‘காத்திருப்பதும் சுமப்பதும் காயப்படுவதும் இதழுக்காகத்தான் என்றால் எனக்கு அது சம்மதமாகவே இருந்தது.’
வணக்கம் நவீன். இணையத்தில் சிற்றிதழ் தேடித் தேடி, பித்துப்பிடித்து அலையும் கிருஷ்.ராமதாஸ், துபாய் (பெரம்பலூர், தமிழ்நாடு) எழுதுவது. நல்வாழ்த்துகள். நான் மேலே குறிப்பிட்டுள்ளதைப் போல இணையத் தேடலின் போது ‘ஜெயமோகனுக்கு எதிர்வினை’ என்ற தலைப்பைப் பார்த்த உடன் உங்கள் இணையப் பகுதியில் மேய்ந்து கொண்டிருக்கிறேன். ஏன் மேய்ந்து என்ற வார்த்தை? உண்மை அதுதான். நான் இலக்கியவாதி இல்லை. எழுத்தாளன் இல்லை. ஆனால் 1980களில் இருந்து சிற்றிதழ்களின் மீது அளவற்ற பிரியமும், வெறியும் கொண்டவன். எப்படி அவை என்னை ஈர்த்தன என்று இன்றளவும் விடை காண முயற்சிக்கிறேன்.
அந்த காலக்கட்டத்தில் நான் சமூக சேவையாளனாக இருந்தேன். நிறைய பயிற்சிகளுக்கு ஆலோசனைக் கூட்டங்களுக்குப் போவேன். அப்போது மதுரையில் சோக்கோ அறக்கட்டளை பயிற்சியில் கலந்து கொண்ட ஞாபகம். அதன் நிறுவனர் முகம்மது பாட்சா அவர்கள் ‘நிஜங்கள்’ என்ற சிற்றிதழ் நடத்தி வந்தார். அப்போது அங்கே இருந்த இதழ்தான் என் பார்வையை சிற்றிதழ் பக்கம் திரும்பியது. அதன் அட்டைப் படத்தில் பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத் படம் இருந்தது. அது முதல் சிற்றிதழ்களை வாங்கவும் , சேகரிக்கவும் ஆரம்பித்தேன். அப்போது கடிதம் மூலம் சிற்றிதழ் தங்கச் சுரங்கமாக செயல்படும் திரு.பொள்ளாச்சி நசன் அறிமுகம் கிடைத்தது. அவரைக் கண்டு இன்றளவும் பிரமித்து போயிருக்கிறேன். சுமார் 36000 இதழ்களை ஆவணப்படுத்தி உள்ளார். ஆனால் பல வாடகை வீடுகள் மாறி மாறி என் சேகரிப்புகளை இழந்துவிட்டேன். விதி வசத்தால் பணம் தேடி துபாயில் கடந்த 15 ஆண்டுகளாக இருந்து வருகிறேன். தற்போது கடந்த 3 வருடங்களாக இணையத்தின் உதவியுடன் சிற்றிதழ் உலகை அலசுகிறேன்.
காத்திருப்பதும், சுமப்பதும், காயப்படுவதும் இதழுக்காகத்தான். இந்த வார்த்தை இதயத்தை துளைத்து, உணர்ச்சி மேலிட வைக்கிறது. ஆம். இதேதான் வேறு நண்பர் எழுதி இருந்தார். ஒவ்வொரு இதழையும் உருவாக்கும் போது ஏற்படும் பிரசவ வேதனையைப் போன்றது. இந்த இதழோடு நிறுத்திவிட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். இதழ் வெளியிட்டு வாசகர்களிடமிருந்து வந்த கடிதம் படிக்கும்போது அந்த வேதனை எல்லாம் பறந்து போய் புதிய இதழுக்கான வேலையைத் தொடங்கிவிடுவேன் என்று எழுதி இருந்தார். இதுதான் எதார்த்தம். உங்கள் அனுபவங்கள் வியக்க வைக்கின்றன. இதழியல் துறையில் நீங்கள் கொண்டுள்ள ஈடுபாடு எனக்கு வியப்பு, மகிழ்ச்சி, அளவில்லா ஆனந்தத்தை ஏற்படுத்தி உள்ளது. காதல், வல்லினம், பறை, யாழ் – ஆஹா உங்கள் தொடர் பயணம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. வாழ்த்துகள் நவீன். இந்த இதழ்களை ஆவணப்படுத்தி உள்ளீர்களா? இந்த இதழ்களின் ஒரு பிரதி எனக்கு கிடைக்கும் வாய்ப்பு இருக்குமா? வாழ்த்துகள்.
கிருஷ்.ராமதாஸ்
அன்பு நண்பர் கிருஷ். ராமதாஸ். முதலில் உங்கள் கடிதத்திற்கு நன்றி.
சிற்றிதழ்கள் மேல் உங்களுக்கு ஆர்வம் வந்ததில் ஆச்சரியம் இல்லை. வாசிப்பைப் பொழுதுபோக்காகக் கருதாத எவரும் வந்து சேரும் இடம் அதுதான். வல்லினம் எட்டு இதழாக அச்சில் வந்தது. அதன் இணைப்பு : http://www.vallinam.com.my/previous_issues.html
‘பறை’ இதழை மிக விரைவில் முழுமையாகப் பி.டி.எப் முறையில் வல்லினம் தளத்தில் பதிவேற்றுவேன். வல்லினம் இணையத்தளத்திலும் பறையில் வந்த பெரும்பான்மையான கட்டுரைகள் உள்ளன.
உங்கள் ஆர்வத்தை எப்போதும் குறைத்துக்கொள்ளாதீர்கள். முடிந்தால் அரிய இதழ்களை சேகரிப்பில் வைத்திருங்கள். அவற்றை மின் இதழ்களாக (digitalized) மாற்றுவதன் மூலமே அவற்றின் ஆயுள் காலத்தை அதிகரிக்க இயலும். நம்மவர்கள் பலர் தங்கள் காலத்துக்குப் பின் ஒரு தலைமுறை வாழும் என்ற நம்பிக்கையை இழந்துவிடுகின்றனர் போல. அண்மையில் சென்னையில் வந்த வெள்ளம் எத்தனை அரிய ஆவணங்களை அழித்திருக்கும் என நினைத்துப்பார்க்கிறேன். உங்களைப் போன்ற ஆர்வளர்கள் ஏதாவது ஒரே ஒரு சிற்றிதழ் தொகுப்பை மின்னூலாக்கும் முயற்சி செய்தால் அது பெரும் கொடையாகத் தமிழ்ச்சூழலில் அமையும். அரசோ, பணமுள்ள எந்த அமைப்பும் இதையெல்லாம் செய்யப்போவதில்லை.
அப்படித்திட்டம் இருந்தால் சொல்லுங்கள். கிடைப்பதற்கு அறிய ஒரு இதழிலிருந்து முயற்சியைத் தொடங்கலாம். லாபநோக்கமற்று இயங்கும் யாருடனும் இணைந்து பணியாற்ற நான் தயாராகவே இருக்கிறேன்.
ம.நவீன்