மின்னல் பண்பலையில் ஒவ்வொரு ஞாயிறும் அமுதே தமிழே நிகழ்ச்சியின் பேச்சு இங்கே கட்டுரை வடிவில்…
கவிஞர் தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது கிடைப்பதாக வாசித்தேன். நவீன கவிதைகளை வாசிக்கத் தொடங்கிய ஆரம்ப காலங்களில் என் வாசிப்புக்கு மிக உவப்பானவராக தேவதச்சன் இருந்தார். தமிழில் எழுதப்பட்ட நல்ல கவிதைகள் அனைத்தையும் வாசித்து முடித்தே ஆக வேண்டும் என்ற பிடிவாதமான வயதில் பிரமிளின் அடுக்கடுக்கான படிமங்கள் அடங்கிய முறுக்கிய மொழியும் ஆழ்ந்த வாழ்வனுபவங்களின் உச்சமான கனத்தைப் பிழிந்துகொடுக்கும் தேவதேவனின் கவிதைகளும் தொடர் வாசிப்பிற்குச் சோர்வை ஏற்படுத்தின. இந்த நிலையில்தான் தேவதச்சனின் கவிதைகள் அறிமுகமாயின. நவீன கவிதைகள் குறித்த ஒரு கட்டுரையில் அவரது ‘காற்று ஒருபோதும் ஆடாத மரத்தை பார்த்ததில்லை’ என்ற கவிதை சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அதுதான் நான் வாசித்த அவரது முதல் கவிதை.
அதில்,
காற்றில்
அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள், காலில்
காட்டைத் தூக்கிக் கொண்டு அலைகின்றன
என்ற வரி மனதில் அப்படியே அப்பிக்கொண்டது. இரவெல்லாம் அந்த வரிகளை அர்த்தமே இல்லாமல் அரற்றிக்கொண்டிருந்தேன். ‘வண்ணத்துப்பூச்சியின் கால்களில் காடு’. எப்படிப்பட்ட படிமம் இது என வியப்பாக இருந்தது. காற்றில் அலையும் பூச்சிகளில் பலவீனமானது வண்ணத்துப்பூச்சியாகத்தான் இருக்க முடியும். அதன் காலில் ஒட்டும் மகரந்தத் துகள் மலரில் விழுந்து, முளைத்து காடாக மாறவிருக்கும் ஒரு மாபெரும் நிகழ்வு பெரும் பிரமிப்பை ஏற்படுத்தியது. இயற்கையின் அபார உருவாக்கங்களெல்லாம் மிகச்சிறிய தொடக்கத்திலிருந்து முளைப்பவை என மூளை சொல்லிக்கொண்டிருந்தது. தேவதச்சன் எனக்குப் பிடித்துதான் போனார்.
தொடர்ந்து அகவயம் நோக்கி பல கவிஞர்கள் இருண்மையின் தெளிவின்மையைச் சொற்களாக உதிர்த்துக்கொண்டிருந்த காலத்தில் அன்றாட வாழ்விலிருந்து அவர் காட்சிகளை அமைத்து அதன் மூலம் படிமங்களை உருவாக்குவது அதற்குக் காரணமாக இருக்கலாம். அவரது ஒரு கவிதையை நான் வாழ்வின் பல்வேறு தருணங்களில் மீட்டுணர்ந்திருக்கிறேன்.
துணி துவைத்துக்கொண்டிருந்தேன்
காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்
தொடர்ந்து துவைத்துக்கொண்டிருந்தேன்
காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்
அடுத்த துணி எடுத்தேன்
காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்
நிசப்தம்தான் எத்தனை உக்கிரமானது என அதை அனுபவிப்பவர்கள் உணர்ந்திருப்பார்கள். நம்மைவிட்டு ஒருவர் நீங்கிவிட்டப்பின்பும் சதா அவர் இருத்தலை நினைவுறுத்துவதை மனம் ஒரு தீராத பணியாகவே செய்துக்கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் இந்தோனேசியாவிலும் வரலாற்றில் எஞ்சியுள்ள சுவடுகளை நான் காணும்போது ஏற்பட்ட சிலிர்ப்பு இந்தக் கவிதையை வாசிக்கும் போதெல்லாம் ஏற்படுகிறது. 2003ல் ஒருமாத தமிழகப் பயணத்தில் தஞ்சையிலும் மதுரையிலும் பிரமாண்டமான கோயில்களைக் காணும்போது கூடவே ஆயிரக்கணக்கான சிற்பிகளின் உளி செதுக்கும் ஓசை இன்னமும் எங்கோ ஒலித்துக்கொண்டிருப்பதாகத் தோன்றும் பிரம்மையை இக்கவிதையை வாசிக்கும் அந்தக் கணம் நினைவுக்குக்கொண்டு வருகிறது.
நவீன வாழ்வின் அனுபவங்களுடன் கவிதையைப் பிணைத்துச்சொல்லும் தேவதச்சன் நவீன கவிதையின் தொடக்க கால வாசகர்களுக்கு ஏற்றவர் எனலாம். அவர் கரங்களில் வைத்துள்ள மூங்கில் எளிய வாசகன் ஒருவனுக்கு பழக்கமானது. அவருடன் சேர்ந்து அவனும் எளிதாகப் பற்றிக்கொள்ளும்படியே தேவதச்சன் அதை வடிவமைத்துள்ளார். எனினும் அது தூண்டிலாய் மாறி ஆழ்க்கடலுக்குள் அமிழும்போது பூமிக்கு அவர் இழுத்து வர விரும்புவது முழு கடலையே என வாசகன் அறிய வேண்டியுள்ளது. அதற்காகவே அவன் காத்திருக்க வேண்டியுள்ளது.
வாழ்வில் பல இறுக்கமான கணங்களில் வாசிப்பு மட்டுமே என்னை மீட்டிருக்கிறது. குறிப்பாகக் கவிதைகள். விபத்துகளால் அவசர சிகிச்சையில் இருக்கும் உறவுகளைக் காணச்செல்லும் போதெல்லாம் எனக்கு ‘குருட்டு ஈ’ ஒன்று நினைவுக்கு வரும். அது படபடத்து இலக்கற்று அலைமோதும் மனதுக்கு தேவதச்சன் கொடுத்த உவமை.
ஆஸ்பத்திரியில்
வெண்தொட்டிலில் சுற்றுகிறது
இறந்து கொண்டிருக்கின்ற குழந்தையின்
மூச்சொலி
பார்க்கப் பயமாக இருக்கிறது
சுவரில் தெரியும்
பல்லி
சீக்கிரம் கவ்விக் கொண்டு
போய்விடாதா
என் இதயத்தில்
சுற்றும் குருட்டு ஈயை
சதா அலைக்கழிக்கும் எண்ணங்களில் இருந்து மீள முடியாத குற்ற உணர்விலிருந்து புறப்படும் தேவதச்சனின் சொற்கள் மீண்டும் மீண்டும் நவீன வாழ்விலிருந்தே முளைத்து வருவது ஆச்சரியம்.
குழந்தைகளுக்குப் பலூன் என்றால் விருப்பம் அதிகம். பலூன் பறக்கும். அதை பறக்க விடாமல் கைகளில் பிடித்திருப்பதில் குழந்தைகள் அதி உற்சாகம் அடைகிறார்கள். ஒரு பலூனின் சுதந்திரம் அவர்கள் பிஞ்சு கரங்களில் இருப்பது அத்தனை உவகையானது அவர்களுக்கு. பறப்பதற்கும் பறக்காமல் பிடித்திழுப்பதற்கும் நடுவில்தான் பலூன் முக்கியத்துவம் அடைகிறது. தேவதச்சனும் பலூன் பற்றி ஒரு கவிதையை இவ்வாறு தொடங்குகிறார்…
இந்த நீலநிற பலூன் மலரினும்
மெலிதாக இருக்கிறது. எனினும்
யாராவது பூமியை விட கனமானது
எது என்று கேட்டால், பலூனைச் சொல்வேன்.
நீங்களாவது கூறுங்களேன், இந்த
நாற்பது வயதில் ஒரு பலூனை
எப்படி கையில் வைத்திருப்பது என்று…
பலூனை விரல்களில் வைத்திருப்பது என்பது
காற்றைக் கையில் வைத்திருப்பது போல் இருக்கிறது
பலூன்கள் கொஞ்சநேரமே இருக்கின்றன.
எனினும் சிறுவர்கள் கொஞ்சத்தை ரொம்ப நேரம்
பார்த்து விடுகிறார்கள்.
அருகிலிருக்கும் குழந்தையின் பலூன் ஒன்று
என்னை உரசியபடி வருகிறது. நான்
கொஞ்சம் கொஞ்சமாக பலூன் ஆகிக் கொண்டிருக்கிறேன்
நாற்பது வயதில் பலூனை கையில் வைத்திருக்கும் ஒருவருக்குப் புற நிலையிலும் அக நிலையிலும் ஏற்படும் சங்கடங்களை நினைத்துக்கொண்டிருந்தேன். கவிதையின் இறுதியில் தேவதச்சன் தன்னையே ஒரு பலூனாக உருவகப்படுத்தும் போது பறப்பது பற்றிய அவரது தவிப்பு தெரிகிறது.
நவீன கவிதைகள் நம் வாழ்வோடு துணை வருகின்றன. நமக்கு ஓர் அனுபவம் நிகழும்போது சட்டென அவை தலைக்காட்டுகின்றன. இதுவரை இல்லாத புதிய அர்த்தங்களைக் கூட கொடுக்கின்றன. இதுவரை தெரியாத புதிர்களுக்குச் சிலசமயம் பதிலாகியும் போகின்றன. சமகால வாழ்விலிருந்து முளைத்துவரும் தேவதச்சனின் கவிதைகள் உணர்ச்சிமிகு தருணங்கள் தோறும் உடன் வந்து ஒரு சொட்டு ரத்தம், ஒரு சொட்டு கண்ணீர், ஒரு சொட்டு எச்சில், ஒரு சொட்டு விந்தை விட்டுச்செல்வதாகவே தோன்றுகிறது.
விஷ்ணுபுரம் விருது பெரும் அவருக்கு வாழ்த்துகள்