மின்னல் பண்பலையில் ஒவ்வொரு ஞாயிறும் அமுதே தமிழே நிகழ்ச்சியின் பேச்சு இங்கே கட்டுரை வடிவில்…
விவாதங்களால் அல்லது அறிவைச் சுரக்கும் நூல்களால் மட்டுமே அனைத்து உண்மைகளையும் அறிந்துகொள்ள முடியும் என ஒரு கருத்து உள்ளது. நிரூபிக்கப்பட்டதை மட்டுமே பேசமுடியும் அதுவே அறிவு என பல தோழர்கள் பேசுவதை நான் கேட்டுள்ளேன். என்னளவில் அவை அனைத்தும் சாத்தியமற்றவை. உண்மையில் தர்க்க அறிவைவிட கற்பனை மேலும் ஆழமானது. தர்க்கம் நாம் அறிந்தவற்றை அடிப்படையாகக் கொண்டது. கற்பனை படிமங்களால் ஆனது. அதனால் நாம் காணதவற்றையும் கற்பனை செய்ய முடியும்.
நான் லியோனார்டோ டாவின்சியை அடிக்கடி நினைத்துக்கொள்வதுண்டு. விமானமோ ஹெலிகப்பட்டரோ கண்டுபிடிக்காத காலத்திலயே இவர் பரசூட்டைப்பற்றியும் தாயின் கருப்பையில் குழந்தை எப்படி இருக்கின்றது என்றும் மனிதன் உடற்கூறு இயலையும் இவரது தூரிகை கற்பனை செய்தது. அறிதலின் ஆதி முதலாக இருப்பது கற்பனையே. மனிதன் இந்த நிமிடம் தான் இருந்துகொண்டிருக்கும் எல்லைகளைக் கடந்தே கற்பனை செய்கிறான்.
உண்மையின் மேல் கால்களை அழுத்தி சட்டென எம்பிக்குதித்து இயன்ற வரை உச்சத்தைத் தொட்டுவருவதையே கற்பனையாகப் பார்க்கிறேன். கற்பனை வெறும் கற்பனையாக இருக்கும் போது அது ஒரு தண்டவாளம் போல வேகமாக பயணிக்க உதவுகிறது. கவிதையில் அது ஏணியாகி மேல் நோக்கி செல்ல உதவுகிறது.
தேவதேவனின் ஒரு கவிதையை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். பலராலும் பலகாலமாகக் குறிப்பிடப்படும் கவிதை. இப்போது வாசித்தாலும் மனம் அவ்வளவு உலுக்கம் கொள்கிறது.
பொழுதுகளோடு நான் புரிந்த
யுத்தங்களையெல்லாம் முடித்துவிட்டு
நான் உன்னருகே வருகிறேன்
அமைதி என்பது மரணத்தறுவாயோ ?
வந்தமர்ந்த பறவையினால் அசையும் கிளையோ ?
மரணத்தறுவாய் என்பதற்கும் மரணம் என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. மரணம் நிகழ்ந்து விடுவது. மரணத்தருவாய் என்பது உக்கிரமான ஒரு கணம். கவிஞர் அதை அமைதி என்கிறார். அவ்வமைதியை பறவை வந்தமரும்போது நாம் கவனிக்காமல் இருக்கும் கிளையின் அசைவுடன் ஒப்பிடுகிறார். இந்தக் கவிதையை இதற்குமேல் விளக்குவது இந்தக் கவிதையை ஒருவகையில் கொல்வதற்குச் சமம். காரணம் கவிதையில் கடைசி அர்த்தம் என ஒன்றில்லை. கவிதை என்பது மன எழுச்சி, மொழியைச் சந்திக்கும் ஒரு கணம் மட்டுமே. அர்த்தம் மூலம் அது தன்னை நிகழ்த்துவதில்லை, வாசகர்களில் உருவாக்கும் ஆழ்மன எழுச்சி மூலமே நிகழ்த்துகிறது. ஆம் கவிதை வாசிக்கப்படுபவர்களால் மட்டுமே அதன் உச்சமான கணங்களை அடைகிறது.
மேலோட்டமான வாசிப்பு என்பது இந்த வரிகள் இவ்வாறெல்லாம் பொருள் அளிக்கின்றன, இந்த வார்த்தைகள் மூலம் இக்கவிதை இந்தப் பொருளை, இந்த உணர்வை தருகிறது என சொல்லும்.
“குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்”
இந்தக் குறளில் உள்ள கவித்து அழகைப் பாருங்கள். குழந்தையைக் கொஞ்சுவது போன்றே சொற்களைப் பிரயோகித்துள்ளார் வள்ளுவர். மேலோட்டமான வாசிப்பு சொற்களை அடையாளம் கண்டு பொருள் சொல்கிறது. ஆழ்ந்த வாசிப்பு அச்சொற்கள் உள்வாங்கி, களைத்துப்போட்டு ஒட்டுமொத்த உணர்ச்சியையும் அறிய முயல்கிறது. உணவை மெல்லும்போது சுரக்கும் சுவையைப் போல சொற்கள் கலந்து புதிய திறப்பை ஏற்படுத்துகிறது.
நவீன கவிதைகள் குறித்துப் பேசும்போது பிரமிளைக் குறிப்பிடாதவர்கள் குறைவு. பெரும்பாலும் படிமங்களால் ஆன அவரது கவிதைகள் மீண்டும் மீண்டும் தமிழ்ச்சூழலில் குறிப்பிடப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஒருவகையில் சொற்களைக் கணக்கில் எடுத்து அர்த்தம் தேட முடியாமல் அவை சட்டென திறந்துகாட்டும் கவித்துவ அழகியலுக்கு உதாரணமாக இக்கவிதையை சொல்லலாம். கற்பனை எவ்வாறான அக எழுச்சியை உருவாக்கும் என்பதற்கும் இக்கவிதையே நல்ல உதாரணம்.
சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது…
-பிரமிள்