வணிக எழுத்தும் தீவிர எழுத்தும்
சிங்கப்பூரின் சமகால சிறுகதைகள் குறித்து எழுதத்தொடங்கியதிலிருந்து பல்வேறு விதமான கருத்துகள் வந்த வண்ணம் உள்ளன. அவற்றில் சில, குறிப்பிட்ட படைப்பாளியின் மேல் தங்களுக்கு இருக்கும் சுய வெறுப்பின் காரணமாகத் தன்னையும் அந்த விமர்சனத்தின் பங்காளியாக இணைத்துக்கொள்ள முயல்பவை. பொதுவாக இதுபோன்ற குரல்களுக்கு நான் செவி கொடுப்பதில்லை. விமர்சனம் முன்முடிவுகளுடன் உருவாவதிலும் சுய வெறுப்பின் வசைகளுக்கான மாற்று வடிவாகவும் தனது அறிவுஜீவிதத்தைக் காட்டும் தளமாகவும் இருப்பதில் எனக்குச் சம்மதமில்லை. விமர்சனம் என்பது தீர்ப்புகள் அல்ல. சக வாசகனுடன் விவாதிக்கும் ஒரு முறை. இந்த விவாதங்கள் ஒன்றுடன் ஒன்று முயங்கியும் முரண்பட்டும் ஒரு சமூகத்தின் முன் திரட்டப்பட்ட கருத்துகளாக எப்போதும் இருக்கின்றன ; நிலைப்பதில்லை. இன்னொரு காலத்தில் இன்னொரு விமர்சகனால் அது மீள் வாசிப்புக்குட்படுத்தப்பட்டு புதிய முறையில் ஒரு படைப்பு அணுகப்படலாம்.
ஜி.நாகராஜனின் இரு நாவல்களும் ஆணாதிக்கச் சிந்தனை கொண்டது என நான் சொல்வது இந்த அடிப்படையில்தான். பாலாவின் திரைப்படங்கள் ஜனரஞ்சகக் குப்பை என மீண்டும் மீண்டும் சொல்வதும் இந்த நோக்கில்தான். மிகச்சரியாகச் சொல்வதென்றால் இவற்றை ‘ஆபத்தான கலை’ எனச் சொல்லலாம். ஆனால் அப்படைப்பில் உள்ள அரசியலை நீக்கிவிட்டு வெறும் கலை வடிவாக மட்டுமே பார்த்தால் இவற்றை நிராகரித்துவிட்டு தமிழ் இலக்கியத்தையோ திரைப்படத்தையோ பேச முடியாது. அவை புழங்கும் களம் தமிழுக்குப் புதியவை. ஒருவகையில் சில துவக்கங்களை உண்டாக்குவன.
ஆனால் பேரரசுவின் திரைப்படத்தையோ வைரமுத்துவின் சிறுகதைகளையோ பொருட்படுத்திப் பேச வேண்டியதில்லை. ஒட்டுமொத்த இலக்கிய/கலைப் பரப்பில் அதுபோன்ற அபத்தங்கள் வருவதும் போவதும் இயல்பான விடயம். எவ்வளவு கருத்துகளைத் திரட்டி திரட்டி பேசினாலும் அதுபோன்ற ஜனரஞ்சக ஆக்கங்களுக்கு வணிகம் மட்டுமே குறி. அதில் அவை வெற்றி பெறுகின்றன. தங்கள் நோக்கத்தை அடைகின்றன. ஜனரஞ்சகப் படைப்பின் நோக்கையும் போக்கையும் எளிமையாக இப்படிப் பட்டியலிடலாம்.
- படைப்பாளனின் முன்முடிவற்ற தேடலில் இருந்து உருவாகாமல் வாசகனின் தேவைநோக்கி உருவாக்கப்படுபவை.
- ரசிகனையும் வாசகனையும் மனதில் கொண்டு அதன் மூலம் படைப்பாளனால் அதன் எல்லைகள் வரையறுக்கப்படும். அதனால் புதியதைக் கண்டடையாது.
- அவற்றின் வடிவம் நிலையானவை. தொழில்நுட்பமாக மட்டுமே இங்குக் கலை செயல்படும்.
சிங்கப்பூர் படைப்புகளைப் பற்றி பேசும் இந்தத் தொடரில் நான் மேலே குறிப்பிட்ட அளவில் ஒரு படைப்பை அணுகி விமர்சிக்கவில்லை. குறைந்தபட்சம் நல்ல படைப்புகளை அடையாளம் காண்பதும் அதன் வழி உரையாடல்களைத் தொடங்குவதுமே என் நோக்கம். அதன் அடிப்படையில் சிங்கப்பூர் சூழலில் உண்மையில் படைப்புகள் உள்ளனவா என்பதையே இப்போதைக்கு ஆராய வேண்டியுள்ளது. குறைந்தபட்சம் இன்னொரு தரப்புக்கு அடையாளம் காட்டவாவது ஒவ்வொரு படைப்பாளியின் மொத்தப் படைப்பையும் வாசிக்க வேண்டியுள்ளது. இந்த வரிசையில்தான் கமலாதேவி அரவிந்தன் சிறுகதை தொகுப்பான ‘சூரிய கிரஹணத் தெரு’வில் உள்ள பெரும்பாலானவை சிறுகதை எனக் கூற தகுதியற்றவை என்கிறேன். அத்தகைய தகுதி பெறாத அவற்றை ஜனரஞ்சகப் படைப்பாகவோ அல்லது அரசியல் விமர்சன நோக்கிலோ அணுகத் தேவையே இல்லை என்பதை மீண்டும் தெளிவுபடுத்திவிட்டே அவரின் அடுத்த தொகுப்பான ‘கரவு’ குறித்துப் பேச வேண்டியுள்ளது.
கரவு
இப்படிக்கு அம்முக்குட்டி – எல்லாவற்றுக்கும் பயப்படும் அம்முக்குட்டி. அவள் கணவன் உன்னிக்கிருஷ்ணன். இருதய அறுவை சிகிச்சைக்கு மருத்துவமனையில் கணவன் இருக்க அம்முக்குட்டியைப் பற்றி கதாசிரியர் சொல்லிச்செல்கிறார். அவள் எதற்கெல்லாம் பயப்படுவாள் என்றும் அவளுக்கு கர்நாடக சங்கீதம் தெரியும் என்றும் அவளது இரு பிள்ளைகளும் வெளிநாட்டில் இருக்கிறார்கள் என்றும் என்னென்னவோ சொல்கிறார். பின்னர் அறுவை சிகிச்சை முடிந்த கணவனை அன்போடு அணைத்து காதில் சங்கீதம் பாடுகிறாள். சம்பவங்கள் எல்லாம் சிறுகதையாவதில்லை. ஒரு சிறுவன் தன் வாழ்நாளில் முதன்முறையாகத் தெருவில் இறங்கி நடக்கும் சம்பவம் அவனுக்கு மிக முக்கியமான மனப்பதிவாக இருக்கலாம். ஆனால் அதை அவன் ஒரு கதையாகச் சொன்னால் எப்படி மனதில் நிற்காதோ அப்படி இருக்கிறது இக்கதை. ஏறக்குறைய இதேபோல சம்பவத்தை மட்டும் சொல்லிச் செல்லும் மற்றுமொரு கதை ‘ரூமா மூரா‘. திருமணமாகி விவாகரத்தும் செய்யும் பெண் மீண்டும் மறுமணத்துக்கு தயாராவதில் தடுமாற்றத்தில் இருந்த சூழலில் அவள் பின்னால் காதலைச் சொல்லித் திரிந்தவன் விபத்துக்குள்ளாவதும் அதனால் வழக்கம்போல இரக்கத்தில் துவங்கும் காதலும் எனக் கதை போகிறது. இறுதியில் இருவரும் சேர்ந்து உழைக்கும் தமிழ்ப்பட முடிவு. இறுதிப்பத்தியில் கதாசிரியரே இப்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என கருத்துச் சொல்கிறார்.
கண்ணி நுண் சிறுத்தாம்பு – fetish என ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை உண்டு. இயல்புக்கு மாறான முறையில் ஒரு தேவையை அடையும் ஆர்வம் என இதை புரிந்துகொள்ளலாம். fetish ரசனை கொண்டவர்கள் பெரும்பாலும் வக்கிரத்தை விரும்புவார்கள். அதுபோன்ற இலக்கியங்களையும் திரைப்படத்தையும் நான் மறுப்பவன் அல்ல. ஆனால் அதற்கான அழகியல் உண்டு என நம்புபவன். சாருவின் ‘தேகம்’ நாவலை அந்த வரிசையில் சேர்க்கலாம். நவரசங்களில் ‘பீபல்சம்’ எனப்படும் அருவருப்பும் ஒன்றுதானே. ஆனால் அதை சரியாகக் கையாளத் தெரியாவிட்டால் ஒன்பது ரசங்களிலும் சேராமல் ‘கசம்’ ஆகி நிர்க்கும். ‘கண்ணி நுண் சிறுத்தாம்பு’ அவ்வாறான சிறுகதைதான். மிக முக்கியமான களம். மனநல மருத்துவமனையில் குணமான ஒரு பெண்ணுக்குத் திருமணம் செய்துவைக்கும் முயற்சி நடக்கிறது. அதீத மகிழ்ச்சியில் அவள் திருமண அறையில் இருக்கும் கோலத்தை அனைவரும் பார்க்கின்றனர். ஆசிரியர் அக்காட்சியை இப்படி வர்ணிக்கிறார்.
‘குழந்தையைப்போல காலைச் சுருட்டி மடக்கிக்கொண்டு கை நிறைய கல்யாண வளையல்களும் தலை நிறைய பூவும் கண்களில் அழுத்தமான மையுமாய் மோகனப் புன்னகையோடு கற்பனையிலேயே முதலிரவு கொண்டாடிய உச்ச சுகத்தில், இவர்களைப் பார்த்துச் சிரித்த சுந்தரவதனியின் உடம்பில் பொட்டுத்துணியில்லை’
இந்த வரியைப் படித்தவுடன் எனக்குக் கோபமே எஞ்சியது. வாசகனை திடுக்கிட வைக்க வேண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்க வேண்டும் என நினைக்கும் எழுத்தாளர் மட்டுமே வடிவமைதியில்லாத இவ்வாறான பாணியைக் கையாள்வார்கள். நல்ல பல கதைக்களங்களும் கதாமாந்தர்களும் கமலாதேவியிடம் மாட்டி சின்னாபின்னமாவதை உண்மையில் சகித்துக்கொள்ள முடியாமல்தான் இருக்கிறது.
நடிகன் – சில திரைப்படங்களில் உச்சம் எல்லாம் கடந்த பின்னும் எல்லாரும் கடைசியாக ஒன்றுகூடிச் சிரிப்பார்கள். பின்னர் ‘சுபம்’ என திரையில் தோன்றும். அந்தக் கடைசிக் காட்சியில் ரசிகர்களைச் சிரிக்க வைக்க நாகேஷ் போன்றவர்கள் ஏதாவது கோமாளித்தனம் செய்வார்கள். அதுதான் அந்தப்படத்தில் எரிச்சல் ஊட்டுவதாக இருக்கும். இந்தச் சிறுகதையும் அவ்வாறு எரிச்சல் தரும் முடிவுடன் நிறைவடைகிறது. நாடகக்குழுவில் எதிர்மறையாகக் காட்டப்படும் ஒருவன் நாடக ஆசிரியராகவும் இயக்குனராகவும் இருக்கும் பெண்ணை அதிகம் கிண்டல்களால் சீண்டி அவளிடம் வெறுப்பைச் சம்பாதித்து, பின் அவள் உயிரைக் காத்து, அவளிடம் கரிசனை பெற்று, அவளைக் காக்கும்போது உடல் பாதிக்கப்பட்டதாக நடித்து, பின்னர் அதெல்லாம் இல்லை என அனைவரையும் சிரிக்கவைத்து….யப்பா…
நீலக்கல் கிரீடம் – உண்மையில் இந்தச் சிறுகதை(?) ஏன் எழுதப்பட்டது என எனக்குத் தெரியவில்லை. ஒரு நீலக்கல் மோதிரம் கிடைக்கப்பெற்றதும் இரு குடும்பங்களில் நடக்கும் அசம்பாவிதங்களும் அதற்குக் காரணம் என அறிந்து அந்தக் கல்லை வீசுவதும் கதை.
கரவு – நவீன இலக்கியப்போக்கு தமிழில் வேரூன்றிய சூழலில் பின்நவீனத்துவம் ஒரு மாற்று வடிவம் ஆனது. நவீனத்துவம் மையப்படுத்தப்பட்டு ஒருங்கிணைவுள்ள படைப்புகளை உருவாக்கியதென்றால் மையமற்ற விவாதத்தன்மையுள்ள ஊடுபாவுகள் கொண்ட வடிவங்கள் பின் நவீனத்துவத்தில் உருவாகின. ஆக, ஒரு படைப்பு இவ்வாறான வடிவத்தில்தான் இருக்கவேண்டும் என்ற கெடுபிடியெல்லாம் இலக்கியத்தில் இல்லை. படைப்பே அதை தீர்மானிக்கிறது. கமலாதேவி தன் பெரும்பாலான சிறுகதைகளில் நீண்ட காலச் சம்பவங்களையே பேசுகிறார். சில சமயம் இது ஒரு ஜனரஞ்சக நாவலுக்குரியது என்றே வாசிக்கும்போது தோன்றுகிறது. ஆனால் வடிவம் குறித்து அவருக்கு எவ்விதமான பிரக்ஞை உள்ளது எனப் புரியவில்லை. அவை மையத்தை நோக்கியும் செல்லவில்லை. உச்சமான திருப்பத்தைக்கொண்டும் முடிவதில்லை. ரமணிச்சந்திரன் வகையறா நாவல்களை அவை சிறுகதைகளாகச் சுருக்கி வைத்துள்ளன என்பதற்கு ‘கரவு’ ஓர் உதாரணம்.
கொடுமையான கணவன். அதனால் இன்னொரு இளைஞனிடம் ஈர்ப்பும் நட்பும் ஒரு பெண்ணுக்கு ஏற்படுகிறது. அவள் கர்ப்பமாகிறாள். குழந்தை பிறந்ததும் கணவன் புதிய மனிதனாக மாறி நல்லவானகிறான். மனைவி வீட்டில் இருக்க இளைஞனின் நட்பை முழுமையாகத் துண்டிக்கிறாள். அவன் ஏங்கி ஏங்கித் திரிகிறான். அவளது 10 வயது மகனை அன்பொழுக கடைகளில் பார்க்கிறான். பின்னர் சிறுவன் பெரியவானபின் குடிகாரனாகிவிட்ட அந்தக் கிழவனைப் (அந்த இளைஞனை) பார்த்து ஒதுங்குகிறான். ஒருநாள் அந்தக் கிழவன் இறந்துவிட நல்லவனாகிவிட்ட அந்தப்பெண்ணின் கணவனே அவனை அடக்கம் செய்கிறான். இதையெல்லாம் அந்தப் பெண் கண்டுகொள்ளவே இல்லை. பின்னர் தன் மகனை தலை குளிக்கவும் சொல்கிறார் அப்பா. அவருக்கு அப்பையன் தனக்குப் பிறந்தவன் அல்ல எனப் புரிகிறது. வாசகர்களுக்குப் புரியவும் ஆசிரியர் சில குறிப்புகளை ஆங்காங்கு வைக்கிறார். ஆனால் வாசகர்களுக்குப் புரியாமல் போய்விடுமோ என்ற பதற்றம் அவரைப் பற்றாமல் இல்லை. எனவே தெற்றுப்பல் தெரியச் சிரிப்பது, அந்த இளைஞனுக்குப் பிடித்த உணவே மகனுக்கும் பிடிப்பது, தலை குளிக்கச் சொல்வது என மீண்டும் மீண்டும் அதை உறுதி செய்கிறார்.
இந்தக் கதையை கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம். ‘தனக்குப் பிறக்காத மகனை தெரிந்தே வளர்க்கும் அப்பா.’ இதுதான் கதையின் சாரம் என வைத்துக்கொள்வோம். இப்போது இதில் இந்தப் பெண்ணின் உளவியல் என்ன? அவள் ஏன் அதற்குப் பின் அவனைப் புறக்கணிக்கிறாள். அவன் இறந்ததுகூட ஏன் அவளைப் பாதிக்கவில்லை? கணவனுக்கு ஏன் அவன் மேல் அவ்வளவு கரிசனம்? தனக்கு தந்தை என்ற அந்தஸ்தைக் கொடுத்ததாலா? அந்த அந்தஸ்து அவ்வளவு உன்னதமானதா? அது குறித்து ஆசிரியருக்கு கேள்வியே இல்லையா? தந்தை என்பதுதான் ஆண்மையின் அடையாளமா? அதனால்தான் அவர் அத்தனை நாள் சோம்பிக்கிடந்து பின்னர் தந்தையானவுடன் சுறுசுறுப்பான ஆண்மகனாகிறாரா? எந்தக் கேள்விக்குமே முறையான கோர்வையில்லாமல் ‘தனக்குப் பிறக்காத மகனை தெரிந்தே வளர்க்கும் அப்பா’ என்ற ஒற்றை கருத்தைப் பிரதிநிதிக்கும் கதாபாத்திரங்களை உருவாக்குகிறார் ஆசிரியர். அந்தக் கதாபாத்திரத்தின் வேலை அதை உணர்த்துவது மட்டுமே. மிகச்சரியாகச் சொல்வதென்றால் வாசகனை கவர மெல்லிய அதிர்ச்சி கொடுக்கும் ஒரு கருத்தைத் தேர்ந்தெடுத்து அதைச் சுற்றி சம்பவங்கள் அமைக்கும் மலினமான உத்தியே இது.
இதே போன்ற உத்தி ‘பத்தாயம், ஊழ், சுடுதண்ணி பாசா‘ போன்ற சிறுகதைகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. சாதியின் அடிப்படையில் வீட்டுக்குள் நுழைவதால் அவமானப்படுத்தப்படும் சிறுவன் பெரியவனானதும் அந்த வீட்டையே வாங்குகிறான் என்ற அறிய சம்பவத்தைச் சொல்லும் கதையாக ‘பத்தாயம்’ உள்ளதென்றால், இந்தியாவில் இருந்து தந்தையைத் தேடி சிங்கப்பூருக்கு வந்து, தந்தையை அவ்வப்போது பார்த்தும் அடையாளம் தெரியாமல் திரும்பும் மகனை அடையாளம் கண்டுகொண்ட அப்பாவின் அறிய கதையை ‘ஊழ்’ சொல்கிறது.
எங்கேயும் மனிதர்கள் – ஒரு மாணவன் மறுநாள் தான் எழுதப்போகும் சோதனைக்கான கேள்வி தென்னை மரம் என நண்பனின் மூலம் அறிந்தான். எனவே தென்னை மரத்தை எப்படி வளர்ப்பது என விடிய விடியப் படித்தான். மறுநாள் பசு மாடு என தலைப்பு வந்தது. அந்த மாணவன் அசரவில்லை. தான் முதல்நாள் படித்த தென்னை மரத்தைப்பற்றி விலாவரியாக எழுதிவிட்டு இறுதியாக ‘இப்படிப்பட்ட மரத்தில் நாம் பசுமாட்டைக் கட்டி வைக்கலாம்’ என முடித்தான்.
‘எங்கேயும் மனிதர்கள்’ சிறுகதையும் அவ்வாறானதுதான். அவருக்கு தான் கலந்துகொண்ட ஏதோ ஒரு வெளிநாட்டு அரங்கைப்பற்றி கூற ஆசை. கதையில் முக்கால் பாகம் அவர் கலந்துகொண்டதையும் என்ன பேசினார் என்பதையும் அதற்கு கிடைத்த பாராட்டுகளையும் இரவில் அவர் விருந்துண்டதையும் பல பிரபலங்களிடம் பெற்ற பாராட்டுகளையும் உருகி உருகிக் கூறி கதையின் இறுதியில் சம்பந்தமே இல்லாமல் ‘கோரன் ‘ மற்றும் ‘நப்பீசன்’ சிக்கலில் முடிக்கிறார். இடையிடையே அவர்கள் இருவரும் வந்து போகிறார்கள் ஒரு கோர்வைக்காக. ஆனால் சுமி என்ற பெயரில் வரும் அந்தப் பெண் மட்டும் கமலாதேவியின் திட்டப்படி வாசகர்கள் மனதில் இருப்பார். பசுமாட்டை மறந்து தென்னை நிலைப்பதுபோல.
கமலாதேவி அரவிந்தன் அவர்களுக்கு எதை கதையாக மாற்ற வேண்டும் என்பதில் பெரும் குழப்பம் இருக்கிறது. நம்மைப் பாதிக்கும் சம்பவங்கள் எல்லாம் சிறுகதையாவதில்லை. அவை சம்பவங்கள். அவை நமக்கான டைரிக் குறிப்புகளாக இருக்கலாம். சிறுகதை எழுத்தாளன் அதில் பொதிந்துள்ள நுட்பமான பகுதிகளை நோக்கி தனது கற்பனையை ஓடவிட்டு புதிய கண்டடைவுகளைச் செய்கிறான். அதற்குத் தேவை கட்டுப்பாடற்ற கேள்வி. வாழ்வை இன்னும் இன்னும் நுணுகிப் பார்க்கும் பொறுமை. கமலாதேவியிடம் அது இல்லாததே அவர் படைப்புகளைத் தட்டையாகக் காட்டுகிறது.
ஆனால் இந்தத்தொகுப்பில் என்னை ஆச்சரியப்படுத்திய சிறுகதை ‘அடோஜோபில‘.
கணவன் மனைவிக்கான உறவில் எழும் சிக்கலை மிக நுட்பமாகப் பேசும் சிறுகதை. மொத்தத் தொகுப்பிலும் தீர்வு சொல்லும் கதாசிரியரின் தலையீடு இல்லாமல் இந்தக்கதையில்தான் தனது போக்கில் பயணிக்கிறது. கச்சிதமான சிறுகதை.
மனைவியிடன் எப்போதும் ஏற்படும் சிக்கல்களால், நம்பி செய்த திருமணத்தில் ஏற்பட்ட ஏமாற்றத்தால் தற்கொலை செய்துகொள்ள சொல்லிக்கொள்ளாமல் வேறு ஊர் செல்லும் ரங்ஜராஜனுக்கு ஒரு பெண் அறிமுகமாகிறாள். மனைவி மேல் உள்ள மொத்தக் கசப்பையும் போக்க அவளது காதலும் காமமும் உதவுகிறது. வந்த நோக்கத்தை மறந்த சில நாள்களில் அவள் வேறொருவனுடன் சுற்றுகிறாள். கணவன் மீண்டும் ஊர் திரும்புகிறான். மனைவி உறங்கிக்கொண்டிருக்கிறாள். அவன் அவளை எழுப்பவில்லை. ‘பொழுது விடியட்டுமே அப்படி என்ன அவசரம்?’ என ரங்கராஜன் காத்திருப்பதோடு கதை முடிகிறது.
எத்தனை முறை வாசித்தாலும் மனதை கனமாக்கும் கதை. பொருத்தமான மௌனம். உண்மையில் இக்கதையில் மாற்றுக் கருத்துச் சொல்ல நிறைய இடமுண்டு. மனைவி என்பவள் சோம்பேறியாக வீட்டுக்கு அடங்காதவளாக இருந்தாலும் ‘பத்தினி’யாக இருந்தால் போதும் வாழ்ந்து விடலாம் என்ற மனப்போக்குடன் திரும்புபவனை நோக்கி கேள்வி எழுப்ப நிறையவே வாய்ப்புண்டு. இங்கு அது அவசியமல்ல என்றே நினைக்கிறேன். இக்கதை சொல்லப்பட்ட விதத்தில் நிறைவாக உள்ளது. ஒரு மனிதனின் காரணமற்ற மனமாற்றங்கள், அவன் தனக்குள்ளேயே செய்துகொள்ளும் சமரசங்கள், அவ்வப்போது தகர்க்கப்படும் முடிவுகள், வாழ்ந்தே ஆக வேண்டிய வாழ்க்கையின் சவால் என இக்கதை வாசகனை நோக்கிப் பேச பல கதவுகளைத் திறந்துவிடுவதே இதன் சிறப்பு.
கமலாதேவி அரவிந்தன் மூத்த படைப்பாளி. நெடிய வாழ்வை பார்த்தவர். ‘அடோஜோபில‘ போல் அவரால் ஏராளமான கதைகளை எழுத முடியும். ஆனால் மிகையான தன்னுணர்வு அவரை அவ்வாறு செய்ய முடியாமல் தடுக்கிறது. மீண்டும் மீண்டும் தன்குறித்த ஆவணங்களை புனைவின் மூலமாக பதிவு செய்ய நினைக்கிறார். தன்னைப் பற்றி வெவ்வேறு கதைகளின் கதாபாத்திரங்கள் மூலம் கூறுவது அவருக்கு அத்தனை விருப்பமானதாக உள்ளது. அது தவறில்லாதபோதும் தன்னுடைய தடுமாற்றத்தையும் இயலாமைகளையும் பிறழ்வுகளையும் இணைத்தே கூறுவது படைப்பாளியை இன்னும் நெருங்கிச்செல்ல உதவும். ஆனால் கருத்துப் பிரதிநிதியாக உருவாக்கப்படும் அவர் கதாபாத்திரங்கள் அவர் சிறுகதைகளை பலவீனமாக்குகின்றன. தனது ஆளுமையை புனைவுகள் மூலம் மிக அக்கறையுடன் உருவாகுவதில் காட்டும் முனைப்பு படைப்பை இடரச்செய்கிறது.
ஒரு டாக்குமென்ட்ரி பார்த்தேன். சிங்கத்தின் வாழ்வு குறித்த அந்தப் பதிவில் சிங்கம் தன் பலம் மூலமாகவே கூட்டத்துக்குத் தலைவனாகிறது. அதற்கு கிழம் தட்டி இயலாமை குடிகொள்ளும்போது இளம் சிங்கம் அதை வீழ்த்தி தனிமைப்படுத்துகிறது. சிங்கத்தின் மரணம் கொடுமையானது. வீரியம் இழந்த சிங்கம் தனிமையில் இறக்கும் என்பது விதி. படைப்பாளியின் பலம் என்ன என்பது குறித்து யோசித்தேன். அவன் வாசிப்பு, படைப்பாக்கம், சமசரமற்ற கருத்துகள் என மட்டுமே தோன்றுகிறது. நாம் சிறந்த படைப்பாளி என யாரும் நமக்கு அங்கீகாரம் தரத் தேவை இல்லாதது போலவே (எழுத்தாளர்களின் புத்தகங்களில் இந்த எழுத்தாளர் இந்த விருதுகளைப் பெற்றவர் எனப் போடப்படும் பட்டியலைப் பார்க்க பாவமாக இருக்கும்) நாமே நமது ஆளுமையைக் கட்டமைக்க நினைப்பது அபத்தம். இதை உணர்ந்து அவர் எழுத முனைவாரானால் ‘அடோஜோபில‘ போன்ற கதைகள் பிறக்கும்.
விரைவில் கமலாதேவி அரவிந்தனின் ‘நுவல்’ குறித்து எழுதுவேன்.