நவீன கவிதை வாசிப்பு : பகுதி 8

IMG_7318 copyமின்னல் பண்பலையில் ஒவ்வொரு ஞாயிறும் அமுதே தமிழே நிகழ்ச்சியின் பேச்சு இங்கே கட்டுரை வடிவில்…

நவீனக் கவிதைக்கென்று திட்டவட்டமான வடிவம் ஒன்றில்லை. அதன் முழு நோக்கமும் சொற்கள் மூலமாகக் கவித்துவத்தை அடைய முயல்வதுதான். அதீத மொழி ஆற்றல் மூலமாக உருவாக்க முடியாத கவித்துவ அழகியலை சில கவிஞர்கள் மிக எளிய சொற்கள் மூலமாக உருவாக்கிவிடுவதுண்டு. இத்தகைய கவிதைகள், மொழி அல்லது வடிவப் பயிற்சியால் அடையப்படுவது அல்ல. கடலில் நீந்தி அதை அறிவது ஒரு முறை என்றால் இவர்கள் கரையில் நின்று கூர்ந்த நுண்ணுணர்வுடன் அதை அவதானிப்பவர்கள். சில சமயம்  நீந்துபவனைவிட கரையில் காத்திருப்பவனுக்குக் கடல் புதிய தரிசனங்களைத் தரலாம்.

தத்துவச் சுமையோ, படிமத்தொழில்நுட்பமோ, மொழி இறுக்கமோ இல்லாத எளிமையான நேரடியான கவிதைகள் சங்க காலங்களில் இருந்து தமிழில் தொடர்ந்து படைக்கப்பட்டே வருகின்றன. பாரி மகளிரின் ஒரு பாடலை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்
எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத்திங்கள் இவ்வெண்ணிலவில்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே.
(புறநானூறு:112)

பொருள் கூறும் அளவுக்கு இப்பாடல் கடினமானதல்ல. எளிய நேரடியான மொழி. தந்தையை இழந்த அங்கவை சங்கவை என்ற இரு பெண்கவிகளின் குரல் இது. உரசியதும் ஒரே ஒரு நொடி சீற்றத்துடன் எழுந்து, எரிந்து, பின் மெல்ல மங்கும் ஒரு தீக்குச்சி நெருப்பை காண்பது போன்ற பாடல் இது. நவீன கவிதைகளிலும் இவ்வாறு வாழ்வை ஒரு பதிவாகச் சொல்லிவிட்டு போகிற பாணி உண்டு. அவ்வாறான கவிதைகள் அனைத்துமே எனக்கு இந்தத் தீக்குச்சியின் ஒரு நொடி சீற்றத்தை நினைவு படுத்தும். அவ்வாறு கவிதையில் உணர்ச்சிபொங்கும் அக்கணமே மொத்தக் கவிதையையும் இழுத்துப் பிடித்திருக்கும். கல்யாண்ஜி கவிதைகளில் ஒன்று நினைவுக்கு வருகிறது.

தினசரி வழக்கமாகிவிட்டது
தபால்பெட்டியைத்
திறந்துபார்த்துவிட்டு
வீட்டுக்குள் நுழைவது.
இரண்டு நாட்களாகவே
எந்தக் கடிதமும் இல்லாத
ஏமாற்றம்.
இன்று எப்படியோ
என்று பார்க்கையில்
அசைவற்று இருந்தது
ஒரு சின்னஞ்சிறு
இறகு மட்டும்
எந்தப் பறவை எழுதியிருக்கும்
இந்தக் கடிதத்தை.

வெறும் காட்சிகளின் ஊடாக வாசகனை நெருங்கும் கவிதைகள் இவை. ஆனால் அந்தக் காட்சிகள் வாசகனை பெரும் அலைக்கழிப்புக்கு உள்ளாக்குவதுதான் அதை கவிதையாக்குகிறது. சமகாலத்தில் இதுபோன்ற கவிதைகளை எழுதுவதில் முக்கியமானவர் முகுந்த் நாகராஜன். அவரது பெரும்பாலான கவிதைகள் வாழ்வை ஒரு பார்வையாளனாக பார்க்கும் எளிய பதிவாகவே உருகொள்கின்றன. நீர் தெளித்து விளையாடுதல் என்ற அவரது கவிதை எனக்குப் பிடித்தமானது.

முன் பின் பழக்கம் இல்லாத
பயண வழி உணவு விடுதியில்
சாப்பிட்டு விட்டு
கை கழுவப் போனேன்.
சாதாரண உயரத்தில்
இரண்டு வாஷ்பேசின்களும்
மிகக்குறைந்த உயரத்தில்
ஒரு வாஷ்பேசினும் இருந்தன.
கை கழுவும்போது
காரணம் தெரிந்து விட்டது.
குள்ள வாஷ்பேசின் முன்
இல்லாத குழந்தையின் மேல்
செல்லமாக தண்ணீர் தெளித்து
விளையாடி விட்டு
விரைவாக வெளியே வந்து விட்டேன்.

வாழ்வின் எதார்த்தத்தை இறுக்கப் பிடித்துக்கொண்டு சட்டென ஒருநிமிடம் மாயத்தில் கால்வைத்து நனைக்கும் சூட்சுமத்தையே இவர்கள் கவித்துவம் உள்வாங்கியுள்ளது. மலேசியாவில் சந்துரு அவ்வாறான கவிதைகளை எழுதக்கூடியவர்தான். ஓர் ஓவியரான இவர் கவிதைகளில் உருவாக்கும் எளிய காட்சிகள் மிக நுட்பமாகவை. ஒருவகையில் எழுத்துகளால் ஆன ஓவியம் போன்றவை.

புன்னகை முற்றிலும் தொலைத்தவர்
சாலையோரத்தில் உதிர்ந்த
பூக்களையும் இலைகளையும்
பெருக்கிக்கொண்டிருக்கிறார்
ரசனையற்று

தொடக்கத்திலிருந்தே சொல்வதுபோல கலை அனைவருக்குமானது. வாழ்வை நுணுகி நோக்கும் ஒருவனால் அதை எந்த கவிதையாகவும் ஓவியமாகவும் இன்னபிற வடிவங்களிலும் தர முடிகின்றது. ஓவியத்துக்கு வண்ணம் போல கவிதைக்கு மொழி ஒரு மூலப்பொருள். அதை எப்படி உபயோகிக்கிறோம் என்பது அவரவர் கலைவடிவங்களை நிர்ணயிக்கிறது.

(Visited 591 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *