‘அப்பா’ : சப்பென்று போன சமையல்!

appa-71மலேசிய இலக்கியச் சூழலில் மு.வரதராசன் நாவல்கள் குறித்து விமர்சனம் வைக்கும்போது அதற்கு எதிர்வினையாக நம்முன் வீசப்படுவது அதில் உள்ளடங்கியுள்ள அறநெறி கருத்துகள்தான். கதைமாந்தர்கள் சில கொள்கைகளின் பிரதிநிதிகளாக உருவெடுத்து, வாசகர்கள் முன் வைக்கும் வாதங்கள்தான் அவற்றில் உரையாடல்களாக இருக்கும்.  மனிதன் வாழ்க்கைக்குத் தேவையான அத்தனைக்கருத்துகளும் அதில் உள்ளடங்கியுள்ளதாக வாதிடப்படும். எனவே அது மாபெரும் இலக்கியமாகப் போற்றப்படும்.

உண்மையில்  இலக்கிய வாசிப்பின் அனுபவம் என்பது தொடர் பயிற்சியால் கிடைக்கப்பெறுவது. இப்பயிற்சி பள்ளிகளிலும் கல்லூரிகளும்  கிடைத்துவிடுவதாக பலர் நம்பிவிடுவதுண்டு. இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் இலக்கியம் முடித்தவர்கள் பலர் இப்போது நம் நாட்டில் தமிழ் ஆசிரியர்களாக இருக்கின்றனர். அவர்கள் காலத்தில் தமிழ் இலக்கியப்பாடத்திற்கு மு.வ மற்றும் ந.பா போன்றவர்களின் ஆக்கங்கள்தான் பாடத்திட்டத்தில் புகுத்தப்பட்டன. இப்படி அவர்கள் வாழ்நாளில் பரிட்சைக்காக வாசித்த ஒன்றிரண்டு நாவல்களின் உள்ளடகத்தை ஒப்புவித்தே  வாழ்நாள் முழுக்க தங்கள் வாசிப்பு பழக்கத்தில் பார்லிஷ் போட்டுக்கொள்பவர்கள் பலர். அவர்கள் வாழ்நாளில் அந்த நாவலை எழுதியவரே முக்கிய எழுத்தாளர். அந்நாவலையோ அல்லது அந்த எழுத்தாளரின் ஆளுமையைக் கேள்வி எழுப்புவது அவர்கள் பல ஆண்டுகளாக தாங்கள் உலகில் மிகச்சிறந்த காவியத்தை வாசித்துவிட்டதாக வைத்திருக்கும் நம்பிக்கையைக் கேள்வி எழுப்புவதாக மாறிவிடுகிறது.  உடனே அவர்கள் பதற்றமும் கோபமும் அடைகிறார்கள். தங்கள் எழுத்தாளருக்காகப் பேசத்தொடங்குவதன் மூலம் தங்களைத் தற்காத்துக்கொள்கிறார்கள்.

வாசிப்பு போலவே திரைப்படம் பார்ப்பதும் பயிற்சியினால் கைக்கூடுவதுதான். திரைப்படத்திற்கென ஒரு மொழி உள்ளது. அந்த மொழியைத் தமிழில் வெகுசில இயக்குனர்களே கைவரப்பெற்றுள்ளனர். அம்மொழி துளியும் இல்லாத திரைப்படம்தான் சமுத்திரக்கனியின் ‘அப்பா’.
முதலில் இத்திரைப்படம் காலத்திற்குத் தேவையான உள்ளடக்கத்தைக் கொண்டது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஒரு குழந்தையின் ஆளுமையை அக்குழந்தையின் ஆர்வத்தின் அடிப்படையில் வளர்த்தெடுப்பதை மையமாகக் கொண்ட திரைக்கதை. உண்மையில் இதுபோன்ற கருவைத் திரைக்கதையாக்க விரிந்த வாசிப்பும் அதையொட்டியச் சிந்தனையும் குழந்தைகளில் நுட்பமான உளவியலும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். ஆனால்  ‘அப்பா’ என்று தலைப்பு வைத்ததாலோ என்னவோ படம் முழுக்க குழந்தையின் உளவியல் மிக மேலோட்டமாகவே காட்டப்பட்டு அப்பாவான சமுத்திரக்கனியே படம் முழுவதும் வியாபிக்கிறார்.

படத்தில் நிறைய அப்பாக்கள் வருகிறார்கள். மகனை அவனது இயல்போடு வளர விட நினைக்கும்29-1467200904-appa-movie-stills3-600 ஒரு தந்தை. தன் விருப்பப்படிதான் மகன் வளர வேண்டும் என அழுத்தம் கொடுக்கும் மற்றுமொரு தந்தை. தாழ்வு மனப்பான்மையால் சமூகத்தில் ஒதுங்கியே வாழ தன் மகனுக்குப் பழக்கப்படுத்தும் ஒரு தந்தை என அப்பாக்கள் நிறைந்திருந்தாலும் சமுத்திரக்கனியே அனைவருக்கும் அப்பாவாக இருக்கிறார். அதன் மூலம் கதாநாயகன் அந்தஸ்தையும் பெறுகிறார். தன் மகனின் ஆளுமை வளர்ச்சிக்கு மட்டும் பாடுபடாமல் அவனது நண்பர்கள் ஆளுமை உருவாக்கத்திற்கும் உழைக்கும் அப்பாவாக இருக்கிறார். திரைப்படத்தில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே அவர் வேலை செய்வதைக் காட்டுகிறார்கள். மற்ற நேரங்களில் எல்லாம் மகனையும் அவன் நண்பர்களையுமே சுற்றி சுற்றி வருகிறார். அவர்களுக்குக் கருத்து சொல்வதையே தன் வாழ்நாள் லட்சியம்போல கடைப்பிடிக்கிறார். ஓர் அப்பா எப்படி இருக்க வேண்டும் என்ற கருத்தின் பிரதிநிதி அவர். எனவே நாடகத்தனமான மிகைப்படுத்தப்பட்ட நடிப்பையும் வசனங்களையும் திரைப்படம் முழுக்க அள்ளி தெளிக்கிறார்.

படம் முழுக்க “குழந்தைகள் சுயமாக இயங்கனும்; தங்களுக்கு விருப்பமான வாழ்வை வாழனும்” என வசனம் சொல்லிக்கொண்டே எல்லா இடங்களிலும் அவர்கள் வாழ்வில் தலையீடு செய்துக்கொண்டே இருக்கிறார் சமுத்திரக்கனி. எந்த இடத்திலும் அவர் மகனோ அவனது நண்பர்களோ தங்களுக்கான உலகில் வாழவே இல்லை. பள்ளியில் படிப்பது, நீச்சல் வகுப்புக்குச் செல்வது, அம்மாவை வீட்டுக்குக் கூட்டி வருவது, நண்பர்களோடு கதையடிப்பது இது மட்டும்தான் சமுத்திரக்கனிக்குத் தெரிந்த குழந்தைகள் உலகம். எங்குமே அவர்களுக்கான சந்தேகங்களும், தேடல்களும், தவறுகளும் நிகழவே இல்லை. சமுத்திரக்கனி அப்படி நிகழாமல் நிழலாக இருந்து தடுத்தாட்கொள்கிறார். சமுத்திரக்கனியின் தந்தை பாத்திரத்திற்கும் தம்பி ராமைய்யா என்ற தந்தையின் கதாபாத்திரத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. தம்பி ராமைய்யா இராசயனம் ஊற்றி மலரச்செய்த மலரை பிரமாண்ட மாலையாகத் தொடுக்க நினைக்கிறார் என்றார்; சமுத்திரக்கனி இயற்கை உரம் இட்டு மலரச்செய்த மலரை மாலையாக்குகிறார். இருவருக்குமே ஒரு மலர், செடியில் தன்னியல்பாக மலர்ந்து உதிர்வதைக் காண விருப்பம் இல்லை.

சமுத்திரக்கனி தன் மகனுக்கு நீச்சலில் ஆர்வம் இருப்பதை அறிந்து அதில் சேர்த்துவிடுவதெல்லாம் சரி. ஆனால் அதில் அவன் உலக கின்னஸ் விருது பெறும் வரை உடனிருந்து ஊக்குவிக்கிறார். மீண்டும் வெற்றி, சாதனை போன்ற அழுத்தமே ஒரு மாணவனுக்கு வேறுவகையில் இயக்குனர் மூலம் புகுத்தப்படுகிறது. நீச்சலை விரும்பும் ஒருவன் தன் வாழ்நாள் முழுக்க ஆற்றிலோ குளத்திலோ எந்தப் போட்டியும் இல்லாமல் தன்னிறைவுடன் மிதப்பது அத்தனை பெரிய குற்றமா என்ன? அவன் அதில் ஏதேனும் சாதித்தே தீர வேண்டுமா? அனைத்திலும் மிதமான போக்குள்ள மாணவன் இந்த உலகில் வாழவே தகுதியற்றவனா?

படம் முழுக்க சமுத்திரக்கனியின் கருத்து மழை என்றால், முடியும் தருவாயில் அவர் நண்பர் சசிகுமார் வேறு மருத்துவராக வந்து காமிராவைப் பார்த்து அதிர அதிர கருத்து சொல்கிறார். படம் முழுவதும் மிகையாக நடிக்கும் சிறுவனும் (சமுத்திரக்கனியின் மகனாக வருபவன்) கருத்து சொல்கிறான். நூல் வெளியீட்டில் பா.விஜய் கருத்து சொல்கிறார். சமுத்திரக்கனி இந்தக் கருத்துகளைப் பேசி பதிவு செய்து யூ-டியூப்பில் போட்டிருந்தால் இன்னும் பலர் பலனடைந்திருப்பர். செலவும் மிச்சம்.  இப்படிக் கருத்துகளால் நிரம்பிய ஒரு படத்தை அபத்தமானது என சொன்னால் என்னை நோக்கி எவ்வாறான வசை வரும் என கற்பனை செய்ய முடியவில்லை. ஆனாலும் கல்விச்சூழலை மையமிட்டு பேச முனையும் இதுபோன்ற ஆக்கங்கள் குறித்து விரிவாகவே பேச வேண்டியுள்ளது.

appa-movie-posterஇத்திரைப்படத்தின் தொடக்கம் உண்மையில் எனக்கு அத்தனை உவப்பானது. “அவனுக்குள் இருக்கும் கவிதையை, ரசனையை கண்டடைந்து வளரட்டும்” என சமுத்திரக்கனி தன் மனைவியிடம் கூறும்போது உண்மையில் ஒரு வித்தியாசமான திரைப்படத்தைதான் எதிர்ப்பார்த்தேன். அதேபோல பள்ளிக்கூடத்தில் கொடுக்கப்படும் கலைக்கல்வி தொடர்பான பாடத்தை நிரம்பிய தவறுகளுடன் சுயமாக செய்து எடுத்துப்போவதெல்லாம் குறிப்பிடத்தக்க காட்சிகள். இயற்கையிடமிருந்து பிரிக்கப்பட்டு , ஒரு முழுமையான இரவையும் , நிலவையும், குளிரையும், மரங்களையும், பறவைகளையும் அறியாத உயிருள்ள இயந்திரங்களாக வளரும் குழந்தைகளுக்கு மாற்றாக, புலன்களின் அத்தனை சாத்தியங்களையும் அறிந்து வளரும் சிறுவனாகவே சமுத்திரக்கனியின் மகனைக் கற்பனை செய்தேன். ஆனால் சமுத்திரக்கனியோ தன் மகனின் நண்பனுக்கு இருக்கும் கவிதைத் திறனையும் கண்டடைந்து அதையும் நூலாக்கி, பா.விஜய் மூலமாக வெளியீடெல்லாம் செய்து அங்கும் சாதனை, வெற்றி என குழந்தைகளை உளர வைக்கிறார்.

‘அப்பா’ என்ற தலைப்புக்கேற்ப இப்படம் ஓர் அப்பாவைப்பற்றியதாக இருந்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். சமுத்திரக்கனிக்கு அப்பாவாக இருப்பதைவிட ஹீரோவாக இருப்பதே அவசியமாகியிருப்பதால் உலகின் அத்தனை பொறுப்புகளையும் தன் மீது போட்டுக்கொண்டு திண்டாடுகிறார். எதுகுறித்தும் தெளிவில்லாமல் மேலோட்டமான தீர்வுகளுடனும் இறுதியில் நடக்கும் இழுவையான மரணக் காட்சியுடனும் படத்தை ஒருவாராக முடிக்கிறார். ஒரு சமையல்கூடத்தில் மிகச்செழித்த காய்கறிகளும் மணமான மசாலா தூளும் இருப்பதாலேயே சமையல் நன்றாக வந்துவிட்டது என நம்மை நம்ம வைக்க நல்ல கலைஞர்களின் அணிவகுப்பின் மூலம்  முயல்கிறார். நம்மால்தான் அது முடியதில்லை.

ஓர் ஓவியன் ஓவியம் வரையும் கணமும், ஓர் கவிஞன் கவிதை எழுதும் கணமும், ஒரு இசையமைப்பாளன் ராகத்தை மீட்டும் அந்த கணமுமே கலைக்கு முக்கியமானது. அந்தக் கலை மனதைத் தக்க வைப்பதும் அதை நீட்டிப்பதும் அதற்கான சூழலை உருவாக்குவதும் அவ்வெழுச்சியை மனதிலிருந்து நீங்கச்செய்யும் பரபரப்பான புறச்சூழலின் போலித்தன்மையையும் அது கொடுக்கும் பதற்றத்தையும் அறிய வைப்பதுமே ஆளுமை உருவாக்கம். அக்கலை பிரபலப்படுத்துவதும் சாதனையாவதும் ஆளுமை வளர்ச்சியால் உடன் வந்து இலவசமாக இணைந்துகொள்பவை. சாதனை செய்ய ஒருவன் கலைஞனாவதில்லை. ஒரு கலையில் அவன் கொண்டிருக்கும் ஆளுமையே இயல்பாக அவனை வெளிப்படுத்துகிறது. நமது சடங்கான மனதுக்கு ஒருவன் இசைக்கருவியைக் கண்ணீர் வரவழைக்க வாசிப்பது சாதனையாகப் படுவதே இல்லை. அவன் ஏதாவது ஒரு கூட்டத்தின் முன் நின்று; வென்று வெற்றிக்கோப்பையைத் தட்டிச்செல்ல வேண்டும். இதையே ‘அப்பா’ திரைப்படம் புதுமை என்ற தோரணையில் திணிக்கிறது.

கலையில் நாம் நம்பும் சாதனை என்பதைம் வெற்றி என்பதைம் ‘இன்னொருவனால் செய்ய முடியாதது’என்ற அடிப்படையில் மொண்ணைத்தனமாக புரிந்துகொள்வதால்தான் சங்கர் போன்ற இயக்குனர்கள் சாலைக்கு சாயம் அடிப்பதால் கலைஞர்களாகிவிடுகிறார்கள். craft மற்றும்  create ஆகியவற்றுக்கு வித்தியாசம் தெரியாத வாசகர்கள் அல்லது ரசிகர்கள் மு.வ வை நாவலாசிரியராக நம்புவது போல ‘அப்பா’வையும் நல்ல திரைப்படமாகக் கொண்டாடத் தொடங்கிவிட்டனர்.

(Visited 707 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *