சாகாத நாக்குகள் 8 : உலகம் என்பது எளிமை!

kuazhakirisami6கனடாவில் உள்ள ஒரு தோழியிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் மூன்று குழந்தைகளுக்குத் தாய். கொஞ்சம் சோர்வு அவர் குரலில் இருந்தது. காரணம் வினவியபோது குழந்தைகளால் பிரச்னை என்றார். “ஏன் பள்ளிக்குப் போக அடம் பிடிக்கிறார்களா?” எனக் கேட்டேன். “இல்லை… எவ்வளவு கெஞ்சியும் பள்ளிக்கூடத்திற்கு விடுப்பு எடுக்க மாட்டேன் என்கிறார்கள்”.

எனக்கு அவருடைய பதில் ஆச்சரியமாக இருந்தது. மேலும் அங்குள்ள கல்வி சூழல் குறித்து அறியும் ஆவலில் பேசத்தொடங்கினேன்.  சுதந்திரமான கல்வி முறை. கற்பனை ஆற்றலை வளர்க்கும் பாடத்திட்டம். திறனை மையப்படுத்தியப் பள்ளிகள் என கவர்ச்சிகரமான கல்விச்சூழலை அந்நாட்டு அரசு ஏற்பாடு செய்திருந்தது. அவர் பேச பேச எனக்கு Tetsuko Kuroyanagi எழுதிய ‘Totto-chan, The Little Girl at the Window’ எனும் நூல் ஞாபகத்துக்கு வந்தது.

ஜப்பானிய தொலைக்காட்சியில் தோன்றும் புகழ்ப்பெற்ற நடிகை மற்றும் அறிவிப்பாளரான Tetsuko Kuroyanagi எழுதிய குழந்தைகளுக்கான இந்நூல் முதல் ஆண்டிலேயே 45,00,000 பிரதிகள் விற்பனையானது. ஒருவகையில் இது Tetsuko Kuroyanagi அவர்களின் அனுபவக் கதை. திரு.கோபயாஷி என்பவரின் சுய முயற்சியில் உருவான ‘டோமோயி’ எனும் பள்ளியைப் பற்றியும் அப்பள்ளியில் தான் பயின்ற அனுபவம் குறித்தும் இந்நூல் சுவாரசியமாக விவரிக்கிறது.

டோட்டோ – சான் ஒரு பள்ளியிலிருந்து நீக்கப்படுகிறாள். அதற்குப் பள்ளி நிர்வாகத்திடம் சில காரணங்கள் உள்ளன. முதலாவது காரணம், அவள் அடிக்கடி மேசை டிராயரை இழுத்து மூடுகிறாள். அது மற்ற மாணவர்களுக்குத் தொல்லையாக இருக்கிறது. இரண்டாவது காரணம், அவள் அடிக்கடி எழுந்து சன்னலின் ஓரம் சென்று விடுகிறாள். அங்கு செல்லும் வீதி இசைக்கலைஞர்களை அழைக்கிறாள். இந்தக் காரணங்கள் அவளை பள்ளியிலிருந்து நீக்க போதுமானதாக இருக்கின்றன. அவள் தாய் அவளிடம் அவ்வாறு செய்வதற்கான காரணம் கேட்கிறாள். டோட்டோவிடம் காரணம் இல்லாமல் இல்லை.

“வீட்டிலுள்ள என் மேஜையை நீ இழுப்பியே, அதில டிராயர்தான் இருக்கு… ஆனால் ஸ்கூல்ல உள்ள மேஜையின் மேல் பகுதியை நீ தூக்கி விடலாம். அந்த மேஜையே ஒரு பெட்டி மாதிரி இருக்கு. அதை திறந்து மூட நல்லா இருக்கு,” என தனது நியாயத்தைக் கூறுகிறாள். அதோடு இல்லாமல், புதிதாக அவள் சேரப்போகும் பள்ளிக்கு ‘இசைக்கலைஞர்கள் வருவார்களா?’ என ஆவல் பொங்க பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட வலி தெரியாமல் கேட்கிறாள்.  அம்மாவுக்குதான் வருத்தம். அவள் குணத்துக்கு ஏற்ற ஒரு பள்ளியைக் கண்டடைகிறாள். அதுதான் ‘டோமோயி’.

‘டோமோயி’ என்ற அந்தப் பள்ளி மற்ற பள்ளிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. கைவிடப்பட்ட ரயில்பெட்டிகள் வகுப்பறைகளாக மாற்றப்பட்டுள்ளன. சுதந்திரமான பாடத் திட்டம், சரிவிகித உணவு முறை, உடல் ஊனமுற்ற குழந்தைகளும் பங்குபெறும் வகையில் விளையாட்டுப் போட்டிகள், இயற்கையிலிருந்து நேரடியாக கற்பிக்கும் முறை, கேளிக்கைகள், இசையுடன் கூடிய உடற்பயிற்சி வகுப்புகள், திறந்தவெளிச் சமையல் வகுப்புகள் என கோபயாஷின் முழு கற்பனையில் குழந்தைகளுக்குக் குதூகலம் கொடுக்கவே அப்பள்ளி உருவாக்கப்பட்டுள்ளது.

கோபயாஷிக்கும் டோட்டோ- சானை மிகவும் பிடித்துப் போய் விடுகிறது. அவளை பேச விட்டு கேட்கிறார். அது அவளுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவளை அவ்வளவு பேசவிட்டுக் கேட்ட முதல் ஆசிரியர் அவர்தான். அதனாலேயே அவள் ஆர்வமாகப் பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறாள். தனது ஒவ்வொரு தவறுகளின் விளைவுகளை அறிந்து, அந்த அனுபவங்கள் மூலமே அதை திருத்தும் வகை செய்கிறார் திரு. கோபயாஷி.

பொதுவாகவே எல்லாப்பள்ளிகளிலும் உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்குப் பிரத்தியேக போதனா முறை இருக்கும். ஆனால் டோமாயில் எல்லா குழந்தைகளும் ஒன்றுதான். டோட்டோசானும் மாற்றுத்திறனுடைய நண்பர்களுடன் கலந்து பழகுகிறாள். மதிய உணவின்போது, எல்லாக் குழந்தைகளையும் ஒன்றாக அமர்த்தி, “கடலில் இருந்து கொஞ்சம், மலையில் இருந்து கொஞ்சம்” என அவரவர் உணவுகளைப் பகிர்ந்து கடல் மற்றும் நிலத்திலிருந்து கிடைக்கும் உணவை சரிசமமாக உண்ண பழக்கப்படுத்தப்படுகிறது.

முடிவில்லாத பயணத்தைத் தொடர்வதுபோல அந்த ரயில் பெட்டி வகுப்பறை மாணவர்களுக்குக் காட்சி கொடுக்கிறது. பக்கத்து ஜன்னல் ஓரம் காற்றில் அசையும் செடிகள் மாணவர்களை அவ்வாறு யோசிக்க வைக்கிறது. மாணவர்கள் விரும்பிய இடத்தில் அமரலாம். எந்தக் கட்டுப்பாடும் இல்லை. ஆசிரியர் அன்று படிக்க வேண்டிய பாடங்களைப் பட்டியலிட முதல் பாடத்தை மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப தொடங்கலாம். அதோடு மாணவர்கள் நீச்சல் குளத்தில் முழு நிர்வாணமாக நீந்தவும் அனுமதிக்கப்படுகிறார்கள். உடல்கூறு வித்தியாசம் கொடுக்கும் ஆர்வத்தை அகற்றும் திட்டத்திற்காகக் கோபயாஷி இந்த நீச்சல் நேரத்தைப் பயன்படுத்துகிறார். குழந்தைகளைப் பாடத்திட்டத்திற்குள் முக்கி எடுக்காத பள்ளியாக அதை மாற்றுகிறார்.  பள்ளி முடிவதற்குக் காத்திருக்கும் மாணவர்கள் மத்தியில் அந்தப் பள்ளி தொடங்குகின்ற நேரத்திற்காக அவர்கள் எதிர்பார்ப்பை இதயத்தில் ஏற்றுக்கொண்டு காத்திருக்க வைக்கிறார்.

டோட்டோ சான் அனுபவத்திலிருந்தே பலவற்றைக் கற்றுக்கொள்கிறாள். ஒரு சமயம் அவள்kira1_2403451g மலக்கூடம் செல்லும்போது அவள் அணிந்திருந்த தொப்பி குழியில் விழுந்து பின்னால் இருக்கும் மலக்குட்டைக்குள் விழுந்துவிடுகிறது. அவள் நேராக அந்த மலக்குட்டிக்குச் சென்று ஒரு வாளியால் குட்டையிலிருந்து அசுத்தங்களை வெளியே எடுத்துப்போட்டு தொப்பியைத் தேடுகிறாள். துற்நாற்றத்தால் அங்கே வந்த திரு.கோபயாஷி அவள் செய்கைக்கான காரணம் கேட்க அவளும் காரணம் சொல்கிறாள். அவர் ஒன்றும் சொல்லாமல் தொடரச் சொல்லி செல்கிறார். தொப்பி கிடைக்காதச் சோகத்தில் டோட்டோ சான் சோர்வாக அவ்விடத்திலிருந்து அகல திரு.கோபயாஷி வெளியே எடுத்துப்போட்டவற்றை மீண்டும் உள்ளே போடும்படி சொல்கிறாள். அவ்வறு செய்வது சாத்தியமில்லை எனப் புரிந்து கொண்ட டோட்டோ சான் இனி ஒழுங்காக இருக்கும் எதையும் கலைப்பதில்லை என முடிவுக்கு வந்து அதுபோல நடக்கிறாள். இவ்வாறு ஒழுக்கங்களை அனுபவம் மூலமாகவே போதிக்கும் ஓர் ஆசிரியராக திரு.கோபயாஷி இருக்கிறார்.

‘டோமோயி’ குறித்தும் கோபயாஷி குறித்தும் மிகப்பெரிய ஆர்வம் நம் மனதில் இந்நூலின் மூலம் வளர்ந்துகொண்டே போக, இரண்டாம் உலகப் போரில் பள்ளி அறைகளாகப் பயன்பட்ட ரயில்பெட்டி வகுப்புகளின் மீது விமானங்கள் ஏராளமான குண்டுகளை வீசி பள்ளியை அழிக்கின்றன. கோபயாஷி தன் பள்ளி எரிவதை அமைதியாகப் பார்க்கிறார். போர் சூழலால், டோட்டோ- சான் வேறு ஊருக்குக் குடும்பத்துடன் செல்கிறாள். கோபயாஷி அவளை வழியனுப்புகிறார். அப்போதும் டோட்டோ-சானுக்கு அவர் முன்பு சொன்ன சொற்கள் மனதில் மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது…

“உனக்குத் தெரியுமா? நீ உண்மையிலேயே நல்லப் பெண்”.

சுயவரலாற்று தன்மையில் அமைந்துள்ள இந்த நூல் குழந்தைகளின் உளவியல் குறித்த ஆழமான புரிதலை ஏற்படுத்தக் கூடியது. தமிழில் அவ்வாறு சில கதைகளை வாசித்ததுண்டு. குறிப்பாகக் கல்விச்சூழலை விமர்சித்தும் அதனூடே குழந்தைகளின் உளவியலைச் சித்தரித்தும் எழுதப்பட்ட கதைகள் தமிழில் அரிது. சா.கந்தசாமியின் ‘ஒரு வருடம் சென்றது’ என்ற சிறுகதை அப்படி எழுதப்பட்டதில் மிக முக்கியமானது.

ராஜா என்ற மாணவன் கெட்டிக்காரன். ஆனால் அவனுக்குக் கணக்கு மட்டும் வருவதில்லை. கோபம் வந்தால் மட்டும் அவன் திக்குகிறான். அதை மாணவர்கள் கிண்டல் செய்யும்போது அவன் வன்முறையைக் கையில் எடுக்கிறான். அவன் வகுப்பு ஆசிரியருக்கும் அவனுக்கும் ஒத்தே வருவதில்லை. எப்போதும் ஆசிரியரால் தண்டிக்கப்படுகிறான். அவன் கணக்கில் அதிகம் தவறு செய்வதால் காதை அவ்வப்போது பிடித்து திருகுகிறார் ஆசிரியர். எப்போதும் வெறுப்பும் கசப்புமே ராஜாவிடம் குடிகொண்டுள்ளது. அதனால் சிலேட்டை எடுத்துத் தரையில் அடிப்பான். பக்கத்தில் இருக்கிறவன் தொடையில் கிள்ளுவான். திடீரென்று பாய்ந்து சக மாணவன் முகத்தில் பிராண்டுவான். அதற்காக ஆசிரியரிடம் அடியும் பெற்றுக்கொள்வான். கொஞ்ச நாளில் அந்த ஆசிரியர் பள்ளி மாறிப்போக கமலம் என்ற ஆசிரியர் அவனுக்குப் போதிக்கத் தொடங்குகிறார்.

கமலம் டீச்சர் ஏற்கனவே அவனுக்கு அறிமுகம்தான். டீச்சர் ஒருமுறை தேசியகீதம் பாடும்போது அவன் அதை கேட்டு டீச்சரிக்கு தன் பாராட்டைத் தெரிவித்துள்ளான். அவனை அடையாளம் கண்ட கமலம் டீச்சர் அவன் அழகான கையெழுத்தைப் பாராட்டுகிறார். அவன் வாழ்வில் கேட்ட முதல் பாராட்டு அது. அவனை வகுப்பின் முன்புறம் அமர வைக்கிறார். அவனை அங்கீகரிக்கிறார். கணக்கில் அவனுக்கு இருக்கும் பிணக்குகளைச் சரிசெய்கிறாள். கமலம் டீச்சரின் அன்பு, அவன் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அவன்  சிலேட்டை எடுத்துத் தரையில் அடிப்பதில்லை; பக்கத்தில் இருக்கிறவன் தொடையில் கிள்ளுவதில்லை.

ஞாயிற்றுக்கிழமைகளில் அவன் கொண்டுவரும் தாழம்பூவால் மகிழ்ந்து கமலம் டீச்சர் அவனை அணைத்துக்கொள்வாள். அவன் டீச்சரின் அன்பில் கட்டுண்டிருக்கும்போது டீச்சர் தனக்கு திருமணமாகப்போவதை அவனிடம் சொல்கிறாள். அவன் அன்றிலிருந்து ஒருவாரம் பள்ளிக்குப் போகவில்லை. மீண்டும் சென்றபோது கமலம் டீச்சர் திருமணமாகி சென்றிருக்கிறாள். கமலம் டீச்சர் அவனை விசாரித்தது குறித்து பிற மாணவர்கள் சொல்லும்போதெல்லாம் அவன் எரிச்சல் அடைகிறான்.

சில நாட்கள் சென்றன. செவிட்டு வாத்தியார் ஒருவர்  புதிதாக அவன் வகுப்புக்கு வருகிறார். ராஜா மீண்டும் பின்வரிசைக்குச் செல்கிறான். கணக்கில் மீண்டும் பல தவறுகள் செய்கிறான்.

இந்தச்சிறுகதையில் உள்ள ராஜா என்ற மாணவன் கமலம் டீச்சரின் மேல் வைத்துள்ள அன்பை ஒரு மாணவன் ஆசிரியர்மேல் வைத்துள்ள மரியாதையுடன் மட்டும் ஒப்பிடக்கூடியதல்ல. அதை மீறிய நெருக்கம் அது. தன்னை அங்கீகரிக்கும் ஒருவரிடம் மட்டுமே இருக்கக்கூடிய நெருக்கம் அது. உண்மையில் குழந்தைகளை நாம் அங்கீகரிக்க முயல்வதில்லை. அங்கீகாரம் எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. கமலம் டீச்சர், தன் பாடலை ஒரு மாணவன் பாராட்டுவதில் ஏற்பட்ட மகிழ்ச்சியில் இருந்தே அவனுடன் நெருக்கமாகிறாள். அங்கீகாரம் இல்லாத போதனை அவர்களை வகுப்பை விட்டு துரத்துகிறது. டோட்டோ–சானுக்குத் தடையற்று பேச கிடைத்த வாய்ப்பு ஓர் அங்கீகாரம் போல ராஜாவுக்கு அதுவரை யாரும் கண்டுக்கொள்ளாத அவன் கையெழுத்தை ஆசிரியைக் கண்டுக்கொண்டது ஓர் அங்கீகாரமே. அந்த அங்கீகாரத்தின் மூலமே குழந்தைகள் தங்கள் உலகில் இன்னொருவரை நுழைய அனுமதிக்கின்றனர்.

குழந்தைகளின் வாழ்வைப் பேசுவது அத்தனை எளிதல்ல. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சொல்வதுபோல உலகில் மகத்தான விசயங்கள் அனைத்துமே எளிமையானவையே. குழந்தைகள் எளிமையானவர்கள். நேரடித்தன்மைக் கொண்டவர்கள். அவர்கள் மொழி எளிமையானது. அவ்வாறான ஓர் எளிமையை உணர அசலான கலை மனம் தேவைப்படுகிறது. அப்படியான ஒரு படைப்பாக சட்டென நினைவுக்கு வருவது கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’ என்ற சிறுகதை.

கதை குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே உருவாக்கிக்கொள்ளும் ஒரு போட்டியிலிருந்து தொடங்குகிறது. ராமசாமி எனும் பணக்காரச் சிறுவன் தன் சரித்திரப் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொள்கிறான். செல்லையா ஏழை. அவன் அந்த வருடம் சரித்திர நூல் வாங்கியிருக்கவில்லை. அதனால் தன்னிடமுள்ள ஒரு சிவிக்ஸ் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொள்கிறான். இருவரும் தங்கள் போட்டியை ஆரம்பிக்கின்றனர்.

ராமசாமி தன் புத்தகத்தை முதலிலிருந்து ஒவ்வொரு தாளாகத் திருப்புவான். படம் இருக்கும் பக்கத்தைச் செல்லையாவுக்குக் காட்டி, “இதோ, இந்தப் படத்துக்குப் பதில் படம் காட்டு” என்பான். செல்லையா தன் புத்தகத்தைத் திறந்து அதில் உள்ள ஒரு படத்தைக் காட்டுவான்; பிறகு, இருவருமே புத்தகத்தைப் பக்கம் பக்கமாகப் புரட்டுவார்கள். இப்படி பதிலுக்குப் பதில் படம் காட்டிய வண்ணம் புத்தகம் முழுவதையும் புரட்டுவார்கள். யார் புத்தகத்தில் அதிகப் படங்கள் இருக்கின்றனவோ அவன் ஜெயித்தவன். மற்றவன் தோற்றுப் போனவன். ராமசாமியின் சரித்திர புத்தகத்தில் அதிக படங்கள் இருக்க செல்லையா தோற்றுப்போகிறான். செல்லையா தோற்றதில் அவனின் உடன்பிறப்புகளான தம்பையாவுக்கும் மங்கம்மாளுக்கும் வருத்தம். ஆனால் வீட்டுக்கு அனைவரும் ஒன்றாய் நடந்து போகும்போது படப்போட்டி வேறொரு அவதாரம் எடுக்கிறது.

‘எங்கள் வீட்டில் அது இருக்கே, உங்கள் வீட்டில் இருக்கா?’ என்று இருவரும் ஒருவரிடம் ஒருவர் கேட்க ஆரம்பிக்கின்றனர். வசதியில் ராமசாமியைவிட செல்லையா குறைந்தவன் என்றாலும் மாமிசம் உண்ணாத ராமசாமியின் வீட்டில் கோழிகள் இல்லை. எனவே அவன் கிண்டலுக்குள்ளாக்கப்படுகிறான். மற்றப் பிள்ளைகள் எல்லோரும் ஒன்று கூடிக்கொண்டு அவனைப் பரிகாசம் செய்வதை அவனால் தாங்கமுடியாமல் ஓடி ஒளிந்துகொள்கிறான்.

செல்லையா குடும்பத்தை அப்பியிருக்கும் வறுமையை கதையின் இழையோட்டமாகச் சொல்லிச்செல்லும் ஆசிரியர் எச்சில் இலை பொறுக்கித்தின்னும் ராஜா எனும் இன்னொரு சிறுவனை அறிமுகம் செய்கிறார். அவன் உடலில் சிரங்குகளுடன் அறிமுகமாகிறான். அனாதையான அவனுக்கு செல்லையாவின் அம்மா கரிசனம் காட்டுகிறாள். மறுநாள் தீபாவளிக்கு அவனையும் குளிப்பாட்டியப்பின்தான் அவன் உடுத்த புது உடை இல்லை என்ற எண்ணமே உதிக்கிறது. கணவனுக்காக வாங்கி வைத்திருந்த ஒரே ஒரு துண்டையும் அவனுக்குக் கொடுக்கிறாள்.

இதற்கிடையில் ராமசாமியின் அக்காளைக் கல்யாணம் செய்துகொண்டவன் ஒரு ஜமீன்தாரின் மகன். அந்த வருஷம் தலை தீபாவளிக்காக அவனை அன்று மாலையில் அழைத்து வந்திருந்தார் ராமசாமியின் தகப்பனார். தீபாவளிக்கு முதல் நாள்தான் மாப்பிள்ளை வந்து இறங்கினார். அதற்கு முன் பத்துப் பதினைந்து நாட்களாக பலமுறை, “ராஜா வர்றார், சிறப்பாகச் செய்யணும்” என்று அவர் சொல்லிக்கொண்டே இருந்தார்.

காலையில் வீதிக்கு ஓடிய மங்கம்மா ராமசாமியின் வீட்டுப் பக்கம் இருந்த எச்சில் இலைகளைப் பார்க்கிறாள். மங்கம்மாளைப் பார்த்ததும் ராமசாமியும் பக்கத்தில் ஓடிவந்தான்.

“எங்க வீட்டுக்கு ராஜா வந்திருக்கார்!” என தன் அக்காள் கணவன் குறித்து சொல்கிறான். ஆனால் அவன் சொன்னதற்குக் காரணம் சந்தோஷம்தானே ஒழிய மங்கம்மாளைப் போட்டிக்கு அழைப்பதற்கு அல்ல. ஆனால், அவளோ வேறுவிதமாக நினைத்து விடுகிறாள். முதல் நாள் பள்ளிக்கூடத்திலிருந்து வந்தபோது  நடந்த போட்டிதான் அவள்  ஞாபகத்தில் இருந்தது. அவன் சொன்னதற்குப் பதில் சொல்லி அவனுடைய ‘பெருமை’யை மட்டம் தட்டவேண்டும் என்று அவள் மனம் துடிக்கிறது.

யாதொரு திகைப்பும், தயக்கமும் இல்லாமல் ராமசாமியைப் பார்த்து, மிக மிக ஏளனமாகச் சொல்கிறாள்.

“ஐயோ! உங்க வீட்டுக்குத்தானா ராஜா வந்திருக்கார்? எங்க வீட்டுக்கும் தான் ராஜா வந்திருக்கார். வேணும்னா வந்து பாரு.”

மிகச்சிறந்த சிறுகதைக்கான எடுத்துக்காட்டாக இக்கதையைக் கூறலாம். கொஞ்சமும் மிகையில்லாமல் குழந்தைகளின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ள விதமும் குழந்தைகள் மூலம் எதையும் குறிப்பிட்டு சொல்ல முனையாமல் அவர்கள் தங்கள் இயலாமையின் இடைவெளிகளில் நிரப்பிவைத்துள்ள வேறுமாதிரியான சந்தோஷங்களையும் அவர்களே உருவாக்கிக்கொள்ளும் அவ்வப்போதைய விளையாட்டுகளையும் மிகையில்லாமல் சொல்கிறார். ஒரு துண்டு வாங்க ஒரு தீபாவளிக்குக் காத்திருக்கும் குடும்பம் அண்டி வந்த சிறுவனுக்கு அதையும் கொடுப்பதில் கிடைத்திருக்கும் முக்கியத்துவம் அவனை ராஜாவாகக் காட்டியுள்ளதா? அல்லது அவன் பெயர் அதற்கு காரணமாக உள்ளதா என்ற இடைவெளியே கு.அழகிரிசாமியின் கலை நுட்பத்தைக் காட்டுகிறது. தன்னிடமுள்ள அதிமுக்கியமான ஒன்றை அரசனுக்கு அன்பளிப்பாகத் தருவதுபோல அம்மா துண்டைக்கொடுக்கும் விதமும் அதன் பின்பான அவள் இயலாமையின் முகமும் கதைக்கு வெவ்வேறு பரிணாமங்களைக் கொடுக்கக்கூடியது. குழந்தைகளைக் கூர்மையாக அவதானிக்கும் ஒருவரால் மட்டுமே இத்தகைய சிறுகதையை எழுதமுடியும். அவர்கள் உலகம் தனித்துவமானது. அப்படியான உலகைக் காட்ட முயலும் மற்றுமொரு சிறுகதை கி.ராஜநாராணனின் ‘கதவு’.

முன்பு வசதியாக வாழ்ந்து நொடித்துப்போன ஒரு குடும்பம் பழைய காரைவீட்டில் வசித்து வருகிறது. பெரிய ஒரே கதவாகப் போடப்பட்டுள்ள காரை வீடு அது. அந்தக் கதவில் ஏறிக்கொண்டு முன்னும் பின்னும் கதவை ஆட்டி பேருந்தில் பயணம் செய்வதாக விளையாடுவதும் டிக்கெட் கொடுப்பதுபோல பாவனை செய்வதும் வெவ்வேறு ஊர்களில் இறங்கிக்கொள்வதாக கற்பனை செய்வதுமே அங்கிருக்கும் குழந்தைகளுக்கு விளையாட்டு. அதில் அவர்கள் அதி உற்சாகம் அடைகின்றனர்.

ஒருமுறை அக்காளுக்கு ஒரு தீப்பெட்டி கிடைக்கிறது. அதில் நாயின் படம் இருக்கிறது. நாயின் படத்தை கம்மாஞ்ச்சோற்றினால் கதவில் ஒட்டுகிறாள். கதவுதான் குழந்தைகளுக்கு எல்லாமுமாக இருக்கிறது. ஆனால் அம்மா கொடுத்தக்கடனைத் திருப்பித்தராத கோபத்தில் கடன் கொடுத்தவன் அவ்வீட்டில் கதவை தூக்கிக்கொண்டு போய்விடுகிறான். கதவை கடன் கொடுத்தவர்களின் வேலையாட்கள் தூக்கிச்செல்வது அவர்களுக்கு பல்லக்குத்தூக்குவது போல இருக்க பாவனையாக நாதஸ்வரமும் மேலமும் வாசித்தப்படி பின்னால் செல்கின்றனர்.

கதவு இல்லாத காரணத்தால் வாடைக்காற்றும் குளிரும் அவ்வீட்டில் இருக்கின்ற கைக்குழந்தையைப் பாதித்து குழந்தை இறக்கிறது. கதவு இல்லாத வீடு பெரும் அச்சுறுத்தலாய் அவர்களுக்கு இருக்கின்ற சூழல் தம்பி ஒரு புதர் ஓரம் கரையான் அடித்த தங்கள் வீட்டுக்கதவைக் கண்டுப்பிடிக்கிறான். கதவை தழுவி முத்தமிடுகிறார்கள் இருவரும். காரணம் தெரியாமல் கண்ணீர் வருகிறது.

Littleprinceகுழந்தைகளுக்கு எப்போதுமே விளையாட்டுக்கென தயாரிக்கப்பட்ட ஒரு பொருள் பெரும் அர்த்தங்களைக் கொடுப்பதில்லை. அவர்கள் தங்களுக்கான விளையாட்டுகளை தாங்களே கண்டடைகிறார்கள். டோட்டோ சானின் ரயில்பள்ளிக்கூடம் கொடுக்கும் கற்பனையான பயணம் கொடுக்கும் உற்சாகம்போலவே ‘கதவு’ சிறுகதையில் வரும் சிறுவர்களுக்கு கதவில் பிரயாணமும் அமைகிறது. கீழே கிடைக்கும் ஒரு தீப்பெட்டிக்கூட அவர்களுக்கு அவ்வளவு அர்த்தம் பொதிந்ததாகிவிடுகிறது. குழந்தைகளை அவர்கள் கேள்விகள் மூலமே அறிந்துகொள்ள முடிகிறது. சில சமயம் அக்கேள்விகள் அபத்தமாகத் தோன்றினாலும் பல சமயங்கள் தணிகைகள் இல்லாத அவர்கள் கண்களில் காணும் உலகம் அத்தனை முரண்கள் கொண்டதாகவே இயங்குகிறது.

குழந்தைகள் புத்தகம் என்று பொது அடையாளம் சூட்டப்பட்ட போதும் ‘குட்டி இளவரன்’ என்ற பிரஞ்சு எழுத்தாளரான எக்சுபெரியின் நாவல் அதுபோன்ற ஒரு சிறுவனின் கேள்வி மூலம் வாழ்வின் ஆழமான உண்மைகளை எடுத்துச் சொல்கிறது. இந்நாவலில் வரும் குட்டி இளவரசன் கேட்கும் கேள்விகள் குழந்தைகள் கேள்விகள் போல எளிமையானவை ஆனால் தத்துவார்த்தமானவை. வாழ்வின் புதிர்த்தன்மையையும் அபத்தத்தையும் விவரிப்பவை. உலகை எந்த மனத்தடையும் அற்று நெருங்க சொல்பவை.

பெரியவர்கள் ஒரு போதும் எதையும் தாங்களாகவே புரிந்து கொள்வதில்லை. எப்போதும் ஒயாமல் விளக்கங்களைத் தருவது குழந்தைகளுக்குச் சலிப்பு தருவதாக இருக்கிறது. என்று ஆரம்பிக்கிறது நாவல்.

விமான ஒட்டியாக உள்ள கதை சொல்லி விமானம் பழுதடைந்து ஒரு பாலைவனத்தில் விமானத்தை இறக்குகிறான். அங்கே துணைக்கு யாருமேயில்லை. வாழ்வா சாவா என்ற பிரச்சனையில் தனியே தடுமாறுகிறான். தற்செயலாக விடியலின்போது ஒரு சின்ன குரல் அவனை அழைக்கிறது. அது குட்டி இளவரசனின் குரல். அழகான சிறுவயது தோற்றம்.

அவன் தனக்கு ஒரு ஆட்டுக்குட்டியை வரைந்து தரும்படியாக கேட்கிறான். சின்ன பையனாக இருக்கிறான். இங்கே எப்படி வந்தான் என்று புரியாமல் அவன் கேட்டபடியே ஒரு ஆட்டுகுட்டியின் படம் வரைந்து தருகிறான் விமானி..  அந்த சிறுவன் வேறு ஒரு கிரகத்திலிருந்து வந்திருப்பதை அறிந்து  அவனிடம் விசாரிக்கிறான். சிறுவன் தான் எங்கிருந்து வந்தேன் என்பதை சொல்ல துவங்குகிறான்.

அந்த சிறுவனின் கிரகம் ஒரு வீட்டினை காட்டிலும் சற்றே பெரியது. அவன் தன்னுடைய கிரகத்தில் ஒரே நாளில் நாற்பத்து மூன்று முறை சூரியன் மறைவதைப் பார்த்ததாக சொல்கிறான். குட்டி இளவரசன் பூக்களோடு பேசுகிறான். சித்திரத்தில் உள்ள ஆடு என்ன சாப்பிடும் என்று கவலை கொள்கிறான். மலருக்கு ஏன் முள் தேவைப்படுகிறது என்று சிந்திக்கிறான். தனி ஒருவனாக கிரகத்தில் அவன் வாழ்வதால் அந்த கிரகத்தை சுத்தம் செய்வது முதல் சகல வேலைகளையும் அவன் ஒருவனே செய்ததாகச் சொல்கிறான்.

ஒரு வேலையைத் தேடிக் கொள்ளவும் அறிவை வளர்த்துக் கொள்ளவும் தன்னை சுற்றிய சிறு கிரகங்களை நோக்கி அவன் பயணம் செய்ய துவங்கினான்.

முதல் கிரகத்தில் ஒரு அரசன் வாழ்ந்து வந்தான். அவன் குட்டி இளவரசனை கண்டதும் ஆகா இதோ ஒரு குடிமகன் என்று உற்சாகமாக வரவேற்று தன் அதிகாரத்தைக் காட்ட துவங்குகிறான். இன்னொரு கிரகத்தில் ஒரு தற்பெருமைகாரனை சந்திக்கிறான். அடுத்த கிரகத்தில் ஒரு குடிகாரன். மற்ற கிரகத்தில் ஒரு பிசினெஸ்மேன். ஆறாவது கிரகத்தில் ஒரு வயதான எழுத்தாளர் . இப்படி அவன் சந்தித்த மனிதர்கள் யாவரும் அவனைத் தனது வேலையாள் போல அபத்தமாகவே நடத்துகிறார்கள். ஆனால் இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு சிறுவனின் பார்வையில் பெரியவர்கள் எத்தனை அபத்தமானவர்கள் என்று உணர்த்துவதற்கான முன்னுதாரணங்கள்.

ஏழாவதாக அவன் பூமிக்கு வருகிறான். அதன்பிறகு விமான ஒட்டியை சந்தித்து அவனுடன் பழகி நட்பாகிறான். தனது தனிமையை விமான ஒட்டி குட்டி இளவரசனோடு கழிக்கிறான்.

குட்டி இளவரசன் வானில் உள்ள நட்சத்திரங்கள் வெறும் ஒளி அல்ல. அவை கண்ணுக்குத் தெரியாத சிரிப்பு. அதை நீ உணர வேண்டும் என்று கற்று தந்துவிட்டு பிரிந்து போய்விடுகிறான். உயிர்தப்பி சொந்த ஊர் வந்த விமானி தன் வாழ்வில் நடந்த மறக்க முடியாத சம்பவத்தையும் அந்த குட்டி இளவரனையும் அவன் உலகின் மீது கொண்டுள்ள பற்றையும் நினைவில் கொண்டபடி அவன் மறுமுறை வரக்கூடும் என்று ஏக்கத்துடன் காத்திருப்பதோடு நாவல் முடிகிறது.

ஆயிரக்கணக்கான ரோஜா வளர்க்க தெரிந்த மனிதனுக்கு ஒரு ரோஜாவினை கூட புரிந்து கொள்ள முடிந்ததில்லை என்று குட்டி இளவரன் ஆதங்கம் ஒரு குழந்தையில் கேள்விபோல ஒரே சமயம் அர்த்தமின்றியும் ஆழமான தத்துவத்தையும் கொண்டுள்ளது.

குழந்தைகள் தங்கள் உலகில் தங்களுக்கானவற்றை மீட்கின்றனர். குழந்தைகளை கீழே குனிந்து பார்த்துக்கொண்டிருக்கும்வரை அவர்கள் உலகம் பெரியவர்களுக்குப் புரிவதே இல்லை. நல்ல படைப்பாளன் தன் புனைவின் மூலம் குழந்தைகளின் சமவயதுக்குச் சென்று விளையாடத் தொடங்குகிறான். அவர்கள் தோளில் கைப்போட்டுக்கொள்கிறான். அவனால் தனது பாலியத்தை மீட்க முடிகிறது. எல்லா பெரியவர்களும் ஒரு காலத்தில் குழந்தையாய் இருந்தவர்கள்தான்.

 

(Visited 280 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *