நிறைவேற்ற வேண்டுமாயின்
காளியைத்தான் புணரவேண்டும்
அவளுக்குத்தான்
ஆயிரம் கைகள்… – வசுமித்ர
2013இல் மலேசிய இலக்கியச் சூழலில் மிகப்பெரிய சர்ச்சை ஒன்று உருவானது. ‘கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்’ என்ற தயாஜி எழுதிய சிறுகதை குறித்து மலேசிய நாளிதழ்கள் அனைத்தும் கண்டனங்களைத் தெரிவித்தன. மனநோயினால் பீடிக்கப்பட்ட ஒருவன் தனது தாய் உள்ளிட்ட பல பெண்கள்மீது காமம் கொள்வதாக எழுதப்பட்ட அக்கதை கலாச்சார சீரழிவை உண்டாக்கும் என மலேசியாவில் பல இயக்கத்தினரும் அறிக்கை விட்டனர். குறிப்பாக அக்கதையில் வரும் மையப்பாத்திரம் காளியின்மீது காமம் கொள்வதாகச் சித்தரித்தது சமய இயக்கங்களிடையே பெரும் கொந்தளிப்பை உண்டு செய்து தயாஜி தன் வானொலி அறிவிப்பாளர் வேலையை இழந்தார். எழுத்தினால் வேலையை இழந்த ஒரே மலேசியத் தமிழ் எழுத்தாளர் தயாஜியாகத்தான் இருக்க முடியும்.
பொதுவாகவே அறிவார்ந்த தளத்தில் இயங்காத உணர்ச்சிவயப்பட்ட தமிழர்களின் மனம் இந்துமத புராணக் கதைகளிலும் இதிகாசங்களிலும் எல்லையற்ற மனித உறவுமுறைகள் பற்றி எக்கச்சக்கமாகவே எழுதப்பட்டுள்ளதை மறந்துவிடுகின்றது. வசிட்டர் தன் மகள் சத்ரூபை பருவமெய்தியபோது மணந்ததாகவும் மனு தன் மகள் இளையை மணந்ததையும் ஜானு தன் மகள் ஜானவியை மணந்ததாகவும் சூரியன் தன் மகள் உஷையை மணந்ததாகவும் நாம் புனைவுகளாக வாசித்துக்கொண்டே இருக்கிறோம்.
அதேபோல ரிக்வேதத்தில் அண்ணன் தங்கையரான யமன், யமி ஆகியோரைப் பற்றிய கதை ஒன்று உள்ளது. அந்தக் கதையின்படி யமி தன் அண்ணன் யமனைத் தன்னுடன் கூடல்கொள்ள அழைக்கின்றாள். இதை மறுக்கும் யமன்மீது அவள் கோபமும் கொள்கிறாள். இவ்வாறு இன்றைய சமூக கட்டமைப்பில் திட்டமிடப்பட்ட உறவுகளைத் தாண்டி மணந்துகொண்ட அல்லது உறவு கொண்ட எண்ணற்ற பாத்திரங்களை இந்துமத கதைகளில் இருந்தே திரட்டலாம். மனுஸ்மிருதியில் “தாய், மகள், சகோதரி – எப்பெண்ணுடனும் தனியிடத்தில் அமர்தல் கூடாது. புலன்கள் ஆற்றல் வாய்ந்தவை அறிவாளியையும் வெற்றிகொள்ளும்” என்கிற வரி நவீன உளவியல் நிபுணரான சிக்மண்ட் பிராய்ட் முன்னிறுத்தும் கோட்பாடுகளில் ஒன்றான Oedipal Complex-யை நினைவுறுத்துகிறது.
தனது தந்தையின் இடத்தில் தன்னை வைக்க விரும்பும் சிறுவன் தாயை உடல் மூலமாகவும் உடைமையாக்க விரும்புகிறான். தாயின் அன்புக்குப் போட்டியாகத் தந்தையைக் கருதுகிறான். உளவியல் – பாலினம் சார்ந்த வளர்ச்சி பிள்ளையின் மூன்று முதல் ஐந்து வயதுக்கு இடையே ஏற்படுகிறது. இந்தப் பருவம் பாலினம் சார்ந்த அடையாளம் உருவாதற்கான முக்கிய காலகட்டமாகத் திகழ்கிறது. இந்தக் காலகட்டத்தில்தான் Oedipal Complex சிக்கல் ஒரு குழந்தைக்கு ஏற்படுகிறது. Oedipal Complex சிக்கல் என்பது உள்மனதுக்குள் மறைந்திருக்கும் உணர்வுகளையும் எண்ணங்களையும் சார்ந்த உளப் பகுப்பாய்வுக் கோட்பாடு ஆகும். உளவியல் துறையில் மிக முக்கியமானவராகக் கருதப்படும் இவரின் இந்தக் கூற்று பலருக்கும் அதிருப்தியைக் கொடுக்கலாம். ஆனால் பிராய்டின் இந்த ஆய்வை இன்று பலரும் ஒப்புக்கொண்டே உள்ளனர். அதை மையப்படுத்தும் ஏராளமான ஆய்வு நூல்களும் வந்த வண்ணம்தான் உள்ளன.
நவீன தமிழ் இலக்கியமும் இவ்வாறான உளப் பகுப்பாய்வுகளைத் தொடர்ந்து பதிவு செய்தே வருகிறது. மனதில் உறைந்துள்ள உள் உணர்வுகளை புனைவுகளின் மூலம் சமூக கட்டமைப்பின் நியாயங்களின் மீது செலுத்துகிறது. இவ்வகையில்தான் ஜெயகாந்தனின் ‘ரிஷிமூலம்’ எனும் படைப்பு அக்காலத்திலேயே பரபரப்பாகப் பேசப்பட்டது. தாய் மீதான பாலியல் சிக்கலை எழுதி 1966 வாக்கில் வெளிவந்த இந்நாவல் எதிர்ப்புகளைச் சந்தித்தது. குளித்துக் கொண்டிருந்த தாயை ஒளிந்திருந்து பார்த்துவிட்டு தாயால் கண்டுபிடிக்கப்பட்ட பின் குற்ற உணர்ச்சியில் தவிக்கிறான் மகன் ராஜாராம். தினமும் அவனுக்கு தன் தாய் குறித்த அபத்தமான கனவுகள். ஒரு மாலை அந்த வீட்டைவிட்டு ஓடிப்போனவன் ஆற்றங்கரையில் அமர்ந்து கொண்டிருக்கின்றான். பிறரிடம் சொல்ல முடியாத உணர்வலைகளில் சிக்கித்திரிந்து எண்ணங்களால் அலைக் கழிக்கப்பட்டு, மனக்குழப்படைந்து ஒரு தத்துவார்த்த மனநிலைக்குள் தள்ளப்படுகிறான். அதனால் ஏற்படும் பாதிப்பு அவனது வாழ்க்கை முழுவதும் பரவி பிறகு முடிவில் ஒரு சன்யாசியாகத் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்கிறான் என முடிகிறது நாவல்.
முதலில் இது போன்ற சம்பவங்கள் இலக்கியப் பிரதிகளாக வெளிவர அவை இச்சமூகத்தில் நடக்கின்றன என்பதுதான் முதல் காரணம். உலகில் பல நாடுகளில் விரும்பத்துடனோ வல்லுறவாகவோ இது போன்ற சம்பவங்கள் நடப்பது பதிவாகியுள்ளன. நீதிமன்றம் வரையும் சென்றுள்ளன. இலக்கியம் ஒரு சமூக நிகழ்வின் ஆழ்மனதைப் படம்பிடித்துக்காட்டுகிறது. மாறாக அது ஒரு தினசரி நாளிதழின் வேலையைச் செய்யவில்லை. தினசரிகள் பெரும்பாலான மக்கள் விரும்பும் தகவல்களைப் பிரசுரிக்கின்றன. இலக்கியம் யாரின் விருப்பம் பொருட்டும் இயங்குவதில்லை. தினசரிகளுக்கு எதை வெளியிட வேண்டும் / கூடாது என்ற விருப்பு வெறுப்புகள் உண்டு. இலக்கியத்துக்கு அது கிடையாது. இலக்கியத்தின் வேலை சமூகத்தைத் தூக்கி நிறுத்துவது என நம்பிக்கொண்டிருப்பவர்கள் உலக இலக்கியப் போக்கை கவனிக்கவில்லை எனப் பரிதாபப்படுவதை தவிர வேறு வழியில்லை.
அவ்வகையில் ஷோபா சக்தியின் ‘ம்’ நாவலைத் தமிழ் இலக்கியச்சூழலில் முக்கியமானது என்பேன். நேசகுமாரன், பிறேமினி, நிறமி ஆகியோரின் கதைபோலத்தொடங்கி இலங்கையில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களை நேசகுமாரன், பக்கிரி, சீனா பாத்திரங்களின் மூலமாக வாசகனை வரலாற்றுத் தளத்திற்கு எடுத்துச்செல்லும் நாவல் இது. வெலிக்கடைச்சிறை படுகொலைகள் பற்றிக் குறிப்பிடுகின்றபோது இலங்கை அரசு திட்டமிட்ட ரீதியில் தமிழர்கள் மீது நிகழ்த்தியுள்ள படுகொலைகளும் இந்நாவலில் பதிவாகியுள்ளது. நேசகுமாரனின் மகள் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்ற மர்மத்துடன் நாவல் தொடங்குகிறது. ஈழத்தில் போராளி அமைப்புக்களுடன் தொடர்புற்ற காரணங்களால் நேசகுமாரன் இலங்கை அரச படைகளினால் கைது செய்யப்பட்டு சித்திரவதைப்படுத்தப்படுகிறான். சிறையிலிருந்து தப்பித்தவன் போராளிகளிடம் பிடிபடுகிறான். வன்முறையும் துரோகமும் இயலாமையும் என வாழ்வின் அத்தனை உக்கிரங்களினால் ஆட்கொள்ளப்படும் அவன் தான் தப்பிக்கொள்வதற்காக தனக்கு உதவியவர்களைக் காட்டிக்கொடுத்தல் துரோக்கம் இழைத்தல் என யதார்த்தமும் இயலாமையும் கொண்ட முரணியக்கத்தில் மாட்டிக்கொள்கிறான்.
ஈழத்தின் அரசியல் சரித்திரத்தைப் படங்களாகவும் செய்திகளாகவும் அனுபவப்பகிர்வுகளாகவும் வாசித்து அதன் பெரும் வேதனையை உள்வாங்கிய வடு உள்ள ஒருவனுக்கும் ‘ம்’ நாவல் ஏன் அத்தனை மனபாதிப்பைத் தருகிறது என யோசிக்கும்போதுதான் புனைவுக்கான தேவை தெரியவரும். நாவலின் மையப்பாத்திரமான நேசகுமாரனுக்கு நடந்தவற்றை இந்நாவல் காட்ட முயலவில்லை மாறாக ஒரு மனிதனின் தன்னழிவையும் அதன் மூலம் அவன் கட்டவிழ்த்துப்போடும் கற்பிதங்களையும் பேசுகிறது. அந்த மனச்சிதைவின் உச்சமாக அவன் செய்யும் அத்தனைக்கும் நியாயங்களைத் தேடாதது போலவே தனது சொந்த மகளின் கர்ப்பத்திற்குக் காரணமாவதற்கும் அவனிடன் நியாயங்கள் இல்லை. காமம், கோபம், பயம் என்ற ஆதாரமான இச்சைகளில் தர்க்கமற்று போகும் மனித மனதின் அப்பட்டமான வெளிபாடு ஷோபாசக்தியின் ‘ம்’. மனிதர்கள் தங்கள் உறவுகளில் மேற்கொள்ளும் பாசாங்குகள், புனையும் வேடங்கள், அணியும் முகமூடிகள் என அனைத்தையும் ஷோபாசக்தி இந்நாவல் முழுவதும் நிர்வாணமாக்கியபடி சென்றாலும் அதன் உச்சமாக தன்னால் கற்பமான தன் மகளுக்காக நேசகுமாரன் கொஞ்சமும் குற்ற உணர்ச்சி கொள்ளாது காதல் ததும்ப இருப்பது மனித மனதை அறிந்துகொள்ளும் இன்னொரு வழியாகவே உள்ளது.
லஷ்மி சரவணக்குமார் எழுதிய ‘நீலத்திரை’ சிறுகதையும் இவ்வாறான சிக்கலான உளவியலை மையப்படுத்தியே எழுதப்பட்டுள்ளது. மகேஷ் என்ற கல்லூரி மாணவன் தன் நண்பர்களுடன் நீலப்படம் பார்ப்பதை வழக்கமாக்கி வைத்துள்ளான். அப்படி ஒருதரம் பார்க்கையில் நீலத்திரையில் அவன் அம்மா நடித்திருப்பதைக் கண்டு அதிர்கிறான். அவன் நண்பன் வினோத் அம்மாவின் அழகை ரசித்து அவன் முன்பே சுயமைத்துனம் செய்கிறான். அவனால் எதையும் ஏற்கமுடியவில்லை. தனியனாகிறான். மீண்டும் மீண்டும் அப்படத்தை ஓட்டிப்பார்க்கிறான். அம்மாவின் முனகல், காமம் ததும்பும் பார்வை அவனை இம்சிக்கிறது. அம்மாவிடம் அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. இவ்வாறான கொதிக்கும் மனநிலையில் தாய்மையின் அன்பும் இளமையின் உக்கிரமும் ஓர் இளைஞனை ஒருசேர வதைக்கும் கணத்தை அற்புதமான பதிவாக்கியுள்ளார் லஷ்மி சரவணகுமார். கதையில் மகேஷின் நண்பனாக வரும் வினோத் நிர்வாணமாகப் படத்தில் நடிக்கும் அவன் அம்மாவின் மார்ப்பை வர்ணிக்கிறான். அது மிகப்பெரியதென வியக்கிறான். இதுபோன்ற வர்ணனைகள் எளிய வாசகர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடியதாக இருந்தாலும் சௌந்தர லஹரியில் ஆதிசங்கரர் ‘மேகலை பொங்க மதாசல கும்பமெ னாமுலை கண்டு இடை சோரா‘ என அம்மனை நோக்கி யானையின் மத்தகத்தைப் போன்ற பெரிய தனங்களைக் (மார்பு)கொண்டவள் என வர்ணித்ததையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. பெண்ணின் மார்பு ஆணுக்கு அத்தனை கவர்ச்சியானதாக இருக்கிறது. வினோத்துக்கு மகேஷின் அம்மாவின் மார்பு அத்தகைய கவர்ச்சியைத் தருகிறது. உண்மையைச் சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிப்பவனை அம்மா தனது இறந்தக்காலத்தைக் கூறி அன்பால் ஆக்கிரமிப்பதோடு கதை முடிகிறது. கத்திமேல் நடப்பது போன்ற கதை. மகேஷுக்கு அவன் அம்மாவின் உடல் மீது எவ்வகையான உணர்ச்சி மாற்றங்கள் ஏற்படுகின்றன என சொல்லிச்சென்று அதன் உச்சமாகப் பேரழுகையில் முடிக்கிறார் லஷ்மி. குற்ற உணர்ச்சியின் கண்ணீர் கரிப்பதில்லை.
சு.வேணுகோபால் இதுபோன்ற உறவுகளின் உணர்ச்சி மீரல்களைத் தனக்கே உரிய பாணியில் மிக நுண்மையாக எழுதுபவர். ஆண், பெண் உறவுமுறை சிக்கல்களை முன்னிறுத்தி நகரும் கதைகளில் ‘உள்ளிருந்து உடற்றும் பசி’ என்ற அவர் கதையை முதன்மையாகச் சொல்லலாம். தாய்தந்தை அற்ற குடும்பத்தில் தங்கைகளுக்காகச் சொந்த வாழ்க்கையை துறந்து ஒவ்வொருவராகக் கரையேற்றும் அண்ணனின் கதை இது. நான்கு தங்கைகளையும் கரையேற்ற மாடாய் உழைக்கும் அவன் மூன்றாவது தங்கைக்கும் திருமணம் செய்து அனுப்பிவைக்கிறான். ஒரு தங்கை திருமணமாகிச் சென்றவுடன் அடுத்தத் தங்கை குடும்பப்பொறுப்பை ஏற்க வேண்டும் என்பது கடமையாக உள்ளது. அவ்வகையில் நாலாவது தங்கைக்குக் குடும்பப்பொறுப்பு வந்துசேர்கிறது. அக்காள்கள் கடமைகள் அனைத்தையும் சொல்லிக்கொடுத்துச் சென்றுள்ளதாகவே நான்காவது தங்கையும் சொல்கிறாள். ஒருநாள் இரவில் அண்ணனின் கை நான்காவது தங்கையைப் பாலியலுக்கு அழைக்கிறது. அதிர்ந்து மிரளும் அவளிடம் அண்ணன் கேட்கிறான், ‘அக்கா, அவுங்க ஒங்கிட்ட வேற ஒண்ணும் சொல்லலையா…’
ஒழுக்க அதிர்ச்சிக்கு அப்பால் ஆழமான வாசகன் ஒருவன் பசி என்பதை வெறும் வயிறு சார்ந்த ஒன்றாக மட்டும் கற்பனை செய்வதிலிருந்து மீள்வான். தியாகம், அன்பு போன்றவை ‘பசி’யின்முன் என்னவாக மாறிவிடுகின்றன என யோசிக்கவைக்கும் கதை இது. அண்ணன் மீதான கசப்பு ஒருபக்கம் கவிந்தாலும் வாழ்க்கை அவனுக்கு அளித்திருக்கும் அவலத்தை மீறிச்செல்ல வேறொரு வழி இருப்பதாகத் தோன்றவில்லை. தங்கையிடம் அண்ணன் அவ்வாறு கேட்கும்முன் அவன் உருவத்தை ஆசிரியர் சித்தரிக்கிறார். ‘முன்வழுக்கையுடன் நரை இருளில் பளிச்சென தெரிவதாக’ அவர் சொல்லும்போது தங்கைகளுக்காக அவன் இழந்துவிட்ட இளமைகுறித்த வலி வாசகனைத் தொற்றுகிறது. ‘பசி’ வேறெதையும் விட சக்தி வாய்ந்தது. பசி வாழ்க்கையில் உள்ள பரிதாபகரமான யதார்த்ததை கண்முன் கொண்டுவரும் வன்மம் கொண்டது. ஆனால், ‘பசி’ வயிற்றுடன் மட்டும் சம்பத்தப்பட்டதில்லை என வாசகன் உணரவும் வேண்டியுள்ளது.
‘கொடிகொம்பு’ வரம்பைத்தாண்டிச் செல்லும் உறவுகள் குறித்து எழுதப்பட்ட சு.வேணுகோபாலின் நுட்பமான மற்றுமொரு சிறுகதை. கணவன் குடிகாரன். கணவனின் இயலாமைக்கு முன்னால் அவன் மனைவி வாணி மனம் கூசி நிற்கிறாள். கணவனைத் திருத்தவும் முயல்கிறாள். இவ்வாறு சமூகம், குடும்பம் என்ற இறுக்கமான கட்டமைப்பில் இருக்கும் அவளது அடக்கப்பட்ட காமம் எப்படி அவள் மாமனார்மீது செல்கிறது என கதையைக் கொண்டுச்செல்லும் விதத்தில் சு.வேணுகோபாலின் கலைநுட்பம் வெளிபடுகிறது. வாணிக்குக் காமம் சார்ந்த ஏக்கம் இருந்தது என்று கதை எங்குமே சொல்லாமல் அவளுடைய காமம் அவளுக்கே தெரியவரும் இடத்தில்தான் வாசகனுக்கும் அதை அறியத்தருகிறார் ஆசிரியர். மாமனார் பொன்னையா ஆடும்போது அவரது தசைகளைக் கூர்ந்து நோக்கிக்கொண்டிருக்கும் பக்கத்துவீட்டு கனகத்தின் கண்களை ஓரக்கண்ணால் பார்க்கிறாள் வாணி. அப்போது அவளுக்கு எழும் பொறாமை அவளுக்குத் தன்னுடைய காமத்தை அடையாளம் காட்டுகிறது. இவ்விடமே சு.வேணுகோபலை ஒரு அசாதாரண கலைஞனாக்குகிறது. இவ்விடமே வாழ்வை ஓர் அபத்தமான கற்பனையாக்குகிறது.
இமையத்தின் ‘கொலைச்சேவல்’ சிறுகதையும் நம் ஒழுக்க நெறிகளை, அற உணர்ச்சியை மறுபரிசீலனைக்கு உள்ளாக்கும் இலக்கியப்பிரதிதான். தன் மூத்த மகளைக் காதலித்து கைப்பிடித்தவன் கோகிலா வீட்டில் வேலை செய்தவன். இருந்தாலும் வேறு வழியின்றி அவனுக்கே திருமணம் செய்து வைக்கிறாள். ஆனால் அவன் கோகிலாவின் இளைய மகளையும் காதலித்து அவளுடன் ஊரைவிட்டு ஓடிவிடுகிறான். அப்படிப்பட்ட பாவியைக் கொல்வதுமட்டும்தான் வழி என முடிவு செய்கிறாள். எளிய மனிதர்களுக்கு எளிய வழி இல்லாமல் இல்லை. அவள் மூனாவது விட்டுக்காரி அதற்கு ஒரு உபாயம் வைத்துள்ளாள். முத்தாண்டி குப்பத்து கருப்பையா கோயிலில் சேவலை உயிருடன் அங்குள்ள சூழத்தில் குத்த வேண்டும். அப்படிச் செய்தால் தீங்கு செய்தவன் இறப்பான். ஆனால் கோகிலா கொலைச்சேவலைக் குத்தச் சென்றது தன் மகளுக்காக அல்ல. தனக்காக. மகளின் கணவனுடன் அவள்தான் முதலில் குடும்பம் நடத்தியவள். உறவு கொண்டவள். அது அவளைத் துன்புறுத்துகிறது. தன்னுடன் உறவு கொண்டவன் தன் மகள்களுடன் உறவு கொள்வதை நினைத்து நினைத்து இறுதியில் அந்த அவலத்திலிருந்து மீள அவனைக் கொல்வதே நியாயம் எனும் நிலைக்கு வருகிறாள். இக்கதையை மேலோட்டமாக வாசிக்கும்போது ஒரு தாயின் தவிப்பாகத் தெரிந்தாலும் அதன் ஆழத்தில் இருப்பது ஒரு தொல்குடியின் மனம். தனக்கு உடமையான ஓர் உடலை இழக்க விரும்பாத பெண் தன் மகளையும் தனக்குப் போட்டியாகவே கருதுகிறாள். தமிழில் கண.முத்தையா மொழிப்பெயர்த்த ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலில் இவ்வாறான தாய் மகளுக்கிடையிலான பொறாமையும் அதனால் நிகழும் கொலைகளையும் தொல்குடி மனநிலையில் உரைந்துள்ளதை வாசிக்க இயலும். இந்தத் தொல்குடி மனநிலையை உணர்வதன் மூலமே உறவுகளுக்குள் நிகழும் தடுமாற்றங்களில் சரி தவறுகள் குறித்த அவஸ்தையிலிருந்து கொஞ்சம் மீள முடிகிறது. தி.ஜானகிராமனின் ‘அம்மா வந்திருக்கிறாள்’ அவ்வாறு சரி தவறுகளைக் கடந்த ஒரு பேரிலக்கியமாகவே என்னால் மதிப்பிட முடிகிறது.
குருகுலம் போன்ற ஒரு பாடசாலையில் ஏழு வயதிலேயே வேதம் படிக்க அனுப்பப்பட்ட அப்பு 17 வருடங்கள் கழித்து தன் வீடு திரும்புகிறான். அப்போதுதான், அப்புவிற்குத் தன் அம்மா (அலங்காரம்) தவசு என்பவனுடன் தகாத உறவு கொண்டிருப்பது தெரிய வருகிறது. தான், தன் அப்பாவிற்குப் பிறந்த கடைசி மகன் என்பதையும் அறிகிறான். அங்கு இருக்கும் தன் தம்பி தங்கைகள் எல்லாம் தன் தாய்க்கும் வந்துபோகிற தவசு என்ற பணக்காரனுக்கும் பிறந்தவர்கள் என்று புரிகிறது. அவன் அப்பா உட்பட இது வீட்டில் உள்ள எல்லாருக்கும் தெரிந்தவிஷயமாகவும் இருக்கிறது. அப்பாவும் செய்வதறியாது இவ்வளவையும் சகித்துக்கொண்டு இருக்கிறார். அப்பு, தான் வேதத்திற்கு இணையாக நேசித்த அம்மாவின் மற்றொரு முகத்தைக் கண்டு பொருமுகிறான். அவன் அம்மா அலங்காரத்தம்மாளுக்கு தன் கடந்தகால பாவங்கள் எல்லாம் தெரிந்தே இருக்கிறது. வருந்தி வேதனைப் படுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்யத் தோன்றவில்லை. அம்மா அலங்காரம் கணவனுக்குச் செய்த துரோகத்தை, வேதத்திற்குச் செய்ததாகவே கருதுகிறாள். அதை நிவர்த்தி செய்யும் பொருட்டே அப்புவை வேதம் பயில அனுப்புகிறாள். அவன் வேதம் பயின்று நெருப்புபோல் வந்து நிற்பான். அதன் முன் தனது பாவங்களைக் கழுவிக் கொள்ளலாம் என்று நினைக்கிறாள். ஆனால் அங்கு அவன் இந்துவிடம் காதலையும் பழகி வருகிறான். அம்மா நினைத்த விமோசனம் கைகூடவில்லை. இதன் பொருட்டே கடைசியில் அம்மா (அலங்காரம்) காசிக்குச் செல்வதாகக் கதை முடிகிறது.
சமூகம் நிறுவிய ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவல். உறவுகள் நியதிகளுக்குக் கட்டுப்பட்டவைபோல காட்சிக்கொடுத்தாலும் எல்லா விதிகளையும் மீறி மனிதர்களின் செயல்களை நிர்ணயிப்பது அவர்களது உணர்வுகள்தாம் என்பதை இயல்பாகச் சொல்வதுதான் தி.ஜானகிராமனின் கலை நோக்கு. தாய் கொண்டிருக்கும் பிற ஆடவருடனான உறவில் கணவர் தண்டபாணியின் ‘சகிப்பு’, வாழ்வின் இக்கட்டான சந்தர்ப்பங்கள் மூலமே வாசகன் அறிந்துகொள்ளக்கூடியது. இந்தச் சகிப்புத்தன்மையை வண்ணநிலவன் ‘மனைவியின் நண்பர்’ என்ற சிறுகதையில் மிக நுட்பமாக எழுதியுள்ளார்.
இரு வெவ்வேறு குடும்ப உறவில் இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் நட்பு ஏற்படுவதும், அப்படி ஏற்படும் உறவுக்குள் இருவேறு பாலினதுக்கு உண்டான ஈர்ப்பு ஏற்படுவதையும் வண்ணநிலவன் இக்கதையில் புனைந்துள்ளார். ஒரு பெட்டிக்கடைக்காரரின் மனைவிக்கும் ஊரில் இருக்கிற இன்னொரு வசதி படைத்த நபருக்குமான (ரங்கராஜு) உறவு பெட்டிக்கடைக்காரனுக்கு மன உளைச்சலைக் கொடுத்தாலும் அவன் அதை சகித்துக்கொள்கிறான். மனைவி அவள் நண்பர் ரங்கராஜு வந்தால் கொஞ்சம் அதிகமாகவே கொஞ்சிப்பேசுகிறாள். மனைவியின் நட்புக்கு மதிப்புக்கொடுத்து கடையை கவனித்துக்கொண்டே ரங்கராஜுவை வீட்டின் உள்ளே அனுமதிக்கிறான் கணவன். அவர்கள் வரம்பு மீற எல்லா சூழலும் இருக்கையில் அவள் சட்டென தன்னை சுதாகரிக்கிறாள். விருந்தாளியாக வந்திருக்கும் நண்பன் ரங்கராஜுவை தனியே வீட்டில் விட்டுவிட்டு தன்னிடம் வெளியே பெட்டிக்கடை அருகில் நின்று சாவகாசமாகப் பேசிக்கொண்டிருக்கும் தன் மனைவியைப்பார்த்து அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. வீட்டுக்குள்ளிருந்து கோபமாகத் திரும்பும் ரங்கராஜு இனி எப்போதும் வர மாட்டான் என மனைவி சொல்வதாகக் கதை முடிகிறது. பொது அறம் மனிதனைக் கட்டிப்போட்டுள்ளதையும் அதை மீறிச்செல்ல மனம் இசைவதையும் இவற்றுக்கிடையில் வாழ்ந்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தங்களைச் சகிப்புத்தன்மை கொண்டு நிரப்புவதையும் கதை பேசுகிறது.
தி.ஜானகிராமனும் வண்ணனிலவனும் இவ்வாறான உளவியலை ஆராய்ந்தது ஒருவகையென்றால் கரிசான் குஞ்சு எழுதிய ‘பசித்த மானுடம்’ அதன் இன்னொரு பகுதியை ஆராய்கிறது. பசித்தமானுடத்தில் ஓர்பாலுறவு முக்கிய இடத்தினைப் பெற்றிருக்கிறது.
தொழுநோய் வியாதிக்காரனான கணேசனின் கடந்தகால நினைவுகளில் இருந்து தொடங்குகிறது கதை. கணேசன், கிட்டா என்ற இருவரின் இளம் பிராயத்தில் இருந்து தொடங்குகிறது நாவல். கும்பகோணத்தில் பிறந்து அனாதையான கணேசன் அங்கிருந்த ஒரு மடத்தில் சங்கரி மாமியிடம் அடைக்கலமாகி அவர்களுக்கு வேலைகள் செய்து கொடுத்து அந்த சத்திரத்துக்கு வருபவர்களுக்கு சாப்பாடு போட்டு, எச்சில் இலை எடுத்து வாழ்க்கையை தொடங்குகிறான். சத்திரத்துக்கு வரும் குழந்தை இல்லா வாத்தியார் அவனை கூட்டி கொண்டு தோப்பூர் என்ற கிராமத்துக்குச் செல்கிறார். அவனுக்குப் பாடம் சொல்லி கொடுத்து பார்த்து கொள்வதாக கணேசனும் உடன் செல்கிறான். அவரிடம் இருக்கும்வரை நன்றாக இருக்கும் அவன் பின் படிப்புக்காக கிராமம் விட்டு வெளியேறி நகரத்தில் வாழ்க்கை தொடங்கும்போது ஓரினச்சேர்க்கையாளர் ஒருவரின் ஆசை வார்த்தையால் தடம் புரள்கிறான். வயிற்றுப்பசியில் ஆரம்பிக்கும் கணேசனின் வாழ்க்கை காமப்பசி உள்ளவர்களுக்கு இரையாகி அவனும் அதில் சிக்குண்டு வாழ்க்கை இழுத்த இழுப்புக்கு செல்கிறான். தொழுநோய் கண்ட கணேசனுக்கு தனக்கு வைத்தியம்செய்யும் கன்யாஸ்திரிகளிடமும், அவனுடன் பிச்சையெடுக்கும் கண்பார்வையற்ற பிச்சைக்காரனிடமும் கட்டுக்கடங்காத காமம் ஏற்படுகிறது. அவன் அதிலிருந்து மீளும் காட்சியை ஆன்மிகத்துடன் கரிசான் குஞ்சு இணைத்திருந்தாலும் மனிதன் எப்போதுமே கட்டுப்படுத்தப்பட்ட விலங்கென்றே அவர் காட்டும் வாழ்வு புலப்படுத்துகிறது.
கலையும் இலக்கியமும் இருபெரும் தீராத பசியின் விளைவுகளையே பல்வேறு வகையில் ஆராய்கின்றன. ஒன்று உடலுக்கானது. மற்றது மனதுக்கானது. இவ்விரண்டு பசியும் கொண்டிக்கும் ஆங்காரத்தின் வெளிபாட்டில் ஒவ்வொரு கலைஞனும், வாழ்வைப் பற்றி தான் வைத்திருக்கும் ஆழமான அர்த்தங்களின் பிடிப்புமீது இறுதியில் சந்தேகம் கொள்ளவே செய்கிறான். அதன் ஊடாட்டத்தில் சிக்குண்டு பதறுகையில் வாழ்வு கைக்குள் சிக்காத பெரும் நதியென அறிந்து இறுதியில் சரணடைகிறான்.
பசியிடமும் காமத்திடமும் சரணடைவதுதானே எளிய மனிதர்களின் இறுதி உண்மை.