சாகாத நாக்குகள் 6 :மௌனமாகப் பேசும் புரட்சி எழுத்துகள்

கூகி வா தியாங்கோ
கூகி வா தியாங்கோ

நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது “எனக்கு அரசியலற்ற படைப்புகள் மேல் பெரிய நாட்டம் இல்லை” என்றேன். அதற்கு மறுப்பு சொன்ன நண்பரும் தான் கலை வெளிப்பாட்டில் பிரச்சாரங்களை விரும்புவதில்லை என்றார். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. அரசியலுக்கும் பிரச்சாரத் தொனிக்கும் என்ன சம்பந்தம் எனக் குழம்பினேன். அரசியல் படைப்புகள் அவ்வாறுதான் இருக்கும் என்பது அவருடைய திட்டவட்டமான முடிவாக இருந்தது. அவர் குறிப்பிடுவது   இலக்கியத்தில்    உள்ள   புரட்சியின் கோஷங்களை எனப்புரிந்துகொண்டேன்.

புரட்சியின் வெடிப்பும் ஒரு பேருணர்ச்சிதான். அதை கலையாக மாற்ற நினைக்கும் படைப்பாளி ஒரு செய்தியாளன்போல புரட்சியின் அன்றாட அரசியலை மட்டுமே சுவீகரித்து, அதன் கட்சிக்கட்டுதல்களுக்குள் சிக்கிக்கொண்டு, மேலோட்டமான கூச்சல்களையும், கோஷங்களையும் எழுத்தாக்கினால் கலை என்ற வடிவத்துக்குள் அதை இணைக்கவே முடியாது.

கலையில் சொல்லக்கூடியது சொல்லக்கூடாதது என எந்த பேதங்களும் இல்லை. சொல்லும் முறையே அதில் பிரதானமானது. பெரும் அரசியல் சிக்கல்களை வெளிப்படுத்தி எவ்வித கோஷ இரைச்சலும் இல்லாமல் உலகம் முழுவதும் நல்ல பல படைப்பாளிகள் இயங்கிக்கொண்டே இருக்கின்றனர்.

அந்தவகையில் குறிப்பிடத்தக்கவர் க்யூபாவைச் சேர்ந்த (Virgilio Piñera). அவர் சிறுகதை எழுத்தாளர் மட்டுமல்ல; கவிஞருமாவார். அவரது ‘மாமிசம்'(Meat) பலவாராக விமர்சிக்கப்பட்டு பரந்த கவனத்தைப் பெற்ற சிறுகதையாகும்.

விர்ஜிலியோ பினேரா

விர்ஜிலியோ பினேரா

ஒரு நகரம் இறைச்சி பற்றாக்குறையால் பாதிக்கப்படுகிறது. மக்களிடையே மெல்ல கலவரம்எழுந்து பின் அது அமுங்குகிறது. அவர்கள் காய்கறிகளை உண்பதில் ருசி காண்கின்றனர். ஆனால் அன்சால்டோ எனும் ஒருவன் மட்டும் விதிவிலக்காக ஒரு புதிய உத்தியைக் கையாள்கிறான். அவன் தனது இடதுபுற பிருஷ்டத்திலிருந்து ஒரு துண்டு சதையை வெட்டி எடுக்கிறான். உப்பையும் வினிகரையும் போட்டு அதை சுத்தம் செய்து வறுக்கிறான். பின்னர் அதை சுவைத்து சாப்பிட ஆரம்பிக்கிறான். தற்செயலாக அங்கு வந்த ஒருவர் அதைப் பார்த்து நெகிழ்ந்து மேயரையும் அழைத்து வந்து காட்டுகிறார். மேயரின் வேண்டுகோளின்படி சில சின்னசின்ன எதிர்ப்புகளுக்கு மத்தியில் தன் இறைச்சியை தானே சமைத்துச் சாப்பிடும் உத்தியை நகரத்தின் மத்தியில் செய்துக்காட்டுகிறான் அன்சால்டோ.

அன்சால்டோ புகழப்படுகிறான். நகரத்தில் அனைவரும் அவரவர் இறைச்சிகளை வெட்டிச் சமைத்து சாப்பிட ஆரம்பிக்கின்றனர். நகரத்தில் யாரும் பேசுவதில்லை. காரணம் அவர்கள் நாக்குகளை விழுங்கி தின்றுவிட்டிருக்கின்றனர். யாரும் யாருக்கும் முத்தமிடுவதில்லை. காரணம் உதட்டின் குழம்பு அவ்வளவு ருசியாக இருக்கிறது. சிறை தண்டனை யாருக்கும் வழங்கப்படவில்லை. காரணம் நீதிபதி தனது விரல் சதையைத் தின்று தீர்த்துவிட்டார். கொஞ்ச நாள்களில் அவர்களுக்கு வாய் இருந்த இடத்தில் வெறும் ஓட்டை மட்டுமே இருந்ததால் இறைச்சியை அதற்குள் போட்டுக்கொண்டனர். யாருக்கும் காதுகள் கேட்கவில்லை. காதுகளையும் அவர்கள் சாப்பிட்டுவிட்டனர். கொஞ்ச நாள்களில் அந்த நகரில் ஆட்கள் காணாமல் போவதை அறிந்து தேடத்தொடங்கினர். ஆட்கள் இருப்பதாகச் சொல்லப்பட்ட இடங்களில் கழிவுகள் மட்டுமே இருந்தன.

இப்படியாகச் சிறுசிறு சிக்கல்கள் இருந்தாலும் தங்கள் பசியைப் போக்க வாய்ப்பளித்த அந்த நகரத்தை யாரும் குறை சொல்லவில்லை என்பதாகக் இக்கதை முடியும்.

இந்தக் கதையை வாசிப்பவருக்கு அதிர்ச்சி ஏற்படுவது உறுதி. காரணம் இது யதார்த்த வாழ்வுடன் தொடர்பில்லாதது. ஆனால் இந்தக் கதை கொடுக்கும் கொடூர காட்சி அச்சத்தை தரக்கூடியது. ஆனால் கதாசிரியர் எங்குமே அந்தக் காட்சியை அவலட்சனமாகக் காட்டாமல் மிக அழகாக வர்ணிக்கிறார்.

இந்தக் கதையை வாசிக்கும் ஒருவருக்கு இக்கதை வறுமை குறித்து கூறுவதாக எளிதில் தோன்றலாம். அது கதையை மேலோட்டமாகப் புரிந்துகொண்டவர்களின் அர்த்தம் மட்டுமே. உண்மையில் இக்கதை மக்கள் நலன் காப்பதாக சொல்லப்படும் புரட்சிகள் மற்றும் அரசியல் அதிகார நிறுவனங்களை கேலி செய்கிறது. மக்கள் ஒரு தீர்வுகாக மற்றொன்றை நாடி பின் அந்த தீர்வுகளாலே தங்களை அழித்துக் கொள்கிறார்கள். சதை தின்பதை தீர்வாக கொள்ளும் மக்கள் தாங்கள் அழிவதையும், தொடர்ந்து மனித எண்ணிக்கை குறைவதையும் கவனிக்கத் தவறுகிறார்கள். புதிய தீர்வை சரியானதா எனக்கூட சிந்திக்க முடியாத குழப்பவாதிகளாகி சட்டத்தை அப்படியே ஏற்பவர்களாகவும் நடைமுறைபடுத்துபவர்களாகவும் இருக்கிறார்கள். அம்மக்கள் தங்கள் அழிவையும் பொருட்படுத்தாமல் தங்கள் தேர்வில் மட்டும் மகிழ்ச்சி காண்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் தவறான தேர்வினை குறித்து அவர்களுக்கு தெளிவில்லாததைச் சொல்லவோ, அதுபற்றி விவாதிக்கவோ கடைசியில் அவர்களே இல்லாமல் போய்விடுகிறார்கள். கதை முடிகிறது.

இக்கதை வெறும் ஆட்சியாளர்களை மட்டும் கேலி செய்யாமல் மக்கள் தங்களது சிக்கலுக்குத் தேர்ந்தெடுக்கும் தீர்வுகளையும் கேலி செய்கிறது. விர்ஜிலியோ பினேரா அரசியல் வேறுபாடுகளால் கைது செய்யப்பட்டார் என அவரது வாழ்க்கைக் குறிப்பிலிருந்து அறிய முடிகிறது. இதன் அடிப்படையில் கியூபா கம்யூனிச நாடு என்பதையும் வெளிநாட்டு வர்த்தகம், வளர்ச்சி ஆகியவற்றின் உள்ளீர்ப்பு அங்கு இல்லை என்பதையும் அறியலாம். அவ்வகையில் விர்ஜிலியோ பினேரா இக்கதையை கம்யூனிஸத்தை எதிர்த்து எழுத்தியுள்ளாரோ என்றும் சிந்திக்கத் தோன்றுகிறது.

இவரைப்போலவே க்யூபா நாட்டைச் சேர்ந்த மற்றுமொரு எழுத்தாளர் இடாலோ கால்வினோ (Italo Calvino). இவர் பத்திரிகையாளர், சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், கட்டுரையாளர். நவீன மெய்ம்மைத்துவம், பின்நவீனத்துவம் ஆகிய வகைகளில் செயல்பட்டவர்.

இடாலோ கால்வினோ

இடாலோ கால்வினோ

அவரது ‘கருங்காலி’ எனும் சிறுகதை எல்லா நாடுகளின் அரசாங்கத்திற்கும் பொருந்தும் கதையாகவே உள்ளது. ஒரு ஊரில் வாழ்ந்த அனைவருமே திருடர்கள். அவர்கள் தங்களுக்குள்ளாகவே திருடி வந்தனர். அனைவரும் திருடர்கள் என்பதால் அனைவரும் ஒரே அளவில் வசதி படைத்து ஏற்றத்தாழ்வற்று இருந்தனர். ஒருவர் அடுத்தவரிமிருந்து, அடுத்தவர் அவருக்கு அடுத்தவரிடமிருந்து, அவருக்கு அடுத்தவர் அவருக்கு அடுத்தவரிடமிருந்து, கடைசியிலிருந்தவர் முதலிலிருந்தவரிடமிருந்துமாக திருடியதால் யாரும் கூடுதல் வசதியாகவோ ஏழ்மையாகவோ இருக்கவில்லை. இந்தச்சூழலில் அந்நாட்டுக்கு நேர்மையான ஒருவனுடைய வருகையினால் இந்தச் சமன் குலைகிறது. யாரோ ஒருவர் வீடு திருடப்படாமல் போவதாலும் நேர்மையானவன் வீடு தொடர்ந்து திருடப்படுவதாலும் அவர்களுக்குள் எவ்வாறு பொருளியல் ஏற்றத்தாழ்வுகள் வருகிறது என கதை போகிறது. இக்கதை ஓர் ஊரில் நடப்பது போல சித்தரிக்கப்பட்டிருந்தாலும் அவர் நாட்டையும் அதை ஆளும் அரசையுமே விமர்சிக்கிறார்.

இடாலோ கால்வினோ அரசியலை முன்வைத்து எழுதும் படைப்பாளிதான். யதார்த்த சூழலில் மிகைகற்பனையை ஓடவிட்டு சுவாரஸியமான வாழ்க்கைச் சந்தர்ப்பங்களை உருவாக்கும் முக்கியமான படைப்பாளி. அவரது படைப்புகள் பெரும்பாலும் அதிகாரத்தைச் சாடுவதாகவே அமைகின்றன. ‘நூலகத்தில் ஒரு தளபதி’ உள்ளிட்ட சிறுகதைகளில் அவர் உருவாக்கும் களம் புதியதாக இருந்தாலும் அதன் அங்கதம் சமகால அரசியல்வரை விமர்சிப்பதாகவே உள்ளது.

‘செய்யச்செய்தல்’ என்ற சிறுகதையிலும் அவர் இவ்வாறான ஓர் அரசியல் நிலையையே கிண்டல் செய்கிறார். எல்லா நடவடிக்கைகளையும் தடை செய்யச்சொல்லும் ஒரு சர்வதிகார அரசாங்கம் உள்ள நாட்டின் மக்கள் வேறொன்றும் செய்ய முடியாமல்போக கிட்டிப்புள் விளையாடுவதை மட்டுமே தங்கள் தினசரி நடவடிக்கையாக மேற்கொள்கின்றனர். அதற்குமேல் வேறெதையும் தடை செய்ய முடியாத சூழலில் மக்கள் மீண்டும் தங்கள் விருப்பமான வேலைகளைச் செய்யலாம் என அரசு உத்தரவிடுகிறது. தங்களது மற்ற செயல்களை மறந்துவிட்ட மக்கள் தொடர்ந்து கிட்டிப்புள் மட்டுமே விளையாடுகின்றனர். அரசு எவ்வளவு வலியுறுத்தியும் அவர்கள் வேறு வேலைகளைச் செய்வதாய் இல்லை. இந்த நிலையில் அரசு அவர்கள் கிட்டிப்புள் விளையாடுவதற்கும் தடைவிதிக்கிறது. அதன் மூலம் அவர்கள் வெவ்வேறு பணிகளுக்குத் திரும்புவார்கள் என நம்புகிறது. ஆனால், மக்கள் கிளர்ந்தெழுந்து தங்களுக்குள்ளாகவே பலரை கொல்கின்றனர். மீண்டும் கிட்டிப்புள் விளையாட்டுக்கே திரும்புகின்றனர்.

அதிகாரம் எப்படி மக்களை நுண்ணுணர்வில் இருந்து துடைத்தெடுக்கிறது என்றும் மக்கள் தங்கள்மேல் திணிக்கப்படும் வன்முறை எங்கிருந்து தொடங்குகிறது என்ற அறியாமையால் எவ்வாறு இயந்திர நிலையில் சிந்திக்கிறார்கள் என்றும் எழுதப்பட்டுள்ள இக்கதை அதிகாரம் கோலோச்சும் எல்லா நாடுகளுக்கும் பொருந்தக்கூடியதே.

அரசாங்கம், அதிகாரிகள் மூலமாக எவ்வாறு மக்களை தங்கள் தேவைக்கேற்ப நிர்வகிக்கிறது என ஃபெர்னான்டோ சோரன்டினோ (Fernando Sorrentino) எழுதிய ‘அவன் என்னை குடையால் அடித்துக் கொண்டேயிருக்கிறான்’ என்ற சிறுகதையின்வழி குறிப்பிடலாம். அர்ஜென்டினாவிலுள்ள ப்யூனஸ் எய்ரஸ்சில் பிறந்த இவரது சிறுகதைகள் மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.

ஃபெர்னான்டோ சோரன்டினோ

        ஃபெர்னான்டோ சோரன்டினோ

பூங்காவில் அமர்ந்து நாளிதழ் படித்துக் கொண்டிருந்த கதைச்சொல்லியை திடீரென ஒருவன் குடையால் தலையில் அடிக்க துவங்குகிறான். இதில் ஆத்திரமான கதைச்சொல்லி அவனைத் தாக்க, தன் வலியைப் பற்றிய கவலையின்றி திரும்ப குடையை தலையில் அடிக்கத் துவங்குகிறான். கதைச்சொல்லி அவ்வுணர்வைப் பற்றி விளக்கும்போது குடையால் அவன் மிக மெதுவாகவே அடிப்பதாகவும்; அது பூச்சி உட்காருவது போன்ற உணர்ச்சியைதான் தருகிறது என்றாலும் சீரான இடைவெளியில் அவ்வப்போது தலையில் அமரும் மிகப்பெரியதொரு பூச்சி கொடுக்கும் அசூயை ஏற்படுகிறது. அவனை அடித்ததற்காக வருந்துபவன் ஒருவேளை அவன் பைத்தியமாக இருப்பானோ என்று நினைத்து அவனிடமிருந்து தப்பி ஒடுகிறான். குடைக்காரனும் பின்னாலேயே ஒடி வருகிறான்.

தப்பி பேருந்தில் ஏறிய போதும் அவனும் கூடவே ஏறி பேருந்திற்குள்ளும் தலையில் குடையால் அடித்தபடியே வருகிறான். அதைக் கண்டு பேருந்தில் வருகின்றவர்கள் பரிகாசம் செய்கிறார்கள். அவனுக்குக் கோபம் வலுக்கிறது. வீட்டிற்கு வந்து கதவைப் பூட்ட முயன்றபோது அவனும் வீட்டிற்குள் வந்துவிடுகிறான். அதன்பிறகு எல்லா நாளும் பகலும் இரவும் உறங்காமல் குடையால் அடித்துக் கொண்டேயிருக்கிறான். அவனது அந்தரங்க வேளைகளிலும். இப்போது அது பழகிப் போய் அவனிடம் அடிவாங்காமல் தூக்கம் வருவதில்லை என்று கதை முடிகிறது.

அரசு அல்லது அதிகாரம் சொல்லும் ஒரு சட்டத்தைக் கேள்வியே இல்லாமல் மரத்துப்போன மனதுடன் அமுல்படுத்தும் அதிகாரிகள், தங்கள் மேல் தொடுக்கப்படும் வன்மத்தைப் பணிகளில் ஒன்றென சுமந்து செய்யும் நிலையையே குடைக்காரனோடு ஒப்பிட இயல்கிறது. அவர்கள் தங்கள் தாக்கப்பட்டாலும் மீண்டும் மீண்டும் அசராமல் அபத்தங்களைச் செய்கின்றனர். அதிகம் சத்தமிட்டு முனக அவர்களுக்கு உரிமை இல்லை. அரசின்மீதான அத்தனைக் கோபங்களையும் அவர்கள் தங்களுக்குள்ளேயே சுமக்கின்றனர். மக்களும் விடாமல் போராடுகின்றனர். இறுதியில் எல்லா போராட்டத்துக்குப் பிறகு மக்கள் அந்த சட்டத்துக்குப் பழக்கமாகிவிடுகின்றனர். பின்னர் அவர்களால் அச்சட்டங்கள் இல்லாமல் வாழ முடிவதில்லை. நடப்பில் இருக்கும் அனைத்துச் சடங்களும் மக்கள் மேல் வலியில்லாமல் குடையால் அடிப்பதாகவே தொடங்கியுள்ளது.

குழந்தைகள் பார்வையிலிருந்து அரசியலைப் பேசுவது கொஞ்சம் பிரபலமான உத்திதான். குழந்தைகள் அபோதைகள். அவர்களுக்குச் சட்டம் தெரியாது. நாட்டின் எல்லைகள் தெரியாது. சாதி, மதம், இன்னபிற மனிதகுலத்தை பிரித்துப் பார்க்கும் எந்த அரசியலும் தெரியாது. அவர்கள், உலகையும் தங்களைச் சுற்றி நடக்கும் அபத்தங்களையும் எதிர்கொள்ளும் விதமே சில சமயம் இலக்கியத்தில் அரசியல் விமர்சனமாகிவிடுகின்றது.

மொராக்கோ நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரான லோட்ஃபி அகாலே எழுதிய ‘நிறம்’ அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் நடக்கும் உரையாடலில் தொடங்கி உரையாடலிலேயே முடிகிறது. மகனுக்கு மனிதர்கள் பல்வேறு நிறங்களில் இருப்பதில் பெரும் குழப்பம். ஒவ்வொரு நாட்டின் குடிமக்களும் என்ன நிறம் என அப்பாவிடம் கேட்க, அப்பாவும் திட்டவட்டமான பதில்களைச் சொல்கிறார். தனக்குத் தெரிந்த நண்பர்களும் விளையாட்டு வீரர்களும் அந்தந்த நாட்டில் வெவ்வேறு நிறங்களில் இருப்பதை மீண்டும் கேள்விகளாகத் துளைக்கிறான். அப்பா எல்லாவற்றிலும் விதிவிலக்குகள் உள்ளதை விளக்கிக்கொண்டே வருகிறார். ஒரு சமயம் அவனது கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார்; கோபப்படுகிறார். இறுதியில் மகன் வினோதமான ஒரு கேள்வியை கேட்கிறான்.

பிரஞ்சுக்காரர்கள் மற்ற நாடுகளை முன்பு அடிமைப்படுத்தி ஆக்கிரமித்து வைத்திருந்ததாக அவன் நண்பன் குற்றம் சாட்டியதை நினைவுகூர்ந்து அது உண்மையா என அறிவதற்கு அப்பாவின் பதிலுக்குக் காத்திருக்கிறான். அப்பா அதை ‘பேத்தல்’ என மறுக்கிறார். மாறாகக் கொஞ்ச காலம் அவர்கள் நாடுகளில் இருந்து வந்தோம் என சாதாரணமாகக் கூறுகிறார். மகனும் விடாமல் ‘அப்படியானால் வெளிநாட்டுக்காரனான நண்பன் பிரஞ்சில் இருப்பதால் அவன் இந்நாட்டை ஆக்கிரமித்துள்ளானோ’ என சந்தேகம் கொள்கிறான். மீண்டும் மறுத்த அப்பா, இப்போதெல்லாம் அவர்கள் விஸா இல்லாமல் வர முடியாது என்கிறார். மகனுக்கு மேலும் ஒரு குழப்பம் துளிர்க்கிறது. ‘அப்படியானால் முன்பு பிரஞ்சுக்காரர்கள் விசா எடுத்துக்கொண்டுதான் பிற நாட்டுக்குள் சென்றார்களா?’ என கேட்கிறான். அப்பா மகனிடம் அப்போதெல்லாம் விசா எதுவும் இல்லை என்றும், பீரங்கிக் கப்பல் இருந்தால் எந்த நாட்டுக்கும் செல்லலாம் என்றும் கூறுவதோடு கதை முடிகிறது.

வரலாற்றின் முந்தைய கசப்புகளை மறைக்கும் ஒரு நாகரீகத் தலைமுறையும் மானிதனின் புராதன அணுக்களில் நிலையாகவே இருக்கும் வன்ம குணமும் எப்படியும் தன்னை வெளிக்காட்ட முயலும் எதார்த்தமும் முயங்கி மிகச்சிறந்த சிறுகதையை உருவாக்கிச் செல்கிறது. வரலாறு முழுவதும் மனிதனுக்கு இருந்த அடங்காத வன்மமும் தீராத காமமும் பின்னாளில் வீரம், காதல் என போற்றப்பட்ட பரிணாமம் ஒரு நிழல்போல இக்கதையைப் படிக்கும்போது தெரிகிறது.

அரசியல் இலக்கியங்கள் எழுதப்படுவது ஒருபுறம் இருக்க, அவை எழுதப்பட்ட சூழலே அதன் தீவிரத்தை கூட்டுவதுண்டு. எழுத்தாளர் சிறைப் பிடிக்கப்படுவதற்கு முன்னால் தொடங்கப்பட்ட ஒரு நாவல் ஒரு வருட காலம் தடுப்புக் காவல் சிறையில் இருந்தபோதும் மலம் துடைக்கும் தாளில் எழுதி, ரகசியமாக எழுதியவரால் பாதுகாக்கப்பட்டு, விடுதலை பெறுவதற்கு சில வாரங்கள் முன்பு சிறைக் காவலரால் பறிமுதல் செய்யப்பட்டு, பின்பு எதிர்பாராத விதமாக அவரிடமே திருப்பித் தரப்பட்டது என்ற முன்வரலாறே எனக்கு கூகி வா தியாங்கோவையும் (Ngũgĩ wa Thiong’o) ‘சிலுவையில் தொங்கும் சாத்தான்’ நாவலையும் வாசிக்கத் தூண்டியது.

இருநூறு ஆண்டுகாலம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தில் இருந்த கென்யா மாவ்மாவ் இயக்கம் மூலம் விடுதலைக்குப் போராடியது. பல வீரர்களின் தியாகத்தினால் போராளியாக வாழ்க்கையைத் தொடங்கிய ஜொமோ கென்யாட்டா ஆட்சியில் ஏறியதும் நாட்டை தரகு முதலாளிகளுக்காகக் கூறுபோட்டார். இறுதியில் ஏகாதிபத்தியத்தின் கைக்குள் மாட்டிக்கொண்ட கென்யா சீரழியும் வரலாற்றை சில கதாப்பாத்திரங்களின் பயணத்தின் மூலம் சொல்கிறார் கூகி.

வரியங்கா என்பவளை மையப்படுத்தியே நாவல் நகர்கின்றது. விவசாயப்பெண்ணான இவள் மாவ்மாவ் இயக்கத்துக்காகத் துப்பாக்கியைச் சுமந்து போராடியவள். நிலத்தை விற்று நகரம் வந்து வேலை தேடி அடைகிறாள். தான் பார்த்துவந்த வேலையில் முதலாளியின் ஆசைநாயகியாக இருக்க மறுத்ததால், வேலையிலிருந்து நீக்கப்பட்டு, வசிக்கும் வீட்டிலிருந்தும் துரத்தப்படுவதால், மனம் நொந்து அலையும் வரியங்காவின் கைகளுக்கு வருகின்றது அந்த சாத்தானின் விருந்திற்கான‌ அழைப்பு. விருந்து நடக்கும் இடமான இல்மொராக் நோக்கி ப‌ய‌ணிக்கிறார் வ‌ரிய‌ங்கா.

இந்தப் பயணத்தில் அவளுட‌ன் ஒரு கட்டிட‌தொழிலாளி, நாட்டுப்புற‌ இசை அறிந்த மாண‌வ‌ன், உள்நாட்டு முதலாளி, அவ‌ர்க‌ள் செல்லும் வாக‌ன‌த்தை ஓட்டுனர் ஆகியோரின் கலந்துரையாடலூடாக‌‌ கென்ய‌ விடுத‌லை போராட்ட‌ வ‌ர‌லாற்றையும், விடுத‌லைக்குப் பின்பான நிலையையும் அறிய முடிகிறது. முழுக்க சோசியலிஸ சிந்தனைகளை உள்வாங்கி எழுதப்பட்டுள்ள இந்நாவல் அதற்கான எவ்வித பிரச்சாரத் தொனியும் இல்லாமல் இறுதிவரை பயணிக்கிறது. நாட்டுப் புறக்கதைகள், பாடல்கள், விடுகதைகள் என சுவாரசியமாக நகரும் இந்நாவலைப் படித்து முடித்தபோது புரட்சியை மனங்களில் ஊன்ற உரத்தச் சொற்கள் தேவையே இல்லை என எந்த வாசகனும் அறிவான். தமிழில் அவ்வாறான ஒரு படைப்பாளுமையாக ஆதவன் தீட்சண்யாவைக் காணமுடிகிறது.

லிபரல் பாளையத்துக் கதைகள் எனும் அவரது தொகுப்பில் 9 கதைகள் இடம்பெற்றுள்ளன. அத்தனையும் அரசியல் பகடிகள்.

ஆதவன்-தீட்சண்யா-01

ஆதவன் தீட்சண்யா

‘உலகமே உறங்கும் நடுநிசி வேளையில்’ எனும் கதை இந்தியாவின் நாணயம் ரூபாயிலிருந்து திடீரென டாலருக்கு மாறிவிட்டதை அறியும் லிபரலப்பன் பதறி விடுகிறார். புஷ்ஷின் உருவப்படங்கள் நாடெங்கும் தொற்று நோய்போல பரவுகிறது. இந்திய நாணயம் மட்டும் இல்லாமல் தேசப்பிதா சிலை புஷ் சிலையாக உருமாறுகிறது, கடிதத்தில் எழுதும் சிவமயம் தானே புஷ்மயம் என மாறிக்கொள்கிறது, கழிப்பறைச் சுவற்றில் ஆண்கள் பிரிவுக்கு திரும்புமிடத்தில் வரையப்பட்டிருந்த படம் புஷ்சினுடையதாக மாறுகிறது, இறுதியில் ஆணுறையில் கூட புஷ்ஷின் படம் கோரப்பல்லுடன் பெண்களைத் தொந்தரவு செய்கிறது. இதன் விளைவாகப் பெண்கள் தங்கள் துணைகளை வெறுக்கின்றனர். தங்களிடம் உறவுக்கு வரும் துணைவன் இன்னொருவனையும் கூட அழைத்துவருவதாக பதற்றம் அடைகின்றனர். கற்பு நெறி பாதிப்புற்றதாகப் போராடுகின்றனர். இது பெரும் அரசியல் பிரச்னையாக மாறுகிறது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு தாராளமாகக் கதவுகளைத் திறந்துவிடும் இந்தியாவின் போக்கையும் உலகமயக் கொள்கையையும் விமர்சிக்கும் இக்கதைபோல ஆதவன் தீட்சண்யா எழுதியவை ஏராளம்.

மலேசிய அரசியல் சூழலை மிகக்கச்சிதமான மொழியில் அங்கத நடையில் எழுதியவர்களில் மா.சண்முகசிவா முக்கியமானவர்.

அவரது ‘சாமி குத்தம்’ எனும் சிறுகதை இன்றைக்கும் மலேசிய அரசியலை நையாண்டி செய்ய பொறுத்தமான ஆக்கம்.

index

மா.சண்முகசிவா

இரண்டு நாள் அடைமழை பெய்தால் ஆட்டங்கண்டு இடியும் மதில்களையும் காற்றடித்தாலே கழன்றுவிடும் தகரக்கூரைகளையும் கொண்ட ஒரு முனியாண்டிக்கோயில் இடிக்கப்படுவதாக தகவல் வருகிறது. கோயிலில் குப்பை எடுக்கவந்த குப்பை லாரி இடித்து கோயிலுக்கு ஏற்படுத்தியப் பாதிப்பு மறைக்கப்படுகிறது. அவ்வூரின் பத்திரிக்கை நிருபர் அதை ஒரு பரபரப்பான செய்தியாக்க நினைக்கிறார். கோயில் இடிக்கப்பட்டத்தை தொடராக எழுதி நாட்டின் முக்கியச் செய்தியாக்குகிறார். அது தேர்தல் காலமாததால் இந்துக்களின் மனம் கோணாமல் இருக்கவும் ஓட்டு வங்கியை நிரப்பவும் எப்படி ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் மாறி மாறி அக்கோயிலைப் பராமரிக்கத் தொடங்குகின்றன என்றும் இறுதியில் காலாகாலமாக அக்கோயிலை கட்டி பராமரித்தும் வந்த பூசாரி சோணமுத்து ஒரு சொற்ப சம்பளத்துக்கு கோவில் துப்புறவு தொழிலாளியாகிறார். கோயில் தன் அடையாளங்களைக் கொஞ்ச கொஞ்சமாக மாற்றிக்கொள்கிறது. கும்பகோணத்திலிருந்து ‘சிவாச்சாரியார்கள்’ வரவழைக்கப்பட்டு கும்பாபிசேகம் நடக்கிறது. முனியாண்டி கோயில் முனீஸ்வரர் கோயிலாகி, பின்னர் ஈஸ்வர கோயிலாக ‘நாமகரணம்’ சூட்டப்படுகிறது.

சிறுபான்மை மக்களின் ஊடகங்கள் தங்கள் மக்களின் பதற்ற உணர்வையும் பாதுகாப்பின்மை அற்ற மனநிலையையும் எவ்வாறு வணிகமாக்குகின்றன என இக்கதை பேசுகிறது. எளிய விடயங்களைக்கூட போராட்டங்களாக ஆக்குவதையும் தலைவர்கள் தங்கள் பதவிக்காக தேர்தல் காலங்களில் முட்டாள்கள் ஆவதையும் இவர்களின் சுயநலங்களில் சோணமுத்து போன்ற எளிய மனிதன் புறக்கணிக்கப்பட்டு நிர்க்கதியாவதும் என கதை பல உள்ளடுக்குகளைக் கொண்டிருந்தாலும் எளிய மக்களின் சிறுதெய்வம் மேட்டுக்குடிகள் தலையீட்டால் பெருதெய்வமாகும் வரலாற்றையும் இக்கதை மிகநுட்பமாகச் சித்தரிக்கிறது.

பொதுவாகவே அரசியல் புரட்சிகளை எழுதும் படைப்பாளிகளுக்கு அங்கதமே துணை செய்கிறது. அங்கதம் காற்றில் அலையும் ஒரு நீர்த்துளிபோல புரட்சியின் தீக்கரத்தை வானவில்லாக்கிவிடுகின்றது.

(Visited 148 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *