சித்தர், தமிழாசிரியர், மற்றும் வணிகம்!

imagesநான்கு ஆண்டுகளுக்கு முன் தற்செயலாக ஓர் உணவகத்தில் சந்தித்ததில் அறிமுகமாகியிருந்த மருத்துவர் திடீரென அழைத்தார். எனது எண்களை நாளிதழில் பார்த்ததாகக் கூறி சந்திக்க இயலுமா எனக் கேட்டார். மறுநாள் ‘யாழ்’ சந்திப்பை அவர் சொன்ன உணவகத்திற்கு அருகில் ஏற்பாடு செய்தேன். இரு சந்திப்பையும் ஒரே இடத்தில் வைத்துவிட திட்டம். ‘யாழ்’ சந்திப்பு முடியும் சமயம் அவர் வந்தார். நான்கு வருடங்களுக்கு முன் பார்த்தது. எளிதாக அடையாளம் காண முடிந்தது. தீர்க்கமான கண்கள். வளித்துச்சீவிய முடி. தடிமனான வெள்ளை மீசை. அப்போதைக்கு இப்போது அதிகம் வயதாகி விட்டவர் போல காட்சியளித்தார். வயது புலி போன்றது. முதலில் மிக மெதுவாகப் பதுங்கி வரும். பாய்ந்தவுடன் அதன் வேகம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து ஆக்கிரமிக்கும். என்னையும் அவர் அடையாளம் கண்டுக்கொண்டதால் வழக்கமான நல விசாரிப்புக்குப் பின்னர் விசயத்துக்கு வந்தார்.

அவர் இப்போது சித்தர் மார்க்கத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அது குறித்து என்னிடம் கொஞ்சம் பகிர வேண்டும் என்றார். நான் அதை செவிமடுப்பதற்குச் சரியான ஆள் என்றார். தனது கையில் வைத்திருந்த குறிப்பு புத்தகத்தைத் திறந்து சித்தர்கள் குறித்தும், தமிழ் மொழி குறித்தும், தமிழ் மொழிக்கும் உயிருக்கும் சம்பந்தம் உள்ளது என்றும் விரிவாகப் பேசிக்கொண்டிருந்தார். அவரது குரு தமிழகத்தில் இருப்பதாகவும் அவர் வழிக்காட்டுதலின் பேரில் இந்த மார்க்கத்தை மலேசியாவில் தமிழ் ஆசிரியர்கள் மூலம் தாம் பரவலாக்க விரும்புவதாகவும் கூறினார். நான் அவர் பேசுவதற்கான வெளியை தாராளமாகவே வழங்கினேன். அவர் வயதில் முதியவர் என்பது முக்கியக் காரணம்.

தமிழ் மொழியின் உருவாக்கம் , அதன் எழுத்துகள் அனைத்துமே சித்தர்கள் அறிவியல் கொண்டு திட்டமிட்டு உருவாக்கியது என்றதும் நான் குறுக்கிட வேண்டி வந்தது. சித்தர்கள் காலம் குறித்த மயக்கம் அவருக்கு இருப்பதைத் தெளிவு படுத்தினேன். அவரும் “யார் சொன்னா என்ன ? நல்லது சொல்லியிருக்காங்க. அதை நம்ம பிள்ளைங்களுக்குச் சொல்லனும்” என்றார். சித்தர்களுக்கும் தமிழ் மொழிக்கும் தொடர்பு உண்டு எனும் அடிப்படையில்தான் அவர் பேச்சு தொடங்கியது. அதற்கு நான் தமிழ் ஆசிரியரனாக இருந்தது ஒரு காரணம். தமிழ் ஆசிரியர்கள் தமிழில் பற்றுக்கொண்டிருப்பார்கள். தமிழுக்காக உயிரைக்கொடுப்பார்கள். எனவே தமிழுக்கே உயிர் கொடுத்தச் சித்தர்களை மறுக்கமாட்டார்கள் என்பது அவர் நம்பிக்கையாக இருக்கலாம். நான் அதில் நம்பிக்கைக் கொள்ளாதபோது அவர் சித்தர்கள் நோயின்றி வாழும் கலையைப் போதிக்கும் மருத்துவர்கள் எனும் படிநிலைக்குத் தாவினார். மீண்டும் உரையாடல் நீடித்தபோது நண்பர்கள் நெளியத் தொடங்கியிருந்தனர்.

நான் அவரிடம் என்னால் என்ன ஆக வேண்டுமென நேராக விசயத்துக்கு வந்தேன்.

“நீங்கள் தமிழ் ஆசிரியர். என் குரு மலேசியா வரப்போகிறார். சொற்ப கட்டணத்தில் ஒரு பயிற்சி நடத்தப்போகிறோம். நீங்கள் அவரிடம் சில விடயங்களைக் கற்றுக்கொண்டால் உங்கள் மாணவர்களுக்குச் சொல்லலாம். “

“எதைக் கற்றுக்கொள்வது?”

“சித்தர்கள் காட்டிய வழிமுறைகளால் எந்த மாணவனையும் நல்வழிப்படுத்தலாம். அவனது எதிர்மறை குணங்களைச் சில பயிற்சிகள் மூலம் நேர்மறை சக்திகளாக மாற்ற இயலும்”

“உங்கள் நோக்கம் என்ன?” என்று மீண்டும் நேரடியாகக் கேட்டேன்.

“இந்த அரிய விடயம் மாணவர்கள் மத்தியில் சேரவேண்டும். அதன் மூலம் நல்ல சமுதாயம் உருவாக வேண்டும்” என உறுதியாகச் சொன்னார்.

“எளிய விளக்கங்களுடன் நூலாக எழுதி வெளியிடலாமே” என்றேன்.

“நூலில் முறையான வழிகாட்டல் இருக்காது. தவறாகச் செய்தால் நோய் உண்டாகலாம்”.

“அப்படியானால் நீங்கள் நேரடியாக ஏதாவது ஒரு தோட்டப்பள்ளிக்குச் சென்று இலவசமாக வகுப்பு எடுக்கலாம்” என்றேன்.

“அப்படியானால் எத்தனை காலம் இதற்காக நான் எடுத்துக்கொள்வது? சீக்கிரமாக இது சென்று மக்கள் மத்தியில் சேராதே” அவர் குரலில் பதற்றம் இருந்தது. நான் அவரை புண்படுத்த விரும்பவில்லை.

“எதையும் அவசரமாகக் கொண்டுச்சென்று சேர்க்க வேண்டியதில்லை. நீங்கள் உங்கள் அருகாமையில் இருக்கும் ஒரு பள்ளியில் இதை தொடங்குங்கள். மாணவர்களின் எதிர்மறை குணங்களை நீங்கள் சொல்லும் பயிற்சியால் மாற்ற முடியும் என்பது மகிழ்ச்சிக்குறியது. அதை நடைமுறைப்படுத்துங்கள். வணிகத்துக்குத்தான் அவசரமும் விரிவாக்கமும். சேவையில் அவசரம் இருக்காது. தேவையின் அடிப்படையில் சேவை தன்னைத்தானே விரிவுபடுத்திக்கொள்ளும்” என சில உதாரணங்களுடன் அவருக்கு விளக்கினேன்.

“ஆசிரியர்களிடம் கொண்டுச் சேர்த்தால் இன்னும் எளிதாக பரவலாகுமே.”

“அதன் நடைமுறைச் சிக்கல் ஒருபுறம் இருக்க, எந்தப்பயிற்சியையும் ஓரிரு வாரம் கற்று இன்னொருவருக்கு போதிப்பது சாத்தியமில்லை. அதிலும் கற்றல் கற்பித்தலோடு நேரடியாக இணையாத ஒன்றை பள்ளியில் இணைப்பது சாத்தியமற்றது. இந்நிலையில் நீங்கள் மிகச்சிறிய பள்ளியாகத்தேர்ந்தெடுத்து, தலைமை ஆசிரியர் அனுமதியுடன் நம் குழந்தைகளுக்கு உங்களால் ஆனதை செய்யுங்கள்.”

“இதில் வர்மம் எல்லாம் உண்டு. ஒரு நரம்பில் அத்தனையையும் அடக்க இயலும். நோயைக் குணப்படுத்தவும் முடியும்” அவர் சட்டென ஒரு மந்திரவாதியைப் போல பேசத்தொடங்கினார்.

“கேள்விப்பட்டுள்ளேன். உங்கள் நோக்கம் மாணவர்கள் நலனாக இருக்க, நான் சொன்னதை யோசியுங்கள். சேவை என்பது பெரிதிலிருந்து தொடங்க வேண்டும் என்பதல்ல.”

“இந்தப்பயிற்சி வெறும் 20 பேருக்கு மட்டுமே. அதனால்தான் இரவு வேளைகளில் ஆசிரியர்களுக்குத் தனியாகப் பயிற்சி நடத்தலாமா என யோசித்தேன்.”

“நீங்கள் இலவசமாகச் செய்ய விரும்பும் நோக்கும் கொண்டுள்ளதால், நேரடியாக மாணவர்களுக்குச் செய்யுங்கள். என்னால் சில பள்ளிகளை அடையாளம் காட்ட முடியும். அது வெற்றியடையும் பட்சத்தில் ஆசிரியர்களே உங்களைத் தேடி வருவார்கள்.”

“என் குரு வந்தால் நீங்கள் சந்திக்க வேண்டும்”

“அவசியம்”

நான் அவரை புண்படுத்திவிட்டதை உணர முடிந்தது. நண்பர் நல்ல நோக்கத்தில் கூட என்னை அணுகியிருக்கலாம். ஆனால் நான் சேவை என செய்ய முன்வருபவர்களிடம் கவனிக்க விரும்புவது அதற்கு முன்பான அவர்களது செயல்பாடுகளைத்தான். சமூகச் சேவை செய்வதாக மிகத்தீவிரத்துடன் இயங்க நினைக்கும் பலர் அதற்காகக் காத்துக்கிடக்கும் ஒரு கூட்டத்தைக் கற்பனை செய்கிறார்கள். அப்படி ஒரு கூட்டம் இல்லை என வருந்துகிறார்கள்.  உண்மையில் அவர்கள் விரும்புவது சேவையை அல்ல. அதன் மூலம் கிடைக்கும் ஓர் எளிய கவன ஈர்ப்பை. அதன் மூலம் கிடைக்கும் சமூக மரியாதையை. சமுதாயத்தின்மீது அக்கறையும் ஏதோ செய்ய வேண்டும் என வேட்கையுடனும் இருக்கும் பலருக்கு அவர்கள் ஊரில் உள்ள தமிழ்ப்பள்ளியின் பெயர்கூட தெரியாமல் இருப்பதை நான் கண்டதுண்டு.

உதவியை எதிர்ப்பார்க்கும் எளியவர்கள் ஒரு புறம் இருக்க, சதா சேவை செய்யும் வேட்கையோடு சுழன்றுக்கொண்டு, சேவையைப் பெற்றுக்கொள்ளதான் ஆள் இல்லை என இன்னொரு தரப்பு மறுபுறமும் ஒரே இந்திய சமூகத்துக்குள் இருப்பது எத்தனைப்பெரிய முரண்நகை. உருவாக்கப்பட்ட வேகத்தில் நாளிதழில் படம் வந்தபின் முடங்கிபோன அறவாரியங்களும், தனியார் இயக்கங்களும்தான் எத்தனை எத்தனை. இப்படி திடீரென முளைக்கும் சமூக அக்கறையை வெளிப்படுத்த இவர்கள் அதிகம் ம்நாடும் ஒரே இடம் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும் அதன் மாணவர்களும்தான். அவர்கள் வகுக்கும் திட்டத்தை எப்படியாவது பள்ளிக்குள் புகுத்திவிட வேண்டும். ஒரு விழா எடுக்க வேண்டும். தமிழுக்குத் தொண்டு செய்தால் சாக மாட்டார்கள் அல்லவா?

சேவை செய்வதாகச் சொல்பவர்களை எல்லாம் நாம் அன்னை தெரேசாவோடு ஒப்பிடத்தொடங்கிவிடுகிறோம். அன்னை தெரெசாவைப் போல சேவை செய்வதற்கும் அவர் அடைந்த கவனத்தை அடைவதற்கான குறுக்குவழியைத் தேடி அதைப் பின்பற்றுவதற்கும் அதிக வித்தியாசம் உண்டு. சேவை செய்ய நினைப்பவர்கள் எங்கு வேண்டுமானாலும் நினைத்த கணத்தில் தொடங்கிவிட முடியும். அன்னை தெரெசாவாக நினைப்பவர்களுக்குத்தான் பிறரது நிழல்கள் தேவைப்படும்.  பிறர் கவனத்தை முன்வைத்து மேலோட்டமாகச் செயல்படும் ஒரு திட்டத்துக்கு ஆதரவு கிடைக்காத பட்சத்தில் சமுதாயத்தின் மேல் கோபம் வரும். பின்னர் விரக்தியின் விளிம்புக்கே சென்று சமுதாயம் உதாவக்கரை என்றும் தங்களை வள்ளலாராகவும் பாரதியாராகவும் கற்பனை செய்துக்கொள்வார்கள். அந்தக் கற்பனை அவர்கள் போலியான தன்னிரைவுடன் இறக்கவோ பேரக்குழந்தைகளுக்குக் கதைச்சொல்லவோ உதவியாக இருக்கலாம்.

(Visited 171 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *