மின்னல்; கவிதை; பிறந்தநாள்

padamகாலையிலிருந்து பல்வலி. மனிதனுக்குக் கடுமையாக வலி கொடுக்கக் கூடியது காது வலியும் பல்வலியும் என கேள்விப்பட்டதுண்டு. இரண்டுமே குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நோகாமல் தலை முழுமைக்குமாக வலியைப் பரப்பும்.

இன்றுதான் மின்னல் பண்பலையில் ஒவ்வொரு ஞாயிறும் ஒலிபரப்பாகும் ‘அமுதே தமிழே’ நிகழ்ச்சியிக்காகக் குரல் பதிவு செய்ய திகதி கொடுத்திருந்தேன். அந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்  புனிதா சுப்ரமணியம் மீண்டும் இலக்கியம் குறித்து பேச வாய்ப்பளித்துள்ளார். அவருக்கு நன்றி. தீவிர இலக்கியத்தில் இயங்கத்தொடங்கிய காலம் முதலே இவற்றையெல்லாம் எப்படி பொதுமக்களிடம் கொண்டுச் சேர்ப்பது என்றும் ஆரோக்கியமான வாசிக்கும் தலைமுறையை எப்படி உருவாக்குவது என்றும் ஏங்கியது உண்டு. புனிதா சுப்ரமணியம் போன்றவர்களால் அந்த எண்ணம் சாத்தியப்படுகிறது. ஏற்கனவே 13 வாரங்கள் உலக இலக்கியம் குறித்துப்பேசியது பரவலான பார்வைக்குச் சென்றிருந்தது. சிலர் மொழிப்பெயர்ப்பு எழுத்துகளை வாசிக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறியிருந்தனர். வானொலி போன்ற ஊடகங்கள் மிக விரைவாக ஒன்றை எளிய மனிதர்களிடமும் எடுத்துச்செல்லும் சக்தி கொண்டவை.  எளிமை படுத்தி கூறுவதென்பதே அதில் உள்ள சாகசம்.

ஓர் எழுத்தாளனாக நான் இருவேறு சவால்களையும் ஒரே நேரத்தில் எதிர்க்கொள்ள விரும்புகிறேன். முதலாவது, ‘அம்ருதா’ போன்ற இலக்கிய ஏடுகளுக்கு எழுதும் ‘உலகின் நாக்கு’ போன்ற தொடரில் முடிந்தவரை ஆழம் செல்லுதல். மற்றது வெகுமக்கள் ஊடகங்களில் நேயர்களுக்கு புதிய ஒன்றை அறிமுகப்படுத்தும் வகையில் மிதத்தல்.

இம்முறை ‘நவீன கவிதைகள்’ குறித்த எனது பேச்சு மின்னல் பண்பலையில் ஒவ்வொரு ஞாயிminnalறும் காலை மணி 11.15க்கு ‘அமுதே தமிழே’ நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகும் . ஏற்கனவே தெரிந்த ஒன்றை எளிமையாக செய்துவிட்டுப்போவதில் எனக்கு உடன்பாடில்லை. அதில் நான் ஒன்றும் கற்றுக்கொள்ளவில்லை என்ற குற்ற உணர்ச்சி மட்டுமே மிஞ்சும். ‘உலக இலக்கியம்’ குறித்த தொடருக்காக வாசித்த சிறுகதைகள் அதிகம். ஒருவகையில் எனக்கு அது ஒரு பயிற்சி. இம்முறை நவீன கவிதை தொடருக்கும் சங்க இலக்கியத்தையும் ஒரு பகுதியாக உள் புகுத்துகிறேன். அதன் மூலம் ஓரளவு சங்கப்பாடல்கள் வாசிப்பில் பயிற்சி உள்ள சூழலை இன்னும் நெருக்கமாக்குகிறேன். சவால் இல்லாத எந்தப்பணியும் எனக்கானதல்ல என எப்போதுமே நான் சொல்லிக்கொள்வதுண்டு.

பல்வலியில் எப்படியோ இன்று குரல்பதிவை செய்து முடித்தேன். குரல் பதிவு முடிந்ததும் என்னவோ போல் இருக்கும். சரியாகப் பேசினேனா என்ற குழப்பம். வானொலியில் கேட்கும் போது புனிதா அதை பல மடங்கு மெருகேற்றி இருப்பார். தொழில் நுணுக்கம்.

pஇன்று 33 வயது ஆகிறது. காலையிலிருந்து பிறந்தநாள் வாழ்த்துகள் வந்த வண்ணம் இருந்தன. நேற்று இரவு சொல்லிக்கொண்டேன்.’நாளை மற்றுமொரு நாள்’ என. குறிப்பிட்ட ஒருநாள் சட்டென கிடைக்கும் நண்பர்களின், சொந்தங்களின் கவனிப்பும் அருகாமையும் சகிப்புத்தன்மையும் வருடம் முழுவதும் வருவதில்லை. இது ஒரு கனவு போல. நாளை அது அப்படியே இல்லாமல் வாழ்க்கை வழக்கத்திற்குத் திரும்பும் போது என்னவோ போல இருக்கும். சட்டென நாம் கவனிப்பற்ற நமது பழைய வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும்.

ஆனால் வல்லினம் நண்பர்கள் எனக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் வீட்டுக்கு வந்திருந்தனர். சட்டென உற்சாகம்l குடிக்கொண்டது. பிறந்தநாளன்று இல்லாமல் எப்போதுமே நண்பர்களுடன் இருப்பதில் மகிழ்ச்சி எனக்கு. தயாஜி, குழலி, விஜயா, யோகி, சந்துரு என வீடு கலகலப்பானது. ‘வல்லினம்’ சின்னம் கொண்ட கேக்  தயார் செய்திருந்தனர். ‘with love vallinam Team’ என சொற்கள் நெய்யப்பட்ட டி-சட்டை. மகிழ்ச்சியான தருணம். நாளை அதிகாலையே  கேமரன் மலை செல்கிறேன். குளிர்ந்த மலை. உற்சாகம் கூடியிருக்கிறது.

சட்டென நான் எழுதிய கவிதை ஒன்று நினைவுக்கு வந்தது.

33

இறந்த நண்பனின் வீட்டிலிருந்து
அவன் இறுதியாய் படித்த
கவிதை நூலொன்றை எடுத்துவந்தேன்

கவிதை நூலின் இறுதிப்பக்கம்
33 என நண்பன் எழுதியிருந்தான்
நான் 33 என்ற எண்ணுடனான
நண்பனின் தொடர்பை ஆராயத்தொடங்கினேன்
திகதிகள் முப்பத்தொன்றுடன் முடிவதால்
அது எந்த விசேட தினங்களையும் குறிக்க வாய்ப்பில்லை

மூன்று மாதங்கள் நோய்மையில் இருந்தவனுக்கு
33 நாட்களுக்கு முன் மரண பயம் உதித்திருக்காது

காதலிகள் இல்லாத அவன்
பிரிவின் முத்தத்தைக் கணக்கெடுத்திருக்க வாய்ப்பில்லை

கொடிய நோயின் செலவுக்கு
33 ரிங்கிட் மட்டுமே தேவைப்பட்டிருக்காது

33 அழுகைகளை கணக்கெடுக்க
மரணத்தின் அந்தரம் வாய்ப்பளித்திருக்காது

இறந்தவன் எழுதி வைத்த கடைசி குறிப்பு
கவிதை நூலின் சொற்களைவிட
எண்ணற்ற அர்த்தங்களை உருவாக்கும் அபாயம் கொண்டிருக்கிறதென
தூக்கியெறிந்தேன்

கவிதை நூல் பக்கவாட்டில் விழுந்து
33 இப்போது இரு ஜோடிப்பறைவைகளாகி
மெல்லிய காற்றைப் படர விட்டு
பறந்தன.

oஇன்று வயது 33. அதை கவிழ்த்துப்பார்க்கிறேன். இரு பறவைகள் பறப்பதை போல உணர்கிறேன். பறக்கும் வயதுதானே…

 

(Visited 1,146 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *