சம்ஸ்காரா : அகங்காரத்தின் மௌனம்

__38916_zoomஒரு நாவலை வாசித்தல் என்பது ஒரு வாழ்வை வாழ்ந்து பார்ப்பது. ஒரு வாழ்வு ஓரர்த்தைதான் கொடுக்க வேண்டும் என எந்த அவசியமும் இல்லை. சிறந்த நாவல்கள் ஒரு கதையைத் தன்னியல்பில் சொல்லிச் செல்கின்றன. ஆனால் ஒரு வாசகன் அந்த எழுத்தாளன் சொல்லாத அர்த்தங்களையும் அவன் சொற்களில் விடும் இடைவெளி மூலம் புரிந்துகொள்ள முடியும். ஒரு புகைப்பட கலைஞன் பிடித்தக் குழுப்படத்தில், மூலையில் நிற்கும் தன்னந்தனியான சிறுமியின் கண்களில் தெரியும் மெல்லிய சோகத்தை அறிந்து கொள்வதில் இருக்கிறது நுட்பமான வாசகனின் சவால்.

இமையம் எழுதிய ‘ஆறுமுகம்’ நாவலில் திருமணமாகியும் தன்னிடம் கூடாமல் பதுங்கி பதுங்கி ஓடும் தனபாக்கியத்தை  பிடித்த ராமன் அவள் காதுகளையும் மூக்கையும் கடிக்கிறான்; அவளிடம் உறவு கொள்கிறான். அவன் பின்னர் ஒருசமயம் இறந்தும் போகிறான். அவர்களுக்குப் பிறந்த பையன் ஆறுமுகம். சிறுவனாக இருக்கும்போது தனபாக்கியத்தின் காதுகளையும் மூக்கையும் கடிக்கிறான். “அந்தச் சதிகாரன் செஞ்சதயே இந்தச் சதிகாரன் செய்றான் பாரு” என தனபாக்கியம் சொல்வதை அவ்வளவு எளிதாக என்னால் கடந்து செல்ல முடியவில்லை. அது ஒரு எதார்த்தமான சித்தரிப்பு மட்டுமே. ஆனால் எதார்த்தங்களை உற்றுநோக்கும்போதுதான் மனித மனதின் பல்லாயிரம் ஆண்டுகளாக உரைந்துபோய்கிடக்கும் படிமங்களை தேடிக்கண்டடைய முடிகிறது.

‘சம்ஸ்காரா’ ஒரு குறியீட்டு நாவலாகச் சொல்லப்படுகிறது. இந்நாவலை விரிவான பொருளின் குறியீடுகளாக வாசிக்கத்தவறினால் பழமை X புதுமை என்ற இரட்டை நிலையிலோ பிராமணியத்தின் பிற்போக்குத்தனம் என்ற வகைமையிலோ உள்வாங்கப்படலாம். அவ்வாறான புரிதல் வாசக மனதில் எந்த விரிவையும் உருவாக்கப்போவதில்லை. நாம் ஏற்கனவே நமது அறிவில் கட்டமைத்துள்ள திட்டவட்டமான முடிவுகளுக்குள் வேண்டுமானால் இந்நாவல் உருவாக்கும் கருத்துகளைத் திணித்துவைக்கலாம். ஆனால் மிகச்சரியான வாசிப்பு, நவீனத்துவத்தின் தத்துவ விசாரணைகளை இந்நாவல்வழி வாசகனுக்குள் ஏற்படுத்திச்செல்லும்.

பிராமணியத்தை உதறி, மனைவியிடமிருந்து பிரிந்து, பாலியல் தொழிலாளியான சந்திரியுடன் குடும்பம் நடத்தி, குடித்து, முஸ்லிம்களோடு மாமிசம் உண்டு, தன்னை நாஸ்திகன் என அறிவித்துக்கொண்டதோடு பஞ்சமர்களைக் கோயிலுக்குள் விடவேண்டும் என பிராமண தர்மத்தைத் திட்டித்தீர்க்கும் நாரணப்பா இறந்து போகிறார்.

நாரணப்பாவை அடக்கம் செய்வது யார் என்பது நாவலின் தொடக்கத்திலேயே  பிரச்சனையாக உருவெடுக்கிறது.  பிராமணியத்தை உதறியவர் என்றாலும் அவர் பிராமணனாக இறந்தவர். எவ்வளவு துன்பம் கொடுத்திருந்தாலும் பிராமணர்கள் அவருக்குச் சாதிவிலக்கு செய்யவில்லை. அப்படிச் செய்தால் அவர் இஸ்லாம் மதத்தைத் தழுவி அக்ரஹாரத்திலேயே வாழ்வேன் என மிரட்டியிருந்தது முக்கியக் காரணம். வைதீக முறைப்படியே அவரை அடக்கம் செய்யமுடியும்.  அதை யார் செய்வது என்ற குழப்பம் பிராமணர்களிடையே உருவெடுக்கிறது. இறுதிக் கடன்களை செய்யக் கடமையுள்ள உறவினர்களான கருடாச்சாரியார் மற்றும் லட்சுமணாச்சாரியார் ஆகியோருக்கு நாரணப்பாவோடு குடும்பத் தகராறு உண்டு. அக்ரஹாரத்தில் யார் இறுதிச் சடங்கு செய்தாலும் அவர்களது ஜாதிச் சலுகைகளுக்குப் பங்கம் விளையும். ஒருவர் மட்டும் பின்வாங்காமல் தன் கல்வியால் அதற்கு வழி தேட முடியும் என்று நம்புகின்றார். அவர் பிராணேசாச்சாரியார்.

பிராணேசாச்சாரியார் தன் மரபில் தனக்கு வழங்கப்பட்ட அனைத்து ஒழுக்கநெறிகளையும் கடைப்பிடிக்கும் பிராமணர். பாகீரதி என்ற அவரது மனைவி நோயால் அவதியுறுபவள். தன் துணைவிக்கு சேவகம் செய்து வாழ்கிறார் பிராணேசாச்சாரியார். சாஸ்திர ஞானம் நிரம்பிய அவர், நாரணப்பாவை அடக்கம் செய்ய இருக்கும் தடையைத் தாண்ட எல்லாத் தாழைமடல் ஓலைச்சுவடி கிரந்தங்களையும் தொடக்கம் முதல் இறுதிவரை சோதித்து முழுமையாக ஏற்றுக்கொள்ளும் பதில் இல்லாமல் தவிக்கிறார். அவர் அகங்காரமும் தவிக்கிறது.

பிராணேசாச்சாரியாருக்கும் நாரணப்பாவுக்கும் ஏற்கனவே சில பிணக்குகள் இருக்கின்றன. பிராணேசாச்சாரியாரிடம் வேதம் பயின்ற சியாமா , ஶ்ரீபதி என்ற இரு மாணவர்களைத் தூண்டி நாரணப்பா பட்டாளத்தில் சேர்த்துவிட்டபோது அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியிருந்தது. அப்போது நாரணப்பா சொல்கிறார் ‘கடைசியில வெல்லப்போறது நானா? நீங்களா? பார்க்கலாம் ஆசார்யரே! எவ்வளவு நாளைக்கு இந்த பிராம்மணியம் நெலைக்கப் போவுதுன்னு…’ பிராணேசாச்சாரியாருக்கு இப்போது அவரின் அந்தச் சவால் நினைவுக்கு வருகிறது. தர்மசாஸ்திரத்தில் அப்போதைய சிக்கலுக்குத் தீர்வில்லாததால் தோல்வியை ஏற்க மனமில்லாமல் மீண்டும் ஆராய்கிறார். சனாதன தர்மத்தில் பதில் இல்லையென்றால் நாரணப்பாவே வென்றதாகும் என கலங்குகிறார். தன் புண்ணிய பலத்தினால் தவ சக்தியினால் அவரை வழிக்குக் கொண்டுவரமுடியும் என்றும் வாரத்தில் இருநாள் கடைப்பிடிக்கும் உண்ணா நோன்பின் மகிமையால் அவரை நல்வழிப்படுத்த முடியும் என நினைத்திருந்த அவரது அத்தனைகால பிடிவாதமெல்லாம் இப்போது நினைவுக்கு வந்து உறுத்துகிறது.

முடிவெடுக்க முடியாத நிலையில் அக்ரஹாரம் தத்தளிக்க பிளேக் நோய் பிடித்து இப்போது நாரணப்பா பிணம் அழுகிக் கொண்டிருக்கின்றது. பிண வாடை அக்ரஹாரம் முழுதும் பரவுகிறது. துர்வாடை அக்ரஹாரத்து மக்களின் மூளையில் பிணத்தை மட்டுமே நிறுத்துகிறது. பிளேக் நோய் ஊரையே சூறையாட அக்ரஹாரத்தில் யாராலும் நாரணப்பா விஷயத்தில் முடிவெடுக்கமுடியவில்லை. பிணத்துக்கு இருக்கும்வரை அதை தகனம் செய்ய வழிகாணும்வரை யாரும் சாப்பிடக்கூடாது என்பது பிராமண விதி. பிராணேசாச்சாரியார் சாப்பிட அமரும்போதுதான் சந்திரி நாரணப்பாவின் மரணச்செய்தியைக்கொண்டுவந்திருந்தாள். பிராணேசாச்சாரியார் மற்ற பிராமணர்கள் சோற்றில் கைவைக்கும் முன் மரணச்செய்தியைப் பரவவிட்டிருந்தார்.

பசியில், துற்வாடையில், குழப்பத்தில் மூழ்கியிருக்கும் அக்ரஹாரம் இந்த நாவலின் முதல் பகுதி முழுவதும் காட்சிப்படுத்தப்படுகிறது.

நாவலின் முதல் பகுதியை மட்டும் வாசிக்கும் ஒருவர், இந்த நாவல் சடங்குகள் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ள பிற்போக்குத்தனங்களைச் சாடுவதாக முடிவுக்கு வரலாம். ஒருவகையில் நாவலின் முதல் பகுதி அவ்வாறான ஒரு கதைதான். ஒரு பிணத்தை மையமாக வைத்து பின்னி உருவாகும் கதை. ஆனால், சமஸ்காரா நாவல் முக்கியத்துவம் பெறுவது அதன் இரண்டாம் பாகத்தில். அதுவரை பிரம்மச்சரியம், பிணம், பிளேக் என்று வெளிப்படையாகப் புறநிலையில் நகரும் நாவல் இரண்டாம் பாகத்தில் அகநிலை தத்துவ விசாரணைகளுடன் பயணிக்கிறது.

காரிருள் கவிந்த காட்டில் தற்செயலான ஒரு சூழலில் பிராணேசாச்சாரியார் சந்திரியுடன் உறவு கொள்கிறார். தன் கைகள் தொட்டுணராத வாளிப்பான முலைகளின் மீது கைகள் பட்டவுடன், அத்தனைகாலம் பட்டினி கிடந்த அவர் உடல் வலுவிழக்க, சந்திரி ரசவாழைப்பழங்களை உண்ணக்கொடுத்து பின் அவருடன் கூடுகிறாள். சந்திரி மாமனிதரால் தான் புண்ணியவதி ஆனதாக எண்ணுகிறாள். அவளைப்பொறுத்தவரை அவள் செய்தது அவள் அறிந்த குல தர்மம். குழப்பம் பிராணேசாச்சாரியாருக்கு மட்டுமே.  வீடு திரும்புகிறார். மனம் இடைவிடாது துன்புறுத்துகிறது. காய்ச்சலில் படுத்திருக்கும் மனைவியை மறந்து மீண்டும் சந்தரியைக் கூடிப்புணர்ந்த காடு நோக்கி செல்கிறார். வேர்களை, இலைகளை, கிளைகளை முகர்கிறார். மனைவிக்குக் கஞ்சிக்கொடுக்கவேண்டும் என்ற ஞாபகம் வரவே பதற்றத்துடன் வீடு திரும்பினால் மனைவி அருவருப்பான குரலில் நீண்ட ஆழந்த அலறல் எழுப்பி மரணிக்கிறாள். நாரணப்பாவைப் போலவே அவளுக்கும் காய்ச்சல் வந்து வயிற்றில் கட்டி வளர்ந்துள்ளது. சோர்வெல்லாம் கரைந்துபோகும்படி அழுதுதீர்க்கிறார். இதற்கிடையில் சந்திரி சிலர் உதவியுடன் நாரணப்பாவின் சடலத்தை எரியூட்டுகிறாள்.

இரண்டாம் பாகத்தில் சந்திரியுடன் கூடிய பிராணேசாச்சாரியார் மனவிசாரனைகள் ஆழமானவை. அவர் தன்னை இத்தனைநாள் வழிநடத்திய தர்மம் ஒரு பழக்கப்படுத்திய புலியைப்போன்ற காமமாகவே இருக்கவேண்டும்; அது முலைமீது கைப்பட்டதும் கோரப்பபல்லைக்காட்டிவிட்டது என நினைக்கிறார். இத்தனைக்காலம் கட்டுப்பாட்டில் வைத்திருந்த மனதை திறந்துவிடுகிறார். அது இதுவரை அவர் தீண்டத்தகாததாக நினைத்தப் பெண்களைக் கற்பனையில் கொண்டுவந்து நிர்வாணமாக்கிப்பார்க்கிறது. தன் கற்பனையைக் கண்டு தானே அஞ்சுகிறார். காயத்திரி மந்திரம் சொல்லி சொல்லியே தான் அனுபவங்கள் அற்று இத்தனை காலம் வாழ்ந்தது வாழ்வே இல்லை என நொந்துக்கொள்கிறார். அனுபவம் என்றாலே எதிர்ப்பாராதபோது நிகழ்வதுதான் என அவருக்கு மெல்ல புரியத் தொடங்குகிறது. கால்போன போக்கில் நடந்துபோவதென்று முடிவெடுத்து, உடுத்திய துணியோடு கிழக்கு நோக்கி நடப்பதுடன் இரண்டாம் பாகம் முடிகிறது. முற்றிலும் வேறொரு மனிதனாக பிராணேசாச்சாரியார் மூன்றாம் பாகத்தில் வருகிறார்.

மூன்றாம் பாகத்தில் ஆழமான குற்றவுணர்வு அவரை வாட்டிக்கொண்டிருக்கிறது. முதலில் அன்று அவளுடன் கூடிப்புணர தான் மட்டும் பொறுப்பாளியில்லை என நினைக்கிறார். அந்த நொடிப்பொழுதுகளுக்கு முன்பும் வெறுமை பின்பும் வெறுமை. இல்லாத ஒன்று ஆகிநடந்து மீண்டும் இல்லாமல் போன நேரத்துக்கு தான் மட்டும் பொறுப்பேற்பது தகாது என எண்ணுகிறார். மாறிவிட்ட ஒருவனுக்கு தான் பொறுப்பாகிவிட்டதாக நினைப்பது தவறு என தனக்குத் தானே சமாதானம் சொல்லிக்கொள்கிறார். ஆனால் மனம் அவரை விடவில்லை. கலவி கொண்ட அந்த நிமிடம் நினைவுகளாக உருமாறி,  மீண்டும் மீண்டும் மனதை அந்த நினைவுகள் கிளறி சந்திரியைத் தழுவிக்கொள்ள தூண்டுகிறது. தற்செயலாகத் தடம் புரண்டுவிட்டதாக எண்ணுவதால்தானே இந்தக்குழப்பம் எல்லாம். மீண்டும் சந்தரியைத் தேடிச்சென்று கூடினால் அச்செயலுக்குத் தானே பொறுப்பு. மனம் வேதனையிலிருந்து மீளும் என தனக்கான புதிய உண்மையை மனம் மீண்டும் வேறுமாதிரி சிந்திக்கிறது. முழுக்க திறந்துவிடப்பட்ட மனம் இதுவரை தான் செய்த; இனி செய்யப்போகிற மீறல்களுக்கான நியாயங்களை உருவாக்கத் தொடங்குகிறது.

புதிய ஊரில் அவர் சந்திக்கும் புட்டா, பிராணேசாச்சாரியார் குறித்து முழுமையாக அறியாமல் வேதாளம் போல ஒட்டிக்கொள்கிறான். பிராணேசாச்சாரியாரை ஒரு தோட்டத்துக்கு அழைத்துச்செல்கிறான் புட்டா. அங்கே தனிமையில் இருக்கும் பத்மாவதி என்ற  பெண்ணை அறிமுகம் செய்கிறான். அவருக்கு அப்போது சந்தரியின் முலைகள் நினைவுக்கு வருகின்றன. அவளை ரசிக்கத் தொடங்குகிறார். பத்மாவதி அவரை இரவில் அங்கே தங்கி மறுநாள் ஊர் திரும்ப சொல்கிறாள். மாலையில் பிராணேசாச்சாரியார் புட்டாவோடு கோயிலில் உணவுண்ணச் செல்கிறார். பிராமணர்களோடு அமர்ந்து உண்பது அவருக்குச் சங்கடமாக இருக்கிறது. யாராவது அடையாளம் கண்டுவிடலாம் என அஞ்சுகிறார். தீட்டுடன் உண்பது மற்ற பிராமணர்களுக்கும் செய்யும் பாவம் என பயப்படுகிறார். இந்த பயத்தில் இருந்தெல்லாம் விடுபட தான் ஊருக்குச் சென்று மொத்த உண்மைகளையும் ஒத்துக்கொள்வதுதான் வழி எனப் படுகிறது. அதுவே தனக்கு விடுதலை என நம்புகிறார்.

சந்திரியைக் கூடிப்புணர்ந்ததையும் மனைவியைக் கண்டு அருவருத்ததையும் ஹாட்டலில் காப்பி குடித்ததையும் கோழிச்சண்டை பார்த்ததையும் பத்மாவதியால் கவர்ந்திழுக்கப்பட்டதையும் கடைசியில் இழவு தீட்டுடன் கோயிலில் பிராமணர்களுடன் அமர்ந்து உண்டதையும் என ஒப்புக்கொள்ள வேண்டியவற்றை அவர் மனம் பட்டியல் போடுகிறது. இரவில் தனக்காகக் காத்திருக்கும் பத்மாவதியைச் சந்திக்காமல் அக்ரஹாரம் செல்லத் தயாராகிறார். புட்டாவும் அவரோட வர இருக்கிறான். அவர் மனமும் அவன் உடன் இருப்பதை விரும்புகிறது. ஆனால் அப்போது அங்கு வந்த  வில்வண்டியில் இடமில்லை. புட்டா நாளை வந்து பார்ப்பதாகக் கூறி அவரை அனுப்புகிறான். அவர் தனியே பயணிப்பதுடன் நாவல் முடிகிறது.

***

மூன்று கதாபாத்திரங்கள் இந்த நாவல் குறித்து விரிவாக அறிய உதவுகின்றன.

முதலாவது தாசாசார்யன். பிணம் உள்ள அக்கிரஹாரத்தின் சாப்பிடக்கூடாது என்ற விதியால் பட்டினி கிடந்து வாடுகிறார். ஒருசமயம் அவரால் பொறுக்க முடியவில்லை. பாரிஜாதபுரத்தில் உள்ள மஞ்சையாவின் வீட்டுக்குச் செல்கிறார். தாசாரார்யன் மாத்வ மதம் (திருமாலை மட்டும் வழிபடுவார்கள். ஆன்மாவும் பிரம்மமும் ஒன்றேயல்ல எனும் இருமைக்கொள்கையை பின்பற்றுபவர்கல்). மஞ்சையா ஸ்மார்த்தம் (ஆன்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்பவர்கள். சிவனையும் துர்கையையும் வழிபடுவார்கள். மாத்வர்களைவிட தாழ்த்தப்பட்டவர்களாக மாத்வ மதத்தவரால் கருதப்பட்டார்கள்). தனது பசியை  நாசுக்காக வெளிப்படுத்தி அவரின் வீட்டில் உப்புமாவை வாங்கி உண்கிறார். அவருக்குத் தத்துவங்கள் குறித்தோ பிராமண சட்டங்கள் குறித்தோ லட்சியங்கள் குறித்தோ எந்தக் கவலையும் இல்லை. பசி மட்டுமே அவரைக் கொல்கிறது. அதைப்போக்க அவர் மஞ்சையாவை மகிழ்ச்சிப்படுத்த எது வேண்டுமானாலும் பேசத்தயாராக இருக்கிறார்.

இரண்டாவது பிராணேசாச்சாரியார். அவரது அகங்காரம் மெல்ல மெல்ல நொறுங்கி இல்லாமலாகி எளிய மனிதனாக அவர் மாறுவதை நுட்பமாகச் சித்தரித்துள்ளார் யு.ஆர். அனந்தமூர்த்தி. நாரணப்பாவை தன் தவ வல்லமை மூலம் மாற்றிவிடலாம் என்று பிராணேசாச்சாரியார் நம்புகிறார். உண்மையில் அவர்  தன் தவ வலிமையை நிரூபிக்கச் சான்று தேடுகிறார். ஆனால் இறுதிவரை அவரால் நாரணப்பாவை மாற்ற முடியவில்லை.  இப்படி அவருக்கு தன்னை தன்னிடம் நிரூபிக்க நிறைய சான்றுகள் தேவைப்படுகின்றன. அவர் தன் மனைவி நோயாளியாக இருப்பதை அதிகம் விரும்புபவராகவே காட்டப்படுகிறார். மனைவிக்குப் பணிவிடை செய்வது அவருக்குப் பெருமிதம் தருவதாக இருப்பதை பல இடங்களில் காண முடிகிறது. அதேபோல நாரணப்பாவை சாதியிலிருந்து ஒதுக்கி வைக்காதது தனது இரக்கத்தினாலோ என்ற எண்ணம் தோன்றுகிறது. தன் இரக்க குணம் குறித்த பெருமிதமான எண்ணம் சந்திரியுடன் கூடியப்பின்பும் தோன்றுகிறது. அவர் தன் ஆளுமை குறித்த மாபெரும் கற்பனையில் வாழ்பவராகவே வருகிறார். சந்திரிகாவுடன் கூடியது உட்பட தனது எல்லா செயல்களுக்குப்பின்னும் கட்டுக்கடங்கா இரக்கம் நிரம்பியுள்ளது என நினைப்பதை அவரால் நிறுத்த முடியவில்லை. நாரணப்பாவின் பிணத்தை அகற்ற வழிகிடைக்காதபோது அவர் அகங்காரம் மேலும் மேலும் பாதிகப்படுகிறது.

யு.ஆர்.அனந்தமூர்த்தி பிராணேசாச்சாரியாரின் அகங்காரத்தை மெல்ல மெல்ல வெளிபடுத்துகிறார். அது அவ்வளவு எளிதில் கண்களுக்குத் தெரியாத அகங்காரம். கருணை, அன்பு ஆகியவற்றை இன்னொருவருக்குக் கொடுப்பதாகத் தங்களை நினைத்துக்கொள்பவர்களிடம் இயங்கிக்கொண்டிருப்பதும் அகங்காரம்தான். ஒன்றை ஒருவர் வழங்குகிறார் என்றால் தன்னிடம் அது மிதம் மிஞ்சி இருப்பதாகவும் பெருபவர் இரக்கத்திற்குறியவர் என நினைப்பதாகவுமே அர்த்தம்.  அதை வழங்க இடமில்லாதபோது அவர்கள் தவித்துப்போகிறார்கள். தங்களைவிட பலவீனமானவன் அருகில் இருப்பதே அவர்கள் அகங்காரத்திற்கான ஊக்கமருந்து.

மூன்றாவது நாரணப்பா. பிராணேசாச்சாரியார் ஒரு துருவம் என்றால் நாரணப்பா மற்றுமொரு துருவம். நாவலில் அவரது மரணத்தைச் சித்தரிக்கும் இடம் முக்கியமானது. சந்திரியின் எண்ணத்தில் இருந்து அவனது இறுதிக்காலத்தைச் சொல்லும்போது பிராணேசாச்சாரியாரிடம்  துடுக்குத்தனமாகப் பேசிவிட்டாலும் பின்னர் நடுங்கிவிட்டான் என்கிறாள். மேலும் அவளுக்குப் புரியாத ஒரு மர்மம் உள்ளது. ஒருநாள்கூட கடவுளை வணங்காத நாரணப்பா காய்ச்சல் ஏறியதும் நினைவு தப்பும்வரை பகவானே, நாராயணா, ராமா ராமா என கத்திக்கொண்டிருந்திருக்கிறான். அவன் உள்ளே யாராக இருந்தான் என்ற கேள்வி சந்திரியைப் போல வாசகனுக்கும் எழவே செய்யும்.

உண்மையில் நாரணப்பா, பிராணேசாச்சாரியார் என்ற இவ்விரு கதாப்பாத்திரங்களும் தங்களுக்கு நேர்மாறான குணங்களை வலுக்கட்டாயமாகவே கடைப்பிடிப்பவையாய் உள்ளன. நாரணப்பா முதன்முதலில் சந்திரியை தனக்கானவளாக மாற்றிக்கொண்ட சம்வத்தை விவரிக்கும்போது அதில் இருந்த வன்மம் பிராணேசாச்சாரியார் நிகழ்த்தும்போது அத்தன மென்மையாக காதலாகவே நகர்கிறது. பிராமணியத்துக்கு எதிராக நாரணப்பா சத்தமிட்டு செய்த அனைத்தையும் பிராணேச்சாச்சாரியார் ‘நாசுக்காகச்’ செய்து முடிக்கிறார். நாரணப்பா போடும் சத்தமும் விதாண்டாவாதமும் அவருக்குள் எழும் அச்சத்திடம் குற்ற உணர்ச்சியிடம் நடத்தும் போராட்டத்தின் சத்தமாகவே உள்ளது. அவர் வெளியில் உள்ளவர்களிடம் மோதிக்கொண்டிருக்கவில்லை. தனக்குத் தானே மோதிக்கொள்கிறார் என்றே இந்நாவலை வாசிக்கும்போது தோன்றியது. ஆனால் பிராணேசாச்சாரியார் நிலை அதுவல்ல. அவர் மனம் அவ்வளவு எளிதாக உண்மைக்குத் தயாராகிவிட்டது. அவர் தனக்கான சுதந்திரம் எது என அறிந்துகொண்டார். அவரால் யாரிடமும் தான் யாரென்று பட்டியலிட முடியும். அவர் வணங்கிய கழுகுகளே எலிகளைத் தூக்கிப்போட்டு நோயைப் பரப்பிய நிதர்சனத்திற்கு முன் அவர் வேறெதற்கும் இனி அஞ்ச வேண்டியதில்லை.

பசியின்போது தாசாசார்யனும் வலியின்போது நாரணப்பாவும் காமத்தின்போது பிராணேசாச்சாரியாரும் வாழ்வின் அவரவர் தேர்ந்தெடுத்த இடத்திலிருந்து வன்மமாகப் பிடுங்கி  தத்தம் மையம் நோக்கி வீசப்படுகின்றனர். அது ஒட்டுமொத்த மானிடத்துக்கான மையம். எத்தனை பரிணாமம் எடுத்தாலும் வாழ்வின் அடிப்படை இச்சையில் இருந்தும் இயற்கையின் இயல்பில் இருந்தும் அவ்வளவு எளிதாக  தப்பி ஓடமுடியாது மையம். நீந்திக்கொண்டே இருக்கலாம், கடலின் நடுவில் நீர் சுழலும்போது இழுத்த இழுப்புக்கு வந்து இருட்டுக்கு குளிக்குள் சரிவதன்றி வேறென்ன இறுதி உண்மை.

சம்ஸ்காரா – யு.ஆர்.அனந்தமூர்த்தி

அடையாளம் பதிப்பகம்

 

(Visited 473 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *