வணக்கம் நவீன். நாம் அதிகம் பேசியிருக்கிறோம். இன்னமும் பேசவிருக்கிறோம். இக்கடிதத்தை எழுதுவதற்கு காரணம் உண்டு. நாம் வல்லினம் குழுவில் நண்பர்களுடன் தொடர்ந்து செயலாற்றிவருகின்றோம். ஆரோக்கியமான முறையில் அதற்கான பலன்களை நான் கண்டிருகின்றேன்; உணர்ந்திருக்கின்றேன். ஆனால் சமீபத்தில் வல்லினம் குழு குறித்தும் உங்களை குறித்தும் சில அவதூறுகள் வந்தவண்ணம் உள்ளன. எல்லா அவதூறுகளுக்கும் நாம் பதில் கொடுத்திட அவசியமில்லை என்று நம்புகின்றேன். நாம் நமக்கான செயல்பாடுகளை தொடர்ந்து செய்ய வேண்டியதுதான். அத்தகைய செயல்பாடுகளில் ஒன்றாகத்தான் நமது உரையாடல்களை இப்படி பதிவு செய்ய நினைக்கிறேன்.
சமீபத்தில் நானும் உங்களுடன் சிங்கப்பூர் வந்திருந்தேன். நமது வல்லினம் நண்பர்களின் புத்தகங்களை அங்கு வெளியீடு செய்தோம். நீங்கள் பாண்டியனும் எழுத்தாளர் விழாவின் உரையாற்றினீர்கள். அப்போதுதான் சிங்கப்பூரின் இலக்கியம் குறித்தும் அங்குள்ள படைப்பாளர்கள் குறித்தும் தெரிந்துக் கொண்டேன்.
இன்னும் சொல்லப்போனால், அங்கு நாம் சந்தித்த எழுத்தாளர் அழகு நிலா நம்மிடம் அவரது சிறுகதை நூலை கொடுத்து வாசிக்க சொன்னார். உங்களுக்கு முன்பாக அப்புத்தகத்தை படித்து நான் எழுதப்போவதாக கூறினேன். அப்போது நீங்கள் சிரித்தீர்கள். எனக்கு அதன் அர்த்தம் அப்போது புரியவில்லை. இன்றோடு நீங்கள் மூன்று சிங்கப்பூர் படைப்பாளர்களின் புத்தகங்கள் குறித்து எழுதிவிட்டீர்கள். நான் இப்போதுதான் அழகு நிலாவின் ‘ஆறஞ்சு’ சிறுகதை தொகுப்பை வாசித்து முடித்தேன்.
மீண்டும் உங்களின் அந்த சிரிப்பை நினைக்கையில் எனக்கு கொஞ்சம் அவமானம்தான். நீங்கள் இலக்கியம் மீதும் வாசிப்பு மீதும் காட்டும் தீவிரம்தான் உங்கள் மீது வசைகள் வர காரணமோ எனவும் தோன்றாமலில்லை. சரி இப்போது விடயத்துக்கு வருகிறேன். எப்போதும் உங்கள் கட்டுரைகள் முதலில் படித்துவிடுவேன். ஆனால் தற்போது இச்சிறுகதை தொகுப்பை படித்துவிட்டு, நான் இந்நூல் குறித்து என்ன நினைக்கிறேன் என்பதனை முடிவு செய்த பிறகே உங்களை ப்ளாக்கில் இருக்கும் அழகு நிலா சிறுகதைகள் குறித்த கட்டுரையைப் படிக்க முடிவெடுத்தேன். அப்போதுதான் நான் எதனை புரிந்துக் கொண்டேன் , கதையை எவ்வாறு அணுகுகின்றேன் என என்னால் அறிந்துக் கொள்ள முடியும் என முடிவெடுத்தேன். அதன் படி இப்போது உங்களின் கட்டுரையை படித்துவிட்டேன். எனக்கு தோன்றுவதையும் நான் புரிந்து கொண்டதையும் உங்களுக்கு இதன் வழி எழுதுகிறேன். படிக்கவும். இதன் மூலம் நாம் உரையாடலை நிகழ்த்தலாம். எனது ரசனைக்கும் என் புரிதலுக்கும் பயனாக அமையும்.
வேர்க்கொடி, உறவு மயக்கம், தோன்றாத் துணை, பங்பங், ஒற்றைக்கண் ஆகியவை சிறுகதைகள் அல்ல ; நன்னெறி சொல்லும் கதைகள் என சொல்லியுள்ளீர்கள். இக்கதைகளை படிக்கையில் நானும் அவ்வாறுதான் உணர்ந்தேன். ஆனால், ‘பங்பங்’ கதையும், ஒற்றைக்கண் கதையும் மெருகேற்றம் காணவேண்டிய கதைகளாக படுகின்றன. நன்னெறி சொல்வதில் இருந்து கொஞ்சம் நகர்ந்திருந்தாலே இவ்விரு கதைகளும் தனித்து தெரிந்திருக்க வாய்ப்புண்டு.
ஒற்றைக்கண் – குற்றவுணர்வுகொண்ட ஒருவன் , அதனை ஈடுகட்ட எதையாவது செய்து மனதை திருப்தி கொள்ள நினைக்கிறான். ஆனால், மனம் திருப்தியடைவதும் மீண்டும் குற்றவுணர்வுக்குச் செல்வதும் அதனதன் தன்மைக்கு ஏற்ற வகையில் மாறுபடுகின்றன. இக்கதையில் இன்னமும் ஆழமாக சொல்லப்படவேண்டியவை சில வார்த்தைகளில் கடந்து சென்றுவிடுகின்றன. அதிலும் கதைக்கு ஆதாரமான இருக்கவேண்டிய கடைசி வரியில் ‘ஒற்றைக்கண் பூனை’ என்று முடித்திருக்க வேண்டும். கடைசி வாக்கியங்களின் தேவையற்ற பூனையின் வர்ணனையில் அக்கதையின் முடிவில் ஏற்படவேண்டிய தெளிவு தடைபடுகிறது.
பங்பங் – நான் ரசித்த கதைகளில் ஒன்று. கடைசி பத்தியைத் தவிர்த்து வேறெங்கும் பங்பங் யார் என்பதை சொல்லாமல் இருந்திருந்திருக்க வேண்டும். அது இக்கதையின் சுவார்ஷ்யத்தைக் கூட்டியிருக்கும். இதுதான் பங்பங் என தெரிந்த பின் இக்கதையில் வாசிக்க ஒன்றுமில்லாமல் போய், அண்டை அயலார்கள் ஏன் தேவை என போதிக்க முனைகிறது. இயல்பாகவே அழகு நிலாவிற்கு தன் சிறுகதைகளை எங்கே முடிக்கவேண்டும் என தெரிகிறது ஆனால், சந்தேகத்தின் பெயரின் தேவையின்றி எதையெதையோ முடிவில் இணைத்துவிடுகின்றாறோ என தோன்றுகிறது.
பச்சை பெல்ட் – சாதாரணமாக தமிழ்ப்படங்களில் வரும் கடைசிநேர போலிஸ்காரர்களை நினைக்க வைக்கிறது. கதை எங்கோ தொடங்கி எங்கோ சென்று, எங்கோ முடிவடைய முயற்சிக்கிறது. கடைசியில் தெரியும் ‘பச்சை பெல்ட்’, நாயகனுக்கு தொடக்கத்தில் நாசுக்காகவாகவும் தெரிந்திருக்க வேண்டும். அப்பா மகனை நினைவுப்படுத்த எதுவுமில்லாத வீட்டில் அப்பாவின் ,மரணம் எல்லாவற்றையும் நினைவுப்படுத்தும்தான் ஆனால் அதனுள் இருக்கவேண்டிய சூசகத்தன்மை இல்லாதது கதையை தட்டையாக்கிவிடுகிறது. சொந்த ஊரை விட்டு வெளியூர்களுக்குச் செல்பவர்களின் கதைதான் இத்தொகுப்பில் அதிகம் என்றாலும் அதனை அப்படியே சொல்ல முயன்றிருக்கிறார் ஆசிரியர்; பாராட்டுகள். ஆனால் வெறும் காட்சிகளும் காலை நேர அவசரமும் ரயிலுக்கான காத்திருப்புமே போதுமென்று நின்றிருக்க வேண்டாம்.
சுடோக்கு – இக்கதையில் ஆசிரியர் சொல்ல வருவதை என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. கதை அந்தரத்தில் இருப்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. ஒருவேளை, கதையின் முடிவு வாசகர் கையில் என ஆசிரியர் நினைத்திருக்கலாம். ஆனால் அதற்கான இடைவேளியை அவர் ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
ஆறஞ்சு – இக்கதையின் தலைப்பைத்தான் புத்தகத்தின் தலைப்பாக ஆசிரியர் வைத்திருக்கிறார். ஆனால் அதன் அட்டைப்படத்தில் 5…6… என இருக்கிறதே..? அதனை 6…5… என வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்குமே.? மாணவன் தனது கதையை சொல்வதாக கதை நகர்கின்றது. மாணவர்களுக்கான கதையை சிலவாறாக நான் பார்க்கிறேன். முதலாவது மாணவன் தன் மொழியில் சக மாணவனுக்கு கதை சொல்லுதல், அடுத்தது மாணவன் தன் மொழியில் எல்லோருக்கும் கதை சொல்லுவது அடுத்ததாய் ஆசிரியர் தன்னை மாணவனாக நினைத்துக் கொண்டு கதை சொல்வது. ஆறஞ்சு கதையில் ஆசிரியர் மூன்றாவதை செய்திருக்கிறார். மாணவனின் உளவியலை சேர்த்திருந்தால் கதை தனித்தி தெரிந்திருக்கும். இக்கதையில் கையாலப்பட்ட அங்கம் இப்போதும் என்னை சிரிக்க வைக்கிறது. உதாரணம் , ‘எல்லா பாடத்திலும் ஏ ஸ்டார் எடுத்துட்டு ஒரே ஒரு பாடத்தில் மட்டும் ஏ எடுத்துட்டு சுஜாதா ஓன்னு அழுதாள். நாம் எல்லாத்துலயும் சி கிரேட்தான் எடுத்திருந்தேன். அதை பார்த்துட்டு அம்மா அழுதாங்க….’
பெயர்த்தி, அவள் அவன் அவர்கள், சிதறல்கள் ஆகிய இரண்டு கதைகளிலும் நீங்கள் சொல்வதை ஒப்புக்கொள்கிறேன்.
அலையும் முதல் சுடர் – இக்கதையை குறித்து நீங்கள் சொல்வது எனக்கு ஆச்சர்யத்தை கொடுக்கின்றது. உண்மையில் இக்கதையை படித்த பின் தொகுப்பில் உள்ள மற்ற கதைகளை படிக்கலாமா என சந்தேகித்தேன். என்னைக்கேட்டால், இத்தொகுப்பில் தேவையற்ற கதையாகவே இதனை பார்க்கிறேன். ஏற்கனவே சொல்லப்பட்டதை திரும்ப சொல்லலாம் ஆனால் அந்த திரும்ப சொல்லுதலில் இருக்கும் தனித்தன்மைதான் முக்கியம் என நம்புகிறேன். காக்கா வடை கதை எல்லோருக்கும் தெரிந்த கதைதான், அக்கதையை அப்படியே சொல்லி கதையில் காகம் பாடுவதற்கு முன் வாயில் இருந்த வடையில் காலில் பிடித்துக்கொண்டது. நரி ஏமாந்தது என முடிக்கும் போது என்னதான் தெரிந்த கதையாக இருந்தாலும் அக்கதையை தனித்து காட்டுகிறது. இக்கதையில் அப்படியான முடிவும் இல்லை. வெறுமனே தருமன் பார்வையில் கதை நகர்வதாக கொண்டாலும் அதில் முழுமை பெறவில்லை.
‘பொழுதின் தனிமை’ – கதையில் மூன்று தலைமுறை காட்டப்படுகின்றது, அதிநவீன வசதிகள் குறித்து அறிந்திடாதவர்கள், அதனை தேவைக்கேற்ப பயன் படுத்துபவர்கள், அதைவிட புதிதாக வந்திருப்பதை பயன்படுத்துகின்றவர்கள் என கொள்ளலாம். முறையே பாட்டி, அம்மா, பேத்தி. இக்கதையை இன்னமும் செறிவாக்கியிருக்கலாம். வெவ்வேறு சூழலில் வாழ்ந்த, வாழுகின்றவர்களை ஒரே கதைக்குள்ளே கொண்டுவரும் வாய்ப்பு இக்கதையில் கிடைத்திருந்த்து. சரியாகவே அதனை பயன்படுத்தியிருந்தார் ஆசிரியர்.
மொத்ததில் கதைக்கான எல்லா கதைகளும் ஆசிரியர் தெரிந்திருக்கின்றார். அதனை கதையாக்குவதற்கான பயிற்சியினை வாசிப்பின மூலமும் தனக்கு வரும் விமர்சனம் மூலமும் பெற்றுவருகிறார். இன்னும் அவரிடம் இருந்து வெவ்வேறு வகை படைப்புகளை எதிர்ப்பார்க்கின்றேன்.
ஆசிரியர் அழகு நிலாவிற்கு ; இக்கேள்வியின் வழி எனது ரசனையையும் வாசிப்பையும் மேம்படுத்துவதுதான் நோக்கம். உங்கள் தொகுப்பை விமர்சித்து எனது விமர்சன அறிவை காட்டுவது அல்ல. நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். உங்கள் அடுத்தடுத்த படைப்புகளுக்கு வாழ்த்துகள்.
சரி, நவீன் நான் சொல்லவந்தை சொல்லிவிட்டேன். ஏதும் தவறிருந்தால் சுட்டிக்காட்டவும். நீங்கள் கேட்டுகொண்டதற்கு இணங்க புத்தகத்தை முழுதும் படித்து முடித்த பிறகுதான் இதனை உங்களுக்கு எழுதியிருக்கிறேன். உங்களின் பதிலை எதிர்ப்பார்க்கிறேன். நன்றி..
இப்படிக்கு தயாஜி