மலேசியாவில் கிரிக்கெட் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றல்ல. ஆனால், சச்சின், தோனி போன்ற பெயர்கள் பலரும் அறிந்ததுதான். இன்று தொலைக்காட்சியில் M.S.Dhoni திரைப்படம் பார்த்தேன்.
வெற்றியடைந்தவர்களின் வாழ்வை வாசிப்பதிலும் திரைப்படமாகப் பார்ப்பதிலும் எனக்கு நிறையவே விருப்பம் உண்டு. அதில் வெளியில் தெரியாத அவ்வளவு தோல்விகளும் அவ்வளவு ரணங்களும் இருப்பதுதான் முக்கியக்காரணம். அவர்களின் தோல்விகளுக்கும், அவமானங்களுக்கும் நமது நிகழ்கால ரணங்களை சாதாரணமாக்கிவிடும் வல்லமை உண்டு.
ஃபாக்ஸ் ஸ்டார் தயாரிப்பில், நீரஜ் பாண்டே இயக்கத்தில், பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்து வெளியாகி இருக்கிறது. தமிழில் டப் செய்து ஒளிபரப்பானது.
தோனியின் அப்பா பம்ப் ஆபரேட்டர். சிறிய அப்பார்ட்மெண்டில் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் எளிய வாழ்க்கை. வறுமையால் குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என எல்லா நடுத்தரவர்க்க தந்தைகளைப்போலவும் கண்டிப்பாக இருக்கிறார். தோனிக்கு விளையாட்டின் மீது ஆர்வம் அதிகம். தொடக்கத்தில் பள்ளியில் கால்பந்தாட்டத்தின் கோல் கீப்பராகத்தான் இருக்கிறார். அப்பள்ளி கிரிக்கெட் பயிற்சியாளர் தோனியின் கீப்பர் திறனைப்பார்த்து கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பிங் செய்ய சொல்கிறார். முதலில் தோனிக்கு கிரிக்கெட் மீதே ஆர்வம் இல்லை. அதிலும் விக்கெட் கீப்பிங்கில் துளியும் விருப்பம் இல்லை. அவர் பேட்டிங் செய்ய விரும்புகிறார். மெல்ல மெல்ல அதில் அவர் திறன் வெளிப்படுகிறது. உடன் வறுமையும் அவரை துரத்துகிறது. ஓர் அரசாங்க வேலை மட்டுமே தன் மகனின் வருங்காலம் என தந்தை தொடர்ந்து நம்புகிறார்.
ஒரு கட்டத்தில் ரயில்வே அணிக்கு ஆட தோனிக்கு வாய்ப்பு வர ரயில்வேயில் வேலையும் உடன் கிடைக்கிறது. அப்பாவுக்காக வேலைக்குச் செல்கிறார். தான் யார் என்ற கேள்வி அவரைத் துரத்துகிறது. எல்லா கலைஞர்களையும் சாதனையாளர்களையும் துரத்தும் அதே கேள்வி. ரயில் நிலையத்தில் தன்னந்தனியனாக குழம்பிக்கொண்டிருக்கும் தோனியிடம் ரயில்வே அதிகாரி ஒருவர் அவரிடம் பேசும் இடம் முக்கியமானது.
அவர் வாழ்க்கையை கிரிக்கெட் போல தோனியை உள்வாங்க சொல்கிறார். “பவுன்சர் வந்துக்கொண்டே தான் இருக்கும், நாம் தான் குனிந்து செல்ல வேண்டும். எல்லா பந்துகளும் அடிப்பதற்கல்ல” என்கிறார். தோனி வேலையை ராஜினாமா செய்து விடுகிறார். படிப்படியாக இந்திய அணியில் இடம்பிடித்து, அதற்கு கேப்டனாகி , உலக கோப்பையை பெற்றுத்தருவதுவரை ஊக்கமூட்டும் திரைப்படம்.ஒருதுறையில் சாதிக்கும் ஒருவரின் அனைத்துப்பண்புகளும் தோனியிடம் இருக்கின்றன. தனக்கான வழியை உறுதியாகத் தீர்மாணித்தல். அதற்காக தன்னை அற்பணித்தல். அதன் உச்சம் அடைய தன்னை எவ்வளவும் வருத்திக்கொள்ளல். இழப்புகளிலுருந்து விரைவாக மீண்டு வருதல் எனத் திரைப்படம் சித்தரித்துச் செல்கிறது.
கல்லூரி தேர்வின் போது மூன்று மணி நேர பதில் தர வேண்டிய நேரத்தை 2.30 நிமிடத்தில் சுருக்கிவிட்டு அவசரமாக ரயிலேறி கிரிக்கெட் தேர்வுக்காகப் பயணிக்கும் போதும், அடக்க முடியாத தூக்கக் கலக்கத்தில் ஓயாமல் வேலை விளையாட்டு என அலையும் போதும், காதலியாக மாறும் தனது ரசிகை விபத்தில் மரணமடைந்தது தெரியாமல் விளையாட்டு முடிந்து நாடு திரும்பியப்பின் அனுபவிக்கும் வெறுமையும், திறமையான ஆட்டக்காரராக அறியப்பட்டபோதும் ஹெலிகாப்டர் ஷாட் கற்க நண்பனிடம் கேட்கும் தொடர் ஆர்வமும் இளைஞர்களை ஊக்கப்படுத்தக்கூடியவை. இந்த ஒவ்வொரு காட்சியிலும் சாதிக்க நினைக்க இளைஞர்களுக்கு சொல்ல எவ்வளவோ உள்ளது. பாடங்களின் தேர்வு அவசியம்தான். ஆனால் தோனி தனக்கான தேர்வாக கிரிக்கெட்டை முடிவு செய்தப்பின் அதில் முப்பது நிமிடங்களை இழக்கத் தயாராக இருக்கிறார். பதறும் அப்பாவிடம் சோதனையில் தேர்ச்சி பெற்றால் போதுமானது. அதற்கு 2.30 நிமிடம் போதும் என்கிறார். சோம்பலை முழுமையாகவே தவிர்த்துவிடுகிறார்.
தனிப்பட்ட முறையில் இப்படம் எனக்கு முக்கியமாக இருக்க தோனி தனது உணர்ச்சிகளை உடனடியாகக் காட்டாமல் இருப்பது காரணமாக இருக்கலாம். எவ்வளவு பெரிய வாய்ப்பு வரும்போதும் எவ்வளவு பெரிய இழப்பு வரும்போதும் ஒருசில நிமிடங்கள் அவரால் நிதானிக்க முடிகிறது. நம்மிடம் இல்லாத பண்பை இன்னொருவரிடம் காணும்போது ஈர்க்கப்படுவது இயல்புதான் என நினைத்துக்கொண்டேன். அவர் வாழ்க்கையில் தன்னை நோக்கி வரும் எல்லா பந்துகளையும் அடிக்கவில்லைதான். சில சமயம் ஒதுங்குகிறார். சில சமயம் அசையாமல் இருக்கிறார். சில சமயம் தடுக்கிறார். சரியான சமயம் மட்டுமே அடிக்கிறார். ஆனால் வலுவான உறுதியான அடி.
கிரிக்கெட் விளையாட்டு புரியாதபோதும் முழு படமும் ரசிக்கும்படி இருக்க ஓர் ஆளுமை எவ்வாறு சமூகத்தின் மூலமும் தனது அன்புக்குறியவர்களின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக வலுவாகி முழுமையடைகிறது என்ற கதைச்சொல்லல்தான். மற்றபடி கிரிக்கெட் எப்போதும் போல இனியும் கிரிக்கெட்டெல்லாம் பார்க்கப்போவதில்லைதான்.