நெடுநாள் வருகை செய்யாத வனத்தில்
விட்டுச்சென்ற மரங்கள்
பழைய அன்புடன் நலம் கேட்டன.
கொடிய இருள் குறைந்து
ஆங்காங்கு புதிதாய் அமைக்கப்பட்ட கூடாரங்களில் குரங்குகள்.
ஆச்சரியமாக கைத்தொலைப்பேசியில்
சிக்னல் கிடைக்கிறது.
அதற்குமேல் பாதை இல்லாத
மைய வனத்தில்
யாரேனும் அலுவலகம் நடத்திக்கொண்டிருப்பார்களோ
என்ற அச்சம் தன்னிச்சையாக எழுவதை சொன்னபோது
மாயா உறக்கத்தில் இருந்தாள்.
***
யாருமற்ற வனத்தின் மையத்தில்
என் மரணம் குறித்து
யோசித்துக்கொண்டிக்கிறேன்.
எல்லாருடைய மரணம் போலவே
அது சில மாதங்களுக்குப் பின்
மிகச்சிறிய தீக்குச்சி சுடர்போல
சட்டென எழுந்து
பின் உடனே அமையும் என
சொன்ன மாயா
மீண்டும் உறங்கிப்போனாள்
***
காதுகளை மூடியப்பின்பும்
ஒரே ஒரு குரல் கேட்கிறது
நான் அந்த ஓசையை
நிறுத்த எண்ணி காதுகளை அறுத்தேன்
ரத்தம் அடைத்து காதுகளில் கண்ணீர் வந்தபோதுதான்
காது மட்டும் சத்தத்தை கேட்கும் உறுப்பல்ல என மாயா
எனக்குள் இருந்து சொல்லியப்பின்
மீண்டும் உறங்கியே போனாள்.
***
இத்தனை நாள் எங்கிருந்தாய்
என கண்ணீருடன் கேட்டது
அந்தச்சின்னஞ்சிறிய செடி
அந்தக் கேள்வியைத் தவிர்த்தபடி
இத்தனைக்காலத்தில்
நீ ஏன் இன்னும் வளரவில்லை என்றேன்
இருந்தாலும் நீ வந்ததில் மகிழ்ச்சி என
அதுவும் வேறு பதிலைச்சொல்லி மகிழ்ச்சியில் ஆடியது.
உறக்கதில் இருந்து தன்னை
எழுப்ப வேண்டாம் என மாயாவும்
சம்பந்தம் இல்லாமல் முணகினாள்.
***
திரும்பும் போது
மீண்டும் எப்போது வருவாய்
எனக்கேட்டது வனம்.
நான் பதில் தெரியாமல்
மாயாவைப் பார்த்தேன்.
நீ விட்டுச்சென்ற இடத்தில்
காலங்களை விழுங்கி
காத்திருப்போம் என்றது மீண்டும்.
நான் மாயாவின் நெற்றியில்
முத்தமிட்டபோது
அவள் இட ஓர உதட்டை மேலே உயர்த்தி
சம்மதம் சொன்னாள்
உறங்கிக்கொண்டே.