கமலாதேவி அரவிந்தன் சிறுகதை தொகுப்புகள் மூன்றையும் வாசித்த அளவில் அதன் தன்மைகளை இவ்வாறு பட்டியலிடலாம்.
1. அவற்றின் தளம் பெரும்பாலும் புதுமையானது, ஆனால் வாசகனின் மனதில் எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாத மேம்போக்கான காட்சியமைப்பைக்கொண்டவை.
2. எழுத்தாளர் பிற எதையும் விட தன்னை ஏதோ ஒரு கதாபாத்திரத்திரத்தில் புகுத்தி, அதன் மூலம் தன் ஆளுமையையும் தன் கருத்துகளையும் தன் சேவையையும் சொல்ல நினைப்பது பெரும் பலவீனமானது. எ.கா : நுகத்தடி (நுவல்),நடிகன் (கரவு), எங்கேயும் மனிதர்கள் (கரவு), நயம் பட உரை (நுவல்)
3. எழுத்தாளரின் மிகப்பெரிய பலம் காலத்தைத் தாண்டி போகும் எழுத்துமுறை. பெரும்பாலும் நீண்ட காலத்தைச் சொல்லும் கதையமைப்பை எளிதாக கடந்துச்செல்கிறார்.
4. அவர் உருவாக்கும் கதாப்பாத்திரங்கள் அற்புதமானவர்கள். பெரும்பாலான தொடக்கங்களில் உற்சாகமான வாசிப்புக்குக் காரணமாக இருக்கும் அவர்களை எழுத்தாளர் வார்த்தெடுக்க முடியாமல் மொண்ணையாக்கிவிடுகிறார்.
5. சமையலையும் பெண்ணையும் பெரும்பாலும் கமலாதேவி இணைத்தே வர்ணிக்கிறார். அது பெண்களுக்கு வழங்கப்பட்ட மாபெரும் கௌரவம் போலவே மீண்டும் மீண்டும் வர்ணிக்கப்படுகிறது. சமையல் குறித்து எழுதும்போது மட்டும் அதி உற்சாகமாகிவிடுகிறார்.
6. அரசாங்கப் பிரச்சார அறிக்கையாக சில சிறுகதைகள் இருப்பதும் ஆனால் கமலாதேவி பல சிறுகதைகளில் தன்னை ஒரு நவீன இலக்கியவாதியாக நிறுவ முயல்வதும் முரண்நகை. எ.கா : முகடுகள் – (நுவல்), ஒரு நாள் ஒரு பொழுது – (சூரிய கிரஹணத் தெரு)
7. அருவருப்பை ஏற்படுத்தும் கதைகளையும் கமலாதேவி எழுதியுள்ளார். எந்த நல்ல வாசகனுக்கும் அதை வாசிக்கையில் எரிச்சல் வரும். எ.கா : மிதவை (நுவல்), கண்ணி நுண் சிறுத்தாம்பு (கரவு)
8.மரபான திருப்பம் மூலம் கதையின் உச்சத்தைக் கூறும் வடிவத்தையும் இவர் முயன்றுள்ளார். முக்கியமான சிறுகதை எனக்கூற முடியாவிட்டாலும் முதல் கட்ட வாசகர்களுக்கு ஏற்ப கச்சிதமான வடிவத்தில் அவை உள்ளன. எ.கா : உற்றுளி (நுவல் ), புரை (கரவு)
9. ஓர் இயக்குனர் தன் திரைப்படத்தில் உருவாக்கப்படும் ஒரே ஒரு காட்சியை நம்பி படம் எடுத்தால் எப்படி இருக்குமோ அதே போல சிறுகதையாக இல்லாமல் வெறும் விருவிருப்பான சம்பவத்தை மட்டுமே நம்பி எழுதப்பட்டவை இவர் தொகுப்புகளில் அதிகம். எ.கா : தாகம் (நுவல்), தொலைதூரம் (கரவு)
10. எழுத்தாளர்கள் மர்மக்கதைகள், பேய்க்கதைகள் எழுதுவதில் தவறில்லை. அது ஒருவரை பயங்காட்ட மட்டுமே உருவாக்கப்படுகிறதென்றால், யாரோ ஒரு சிறுவன் ‘பூ…’ எனக்கத்தி நம்மை அதிர்ச்சியாக்குவதைதான் அச்சிறுகதையும் செய்வதாகும். பயத்திற்கும் மர்மங்களுக்கும் பின் உள்ள உளவியல் என்ன என ஆராயாமல் எழுதப்பட்ட மேம்போக்கான கதைகளையும் தொகுப்புகளில் காண முடிகிறது. அவை மிகவும் பிற்போக்குத்தனமான சிறுகதைகளாக மட்டுமே காண முடிகிறது. எ.கா : மின்மினி (நுவல்), நீலக்கல் கிரீடம் (கரவு), திரிபு (சூரிய கிரஹணத் தெரு)
11. பெரும்பாலன கதைகளில் ‘அப்போது மழை பிடித்துக்கொண்டது, கடிகாரம் ‘டாண்’ என ஒலித்தது, யாராவது யாரையாவது கடந்து போய்க்கொண்டிருந்தார்கள்’ என முடிக்கிறார். இன்னும் சில கதைகளில் அவரே குறுக்கிட்டு இறுதியில் கருத்துச்சொல்லி செல்கிறார்.
12. கமலாதேவி அவர்களின் பலம் அவரது சிறுகதையின் தொடக்கம்; பலவீனம் அதன் முடிவு.
இவ்வாறு சில மனப்பதிவுகளை மட்டுமே வழங்க முடிகிற கமலாதேவி அரவிந்தனின் முதல் சிறுகதை தொகுப்பான ‘நுவல்’ நூலிலும் ‘விரல்’ என்ற ஒரு நல்ல சிறுகதை உள்ளது. இத்தொகுப்பில் பெரும்பாலான சிறுகதைகள் ஏற்கனவே இரு பாகங்களிலும் நான்கூறிய பலவீனங்களைக் கொண்டவைதான். மீண்டும் மீண்டும் அதுகுறித்து பேச அவசியமில்லை என நினைக்கிறேன். ஆனால் இச்சிறுகதை இறுதிவரை தனது ரகசியத்தை மிக நுட்பமாக எடுத்துச்செல்கிறது. முடிவில் மட்டும் சில தேவையில்லாத வரிகள்.
ஒரு சிறுகதை முடியும் இடம் முக்கியமானது. அங்கிருந்து இன்னொரு கதை தொடங்க வேண்டும். இந்தச் சிறுகதை சரியான இடத்தில் முடிந்த பின்பும் ஆசிரியர் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பது அவசியமற்றதாக இருந்தாலும் சிங்கப்பூர் சிறுகதைகளில் தேர்வு பெற்ற சிறுகதை தொகுப்பு வந்தால் ‘விரல்’ சில மாற்றங்களுடன் இணைத்துக்கொள்ளக்கூடியதே.