பிபிசி தமிழோசையில் நேர்காணல்: மலாயா தமிழ் நூலகம் படிப்படியாக மூடப்படுமா?

OLYMPUS DIGITAL CAMERA

பி.பி.சி தமிழோசையில் மலாயா பல்கலைக்கழகத் தமிழ் நூலகத்தின் நிலை குறித்து நேர்காணல் செய்தார்கள். கீழே அதன் இணைப்பு உள்ளது.

பிபிசி தமிழோசை நேர்காணல்

இனி கொஞ்சம் விரிவாக…

தமிழுக்கான அடையாளங்களாக மலேசியாவில் மிகச்சொற்பமான தடையங்கள் எஞ்சியிருக்கும் சூழலில் அவை திட்டமிட்டோ / திட்டமிடப்படாமலோ ஆதிக்க சக்திகளால் கொஞ்சம் கொஞ்சமாக தகர்க்கப்பட்டே வருகிறது. ஒரு சட்டம் அமுலாக்கப்படும்போது அதன் இறுதி வடிவம் எவ்வாறு இருக்கும் என ஊகிக்க முடியாத நமது தலைமைத்துவங்கள் எல்லாவற்றுக்கும் மௌனமாக ஆமோதிக்க சிக்கல் பூதாகரமாகும்போது தும்பை விட்டு, வாலைப் பிடித்தக்கதையாக நாம் அறிக்கை விட்டுக்கொண்டிருப்போம்.

இவ்வாறு ஒரு சிறுமான்மைச் சமூகத்திடம் இருக்கவேண்டும் கூர்மையான அரசியல் விழிப்புணர்வற்று கேளிக்கைகளின் கனவுகளில் மிதந்திருக்கும் நமது கவனத்திற்குத் தப்பி நடைமுறைப்படுத்தப்பட்ட பாதகமான சட்டங்கள் ஏராளம். அதில் ஒன்றாகத்தான் இன்று மலாயா பல்கலைக்கழக தமிழ் நூலகத்தின் நிலையையும் பார்க்க வேண்டியுள்ளது.

அண்மைய காலமாக இந்நூலகம் எதிர்நோக்கிவரும் சிக்கல்களை இவ்வாறு பட்டியலிடலாம்:

அ. நான்காவது மாடியில் இயங்கும் இந்த நூலகத்திற்குச் செல்லும் பலுத்தூக்கி, மாணவர்கள் பயன்படுத்தத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் நான்காவது மாடிக்கு ஏறிச்சென்றே நூல்களை வாசிக்கின்றனர். வயது முதிர்ந்த அல்லது நோயுற்றவர்கள் நூலகத்தை உபயோகிக்கத் தவிர்த்துவிடுகின்றனர்.

ஆ. நான்காவது மாடியில் உள்ள நகல் இயந்திரம் இரண்டாவது மாடிக்கு மாற்றப்பட்டது. இதனால் நூலில் இருக்கும் ஒரு தாளை உபயோகிப்பது என்றாலும் படியைப் பயன்படுத்தியே மாணவர்கள் அலைச்சலுக்கு உள்ளாக நேர்கிறது. இதுவும் நூலகப்பயன்பாட்டைக் குறைக்கிறது.

இ. மலாயா பல்கலைக்கழக மாணவர்களைத் தவிர பிற அரசு கல்லூரி மாணவர்கள் நூலகத்தை உபயோகிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ் மாணவர்களின் எண்ணிக்கைக் கணிசமாகக் குறைந்துவிட்டச் சூழலில் (ஒரு வருடத்திற்கு 8 மாணவர்கள் மட்டுமே தேர்வு பெறுகின்றனர்) நூலகப் பயன்பாடும் இதனால் குறையும் என்பது திண்ணம்.

ஈ. பிற அரசு கல்லூரி மாணவர்கள் உபயோகிக்க கட்டணம் செலுத்தவேண்டியுள்ளது. பெரும்பாலும் தமிழை உயர்க்கல்வியாகக் கொண்ட பிற கல்லூரிகள் வெளிமாநிலங்களில் இருக்கும் பட்சத்தில் கட்டணம் என்பது கூடுதல் சுமையாகிறது. மேலும் வேறெந்த அரசு கல்லூரிகளிலும் இதுபோன்றதொரு தடை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடிப்படையான இந்தக் குறைபாடுகளால் தமிழ் நூலகத்தின் பயன்பாடு குறைந்து, நூலகம் கால ஓட்டத்தில் மூடப்படும் சாத்தியம் ஏற்பட பெரும் வாய்ப்புண்டு. இந்தச் சூழலில் கடந்த சில நாள்களுக்கு முன் ‘Sin Chew’ சீன தினசரியிலும் செம்பருத்தி இணைய இதழிலும் இந்தச்சூழல் தங்களுக்குத் பெரும் சிக்கலைத்தருவதாக மாணவர்களின் மனக்குமுறல் வெளிப்பட்டிருந்தது. அதற்கு பதில் கொடுத்த நூலக நிர்வாகம், “நூல்கள் காணாமல் போவதாலும் பழுதாவதாலும் தாங்கள் இந்த முடிவுக்கு வரவேண்டி இருந்தது” எனக்கூறியுள்ளது. இந்தப் பதில் ஆதாரமற்றது. காரணம் நூலகம் தோறும் நடக்கக்கூடிய பொதுவான சிக்கலே இது. இதை தகுந்தமுறையில் களைய நிர்வாகம் புதியத்திட்டங்கள் மூலம் அணுகியிருக்க வேண்டுமே தவிர மாணவர்களைத் தண்டித்திருக்கக் கூடாது. எப்படியாயினும் இது கால ஓட்டத்தில் தமிழ் நூலக மூடுவிழாவுக்குக் கொண்டுச்செல்லும் என்பது உறுதி.

மலாயா பல்கலைக்கழகத்தில் இயங்கும் இந்தத் தமிழ் நூலகம் கோ.சா முயற்சியில் மக்களிடமிருந்து பணம் திரட்டப்பட்டு உருவானது. அதேபோல கடந்த காலங்களில் ‘மலேசியானா’ திட்டத்திற்காக மக்களிடம் இருந்தே நூல்கள் பெறப்பட்டன. ஆக இது ஒருவகையில் மலேசியத் தமிழ் மக்கள் உழைப்பால் உருவான நூலகம். அது பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படாவிட்டாலும் மலேசிய அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாகப் பயன்பட்டேலே போதுமானது.

(Visited 188 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *