கலை இலக்கிய விழாக்கள்: கடந்துவந்த பாதை

01நேற்றுப்போல்  இருக்கிறது கலை இலக்கிய விழா கொண்டாடத்தொடங்கி. இது கொண்டாட்டமா என்றால்… ஆம்! கொண்டாட்டம்தான். 2009ல் நான் ‘கலை இலக்கிய நிகழ்ச்சி’ எனப் பெயரிட்டபோது மா.சண்முகசிவா சொன்னார், “இது நிகழ்ச்சி இல்லை. விழா. நாம் கொண்டாடப்போகிறோம்…” எனக்கு அப்போது ‘கொண்டாட்டம்’ என்ற சொல் அவ்வளவு உவப்பானதாக இல்லை. ஒரு தீவிர படைப்பாளிக்குள் எப்படிக் கொண்டாட்ட மனநிலை வரலாம் என, ‘கறார்’ முகத்துடன் இருந்தேன். பின்னர் பெயரைக் ‘கலை இலக்கிய விழா’ என மாற்றி அமைத்தேன். ஆனால், கொண்டாட்டமும் குதூகலமும் இல்லாமல் இலக்கியமும் கலையும் உருவாகும் மனநிலை வாய்க்காது என அடுத்த வந்த சில வருடங்களிலேயே அறிந்துகொண்டேன்.

கொண்டாட்டம் எனக்கு அருவெறுப்பாக இருக்க இன்னொரு காரணமும் இருந்தது. நாட்டில் இப்போது போலவே அப்போதும் பலவிதமான கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. கண்ணதாசன் விழா தொடங்கி யூ.பி.எஸ்.ஆர் பாராட்டு விழா வரை அவை நீண்டிருந்தன. ஒரு விழா நடந்து முடிந்தபின் அதன் பாதிப்பு சமூகத்தின் மத்தியில் என்னவென்று நோக்கினால் சொல்லிக்கொள்ள ஒன்றும் இல்லை. பண விரயம், மனித உழைப்பு விரயம் என மட்டுமே எஞ்சியிருந்தது. பணம் உள்ள ஒரு தரப்புக்குத் தாங்கள் சமூகத்தில் ஏதோ ஒருவகையில் இயங்குவதாகக் காட்ட “வெற்றியடைந்தவர்கள்” தேவைப்படுகிறார்கள். அவர்களை மையப்படுத்தித் தங்களை அடையாளப் படுத்துகிறார்கள். இந்தப் பாணியில் யாராலும் ஒரு விழாவை மிக எளிதாக முன்னெடுக்க முடிந்தது. அதற்கு தொழில்நுட்ப ரீதியாக சில முன்னேற்பாடுகளையும் மேடையில் பேச சில ஆட்களையும் அதை வேடிக்கைப் பார்க்க சில பார்வையாளர்களையும் தயார் செய்துவிட்டால் நிகழ்ச்சி வெற்றி. இந்த அசிங்கமான கலாச்சாரத்தில் வல்லினமும் இணைந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.

அதன்படி திட்டமிட்ட 29.08.2009ல் நடைபெற்ற முதலாவது ‘கலை இலக்கிய விழா’ ஒரு மறக்கமுடியாத கசப்பான அனுபவத்தைத் திணித்துவிட்டுப்போனது. எனக்கு அப்போது வயது 25.  அவ்விழாவில் மூன்று நூல்கள் பதிப்பிக்க மட்டும் 7000 ரிங்கிட் தேவைப்பட்டது. பிற செலவுகளுக்கு மேலும் ஒரு 4000 என அனுமானித்திருந்தேன். எப்படியும் பணம் திரட்டிவிடலாம் என நம்பிக்கை இருந்தது. எங்கிருந்து எப்படி அந்த நம்பிக்கை உருவானதெனத் தெரியவில்லை. யார் யார் அலுவலகத்தின் முன்போ காத்திருந்து நிகழ்ச்சியின் நோக்கத்தை விளக்கி பணம் கிடைக்காமல் திரும்பிய கசப்பு எப்போதும் முகத்தில் அப்பியிருக்கும். எல்லாப் பணக்காரர்களும் யாராவது ஓர் அரசியல்வாதியின் பெயரைச்சொல்லி, “ஏன் அவர்கிட்ட கேட்க வேண்டியதுதானே!” என்பதை, தவிர்க்கும் வழிமுறையாகத் தவறாமல் கடைப்பிடித்தனர்.

ஒருவழியாகப் பணம் திரட்டி முடிந்ததும் புதிய புதிய சோதனைகள் உருவானது. ஓவியத்தையும் புகைப்படத்தையும் எங்கே மாட்டுவது என அதுவரை யோசித்திருக்கவில்லை. ஓவியத்தை குத்திவைக்கும் அட்டையை வாடகைக்கு எடுக்க யாரோ ஒருவர் மூலம் ஒரு சீனரின் தொடர்பு கிடைத்தது. 3000 ரிங்கிட்டுக்குக் குறைக்க முடியாது என்றார். நான் தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினேன். ஏற இறங்க பார்த்த அவர் ஆச்சரியத்துடன் கேட்டார், “என்ன! நீதான் ஏற்பாட்டாளனா? நீயேன் இதையெல்லாம் செய்கிறாய்?” என்னிடம் பதில் இல்லை. கண்காட்சிக்கு வைக்கப்போகும் ஸ்டார் கணேசனின் புகைப்படங்களைக் காட்டினேன். 1000 ரிங்கிட்டுக்கு அனைத்து பொருள்களையும் லாரியில் எடுத்துவந்து பூட்டி பின் எடுத்துச்செல்லவும் சம்மதித்தார். கலைக்கு மொழி இல்லை என அறிந்த நாள் அது. ஓவியம் மாட்டத் தேவையான கருவிகளை ஓவியர் சந்துருவே தயார் செய்திருந்தார்.

முதல் விழாவில் கொஞ்சம் அகலக்கால் வைத்திருந்தேன். அப்போது பா.அ.சிவம், யுவராஜன், தோழி. ம02ணிமொழி, சிவா பெரியண்ணன், சந்துரு, மஹாத்மன், யோகி போன்ற இலக்கிய நண்பர்களின் உதவிகள் இருந்தன. ஆனாலும் அனைவரும் வெவ்வேறு தொழிலில் இருந்ததாலும் இதனைச் செய்ய வேண்டும் என்பதில் எனக்கு அதிக ஈடுபாடு இருந்ததாலும் பள்ளிக்கு சிற்சில சமயம் விடுமுறை எடுத்து ஒரு பைத்தியக்காரன்போல பணத்துக்கும் அச்சகத்துக்கும் மண்டபத்துக்கும் என அலைந்துகொண்டிருந்த தினங்கள் அவை.  ஓவியக் கண்காட்சி, புகைப்படக் கண்காட்சி, மூன்று நூல் வெளியீடுகள், சிங்கை இளங்கோவன் நாடக ஒளிப்பரப்பு என நெருக்கமான நிகழ்ச்சி நிரல்கள். காலையில் ஓவிய – புகைப்படக் கண்காட்சியில் நல்ல கூட்டம். மதியம் நூல் வெளியீட்டில் 30க்கும் குறைவானவர்கள். மீண்டும் நாடகம் பார்க்கப் புதியவர்கள் சிலர் வந்திருந்தனர். காலையிலேயே நிகழ்ச்சி தொடங்கியிருந்ததால் மாலையில் பலரும் சோர்ந்திருந்தனர். நிகழ்ச்சி முடிந்தபின்னர் நண்பர்களுக்கு மத்தியில் ஓர் இறுக்கம் நிலவியிருந்தது. எல்லோருக்கும் ஏதோ வகையில் குறைகள் இருந்தன. என்னால் எதையும் சரியாக அனுமானிக்க முடியவில்லை. கொஞ்ச நாள் மௌனமாகவே இருந்தேன். ஆனால், அவ்வயதில் அவ்வாறு இருப்பது என்னால் இயலாத காரியமாக இருந்தது. நான் என் அடுத்த வேலைகளைத் தொடங்கியிருந்தேன்.

‘மலேசிய சிங்கப்பூர் 2010’ இதழ் தயாரிக்கத்தொடங்கியது அக்காலக்கட்டத்தில்தான். அதைச் செய்ய குழுவோ நண்பர்களின் சுற்றமோ அவசியமாக இருக்கவில்லை. 200810ல் மலேசிய சிங்கை இலக்கியத்தின் ஒரு முகத்தைக் காட்ட படைப்புகளைக் கேட்டு வாங்கி தொகுத்துக்கொண்டிருந்தேன். ஒரு கணினியும் நானும் அதற்குப் போதுமானதாய் இருந்தோம்.  நான் அதிகம் பதற்ற உணர்வு கொண்டவன்; உணர்ச்சிவயப்படக் கூடியவன். சூழல்களால் மனச்சமநிலை இன்மை ஏற்பட்டு வேலை பாதிக்காமல் இருக்க நான் எனக்கான செயல்திட்ட கால அளவை தீர்மானித்தேன். காலையில் சீக்கிரமாக எழுந்து படைப்புகளைத் திருத்துவது. மின்னஞ்சல் அனுப்பி படைப்புகளைக் கேட்பது. மாலையில் மீண்டும் அதைச் செய்வது. 8 மாதங்கள் இவ்வேலை தொடர்ந்தது. வேறெதிலும் அக்காலத்தில் அதிகம் ஈடுபாடு காட்டவில்லை. அவ்விதழுக்குச் சந்துரு பக்கம் வடிவமைத்தார். பார்த்துப் பார்த்து வடிவமைத்த இதழ் அது. 11.09.2010 அன்று சோமா அரங்கில் ஜெயமோகனால் வெளியீடு கண்டது.  லுனாஸ் தியான ஆசிரமத்தின் மூலம் அழைக்கப்பட்ட எழுத்தாளர் ஜெயமோகனை இவ்விழாவில் நாங்கள் பயன்படுத்திக்கொண்டோம். அதே கலை இலக்கிய விழாவில் இயக்குனர் ராம் அவர்களை அழைத்து விமான டிக்கெட்டெல்லாம் போடப்பட்டது. அப்போதுதான் அவருக்கு ‘தங்கமீன்’ வாய்ப்பு வந்திருந்தது. கடைசி நேரத்தில் அவரால் வரமுடியாமல் போனது. சிவா பெரியண்ணன் அவர் பணத்தில் டிக்கெட் போட்டிருந்தார். இழப்பை ஏற்றுக்கொண்டார்.  ராம் வருவதாக பொய் விளம்பரம் செய்து கூட்டம் சேர்க்க நினைத்தோம் எனக் கேலிகள் பறந்தன. நண்பர்களே அதைச் செய்தபோது கொஞ்சம் வலித்தது.

தங்களை, தங்கள் எழுத்தை சமூக ஊடகங்கள் மூலமும் சுய முனைப்பின் மூலமும் முன்னெடுக்க முடியக்கூடிய ஒரு தலைமுறைக்காகச் செய்யும் செயலில் உள்ள உழைப்பு, மிக எளிதாக அந்த இளம் எழுத்தாளர்களாலேயே விமர்சிக்கப்படுவதை உணர்ந்த காலம் அது. “நீங்கள் செயல்பாட்டாளர். பொறுமையாகத்தான் இருக்க வேண்டும். எங்களைப் போன்ற படைப்பாளிகள் கொஞ்சம் உணர்ச்சிவயப்பட்டே இருப்போம்” என்பன போன்ற ஆலோசனைகள் என் இருப்பைக் கேள்விக்குறியாக்கின. ‘அப்படியானால் நான் படைப்பாளி இல்லையா?’ எனப் பலமுறை என்னை நானே கேட்டுக்கொண்டேன். உண்மையில் இச்செயல்பாடுகளால் என் படைப்பு மனம் சற்றே பாதிக்கப்பட்டும் இருந்தது. ஆனால், ஒரு காலகட்டத்து இலக்கியத்தை நகர்த்த யாரோ ஒருவர் தன் படைப்புக்கான நேரத்தை பணயம் வைக்க வேண்டியிருந்தது. நான் அதற்கு என்னை ஒப்புக் கொடுத்திருந்தேன். எவ்வித உழைப்பையும் போடாமல் ஒரு மேடை நிகழ்ச்சிக்காக திடீர் உணவு போல திடீர் இலக்கிய செயல்பாட்டை சரியான நோக்கமின்றி நடத்தும் வலுவான பொருளாதார கட்டமைப்புக்கொண்ட சங்கங்கள் சூழ்ந்துள்ள நிலையில் என் படைப்புக்கான நேரத்தை, இன்னொருவரின் படைப்பும் முன்னெடுக்கப்பட வேண்டும் எனச் செலவிடும்போது சொல்லப்படும் அபத்தமான ஆலோசனைகள் என்னை மனதளவில் அந்நியமாகவே ஆக்கின. வெற்றியென்றால் ‘நாம்’ என்றும் வீழ்ச்சி என்றால் ‘நீ’ என்றும் உபயோகிக்கப்பட்ட சொல் பெரும் மன உளைச்சலுக்குள்ளாக்க அனைத்தையும் விட்டு கொஞ்சம் தள்ளி இருக்கும்படி சண்முகசிவா ஆலோசனை கூறினார். “செய்கிறேன். ஆனால், எனக்கு 1500 ரிங்கிட் வேண்டும்” என்றேன். ஏன் என்பதுபோல பார்த்தார். மூத்த படைப்பாளிகளை ஆவணப்படம் செய்யப்போகிறேன் என்றேன். சிரித்தபடி பணம் கொடுத்தார்.

03மூன்றாவது கலை இலக்கிய விழா 5.6.2011ல் நடத்தப்பட்டது. அக்காலக்கட்டத்தில் எல்லா நண்பர்களும் அருகில் இருந்தாலும் எல்லாருடனும் ஒரு விலகலை என்னால் உணர முடிந்தது. அன்பையும் விலகலையும் சொற்கள் மூலம் புரியவைக்க வேண்டியதில்லை. விலகலுக்கு முதன்மையாக இரு காரணங்கள். வல்லினம் மூலம் எனக்குக் கிடைத்த அடையாளம் ஒருவகை அந்நிய உணர்வை மற்றவர்களுக்கு ஏற்படுத்தியது. தாங்கள் எழுதி வல்லினத்தின் காத்திரத்தன்மையை ஆழமாக்கி அதில் உருவாகும் வெளிச்சத்தை ஏன் எனக்குத் தரவேண்டும் என்ற தயக்கம் ஒரு காரணமாக இருந்ததை நேரில் கூற முடியாமல் புதிய புதிய சிக்கல்கள் கண்டுப்பிடிக்கப்பட்டன. படைப்புகளைக் கேட்டு நச்சரிக்கும் என் இயல்பு இன்னொரு காரணம். முதல் காரணம் உணரத்தொடங்கிய நிமிடம் நான் மேடைகளில் முன்வருவதை தவிர்க்கத் தொடங்கினேன். வல்லினத்தில் பதிப்பாகும் யார் நூல் வெளியீட்டிலும் என் முகம் வராமல் பார்த்துக்கொண்டேன். யாருடைய ஆளுமையிலும் நான் பங்குபெற்றுவிடக்கூடாது என கவனமாக இருந்தேன். நூல் பதிப்பித்தல் ஒரு நிபுணத்துவமான தொழில்நுட்பம். எழுத்தாளனே அதில் பிரதானம். பதிப்பாளன் அல்ல என நான் நம்பும் உண்மையை அனைவரிடமும் கூறியே வைத்தேன். ஆனால், அடையாளச் சிக்கல் உள்ளவர்களின் மனநிலையை மாற்றுவது அத்தனை எளிதானதாக இல்லை. நான் முன்னிலைப்படுத்தப்படுவது என்னை மீறியே நடந்தது. தலப்பாக்கட்டி பிரியாணி உணவகம் மேல்தளத்தில் இருந்த மண்டபத்தில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம். அந்நிகழ்ச்சி செம்பருத்தியுடன் இணைந்து ஏற்பாடாகியிருந்தது. மலேசியத் தமிழர் வரலாற்றை இலக்கியத்தில் வடித்து இயங்கி கொண்டிருந்த 80 வயதைக் கடந்த அ.ரெங்கசாமி; 78 வயதில் சுயவரலாறு, நாட்டுப்புறப் பாடல்கள் போன்ற நூல்களை எழுதி நூலாக்கியிருந்த முத்தம்மாள் பழனிசாமி; ‘மலேசியத் தமிழர்களின் இக்கட்டான நிலை’ நூலை எழுதிய ஜானகிராமன் போன்றவர்களைக் கொண்டு இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இம்மூவருக்கும் உள்ள ஒற்றுமை அவர்களின் வரலாறு சார்ந்த பிரக்ஞை. வல்லினம் பதிப்பில் வெளிவராவிட்டாலும் இக்கலை இலக்கிய விழாவில் தமிழினி பதிப்பில் வெளிவந்த அ.ரெங்கசாமியின் ‘இமையத் தியாகமும்’ மற்றும்  முத்தம்மாள் பழனிசாமி எழுதிய சுயவராலாற்று நூலான ‘நாடு விட்டு நாடு’ மற்றும் ‘மலேசிய நாட்டுப்புறப் பாடல்கள்’ தொகுப்பும் இந்நிகழ்ச்சியில் அறிமுகம் கண்டதோடு கல்லூரி மாணவர்களின் எளிய அறிமுகத்துக்காக அ.ரெங்கசாமி நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி எழுதிய ‘விடிந்தது ஈழம்’ செம்பருத்தி மூலம் பதிப்பிக்கப்பட்டு இலவசமாக  வழங்கப்பட்டது. மனதளவில் எனக்குத் திருப்தி இருந்தது. அவ்விழாவை அவ்விரு படைப்பாளிகளாலும் அங்கீகரிக்க முடிந்தது. ஊடகங்களில் முத்தம்மா பழனிசாமி தொடர்ந்து பேசப்பட்டார்.

5.2.2012ல் நடந்த கலை இலக்கிய விழா 4ல் நான் அதி உற்சாகமாக இருந்தேன்.  பழைய கசப்புகள் விலகி மீண்டும் இளம் படைப்பாளிகள் படைப்புகளை முன்னெடுக்க வேண்டும் என04 உற்சாகம் பிறந்தது. அதோடு அந்த நூல்கள் தமிழகத்திலும் கிடைக்க வேண்டுமெனத் திட்டமிட்டிருந்தேன்.  குழந்தைகள் வாழ்வை மையப்படுத்திய சினிமா தொடர்பாக கே.பாலமுருகனையும் அதுவரை, தான் செய்த வேலைகள் தொடர்பாக யோகியையும் எழுதச்சொல்லி செரிவு செய்து வல்லினத்தில் தொடராகப் போட்டுக்கொண்டிருந்தேன்.  அவற்றை நூலாக்கத் திட்டம். அதேபோல சிவா பெரியண்ணன் கவிதைகள் ஆங்கிலம் தமிழ் என இரு மொழிகளில் நூலாக்குவதோடு எனது பத்திகளையும் நூலாக்கத்திட்டமிட்டு கறுப்புப்பிரதிகளோடு இணைந்து செயல்படுத்தினேன். மொழிபெயர்ப்புக்குச் சிங்கை இளங்கோவனின் உதவி இரண்டாவது முறையாகக் கிடைத்தது (முதல்முறை என் கவிதை நூலை மொழிபெயர்த்தார்). இதற்கிடையில் மலேசியாவில் முதல் பகுத்தறிவாளர் மாநாடு ஏற்பாடாயிற்று. நான் அக்குழுவில் இருந்தபடியால் ஆதவன் தீட்சண்யா மற்றும் அ.மார்க்ஸ் அதில் கலந்துகொண்டு கட்டுரை வாசிக்க ஏற்பாடு செய்தேன். அவர்களே நான்காவது கலை இலக்கிய விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்வதையும் உறுதி செய்தபோது விழா முழுமை அடைந்தது. தயாஜி முழுமையாக வல்லினத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட காலம் அது.

வேறு யார் சொல்லாவிட்டாலும் நான் ஒரு சிக்கலான பேர்வழி என எனக்கே நன்கு தெரியும். ஒரு செயலைத் திட்டமிட்டால் அது முழுமையாகும் வரை2016-07-28 08.49.09 அழுத்தம் கொடுத்துக்கொண்டிருப்பேன். கலைஞன் என்றால் கொஞ்சம் ஏனோ தானோவென்று இருப்பான் என்பன போன்ற சொத்தையான சொற்கள் மீது எனக்கு ஈடுபாடு இருந்ததில்லை. 2006ல் ‘காதல்’ இதழ் தொடங்கி தொடர்ச்சியாக ஆறு ஆண்டுகள் படைப்புகளைக் கேட்டு நச்சரிக்கும் ஒருவன் எவ்வாறு இலக்கியவாதிகள் மத்தியில் கணிக்கப்படுவான் என அறிந்தே அதை செய்துகொண்டிருந்தேன். சில நண்பர்கள் என்னால் பெரும் மன உளைச்சல் ஆவதை நேரடியாகவே கூறினர். அப்படியானால் 6 ஆண்டுகளாக அதே வேலையைச் செய்யும் நான் முற்றிய மனநோயாளியா என எனக்கே குழப்பம் ஏற்பட்டது.  மேலும் படைப்பு மட்டும் அல்லாமல் அதை முன்னெடுக்கும் செயல்பாடுகளுக்குப் பணம் கேட்டு அலையும் ஒருவன் எவ்வளவு சுமையானவனாக இருப்பான் என்பதையும் ஆழமாக உணர்ந்தே வைத்திருந்தேன். ஆனால், அதையெல்லாம் மறந்துவிட்டதுபோல நடிக்க ஒரு பைத்தியக்கார மனம் தேவைப்படுகிறது. பிறர் பார்வையில் நாம் என்னவாக இருக்கிறோம் என்பதைக் கிஞ்சித்தும் கவனம் கொள்ளாமல் செய்ய வேண்டியதைச் சரியாகச் செய்வது குறித்து அறிய, வழக்கறிஞர் பசுபதியின் நட்பும் ஆலோசனைகளும் உதவின. சிலசமயம் அவமான உணர்ச்சி மேலிடும்போது மரு.சண்முகசிவா, ‘நீ செயல்பாடுகளுக்காக வாங்கும் பணம் உன் சட்டைப்பாக்கெட்டில் விழாதவரை நீ எதற்கும் அவமானம் கொள்ளத்தேவையில்லை’ எனச் சொன்னது நினைவுக்கு வரும்.

05செப்டம்பர் 15 2013ல் ஐந்தாவது கலை இலக்கிய விழாவில் அ.பாண்டியன், கங்காதுரை, சரவணதீர்த்தா ஆகியோரின் இணைவு கூடுதல் பலத்தைக் கொடுத்திருந்தது.  மூவருக்கும் ஒரு பொதுவான ஒற்றுமை இருந்தது. தங்களால் செய்ய முடிந்ததை முழு முனைப்புடன் செய்தனர். மிகவும் வெளிப்படையாக இருந்தனர். அவ்விழாவுக்கென மீண்டும் அ.மார்க்ஸ் வந்திருந்தார். கே.பாலமுருகனின் சிறுகதைத் தொகுப்பு, பூங்குழலியின் கவிதைத் தொகுப்பு, என்னுடைய விமர்சன நூல் என மூன்று நூல்கள் வெளியீடு கண்டன. என்னை மனதளவில் சுருங்கிப்போகச்செய்த நிகழ்ச்சி அது. ம.இ.கா மீதும் எழுத்தாளர் சங்கம் மீதும் என்னிடம் என்ன புகார்கள் இருந்ததோ அதையே நானும் செய்திருந்தேன். ஆக்ககரமான செயல்பாட்டுத் திட்டங்கள் இல்லாதவர்கள் அடுத்த இலக்கில் தெளிவில்லாதவர்கள்  எப்படி இருப்பதைக் கொண்டு ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வார்களோ அதையே நானும் செய்திருந்தேன். நூல் பதிப்பித்தல் என்பது தொழில்நுட்பம் சார்ந்தது. பணமும் நேரமும் இருந்தால் யார் வேண்டுமானாலும் அதை செய்யலாம். பெரிய உழைப்பெதுவும் அதற்குத் தேவையில்லை. இப்படியே நூல்களைப் பதிப்பித்து மலேசிய இலக்கிய உலகுக்குப் பங்களிப்பதாக ஒரு நாடகம்கூட வாழ்நாள் முழுக்கப் போடலாம். ஆனால், எழுத்தைப் போலவே அதை முன்னெடுக்கும் செயல்பாடும் நமக்கு நாமே இட்டுக்கொள்ளும் ஒரு சவால். இதுவ2016-07-28 08.48.11ரை செய்ய இயலாத ஒன்றை நோக்கிப் பாய்வதே அதன் சுவாரசியம். வல்லினம் வெறும் நூல் பதிப்புக்காக மட்டுமே உருவானதல்ல என என்னால் ஆழமாக உணர முடிந்தது. இப்படியே போனால் வல்லினம் தேங்கிவிடும் என என்னால் உள்ளூர அறிய முடிந்தது. நான் செய்யும் தவறுகளை ஆராய்ந்தபோது முன் திட்டம் இல்லாதது அதன் முக்கியக் காரணிகளில் ஒன்றாக இருந்தது. முழுத் திட்டமும் என் மூளையில் இருக்குமே தவிர அது குறித்து நண்பர்களிடம் விவாதித்ததில்லை. அவ்வருடம் பிரிக்பில்டில் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்தேன். அடுத்த வருடம் என்ன செய்யலாம் எனத் திட்டமிட்டோம். தனி ஒருவரின் திட்டத்தில் உருவாகும் செயல்பாடுகள் காலஓட்டத்தில் வலுவிழந்து போய்விடும் என்பதற்கு உதாரணமாக சாமிவேலுவும் ராஜேந்திரனும் இருந்ததால் அவர்கள் தவறிலிருந்து என்னால் கற்றுக்கொள்ள முடிந்தது. விவாதங்களின் வழி வல்லினத்தின் அடுத்தடுத்த நகர்வுகளைத் திட்டமிட்டோம்.

2.11.2014ல் ‘வல்லினம் விருது’ கலை இலக்கிய விழா 6ன் மூலம் உருவானது. விருதை வழங்குதல் என்பது கொண்டாட்டம். பணம் இருந்தால் யாரும் யாருக்கும் விருது தரலாம்06 என்பதில் கவனமாக இருந்தோம். விருதைப் பெறப்போகும் அ.ரெங்கசாமியின் ஆவணப்படத்தைத் தயார் செய்ததோடு அவர் வாழ்க்கை வரலாற்றை நூலாக்கும் பணிகளில் இறங்கினோம். சண்முகசிவா வழங்கிய பணத்தில் வாங்கிய கேமரா எங்கள் முயற்சிக்குத் துணை நின்றது. சிவா பெரியண்ணன் ஆவணப்படத்திட்டத்தைச் செயல்படுத்தினார். அந்நிகழ்வு எனக்கும் வல்லினம் நண்பர்களுக்கும் முழு நிறைவைக் கொடுத்தது. ஒரு கொண்டாட்டம் என்பது கடும் உழைப்பின் இறுதியில் ஏற்படக்கூடிய களிப்பு. அதை அன்று உணர்ந்தோம். லீனா மணிமேகலையின் வருகையும் அவர் உரையும் கூடுதல் உற்சாகமான தினங்கள். அவர் செயல்பாட்டாளர். ஓயாது இயங்குபவர். அவரால் எங்கள் உழைப்பைப் பாசாங்கில்லாமல் அங்கீகரிக்க முடிந்தது. ஒரு கொண்டாட்டத்தை எப்படி அர்த்தபூர்வமாக்குவதென்பதற்கு அந்நிகழ்ச்சி ஓர் உதாரணம். அது நேற்று முடிவெடுத்து இன்று செய்த செயல் அல்ல. சன்னம் சன்னமாக நகர்ந்து வந்திருந்த களைப்பை உணர்ந்தோம்.

இதற்கிடையில்தான்2016-07-28 08.51.12 வல்லினத்தின் கிளை நிறுவனமாக ‘யாழ்’ பதிப்பகம் உருவானது. விஜயலட்சுமி மற்றும் தயாஜி அதில் பொறுப்பேற்றனர். ‘தயாஜி எழுதினால் நான் வல்லினத்தில் எழுத மாட்டேன்’ எனச்சொல்லி விலகியவர்களின் சொற்களை சாதாரணமாக்கி ‘யாழ்’ இதழை நாடு முழுவதும் கொண்டுசெல்வதில் தயாஜி வெற்றியடைந்தார். ஓர் இலக்கிய இயக்கம் எழுத்தாளர்களால் அல்லது சிந்தனையாளர்களால் மட்டும் நிலைப்பதில்லை. அதற்கு பொருளியல் ரீதியான பலமும் தேவை.  ஒரு கோப்பை டீ கிடைத்தால் அவநம்பிக்கையான சொற்களுடன் முயங்கியபடி இருப்பவர்களை விட்டு வல்லினம் தீவிரமாகவே வளரத்தொடங்கியது. ‘யாழ்’ தனது வேர்களை ஆழ ஊன்றியது. முதல்முறையாக கலை இலக்கிய விழா 7 மலாயா பல்கலைக்கழகத்தில் குறைந்த நன்கொடை பெறப்பட்டு தன் சொந்த பண பலத்தில் நடைபெற்றது. ஒவ்வொரு கலை இலக்கிய விழாவுக்கும் ஏதாவது ஒரு அலுவலகத்தின் முன் காத்திருக்கும் எனக்கு அவ்வருடம் மனம் கொஞ்சம் இலகுவானது. இந்தத் திடீர் பாய்ச்சலில் ‘வல்லினம் கார்பிரேட் கம்பெனியாகிவிட்டது’ என கேலி பேசியதையெல்லாம் யாழின் வெற்றி தின்று தீர்த்து ஏப்பம் விட்டது.

071.11.2015ல் எழுத்தாளர் இமையம், ஆதவன் தீட்சண்யா, வா.கீதா மற்றும் ஓவியர் மருது கலந்துகொண்ட இவ்விழாவில் 4 நூல்கள் வெளியீடு கண்டன. அதில் மூன்று நூல்கள் அவ்வெழுத்தாளர்களின் முதல் நூல். மேலும் ஓவியர் சந்துருவின் ஓவியமும் இவ்விழாவில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. பொதுவாக இங்குள்ள ஓவியர்களுக்குச் சமகால ஓவியனை அங்கீகரிப்பதில் சிக்கல் உள்ளது. மருதுவின் வெளிப்படையான பாராட்டு சந்துருவின் ஆளுமை குறித்த ஒரு தெளிவைப் பலருக்கும் கொடுத்தது. இத்தனைகாலம் அவரை ஒரு வடிவமைப்பாளராகவும் பத்திரிக்கைக் கதைகளுக்குக் ‘கொஞ்சம் வித்தியாசமாக’ வரைந்துகொடுப்பவராகவும் குழப்பமான பட்டியலில் வைத்திருந்தவர்கள் அவரை முழுமையான ஓவியராக ஏற்றனர். வெளிவந்த நூலில் இரு நூல்கள் முழு முற்றாக மலேசியாவுக்குப் புதிய அறிமுகம். அ.பாண்டியன் எழுதிய மலாய் இலக்கியம் குறித்த அறிமுக நூலும் விஜயலட்சுமியின் பதிப்பகத்துறை குறித்த கட்டுரைகளும் பலராலும் பேசப்பட்டது. எவ்வாறான நூல் வல்லினம் பதிப்பகத்தில் வர வேண்டும் எனக் கருதினேனோ அது புதிய நண்பர்கள் வருகையால் இணைவால் சாத்தியமானது.

என் தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட சிக்கல்கள் மெல்ல வல்லினத்திற்குள் அக்காலக்கட்டத்தில் புகுந்தது அபத்தம். வேறெப்படியும்2016-07-28 08.50.14 வீழ்த்த முடியாத வல்லினத்தின் கட்டமைப்பைத் தனிப்பட்ட வாழ்வின் சிக்கல் வழியாக வசையாக்குவதன் மூலமும் கிண்டல் செய்வதன் மூலம் சிலர் நிவர்த்தி செய்துக்கொண்டனர். அதேசமயம் நான் போலியான நபர்கள் வல்லினத்தில் இருக்கக்கூடாது எனவும் தீர்க்கமாக முடிவெடுத்திருந்தேன். எதையும் வாசிக்காமல், முகநூலில் கிடைக்கும் அறிமுகத்தால் அடையாளப்படுத்திக் கொள்ளும் அரசியலுக்கு வல்லினம் இடம்தருவதில் எனக்கு உடன்பாடு இல்லை. இவ்வாறான குழப்பங்களில் எனக்கு ஆலோசனை தருவது வழக்கறிஞர் பசுபதிதான். அவர் சொன்னார், “நீங்கள் சரியான ஒன்றை மிகத்தீவிரமாகச் செய்யும்போது அதற்கு எதிரான மனநிலையைக் கொண்டவர்களை இயற்கை தானாக விரட்டிவிடும்”. அது நடந்தது. மொண்ணையான பேச்சின் மூலமும் செயற்கையான பரபரப்பு மூலமும் போலியான நெருக்கம் மூலமும் ஆளுமையைக் கட்டமைக்க நினைப்பவர்களுக்கான இடமில்லாமல் வல்லினம் ஆகியபோது கொஞ்சம் நிதானம் அடைந்தேன். ஆனால், அடையாளங்களை விரும்பாத அசல் கலைஞர்களின் விலகல் பெரும் மனவலியை உருவாக்கியது.

இவ்வாறு பல சிக்கல்களையும் தடைகளையும் கடந்து கலை இலக்கிய விழா 8-ஐ நெருங்கியுள்ளோம். முன்பிலும் கூடுதல் முதிர்ச்சியான பக்குவமான IMG-20160727-WA0000 நண்பர்கள் அரவணைப்பு உற்சாகமாக நகர்த்துகிறது. ஶ்ரீதர்ரங்கராஜ் அவர்கள் வல்லினத்தில் பொறுப்பாசிரியரானபின் படைப்புகளைக் கேட்டு அலையும் உளைச்சலை வெற்றிகரமாக அவருக்கு மடைமாற்றியுள்ளோம். தடைகள் இல்லாமல் உரையாடும் அ.பாண்டியன், கங்காதுரை, சரவணதீர்த்தா, பூங்குழலி, தயாஜி, விஜயலட்சுமி போன்றவர்களால் மனத்தடைகள் இல்லாமல் வல்லினம் நகர்கிறது. அடுத்த ஆண்டு முதல் மஹாத்மனும் முனைவர் முனீஸ்வரனும் வல்லினத்தில் இன்னும் தீவிரமாக இணைந்து இயங்குவதாகச் சொல்லியுள்ளனர். புதியவர்களின் வருகை புதிய திட்டங்களை உருவாக்கும் ; மேம்படுத்தும்.

இக்கலை இலக்கிய விழாவில் மா.சண்முகசிவா, அரு.சு.ஜீவானந்தன், சை.பீர்முகம்மது, மற்றும் கோ.புண்ணியவான் ஆகிய நான்கு மூத்த படைப்பாளிகளின் ஆவணப்படங்கள் வெளியாகின்றன. அதோடு அனைவரது தேர்ந்தெடுக்கப்பட்ட இரு சிறுகதைகளும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பதிப்பிக்கப்பட உள்ளன. இம்முயற்சி மலேசியத்தமிழ் படைப்பாளிகளை நாடு கடந்து அறிமுகப்படுத்தும். பொதுவாக ஆளுமைகளுக்குச் சிறப்பு செய்யும் நிகழ்ச்சிகள் சடங்கு பூர்வமானவையாக மாறிவிடும் தன்மையைக் கொண்டுள்ளதால் நான்கு பேரின் மொத்தப்படைப்புலகம் குறித்த விமர்சன நூலும் வெளியீடு காண்கிறது. எழுத்தாளர் நாஞ்சில் நாடன் கலந்துகொள்ளும் இந்நிகழ்ச்சி வல்லினத்தின் இன்னுமொரு பரிணாமம். வல்லினத்தின் இருப்பை வலுவாக நிலை நிறுத்த உங்கள் வருகை அவசியம்.

13.11.2016ல் நடைப்பெறும் கலை இலக்கிய விழா 8ல் உங்கள் வருகை எங்கள் கொண்டாட்டத்தை அதிகமாக்கும். ஆம்! நாம் கொண்டாடப்போகிறோம்.

(Visited 495 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *