ஜூல்ஸுடன் ஒரு நாள் : தப்பிக்க முடியாத உண்மை

naveen-2ஒரு சின்னஞ்சிறிய நாவல் மிக நீண்டநாள் வாழ்ந்துமுடித்துவிட்ட அயற்சியைக் கொடுக்கமுடிவது குறித்து இப்போதுவரை ஆச்சரியமாக இருக்கிறது.  ஒரு நாவலில் உள்ள கதாபாத்திரம் ஒன்றுக்கு மரணம் நிகழ்வதை எளிதாகக் கடக்க முடிகிறது. மனித அழிவுகளும் வதைகளும் நாவலில் இடம்பெறுவதைக்கூட வரலாற்றின் ஒரு பக்கமென கசப்புகளைச் சுமந்து செல்ல முடிகிறது. ஒரே ஒரு மரணத்தை நாவல் முழுவதும் நிறைப்பதென்பது பிணத்தைச் சுமந்து நடப்பதுபோல ஒரு கனமான  அனுபவம். ‘மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள்’ என்ற டயான் ப்ரோகோவன் நாவல் அவ்வாறான ஒரு சுமையை வாசகனிடம் கடத்துகிறது.

தன் கணவன் ஜூல்ஸுடன் தனியாய் வசிக்கும் ஆலிஸ், ஒருநாள் காலையில் புத்துணர்ச்சியுடன் எழுகிறாள். இருவரும் வயதான தம்பதிகள்.  அவள் எழ காபியின் மணம் காரணமாக இருக்கிறது. அது ஜூல்ஸ் தயாரித்ததுதான்.  காலையில் காபியைத்  தயார் செய்வது எப்போதும் ஜூல்ஸ்தான். ஒருவகையில் வீட்டில் அவர் அதை மட்டுமே செய்வார். படுக்கையறையிலிருந்து எழுந்து வருகிறாள் ஆலிஸ். ஹாலில் சோபாவில் அமர்ந்திருக்கும் கணவன் அருகில் அமர்கிறாள். அசைவுகள் ஏதுமில்லாமல் அமர்ந்திருக்கும் அவர் தோளில் கைவைத்தபோதுதான் தெரிகிறது. ஜூல்ஸ் இறந்து போயிருக்கிறார் . அவளுக்கான இறுதி காபியைத் தயார் செய்துவைத்து இறந்துள்ளார்.

தான் கூறாதவரை உலகுக்குத் தன் கணவன் இறந்தது தெரியப்போவதில்லை. உலகுக்குnaveen தெரியாதவரை தன் கணவன் மரணம் எப்படி நிகழ்ந்ததாக இருக்க முடியும் என யோசிக்கிறாள் ஆலிஸ். இந்தப்பகுதி உண்மையில் என்னை அமைதியிழக்க வைத்தது. தினசரி வாழ்வில் அலைக்கழிக்கப்படும் மனம் அனுபவங்களால் மட்டுமே இசையவில்லை. அது அறிவிப்புகளால் ,தகவல்களால், செய்திகளால், வதந்திகளால், புகார்களால், அனுமானங்களால், நிபந்தனைகளால் நிறைந்துள்ள சொற்களின் மூலமே மனதை ஆக்கிரமிக்கிறது. தற்காலிகமாக அனுபவங்களின் வெளிகளை நிரப்பி இம்சிக்கின்றன.  பெரியதாகவோ சிறியதாகவோ நிகழ்ந்து முடிந்த ஒரு சம்பவம் நம்மை வந்து அடையாதவரை இவ்வுலகத்தில்  நமக்கு அது நிகழவில்லைதான்.

தன் துயரத்தினை வெளியிட்டால், அலங்கரிக்கப்பட்ட அழகிய பெட்டியில் சில மணி நேரங்களில் ஜூல்ஸை எடுத்துச் சென்றுவிடுவார்கள் என அவளுக்கும் தெரியும். அதை அவள் மனது ஏற்கவில்லை. இன்னும் ஒரே ஒருநாள் ஜுல்ஸுடன் வாழ்ந்து விடுவது என்று முடிவு செய்கிறாள். வெளி உலகிலிருந்து மறைப்பதற்கான வழிகளைத் திட்டமிடுகிறாள். வாடிக்கையான நிகழ்வுகளைக் கொண்ட சாதாரண நாள் ஒன்றை அவள் உருவாக்க நினைக்கிறாள்.

ஜூல்ஸுடன் பேசுகிறாள். கீழே விழுந்து கிடக்கும் அவரது மூக்குக்கண்ணாடியை அவருக்குப் போட்டுவிடுகிறாள். குளிர் என்பதால், சால்வையைப் போர்த்தி, கால்களில் காலணிகளை மாட்டி விடுகிறாள். செய்தித்தாளை அவர் மடியில் போட்டுவிட்டு, காலைச் சிற்றுண்டி உண்கிறாள். குளித்து, தேர்ந்தெடுத்த ஆடைகளை அணிகிறாள்.  சிறிது நேரம் அருகே படுத்து உறங்க முயற்சி செய்கிறாள். அப்போது அவள் சொல்லும் வரிகள் யாரின் மனதையும் கணக்க வைப்பவை.

“நீங்கள் ஏன் படுக்கையிலேயே செத்துப் போகவில்லை? அப்போது நாம் போர்வைக்குள்ளேயே ஒரு குட்டித் தூக்கம் போட்டிருக்கலாம்.”

தப்பிக்கவே முடியாத மரணம் என்ற உண்மையுடன் அவள் பொய்களால் நடத்தும் போராட்டமும் பின்னர் நிதர்சனம் கொடுக்கும் கண்ணீரும் வாசகனை அமைதியழக்க வைப்பவை.  தொடர்ந்து அவள் தன் கணவனுடன் பேசிக்கொண்டே இருக்கிறாள். முன்னெப்போதும் பேசவே துணியாத சிலவற்றை அவள் அந்த நாளில் பேசுகிறாள்.

அவருக்கு மிகவும் பிடித்த, வோல்கா என்னும் பெண்ணிடம் அவருக்கிருந்த காதலையும்  அவர் அவளுடன் வெளிநாட்டில் தங்க ரகசியமாக போட்ட திட்டங்களையும் தான் எவ்வாறு முறியடித்தாள் என்பதையும் நிதானமாகக் கூறுகிறாள். ஒரு சிறுத்தையின் கரங்கள் போல சட்டென தன் நகங்களை உள்ளிழுத்து மென்மையான பாதங்களில் வருடி, அந்த சூழ்ச்சிக்கு அடியில் இருப்பது அவன் மீதான காதல் என்கிறாள். அவரது இதழ்களில் முத்தமிட்டு, “ தயவு செய்து என் மேல் கோபப்படாதீர்கள்.” என்று சொல்கிறாள் . அவளுக்கு இனி குற்ற உணர்ச்சி இல்லை.

ஆரம்பக் கட்ட ’கருச்சிதைவு’ குறித்து அவள் பகிரும் இடம் கனமானது. அக்கருசிதைவு அவளை வதைத்துள்ளது. மலத்தொட்டியில் விழுந்த அக்கருவை ஒரு பழைய நாளிதழில் அவர் அடக்கம் செய்தது இப்போதும் அவளுக்கு நினைவில் சுடுகிறது.

ஒரு எளிய நாளை எப்படியும் கடந்துவிட ஜூல்ஸின் உடலைச் சுற்றிச் சுற்றி நடக்கிறாள்.  கடந்த கால நினைவுகளும், அன்றைய வலிகளும், எதிர்க்கொள்ளப்போகும் தனிமையின் வெறுமையும் அவளை வாட்டுகின்றன. தன் மகனிடம் கூட இதைச் சொல்லாமல் தவிர்க்கிறாள். அது அவளுக்கான நான். அவருடனான நாள். ஆனால், அதிலும் ஒரு சிக்கல் வருகிறது.

அவர்கள் வாழும் அதே அடுக்குமாடியின் கீழ்த்தளத்தில் வசிக்கும் டேவிட் என்ற சிறுவன்  சரியாகப் பத்து மணிக்கு ஜூல்ஸுடன் சதுரங்கம் ஆட வருவது வழக்கம். அவன் ஆடிஸ்டிக் சிறுவன். சிறுவனின் தாயாரிடம் உண்மையை மறைக்கிறாள் ஆலிஸ். அவருக்கு உடல் நலமில்லை எனக்கூறி அவனுடன் ஜூல்ஸுக்கு பதிலாக விளையாடுகிறாள். டேவிட்டுக்கு அவளுடன் விளையாடுவதில் விருப்பம் இல்லை. அது ஆடிஸம் நோய் உள்ளவர்கள் பண்பு. பழக்கம் இல்லாத புதிய ஒன்றை அவர்கள் தவிர்ப்பர். புதியவை அல்லது புதிய முறை அவர்களை அச்சம் கொள்ளச்செய்யும். ஆனால் டேவிட் ஜூல்ஸின் மரணத்தை அறிந்து கொள்கிறான். அவனுக்கு அது ஒரு பொருட்டாக இல்லை. அது பற்றி ஒன்றும் கூறாமல் இருக்கிறான். மீண்டும் அழைத்துப்போக வரும்  தன் அம்மாவிடம் கூட  எதையும் வெளிகாட்டவில்லை. ஆலிஸின் அன்றைய நாள் மிக இயல்புக்குத்திரும்ப அவனும் இணைந்து செயல்படுகிறான்.

ஒரு விதத்தில் ஒட்டுமொத்த நாவலுக்கும் இச்சிறுவன் ஒரு குறியீடு. டேவிட்டின் தாய் பியா, அவள் அம்மாவுடன் மருத்துவமனையில் தங்க நேர்வதால், டேவிட்டை ஆலிஸிடம் ஒப்படைக்கிறாள். அன்று இரவு தன் வழக்கத்திற்கு மாறாக டேவிட் ஆலிஸுடன் ஜூல்ஸின் படுக்கையில் உறங்கி விடுகிறான் . அவனுக்கு அவன் நேரப்படி எல்லாம் நடக்க வேண்டும். இப்போது ஆலிஸுக்கும் ஆட்டிஸம் கொண்ட டேவிட் என்ற சிறுவனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இருவரும் புதியதை சந்திக்க விரும்பாமல் இருக்கின்றனர். இருவருக்கும் வழக்கமான ஒன்று எப்போதும்போல நடைப்பெற வேண்டும். உலகில் அவ்வாறு நிகழ சாத்தியம் இல்லை என டேவிட்டுக்குத் தெரியாது. ஆலிஸ் மனம் அதை அறிந்து வைத்துள்ளது. அதை மறக்க நினைப்பதுதான் இந்நாவலின் சாரம்.

டயான் ப்ரோகோவன் மிக நுட்பமாக இந்நாவலை எழுதியுள்ளார். நாவலை மொழிபெயர்த்துள்ள கவிஞரான ஆனந்த் கவித்துவமான மொழியால் நாவலை நெருங்க வைக்கிறார். காலச்சுவடு மிக நேர்த்தியாக பதிப்பித்துள்ளது. வாசிக்கப்பட வேண்டிய நாவல்.

(Visited 141 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *