கொங்கு தமிழர் மாநாடும் கொசுத்தொல்லையும்!

najib-kongu-conference-KL-kayveasஅண்மையில் ஒரு வீடியோ, முகநூலில் மிக வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. ஜூலை 22 முதல் 24 வரை மலேசியாவில் நடைபெற்ற ‘கொங்கு தமிழர் மாநாட்டில்’ கலந்துகொண்ட ஒரு தமிழ்ப்பள்ளி ஆசிரியை தனது சாதியப் பெருமையை அதில் பகிர்ந்துகொள்கிறார். தாங்கள் பிடிவாதமாக கொங்கு கவுண்டர் சாதியைக் கடைபிடிப்பதாகவும் தங்கள் குழந்தைகளை சாதிய உணர்வுடன் வளர்ப்பதாகவும் அவர் பகிரங்கமாகக் கூறியது பெரும் எதிர்ப்புக்கு உள்ளானது. ஒரு தமிழ்ப்பள்ளி ஆசிரியை எப்படி அவ்வாறு கூற இயலும் என நமது அக்னிக் குஞ்சுகள் கொதித்து எழுந்தன.

இவ்வாறு நாட்டில் நடைபெறும் பேரணிகள் முதல் எளிய கலைநிகழ்ச்சி வரை  தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களைக் குறி வைப்பதும் அவர்கள் மேல் புழுதி வாரி இறைப்பதும் மட்டுமே எதிர்வினையாக எழுந்து அடங்கிவிடுகிறது. அப்படிச் செய்வது மிக எளிது. எதிர்வினை ஆற்றியதுபோல ஒரு தோற்றம் கொடுக்கலாம். அதனால் அரசையும் அதிகாரத்தையும் ஊடகத்தையும் பகைத்துக்கொள்ள வேண்டியதில்லை. பல மாதங்களாகவே  நம் கண்முன்னே மாநாட்டின் ஏற்பாடுகள் தடபுடலாக அரங்கேற, அதற்கு வலுவான எதிர்வினையாற்ற  இந்நாட்டில் குவிந்துகிடக்கும் திராவிடக் கழகங்களோ தமிழ்த்தேசிய அமைப்புகளோ தயாராக இல்லாத சூழலில் ஒரு தனி மனிதனின் மேல் பாய்வதன் காரணம் அவரவர் அமைப்புக்குத் தேவையான ஊடக நட்பையும் அரசியல் நட்பையும் கெடுத்துக் கொள்ளாமல் ஸ்திரப்படுத்திக் கொள்வதன்றி வேறில்லை .

இந்நாட்டில் மிகத்தந்திரமாகவே அரசு தன் காய்களை நகர்த்துகிறதா அல்லது அறியாமையா என்ற குழப்பமும் அவ்வப்போது வராமல் இல்லை. இம்மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் பொதுவாக ‘தமிழர்’ என்ற அடிப்படையில் தனது உரையை ஆற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த தமிழர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் அரசை அணுகியிருக்கலாம். சாதி அடையாளத்தை வட்டாரப் பெயர் கொண்டு தந்திரமாக மறைத்து,  பெரும்பான்மையான சாதியைக் கொண்ட குறிப்பிட்ட  ஒரு குழுவை மட்டுமே இம்மாநாடு குறிவைத்து நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வுண்மை இன்னொரு மதத்தில் உள்ளவருக்குப் புரியுமா? அல்லது இதை ஓர் மொழிவாரியான சமூகம் எனப் புரிந்துகொண்டாரா என்பது விளங்கவில்லை.

மலேசியாவில் சிறுபான்மை எண்ணிக்கையைக் கொண்ட இந்தியர்கள் மிக அண்மையில் இனவாரியாகப்13775754_10210404333692560_3411402725494193192_n பிரித்தாளப்படும் சூழலில்,  குறிப்பிட்ட ஓர் இனத்தையே பிரித்தாளுவதை அறியாமலா தேசிய முன்னணியில் இடம்பெற்றிருக்கும் ம.இ.காவும் நம் இந்திய அமைச்சர்களும் இருக்கிறார்கள் என்ற கேள்வியே எஞ்சுகிறது. பகுத்தறிவுப் பாசறையில் வளர்ந்ததாகச் சொல்லிக்கொள்ளும் பத்திரிகையாசிரியர்கள் தங்கள் நாளிதழ்களில் தாராளமாக மாநாடுகளை ஒட்டி செய்திகளை வெளியிடுகின்றனர். எல்லாவற்றுக்கும் துள்ளி எழும் ‘நாம் தமிழர்’ அமைப்புகள் கபாலிக்கு எதிர்வினையாற்றுவதில் காட்டிய அக்கறையை இம்மாநாட்டுக்கு எதிர்ப்புக்காட்டுவதற்குத் துணியவில்லை. இந்நிலையில் டத்தோ முருகையா ம.இ.கா தேசியத் தலைவரை மாநாட்டிற்கு முறைப்படி அழைக்காமல் அவமானப்படுத்தி விட்டார் என அறிக்கை விட்டுள்ளதும் டத்தோ கேவியஸ் தனது சாதிய அடையாளத்தை வெளிப்படுத்தியபடி முன்னிருக்கையில் அமர்ந்து மாநாட்டில் கலந்துகொண்டதும் சகித்துக்கொள்ள முடியாதது.

மாணவர்களுக்கு, மனிதர்களிடையே பேதமில்லை எனப்போதிக்க வேண்டிய ஆசிரியர் சாதியம் பேசுவது கண்டிப்புக்கு உரியதே. ஆனால் ஒரு சாதிய மாநாட்டுக்கு அரசு, முதல் அமைச்சர், அமைப்புகள் எனத்துணை போகும்போது அதை எதிர்த்துக்கேள்வி கேட்க துப்பற்றவர்களாகி, இயக்கம் நடத்திக் கொண்டிருப்பவர்கள் நாளைக்கு தனக்குக் கிடைக்க வேண்டிய நன்கொடைக்காக அதிகாரத்திடம் மௌனம் காத்துக்கொண்டு, ஓர் ஆசிரியையின் மேல் மொத்தக் குற்றச்சாட்டுகளையும் வசைகளையும் பொழிவது சமூக வலைத்தளங்களில் உலாவும் கொசுத்தொல்லைகள்தான்.

கூர்ந்து நோக்கினால், அந்த ஆசிரியர் வெளிப்படையாகக் கூறியதை நாட்டில் பல தலைவர்களும் படித்தவர்களும் மறைமுகமாகத் தங்கள் வீடுகளில் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் தங்கள் சாதிப்பற்றை மிக இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு தங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லி வளர்க்கின்றனர். இதன் காரணமாகத்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டமாக ஒரு மாநாட்டை இங்கே நடத்த முடிகிறது. ஆக, காணொளியில் பேசிய ஆசிரியரை விடப் பன்மடங்கு சாதிய மேட்டிமை புத்தி கொண்ட தலைவர்கள்தான் நம்மை வழி நடத்துகிறார்கள் என்பதே நிதர்சனம். உண்மை இவ்வாறு இருக்க ஒரு சமுதாய அவமானத்திற்கு முழுபொறுப்பையும் தனி மனிதன் மேல் வைப்பதும் அவரை சமூகத்துரோகியாக அடையாளப்படுத்த முயல்வதும் தமது கையாலாகாத்தனத்தை மூடிமறைக்கும் போலிப் போராட்டவாதிகளின் முயற்சிகளாகத்தான் கருதவேண்டியுள்ளது.

(Visited 130 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *