் பாகிஸ்தான் பிரிவினை என்பது செய்தி வாசிப்பவர்களுக்கு ஒரு தகவலாக இருக்க, குல்ஸார் போன்ற எழுத்தாளர்கள் அதன் தீவிரத்தை வேறுவிதமாக உணர்கிறார்கள்.
இரட்டைக் குழந்தைகளை ஈன்றெடுத்த இந்து தம்பதிகள் பாகிஸ்தானில் இருந்து ரயிலில் ஏறி இந்தியா வருகிறார்கள். இரயிலில் நெரிசல். மூச்சு விடவே சிரமம். நெரிசலில் ஒரு குழந்தை செத்துவிடுகிறது. ரயில் நிற்க சாத்தியமில்லை. பயங்கரமான நெரிசலில் கழிவுகள் அங்காங்கே கழிக்கப்படுகின்றன. துற்வாடையின் கொடுமை இன்னும் அதிகரிக்காமல் இருக்க செத்த குழந்தையை தூக்கி வீச சொல்கிறார்கள். தாய் பிடிவாதமாக மறுக்கிறாள். அவள் எந்தக் கூச்சலுக்கும் செவி சாய்க்கவில்லை. ராவி நதி வருகிறது. தாய் தூங்கிக்கொண்டிருக்கிறாள். அழுகினால் நிலை மோசமாகிவிடும் என்றும் உடனே குழந்தையைத் தாய்க்குத் தெரியாமல் வீசி விடும்படியும் கணவனை கூட்டத்தினர் கட்டாயப்படுத்துகின்றனர். கணவன் கைநடுங்க சட்டென்று பிள்ளையை பிடுங்கி வீசுகிறான். அப்போது குழந்தையிடமிருந்து மெல்லிய முனகல் சத்தம் வந்தது என கதை முடிகிறது. அதாவது கணவன் தவறுதாக உயிருடன் இருந்த குழந்தையை வீசிவிட்டான்.
ஓர் அரசியல் சிக்கல் புதிதாகப் பிறந்த குழந்தைவரை எவ்வாறு பாதிக்கிறது என கதை சொல்கிறது. ஒரு சமுதாய சிக்கல் இவ்வாறான ஆயிரம் ஆயிரம் இழப்புகளைக் கொண்டவைதான். செய்திகளுக்கு அவை அவசியமற்றவை. ஆனால் இலக்கியத்தின் மையமே இதுதான். ‘முட்டைகோஸ் பொம்மை’ என்ற எமிலி நஸ்ரல்லாவின் (emily nasrallah) சிறுகதையும் இதே போன்றதொரு மையத்தைதான் அலசுகிறது.
எமிலி நஸ்ரல்லா ‘பெய்ரூட் கதைகள்’ என்ற சிறுகதை தொகுப்புக்கு எழுதிய முன்னுரையை பிரான்ஸிலிருந்து வெளிவந்த ‘மௌனம்’ என்ற சிற்றிதழில் பிரசுரமாகியிருந்தது. எஸ்.வி.ராஜதுரை அதை தமிழில் மொழிப்பெயர்ந்திருந்தார். பின்னர் அவரே மற்றுமொரு ‘மௌனம்’ இதழில் எமிலி நஸ்ரல்லா சிறுகதை ஒன்றையும் மொழிப்பெயர்த்திருந்தார்.
சிறுகதையின் தொடக்கம் ஒரு விடுகதையைப்போல வளர்கிறது.
‘இந்தச் சொற்களை எனக்காகப் பதிவு செய்வது எது என்று எனக்குத் தெரியாது.எனது மகளை எனக்குப் பின்னால் தரதரவென இழுத்துக்கொண்டு பாதுகாப்பிடம் தேடி ஓடும் போது என்னிடமிருந்து நழுவி விழுந்த பேனாவா? அல்லது பெரும் தீயின் இடிபாடுகளுக்கிடையில் தூக்கி எடுக்கப்பட்டு தனது புதிய சருமமான பிளாஸ்டிக் பையில் திணிக்கப்பட்ட என் உடலா?’ எனக்கேட்கிறார் கதைச்சொல்லி.
இந்த வரியில் கதையில் ரகசியங்கள் கழன்றுவிடுகின்றன. உண்மையில் வாசகனுக்குத் தீனி போட நினைக்கும் மலிவான ஆக்கங்களே கடைசிவரியில் திருப்புமுனைகளை ஏற்படுத்த முயல்கின்றன. அதில் வாசகன் அடைவது எளிய அதிர்ச்சி. இந்தக் கதையில் எமிலி நஸ்ரல்லா அதை செய்ய முயன்றிருக்கலாம். கடைசியில் கதையைச் சொல்வது ஓர் ஆவி என முடித்து வாசகனை அதிர்ச்சி அடைய வைக்கலாம். ஆனால் அவர் வாழ்வின் புதிரையும் அவலத்தையும் ஒரு சேர புரிய வைக்கிறார்.
நைனார் என்ற சிறுமியின் முட்டைகோஸ் பொம்மை மீதான ஆசையிலிருந்து தொடங்குகிறது சிறுகதை. அவள் தன் அம்மாவை அன்று பொம்மை வாங்கியே தீரவேண்டும் என பேரங்காடிக்கு அழைக்கிறாள். தாயான கதைச்சொல்லிக்கு வீட்டுக்குத் தேவையான பொருள்கள் வாங்கவேண்டிய தேவை இருக்கவே புறப்பட்டு செல்கின்றனர். நகரில் ஆங்காங்கே பாதுகாப்பு குறைந்துவருவது கதைச்சொல்லி மனதில் திகிலை ஏற்படுத்துகிறது. ஆனால் நைனாருக்கு பொம்மை மீதே கவனம் இருக்கிறது. அந்தச் சிறுமிக்கு அந்த பொம்மையின் மீது எவ்வளவு ஆசை என ஒரு இடத்தில் கதாசிரியர் சொல்கிறார்.
பேரங்காடிக்குச் சென்ற அம்மா முதலில் வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கிவிடுவோம் இறுதியில் பொம்மை வாங்குவோம் என்கிறாள். அதற்கு அந்தக் குழந்தை கோபத்துடனும் குழப்பத்துடனும் கேட்கிறது. “அப்படியானால் பொம்மை வீட்டுக்குத் தேவையான பொருள் இல்லையா?”
இந்த ஒரு வரிதான் அந்தச் சிறுமியிடம் நம்மை நெருங்க வைக்கிறது. அந்த குழந்தை உள்ளத்தையும் குழந்தை உலகைப் புரிந்து வைத்துள்ள கோணங்களையும் நெருங்கிப்பார்க்க வைக்கிறது. ஆனால் இறுதியில் பணம் செலுத்த அம்மா செல்லும் போது குண்டு வெடிக்கிறது. உடல்கள் சிதறுகின்றன. அம்மாவுக்கு அந்த நிமிடம் தோன்றுகிறது… ‘என் செல்லக்குழந்தை தனது பொம்மையை எடுத்துக்கொள்ளாமல் எப்படி இந்தக் கடையைவிட்டு வெளியேறுவாள்…நான் அதற்கு இன்னும் பணம் செலுத்தவில்லையே…’ இந்த வரியுடன் கதை முடிகிறது.
நமக்கு முதலிலேயே தெரிந்த முடிவுதான். எந்த திருப்பமோ திடுக்கிடலோ இல்லை . ஆனால் சிறுகதை நம்மை உலுக்குகிறது. ஒரு நல்ல சிறுகதைக்கு வடிவத்தைவிட வாழ்வை பற்றிய ஆழ்ந்த பார்வை முக்கியம். வெகுசனக்கதைகள் திட்டமிட்ட வடிவங்களால் வாசகனைக் கட்டிப்போட முயல்கின்றன. தீவிர இலக்கியம் வாழ்வின் அசலான பாதையை திறந்து காட்டுகின்றன. சிறுகதைக்குத் அதன் தொடக்கமும் முடிவும் முக்கியம். சரியான இடத்தில் கதையை முடிப்பதன் மூலமே வாசகன் தொடர்ந்து அந்தக் கதையோடு பயணிக்கிறான். எழுத்தாளன் சிறுகதையில் விடும் மௌனங்களின் இடைவெளியில் வாசகன் தன்னைக் கண்டடைகிறான். ஒரு சிறுகதை தனக்கான உருவத்தை தானே அமைத்துக்கொள்ளும் தன்மை கொண்டது. மாறாக அதை எழுத திட்டவட்டமான ஒரு சூத்திரம் ஏதும் இல்லை.
வணிக எழுத்தாளர்களுக்கு மத்தியில் வாழ்வை தத்துவப்பின்னணியுடன் புனையும் எழுத்தாளர்கள் எல்லா மொழிகளிலும் இருக்கவே செய்கிறார்கள். மறுவாசிப்புகளில் இதுபோன்ற புனைவுகள் புதிய அர்த்தத்தைத் தருபவை. குல்ஸாரும் எமிலி நஸ்ரல்லாவும் வாழ்வின் அவலத்தை நுண்மையாக அவதானித்தார்கள் என்றால் லியோ டால்ஸ்டாய்போன்றவர்கள் மொத்த வாழ்வையும் எல்லா மனநிலையிலிருந்து அணுகும் புனைவுகளை உருவாக்கியவர்கள். இவர்களின் புனைவுகள் பேரிலக்கியங்களாக பல விமர்சகர்களாலும் அறிவிக்கப்படுகின்றனர். இதுபோன்ற புனைவுகளுக்கு குறிப்பிட்ட ஒரு நோக்கம் இருப்பதில்லை. அது எழுதப்படும்போதே தன்னை உருவாக்கிக்கொள்கிறது. எழுத்துவதன் மூலமாகவே வாழ்வை ஆராய்ச்சி செய்கிறது.
ஒரு நதியில் இரு குச்சிகள் விழுகின்றன. ஒன்று குறுக்காகவும் மற்றது நேர்கோட்டிலும் மிதக்கின்றன. நேர்கோட்டில் விழுந்த குச்சி நதிக்கு தான்தான் பாதை காட்டுவதாக ஆனந்தத்தில் நதியுடன் இணைந்து பயணித்தது. குறுக்கே விழுந்த குச்சி தான் நதியின் ஓட்டத்தைத் தடைப்படுத்தப் போவதாகக் கடைசி வரை சாகசங்கள் செய்து பார்த்தது. இறுதியில் இரு குச்சிகளுமே பெரும் பள்ளத்தில் போய் விழுந்து காணாமல் போயின. நதிக்குக் கடைசிவரை குச்சிகள் குறித்து ஒன்றுமே தெரியாது. ஓஷோ சொன்ன இந்தக் கதையை நான் பலமுறை எனக்குள் நினைவு படுத்தியுள்ளேன்.
ஒருவகையில் இந்தச் சின்னக் கதை ஒட்டுமொத்த வாழ்வையும் சொல்கிறது. நதி ஒரு மனநிலை என்றால் இதற்கு எதிர்மாறான லட்சியங்கள் கொண்ட குச்சிகள் மற்றுமொரு மனநிலை. சாகசம் நிறைந்தது வாழ்வு எனச்சொல்லும் அனுபவமே அதை அர்த்தமற்றது என சொல்லவும் செய்கிறது. மலையிலிருந்து பூமியைப்பார்த்து கீழே நிகழும் ஆரவாரங்களை அர்த்தமற்றது எனச்சொல்லும் அதே அனுபவம்தான் கடலில் தத்தளிக்கும்போது அதில் தப்பிக்கும் சாகசத்தையும் உண்மை என்கிறது.
வாழ்வை ஆராய்பவனே படைப்பாளனாகிறான். மிகச்சில எழுத்தாளர்களே அத்தகைய அறிய தன்மையைக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் மூலமே வாசகன் புதிய வாசல்களைத் திறக்கபெறுகிறான். ஹெமிங்வே அப்படிப்பட்டக் கலைஞர்தான்.
‘கிழவனும் கடலும்’ வாசிக்க எளிமையான சின்னஞ்சிறிய நாவல். எவ்வித உணர்ச்சியம்சமும் இல்லாமல் காட்சி அமைப்புகளால் விரியும் நாவல் . ஆனால் அத்தனை எளிதாக ஒற்றைவரியில் சொல்லும் கதையில்லை அது. வெளித்தோற்றத்தில் சமமாகத் தெரிந்து; விரிக்கும் போது முற்றுபெறாத உள்மடிப்புகளைக்கொண்ட ஒரு திரைச்சீலையாக அந்நாவலைக் கற்பனை செய்துக்கொள்ளலாம்.
எண்பத்தி நான்கு நாட்களாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் சான்டியாகோ எனும் கிழவர் அதிஷ்டம் இல்லாத மீனவனாகக் கருதப்படுகிறார். அவர் மீது பரிவு கொண்டு அவரை கவனிக்கும் மனோலின் எனும் சிறுவனுக்கும் அவருடன் கடலுக்குச் செல்ல பெற்றோரால் தடைவிதிக்கப்படுகிறது. தன்னந்தனியாக கடலுக்கு செல்லும் கிழவனின் தூண்டிலில் மாட்டும் பிரம்மாண்டமான மார்லின் வகை மீனின் இழுப்பிற்கு ஈடுகொடுத்து இரண்டு இரவுகள் இரண்டு பகல்கள் தனது சின்னஞ்சிறிய படகில் போரடுகிறார் கிழவர். முடிவில் மீனைக் கொன்று படகுடன் சேர்த்துக் கட்டி உற்சாகத்துடன் திரும்பும்போது மீனின் இரத்த வாடையில் ஈர்க்கப்பட்ட சுறாக்களால் குதறி எடுக்கப்படுகிறது மீன். தொடர்ந்து சுறாக்களுடன் போராடுகிறார். வெறும் எலும்புக்கூடுடன் இறுதியில் சோர்ந்து கரையொதுங்குகிறார்
இந்தக்கதையை மீன் பிடிப்பது பற்றிய கதையாக மட்டும் வாசித்துவிட்டு நகர்ந்துவிடுவது அபத்தம். அதைத்தாண்டி எண்பத்தி நான்கு நாள்கள் மீன் கிடைக்காமல் இறுதியில் கிடைத்தும் தக்க வைக்க முடியாத வாழ்வின் இரக்கமற்ற தன்மையை பேசும் கதையாகவும் காணலாம். படகில், அவ்வப்போது சிறுவன் வந்திருந்தால் தேவலாம் என நினைத்து ஏங்கும் கிழவரின் வெல்ல முடியாத தனிமையையும், காதடைக்கும் சூன்யத்தையும் சொல்வதாகவும் காணலாம். முன்பு தேர்ந்த மீனவராக இருந்தவரின் அத்தனை சாகசமும் முதுமையில் கண்டுக்கொள்ளப்படாத நிலையில் நாம் சாதித்தவை என நம்பியிருக்கும் அனைத்தையும் காலம் கருணையற்று மறக்கும் எனவும் புரிந்துகொள்ளலாம். இவற்றையெல்லாம் மீறி, எல்லாம் போனப்பிறகும் வெறும் எலும்பைத் தன் படகில் கட்டிக்கொண்டு வரும் முதியவர் நிரூபிக்க நினைக்கும் அடையாள நிலைநாட்டலாகவும் கருதலாம்.
இவை மட்டுமே இந்த நாவலை அறியும் வழியல்ல. கிழவனுக்கு நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன், தன்னிரு கரங்கள் என அனைத்துமே சகோதரர்கள் தான். அவரைத் துன்பப்படுத்திக்கொண்டிருக்கும் பிரம்மாண்ட மீனுக்குக்கூட சகோதரத் தகுதி கொடுக்கிறார். . அதை முழுவதுமாக நேசிக்கிறார். ஆனால் நேசிக்கும் ஒன்றிடும் தோற்று மடிவது சாத்தியம் இல்லை. வேறு வழியில்லாமல் அந்தப்பெரிய கொல்கிறார்.
நாவல் முழுவதும் வாழ்வின் இறுதி காலத்தில் எதையோ நிரூபிக்க போராடும் கிழவன். நிருப்பிக்க அவசியமற்று தன்னியல்பில் வாழ்வுக்குப் போராடும் மீன். அன்பையும் அதே சமயம் போராட்டத்தை அர்த்தமிழக்க வைக்கும் சுறாக்கள், பயனற்ற எலும்புகளை சுமக்கும் படகு, இந்த மாறுபட்ட அனைத்து அம்ச நிலைகளுக்கும் அர்த்தம் புரியாது அலையெழுப்பும் கடல் என நாவல் வாழ்வின் அபத்தங்களை படிமங்களாகச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. அதனாலேயே இன்றும் இந்த நாவல் வாசிப்புக்குப் புதுமையாக இருக்கிறது. அதனாலேயே இது பேரிலக்கியமாக மதிக்கப்படுகிறது,
ஒருவகையில் இந்த நாவல் மூலமே ஹெமிங்வே வாழ்வின் சூட்சுமத்தை அறிய முயன்றிருக்கலாம். கிழவன், மீன், சுறா, படகு என எதற்குமே அர்த்தம் தெரியாத கடல்போன்ற வாழ்வு அவருக்கு வியப்பளித்ததோ என்னவோ. அபத்தங்கள் நிறைந்த வாழ்வில் அர்த்தம் தேட முடியாமல் ஹெமிங்வே தற்கொலை செய்துகொண்டு மரணமடைந்த உண்மை இந்த நாவலுக்கு வேறு முகம் கொடுக்கிறது.
நாவலில் வரும் ஒருவரியை அவர் கிழவனுக்கும் பெரிய மீனுக்கும் சொன்னதாகப் படவில்லை. வாழ்வுக்கும் தனக்கும் சொல்லியிருக்கிறார்.
“என்னால் அதை ஒன்றும் செய்துவிட முடியாது. அதுவும் என்னை எதுவும் செய்துவிடாது என்று நினைக்கிறேன், இப்படியே போய்க்கொண்டிருந்தால்.’’
கடல் எப்போதுமே வாழ்க்கைக்கு ஒரு நல்ல படிமமாகவே உள்ளது. ‘புயலிலே ஒரு தோணி’ என்ற ப.சிங்காரத்தின் நாவலும் வாழ்வின் அபத்தத்தையும் ஆனால் எதிர்க்கொண்டே ஆக வேண்டிய சவால்களையுமே பேசுகிறது.
‘புயலிலே ஒரு தோணி’ மேடானில் ஜப்பானியர் பரவுவதிலிருந்தும் அதன் போர்ச்சூழலையும் கதைக்களமாகக் கொண்ட நாவல்.
இந்நாவலின் மையக் கதாபாத்திரமான பாண்டியன் பல்வேறு தருணங்களில் உடனிருப்போரிடம் விவாதங்களில் ஈடுபடுகிறான். எல்லாவற்றிலும் முரண்படுகிறான். அவன் முன்வைக்கும் ஆதாரங்கள் வலுவானவையாக உள்ளன. ராணுவப் பயிற்சியில் சேர்ந்த பின்பும் அவனுடைய விவாதங்கள் தொடர்கின்றன. பாண்டியனின் இந்த விவாதங்கள் ஒரு சந்தர்ப்பத்தில் தத்துவங்களின் சாயலோடு வெளிப்படுகிறது. இந்தோனேசிய கொரிலா படையில் இணையும் அவன் திட்டத்திற்கு நண்பர்கள் தடை சொல்கிறார்கள். இந்தோனேசியர் ஆண்டாலும் டச்சுக்காரர்களால் தங்களுக்கு இழப்பு இல்லை என புரியவைக்க முயல்கிறார்கள். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் அனைத்தும் மாயக்கற்பனை என்கிறார்கள். பாண்டியன் அதற்கு பதில் சொல்கிறான்.
கற்பனையில்லாமல் வாழ்க்கை இல்லை. கொள்கையில்லை. சமுதாயமில்லை. கற்பு எனும் கற்பனை இல்லையானால் குடும்ப அமைப்பு இருக்காது என வாதிடுகிறான். உண்மை அறிவின் அடிப்படை வழியை அறுதியிட்டு சொல்ல முடியாது. அவரவர் அறிவு போக்கில் சென்றால் குழப்பமும் அழிவும் கிட்டும். ஆகவேதான் கற்பனை முடிவு. அது அறிவுக்கு வரம்பு. வரம்பில்லா அறிவும் புல்லறிவும் ஒன்றே என்கிறான். இறுதியில் மனதில் சலிப்பு தோன்றியுள்ளதாகவும் கொஞ்ச காலத்துக்கு இடம் மாற வேண்டும் என்கிறான்.
பாண்டியனை முழுமையாக அறிய முடிகிறது. அவன் சாகசத்தை விரும்புகிறான். அவனால் செயல்படாமல் இருக்க முடியவில்லை. போரிடுவது ஒரு சவால் என்றால் விவாதிப்பதும் ஒரு சவால். அவன் சவால்களுடனேயே முயங்கிக் கிடக்கிறான். சவால்களை நோக்கி அவன் எப்போதும் எதிர்க்கொண்டே ஓட பார்க்கிறான். அதற்கான எந்தக் கொள்கைகளும் அவனிடம் இல்லை. விருப்பங்களே உள்ளன. பெரும் வாழ்வை அர்த்தப்படுத்திக்கொள்ள ஒரு சாகச நாயகன் தன்மையை உருவாக்க முயல்கிறான். ஒரு தோணி பெரும் கடல் புயலில் தன்னை அர்த்தப்படுத்திக்கொள்ள முயல்வது போல. இறுதியில் சாகவும் செய்கிறான். ஒரு தோணியால் கடலிடம் தன் அர்த்தத்தைச் சொல்ல முடியாததைப் போல.
‘ஆழி சூழ் உலகு’ கடல் வாழ்வையும் அதனுடைய சாகசத்தையும் பேசுகிறது. கடலும் கிழவனும் நாவல் ஒரு அனுபவம் என்றால் ‘ஆழி சூழ உலகு’ நாவல் மற்றுமொரு புதிய அனுபவம். நாவலின் இடையிடையே சிலுவை, சூசை, கோத்ரா ஆகியோர் நடுக்கடலில் மாட்டிக்கொண்டு மிதப்பதை தனி நாவலாக வாசிக்கலாம்.
மூவர் மிதந்துகொண்டிருக்கின்றனர். அங்கு ஓங்கில்கள் இருப்பதால் சுறாவின் பயம் இல்லை. பசிக்கிறது. மயக்கத்தில் இருந்த கோத்ரா கண்விழிக்கிறார். அவரை ‘பெரியாளு’ என்றுதான் அழைக்கின்றனர். பெரியாளுக்குத் தன் மனைவி தோக்களத்தா நினைவாகவே உள்ளது. தூரத்தில் மிதந்து வரும் பாசிகளைப் பிடித்து சிலுவைக்கும் சூசைக்கும் சாப்பிடக்கொடுக்கிறார். அவருக்கு நெஞ்சு அடைப்பதாகக் கூறி சாப்பிட மறுக்கிறார். அவர் இருக்கும் நம்பிக்கையில் இருவரும் நிம்மதியாக மிதக்கின்றனர்.
மறுநாள் அவர்களுக்குப் பஞ்சு ஆமை கிடைக்கிறது. பெரியவர் அதை தலையால் முட்டி கவிழ்க்க சூசையும் கோத்ராவும் அதன் கழுத்தின் மென்மையானப் பகுதியைக் கடித்து இரத்தம் குடிக்கின்றனர். பெரியாள் அதன் கால்களை வாகாகப் பிடித்துக்கொள்கிறார். அது திடுமென திரும்ப பெரியவருக்கு அடிப்படுகிறது. மூவரும் மீண்டும் மிதக்கும் போது ஊறிய கத்து இனி தாங்காது என பெரியாள் முடிவு செய்கிறார். கத்திலிருந்து தன் பிடியைத் தளர்த்துகிறார். உயிருடன் ஊர் போகும்போது கிழவியிடம் தான் இறக்கும் போது அவளை நினைத்துக்கொண்டிருந்ததாகக் கூறச்சொல்கிறார். இயற்கையுடன் தானும் ஒன்றாகிறார்.
மறுநாள் இருவரும் விழித்தபோது , இன்னும் தாங்கள் உயிருடன் இருக்கும் உண்மை தெரியவர துன்பம் தொற்றிக்கொள்கிறது. சூசையின் மனம் பலவாறாகக் குழம்புகிறது; புலம்புகிறது. கடல் சுழிப்பெடுப்பதை அறிந்து சூசை கத்தையை சுழிப்பிலிருந்து தள்ளிவிட்டு தான் அதில் மாட்டி கடலுக்குள் செல்கிறார். சிலுவைத் தனியனாகிறான். மூச்சு மட்டும் வந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு பெரிய கப்பல் கேப்டன் கண்களில் பட்டு காப்பாற்றப்படுகிறான். மனம் முழுதும் தான் காப்பாற்றப்படுவதற்காக உயிர்விட்ட இருவரின் நினைப்பு மட்டுமே இருக்கிறது.
மரணத்தை வெல்ல தியாகத்தால் மட்டுமே முடிகிறது. ஆனால் மிக நீண்ட வரலாற்றில் இந்த மூன்று கதாபாத்திரங்களையும் அவர்களின் அந்தரங்க வாழ்வையும் கதாசிரியர் விளக்கும் போது நிகழ்காலத்தின் அவர்கள் செய்துள்ள தியாகத்திற்கும் கடந்தகால வாழ்வுக்கும் பொறுத்தமே இல்லாமல் இருக்கிறது. வாழ்வு என்பது இறந்தகாலம் நிகழ்காலத்தில்ல. அது முழுக்கவே எல்லா காலத்திலும் எல்லாமுமாக உள்ளதையும் மனிதனை காலத்தைக் கொண்டு கணக்கிட முடியாததையும் சொல்கிறது.
பூமியை மலையிலிருந்து பார்ப்பது ஒரு அனுபவம் என்றால் கடலிலிருந்து பார்ப்பது ஒரு அனுபவம். முன்னது பூமியின் பரபரப்பான வாழ்வை அர்த்தமில்லாமல் செய்யும். மற்றது கடலில் அலைக்கழிப்பை எதிர்க்கொள்ளத் துடிக்கும். இலக்கியமும் இவ்வாரான இருவேறு வாசக மனநிலையை உருவாக்குவதுதான். எமிலி, குல்ஸார் போன்றவர்கள் கடலிலிருந்து வாழ்வை பார்க்கிறார்கள். ஹெமிங்வே, ப.சிங்காரம், ஜோ டீ குரூஸ் போன்றவர்கள் மலையிலிருந்து கடலைப்பார்க்கிறார்கள். இரண்டுமே வெவ்வேறு அனுபவங்கள் என்றாலும் வாழ்வு இவ்விரு அனுபவங்களையும் ஓயாமல் தந்துகொண்டேயிருக்கும்.
கருத்துகள் அருமை73UDNE