பெ.ராஜேந்திரன் : சொல்ல மறந்த கதை…

13015308_1157397710972286_8632267970700475905_nDear Navin, Why are you always condemning Rajendran in your articles? He has done a lot of good thinks. He had helped many people. He has risen from the bottom to this level. He may have flaws but one should not always been criticized. We should always look at the both sides. Look in a broader view. He had helped you in many ways, personally too. You never talked about that. Hope you have not forgotten all the help he rendered to you. If you’re not thankful to people who have helped you then there is no point in being a writer. Don’t be an opportunist.
– Anbalagan.M


நண்பர் அன்பழகனுக்கு. தாங்கள் ஏதோ ஒருவகையில் என்னை நெருக்கமாக அறிந்தவராக இருக்கவேண்டும் என உள்ளுணர்வு சொல்கிறது. தங்கள் மின்னஞ்சலில் உள்ள பெயருக்கும் கடித பயன்பாட்டில் உள்ள பெயருக்கும் இடையில் உள்ள வித்தியாசமும், தமிழ் வாசிப்பு உள்ள உங்களின்  ஆங்கில உரையாடலும்  அவ்வெண்ணத்துக்கு வலு சேர்க்கின்றன. உண்மையில் உங்கள் கடிதம் ஏதோ வைரஸ் என்றே சில நாட்கள் திறக்காமல் இருந்தேன். எனக்கு ஆங்கிலத்தில் கடிதங்கள் வருவதில்லை. எனவே அந்தத் தடுமாற்றம்; தாமதம். சரி இதனாலெல்லாம் சிக்கல் இல்லை. உங்கள் கடிதத்தைக் கடந்து செல்லவும் விருப்பம் இல்லை.

உண்மையில் உங்களைப் போன்று பலரும் என்னிடம் கேட்டுள்ளனர். என்னை சந்தர்ப்பவாதியாகச் சித்தரிப்பவர்களும் உள்ளனர். இந்த எளிய கடிதம் எனக்கு ராஜேந்திரன் குறித்த பல நிகழ்வுகளை ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்தது. ‘திறந்தே கிடக்கும் டைரி’ தொடர் எழுதியபோது ராஜேந்திரன் குறித்த பகுதி வந்ததும் என்னை அறியாமலேயே தொடரை நிறுத்தியிருந்தேன். காரணம் தெளிவாகத் தெரியவில்லை. அப்போதுள்ள மனநிலையாக இருக்கலாம். முழு உண்மையைச் சொல்ல மனதுக்கு அவகாசம் கொடுத்துக்கொண்டேன். ஒருவேளை அப்போது எழுதியிருந்தால் பாதி உண்மைகளோ; தேர்ந்தெடுத்த உண்மைகளோ மட்டும் வெளிபட்டிருக்கும்.

இப்போது உங்கள் கடிதம் மூலம் மீட்கப்படும் நினைவுகள் அவர் குறித்த எண்ணங்களை உசுப்பிவிட்டன. இதை எழுதுவது ஒருவகையில் என்னைப்பற்றி எழுதுவதும் ஆகும். நான் சொல்லாமல் விட்ட என்னைப்பற்றிய விடயங்களும் இதில் வெளிபடலாம். உண்மையில்  நான் அதற்காகத்தான் எழுதுகிறேனோ என்றும் தோன்றுகிறது. எனக்குள் இருக்கும் உள் மடிப்புகளை விரித்து பொதுவில் வைக்கிறேன். அது மிக சவாலானது. ஒரு படைப்பாளியாக இந்தச் சவாலை வாழ்க்கை முழுக்கவும் ஏற்க வேண்டியுள்ளது. உங்கள் கடிதத்துக்குப் பதில் எழுதும் இந்தக் கணம் ராஜேந்திரன் குறித்து முழுமையாகச் சொல்லவே முயன்றுள்ளேன். ஆனால் எப்போதும்போல அவர் சொல்ல விரும்பாத அவரது தனிப்பட்ட வாழ்வைப் பற்றி நான் பேசப் போவதில்லை. பல தருணங்கள் நான் அவரது செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்துள்ளேனே தவிர தனிப்பட்ட பலவீனங்கள் குறித்து ஒரு வார்த்தை பேசியதில்லை. அது இலக்கியத்துக்கான அறம் அல்ல. ஒரே ஒரு சமயம் அவர் வைரமுத்துவைப் போல வெள்ளை நிற உடையுடன் பொதுவெளியில் உலாவுவதைக் கிண்டலாக எழுதப்போக சண்முகசிவா கண்டித்தார். விமர்சனம் என்பது கருத்துகள் அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர கிண்டல் தொனி கூடாது என்றார். அதை கடைப்பிடித்தே வருகிறேன்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு விமர்சனமோ பாராட்டோ அந்நபர் இருக்கும்போது நடப்பதே சரியென தோன்றுகிறது. மறுதரப்பின் குரலை மௌனமாக்கிவிட்டு பேசுவது அபத்தம்.

பெ.ராஜேந்திரன்

நான் ராஜேந்திரனை முதன் முதலாகப் பார்த்தது 2001 -இல். அப்போது அப்பா கோலாலம்பூரில் வேலை செய்துகொண்டிருந்தார். நான் எஸ்.பி.எம் தேர்வை முடித்த விடுமுறையில் கோலாலம்பூர் வந்திருந்தேன். அப்போது எனக்கு வயது 19. அம்மா மற்றும் அக்காவுடன் சுற்றிப்பார்க்கும் திட்டத்தில் கோலாலம்பூர் வந்திருந்தாலும் என் ஆர்வமெல்லாம் பத்திரிகை அலுவலகங்களுக்குச் சென்று பார்ப்பதில்தான் இருந்தது. அதன் மூலம் ஏதாவது ஒரு பத்திரிகையில் வேலைக்குச் சேர்வது. எழுதுவதன் மூலமாகவே வாழ்வை ஓட்டுவது எனத் திட்டம்.

பத்திரிகைகளுக்கு பயணம் செய்த வயதில் அக்கினியுடன்

19 வயதில் கவிஞர் அக்கினியுடன்

ஓவியர் ராஜாவுக்கு அனைத்து பத்திரிகை ஆசிரியர்களுடனும் பழக்கம் இருந்ததால் அவர் துணையுடன் அப்போதுஇருந்த பெரும்பாலான பத்திரிகைகளுக்குச் சென்றேன். சூரியன், இதயம், மன்னன், மக்கள் ஓசை (அப்போது வாரப் பத்திரிகை), என ஒரு சுற்று வந்து கடைசியாக மலேசிய நண்பன் செல்வதாகத் திட்டம். ஆதி.குமணனைச் சந்திப்பதில் அப்போது பெரிய ஆர்வம் இருந்தது. நான் என்னை ஓர் எழுத்தாளன் என அறிமுகம் செய்துகொள்ள விரும்பினேன். எது குறித்தும் கேள்வியோ விமர்சனமோ இல்லாத வயது. கெடாவில் லுனாஸ் என்ற சின்னஞ்சிறிய ஊரில் வாழ்ந்த எனக்கு பத்திரிகைச் சூழலும் அப்போது அத்துறையில் மிகப்பெரிய ஆளுமையாகத் திகழ்ந்த ஆதி.குமணனும் ஆச்சரியத்தின் உச்சங்கள்.

ஓவியர் ராஜா அப்பாவின் தாய்மாமன். என்னிடம் நெருக்கம் காட்டுவார். பத்திரிகை உலகில் நன்கு அறிமுகமானவர். எனவே ஆதி.குமணனைச் சந்திப்பது அவ்வளவு எளிதல்ல என்று தெரிந்தும் எனக்காக அந்த முயற்சியை எடுத்தார். அப்போது ஆதி.குமணம் சாமிவேலுவுக்கு மாற்று சக்தியாகவே கருதப்பட்டார். வேறெந்த பத்திரிகையாசிரியருக்கும் கிடைக்காத வெளிச்சம் அவருக்கு இருந்தது. மலேசிய நண்பனில் அவரது கேள்வி – பதில்களுக்குப் பரந்த வாசகப் பரப்பு இருந்தது. அத்தனை அழுத்தமான பாதிப்புக் கொடுத்த பத்திரிகையாளர் மலேசியாவில் அவருக்குப் பின் தோன்றவில்லை என்றே சொல்லலாம். ஓவியர் ராஜாவைப் பார்த்தவுடன் மலேசிய நண்பன் ஊழியர் ஒருவர் காத்திருப்பு அறையில் அமர வைத்தார். நேரம் நகர்ந்துகொண்டிருந்தபோது திடீரென ஒருவர் உள்ளே வந்தார். சுருள் முடி. தடித்த மீசை. ‘என்ன வேணும்?’ என்ற அதட்டலான தொணி.

ஓவியர் ராஜா ஆதி.குமணனைப் பார்க்க வேண்டும் என்றார். “அவர இப்ப பாக்க முடியாது. என்ன விசயம்?” மீண்டும் அதே அதட்டல். “குஜராத் நிலநடுக்கத்துக்கு நிதி உதவி தர வேணும் என கெடாவிலிருந்து வந்திருக்கார்” என என்னைக் கைகாட்டினார் ஓவியர் ராஜா. உண்மையில் நாங்கள் அவ்வாறான திட்டத்தில் வரவில்லை. நான் பேந்த பேந்த விழித்தேன். “எங்கிட்டயே நன்கொடைய கொடுங்க. அவர இப்ப பாக்க முடியாது. இங்க இல்ல” என்றார். நான் அப்பாவிடம் கையேந்தினேன். ஐம்பது ரிங்கிட்டெல்லாம் நான் நினைத்துப் பார்க்க முடியாத தொகை. பணத்தைப் பெற்றுக்கொண்டு ஒரு புத்தகத்தில் கையெழுத்து வாங்கினார். ஓவியர் ராஜா அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளச் சொன்னார். விருப்பம் இல்லாமல் எடுத்துக்கொண்டேன். வெளியே வந்தபோது எரிச்சலாக இருந்தது.

“என்ன ஆள் இவர். இப்படிக் கடுகடுவென பேசுகிறார்” என்றேன். ஓவியர் ராஜா நிதானமாகப் பேசக்கூடியவர். “அவர் இங்க முக்கியமானவர். ராஜேந்திரன். தலைமை நிருபர். ஆதி.குமணனுக்கு நெருக்கமானவர்” என்றார். “யாராக இருந்தால் என்ன?” என்று பயணம் முழுவதும் புலம்பியபடி திரும்பினேன்.

***

அதே ஆண்டில் மலாக்கா ஷாஸ் பீச் ரிசோர்ட்டில் நடந்த புதுக்கவிதை கருத்தரங்கில்கலந்துகொண்டபோது ராஜேந்திரனை இரண்டாவது முறையாகச் சந்தித்தேன். அப்போதைய எழுத்தாளர் சங்கத் தலைவர் ஆதி.குமணன். ராஜேந்திரன் செயலாளர். என்னை கோ.புண்ணியவான் அவர் மகள் காரில் அழைத்துச் சென்றார். Kenari என்ற கார் கொஞ்சம் வித்தியாசமான அமைப்பைக் கொண்டது. கெடாவிலிருந்து மலாக்கா பயணம் உற்சாகமாகவே சென்றது. உடன் க.உதயகுமார் மற்றும் கனகராஜன் வந்திருந்தனர். நிகழ்ச்சிக்கு ஆதி.குமணன் வரவில்லை. ராஜேந்திரனே முன் நின்று

முதல் கருத்தரங்கில்

              முதல் கருத்தரங்கில்

அனைத்தையும் செய்துகொண்டிருந்தார். வித்யாசாகர் நிகழ்ச்சி நடத்துனராகப் பணியாற்றினார். அப்போது அவரும் எழுத்தாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தார். நாளிதழ்களில், சஞ்சிகைகளில் எழுதும் பலரையும் அங்கே பார்க்க முடிந்தது. எனது கவிதைகள் பலவும் அப்போதைய வார, மாத இதழ்களில் பிரசுரமானதால் எளிதாக அடையாளம் கண்டுகொண்டனர். எனக்கு அப்போது 19 வயதுதான் இருக்கும் என்பதால் எதிர்படும் அனைவருமே ஊக்குவித்தனர். கவிதைகளைப் பாராட்டினர்.  அங்கு நடந்த திடீர்    கவிதைப் போட்டி, குழு முறையில் கவிதை எழுதுவது என பலவற்றிலும் ஆர்வமாகப் பங்கெடுத்தேன். அதன் உச்சமாக மூன்று மாதங்கள் எல்லா பத்திரிகைகளிலும் எழுதப்பட்ட கவிதைகள் ஆய்வு செய்யப்பட்டு என் கவிதைக்கு இரண்டாவது பரிசு கிடைத்திருந்தது.

முந்தைய பாதிப்பில் நிகழ்ச்சி முடியும் வரை நான் ராஜேந்திரனிடம் விலகியே இருந்தேன். அவரது இறுக்கமான முகமும் பரபரப்பும் அருகில் செல்லும் ஆர்வத்தை வழங்கவில்லை. ஓரிருமுறை எதிர்ப்படும்போது தொடர்ந்து எழுதும்படி ஊக்கம் கொடுத்தபோதும் அவரை விட்டும் அவ்விடத்தை விட்டும் அகன்று ஓடவே நினைத்தேன்.

***

2002-இன் மத்தியில் நாங்கள் கோலாலம்பூருக்கு வீடு மாற்றலாகி வந்த சில நாள்களில் ராஜேந்திரனின் வீடு நான் வசிக்கும் அதே குடியிருப்பில் இருந்தது தெரிய வந்தது. நடக்கும் தூரம்தான். ஓர் இரவில் நடந்தபடியே அவர் வீடு தேடிச் சென்றேன். கொஞ்சம் தயக்கம் இருந்தது. ஏதும் திட்டினால் ஓடிவிடலாம் என முடிவு.  அப்போது அவர் வீட்டில் ஏதோ விருந்து நடந்துகொண்டிருந்தது. தமிழகத்திலிருந்து யாரோ வந்திருந்தனர். என்னைப் பார்த்ததும் அடையாளம் கண்டுகொண்டார். நான் வீடு மாற்றலாகி வந்ததைக் கூறினேன். “சரியான நேரத்தில்தான் வந்திருக்க” என அழைத்து என்னையும் விருந்தினர் ஆக்கினார். கூச்சமாகவும் பதற்றமாகவும் இருந்தது. அவரது குரல் கண்டிப்பானது. அது அன்பின் விளைவாக இருந்தாலும் அப்படித்தான் வெளிபடும். அமர்ந்தேன். கொஞ்சம் சாப்பிட்டேன். பின்னர் விடை பெற்றேன். அது ஒரு நல்ல தொடக்கம். இப்போது நினைத்துப் பார்த்தாலும் அது ஓர் அற்புதமான தருணம்.

***

சில நாட்களிலேயே நான் ராஜேந்திரனுடன் நெருக்கமாகி இருந்தேன். அப்போது நான் எந்த வேலையும் செய்யவில்லை. மேற்கல்வியும் இல்லை. எனவே அவரது பெரும்பாலான பயணங்களில் உடன் இருப்பேன். அவரின் நம்பிக்கைக்குரியவனாக இருந்ததாகவும் சொல்லலாம். அந்தக் காலகட்டத்தில் அவர் எழுத்தாளர் சங்கத்தில் செயலாளராக இருந்தார். ஒரு திட்டத்தை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என நான் கற்றுக்கொண்டது அவரிடம்தான்.

எழுத்தாளர் சங்கத்தின் ஒரு நிகழ்ச்சியில் தொடக்கம் முதல் முடிவு வரை அவர் காட்டும் ஈடுபாட்டில் எந்தச் சமரசமும் இருக்காது. முழுமையாகவே தன்னை அதில் பிணைத்திருப்பார். ஆதி.குமணம் வேலை நேரத்தில் சங்கப் பணிகளைச் செய்யும் சுதந்திரத்தை ராஜேந்திரனுக்கு வழங்கியிருந்தார். ராஜேந்திரன் அந்த நம்பிக்கைக்கு முழு விசுவாசமாக இருந்தார் என்றே இப்போது நினைத்துப் பார்த்தாலும் தோன்றுகிறது. நான் உடன் இருந்த வரை அவர் தனிப்பட்ட வேலைகள் எதுவும் செய்து பார்த்ததில்லை. சின்னச் சின்ன வேலைகளில் கூட கவனமாக இருப்பார். ஒருமுறை பயணத்தில் கூறினார், “ஏற்பாட்டுக்கான பயணங்களில் எனக்கு ஏற்படும் செலவுகளுக்கான பணத்தை நான் சங்கத்திடம் கேட்பதில்லை. எனக்கு இதில் செய்யும் பணி மகிழ்ச்சிகரமானது…” எனக்கு அந்த வரி எப்போதும் மனதில் இருக்கும். பல சமயங்களை அதை உள்ளூர அனுபவித்துள்ளேன். ஒருவன் தன்னை ஒன்றுக்காக முழுக்க ஒப்படைத்துக்கொண்டபோது அதில் லாப நட்டங்களைக் கணக்கிடுவதில்லை. அவனால் அதற்கான ரசீதுகளைச் சேகரிக்க நேரம் இருக்காது. அதற்கான ஞாபகமும் இருக்காது.

ராஜேந்திரனுடன்

                   ராஜேந்திரனுடன்

உண்மையில் அப்போது நான் கொஞ்சம் வெகுளியான பையனாகவே இருந்தேன். ஒரு சமயம் ராஜேந்திரன் எழுத்தாளர் சங்க அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றிருந்தார். அங்கே சின்ன நூலகம் ஒன்று இருந்தது. என்னை அவ்வறையில் விட்டுவிட்டு ஏதாவது நூல்களை வாசிக்கக் கூறியவர் பத்திரிகை அலுவலகம் சென்றார். பத்திரிகை அலுவலகமும் எழுத்தாளர் சங்க பணிமனையும் அருகருகே இருந்தது. நான் ஒரு நூலை எடுத்து அவரது இருக்கையில் அமர்ந்தேன். அது சாய்வான சொகுசு நாற்காலி. வாசித்துக்கொண்டிருக்கும்போது உள்ளே நுழைந்தார். ராஜேந்திரனுக்கு சிலவற்றை கதையாகவே சொல்ல முடியும். நான் எழுந்து அவர் அமர இருக்கையைக் கொடுத்தபோது என்னை அதிலேயே அமரச் சொன்னார். “தம்பி, முன்ன நான் ஒருவரின் நாற்காலியில் இப்படி அமர்ந்தப்ப…” என ஆரம்பித்து ஒரு பொறுப்பில் உள்ளவரின் இருக்கையில் அமர்ந்தபோது அவர் பட்ட அவமானத்தைக் கூறினார். “நான் உன்னை எழுந்திருக்கச் சொல்லல. நீ உக்காரலாம். ஆனா வேறு எங்கயும் யார் இருக்கையிலும் இப்படி உக்காராத. உனக்கும் அவமானம் ஏற்படலாம்” என்றார். எனக்கு அதில் அமர்ந்திருப்பதா எழுவதா எனத்தெரியவில்லை. ஆனால் அதற்குப்பின் அந்த நாற்காலியில் அமரவே இல்லை. யார் பணியிடத்திலும் எவர் நாற்காலியிலும் அமர்ந்ததும் இல்லை.

தாள்களைச் சரியாகத் துளையிட்டு கோப்பில் நேர்த்தியாகச் செருகி வைப்பது முதல் நேரத்தை சரியாக வகுத்து பல வேலைகளைச் செய்வது வரை பல விஷயங்கள் நான் ராஜேந்திரனைப் பார்த்துக் கற்றுக்கொண்டவைதான். உண்மையில் அது கற்பதற்கான வயது. சங்கச் செயல்பாட்டின் நிகழ்வுகள் எதிலும் அவரது தலையீடு நேரடியாகவே இருக்கும். வேலையை ஏவிவிட்டு ஓய்வெடுக்கும் நபராக அவரை நான் எப்போதுமே பார்த்ததில்லை. அவரது அந்த உண்மையான உழைப்புதான் ஆதி.குமணனின் நம்பிக்கைக்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

ராஜேந்திரனிடம் ஓர் அசாத்திய தைரியம் இருக்கும். அவரிடம் அது இருப்பது அவருக்கே தெரியும். அவர் தன்னிடம் இருக்கும் மிக முக்கிய குணமாகவே அதை நினைத்தார். அவரின் பல வெற்றிகளுக்கு அதுவுமே காரணமாக இருந்துள்ளது. ஒருசமயம் நள்ளிரவு வரை வேலையாக அலைந்துவிட்டு வீடு திரும்பும்போது கால் வலி எடுத்திருந்தது. புக்கிட் பிந்தாங்கில் உள்ள கால்பிடி நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது. அப்போது அவர் கையில் 20,000 ரிங்கிட் இருந்தது. மறுநாள் எங்கோ ஒப்படைக்க வேண்டும். கால் பிடி நடக்கும்போதே சில சீனர்கள் உள்ளே நுழைந்தனர். நிச்சயம் ஏதோ குண்டர் கும்பலில் உள்ளவர்கள் போன்று அடையாளங்கள். ராஜேந்திரன் சொன்னார், “என்னா தைரியத்துல நாம இவ்வளவோ காச எடுத்துக்கிட்டு இங்க வந்திருப்போம்? இவனுங்க அடிச்சி காச புடுங்குனா?” என்றார். பின்பு அவரே, “சரி விடு நடந்தா பார்த்துக்கலாம்” எனக் கண்களை மூடிக்கொண்டார். சிலம்பக் கலையில் நன்கு தேறியிருந்த அவருக்கு எந்தச் சூழலையும் சமாளிக்க முடியும் என்ற தைரியம் உண்டு. அது அவரது எல்லா செயல்களிலும் திட்டுத்திட்டாக வெளிப்படும். நானும் ஓரளவு சிலம்பம் பழகியிருந்தேன். அக்கலை கொடுக்கும் தன்னம்ப்பிக்கை அபாரமானது என அறிவேன். ஒருமுறை என்னிடம் கேட்டார். “நீ கோலாலம்பூருலதான் வீடு வாங்கனும். வீடு வாங்க என்ன வேணும் தெரியுமா?” நான் அப்பாவியாக “பணம்” என்றேன். அவர் சொன்னார், “பணமெல்லாம் தேவையில்லை. முதல்ல தேவை தைரியம்… தைரியம் தேவைப்பா” எனக் கூர்மையாகப் பார்த்தார். அவர் தைரியத்தை ஆண்மையின் அடையாளம் என நம்புபவர். ‘ஆண்மை’ என்ற வார்த்தை அவர் அடிக்கடி பயன்படுத்தும் சொல்.

கல்லுரிக்குச் சென்ற தொடக்கத்தில் ராஜேந்திரனிடம் தொடர்பு நீடித்தது. புதுக்கவிதை கருத்தரங்கு கல்லூரி நண்பர்களை அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறேன். விடுமுறைகளில் வீட்டுக்கு வரும் போதெல்லாம் உரிமையுடன் அவர் வீட்டுக்குச் சென்று பேசிவிட்டு வருவதும் வழக்கம். நான் அவர் குடும்பத்தில் ஒருவன் என்றே எனக்கு நம்பிக்கை கொடுக்கும் படி இருக்கும் அவரது அரவணைப்பு. குடும்பத்துடன் செல்லும் நிகழ்ச்சிகளுக்கு என்னையும் சேர்த்துக்கொள்வார். அவர் அண்ணனை மருத்துவமனையில் சென்று பார்ப்பது முதல் சில விருந்து வரை அவ்வுறவு நெருக்கமாகவே இருந்தது.  ஒருமுறை ஒரு தீபாவளி விருந்து. டத்தோ ஒருவர் வீட்டில் விருந்துக்குக் குடும்பத்துடன் சென்றார். என்னையும் அழைத்துக்கொண்டார். வீடு பிரமாண்டமாக இருந்தது. நான் அதுவரை பார்த்ததில் பெரிய வீடு. அங்கு நான் மிகவும் அந்நியமாக உணர்ந்தேன். சுதந்திரமாகச் சாப்பிட முடியவில்லை. ஒருவித பதற்றம் தொற்றியிருந்தது. அங்கு உணவுக்குப் பின் ‘வைன்’ வழங்கப்பட்டது. மேற்கத்திய கலாச்சாரம் போல. நான் வேண்டாம் என மறுத்தேன். ஒன்றும் சொல்லாமல் திரும்ப எடுத்துச் சென்றனர். பின்னர் வீடு திரும்பும்போது ராஜேந்திரனின் தம்பி கடுமையாக என்னைத் திட்டினார். கொடுக்கப்பட்டதை அப்படிச் சொல்லக்கூடாது வாங்கி வைத்துக்கொண்டு பருகாமல் இருப்பதே மரியாதை என்றார். எனக்கும் குற்ற உணர்ச்சியானது. ஏதோ பெரிய தவறு செய்துவிட்டதுபோல உணர்ந்தேன். என் முகம் சோர்ந்திருப்பதைப் பார்த்த ராஜேந்திரன் வழக்கம்போல கதையிலிருந்து தொடங்கினார்.

“நான் ரிப்போட்டராக இருந்தபோது சில ஆடம்பர உணவகங்களுக்குச் செல்ல வேண்டி இருக்கும். அப்போது நான் விவரம் தெரியாதவன். பொது இடங்களில் கழிவறை செல்வதென்றால் ஆண்/பெண் படங்களைப் பார்த்தே செல்வேன். என்னிடம் ஆரம்பக் கல்வி வலுவாக இல்லை. அந்த ஆடம்பர உணவகத்தில் படங்கள் இல்லாமல் எழுத்துகள் இருந்தன. படிக்கத் தெரியாமல் விழித்தபடி இருந்தேன். நெடுநேரம் காத்திருந்து எங்களில் ஒருவர் கழிவறை போனபோது அவர் பின்னாலேயே சென்றேன். உன் மனநிலை அந்த வீட்டில் என்னவாக இருந்திருக்கும் எனப் புரிகிறது. நான் பட்டதைவிட இதெல்லாம் அவமானம் இல்லை. அதனால் பேசாமல் வாப்பா” என தோள்களில் கைகளைப் போட்டார். நான் நெகிழ்ந்திருந்தேன். நான் பார்த்த கரடுமுரடான ராஜேந்திரன் இல்லை அவர் என புரிந்த நிமிடம் அது. நான் மிக நெருக்கமாக அவரை உணர்ந்தேன்.

அவரது பல செயல்கள் என்னை அவர் நண்பராகவே உணர வைத்துள்ளது. ஒரு பயணத்தில் அவர் பணப்பையை வீட்டில் விட்டு வந்திருந்தார். சுத்தமாகப் பணம் இல்லை. என்னிடம் எவ்வளவு உள்ளது எனக்கேட்டார். 15.00 ரிங்கிட் இருந்தது. “இன்னிக்கு நாம இந்தப்பணத்துக்குள்ளதான் சாப்பிடப்போறோம்” என்றவர் மதியம் ஒரு ஒட்டுக்கடைக்குக் கூட்டிச்சென்றார். நல்ல சாப்பாடு. அவரிடம் நெருங்கிப்பழகும்போது வயது, பதவி என்ற அடிப்படையில் போலியான இடைவெளியைக் காட்டியதில்லை. எதார்த்தமானவர் எனச்சொல்லலாம்.

முதல் மேடைப்பேச்சு

முதல் மேடைப்பேச்சு

பொதுவில் நான் பேசத் தயங்க சொற்கள் திக்குவது காரணமாக இருந்தது. மௌனமாக இருந்து விடுவேன். ராஜேந்திரனுக்கும் சரளமாகப் பேசுவதில் சிக்கல் உண்டு. அவர் அதுகுறித்தெல்லாம் சங்கடம் இல்லாமல் மேடையில் பேசுவதைப் பார்ப்பேன். நான் மேடைகளில் பேச தன்னம்பிக்கைப் பெற்றது அப்படித்தான். என் வாழ்வில் ஓர் ஆணை அவ்வளவு நெருக்கமாக உணர்ந்தது அதுவே முதன்முறை. என் பலவீனத்தை அழிப்பதில் இருந்து உருவான நெருக்கம் அது.  ஆனால் அந்த நெருக்கம் நெடுநாட்கள் நீடிக்கவில்லை.

2003-இல் தேசிய அளவில் நடந்த எம்.ஏ. இளஞ்செல்வன் இரண்டாம் ஆண்டு புதுக்கவிதை போட்டியில் ராஜேந்திரனின் தம்பி பெ.சா.சூரியமூர்த்திக்கு விருது கிடைத்திருந்தது. அது குறித்து ஏதோ சலசலப்பு எழுந்திருப்பது எனக்குத் தெரியாது. ராஜேந்திரனிடம் நற்பெயர் வாங்கவும் அதன் மூலம் ஒருசில வாய்ப்புகளைப் பத்திரிகைத்துறையில் பெறவும் சில அல்லக்கைகள் இப்போது போலவே அப்போதும் சுற்றிக்கொண்டிருந்தன. அதில் ஒன்று நான் அவர் தம்பிக்குப் பரிசு கிடைத்ததை விமர்சித்ததாகக் கூறியிருந்தது. இப்படி ஒரு சம்பவம் நடந்தது எனக்குத் தெரியாது. அவர் அதுகுறித்து ஒன்றும் கேட்கவும் இல்லை. ஆனால் இது வேறு ஒரு சமயம் வெடித்தது.

அதே நிகழ்ச்சியில் நடந்த கவிதை போட்டி ஒன்றுக்கு எனக்கு முதல் பரிசு கிடைத்திருந்தது. ஆனால் ‘நயனம்’ வார இதழில் பெ.சா.சூரியமூர்த்தியின் படம் ஒரே பக்கத்தில் இரு இடங்களில் வந்திருந்தது. என் படம் வரவில்லை. நான் ராஜேந்திரனை அழைத்தேன், “ஏன் என் படத்தைக் கொடுக்கவில்லை” எனக்கேட்டேன். இப்போது நினைத்துப் பார்த்தால் அல்பமாக இருக்கிறது. அது அந்த வயதுக்கே உள்ள குணம். அடையாளம் தேடும் குணம். அது அல்பத்தனங்களை கணக்கில் வைக்காது. அவரும் விசாரித்து அழைப்பதாகக் கூறி “டிசைனின் தவறு நடந்துவிட்டது” என்றார். ஆனால் நான் விடாமல், “உங்க தம்பி படத்தை மட்டும் மறக்கல” என்றேன். அவருக்கு வந்ததே கோபம். எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. ஆனால் நான் அவர் தம்பிக்குப் பரிசு கிடைத்ததால் விமர்சித்தேன் என்ற தகவல் கிடைத்ததும் அதிர்ச்சியானேன். ஒரு உண்மையை எவ்வளவு வேண்டுமானாலும் துணிந்து எதிர்க்கொள்ள முடியும். மிக உறுதியாக நம்பப்படும் பொய்யை என்ன செய்வது? என்னால் நான் அப்படி எதுவும் சொல்லவில்லை என நிரூபிக்க சக்தி இல்லாமல் அழுதேன். அது கோபத்தாலும் அதற்கு எதிர்வினையாற்ற முடியாத இயலாமையிலும் உருவாகும் கடும் மனச்சோர்வு. உண்மையில் எனக்கு அப்போதெல்லாம் எது குறித்துமே விமர்சனம் இருந்ததில்லை. ராஜேந்திரன் சொன்ன பிறகே அப்படியெல்லாம்கூட யோசிக்கலாம் எனத் தெரிந்தது. “புறம் பேசியதால், எல்லா சுதந்திரத்துடன் என் வீட்டுக்கு வரும் உரிமையை நீ இழந்துவிட்டாய்” என்றார். நான் அதன் பிறகு அவர் வீட்டிற்குப் போகவில்லை. ஆனால் நான் அப்படி எதுவும் சொல்லவில்லை என நிரூபிக்க சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஒருவர் தன் வாழ்வில் நமக்களிக்கும் நெருக்கத்தை குற்றவாளியாகி இழப்பது கொடுமையானது. அதைவிட கொடுமை என்னை ஒரு கோழையின் தன்மையுடன் ராஜேந்திரன் நிராகரித்தது. நான் அப்படி மறைவில் விமர்சனம் செய்பவன் இல்லை. மனம் கனன்றுகொண்டிருந்தது. காலம் எங்களுக்குள்ளான இடைவெளியை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொண்டிருந்தது. நான் கல்லூரி படிப்பில் தீவிரம் காட்டத் தொடங்கினேன். கவிதைகளிலிருந்து என் கவனம் சிறுகதைக்குத் தாவியிருந்தது. என் வாசிப்புக்குள் தீவிரமாக ஓஷோ நுழைந்திருந்தார். வாசிப்புத்தளம் மெல்ல மெல்ல மாறத் தொடங்கியிருந்தது. ஆனால் தொடர்ந்து ராஜேந்திரனுடன் பேச்சு இருந்தது. 2004இல் தஞ்சோங் மாலிமில் நடந்த புதுக்கவிதை கருத்தரங்கில் நண்பர்களுடன் கலந்துகொண்டேன்.

ராஜேந்திரன் என்னை, என் எழுத்தை தொடர்ந்து ஊக்குவித்தார். சிறுகதை பத்திரிகையில் வரும்போது “கவிதையை விட உன் கதைகள் நன்றாக உள்ளது” என்பார்.  பயணங்களில் ஏதாவது கவிதை தோன்றி சொன்னால் அதை வேறொருவரிடம் ஒப்புவித்து நான் எழுதியதாக அடையாளம் காட்டுவார், ஆஸ்ட்ரோ நாவல் போட்டியில் எனக்கு இரண்டாவது பரிசு கிடைத்தபோது, “உன் திறமையால் கிடைச்சது. ஏதோ நான் உனக்கு உதவுனதா நினைச்சி உன் திறமையை குறைச்சி மதிப்பிடாதே” என்றார். அவருக்கு என் எழுத்தில் அக்கறை இருந்ததை நான் அறிவேன்.

ராஜேந்திரனிடம் ஒரு வித்தியாசமான குணம் உண்டு. நாம் பேசும்போது அதுகுறித்து எந்த கவனமும் இல்லாததுபோலவே இருப்பார். ஆனால் தகுந்த வேலைகளைச் செய்து விடுவார். கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் அவரிடம் வேலைக்கு எங்கே அமர்த்தப் போகிறார்களோ என்ற கவலையைச் சொல்லியிருந்தேன். அதை பெரிதாகக் காதில் வாங்காததுபோல இருந்தவர் போஸ்டிங் போட இரு வாரம் இருக்கும்போதே அழைத்தார். “உனக்கு பத்துமலை பள்ளிதான் கிடைக்கும். கவலைப்படாதே” என்றார்.  எனக்கு ஏற்ற பள்ளி கிடைக்க அவர் ஏதும் முயற்சி எடுத்தாரா என நான் கேட்கவில்லை. ஆனால் அவருக்கு என் தேவை நினைவில் இருந்தது ஆச்சரியம். இந்தப் பண்பு சாமிவேலுவிடம் இருப்பதாக அவரிடம் நெருங்கிப் பழகியவர்கள் கூறியுள்ளனர். அந்தப் பண்பே அவரிடம் நிறைய விசுவாசிகளை உடன் வைத்திருந்தது. தன் மேல் ஒரு தலைவர் அக்கறை காட்டுகிறார்; கவனம் வைக்கிறார் என்ற எண்ணம் பலர் மனதில் விசுவாசமாக மாறுகிறது. நானும் ராஜேந்திரனிடம் உண்மையானவனாகவே இருந்தேன். ஆனால் வாசிப்பு என்னை வேறொரு தளத்தில் பயணிக்க வைத்தது.

2005-இல் நான் என்னை தீவிரமான வாசிப்பாளனாக மாற்றிகொண்டிருந்தேன். ஐந்து மணி நேரத்தில் 300 பக்க நாவல்களை வாசித்து முடித்து விடுவேன். அதற்கேற்ற நண்பர்கள் வட்டம் அமைந்தது. மையமாக சண்முகசிவா இருந்தார். அவர் வழங்கிய புத்தகங்களும் தன் கருத்துக்கு முரணான மாற்றுக் கருத்துகளைப் பேச கொடுத்த சுதந்திரமும் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாகச் செதுக்கிக் கொண்டிருந்தது. அவர் என் கேள்விக்கு எந்த பதிலையும் சொல்லிக்கொடுக்கவில்லை. ஆசிரியர்கள்தான் பதில்களைப் போதிக்கிறார்கள். குரு நம் பதில்கள் மீது கேள்வி எழுப்புகிறார். சண்முகசிவா இலக்கியம் குறித்த என் திட்டவட்டமான எல்லா பதில்கள் மீதும் கேள்விகளை வைத்தார். என்னிடம் தொடர் பதில்கள் இல்லை. அதை தேட வேண்டி இருந்தது. இலக்கிய அறம், இலக்கியச் சுரண்டல், கலையின் தேவை, மார்க்ஸிய பார்வை, தீவிர இலக்கியம் என ஒவ்வொன்றாக எனக்கு அறிமுகமானது. என்னைச் சுற்றி நடப்பவற்றை நான் வேறொரு பார்வையில் கணிக்கத் தொடங்கினேன். சண்முகசிவா எனக்கு நல்ல இலக்கியங்களை வாசிக்கவும் அதுகுறித்து சிந்திக்கவும் சொல்லிக்கொடுத்தாரே தவிர எந்தத் தரப்பின்மீதும் விமர்சனங்களை நீட்டச்சொல்லவில்லை. அது அவரது இயல்பல்ல. ஆனால் பின்னாள்களில் என்னால் விமர்சிக்கப்பட்டவர்கள் நான் சண்முகசிவாவின் ஏவுதலில் இயங்குவதாகக் குற்றம் சாட்டியது முரண்நகை. வாசிப்பும் சிந்தனையும் தொடந்தபோது கடும் மன உளைச்சல் ஏற்படத்தொடங்கியிருந்தது. அதற்கு முன் இருந்த நம்பிக்கைகள் உடைவதால் ஏற்படும் வலி அது.  எழுத்து, இலக்கியம், கலை என்பவை குறித்து நான் எவ்வளவு மேலோட்டமாக அறிந்து வைத்திருந்தேன் என நினைக்கும்போது அவமானமாக உணர்ந்தேன்.

அவ்வாறான சமயங்களில் பா.அ.சிவத்திடம் பல மணி நேரங்கள் தொலைபேசியில் உரையாடல் ஓடும். மொத்த மன உளைச்சலையும் அவரிடம்தான் கொட்டுவேன். நாட்டில் நடக்கும் புத்தக வெளியீடுகள், வெகுசனங்களைக் கவர நடத்தப்படும் சடங்கான இலக்கிய முயற்சிகள், அரசியல்வாதிகளுக்கு இலக்கிய மேடைகளில் அங்கீகாரங்கள் எனத் தொடங்கி எழுத்தாளர் சங்க செயல்பாடுகள்மேல் அந்த விமர்சனப் பார்வை குவிந்தது. அப்போது நான் வாழ்ந்த வீட்டில் கைத்தொலைபேசி அலை கிடைப்பது சிரமம். என் அறையில் மெத்தை மேல் நின்றால் சிக்கல் இல்லாமல் சிக்னல் கிடைக்கும். பல மணி நேரங்கள் மெத்தைமேல் நின்று பேசிப் பேசி உணர்ச்சி பொங்க மெத்தையில் குதித்துக்கொண்டிருப்பேன். அதிக கோவத்தில் மெத்தையில் குதிப்பது பொறுத்தமான செயல்.

20170207_114248தொடர்ச்சியாக விமர்சனங்கள் எழுந்து வந்த நேரம்தான் ராஜேந்திரனை எழுத்தாளர் சங்கத்தில் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்க புதிய குழு ஒன்று புறப்பட்டது. புதிய தலைவராக சை.பீர்முகம்மது துணைத்தலைவராக வித்யாசாகர் போட்டியிட்டனர். அவர்களுக்கு ராஜேந்திரனின் தலைமைத்துவத்தில் கடும் அதிருப்தி இருந்தது. வித்யாசாகர் அப்போது நடத்திய ‘தென்றல்’ இதழ் மூலமாக விருட்சம் மாலை எனும் இலக்கிய உரையாடல் நடந்து வந்தது. நான் அதில் கலந்துகொள்வதில் ராஜேந்திரனுக்கு அவ்வளவு விருப்பம் இல்லை. நான் சங்க செயல்பாடுகளில் மட்டுமே இருக்க வேண்டும் என விரும்பினார். ஆனால் விருட்சம் மாலையில் நவீன கவிதைகள் குறித்து ஓரளவு உரையாட முடிந்ததால் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தேன்.

எத்தனைக் கசப்புகள் இருந்தாலும் ராஜேந்திரன் ஓரிரவு அழைத்தார். “நீயெல்லாம் எழுத்தாளர் சங்கத்தின் செயற்குழுவில் இருந்தால் கவிதைகளை முன்னெடுப்பதில் நிறைய பணிகள் செய்யலாம்” என்றார். “நான் தயக்கம் காட்டினேன்.” நன்கு யோசித்துக்கூறும்படி ராஜேந்திரன் ஃபோனை வைத்தார். அந்த இரவு இன்றும் மறக்க முடியாதது.

அப்போது எனக்கு வயது 22 இருக்கும். அடையாளத்துக்கும் அங்கீகாரங்களுக்கும் ஆசைப்படும் வயது. தீவிரமான எவ்வித பெரிய இலக்கிய முயற்சிகளையும் எடுத்துவிடவில்லை. சங்கத்தில் நுழைவது தனித்த அடையாளம் கொடுக்கலாம். அப்படியே தொடர்ந்தால் சங்கத்தில் உயரிய பதவிகளையும் அடையலாம். எளிதில் நூல்களைப் பதிப்பிக்கலாம். எளிதில் ஆளுமைகளின் அறிமுகங்கள் கிடைக்கும். இயல்பான மனித பலவீனம். ஆனால் நான் யார் என்ற கேள்வி தொடர்ந்து உலுக்கி எடுத்தது. கோவை ஞானி, சுந்தர ராமசாமி, நுஃமான், ஜெயகாந்தன்,  என வாசித்த ஆளுமைகள் இலக்கியம் குறித்தும் எழுத்துக்குறித்தும் இலக்கியவாதி குறித்தும் சொல்லிச்சென்ற சொற்கள் மனதில் அறைந்தது. எழுத்தின் மூலம் மட்டுமே என்னை நான் இலக்கிய உலகில் நிரூபிக்க வேண்டும் என்ற எண்ணம், என்னை ஆசையின் தூண்டுதலில் முடிவெடுக்க முடியாமல் தடுத்தது. எனது அடையாளம் என்பது என் எழுத்து என முடிவெடுத்த இரவு அது. விடியும் வரை காத்திருந்து மறுநாள் காலையிலேயே ராஜேந்திரனை அழைத்தேன். ‘இணையவில்லை’ என்றேன். “மற்ற இடத்துல நவீன கவிதையெல்லாம் பேசுறாங்கன்னு போற. அதை சங்கத்துக்குள்ள வந்து செய்ய சொன்னா வரமாட்டிங்க” என ஃபோனை வைத்தார். எனக்கு நிம்மதியாக இருந்தது. ஒன்றாவது நான் முடிவைத் தெளிவாகச் சொல்லியிருந்தேன். இரண்டாவது யாரின் ஆலோசனையும் இல்லாமல் நான் அந்த முடிவை எடுத்திருந்தேன். என்னை எனக்கு நான் யார் எனச் சொல்லிக்கொண்டிருந்தேன்.

தேர்தலின் போது நான் கூட்டத்துக்குச் சென்றேன். சிவம் ஜிப்பா அணிந்து வந்திருந்தார். கருநீல வண்ண ஜிப்பா. தான் சங்கத்தில் இணையப்போவதாகவும் வெளியில் இருந்து பேசிக்கொண்டிருந்தால் எந்த மாற்றமும் நிகழாது என்றும் சொன்னார். நான் என் எண்ணங்களைக் கூறினேன். சிவம் மௌனமானார். அவர் மறுப்பிருந்தால் பேச மாட்டார். அது கொஞ்சம் பதற்றமான சூழல்தான். போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எவ்வித தயக்கமும் இல்லாமல் நான் ராஜேந்திரனுக்கு ஓட்டுப்போட்டேன். துணைத்தலைவரையும் ராஜேந்திரன் அணியில் இருந்தவருக்கு கை உயர்த்தினேன். ராஜேந்திரன் அணியே வென்றது. சிவமும் உதவித் தலைவர் ஆனார். அனைவரும் அவரைக் கட்டிப்பிடிப்பதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

மறுநாள் ராஜேந்திரனுக்கு அழைத்து வாழ்த்துச்சொன்னேன். “நீ என் அணிக்குக் கைத்தூக்கியதை நான் பார்த்தேன்; அந்த அணிக்குக் கைத் தூக்காததையும் பார்த்தேன்” என்றார். குரலில் அன்பு இருந்தது. “இரண்டும் ஒன்றுதான் சார்” எனக்கூறி சிரித்தேன். இறுக்கமான, நெகிழ்ச்சியான, பதற்றமான தருணங்களை அப்படியொரு குபீர் சிரிப்பின் மூலம் என்னால் கடக்க முடியும். நான் ராஜேந்திரன் அணிக்குக் கைத்தூக்கியதில் எவ்விதமான நன்றிக்கடனும் இல்லை. அவர் நல்ல செயல்பாட்டாளர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை புதுக்கவிதை கருத்தரங்கை நடத்தி அதை நூலாக்குவது என்பதெல்லாம் சாதாரண வேலை இல்லை. இன்று அந்நூல்கள் நல்ல பதிவு. அவர் தன்னை சங்கத்தில் இணைத்திருந்தார். என் விமர்சனம் எல்லாம் அந்தச் செயல்பாடுகளில் இருந்த ஆழமற்ற  ஜனரஞ்சகத் தன்மையின் மேல்தான். அந்த விமர்சனம் ஓயாமல் வளர்ந்து கொண்டே சென்றது.

2005-இல் ‘காதல்’ எனும் சிற்றிதழ் தொடங்கி நின்று போனபின், ‘வல்லினம்’ என்ற சிற்றிதழை 2007-இல் தொடங்கினேன். ‘விருட்சம் மாலை’ இலக்கியக் குழுவின் மேல் ஆழமான கசப்பு வந்திருந்தது. சங்கத்துடன் நான் இணைந்திருக்க வேண்டுமென விரும்பிய ராஜேந்திரன் ‘காதல்’ இதழ் மூலம் ஜெயமோகனுடன் கலந்துரையாடல் நடந்தபோது அதில் கலந்துகொண்டார். வல்லினம் தொடங்கப்பட்ட ஒரு இரவில் “நீ செய்யுற வல்லினம் நல்ல முயற்சி. ஒருவேளை அதை நடத்த முடியலனா எழுத்தாளர் சங்கம் மூலமா நடத்துவோம். நான் அச்சுக்குப் பணம் தரேன். உனக்கும் ஒரு தொகை தர ஏற்பாடு செய்யுறேன். நீ என்ன செய்யுறியோ அதைச் செய். அட்டையில மட்டும் சங்கத்தின் சின்னம் இருக்கட்டும்” என்றார். நான் அதே சிரிப்புடன் விடை பெற்றேன். அடுத்த சில இதழ்களிலேயே வல்லினம் இதழில் ராஜேந்திரனின் மனைவி ராஜம் அவர்களின் ‘மலேசியப் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ நூல் குறித்த விமர்சனக் வல்லினத்தில் வரத்தொடங்கியது. சிவம் அதை எழுதியிருந்தார். மறு இதழில் நான் எழுதியிருந்தேன். சங்கத்தில் நுழைந்தால் மாற்றங்கள் நிகழ்த்த முடியும் என நம்பிய சிவம் எதுவும் மாறாது என்ற கசப்பில் சங்கத்தில் இருந்து விலகியிருந்தார்.  ராஜேந்திரனை அக்கட்டுரைகள் அதிகக் கோவம் அடைய வைத்தன. ஆனால் அதை எழுதியதற்காக நான் வருந்த ஒரே காரணம் ராஜம் அவர்களின் மனதை நோகடித்ததுதான். நான் பார்த்த மிக நல்ல உள்ளங்களில் ஒருவர் அவர். ஆனால் இலக்கிய விமர்சனம் எனும்போது அதெல்லாம் கணக்கில் இல்லை. உள்ளடக்கம் பற்றிய விமர்சனம் பின்னர் அந்நூலுக்கு எழுத்தாளர் சங்கம் வழங்கும் மாணிக்கவாசக விருது கிடைத்தவுடன் மேலும் தீவிரமானது. பொதுவாக சங்கத்தின் உறுப்பினர்களின் நெருக்கமானவர்கள் போட்டியில் கலந்துகொள்ளக்கூடாது என்ற விதிமுறையை அது மீறியிருந்தது. கணவர் தலைவராக இருக்கும்போது மனைவிக்கு விருது. நான் வெளிப்படையாக எழுத்தாளர் சங்கத்தை விமர்சனம் செய்யத்தொடங்கியது அந்தக் கணத்தில்தான்.

நன்றி உணர்ச்சி, அன்பு, மரியாதை என எல்லாவற்றையும் ஒரு மூலையில் கிடத்தியே அந்த விமர்சனங்களை முன்வைத்தேன். அது உண்மையில் வலி மிக்கது. ஆனால் அதைச் செய்ய வேண்டி இருந்தது. அடையாளம் தேட செய்யப்பட்ட விமர்சனம், வல்லினம் இதழ் விற்க செய்யப்பட்டது என பலவாறாக அப்போது சொல்லப்பட்டது. நான் நன்றி இல்லாதவன், ராஜேந்திரனால் பலனடைந்து அவரின் உதவி தேவை இல்லாதபோது போது நான்  அவரை விமர்சிப்பதாக கிண்டல்கள் பறந்தன. நான் தெளிவாக இருந்தேன். எழுத்தாளர் சங்கத்தில் ராஜேந்திரனின் காலம் உச்சத்தில் இருக்கும்போது நான் அவரை விட்டு நீங்கினேனே தவிர அவரது பலவீனமான காலகட்டத்தில் இல்லை. கூடி நின்று அவரைச் சங்கத்தில் இருந்த வீழ்த்த வியூகங்கள் வகுக்கப்பட்ட காலத்தில் கூட நான் அவர் தரப்பில் நின்றேன். அவர் வலுவாக தன் இருப்பைச் சங்கத்தில் நிறுவிய பின்பே என் விலகலை உறுதிப்படுத்தினேன். நான் விலகவும் விமர்சிக்கவும் தனிப்பட்ட ஒரு காரணமும் இல்லை. மலேசியத் தமிழ் இலக்கியத்தின் நன்மை கருதியே நான் எனது கருத்துகளை முன்வைத்து வருகிறேன். விமர்சனம் வைக்கத்தொடங்கிய நாளில் சங்கத்தின் எந்தப் போட்டிகளிலும் பங்கெடுக்கக்கூடாது என்றும் அவர்கள் வழங்கும் எந்த விருதையும் (ஒருவேளை கொடுத்தால்) வாங்கக்கூடாது என்றும் முடிவெடுத்தேன். இன்று வரையில் அதில் இம்மியளவும் பிசகவில்லை என்றே நம்புகிறேன். ஒருபக்கம் அவரை கடுமையாக விமர்சித்து விருது, பரிசு என வந்தால் மட்டும் இணைந்துகொள்ளும் ஒட்டுப்புல் கூட்டத்தில் ஒருவனாக நான் இருக்க விரும்பியதில்லை.

ராஜேந்திரனின் இரண்டாவது பரிணாமம்

படைப்பிலக்கியம் சார்ந்த விமர்சனங்கள் என்பது எழுத்துலகில் சகஜம்தான். ராஜேந்திரனை மையமிட்ட விமர்சனங்கள் முதலில் படைப்பிலக்கியத்தில் இருந்துதான் தொடங்கியது. ஆனால் அந்நூலுக்கு விருது கிடைத்தபோது செய்யப்பட்ட விமர்சனம் இலக்கியம் சார்ந்தது அல்ல. அது முற்றிலும் இலக்கிய அறம் சார்ந்தது. இரண்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. தங்களைத் தீவிர இலக்கியவாதியாகக் காட்டிக்கொண்டு எழுத்தாளர் சங்கத்திலும் நல்லப்பிள்ளைகளாக இருக்க முயன்றவர்கள் எனது விமர்சனத்தைத் ‘தீவிர இலக்கியம் – வெகுசன இலக்கியம்’ என்ற தரப்புக்குள் கட்டமைக்க முயன்றனர். ஆனால் நான் தொடர்ச்சியாக எழுத்தாளர் சங்கத்தை விமர்சனம் செய்ய இலக்கிய அறம் மட்டுமே காரணமாக இருந்தது.

  • எழுத்தாளர்களின் அனுமதி இல்லாமல் நூலாக்கப்பட்ட சிறுகதைத் தொகுப்புக்கு ராயல்டி கொடுப்பதில் பின்னடைவு ஏற்பட்டபோது அதை கேள்வி எழுப்பினோம். ராயல்டி குறித்த விழிப்புணர்வே இல்லாமல் தங்கள் உரிமைகளை விட்டுக்கொடுத்துக்கொண்டிருந்த மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கு அதை அறிமுகம் செய்துவைத்தது தவறு என நினைக்கிறீர்களா?
  • வைரமுத்து போன்றவர்களை மகிழ்ச்சிப்படுத்த எடுக்கும் முயற்சியில் சங்கத்தின் பணத்தைப் பயன்படுத்துவது எவ்வகையில் மலேசிய இலக்கியத்தை வளப்படுத்தும்? யாருக்கும் யாரையும் அழைத்து அவர்கள் இலக்கிய ஆளுமையைக் கொண்டாட உரிமை உண்டு என அறிகிறேன். நாங்களும் வல்லினம் மூலம் அவ்வாறு பல எழுத்தாளர்களை அழைத்தும் வந்துள்ளோம். வல்லினம் ஒரு நிறுவனம். ஓர் அமைப்பு அல்ல. எங்களிடம் அரசாங்கப்பணம் இல்லை. ஆனால் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களைப் பிரநிதிப்பதாகக் கூறிக்கொள்ளும் சங்கம் உறுப்பினர்கள் மற்றும் அரசாங்கத்தின் பணத்தைப் பயன்படுத்தி சங்கத்தின் தொடர்பு பலத்தை உபயோகித்து தமிழகத்தில் செல்லச் செழிப்பில் இருக்கும் ஒரு பாடலாசிரியருக்கு அவரது நாவலை விற்றுத்தருவதில் சுரணையுள்ள எழுத்தாளனுக்கு விமர்சனம் இருக்காதா?  அந்தப் பாடலாசிரியரை சங்கப்பணத்தில் மகிழ்ச்சிப்படுத்தி தனிப்பட்ட முறையில் யார் நன்மை அடையப்போகிறார்கள் எனக்கேட்பதில் என்ன தவறு இருக்கமுடியும்?
  • அர்த்தமற்ற தமிழகப் பயணங்களும் அதன்மூலம் எவ்வித வெளிபாடும்(OUTPUT) இல்லாத வெறுமை பற்றி யாருக்கும் கேள்வி இல்லாமல் இருந்தால் நானும் அப்படியே இருக்க வேண்டுமா? இதுவரை பயணம் சென்று வந்தவர்கள் மூலம் இந்நாட்டின் இலக்கிய வளர்ச்சிக்கு ஏதேனும் நன்மை கிடைத்துள்ளதா? எங்கே இதுவரை தமிழகப் பயணம் மேற்கொண்டவர்களின் பட்டியலையும் அதில் அவர்கள் இதுவரை இலக்கியத்தில் செய்துள்ள நகர்ச்சியையும் குறிப்பிட்டுச் சுட்டிக்காட்ட முடியுமா அன்பழகன்? அங்குள்ள மாணவர்கள் நம் இலக்கியத்தை அறிவதா? அதற்கு ஏன் பயணம்? நிபுணத்துவமான அணுகுமுறை போதுமே? இந்த உண்மைகளை பேசாமல் என்ன இலக்கியம் எழுதிக் கிழிக்கப் போகிறோம்?
  • சங்கத்துக்காக உழைத்த ரெ.கார்த்திகேசுவின் இலக்கிய ஆளுமையை மையப்படுத்திய கூட்டத்தில் கூட அவரால் ஆழம் செல்ல முடியவில்லை. அந்த நூலிலும் தன் படங்களை நிரப்பி வைத்துள்ளார். அந்த மனிதனை ஓர் ஆவணப் படம் செய்துவைக்கத் தோன்றியதா? தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்த விரும்பும் ஒருவரால் உண்மையாகச் சமூகத்துக்கு உழைக்க முடியுமா நண்பரே?
  • ஒரு நாவல் போட்டியைத் திறந்துவைக்க ஒரு லட்சம் ரூபாயை இயக்குனர் சேரனுக்குக் கொடுப்பதில் ஏதேனும் நியாயம் உண்டா ? அது தனிப்பட்டவர் பணமாக இல்லாதபட்சத்தில் கேள்வி எழுப்புவதில் தவறு உண்டா ?யார் வீட்டு பணத்தை யாருக்கு எதற்காகக் கொடுப்பது என நாம் எல்லோரும் ஒன்று திரண்டு கேட்க வேண்டாமா?
  • சங்கத்தின் முயற்சியில் வரும் நூல்களுக்கு எளிமையாக வெளியீடு நடத்தி வைரமுத்து நூலுக்கு ஆயிரக்கணக்கில் பணம் திரட்டிக் கொடுப்பதைப் பொறுத்துப்போவது வெட்கக்கேடில்லையா? ஒரு தமிழ்நாட்டு பாடலாசிரியனுக்காக எடுக்கப்பட்ட முயற்சியை இந்நாட்டின் எழுத்தாளனின் படைப்புகள் பரவலாகக் கிடைக்க வழி செய்ய வேண்டும் என நான் நினைப்பதில் பேராசை ஏதும் உண்டா?

எல்லாச் சூழலிலும் தன்னை முன்னிலைப்படுத்தும் அவரது போக்கை விமர்சனம் செய்யாமல் இருப்பதுதான் மலேசியத் தமிழ் இலக்கியத்துக்குச் செய்யும் இழுக்கு என இன்றும் நம்புகிறேன் அன்பழகன்.

ராஜேந்திரன் இன்று அடைந்திருக்கும் உயரம் அவர் உழைப்பால் கிடைத்தது என்பதில் ஐயமில்லை. அவர் நல்ல செயல்பாட்டாளர். ஆனால் ஒரு கட்டத்திற்குப்பின் அவரால் புதியத் திட்டங்களை உருவாக்க இயலவில்லை. புதுக்கவிதைப் பட்டறைகள் நடத்தியபோது அவர் களத்தில் இறங்கி பணியாற்றினார். எனக்குத் தெரிந்து அதுதான்  அவர் ஆற்றியுள்ள முக்கியமான பணி. அதன் விளைப்பயன் என்னவாக இருந்தாலும் அது விளம்பரங்களுக்காக நடத்தப்பட்டதில்லை. அப்பட்டறைகள் நடத்தப்பட்ட முறைமீது எனக்கு விமர்சனம் உண்டே தவிர பட்டறையின் மீது இல்லை. ஆனால் சேவை செய்ய முன்வரும் அரசியல்வாதிகள் தொடக்கத்தில் ஆழமான வேலைகளைச் செய்து பின்னர் தன்னை முன்னிலைப்படுத்த நடத்தும் கொண்டாட்டமான நிகழ்வுகள் போலத்தான் சங்கத்திலும் மலிந்தன.  தகுந்த சிந்தனையாளரை தன் அருகில் வைத்துக்கொள்ளாததாலும் தனது பிடிவாதமான அணுகுமுறையாலும்  அவர் குறித்த மதிப்பீடுகள் மேலும் மேலும் சரிகின்றன. தன்னைத் தாண்டி அவ்வமைப்பு இல்லை என நிறுவுவது ; இன்று அடைந்திருக்கும் உயரத்தைத் தக்க வைக்க கடுமையாக முயல்வது போன்ற குணங்கள் வீழ்ச்சிகான வித்து. விமர்சனபூர்வமான சிந்தனையில்லாதவர்களை மட்டுமே கவரும் அவரது திட்டங்கள் பொதுப்பார்வைக்குப் பிரமாண்டமாக இருக்குமேயன்றி அவற்றால் நீண்டநாள் பயனென்று ஒன்றும் இல்லை.

நண்பரே, நீங்கள் சொல்வதுபோல ராஜேந்திரன் எனக்கு தனிப்பட்ட முறையில் பல உதவிகளைச் செய்துள்ளார். முதல் பகுதியில் நான் அதை விரிவாகவே விளக்கிவிட்டேன்.  ஆனால் அதற்காக மாற்றுக்கருத்தைச் சொல்லாமல் கள்ள மௌனம் காப்பது என்பது அருவருப்பானது. நான் என் விமர்சனங்களைப் பொதுவில் வைக்கும் முன் இருமுறை விரிவான கடிதங்களை அவருக்கு எழுதிய அனுபவம் உண்டு. அதில் என் அதிருப்தியைக் கூறியிருந்தேன். ஆனால் அவரிடம் பதில் இல்லை.  அவர் செய்த உதவிகளுக்கு எப்போதுமே அவர் மேல் மரியாதை உண்டு. அதை என்றுமே நான் மறுக்க மாட்டேன். அதை உறுதிபடுத்தவே மெனக்கெட்டு இவ்வளவு விரிவாக எழுதுகிறேன். ஆனால் எழுத்தாளர் சங்கம் என்பது தனி ஒருவரின் பணத்தில் நடக்கும் நிறுவனமல்ல. அது அதன் உறுப்பினர்களைக் காட்டி அரசிடமும் இதர நிறுவனங்களிடமும் பெறப்படும் பணத்தின் மூலம் நடத்தப்படும் அமைப்பு. அது உரிய வகையில் பயன்படுத்தப்பட்டால் மலேசிய இலக்கியம் சிறக்கும் என நான் நினைப்பதில் என்ன தவறு உள்ளது? எனவே மலேசிய இலக்கிய உலகில் இயங்கும் ஒருவனாக இது என் கடமை என்றே நினைக்கிறேன்.

சாமிவேலுவின் தனிப்பட்ட அன்பில் பிணைக்கப்பட்டவர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு அவரின் அரசியல் செயல்பாட்டின் மீது விமர்சனம் இருக்கும். ஆனால் அதை குசுகுசுவென பேசி நகர்வார்கள். பொதுவில் சிரித்து தனக்குத் தேவையானதைப் பெற்றுக்கொள்வார்கள். என்னால் அந்த இளிவையெல்லாம் செய்ய முடியாது அன்பழகன். என் தரப்பு சரியா தவறா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. என் தனிப்பட்ட வளர்ச்சிக்கு உதவிய பலரை விமர்சனம் செய்யும்போதெல்லாம் உள்ளூர ஒரு வலி இருக்கும். அது ஒரு கனம். ஒரே ஒரு கனம்தான். நான் முன் வைக்கும் மாற்றுக்கருத்துகள் எனக்காக இல்லை எனச் சொல்லிக்கொள்ளும்போது அந்த வலி போய்விடும்.

மீண்டும் இதை தெளிவு படுத்திவிடுகிறேன். வைரமுத்துவை அழைத்து வருவதையும், சேரனுக்கு லட்ச ரூபாய் கொடுப்பதையும் விமர்சனம் செய்வது ரசனை மாற்றத்தினால் அல்ல. இது இலக்கியம் சார்ந்த அவரவர் நிலைபாட்டினால் முன்வைத்த எதிர்வினைகளும் அல்ல. இது முற்றிலும் இலக்கிய அறம் சார்ந்தது. அவ்வறம் கேள்விக்குள்ளாகும் போது பலரும் மௌனம் காப்பது நாளை ஏதோ ஒருவகையில் கிடைக்கப்போகும் விருது எனும் எலும்புத்துண்டுக்குதானே. அந்த அறத்தை விட்டுக்கொடுத்துவிட்டு கள்ளத்தனமாய் மௌனம் காப்பவர்கள் மேல் எனக்குத் துளியளவும் மரியாதை இல்லை.

நான் இப்படித்தான் அன்பழகன். என்னிடம் நன்றியுணர்ச்சி உள்ளிட்ட எல்லா உணர்ச்சியும் உண்டு. ஆனால் சமூகத்தின் மீது அக்கறை உள்ள ஓர் எழுத்தாளனாக இந்த உணர்ச்சிகளைக் காட்டி மௌனம் காப்பதிலோ முரணான கருத்துகளை வைத்துக்கொண்டு லாபம் பெற நெருக்கம் காட்டுவதிலோ எனக்கு இம்மியளவும் இசைவில்லை. அதே சமயம் அறிவார்த்தமான மாற்றுக்கருத்துக்கு நான் எப்போதுமே செவிசாய்க்கத் தயாராக இருக்கிறேன். இன்றும் எழுத்தாளர் சங்கத்தில் வேறெவரையும் விட ராஜேந்திரனே செயலாற்றும் திறனைப்பெற்றவர் போல காட்டப்படுகிறார். இத்தனைக்காலம் தலைவராக இருந்தவரால் அடுத்தத்தலைமுறையில் யாரையேனும் தலைமைத்துவத்துக்குத் தயார்படுத்த முடிந்ததா? இன்றும் அவரால்தான் இயக்கம் செயல்படுவதுபோல காட்டுவது ஆரோக்கியமான விளைவு என நீங்கள் நம்புகிறீர்களா அன்பழகன்.

அவர் தனது முன் முடிவுகள் அனைத்தையும் விட்டிறங்கி, இதற்கு முன் தான் நிகழ்த்தியவை பெரும் சாதனைகளாக நம்பிக்கொண்டிருக்கும் கற்பனை எண்ணங்களை விட்டிறங்கி, அறிவார்த்தமான ஓர் உரையாடலுக்குத் தயாராகி அதன் விளைவாக வரும் முடிவில் செயல்பட்டால் மட்டுமே மலேசிய இலக்கிய உலகத்திற்கு நன்மை செய்தவராவார். அதுவரை நான் என் தரப்பைக் கூறிக்கொண்டெ இருப்பேன்.

அப்படி ஒரு தரப்பு மலேசியத் தமிழ் இலக்கிய உலகின் பெரிய அறையில்  இருந்துவிட்டு போகட்டுமே ஊசிபோல ஒரு மூலையில்.

(Visited 773 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *