ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. பர்னாப் முகர்ஜி என்பவர் அனுப்பியிருந்தார். கல்கத்தாவைச் சேர்ந்த கலைஞர். நான் அவரை அறிந்திருக்கவில்லை. சிங்கை இளங்கோவன் மூலம் வல்லினத்தையும் என்னையும் அறிந்து, சந்திக்க முடியுமா எனக் கேட்டிருந்தார். கடந்த இருவாரமாக மேற்கல்வி பணிகள் பெரும் அழுத்தத்தைக் கொடுத்துக்கொண்டிருந்த சூழலில் எப்படி நேரம் ஒதுக்கி எங்கே சந்திப்பது என்ற குழப்பம் சூழ்ந்தது. இப்படியான சந்திப்புகள் நேரத்தைச் சட்டென அபகரித்துவிடும். அல்லது கலை சார்ந்த மனிதர்களின் சந்திப்பில் நான் அவ்வாறு பிற அத்தனையையும் மறந்துவிட்டு எனது நேரத்தைக் கொடுத்துவிடுவேன்.
குறிப்பிட்ட ஒரு நாளில் மதியம் சந்திக்கலாம் எனச் சொல்லியிருந்தேன். அன்று இரவு எனக்கு அலுவல் இருந்தது. எனவே உரையாடலுக்கு இரண்டு மணி நேரத்தைக் குத்துமதிப்பாக ஒதுக்கியிருந்தேன். பர்னாப் முகர்ஜி தனியாக இரயில் ஏறி பத்துமலை வந்து சேர்ந்தார். பார்த்தவுடன் அவர்தான் என அடையாளம் காணும் வகையில் இருந்தது தோற்றம். இரண்டு பைகளை வைத்திருந்தார். ஒன்றில் சில நூல்கள் இருப்பது தெரிந்தது. அன்று மாலை அவருக்கு ஒரு நாடக நிகழ்ச்சி இருந்தது. ஆனாலும் எந்தப் பதற்றமும் அவசரமும் இல்லாமல் உரையாடினார். தமிழ் வாசிக்கவோ பேசவோ அறியாத அவர் தமிழ் இலக்கியச் சூழலில் அனைவரையும் அறிந்து வைத்திருந்தது ஆச்சரியத்தைக் கொடுத்தது. சுந்தரராமசாமி, லா.ச.ரா, சேரன், ஷோபா சக்தி என பெரும்பாலோரை மொழிப்பெயர்ப்புகள் வழி அறிந்து வைத்திருந்தார். சில படைப்புகளைத் தனது சொந்த மொழிப்பெயர்ப்பாளர் உதவியுடன் வாசித்திருக்கிறார். நாடக உலகில் முக்கிய ஆளுமைகளான ந.முத்துசாமி மற்றும் பிரளயன் அவரது நண்பர்கள் என பேசும்போது தெரியவந்தது. “அனைவரையும் வாசிப்பீர்களா?” எனக்கேட்டேன். “தலித் இலக்கியம், சிறுபான்மை சமூகத்துக்கான அரசியல் போன்றவற்றைக் உடனுக்குடன் அறிந்துகொள்ள முயல்வேன்” என்றவரின் அரசியலை உள்வாங்கவும் நெருங்கிப்பேசவும் ஏதுவாக இருந்தது.
நான் வல்லினம் குறித்து கொஞ்சம் விளக்கினேன். அவருக்கு வல்லினம் மூலம் நண்பர்களுடன் நான் தொடரும் பணிகள் மேல் உற்சாகமும் நம்பிக்கையும் பிறந்தது. சிங்கை இளங்கோவன் மூலமே அவர் வல்லினம் குறித்து அறிந்ததாகவும் சிங்கையில் அவர் ஒப்பில்லா படைப்பாளி என்றார். சிங்கை போன்ற ஒரு நாட்டின் சூழலில் அத்தனைக் காத்திரமாக இயங்குவது ஆச்சரியமானது என்றவரின் கூற்றை ஆமோதித்தேன்.
“நவீன் நீ உனது மேற்கல்விக்காக இன்று மாலை என்னுடன் இருக்க மாட்டேன் என்கிறாய். நீ மேற்கொண்டிருக்கும் கல்வியை உன்னைத்தவிர வேறு எவரும் செய்யலாம். நீ செய்யும் கலைப்பணிகளைச் செய்யதான் இங்கு ஆள் இல்லை. நீ அதற்குதான் கவனம் செலுத்தவேண்டும்” என்றார். அன்று மாலை இருந்த வகுப்பை நீக்கிவிட்டு அன்று நடக்கவிருக்கும் அவரது நாடகத்தைப் பார்க்க அவருடன் பயணமானேன். இடையில் வீட்டுக்கு அழைத்துச்சென்று நடந்துமுடிந்த கலை இலக்கிய விழாவில் கண்காட்சிக்கு வைத்த சந்துரு ஓவியங்களைக் காட்டினேன். அரசியல் தன்மைக்கொண்டவைகளைக் கண்டபோது ‘powerfull’ என்றார். வல்லினம் பதிப்பித்த நூல்கள் சிலவற்றை வழங்கினேன். சிவா பெரியண்ணின் ‘ரேணுகா கவிதைகள்’ நூல் ஒரே ஒரு பிரதி எஞ்சி இருந்தது. அதை அவருக்குத் தருவதில் தடை இருக்கவில்லை.
பெட்டாலிங் ஜெயா பகுதியில் ‘ஃபைவ் ஆர்ட்ஸ்’ எனும் அமைப்பை அப்போதுதான் கேள்விப்பட்டேன். மலேசியாவில் ஒரு வடநாட்டவரால் மாற்று கலை இலக்கிய முயற்சிகளுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு. எழுத்தாளர் கே.எஸ்.மணியத்தின் நாடகங்கள் சில அங்கே அரங்கேறியுள்ளது அங்கு சென்றபோதுதான் தெரிந்தது. மலேசியத்தமிழ் எழுத்தாளர்கள் போல் அல்லாமல் கே.எஸ்.மணியத்தை பர்னாப் முகர்ஜி நன்கு அறிந்துவைத்திருந்தார். கொஞ்ச நேரத்தில் நாடகம் தொடங்கியது. பர்னாப் எவ்வித ஒப்பனைகளையும் செய்துக் கொள்ளவில்லை. என்னைச் சந்திக்க வந்திருந்தபோது அணிந்திருந்த அதே உடையில் அரங்கின் மத்தியில் நின்றார். 10க்கும் மேற்பட்டவர்கள் மட்டுமே இருந்த சிறிய குழு அது. திரையில் போர்களில் அவலங்கள் குறித்த காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தது. தரையில் தொப்பி, கரண்டிகள் உள்ளிட்ட பொருள்கள் சிதரிக்கிடந்தன. இலங்கை, பாலஸ்தீனம் என பல்வேறு தேசங்களின் அழுகுரல்கள் அறையில் நிரம்பியது. பிரனாப் பேசத்தொடங்கினார். ஊடகங்கள் போரைக்காட்சிப்படுத்தும் முறையில் தொடங்கி அதில் உண்டாகும் உளவியல் சிக்கல்வரை அவரது வசனங்கள் போய்க்கொண்டிருந்தன.
போரில் பிணைக்கைதிகளாகத் தடுத்துவைக்கப்பட்ட ஒருவரிடம் அதிகாரி கேள்வி கேட்கிறார்.
“ஒரு போர்க்கைதியான நீ எங்களுக்கு என்ன கொடுப்பாய்?”
“நாங்கள் எங்கள் பட்சாதாபத்தைக் கொடுப்போம்…
எங்கள் வரலாற்றைக்கொடுப்போம்…
எங்கள் தொன்மங்களைக் கொடுப்போம்…”
“வேறு என்ன கொடுப்பீர்கள்?”
“இனி கொடுக்க ஒன்றும் இல்லை. உங்களுக்கு என்ன வேண்டுமோ நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்…”
“உங்கள் மௌனங்களைக் கொடுங்கள்…”
நாடகம் முடிந்தது. மிக உற்சாகமாக அவரைப் பார்வையாளர்கள் சூழ்ந்தனர். நாடகம் குறித்து கருத்துப்பரிமாறல்கள். சிறிது நேரத்திற்குப்பின் நான் அவரை அழைத்துக்கொண்டு அவரது விடுதிக்குச் சென்றேன். “கலை என்பது அரசியல் செயல்பாடு. அரசியல் நீக்கப்பட்ட படைப்புகள் மீது எனக்கு ஈடுபாடு இல்லை. மீடியக்கர் படைப்புகளே தமிழ்ச்சூழலில் நல்ல இலக்கியங்களாக நம்பப்பட்டு நிரம்பிக் கிடக்கின்றன. இந்த மாதிரியான சூழலில் நீங்கள் உங்கள் படைப்புகளை ஆங்கிலத்தில் கொண்டுவரவேண்டிய அவசியம் உள்ளது. இளங்கோவன் மூலம் உங்களை அறிந்தேன். இல்லாவிட்டால் நமக்கிடையிலான உரையாடல் சாத்தியமாகியிருக்காது. அவர் மொழிப்பெயர்த்த உங்கள் கவிதைகள் மூலம் ஓரளவு உங்கள் படைப்பை அறிய முடியும். அது போதாது. நீங்கள் உங்கள் சமூகத்தின் மத்தியில் மட்டுமே உரையாடலை நிகழ்த்த வேண்டும் என நினைக்கிறீர்களா? உங்கள் உரையாடல் இன்னொரு சமூகத்தைச் சென்று அடைய வேண்டாமா?” பர்னாப் வழிநெடுகிலும் மொழிப்பெயர்ப்பின் அவசியம் குறித்தே அதிகம் பேசினார். எனக்கு அதில் ஆர்வம் இருந்தாலும் ஏன் மெத்தனமாக இருக்கிறேன் என யோசித்துக்கொண்டேன்.
நாடகத்தில் ஏன் அதிகாரிகள் பிணைக்கைதியின் மௌனத்தைப் பிடுங்கினர் எனக்கேட்டேன்.
“ஒரு மனிதனின் செல்வம் அல்லது அவன் உடல் உருப்புகளை அழிக்க முடியும். ஆனால் அப்படி அவனை அழிப்பதன் மூலம் அவன் அடைவது உலக மக்களிடம் இருந்து பெரும் அதீதமான பட்சாதாபத்தைப் பெற்றுதரும். பின்னர் அது உலக மக்கள் மனங்களில் எதிர்ப்பை விளைவிக்கும். அதனால் பட்சாதபம் பிடுங்கப்படுகிறது. அடுத்து வரலாறும் தொன்மங்களும் அரூபமானவை. வரலாற்றுச் சுவடுகளை அழித்தாலும் அது தொன்மக்கதைகளாக எஞ்சி இருக்கும். எனவே அதுவும் பிடுங்கப்படுகிறது. ஆனால் மௌனம் அப்படியல்ல. அது ஆபத்தானது. மௌனமாக உள்ள ஒருவன் உங்களை அச்சம் கொள்ளச் செய்வான். ஒருவன் உணர்சிவயப்பட்டு செயல்படும்போது அவன் அதிகம் சிந்திப்பதில்லை. அல்லது அவன் என்ன சிந்திக்கிறான் என்பதை அவன் செயல் காட்டிவிடும். மௌனம் ஒருவனை தீவிரமாகச் சிந்திக்க வைக்கிறது. அவன் செய்யப்போவதை உங்களால் அனுமாணிக்க முடியாது. பாதிக்கப்பட்டவனின் மெளனம் உங்களைப் பதற்றம் கொள்ள வைக்கும். அவனின் மௌனத்தைப் பிடுங்குவதன் மூலம் அதிகாரம் அவனைக் கூச்சலிட வைக்கிறது. கூச்சலுக்கு தன்னால் எழுந்து பின் அடங்கிவிடும். அதற்கான கவனம் கொஞ்ச நேரம்தான்.”
“இதுபோன்ற சிறிய அரங்குகளில்தான் நாடகங்களை நடத்திக்காட்டுவதை நீங்கள் விரும்புகிறீர்களா?” என்றேன்.
“மதுரை போன்ற ஊர்களில் பெரிய கூட்டங்களுக்கு மத்தியில் நிகழ்த்திக்காட்டியதுண்டு. ஆனால் பார்வையாளர்களுடனான உரையாடல் சிறிய குழுக்கள் மத்தியிலேயே சாத்தியம். நான் 10பேர் அமர்ந்துள்ள சிறிய அரங்கங்களில் 100க்கும் மேல் நாடகத்தை நிகழ்த்திக்காட்டியுள்ளேன். அதன் மூலம் அதிகமானோரை அடைந்துள்ளேன். சிறுகுழுக்கள் முன் நிகழ்த்தப்படும் நாடகம் அது முடிந்த பின்னர் உரையாடல்களாக, கருத்துப்பரிமாற்றங்களாக, இனிய அறிமுககங்களாக வளரும். நான் இதையும் அதிகம் விரும்புகிறேன்.” என்றவரின் பேச்சு தமிழக அரசியல் சூழல் பக்கம் தாவியது. சங்க இலக்கியக்கியங்களையும் பல தொன்மங்களையும் சேர சோழ பாண்டியன் போன்ற மன்னர்களையும் வரலாறாகக் கொண்டுள்ள தமிழ்நாட்டில் காப்டன் முதல்வராக வந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்துப்பார்க்கிறேன் எனக்கூறி சிரித்தார். கல்கத்தா குறித்து கொஞ்சம் பேசினோம். உலகத்தில் இரண்டாவது மாபெரும் புத்தகக் கண்காட்சி அங்குதான் ஜனவரியில் நடக்கும் என்றார். நீ வருவதானால் சொல். என் விருந்தினராக வரலாம் என்றார். உரையாடல் ‘ஜகாட்’ திரைப்படம் உலகத்திரைப்படம் எனச்சென்று மீண்டும் மொழிப்பெயர்ப்பில் வந்து நின்றது.
“நீங்கள் அடிப்படையான மொழிப்பெயர்ப்பு வேலைகளைச் செய்தாலே என்னால் அதை நிறைவுபெற உதவ முடியும். உலகில் எந்தெந்த இடங்களில் உங்கள் நூல் இருக்கவேண்டும் என ஓரளவு அனுமானித்து அங்கெல்லாம் கொண்டுச்செல்லலாம்.” பிரனாப் உற்சாகம் கொடுத்துக்கொண்டே இருந்தார். அவ்வாறு உற்சாகம் கொடுப்பவர்கள் குறைவு. தனது கலை ஆற்றலின்மீது ஆழமான நம்பிக்கை உள்ளவர்களால்தான் பிறர் கலை வளர்ச்சிக்கு ஊக்குவிக்க முடிகிறது. அவரை விடுதியில் விட்டபோது இரவு 11ஐ நெருங்கிவிட்டிருந்தது. அன்றையப் பாடம் விடுபட்டதை நினைத்துக்கொண்டேன். அதை செய்ய நிறைய பேர் இருக்கிறார்கள் எனத் தோன்றியது.
வீட்டுக்கு வந்து சேர்வதற்கு முன் பர்னாப் முகர்ஜி அழைத்தார். அவருக்கு நான் கொடுத்த எனது கவிதை நூலை காரிலேயே விட்டிருந்தார். நான் தபாலில் அனுப்புவதாகக் கூறினேன். மறுநாள் அவர் மலேசியாவில் இருந்து பாரிஸ் செல்கிறார். மூன்று சந்திப்புகள் வேறு இருந்தது. ஆனாலும் தானே வந்து பெற்றுக்கொள்வதாகச் சொன்னார். அப்படி சாத்தியமில்லை என எனக்குத் தோன்றியது. ஆனால் மீண்டும் மறுநாள் மதியம் 12க்கு பர்னாப்பிடமிருந்து அழைப்பு. பள்ளிக்கூட அருகில் இருந்த ரயில் நிலையத்தில் இருந்தார். டாக்ஸி பிடித்து எங்கே வரவேண்டும் எனக்கேட்டதும் ஆச்சரியம் குறையாமல் நானே ரயில் நிலையத்திற்குச் சென்று நூலைக்கொடுத்தேன். நல்ல மழை. நூலைப் பெற்றுக்கொண்டு அன்பளிப்பாக அவர் வரைந்த சில ஓவியங்களையும் திலீப்குமார் தொகுத்து ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்ட தமிழில் சிறந்த சிறுகதைகள் தொகுப்பையும் கொடுத்தார். அன்புடன் தழுவி விடைபெற்றார்.
“நான் திருமணம் செய்துக்கொள்ளவில்லை. கலைதான் எனக்கு முதன்மையானது. அதைவிட செய்ய எனக்கு முக்கியமான பணி இல்லை. உங்களுக்கும் அப்படி இருந்தால் நல்லது” எனக்கூறி கை அசைத்தார். சன்னல்வழி வெளியே விட்ட எனது ஒரு கை மட்டும் மழையில் ஈரமாகியிருந்தது.