சாகாத நாக்குகள் 5 : கடலைத் தாண்டிய கதைகள்

10-20130817-singlit-101குடிபெயர்தலைக் குறிக்க மைக்ரேஷன் (migration), டிஸ்ப்ளேஸ்மெண்ட் (displacement) என்னும் இரு சொற்களும் கையாளப்படுகின்றன. மைக்ரேஷன் (migration) என்பது ஒரு நாட்டைவிட்டு இன்னொரு நாட்டுக்குக் குடி பெயர்தல். டிஸ்ப்ளேஸ்மெண்ட் (displacement) என்பது ஒரே நாட்டுக்குள் நிகழும் இடப்பெயர்ச்சி. இடப்பெயர்ச்சியைப் புலம்பெயர்தலாகக் காணக்கூடாது என்பது பன்னாட்டு வரையறை.

‘’பதி எழு அறியாப் பழங்குடி மக்கள்’ என்ற வரி சிலப்பதிகாரத்தில் பிரபலம். நகரத்தைவிட்டு மக்கள் இடம்பெயராமல் இருப்பதே சிறப்பாக எண்ணப்பட்ட காலத்தில் நாடுவிட்டு நாடு செல்பவர்களை அக்காலத் தமிழர் மதிக்கவில்லை.

‘கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள்’

கலந்தினி துறையும் இலங்குநீர் வரைப்பு’ எனும் வரியில் அயல்நாடுகளிலிருந்து வந்த கப்பலோட்டிகளை ‘மாக்கள்’ எனக்கூறுவதைக் காணலாம். இவ்வாறான சமூக மதிப்பீடுகளையெல்லாம் தகர்த்து தமிழ்மக்கள் ஒவ்வொரு காலத்திலும் புலம் பெயர்ந்துகொண்டேதான் இருக்கின்றனர்.

1960களில் இருந்தே ஈழத் தமிழர்களின் புலம்பெயர்வு தொடங்கினாலும் 1983இல் இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தின் காரணமாகப் புலம்பெயர்ந்தோரால் படைக்கப்படும் இலக்கியங்களே புலம்பெயர்ந்தோர் இலக்கியமாக கருதப்படுகின்றன. இலக்கியப் புனைவுகளைத்தவிர சிற்றிதழ்கள், ஓவியம், குறும்படம், கூத்துக்கலை, தெருநாடகம் என பல்வேறுபட்ட இலக்கிய அமைப்புகளை ஏற்படுத்தி இலக்கியங்களுக்கான தனி அடையாளத்தை ஏற்படுத்தினர். அதாவது புலம்பெயர்ந்தோர்க்கான தனி கலை இலக்கிய அடையாளத்தை உருவாக்கும் தீவிரம் அவர்கள் மத்தியில் இருந்தது. அதை பிரக்ஞை பூர்வமாக வளர்த்தெடுக்கவும் முயலப்பட்டது.

ஆனால், தமிழகத்திற்கு ஆங்கிலேயர்களின் வருகையால் கங்காணிகளால் அங்குள்ள ஏழைமக்கள் பலர் மலேசியா, பிஜி போன்ற நாடுகளுக்குத் தேயிலை, ரப்பர் தோட்ட உழைப்பாளர்களாகக் கொண்டு செல்லப்பட்டதையே முதன் முதலாகப் புலம்பெயர்ந்த தமிழர்கள் எனக் குறிக்கமுடியும். 1786இல் பினாங்குத் தீவு ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் வந்த பின்பே தமிழர்களின் குடியேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 1833க்குப் பின்னரே அதிக அளவில் இந்தியர்கள், தமிழர்களின் குடியேற்றம் நிகழ்ந்துள்ளது. ப. சிங்காரம் எழுதிய ‘புயலிலே ஒரு தோணி’ புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றியதுதான். பினாங்கு தீவின் காட்சிகள் நாவலில் விரிவாகவே இடம்பெற்றிருக்கும். அகிலனின் ‘பால்மரக் காட்டினிலே’ நாவலும் புலம் பெயர்ந்தவர்களைப் பற்றியவைதான். வழக்கம்போலவே அகிலன் அந்நாவலில் ஆழமான மானிட வாழ்வைப் பேசாமல் ஜனரஞ்சகத்தன்மைமிக்கதாகவே படைத்திருப்பார். இன்று அந்நாவலுக்கு இலக்கிய மதிப்பு என ஒன்று இல்லை. அகதிகளாக விரட்டப்பட்டு மீண்டும் தாய்நாட்டுக்கு இடம்பெயர்ந்த பர்மாத் தமிழர்களைப் பற்றி மு. வ. ‘பெற்ற மனம்’ என்ற நாவலை எழுதியுள்ளார். இவையெல்லாம் புலம்பெயர்ந்தவர்களைப் பற்றி தமிழ்நாட்டில் உள்ள எழுத்தாளர்கள் எழுதியவை.

புலம்பெயர்ந்தோர் படைப்புகள் அவர்களின் தாய்நாடு குறித்த ஏக்கத்தையும், குடியேறிய நாடு அவர்களுக்கு அளித்துள்ள புதுவாழ்வில் சந்திக்கும் இடர்பாடுகளையும் விளக்கமாகக் கூறுகின்றன. இப்படைப்புகள் தாயகத்தின் உறவுகள், நினைவுகள் சார்ந்தும் புலம்பெயர்ந்தோர் பயணம், புகலிட அனுபவம், புகலிட வாழ்வு குறித்த தேடலையும் முன்வைக்கின்றன. புனைகதையில் குறிப்பாகச் சிறுகதைகளில் புகலிடவாழ்வுதரும் துயர் பதிவாகியுள்ளது. அப்புனைகதைகளின் பெரும்பகுதி நிஜமும் புனைவுமாக அமைந்துள்ளன. புனைவினை நீக்கிவிட்டால் அவை அனுபவப் பதிவாகிவிடும். ஆனால் நாட்டுப்புறப்பாடல்கள் அவ்வாறனதல்ல.

இரா.தண்டாயுதம் அவர்கள் தொகுத்த மலேசிய நாட்டுப்புறப்பாடல்களை மலேசியாவின் முதல் புலம்பெயர் இலக்கியத் தொகுப்பாகச் சொல்லலாம்.

காலையிலிருந்து மாலைவரை

மாடுபோல உழைக்கிறான்.

மண்வெட்டி வேலை செய்தான்

மூச்சு மூச்சா சாராயத்தைக் குடிக்கிறான்.

முச்சந்தியிலே நின்னுதானே முறைக்கிறான்.

முறைச்சிப்பார்க்கும் சனங்களை

இழுத்துப்போட்டு மிதிக்கிறான்.

போலிஸ்காரன் கொண்டுபோயி

கும்மாங்குத்து குத்துறான்என ஒருநாள் வாழ்வை சொல்லும் பாடல்களும்,

மலாய் நாட்டில் பெண்கள்

கட்டுன துணியோடு கண்கலங்குறார்

மலாய் நாட்டில்

கட்டுன புருஷன விட்டுவிட்டுக்

கண் கலங்குகிறார் மலாய் நாட்டிலேஎன வறுமையைச் சொல்லும் பாடல்களும்

 

பகடியான வார்த்தையிலே

பால்மரத்தில் பணம்காய்க்கும்

ஆவடியில் முந்திக்கிட்டா

அதிர்ஷ்டமும் தானேவரும்

இப்படியும் ஜாலாக்கு

எப்படியும் போட்டாங்க

பொய்சொல்லிக் கப்பலேத்திப்

பொழப்பெல்லாம் போச்சுங்க

கருங்கடல் தாண்டிவந்து

கைகட்டி நின்னோமுங்க

கல்பமும் உண்டுன்னு

கையேந்தி ஊமையானோம்!’ என்பனப் போன்ற பாடல்களும் வாழ்வை கலப்பில்லாமல் பகிர்வதாக உள்ளன.

இன்று மலேசியத் தமிழ்ப்படைப்பாளிகள் தங்களை மலேசியப்படைப்பாளிகள் என்றே அடையாளம் கொள்கின்றனர். மலேசியாவிலேயே பிறந்து கல்விகற்ற ஒரு தலைமுறை படைக்கும் இலக்கியம் மலேசிய நாட்டின் வாழ்வியலைப் பதிவு செய்வதாகவே உள்ளது. ஆனால் இந்நிலை சிங்கப்பூரில் முற்றிலும் வேறாகவே அமைகிறது. சமகால சிங்கப்பூர் படைப்பிலக்கியத்தில் ஈடுபடும் பலர் தமிழகத்தில் இருந்தும் இலங்கையில் இருந்தும் புலம்பெயர்ந்தவர்களாகவே உள்ளனர். அவர்களின் சந்ததியினர் சிங்கப்பூரில் தங்கள் வேர்களை ஆழமாக ஊன்றிக்கொண்டாலும் இவர்களின் படைப்புகள் பலவற்றிலும் நிகழ்கால ஒவ்வாமைகளையும் அந்நியமாதலையும் காணமுடிகின்றது. உண்மையில் சிங்கப்பூர் தமிழ்ப்படைப்புகளை தனித்தே அளவிட வேண்டும். உள்ளடக்கமும் அதைப்படைப்பவர்களும் மலேசிய சூழலுக்கு வித்தியாசப்பட்டவர்கள்.

நவீன வாழ்வில் புலம்பெயர்வு என்பது வேறு சில காரணங்களுக்காக நிகழ்கிறது என சிங்கப்பூரை வைத்தே அளவிட வேண்டியுள்ளது. அதேபோல இந்நாடு இவர்களுக்குக் கொடுக்கும் புதிய அனுபவங்களையும் புனைவுகள் மூலமே காண முடியும்.

***

லதா சிறுவயதிலேயே சிங்கப்பூரில் குடியேறியவர். இவர் எழுதிய ‘நான் கொலை செய்த பெண்கள்’ என்ற புத்தகத்திற்கு 2008 ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் இலக்கிய விருது (தமிழ்) வழங்கப்பட்டது. 10 சிறுகதைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பில் பல்வேறு பெண்கள் வெவ்வேறு வாழ்வனுபவங்களைச் சொல்லிச்செல்கிறார்கள். அவற்றில் ‘நாளை ஒரு விடுதலை’ சிறுகதையில் வரும் வசந்தி வாசகர்களுக்கு மிக ஆழமான பாதிப்பை ஏற்படுத்துபவள்.

தமிழகத்தில் இருந்து வந்து சிங்கையில் வீட்டுப்பணிப்பெண்ணாக இருப்பவள் வசந்தி. ஏதோ பொருள் வாங்கிக்கொண்டு வேலைப்பார்க்கும் வீட்டுக்குச் செல்வதிலிருந்து அவள் கதை தொடங்குகிறது. செறிவற்ற அவளது உடையும் ஏழ்மையின் தோற்றமும் பிறரை அவளிடமிருந்து தள்ளிப்போக வைக்கிறது. ஆனால் அவள் சாலையில் நடக்கும்போது தமிழகத்துக் கூலித்தொழிலாளர்கள் ‘ஹவ் மச்’ எனக்கேட்கின்றனர். அவளுக்கு தனது விலை 200 டாலர் எனச்சொல்ல தோன்றுகிறது. அந்த அடிமைகளால் வேறு யாரிடமும் இப்படி பேச முடியாது என்றும் 200 வெள்ளியெல்லாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாதத் தொகை என்றும் அவளுக்குத் தெரியும். ஏதோ சந்தோசத்திற்குக் கேட்கிறார்கள் என மௌனமாகக் கடக்கிறாள். வீட்டிலும் தொடர்ச்சியாக அவளுக்குத் தொடர்ந்து வேலைகள் திணிக்கப்படுகின்றன. தனக்குச் சம்பளமாகக் கிடைக்கும் 200 வெள்ளியில் 170 வெள்ளியை ஊருக்கு அனுப்புவது குறித்தே அவளது எண்ணம் ஓடிக்கொண்டிருக்கிறது. அன்று வீட்டில் விருந்து என்பதால் வேலைகள் அதிகம். விருந்தினர்களில் சிலர் அவளை சில்மிஷம் வேறு செய்கின்றனர். அவளை அத்தனையையும் பொறுத்துக்கொண்டு வேலைகள் அனைத்தையும் முடித்துபடுக்கும்போது தான் இன்னும் உண்ணவில்லை என்பது நினைவுக்கு வருகிறது. எழுந்து செல்ல முடியாத அலுப்பு. அப்படியே படுத்துவிடுகிறாள். ஆனால் முதலாளி ஐயா இரவில் அவளுடைய காலைச் சுரண்டுகிறார். அது அவளுக்கும் வேண்டுமாய் உள்ளதாய் அன்றும் தோன்றுகிறது.

ஒரு செய்தியும் சிறுகதையும் இவ்விடமே வித்தியாசப்படுகிறது. செய்தி நல்லவர் கெட்டவர் என்ற இருநிலைகளில் பேசுகிறது. சிறுகதை மானிட உளவியலில் அவ்வாறான இரட்டை நிலைகள் இல்லாததை வெளிப்படுத்துகிறது. இக்கதையை வாசித்தபின் ‘உள்ளிருந்து உடற்றும் பசி’ என்ற சு.வேணுகோபாலின் சிறுகதையை மீண்டும் ஒருதரம் படித்தேன். தாய்தந்தை அற்ற குடும்பத்தில் நான்கு தங்கைகளுக்காக சொந்த வாழ்க்கையைத் துறந்து ஒவ்வொருவராகக் கரையேற்றுகிறான். மூன்று தங்கைகளுக்கும் திருமணமான நிலையில் நான்காவது தங்கைக்குக் குடும்பப் பொறுப்பு வந்துசேர்கிறது. நான்காவது தங்கையும் தனது சகோதரிகள் போதித்த அனைத்தையும் அண்ணனுக்குச் செய்கிறாள். ஒருநாள் இரவில் அண்ணனின் கை அவளைத் தொடுகிறது. அதிர்ந்து மிரளும் அவளிடம் அண்ணன் கேட்கிறான், ‘அக்காங்க ஒங்கிட்ட வேற ஒண்ணும் சொல்லலையா…’. இம்மனித உடலின் அடிப்படை இச்சைகளை மையப்படுத்தி இன்னும் எத்தனை ஆயிரம் கதைகள் வேண்டுமானாலும் பிறக்கும்.

வீட்டுத்தொழிலுக்காக வரும் பெண்களின் அவலங்களை சித்ரா ரமேஷும் பதிவு செய்துள்ளார். ‘தே ஆலியா’ மற்றும் ‘மனுஷன்’ ஆகிய சிறுகதைகள் மூலம் வீட்டுப்பணிப்பெண்கள் என்பவர்கள் தனித்த குணம் உள்ளவர்களாகவும் தங்களை எந்த நேரமும் புறச்சூழலில் இருந்து காத்துக்கொள்ள வேண்டிய அழுத்தம் உள்ளவர்களாகக் காட்டப்படுகிறார்கள்.

பொதுவாக குடும்பத்தைப் பிரிந்து வேலைச்செய்யும் ஆண் தொழிலாளர்களின் உடல்தேவை குறித்த நியாயங்களைப் பேசும் சூழலில் லதா பெண்ணுக்கான தேவை குறித்த கேள்வியை மிகக்கூர்மையாக முன்வைக்கிறார். இதேபோல லதா காண்பிக்கும் இன்னொரு பெண் தமிழகத்திலிருந்து வந்து சிங்கப்பூரில் மருமகள் ஆனவள்.

‘அடையாளம்’ சிறுகதையில் வரும் அவளின் செயல்பாடுகள் அனைத்தும் குடும்பத்தில் அந்நியமாகப் படுகிறது. டாக்சி டிரைவர் முதல் வீட்டில் உள்ள உறுப்பினர்கள்வரை அவளை சிங்கப்பூர் பெண் என ஒத்துக்கொள்வதில் வெவ்வேறு விதத்தில் தயக்கம் காட்டுகின்றனர். அவள் பேசும் ஆங்கிலம், உணவுமுறை என அனைத்துமே கிண்டலடிக்கப்பட தனது சிங்கப்பூர் அடையாள அட்டையில் உள்ள சிரித்தமுகத்தை அழுதப்படிபார்ப்பதாகக் கதை முடிகிறது. அந்நியநாட்டிற்குள் எவ்வளவுதான் எத்தனை நெருங்கி சென்றாலும் மனரீதியான ஒதுக்கலை லதாவின் இக்கதை நுட்பமாகச் சித்தரிக்கிறது.

கமலாதேவி அரவிந்தன் காட்டும் தமிழகத்தொழிலாளிகள் வாழ்க்கை இன்னும் துன்பமிக்கது. இவரின் முதல் தொகுப்பான ‘நுவல்’ நூலில் உள்ள ‘விரல்’ இறுதிவரை தனது ரகசியத்தை மிக நுட்பமாக எடுத்துச்செல்லும் சிறுகதை.

சிங்கையில் வந்து வேலைசெய்ய ஏஜண்டுக்குக் கட்டும் பணத்துக்காக ஊரில் இருக்கின்ற அத்தனையையும் விற்றுவிட்டு வரும் பாவாடை ஊண் உறக்கமில்லாம் ஓவர் டைம் எல்லாம் செய்துக்கொண்டிருக்கும்போது அவனுக்கு ஒரு விபத்து நடக்கிறது. விரல்முனை துண்டிக்கப்பட்ட அவன் துடிக்கிறான். இனி சூப்பர்வைசர் மணியம் மட்டுமே தனக்கு உதவ முடியும் என காத்திருக்கிறான். மனைவியின் நினைவுகள் அவனை வாட்டுகிறது. விரலை இழந்த அவனுக்கு ஓவர்டைமும் கிடைப்பதில்லை. இனி எதிர்க்காலம் சூன்யமாகும் என கவலையில் இருக்கும்போது சூப்பர்வைசர் பெரும் முயற்சி எடுத்து அவனுக்குக் காப்புறுதி பணத்தைப் பெற்றுக்கொடுகிறார். காசோலையை வழங்கும்போது ‘மெஷின்ல விபத்து ஏற்படுறதுக்கும் தானா ஏற்படுத்திக்கிறதுக்கும் வித்தியாசம் தெரியும் பாவட’ எனச்சொல்லும்போது இச்சிறுகதை மீண்டும் முதலிலிருந்து வாசிக்கும் வாய்ப்பைக் கொடுக்கிறது.

வெளிநாடுகளில் வேலை செய்ய அனைத்தையும் இழந்துவரும் ஒருவன் அதை மீட்க முடியாத இயலாமையில் உடல் உறுப்புகளை இழந்தாவது விட்டதை மீட்கத் துடிக்கும் வாழ்வு தமிழ்ச்சூழலுக்குப் புதியது. இதேபோல கமலாதேவி அரவிந்தன் ‘சூரிய கிரஹணத் தெரு’ எனும் சிறுகதையின் மூலம் வேலை தேடிவந்து ஏமாறும் தமிழ்நாட்டு அவலத்தையும் காட்டுகிறார்.

ஏஜண்டால் திட்டமிட்டு அழைத்துவரப்படும் இளம் பெண்கள் வேறு வழியே இல்லாமல் எப்படி பாலியல் தொழிலாளர்களாக மாறுகிறார்கள் என சொல்லும் சிறுகதை தமிழகத்தொழிலாளர்கள் மொழியால் தமிழர்களாக இருந்தாலும் அவர்கள் சிங்கப்பூர் தமிழர்களுடன் எவ்வித ஒட்டுறவும் இல்லாமல் தனி சமுதாயம் போல வாழும் துன்பம் பெரிது.

‘நீ சிரித்தால்’, வெறுமையும் துக்கமும் குரல்வளையை அழுத்திப்பிடிக்க வேறு வழியில்லாமல் வாழ்வைத் தொடர்ந்தே ஆக வேண்டும் என சிங்கப்பூர் வீதிகளில் சிரித்துக்கொண்டு உலாவும் தமிழகத்திலிருந்து வேலை நிமித்தமாக வந்த இளைஞர்களின் ஒட்டுமொத்த சொல்லாத கசப்பு கவிந்துள்ள கதை. ஷாநவாஸ் அவர்களின் ‘மூன்றாவது கை’ சிறுகதை தொகுப்பில் இச்சிறுகதை இடம்பெற்றுள்ளது. விழா காலங்களில் ஊர் திரும்ப முடியாமல் தவிக்கும் ஒருவனுடைய கட்டுப்படாத அன்பை ‘ஸ்கைப்’ போன்ற நவீன தொழில்நுட்பமெல்லாம் நிவர்த்தி செய்வதில்லை என சித்தரிக்கிறார். பொருள் தேடலின் தேவை வளர்ந்துகொண்டே போக, மனிதனின் அடிப்படை ஆதாரமான அன்பை பூர்த்திசெய்ய நவீன தொழிற்நுட்பத்திற்கும் சாத்தியமில்லை எனச் சொல்லும் கதைகள் தமிழுக்குப் புதிது.

பொதுவாக ஆய்வாளர்கள் மலேசியா சிங்கை இலக்கியத்தை ஒரே தட்டில் வைத்து நிறுக்கின்றனர். உண்மையில் சிங்கைக்குப் பணம் தேடி வருபவர்களின் இலக்கியத்தின் குரல் கடந்தகால மலேசிய நாட்டுப்புறப் பாடல்களிலேயே ஒலித்து தீர்ந்துவிட்டது. இன்று மலேசிய இலக்கியம் தோட்டத்தைவிட்டு வெளியேறி நகரமயமாக்கலில் சிக்கிக்கொள்ளும் அந்நியமான மனங்களின் உளவியலையே அதிகம் பேசிக்கொண்டிருக்கிறது. சிங்கப்பூர் இலக்கியம் நவீன புலப்பெயர்வில் கிடைக்கும் ஏமாற்றங்களையும் மன உளைச்சல்களையும் இவற்றிகிடையிலான வாழ்க்கையையும் பேசுகிறது.

மனித உரிமை, தொழிலாளர் உரிமை, அதிநவீன வளர்ச்சி என ஏதேதோ ஊடகங்கள் பேசிக்கொண்டிருக்க வளர்ச்சி அடைந்த நாடான சிங்கப்பூரில் கண்ணுக்குத் தெரியாமல் நடக்கும் புலம்பெயந்த தமிழர்கள் மீது நடத்தப்படும் சுரண்டல்கள் இன்னும் விரிவாக எழுதப்பட வேண்டியவை. அந்நாட்டுக்கென்றே கிடைத்துள்ள புதிய வாழ்க்கை அது. ஒரு காலை தமிழகத்திலும் மற்றுமொரு காலை சிங்கப்பூரிலும் ஆழ பதித்து உருவாகப்போகும் புதிய படைப்பு தமிழ் இலக்கியப் படைப்பு உலகுக்கு வலுவையே சேர்க்கும்.

(Visited 196 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *