“திருட்டுத்தனத்தைப் போதிக்கும் தமிழ்ப்பள்ளிகள்” – உதயசங்கர் எஸ்.பி

UthayaSBநம் நாட்டில் பல புத்திஜீவிகளுக்குத் தூங்கி எழுந்தவுடன் சட்டென ஞானம் பிறந்து உளறுவதைப் பார்த்துள்ளேன். அப்படிச் சமீபத்திய உளரல்களில் முக்கியமானது தமிழ்ப்பள்ளியை இந்நாட்டில் இல்லாமல் ஆக்கிவிட்டு தேசியப்பள்ளி என்ற ஒற்றை அடையாளத்துடன் இயங்குவது. அதன் மூலம் தேசியப்பள்ளிகளில் தமிழைக் கட்டாயப்பாடம் ஆக்குவது. அப்படியே இந்நாட்டில் தமிழை வளர்த்துவிடுவது.

நான் இவர்களிடம் எப்போதுமே சில அடிப்படையான கேள்விகளை முன்வைத்துள்ளேன்.

1. தேசியப்பள்ளிகளில் தமிழைக் கட்டாயப்பாடம் ஆக்கும்பட்சத்தில் இப்போதிருக்கும் தமிழ்மொழியின் தரம் தேசியப்பள்ளியிலும் நிலைக்குமா? அல்லது இன்று தேசியப்பள்ளிகளில் போதிக்கப்படும் தமிழைப் போல எளிமைப்படுத்தப்படுமா? அவ்வாறு எளிமைப்படுத்தப்படுவதில் சம்மதமா?

2. தேசியப்பள்ளி என்றால் அதில் தலைமை ஆசிரியர்கள் முதல் துணைத்தலைமை ஆசிரியர் என அனைத்து வகையான பொறுப்புகளும் பாராபட்சம் இல்லாமல் அனைத்து இனங்களுக்கும் வழங்கப்படுமா? அல்லது மலாய்ப் பள்ளி அடையாளத்துடன் இப்போதிருக்கும் தேசியப்பள்ளிகள் போலவே இயங்குமா? இப்போதிருக்கும் 300க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் அதே பதவியில் நிலைநிறுத்தப்படுவார்களா? தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் உள்ளிட்ட அரசாங்கப்பதவிகள் பாராபட்சம் இன்றி தேசியப்பள்ளியிலும் எண்ணிக்கைக் குறையாமல் வழங்கப்படுமா?

3. அறிவியல், கணிதம், நன்னெறி, வரலாறு போன்ற பாடங்களில் உள்ள கலைச்சொற்களை ஒரு தமிழ்மாணவன் அறிய வேறு வழிகள் ஏதேனும் உண்டா? அல்லது அவற்றை அறிய வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறீர்களா?

4. மலாய்ப்பள்ளிகளில் இஸ்லாமிய சமய விழாக்கள் கொண்டாடப்படுவது போல மலேசியாவில் சீனர்கள் மற்றும் இந்தியர்கள் தத்தம் விழாக்களைத் தேசியப்பள்ளிகளில் தடைகள் இல்லாமல் கொண்டாட வாய்ப்புண்டா?

5. தேசியப்பள்ளியில் தமிழ்ப்பாடம் மட்டும் தமிழில் போதிக்கப்படும்போது இதரப்பாடங்களுக்கு நூல் எழுதியவர்கள், பயிற்சி புத்தகம் தயாரித்தவர்கள் என அதைச்சுற்றி உருவாகியிருக்கும் பொருளாதார வலை பாதிப்பதில் உங்களுக்குச் சம்மதம் உண்டா? அந்த அச்சகம் மற்றும் பதிப்புரிமை தமிழர்களிடமிருந்து கை மாறும் என்ற பிரக்ஞை உண்டா?

இதில் இன்னும் விவாதிக்க நிறைய உண்டு என்றாலும் இப்போதைக்கு இதுபோதுமானது. தமிழ்ப்பள்ளிகளுக்கு மூடுsem விழா செய்ய முற்போக்கு எனச் சொல்லிக்கொண்டு உளறுபவர்கள் மத்தியில்தான் உதயசங்கரும் இணைந்துகொண்டுள்ளார். நேற்று The Malaysian Insider வலைத்தளத்தில் அவர் எழுதிய கட்டுரை ஒன்று இடம்பெற்றிருந்தது. (Persoalan kempen ‘SJKT Pilihan Kita) எனும் தலைப்பிடப்பட்டிருந்த அக்கட்டுரை இதுவரை தமிழ்ப்பள்ளிகள் மேல் மறைமுகமான கசப்பை உமிழ்ந்துகொண்டிருந்த மேட்டுக்குடியினரின் ஒட்டுமொத்த முகச்சுளிப்பாகவே பார்க்கமுடிகிறது.

உதயசங்கரின் எழுத்து எப்போதும் ஆய்வு அடிப்படையில் உள்ளதல்ல. அதை நான் பொருட்படுத்துவதும் இல்லை. மலேசியாவில் அவதூறுகள் எழுதுவது மூலம் அடையாளம் காணப்படுபவர்களில் அவர் முக்கியமானவர். பெரும்பாலும் அவர் கட்டுரைகளில் ‘நான் கேள்விப்பட்டேன்’,’என்னிடம் கூறினார்கள்’, ‘என் அனுபவத்தில்’ என ஆதாரங்கள் இல்லாத மூலங்களில் இருந்து கதையைக் கட்டமைப்பார். இந்தக் கட்டுரையில் அவர் அவ்வாறு முன்வைத்துள்ள சில விடயங்களை இவ்வாறு பட்டியலிடலாம்.

  • நான் தமிழ்ப்பள்ளியில் பயின்று யூ.பி.எஸ்.ஆரில் ‘ஏழு ஏ’ எடுத்த சில இடைநிலைப்பள்ளி மாணவர்களைச் சந்தித்தேன். அவர்கள் இடைநிலைப்பள்ளிக்குச் சென்றதும் அவர்கள் அடைவு நிலைகள் படு மோசமாக உள்ளன.
  • அவர்களில் பலர் இடைநிலைப்பள்ளி சோதனையின் போது காப்பியடித்ததால் மாட்டிக்கொண்டு நெறிவுரைஞரிடம் அனுப்பிவைக்கப்படுகின்றனர்.
  • ஒன்றாம் ஆண்டு முதல் காப்பியடிப்பது ஏமாற்றுவது என எதை செய்தாவது தேர்ச்சி அடைய தமிழ்ப்பள்ளிகளில் அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கப்படுகிறது. இதை இடைநிலைப்பள்ளியில் அமுலாக்க முடியாமல் மாட்டிக்கொண்டு விழிக்கின்றனர்.
  • என்னிடம் யு.பி.எஸ்.ஆர் தேர்வில் 7 ஏ எடுத்ததோடு போட்டி விளையாட்டிலும் சிறப்பான அடைவுநிலையை அடந்த மாணவனின் பெற்றோர், தன் மகனை நல்ல இடைநிலைப்பள்ளியில் இணைக்க முடியாமல் உதவி கேட்டனர். இடைநிலைப்பள்ளி நிர்வாகம் அவர்களை மறுக்கிறதாம். நான் மலேசிய வானொலிகள், துணை அமைச்சர் கமலநாதன், ம.இ.கா போன்றவற்றிடம் உதவி கேட்கச் சொன்னேன். அவர்கள்தானே கட்டாயம் தாய்மொழிப்பள்ளிக்கு அனுப்பும் பிரச்சாரங்களைச் செய்கின்றனர்.
  • 1993 முதல் நடப்புச்சூழலை அவதானித்து வரும் நான் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இடைநிலைப்பள்ளிகளில் மலாய்மொழியில் பேச திணருவதை உணரமுடிகிறது.
  • நான் அடிக்கடி இடைநிலைப்பள்ளி மற்றும் கல்லூரியில் உள்ள மாணவர்களைச் சந்திப்பதுண்டு. தமிழ்ப்பள்ளியில் இருந்து வந்த அவர்கள் தங்கள் தேர்ச்சிக்குத் தமிழ்ப்பள்ளி மட்டுமே காரணம் அல்ல என அறுதியிட்டுக் கூறியுள்ளனர்.

இப்படி நீள்கிறது உதயசங்கரின் உளரல்கள். “தமிழ்ப்பள்ளியே எனது தேர்வு” எனும் இயக்கத்தை விமர்சிப்பதாக எழுதப்பட்ட இக்கட்டுரை தமிழ்ப்பள்ளிகளையும் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களையும் ஒட்டுமொத்தமாக சிறுமைபடுத்தவே முனைகிறது என யார் படித்தாலும் அறிவர். ஆனால் மிக நாசுக்காக தனது கோபம் இனத்தைப் பிரித்தாலும் அரசியல்வாதிகள் மீதென கலண்டுக்கொள்கிறார். இதுவும் உதயகுமார் எஸ்.பி அடிக்கடிச் செய்வதுதான்.

அரசியல்வாதிகள் மீதுதான் அவரது கோபம் என்றால் அவர் தமிழ்ப்பள்ளிகளின் கல்விதரம் குறித்தோ ஆசிரியர்களின் நேர்மை, நம்பகத்தன்மை குறித்தோ எழுதவேண்டிய அவசியம் இல்லை. அந்த அறிவும் அவரிடம் இல்லை என்றே நினைக்கிறேன்.

காப்பியடிப்பதால் நெறிவுரைஞரிடம் அழைத்துச்செல்லப்படும் நாடுமுழுவதிலும் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை விபரம் ஏதும் ஆய்வு செய்யப்பட்டுள்ளதா? யூ.பி.எஸ்.ஆரில் சிறப்புத்தேர்ச்சி பெற்ற எல்லாவகை பள்ளிகளிலும் உள்ள மாணவர்களின் அடைவு நிலை இடைநிலைப்பள்ளியில் என்னவாக மாறியுள்ளது என்ற கணக்கெடுப்பு அவரிடம் உண்டா? எதுவும் இல்லை. உள்ளதெல்லாம் சுய அனுபவங்கள் அல்லது யாரோ அவருக்குச் சொல்லிவிட்டு சென்ற புலம்பல். இதுதான் அவர் எழுத்தின் ஆதாரம். இந்த எழுத்தை வைத்துதான் அவர் பிழைப்பு ஓடுகிறது. இதில் தமிழ்ப்பள்ளியில் படித்தால் நல்ல இடைநிலைப்பள்ளி கிடைக்காது என்ற அவரது அற்பமான எச்சரிக்கை தொணியையும் கவனிக்க வேண்டியுள்ளது.

எந்த ஆய்வும் இன்றி போகிற போக்கில் தமிழ்ப்பள்ளிகள் மேல் எச்சில் துப்பிவிட்டு போகும் உதயசங்கர் எஸ் பி யின் கூற்றுகளை நாம் மிகச் சுலபமாக தகர்க்க முடியும். தமிழ்ப்பள்ளியில் கற்று உயர்நிலைக் கல்விவரை உயர்ந்துள்ள பல மாணவர்களை பட்டியலிட நம்மால் முடியும். அதே போன்று, மலாய்ப் பள்ளியில் பயின்றும் கல்வியில் தோல்விகண்ட பல மாணவர்களையும் குற்றச்செயல்களில் சிக்கி தண்டனை பெரும் மாணவர்களையும் சுட்டிக்காட்ட முடியும். ஆனால் உதயசங்கர் எஸ் பிக்கு அதெல்லாம் ஒரு பொருட்டல்ல. தமிழ்ப்பள்ளிகள்தான் சமுதாய சீரழிவிற்கு காரணம் என்ற தோற்றத்தை உண்டுசெய்வது மட்டுமே அவர் நோக்கம்.

உதயசங்கர் எஸ்.பி சொல்லும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொதுவாக ஆதாரமற்றவை. பல அவதூறானவை. அவர் அனுபவத்தில் அவருக்குத் தெரிந்தவர்களை மட்டும் வைத்து சொல்லும் நியதிகள் சமூகத்துகானதாகிவிடாது. அதேபோல் 2014ல் தேர்வுக்கு முன்பே கசிந்த யூ.பி.எஸ்.ஆர் சோதனைத்தாள்களில் தேசியப்பள்ளியுடையவையும் அடக்கம் என்பதை நினைவில் நிறுத்த வேண்டும். ஒரு தேசியப்பிரச்சனையை ஒரு சமூகத்தின் தலையில் மொத்தமாக சுமத்தி அச்சமூகத்தை பிரச்சனையாகக் காட்டி கீழ்மைப்படுத்துவதுதான் உதயசங்கர் எஸ்.பி போன்றவர்களின் அரசியல்.

உதயசங்கர் எஸ்.பி ‘காவியன்’ எனும் அமைப்பை வைத்துள்ளார். அதன் மூலம் பல தமிழ்ப்பள்ளிகளில் மலாய் இலக்கியம் சொல்லித்தருவதாக நுழைகிறார். அவரை அனுப்பதிப்பது குறித்து பள்ளி நிர்வாகம் இனியாவது யோசிக்க வேண்டும். ஏதோ ஒரு நடவடிக்கை நடத்தினால் போதுமானது என கண்டவர்களை தமிழ்ப்பள்ளியில் நுழையவிடும் போக்குத் தொடருவது நம் சுயமரியாதை மீது நாமே காரி உமிழ்வதற்குச் சமம்.

(Visited 1,908 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *