சாகாத நாக்குகள் 7: தொன்மங்களைத் தொடுதல்

pp_thumb[4]ஒருவரிகூட படிக்காத ஒருவரால் ராமாயணத்திலிருந்தும் மகா பாரதத்தில் இருந்தும் அல்லது சிலப்பதிகாரத்திலிருந்தும், மணிமேகலையிலிருந்தும்கூட ஏதாவதொரு காட்சியைச் சொல்லிவிட முடியும். செவிவழியாய் கேட்டுத் தொடர்ந்த எளிய கதைகூறல் முறையாலும் செய்திகளை மட்டுமே வாசகனுக்குக் கொடுக்கும் மேடைப்பேச்சாலும் பெரும்பாலும் அது சாத்தியமானது. தேர்ந்த வாசகன் இந்த கதை சொல்லும் நேரடித்தன்மையை விரும்புவதில்லை. அவனுக்குத் தேவை தகவல்களும் அல்ல. தொன்மங்களை வாசிக்கத்தொடங்கும் வாசகன் ஒருவன் அதில் காணப்படும் நுண்குறிப்புகளைத் தன் கற்பனையால் விரித்தெடுக்கவே முதலில் ஆயர்த்தமாவான். புனைவு எழுத்தாளன் அதன்மூலம் அவன் உருவாக்கிக்கொள்ளும் அக உலகில் வரலாற்றில் சொல்லாமல் விடுபட்ட இடைவெளிகளை நிரப்பத்தொடங்குவான்.

உலகம் முழுக்கவே இவ்வாறு புராணக்கதைகள், தொன்ம இலக்கியங்கள் மீள் புனைவுக்குட்படுத்தப்பட்டு புதிய படைப்புகளாக வாசகனுக்குப் படிக்கக் கிடைக்கின்றன. தமிழில் நவீன இலக்கியத்தின் எழுச்சி உச்சத்தை அடைந்தபோதே இவ்வாறான முயற்சி தொடங்கப்பட்டுவிட்டது.  புதுமைப்பித்தன் எழுதிய ‘சாபவிமோசனம்’ ஒரு நல்ல உதாரணம்.

அகலிகை  கௌதம முனிவரின் மனைவி. தேவர்களின் தலைவனான இந்திரன் அவள் மேல் ஆசை கொண்டு, கௌதம முனிவரின் வேடத்தில் வந்து அவளை வன்புணர்ச்சி செய்திட, அதனை அறிந்த கௌதமர் அகலிகையைக் கல்லாக மாற சாபமிட்டார். கல்லாக மாறிய அகலியை ராமனின் கால்பட்ட தூசு பட்டு மீண்டும் மனிதவுருவம் பெற்றதாகப் புராணக்கதைகளில் உள்ளன.

கல்லானவளுக்கு மீண்டும் உயிர்கொடுத்ததன் வழி ராமனைப் புனிதத்தின் அம்சமாகக் காட்டுவது புராணம் என்றால் நவீன இலக்கியம் அதன் எதிர்நிலையில் இருந்து சிந்திக்கிறது. நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப்படைப்பாளியாகிய புதுமைப்பித்தன் அகலிகையின் வாழ்வை இச்சிறுகதையில் மீள்உருவாக்கம் செய்கிறார். ‘சாபவிமோசனம்’ சிறுகதையில் மீண்டும் மனிதனாகி வந்த அகலிகைக்கு முழுமையாக அச்சம் இன்னும் நீங்கயிருக்கவில்லை. பார்ப்பவர்கள் எல்லாம் அவளுக்கு இந்திரனாகவே தோன்றுகின்றனர். யார் வந்தாலும் அவள் குடிலுக்குள் ஒளிந்துகொள்கிறாள் என புதுமைப்பித்தன் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட அகலிகையின் உளவியலைக் கதையின் முதல் பகுதியில் பேசுகிறார்.

அந்த நேரத்தில்தான் வனத்தில் அவளுக்குச் சீதையின் நட்பு கிடைக்கிறது. சீதையின் நட்பு அகலிகைக்கு உற்சாகம் தருகிறது. இராமனின் பட்டாபிஷேக வைபவத்தின்போது அயோத்திக்கு வருவதாகவும் ஒப்புக்கொள்கிறாள். அதற்குள் அத்தனையும் மாறுகிறது. தசரதன் உயிரை விடுகிறான். ராமன் காட்டுக்கு விரட்டப்படுகிறான்.

14 வருடங்கள் கடந்து, அகலிகை மீண்டும் ராமனையும் சீதையையும் சந்திக்கிறாள். சீதை அகலிகையுடன் தனிமையில் இருக்கையில் ராவணனால் தனக்கு ஏற்பட்ட துன்பத்தைக் கூறுகிறார். அந்தக் கசப்பைப் பகிர்ந்துகொள்கிறாள். அக்கினிப் பிரவேசத்தையும் சொல்கிறாள். அகலிகை துடித்து விடுகிறாள்.

 “அவர் கேட்டாரா? நீ ஏன் செய்தாய்?” என்று கேட்க,
“அவர் கேட்டார்; நான் செய்தேன்” என்கிறாள் சீதை.

அவ்வளவு நேரம் இறைவனுக்கு நிகராக ராமனை அழைத்துக்கொண்டிருந்த அகலிகை “அவன் கேட்டானா?” என்று ஓர்மையில் கத்துகிறாள். தன் மனைவியின் கற்பை உலகுக்கு நிரூபிக்க விரும்பிய இராமனின் நிலைப்பாடு அவளுக்குப் புரிகிறது. தானே தன்னை மீண்டும் கற்சிலையாக்கிக் கொள்ள நினைக்கிறாள். அந்த மனச்சுமையில் இருந்து விடுபட அவ்வாறு செய்வதால் மட்டுமே சாத்தியப்படுகிறது.

கதையின் தொடக்கத்தின் கல்லாகிவிடுதல் எனும் கொடுமை குறித்தும் அடர்ந்த இருளில் மாட்டிக்கொண்ட அவள் தனிமை குறித்தும் பெரும் பயம் கொண்டிருந்தவளாகக் காட்டப்படும். இறுதியில் அப்படி இருப்பதே இந்தக் கொடுமையில் இருந்து விடுபட ஒரே வழி என முடிவெடுத்து மாய்கிறாள்.

புதுமைப்பித்தன் ராமாயணத்தில் உள்ள முரணை இக்கதையின் மூலம் விமர்சித்துள்ளார். இருபெண்களுக்கு நிகழும் முரண்பாடான தீர்ப்பை நவீன வாசகனாக இருந்து அவதானிக்கிறார். கணவனால் சந்தேகம் கொள்ளப்பட்டு சபிக்கப்பட்டவளை கேள்விகளின்றி மீட்பவன்; மனைவியை ஊரார் சந்தேகம் கொள்ளலாகாது என அக்னியில் இறங்கச்சொல்லும் அபத்தத்தை வாசகன் முன் எடுத்து வைக்கிறார். இவ்வாறு நவீன வாசகன் தொன்மங்களை விமர்சனப்பூர்வமாக அணுகுபவதன் மூலமாகவே தன்னை கூர்மைப்படுத்திக் கொள்கிறான். கேள்விகளின்றி ஏற்றுக்கொள்ளுதல் நவீனச்சிந்தனைக்கு முற்றிலும் முரணானது. தொன்மக்கதைகளை விமர்சன ரீதியில் அணுகுவது ஒரு முறை என்றால் அதில் உள்ள ஒரு அம்சத்தைத் தனக்கு லாவகமாக்கி புனைவாக்குவது மற்றுமொரு முறை. மலேசிய எழுத்தாளர் கங்காதுரை அவ்வாறான ஒரு சிறந்த சிறுகதையை எழுதியுள்ளார்.

ஆதிசேடன் எனும் பாம்பு குறித்து பல்வேறு விதமான  கதைகள் சமூகத்தில் உள்ளன. ஆதிசேடன் திருமாலின் ஒவ்வொரு அவதாரத்திலும் அவருக்குத் துணையாகவும், இணையானதொரு பாத்திரமேற்று வந்தவர். பாற்கடலில் திருமாலின் படுக்கையாக இருக்கின்ற நாகம் இந்த ஆதிசேடன். கங்காதுரை ஆதிசேடனது பணியை தனது நவீன சிந்தனையின் மூலம் கேள்விக்குள்ளாக்கும் சிறுகதை ‘ஆதிசேடன்’.

வழக்கம்போலவே நாரதர் வைகுண்டம் வந்து கலகத்தைத் தொடங்குகிறார். கைலாயத்தில் சிவனும் பார்வதியும் கைலாய பீடத்தில் ஒருசேர அமர்ந்து கொண்டு இருப்பதையும்,  பிரம்மலோகத்தில் பிரம்மாவும் சரஸ்வதியும் தத்தம் கமலங்களில் சமநிகராக அமர்ந்து கொண்டு இருப்பதையும் ஒப்பிட்டு வைகுண்டத்தில் மட்டும் பெருமாள் ஆதிசேடன் மீது சயனித்திருக்க திருமகள் மட்டும் அவரின் கால்களின் அருகிலேயே அமர்ந்திருப்பதைக் கேள்வி எழுப்புகிறார்.

திருமகள் முதலில் நாரதரின் விமர்சனத்தை ஏற்காவிட்டாலும் பின்னர் குழம்புகிறாள்.index வைகுண்டம் திரும்பிய திருமாலுக்கு அதிர்ச்சி. திருமகள் ஆதிசேடன்மீது படுத்திருக்கிறாள். திருமால் திருமகளின் செயலைக் கண்டிக்கிறார். சர்ச்சை முற்றுகிறது. திருமகளின் குரல் உயர வைகுண்டமே ஆச்சரியம் கொள்கிறது. இறுதி முடிவாக, தேவி தான் மட்டும் படுத்துறங்க இன்னொரு நாகம் கேட்கிறாள். திருமால் அதற்கும் சம்மதிப்பதாய் இல்லை. உலகம் தூற்றும். புலவர்கள் இந்நிகழ்வை இகழ்ந்து பாடல் எழுதிவிடுவார்கள் என அஞ்சுகிறார். திருமகள் விடுவதாய் இல்லை. வாதம் முற்றி வைகுண்டம் அதிர்கிறது.

சண்டை உச்சத்தில் இருக்கும்போது திருமால் வழக்கம்போல மெல்ல சிரிக்கிறார். ஆணுக்குப் பெண் சமம் என்பதை எடுத்துரைக்கவே தாம் இப்படி ஒரு நாடகம் ஆடியதாகக் கூறி இனி ஆதிசேடன் மேல் எப்போது வேண்டுமானாலும் படுக்கலாம்; மேலும் தான் அப்போதெல்லாம் திருமகளுக்கு சாமரம் வீசுவேன் என்றும் கூறுகிறார். அதற்குமேல் பொறுக்க முடியாமல் திருமகள் சட்டென்று அவரின் பாதங்களில் விழுந்து தன்னை மன்னித்து அருளுமாறு வேண்டிநிற்கிறாள். திருமால் பெருமூச்சுவிட ஆதிசேடன் மட்டும் அழுவதாகக் கதை முடிகிறது.

இக்கதையில் வரும் ஆதிசேடனை மட்டும் தொன்மங்களில் இருந்து உருவி எடுத்து அதைச் சுற்றி ஒரு புனைவை உருவாக்குகிறார் கங்காதுரை. அன்பின் மூலம் எவ்வாறு அதிகாரம் சாத்தியப்படுகிறது என்றும் ஆண் தனது அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள செய்யும் சமரசங்கள் குறித்தும் இக்கதை புராணங்களின் துணையுடன் சொல்கிறது. புராணங்களை மீள்வாசிப்பு செய்வதும் அதில் நுண்ணிய பகுதியைக் கவனப்படுத்துவதும் அல்லது அதை மீள்வடிவாக்கம் செய்வதும் என பல படைப்பாளிகள் முயன்று கொண்டுதான் இருக்கிறார்கள். நவீன இலக்கியவாதிகள் நிகழ்கின்ற சம்பவங்களை ஆராயும் அதேசமயம் அதன் பின் இயங்குகின்ற உளவியலையும் கவனிக்கவே செய்கின்றனர். பிராய்ட்டின் கோட்பாடுகள் பலவும் நவீன இலக்கிய படைப்பாளிகளால் உள்வாங்கப்பட்டு படைப்பிலக்கியங்களின் மூலம் மனித மனதை ஆராயும் போக்கு தொடர்ந்துகொண்டுதான் உள்ளது. படைப்பிலக்கியவாதியும் ஒருவிதத்தில் உளவியலை ஆராய்பவனே. அழகு நிலா என்ற சிங்கப்பூர் எழுத்தாளர் அவ்வாறு தருமரின் உளவியலை அறிய முயலும் சிறுகதை ‘அலையும் முதல் சுடர்’ என்ற கதையை எழுதியிருக்கிறார்.

பாண்டவர்கள் எனச்சொன்னதும் தருமரின் அமைதி பொருந்திய முகம் சட்டென எவருக்கும் நினைவுக்கு வரும். பாரதத்தில் பலநூறு கிளைக்கதைகளில் தருமரின் முகம் அவ்வாறுதான் அமைதி ததும்ப காட்சிப்படுத்தப்படுகிறது. சிங்கப்பூர் எழுத்தாளர் அழகு நிலா தருமரின் அமைதியான முகத்துக்குப் பின் உள்ள உளவியலை தனது கதையின் களமாக்குகிறார்.

அழகு நிலா பார்வையில் அந்த அமைதி தாழ்வு மனப்பான்மையை மறைக்கும் பிடிவாதமானindex வேடம். தருமனுக்கு எப்போதுமே தாழ்வு மனப்பான்மை அழுத்துகிறது. பஞ்சப்பாண்டவர்களில் அர்ஜூனன் மற்றும் பீமனுக்கு மட்டுமே முக்கியத்துவம். தாய்க்குத் தலைப்பிள்ளை என்ற உரிமையைத்தவிர தனக்கு வேறு கவனம் கிடைப்பதில்லை என உள்ளூர குமுறுகிறார். துரியோதனனாவது தன் மனதில் என்ன நினைக்கிறானோ அதை அப்படியே எவ்வித கூச்சமும் இல்லாமல் வெளிப்படுத்தும் சுபாவத்தைக் கொண்டிருக்கிறான். தான் வஞ்சகன் என்பதை வெளிப்படுத்த அவனுக்கு மனத்தடை இருந்ததில்லை. ஆனால் தன்னால் அவ்வாறு இருக்க முடியாதது பெரும் உளைச்சலைத் தருகிறது. ஊர் உலகம் அவனை அறத்துக்கு அடையாளமாக நம்பிவிட்டதால் அதை மீற முடியாமல் திணறுகிறான். ஆனாலும் தாய்க்கு முதல் பிள்ளை என்ற அடையாளம் மட்டும் அவனை அவ்வப்போது சமாதானம் செய்கிறது. சகுனியிடம் சூதில் தோற்கும்போதும் குடும்பத்தில் மூத்தவனாக தான் எடுத்த முடிவு சரியே என்று நம்புகிறான்.

பாரதப்போர் தொடங்குகிறது. பாண்டவர்களின் வெற்றி உறுதியாகிக்கொண்டிருக்கையில் கௌரவர் படையில் கர்ணன் கொல்லப்படுகிறான். உயிர் பிரியும் தருவாயில் பாண்டவர்களின் தாய் குந்திதேவி கர்ணனை சுமந்து அழுகிறாள். அவனே தனது மூத்தமகன் என கதறுகிறாள். தருமனுக்கு மீண்டும் தனது அடையாளம் குறித்து சிக்கல் வருவதோடு கதை முடிகிறது.

மூத்தவன் என்ற பெருமையைத்தவிர தனக்கு வேறொன்றும் இல்லை என புலம்பும் தர்மனுக்கு தனக்கும் மூத்தவன் கர்ணன் எனத்தெரியும் தருணத்தை நோக்கி செல்லும் கதை இது என்றாலும் ஓர் ஆளுமையாகத் தன்னைக் கட்டமைத்துக்கொள்ளும் நிர்பந்தம் குறித்தும் இறுதியில் அந்த ஆளுமைக்குள் தானே மாட்டிக்கொண்டு வெளிவரமுடியாமல் தவிப்பது குறித்தும் ஆழமாகப் பேசும் கதை இது. படைப்பாளிகள் இதுபோன்ற ஆளுமைகளைக் கண்டு பிரமிப்பதில்லை. அவர்களின் அவதானிப்பும் வாசகப்பார்வையும் கூர்மையானது. ஆளுமைகளைச் சிதைத்துப்பார்ப்பதில் கவலை இல்லாத படைப்பிலக்கியவாதியே புதிய தரிசனங்களைக் கண்டடைகிறான். ஓர் எளிய வாசகன் கொண்டாட்ட மனநிலையுடன் சுவீகரிக்கும் படைப்பிலக்கியத்தில் இருந்து அதன் புனிதங்களை உடைத்தெரிகிறான். பிரபஞ்சன் ‘இராஜகோபுரமும் சங்கப்பலகையும்’ எனும் சிறுகதையில் அவ்வாறே செய்ய முயன்றுள்ளார்.

நக்கீரர் சங்ககாலப் புலவர். இவர் பண்டைய பாண்டிய நாட்டிலுள்ள மதுரையில் வாழ்ந்தவர். இவரின் மிக குறிப்பிடத்தக்க நூல் திருமுருகாற்றுப்படை மற்றும் இறையனார் அகப்பொருள் உரை.  பல்வேறு காலங்களில் வாழ்ந்த ஔவை எனும் புலவர்களின் பாடல்கள் அனைத்தும் ‘ஔவையார்’ எனும் அடையாளத்தின்கீழ் தொகுத்துப் பார்க்கபடுவது போலவே சங்கப் பாடல்களில் வரும் நக்கீரன், நக்கீரனார், மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் போன்றவர்களின் பாடல்கள் பலவும் நக்கீரர் பாடல்களாகத் தொகுத்து அனைவரும் ஒருவரே எனக் கதைகள் புனையப்படுகின்றன.

அப்படிப்பட்ட கதைகளில் பெண்ணின் கூந்தலில் இயற்கையில் வாசனையுண்டா என்று சர்ச்சையில் சிவனிடம் அஞ்சாது வாதிட்டவர் என்பது ஒரு தொன்மக்கதை. பிரபஞ்சன் ‘இராஜகோபுரமும் சங்கப்பலகையும்’ சிறுகதையில் இத்தொன்மத்தைக் கையாண்டுள்ளார்.

26-prapanchan-tamil-writer-600இச்சிறுகதை ‘திருவிளையாடல் புராணம்’ எனும் புகழ்பெற்ற சைவ இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டது.  திருவிளையாடல் புராணம் மதுரைத் தலபுராணமாகப் போற்றப்படுவது. பெண்களுக்கு இயற்கையில் கூந்தலில் மணம் இல்லை என வாதிட்ட நக்கீரனிடம் சிவன் நெற்றிக்கண்ணைத் திறந்து காட்டுகிறார். அப்போதும் நக்கீரர் தன் கருத்தில் உறுதியாய் இருக்கிறார். சிவனின் வாதம் பொய்யாக கடும் சினம் வருகிறது. பிரம்மனின் தலையைக் கொய்ததுபோல கொய்துவிடலாமா என்று நினைக்கிறான். பின்னர் அதற்கு ஈடான சொல்லை நக்கீரனை நோக்கி பிரயோகிக்கிறான் இறைவன்.

“அங்கம் புழுதிபட, அரிவாளில் நெய்பூசி
பங்கம் படவிரண்டு கால் பரப்பி – சங்கதனைக்
கீர்கீர் என அறுக்கும் நக்கீரனோ எம்கவியை
ஆராய்ந்து சொல்லத் தக்கவன்?”

உண்மையில் இப்பாடல் தனிப்பாடல் திரட்டு எனும் தொகுப்பில் இருந்து எடுத்துக் கையாளப்பட்டுள்ளது. நக்கீரனின் குலத்தொழில் சங்கை அறுத்து வளையல் செய்து விற்பது. உடலெல்லாம் புழுதிபட, சங்கு பொறுக்கி, அரிவாளில் நெய் தடவி, சங்கின் துகள் சிதறாமல்,  சங்கினை இரண்டாக பங்கம் செய்ய கால்கள் இரண்டையும் பரப்பி, கீர்கீரென்று சங்கை கீறும் நக்கீரனுக்கு தன் பாடலில் பிழை சொல்ல என்ன அருகதை உள்ளது என்று கேட்கிறார் சிவன். கீரனின் அறிவை ஈசனால் கோபத்தின் மூலமே கடக்க முடிகிறது.

சிவனின் நெற்றிக்கண் தீப்பொறியின் தாக்குதலுக்குப் பின் பொற்றாமரை குளத்திலிருந்து எழும் கீரர் குளத்தைப் பார்க்கிறார். குளம் இருட்டியிருக்கிறது. கோபுரத்தின் உச்சியில் இருந்த தீபம் உள்ளிருந்து நெளிகிறது. அப்போது கல் ஒன்று குளத்தில் விழுந்து நீரில் வளையங்களை உருவாக்குகிறது. கீரர் எழுந்து பிரகாராத்துக்கு வருகிறார். சந்தி பூஜை நடக்கிறது. அவருக்கு குளத்தில் கல்லெறிந்த சிறுவன் நினைவுக்குவர தீப ஆராதனை தொடங்கும் முன்பே எதிர்திசையில் நடப்பதாகக் கதை முடிகிறது.

சிறுகதையின் இறுதிப்பகுதியை முழுக்கவே படிமங்களால் உருவாகியுள்ளது. கீரருக்கு குளம் இருளாகத் தெரிகிறது. அதில் சிறுவன் எரிந்த கல்லால் உருவாகும் வளையம் பூஜையின்போது அவர் மனதில் தேவையில்லாமல் குறுக்கிடுகிறது. பிரபஞ்சன் மிக நுணுக்கமாக அந்த நீர் வளையங்கள் சங்கில் வளையம் செய்யும் அவர் சாதி அடையாளத்தைச் சொல்லி சிவன் திட்டியதை படிமமாகக் காட்டுகிறார். எத்தகைய கல்வியும் அறிவும் பெற்றிருந்தாலும் சாதியால் ஒருவரை கீழிறக்கி அதிகாரம் செய்யும் மனநிலைக்கு எதிராக ஆராதனையைத் தொடங்கும் முன்பே நக்கீரர் எதிர்திசையில் நடப்பதாக பிரபஞ்சன் எழுதியுள்ளது நவீன இலக்கியத்தின் வீச்சு.

தொன்மங்களைக் கையாள்வதில் ஜெயமோகன் இவர்களில் முற்றிலும் வித்தியாசமானDSC_0442 படைப்பாளி. பாரதத்தை ஒரு பேரிலக்கியமாக வர்ணிப்பவர். அதில் மானுட வாழ்வில் பிசைந்துகிடக்கும் அபத்தங்களில்,  லட்சியங்களில், தோல்விகளில்  தத்துவங்களைத் தேடுகிறவர். பாரதப்போருக்குப் பின்பானச் சூழலை அவர் புனைவாக எழுதியுள்ள ‘நதிக்கரையில்’ என்ற சிறுகதை வியாசர் பாரதப்போரை எழுதி முடித்தபோது நிகழும் வாதங்களையும் அதன் தொடர்ச்சியாக வியாசர் கங்கையைத் திரையாக்கி இறந்துபோனவர்களை எஞ்சியவர்களுக்கு காட்டும் காட்சியையும் உள்வாங்கி மறுஆக்கம் செய்யப்பட்டுள்ளது.

சிறுகதையில் முழுக்கவே ஒரு பெரும் அழிவுக்குப் பின்பான இருண்மை சூழ்ந்த மௌனம் கதாபாத்திரங்கள்வழி உருவாக்குகிறார். வியாசர் பாரதப்போரை எழுதுவது பீமனுக்கோ அர்ஜுனனுக்கோ உவக்கவில்லை. வியாசர் அதற்காகக் கொடுக்கும் விளக்கம் உலகம் முழுவதும் உள்ள பேரிலக்கியங்களுக்காகக் கொடுக்கப்படும் விளக்கமாக இருக்கிறது.

“எனது காவியம் வெற்றியைப் பாடுகிறது. அதற்குப் பின்னால் உள்ள தோல்விகளையும், சரிவுகளையும் சொல்கிறது. தோல்விக்குப் பின்னால் உள்ள மகத்துவங்களைப் பாடுகிறது. அன்புக்குள் வாழும் வெறுப்பையும் குரோதத்தின் ஊற்றுமுனையாகிய அன்பை, ஆக்கமும் அழிவும் கூடிமுயங்கும் வாழ்வை என் காவியம் பாடுகிறது. மானுட வாழ்வு எனும் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாத பிரவாகத்தைப் பற்றியே நான் எழுதியுள்ளேன். அந்தப் பிரவாகத்தை மகாதர்மமே வழிநடத்துகிறது. அம்மகாதர்மத்தின் பிரதிபலிப்பு ஒவ்வொரு துளியிலும் தெரியக்கூடும். என் காவியம் காட்டுவது அதையே.!” எனும் வியாசரின் விளக்கம் யாருடைய மனதையும் மாற்றவில்லை. அர்ஜுனன் மனிதவாழ்வு என்பது ஒரு பெரும் சரிவு என்கிறான். பீமன் தான் செய்த கொலைகளின் வெறி இன்னும் அடங்காமல் சினக்கிறான்.

வெற்றி என்பதை காலம் இன்னொரு சந்தர்ப்பத்தில் எவ்வாறான முரணான மனநிலைக்குள் இழுத்துச்செல்கிறது என மிகத்துள்ளியமாகச் சொல்லும் கதை இது. போர் முடிந்து பதினாறு வருடங்கள் கடந்தப்பின்பும் அந்தக் கசப்பு, காயம் மாறாமல் அவர்கள் மனதில் இருக்கிறது.

இறந்த மூதாதையரின் ஆத்மாக்களை காலப் பெருவெளியுடன் கலக்கும் பொருட்டு சபிண்டனம் எனும் சடங்கு நடக்கிறது. அதன்பின் இறந்த ஆன்மாக்களை காணமுடியாது என நம்பப்படுகிறது. அப்போது பாஞ்சாலி வீறிடுகிறாள். பூர்ணப் பிண்டம் வேண்டாம் என்கிறாள். அவளையும் அவளைப்போன்ற பிறரையும் சமாதானம் செய்யும் பொருட்டு வியாசர் ஒரு வழி செய்கிறார்.

கங்கையை திரையாக்கி இறந்துபோனவர்களை ஒரு கனவு போல அதில்  காட்டும்போது பெண்கள் கடலை நோக்கி ஓடுகின்றனர். வியாசர் அர்ஜுனனிடம் அவர்களைக் காப்பாற்றச் சொல்கிறார். அர்ஜுனன் அவர்கள் இறந்தாவது நிம்மதி பெறட்டும் என வேடிக்கைப் பார்க்கிறான். சிறுகதையின் இறுதியில் எழுதியுள்ள வரி மரணித்துவிட்ட உயிர்களுக்கு கொடுத்துள்ள மிகச்செறிவான படிமம்.
‘பெயரற்ற அடையாளமற்ற தவிப்பு மட்டுமேயான நிழல்கள்!’

கதைக்கும் சிறுகதைக்குமான இருவேறு சாத்தியங்களைத் தொன்மங்கள் கொடுக்கின்றன. குட்டிக்கதைகளாகவும் நன்னெறிக்கதைகளாகவும் எளிமைப்படுத்தப்படும் அவை தேர்ந்த வாசகன் மூலம் குறியீடுகளையும் ஆழ்படிமங்களையும் அடையாளம் கண்டு வாழ்க்கையைத் தத்துவார்த்தமாக அணுகவும் வைக்கிறது. கூரையின் உடைசலில் மழை ஒரு துளியாக வீட்டுக்குள் நுழையும்போது ஏற்படும் பரவசத்திற்கும் மொத்த மழையையும் ஒரு பெரும் நீர்ச்சொட்டாக்கி நனைவதற்கும் உள்ள பேதம் அது.

(Visited 360 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *