இலக்கியத்தின் பயன்பாடு என்ன? கேள்வி மிகப்பழமையானதுதான். முகநூல், புலனம் போன்றவற்றில் மிக எளிதாகத் தகவல்களைப் பெற முடியும் என்றும் அதன் மூலம் எத்தனை பெரிய விடயங்களையும் ஓரிருவரிகளில் சுருக்கமாக வாசிக்கவும் பதிவிடவும் முடியும் என நம்பும் படித்த இன்றைய இளைஞர்கள் இக்கேள்வியைக் கேட்பதற்கும் பாமரர்கள் கேட்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. என்னிடம் அதற்கு ஒரு பதில்தான் உள்ளது. நாம் யாராக இருந்து ஒரு இலக்கியப் பிரதியை வாசிக்கிறோமோ அதன் பொருட்டே நம்மை இலக்கியம் வந்தடைகிறது.
பிரம்மானந்தா சரஸ்வதியிடம் பேசிக்கொண்டிருந்தேன். பேச்சு அசோகமித்திரன் குறித்துப்போனது. நாங்கள் ‘பிரயாணம்’ சிறுகதை குறித்துப் பேசத்தொடங்கனோம். தன் குருவுக்கு வயோதிகத்தின் காரணத்தால் உடல் தளர்ந்திருப்பதால் அவரை ஒரு பலகையில் வைத்து இழுத்துச் செல்கிறான் இளம் சீடன். அவரிடம் ஒரு வருடமே யோகம் பயின்ற சீடன் வாயை எக்காரணம் கொண்டும் மூச்சு விடுவதற்குப் பயன்படுத்தாமலிருக்கக் கற்றுக்கொண்டதாக நினைக்கிறான். ஆனால் ஐம்பது, அறுபது வருட காலம் யோகியாகவே வாழ்க்கை நடத்திய அவனது குருதேவரோ அந்நேரத்தில் வாயைத் திறந்து வைத்துக் கொண்டும்கூட மூச்சு விடுவதற்குப் பெரும் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறார்.
சிறிதுநேரம் கழித்து அவரது இதயத் துடிப்பைச் சோதித்து அவர் இறந்துவிட்டதை அறிகிறான், அவர் மூக்கருகே தன் புறங்கையை வைத்துப் பார்த்தும் காதை அவர் மார்பு மீது அழுத்திக்கேட்டும் அந்த முடிவுக்கு வருகிறான். குரு கடைசியாக சீடனிடம் இட்டிருந்த பணிகள் இரண்டு. சாகும் தருவாயில் அவர் வாயில் பசும்பால்விட வேண்டும்; அவரைச் சமவெளியில்தான் புதைக்க வேண்டும். அந்த மலை உச்சியில் பால் ஊற்றுவது அர்த்தமற்றுப் போன சூழலில் இரண்டாவது கட்டளையையாவது நிறைவேற்ற நினைக்கிறான். அவரைப் பலகையில் படுக்க வைத்து கீழே இழுத்துச் செல்கிறான். வழியில் அவர்களை ஓர் ஓநாய்க் கூட்டம் சூழ்ந்து கொள்கிறது. அவையனைத்தும் குருவின் மேல் பாய ஆயத்தமாயிருக்கின்றன. சீடன் ஒரு கையில் கொள்ளிக்கட்டையையும், இன்னொன்றில் மூங்கில் கழியையும் சுழற்றிச்சுழற்றி அவைகளை விரட்டுகிறான். அவன் ஓநாய்களுடன் நடத்தும் போராட்டம் உக்கிரம் அடைகிறது. ஓநாய்கள் உறுமிக்கொண்டு பாய்ந்து வந்து, பிடுங்கி, அடிபட்டு, பின்வாங்கி, மீண்டும் பாய்ந்த வண்ணமிருக்கின்றன. அப்போதுதான் சீடன் ஒன்றை உணர்கிறான். சுயநினைவில் கற்பனை செய்தும் பார்க்க முடியாத உரத்த ஒலிகளை அவன் எழுப்பிக்கொண்டிருக்கிறான். அந்தப் போராட்டத்தில் அவனும் ஒரு பயங்கர விலங்காக மாறிப்போயிருந்தான். இருந்தும் இரண்டு ஓநாய்கள் அவனது குருவை இழுத்துக்கொண்டு ஒரு புதர்ப்பக்கம் போய் விடுகின்றன. பதற்றத்தோடு அவைகளைத் தடுக்கப்போன சீடன் கட்டை தடுக்கித் தரையில் வீழ்ந்து மயங்குகிறான். அவன் மயக்கம் தெளிந்து எழுந்தபோது குருநாதரின் நினைவு வந்து தேடிப்போகிறான். ஓநாய்கள் அவன் குருதேவரின் வயிற்றுப் பாகத்தைக் குதறித் தள்ளியிருந்தன. அவரின் தலை காணாமல் போயிருந்தது. ஆனால் ஒரு ஓநாயின் கால் அதன் தோள்பட்டையோடு பிய்த்து எடுக்கப்பட்டு, குருதேவரின் வலது கைப்பிடியில் இருந்தது என கதை முடிகிறது.
பிரம்மானந்தா சரஸ்வதி அக்கதை குறித்துப் பேசத்தொடங்கினார். “எவ்விதத்திலும் ஆன்மிக வளர்ச்சி இல்லாதவனை எவ்வளவு உச்சமான இடத்தில் கொண்டு வைத்தாலும் அவனால் அவன் அறிவுக்குட்பட்டதை மட்டுமே அறிய முடியும். குரு இன்னும் உயிருடன் இருக்கிறார் என அவனால் அறிய முடியவில்லை. அவர் இறந்ததாக நம்பியவன் அவர் இறப்பதற்கும் காரணியாகிறான். மூன்று வருடம் போராடியே அவன் குருவிடம் சீடனாகச் சேருகிறான். ஆனால், அவனால் நல்ல சீடனாக இருக்க முடியவில்லை. கல்வியும் போதனையும் மட்டுமே ஒருவனுக்கு முழுமையான அறிவை வழங்குவதில்லை” என்றார். ஒரு குருவாக பிரம்மானந்தா சரஸ்வதி கதையை உள்வாங்கிக்கொண்ட விதம் சரியாகவே பட்டது. ஆனால் நான் அந்தக் கதையைப் புரிந்துகொண்ட விதம் முற்றிலும் வேறானது.
நான் அக்கதையில் சீடனும் ஓநாய்களும் நடத்தியப்போராட்டத்தில் சீடன் ஒரு பயங்கர விலங்காக மாறிப்போயிருந்த காட்சியை முக்கியமானதாகக் கருதினேன். ‘ஒரு நிலையில் நாங்கள் இரு தரப்பினரும் சம வலிமை பெற்றவர்களாகத் தோன்றினோம். ஓநாய்களுக்குள் ஓநாயாக நான் இருந்தேன்’ என்ற சீடனின் எண்ணம் அவனது ஆதிமனப் படிமங்களாகவே எனக்குத் தோன்றியது. மனிதனின் அந்த ஆதிமனப் படிமம் என்பது உயிரின் வாழ்வாசை. இந்த வாழ்வாசைக்காக உலகம் தோன்றியதிலிருந்து உயிர்கள் தேர்ந்தெடுக்கும் வழிகள்தான் ‘Flight or Fight’ என இன்றைய மனோவியல் நிபுணர்கள் சொல்கின்றனர். ஒன்று பின்வாங்கி ஓடுதல் மற்றது சண்டையிடுதல். அதை தவிர மற்றதெல்லாம் வெற்றுக்கற்பனைகள். கற்ற அறிவு அனைத்துமே வெறும் பிரம்மை. சீடன் அதைதான் கடைசியில் கற்றுக்கொள்கிறான். முதலில் அவன் தான் மிருகமாக மாறியதில் இருந்து தன் அறிவின் மேல் இருந்த பிரம்மையைவிட்டு அகல்கிறான். பின்னர் தன் குரு தன்னைக்காட்டிலும் பெரிய மிருகமாகியிருந்ததைக்கண்டு அதுவரை கற்றதில் இருந்த அபத்தத்தை அறிகிறான். தலையில்லா குரு தன் கைகளில் ஓநாயின் காலை பிய்த்து வைத்துக்கொண்டு அவனுக்கு இறுதி போதனை செய்திருக்கிறார். அதற்குமேல் அவனுக்கு வாழ்வின் வேறு போதனைகள் தேவையில்லை. அவன் இறுதி உண்மையை அறிந்திருப்பான்.
பிரம்மானந்த சரஸ்வதியும் நானும் வெவ்வேறு துருவத்தில் இருந்தோம். ஒன்று அறிவு என்பது மேன்மை. மற்றது அறிவு என்பது பிரமை. ஓர் ஆன்மிக குருவும் ஓர் இலக்கியவாதியும் அவ்வாறுதான் சிந்திக்க இயலும். ஒரே கதை இருவேறு தரப்புக்கு வெவ்வேறாக அர்த்தப்படுகிறது. அதுதான் இலக்கியத்தின் தேவை. ஒரு படைப்பாளனின் சிந்தனை வாசகனின் சிந்தனையுடன் சேரும் தருணம் முற்றாக வேறொரு பரிமாணம் எடுக்கிறது. ஆனால் அதற்கு வாசகன் சிந்திப்பவனாக இருக்க வேண்டும். அசோகமித்திரன் போன்ற படைப்பாளிகளால் மட்டுமே இவ்வாறு வாழ்வின் மொத்த தரிசனங்களையும் எளிய வரிகளில் சொல்ல முடிகின்றது. ‘செல்லம்மாள்’ சிறுகதை எழுதியப் புதுமைப்பித்தன் அவ்வாறான ஒரு படைப்பாளி.
‘செல்லம்மாளுக்கு அப்பொழுதுதான் மூச்சு ஒடுங்கியது; நாடியும் அடங்கியது. செல்லம்மாள் பெயரற்ற வெற்றுடம்பு ஆனாள்’ என கதையின் முதல் வரி செல்லம்மாளின் மரணத்தைச் சொல்வதில் தொடங்குகிறது. ஒரு கீழ்நடுத்தரக் குடும்பம் அவர்களது. செல்லம்மாவின் கணவன் பிரமநாயகம் பிள்ளை ஒரு ஜவுளிக் கடையில் வேலை செய்கிறார். ஒன்றாம் தேதியானால் சம்பளம் வாங்குகிற வேலை இல்லை அது. எப்பொழுது தேவையோ அப்பொழுது தேவைக்கு ஏற்ப வாங்கிக் கொண்டு கணக்கில் கழித்துக் கொள்ளலாம். அப்படி பிய்த்துப்பிடுங்கி கிடைக்கும் சம்பளமும் செல்லம்மாளின் நோயால் பாதியை ஏப்பம் விடுகிறது. சம்பளத்துக்கு மீறிய கடன். குழந்தைகளும் இல்லை. ஆனாலும் செல்லம்மாள் மீது எந்த வருத்தமும் கணவனுக்கு இல்லை.
செல்லம்மாவின் மரணத்தின் கடைசி இருநாட்களைப் பேசும் இக்கதையில் அவள் உயிர் பிரியும் கடைசிக் கணம் வரைக்கும் பிரமநாயகம் பிள்ளை மனைவிக்குச் செய்யும் பணிவிடைகளைக் கதை நுட்பமாகவும் விரிவாகவும் பேசுகிறது. அவர் செய்யும் பணிவிடைகள் மிக ஆழமான அன்பைத் தாங்கியவை. யாருடைய ஆதரவுமில்லாத சாதாரண மனிதன் அவர். உறவினர்களோ குழந்தைகளோ நண்பர்களோ இல்லாத அவருக்கு மனைவி மட்டும்தான். ஆனால் அழையா விருந்தாளிபோல மரணம் அவர் வீட்டில் ஒரு பசித்த மிருகமாய் சுற்றிச்சுற்றி வருகிறது. ‘பிரயாணம்’ கதையில் வரும் ஓநாய் அது. பிரமநாயகம் பிள்ளையும் ‘பிரயாணம்’ சீடனைப்போல அந்த மிருகத்துடன் தன்னாலான போராட்டத்தை அமைதியாக நடத்துகிறார். சில சமயம் அதை உளாவவிட்டு அதன் வேட்டையின் வேட்கையைப் பார்க்கும் வெறும் சாட்சியாக இருக்கிறார். ஒருவகையில் ‘செல்லம்மாள்’ பிரமநாயகமும் ‘பிரயாணம்’ சீடனும் ஒரே சிக்கலில் இருக்கிறார்கள். அவர்களுக்கு நிதர்சனம் தெரியும். இறுதி உண்மை தெரியும். அவர்கள் நடத்தும் போராட்டம் வெற்றியடையாது. ஆனாலும் அவர்கள் போராட வேண்டியுள்ளது. இரண்டு நிலைகளுக்கும் இடையிலான ஒரு திட்டமிட்ட பாவனையை தங்களுக்குத் தாங்களே நிகழ்த்தவேண்டியுள்ளது.
கதையின் இறுதியில் மனைவி இறப்பு அவருக்கு அழுகையை ஏற்படுத்தவில்லை. புதுமைப்பித்தன் வடிவமைக்க விரும்புவது, பிரிவுச் சோகத்தை அல்ல. மரணத்தின் பெரும் ஆற்றலுக்கு முன் மனிதன் என்னவாக நிற்கிறான் என்பதைதான். ஒரு பறவையிடம் இருந்து பிரிவதைப் போலவும் ஒரு பழுத்த இலை மரத்திலிருந்து உதிர்வதுபோலவும் அல்லல் பட்டு பிரியும் ஓர் உயிர் மொத்த பிரபஞ்சத்தில் கரைவதை பிரமநாயகம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டே செல்லம்மாவுக்குச் சேவகம் செய்கிறார். அவர் பணிவிடை செய்தது செல்லம்மாவுக்கல்ல மரணத்துக்குத்தான்.
கதையின் இறுதியில் எதிர்ப்பார்த்த மரணம் நிகழும்போது அவர் அழவில்லை. மிதமான வெந்நீரில் செல்லம்மாவின் உடலைக் குளிப்பாட்டி அவள் ஆசையாய் கேட்ட அந்தப் பச்சைப் புடவையைச் சுற்றுகிறார். செல்லம்மாள் உடம்புக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளைச் செய்வதுடன் கதை முடிகிறது. எல்லாவற்றையும்போல மரணமும் மற்றுமொரு சம்பவமாகவே இருக்கிறது.
டயான் ப்ரோகோவன் எழுதிய ‘மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள்’ என்ற சின்னஞ்சிறிய நாவலும் மரணத்துடன் போராட முடியாது என உணர்ந்த ஒரு காதலின் தீவிரத்தில் உருவாகும் அபத்த தரிசனம்தான்.
தன் கணவன் ஜூல்ஸுடன் தனியாய் வசிக்கும் ஆலிஸ், ஒருநாள் காலையில் புத்துணர்ச்சியுடன் எழுகிறாள். இருவரும் வயதான தம்பதிகள். அவள் எழ காபியின் மணம் காரணமாக இருக்கிறது. அது ஜூல்ஸ் தயாரித்ததுதான். காலையில் காபியைத் தயார் செய்வது எப்போதும் ஜூல்ஸ்தான். ஒருவகையில் வீட்டில் அவர் அதை மட்டுமே செய்வார். படுக்கையறையிலிருந்து எழுந்து வருகிறாள் ஆலிஸ். ஹாலில் சோபாவில் அமர்ந்திருக்கும் கணவன் அருகில் அமர்கிறாள். அசைவுகள் ஏதுமில்லாமல் அமர்ந்திருக்கும் அவர் தோளில் கை வைத்தபோதுதான் தெரிகிறது. ஜூல்ஸ் இறந்து போயிருக்கிறார். அவளுக்கான இறுதி காபியைத் தயார் செய்துவைத்துவிட்டு இறந்துள்ளார்.
தான் கூறாதவரை உலகுக்குத் தன் கணவன் இறந்தது தெரியப்போவதில்லை. உலகுக்குத் தெரியாதவரை தன் கணவன் மரணம் எப்படி நிகழ்ந்ததாக இருக்க முடியும் என யோசிக்கிறாள் ஆலிஸ். இந்தப்பகுதி உண்மையில் என்னை அமைதியிழக்க வைத்தது. தினசரி வாழ்வில் அலைக்கழிக்கப்படும் மனம் அனுபவங்களால் மட்டுமே இசையவில்லை. அது அறிவிப்புகளால், தகவல்களால், செய்திகளால், வதந்திகளால், புகார்களால், அனுமானங்களால், நிபந்தனைகளால் நிறைந்துள்ள சொற்களின் மூலமே மனதை ஆக்கிரமிக்கிறது. தற்காலிகமாக அனுபவங்களின் வெளிகளை நிரப்பி இம்சிக்கின்றன. பெரியதாகவோ சிறியதாகவோ நிகழ்ந்து முடிந்த ஒரு சம்பவம் நம்மை வந்து அடையாதவரை இவ்வுலகத்தில் நமக்கு அது நிகழவில்லைதான்.
தன் துயரத்தினை வெளியிட்டால், அலங்கரிக்கப்பட்ட அழகிய பெட்டியில் சில மணி நேரங்களில் ஜூல்ஸை எடுத்துச் சென்றுவிடுவார்கள் என அவளுக்கும் தெரியும். அதை அவள் மனது ஏற்கவில்லை. இன்னும் ஒரே ஒருநாள் ஜுல்ஸுடன் வாழ்ந்து விடுவது என்று முடிவு செய்கிறாள். வெளி உலகிலிருந்து மறைப்பதற்கான வழிகளைத் திட்டமிடுகிறாள். வாடிக்கையான நிகழ்வுகளைக்கொண்ட சாதாரண நாள் ஒன்றை அவள் உருவாக்க நினைக்கிறாள்.
ஜூல்ஸுடன் பேசுகிறாள். கீழே விழுந்து கிடக்கும் அவரது மூக்குக்கண்ணாடியை அவருக்குப் போட்டுவிடுகிறாள். குளிர் என்பதால், சால்வையைப் போர்த்தி, கால்களில் காலணிகளை மாட்டி விடுகிறாள். செய்தித்தாளை அவர் மடியில் போட்டுவிட்டு, காலைச் சிற்றுண்டி உண்கிறாள். குளித்து, தேர்ந்தெடுத்த ஆடைகளை அணிகிறாள். சிறிது நேரம் அருகே படுத்து உறங்க முயற்சி செய்கிறாள். அப்போது அவள் சொல்லும் வரிகள் யாரின் மனதையும் கணக்க வைப்பவை.
“நீங்கள் ஏன் படுக்கையிலேயே செத்துப் போகவில்லை? அப்போது நாம் போர்வைக்குள்ளேயே ஒரு குட்டித் தூக்கம் போட்டிருக்கலாம்.”
அவள் பொய்களால் நடத்தும் போராட்டமும் பின்னர் நிதர்சனம் கொடுக்கும் கண்ணீரும் வாசகனை அமைதியழக்க வைப்பவை. தொடர்ந்து அவள் தன் கணவனுடன் பேசிக்கொண்டே இருக்கிறாள். முன்னெப்போதும் பேசவே துணியாத சிலவற்றை அவள் பேசுகிறாள்.
அவருக்கு மிகவும் பிடித்த, வோல்கா என்னும் பெண்ணிடம் அவருக்கிருந்த காதலையும் அவர் அவளுடன் வெளிநாட்டில் தங்க ரகசியமாக போட்ட திட்டங்களையும் தான் எவ்வாறு முறியடித்தாள் என்பதையும் நிதானமாகக் கூறுகிறாள். ஒரு சிறுத்தையின் கரங்கள் போல சட்டென தன் நகங்களை உள்ளிழுத்து மென்மையான பாதங்களில் வருடி, அந்த சூழ்ச்சிக்கு அடியில் இருப்பது அவன் மீதான காதல் என்கிறாள். அவரது இதழ்களில் முத்தமிட்டு, “தயவு செய்து என் மேல் கோபப்படாதீர்கள்” என்று சொல்கிறாள். அவளுக்கு இனி குற்ற உணர்ச்சி இல்லை.
ஆரம்பக் கட்ட ’கருச்சிதைவு’ குறித்து அவள் பகிரும் இடம் கனமானது. அக்கருசிதைவு அவளை வதைத்துள்ளது. மலத்தொட்டியில் விழுந்த அக்கருவை ஒரு பழைய நாளிதழில் வைத்து எடுத்துச் சென்று அவர் அடக்கம் செய்தது இப்போதும் அவளுக்கு நினைவில் சுடுகிறது.
ஒரு எளிய நாளாக அதை எப்படியும் கடந்துவிட ஜூல்ஸின் உடலைச் சுற்றிச்சுற்றி நடக்கிறாள். கடந்த கால நினைவுகளும், அன்றைய வலிகளும், எதிர்க்கொள்ளப்போகும் தனிமையின் வெறுமையும் அவளை வாட்டுகின்றன. தன் மகனிடம் கூட இதைச் சொல்லாமல் தவிர்க்கிறாள். அது அவளுக்கான நான். அவருடனான நாள். ஆனால், அதிலும் ஒரு சிக்கல் வருகிறது.
அவர்கள் வாழும் அதே அடுக்குமாடியின் கீழ்த்தளத்தில் வசிக்கும் டேவிட் என்ற சிறுவன் சரியாகப் பத்து மணிக்கு ஜூல்ஸுடன் சதுரங்கம் ஆட வருவது வழக்கம். அவன் ஆடிஸ்டிக் சிறுவன். சிறுவனின் தாயாரிடம் உண்மையை மறைக்கிறாள் ஆலிஸ். அவருக்கு உடல் நலமில்லை எனக்கூறி அவனுடன் ஜூல்ஸுக்கு பதிலாக விளையாடுகிறாள். டேவிட்டுக்கு அவளுடன் விளையாடுவதில் விருப்பம் இல்லை. அது ஆடிஸம் நோய் உள்ளவர்கள் பண்பு. பழக்கம் இல்லாத புதிய ஒன்றை அவர்கள் தவிர்ப்பர். புதியவை அல்லது புதியமுறை அவர்களை அச்சம் கொள்ளச்செய்யும். ஆனால் டேவிட் ஜூல்ஸின் மரணத்தை அறிந்துகொள்கிறான். அவனுக்கு அது ஒரு பொருட்டாக இல்லை. அது பற்றி ஒன்றும் கூறாமல் இருக்கிறான். மீண்டும் அழைத்துப்போக வரும் தன் அம்மாவிடம் கூட சொல்லவில்லை. ஆலிஸின் அன்றைய நாள் இயல்புக்குத் திரும்ப அவனும் இணைந்து செயல்படுகிறான்.
ஒரு விதத்தில் ஒட்டுமொத்த நாவலுக்கும் இச்சிறுவன் ஒரு குறியீடு. டேவிட்டின் தாய் பியா, அவள் அம்மாவுடன் மருத்துவமனையில் தங்க நேர்வதால், டேவிட்டை ஆலிஸிடம் ஒப்படைக்கிறாள். அன்று இரவு தன் வழக்கத்திற்கு மாறாக டேவிட் ஆலிஸுடன் ஜூல்ஸின் படுக்கையில் உறங்கிவிடுகிறான். அவனுக்கு அவன் நேரப்படி எல்லாம் நடக்க வேண்டும். இப்போது ஆலிஸுக்கும் ஆட்டிஸம் கொண்ட டேவிட் என்ற சிறுவனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இருவரும் புதியதை சந்திக்க விரும்பாமல் இருக்கின்றனர். ஆலிஸுக்கு மரணத்தை எதிர்க்கொள்ளும் அனுபவம் புதியது. இருவருக்கும் வழக்கமான ஒன்று எப்போதும்போல நடைப்பெற வேண்டும். உலகில் அவ்வாறு நிகழ சாத்தியம் இல்லை என டேவிட்டுக்குத் தெரியாது. ஆலிஸ் மனம் மரணத்தின் நிதர்சனத்தை அறிந்து வைத்துள்ளதும் அதை மறக்க நினைப்பதுதான் இந்நாவலின் சாரம்.
தனிநபர் வாழ்வில் மரணம் விளைவித்துச் செல்லும் உக்கிரம் வரலாற்றில் நமத்துப்போய்விடுகிறது. தனி ஒருவனின் வலியில் ஓலம் கொடுக்கும் பதைபதைப்பு வரலாற்றில் எழும் மனித ஓலங்களைக்காட்டிலும் கொடியது. வரலாற்றின் முன் மானுட வாழ்வுக்கும் மரணத்துக்கும் அர்த்தம் என்ன என்பதை ஒரு கேள்வியாக முன்வைக்கும் இலக்கியங்களில் ‘அக்னி நதி’ முக்கியமானது. குர் அதுல்ஜன் ஹைதர் எழுதிய நாவல் இது.
கொளதம நீலம்பாரன் என்னும் இளம் பிரம்மச்சாரி ஒரு நதியை நீந்திக் கடப்பதுடன் தொடங்குகிறது நாவல். மிக நீண்ட சரயு நதியை அவன் நீந்தி கடக்கிறான். ஆசிரமக்கல்வி பயில்வோர் யாரும் படகில் ஏற கூடாது என்பது சட்டம். கொளதம நீலம்பாரன் ஒரு கலைஞன். ஓவியம் வரையவும் நாடகம் எழுதவும் சிற்பங்கள் செதுக்கவும் தெரிந்தவன். அவன் குருவும் அவன் பிறவிக்கலைஞன் என அறிந்தே வைத்திருந்தார். ஆசிரமக்கல்வியில் ஈடுபட்டிருந்தவனுக்கு சம்பகா எனும் ராஜகுருவின் மகள்மீது காதல் ஏற்படுகிறது. அவள் யானை வேட்டைக்கு வந்த அரச பரிவாரங்களோடு ராஜகுமாரிக்கும் துணையாக வந்திருந்தாள். ஒருமுறை அவளைத் தற்செயலாய் பார்த்தவன் மறுமுறை பார்க்க மாதக்கணக்கில் அழைகிறான். ஒருசமயம் அவளே அவன்முன் வந்து நிற்கிறாள். அவளை வரைந்துகொடுக்கக் கேட்கிறாள். அவள்மேல் நெருக்கமான உணர்வு ஏற்பட சொற்களால் கடுகடுப்பைக் காட்டுகிறான். அது அவனுக்கே அவன் இட்டுக்கொள்ளும் வேலி. ஆனால் மீண்டும்மீண்டும் அவளைத் தேடிச்செல்கிறான். இறுதி நாள் அரசபடை திறந்தவெளியில் வைக்கும் நடனவிழாவில் வெறியுடன் நடனமும் ஆடுகிறான். மறுநாள் களைத்து உறங்கியவனைத் தொந்தரவு செய்யாமல் அரச பரிவாரங்கள் புறப்படுகிறது. சம்பகாவும் அவனிடம் சொல்லாமல் புறப்படுகிறாள். புத்த மதம் பரவிவரும் காலக்கட்டத்தில் ஆண்களோடு பெண்களும் துறவு பூணுவது பலரது சங்கடங்களுக்கிடையில் நடந்துக்கொண்டிருக்கிறது. பிக்குணியாக விரும்பும் சம்பகாவின் மனதில் கலங்கம் இல்லை. அதன்பின்னர் அவன் தன் கலையில் முழு ஈடுபாடு காட்டத் தொடங்குகிறான். சிராவஸ்தி நகரின் கடைவீதியில் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துப்போராடியதில் அவன் தன் இரு கைவிரல்களையும் இழக்கிறான். பின்னர் ஊர் போற்றும் நாடக நடிகனாகவும் மாறுகிறான். அவனுடன் நடிக்கும் அம்பிகாவின் தீவிர அன்பை அவன் அவமதிக்கிறான். யார் நமக்காக உயிரைக்கொடுக்கவும் துணிகிறார்களோ அவர்கள் மேல் நமக்கு எவ்வித கவர்ச்சியும் இருக்காது என்ற உண்மையை அனுபவத்தின் மூலம் அறிகிறான். சம்பகாவை பல ஊர்களிலும் தேடி அவள் அவன் பார்வைக்கு அகப்படவில்லை. அப்படி அவன் ஒரு ஊரில் நடிக்கும்போது சம்பகா அவனைப் பார்த்துவிடுகிறாள். அவனும் அவளைப் பார்க்கிறான். போரில் அரசன் கொல்லப்பட்டதும் மற்றப்பெண்களுடன் சிறைபிடிக்கப்பட்ட அவள், தரம் பிரிக்கப்பட்டு அறுபது வயது மதிக்கத்தக்க ஓர் உயர் அதிகாரிக்கு மணம் முடிக்கப்பட்டவளாக இருக்கிறாள். சம்பகா அவனைப் பார்க்க முனைகிறாள். அவன் அவளை அவமானப்படுத்தி அனுப்புகிறான். பின்னர் தான் வாழ்ந்த நகரை பல நாட்கள் நடந்தே அடைகிறான். பிரவாகம் எடுத்து ஓடும் சரயூ நதியில் நீந்துகிறான். மாணவனாக இருக்கும்போது நீந்தியது. ஆனால் இம்முறை அந்த நதியின் பேரலைகள் கௌதம நீலம்பரனின் தலைக்கு மேல் எழும்பி வியாபிக்கின்றன.
சரயூ நதியின் அலைகளில் நீந்தும் கௌதம நீலாம்பரனை தொடரும் நாவல் ஒரு வரியில் நழுவி வேறு காலகட்டத்தில் அந்நதிக்கரையில் வந்து சேர்ந்த அபுல் மன்சூர் கமாலுத்தீனிடம் வந்துவிடுகிறது. மீண்டும் அடுத்த கதை அதே நதிக்கரையில் ஆரம்பமாகிறது. காலம் பதினாறாம் நுற்றாண்டு.
கமாலுதீன் என்னும் இளைஞன். சுல்தான் ஹுசேனின் தூதராக அவன் தொன்மையான நூல்களையும் கலைகளையும் தேடி பயணிக்கிறான். அப்பயணம் அவனுக்கு இந்திய தேசம் குறித்த புதிய மனப்பதிவுகளைத் தருகிறது. தன் தாய் நாடான பாக்தாத்தைவிட இந்தியா அழகானது என்று கருதுகிறான். முகலாய ஆட்சி நிறுவப்பட போர்ச்சூழல் ஏற்படுகிறது. ஆட்சி பிடிக்கும் பதபதைப்பு உள்நுழைகிறது. மொகலாயர்கள் சுல்தான்களை வீழ்த்தி அதிகாரம் பெறுகிறார்கள். கமாலுதீன் மொகலாயர்களை எதிர்த்து போரிடுகிறான். போரினால் வாழ்க்கை மாறுகிறது. பாக்தாத்தில் பிறந்து வளர்ந்து, இந்திய நகர் ஜௌன்புரில் செழிப்பாக வாழ்ந்து வந்த அபுல் மன்சூர் கமாலுத்தீன் வரலாற்று அறிஞன், ஆராய்ச்சியாளன், அரசியல் நிபுணன், படைவீரன், தத்துவ ஞானம் – ஆன்ம ஞானத்தில் சிந்தனையாளன். இறுதியாகக் காசிமாநகருக்கு வந்து சேர்கிறான். காசியின் கங்கை கரையில் அலைகிறான். ஸோனார் எனும் கிராமத்துக்குச் சென்று சூத்திரப்பெண்ணான சுஜாதாவை மணக்கிறான். அவள் பெயரை ஆமினா பீவி எனப்பெயரை மாற்றி வைத்து அழகான குடிலில் குடித்தனம் நடத்துகிறான். அமைதியான வாழ்க்கை. உழவு செய்து பிழைக்கிறான். இசையில் மூழ்கிக்கிடக்கிறான். இந்நிலையில் தில்லி பாதுஷாவுக்கும் ஷேர்கானுக்கும் போர் நிகழ்ந்தது. அந்தப்போரில் கமாலின் மகன் ஜமால் போரில் பலியாகிறான். கமால் வசிக்கும் கிராமத்தை ஷேர்கானின் படைகள் சூரையாடின. தான் கற்ற அத்தனைக் கலைகளையும் மறந்திருந்த கமாலை சிப்பாய்கள் கொன்றுவிட்டுச் செல்கின்றனர்.
மீண்டும் சிரில் எனும் ஒரு இளைஞன் நாவலில் வருகிறான், காலம் பதினெட்டாம் நூற்றாண்டு. லண்டனில் கவிதையும் தத்துவமும் பயின்று வழக்கறிஞர் ஆக எண்ணும் சிரில் பிரிட்டிஷ் ஆட்சி அளிக்கும் செல்வத்தைப்பற்றியும் போகங்களைப்பற்றியும் அறிந்து இந்தியா வந்து வணிகனாகிறான். கவிதை எழுத முனைந்துகொண்டிருந்த அதே சிரில் ‘பப்’ ஹாட்டலுக்குள் நுழைந்து, சில பென்ஸ் நாணயங்களைக் கொடுத்து உருளைக்கிழங்கு சூப், கட்லெட்டெல்லாம் சுவைத்துக்கொண்டிருந்தான். இந்தியாவை நுகர்பொருளாக மட்டுமே காணும் அவன், போகத்தில் மட்டுமே திளைத்து கால வெள்ளத்தில் கரைந்து போக மீண்டும் கதை பல வரலாற்றுச் சம்பவங்களுடன் தொடர்கிறது. இந்திய சுதந்திரப்போராட்ட காலத்தில் நீண்டு, காங்கிரஸின் தோற்றமென வளர்ந்து சுதந்திர இந்தியாவின் முன் காலகட்டத்தோடு முடிவடைகிறது.
ஓடிக்கொண்டிருக்கும் நதி கடலைவிட ஆச்சரியம் தரக்கூடியது. கடல் எப்போதும் ஒரு முதியவரை எனக்கு நினைவுபடுத்தும். முதியவர் தன்னளவில் அனுபவமும் ஆழமும் கொண்டவர். அவர் இருந்த இடத்திலிருந்தபடியே உலகுடன் சம்பாஷித்துக்கொண்டிருக்கிறார். முதியவரை நாம்தான் சென்று காணவேண்டும். நதி அப்படியல்ல. அவன் இளைஞன். அதனால் அவன் ஓடிக்கொண்டே இருக்கிறான். அவன் விரும்பினால் நம் வீடுவரை வந்து சுளிப்பெடுத்துச்செல்வான். அவன் ஊர் முழுக்கவும் துள்ளலுடன் பவனிவரும் பொறுப்பற்ற சாட்சி. வாழ்வும் அவ்வாறானதுதான். நாம் நமது நம்பிக்கைகளால் வாழ்வெனும் கற்பிதம் மீது ஏற்றி வைத்திருக்கும் விழுமியங்களுக்கும் அதற்கும் துளியளவும் தொடர்பில்லை. இன்னும் சொல்லப்போனால் நதியைப்போலவே வாழ்வுக்கும் தனது அவசியம் குறித்து தெரியாது. தன்னைப்பற்றிதான் அனைவரும் பேசிக்கொள்கின்றனர் என அறியாத முழுமை அது.
வாழ்வெனும் நதியின் சாட்சியாகக் கொண்டு தோன்றி மறைந்த மூன்று இளைஞர்களும் வரலாற்றின் ஒருபிடி மண் மட்டுமே. அவர்கள் தங்கள் வாழ்வை அர்த்தப்படுத்திக்கொள்ளப் போராடுகிறார்கள். ஆனால் அந்தப்போராட்டத்திற்கு வரலாற்றில் சுவடே இல்லை. எல்லோரையும்போல அவர்களும் மடிகிறார்கள். அப்படிப் பலரும் மடிந்துமடிந்து நம் பாதங்களுக்குக் கீழ் புதைந்துபோயிருக்கும் மாபெரும் கல்லரைகளின் தொகுப்புதானே இந்த பூமி.