கடிதம்: நான் மணி மன்றத்தின் எதிரியல்ல!


bell-3-261x300நவீன். உன் அகப்பத்தில் நீயும் வல்லினம் குழுமத்தாரும் அடுக்கடுக்காய் சொன்ன பொய்களைப் பார்த்தேன். எழுத்துக்கூலியான உன் போன்றவர்கள் செய்யும் வேலை இது என நாங்கள் அறிவோம். காய்த்த மரம் கல்லடிப்படும். நாங்கள் காய்த்த மரம். மற்றவர்களைக் குறை சொல்லும் முன், நீ சமுதாயத்துக்கு என்ன செய்தாய்? ஆசிரியர் பணியில் இருக்கும் நீ, போதிப்பதால் மட்டும் சேவை செய்வதாகுமா? கவிதை எழுதுவது மட்டும் சமூக சேவையா? ஏன் உன்னால் மற்ற இயக்கங்கள் குறித்து பேச முடியவில்லை? பயமா? அவர்கள் நண்பர்கள் என்பதாலா?  பொங்கல் கொண்டாடுவதில் உனக்கு என்ன தடை உள்ளது? பின் நவீனத்துவவாதிகள் நீயும் உன் வல்லினம் நண்பர்களும் என அறிவோம். உங்கள் கொள்கைகளை மலேசியத் தமிழர்கள் அனைவரும் பின் பற்ற வேண்டும் என நினைப்பது பேராசை. அவதூறும் பொய்யும் சொல்வதை நிறுத்து. மானியம் வாங்காமல் எப்படி அமைப்பை நடத்துவது? நீங்களெல்லாம் மானியம் வாங்குவதே இல்லையோ? மணிமன்றம் எதையுமே செய்யவில்லை என உன்னால் நிரூபிக்க இயலுமா? ஏன் மலாய்க்காரர்களின் இயக்கத்தில் உள்ளவர்கள் அரசியலில் இல்லையா? தமிழர்களுக்கு அந்தத் தகுதி இல்லையா? ஏன் இந்த நண்டு வேலை?

                                                                                                                                                                                                                                                                                      விசுவாசி

நண்பர் விசுவாசிக்கு. உங்கள் கடிதத்தைச் சுருக்கியுள்ளேன். சில கடுமையான வரிகளை நீக்கியுள்ளேன். சில வாக்கியங்களை எளிதாக மாற்றம் செய்துள்ளேன்.

பதில் தரும் முன் ஒரு விடயத்தை உறுதியாகச் சொல்லிவிடுகிறேன். நான் ‘மணிமன்றத்தின் வீழ்ச்சி!‘ என எழுதியக் கட்டுரைக்கும் வல்லினம் குழுவினருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. என் கட்டுரையை அடிப்படையாக வைத்து அவர்களை வசைப்பாடுவதில் எனக்கு உடன்பாடில்லை. அந்தக் கட்டுரைக்கு நானே முழு பொறுப்பு. வல்லினத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனி சிந்தனை உண்டு. அதுவே எங்கள் பலம். ஒருவர் சிந்தனைக்கு இன்னொருவர் பொறுப்பேற்பதும்; ஒருவர் கருத்துக்கு நட்பு, கடமை, விசுவாசம் எனும் அடிப்படையில் பிறர் வரிந்துகட்டிக்கொண்டு வருவதோ வல்லினத்தில் நிகழாது. சிந்திக்கும் குழு அப்படிதான் இயங்கும். காரணம் சிந்தனை என்பது தனித்தனியானது. நாங்கள் இலக்கியம், மாற்றுக்கலை வடிவங்கள் எனும் மையத்தில் ஒன்றிணைகிறோம். என் வலைத்தளத்தில் எழுதிய கட்டுரை அது. வல்லினம் நண்பர்களில் சிலர் அந்தப் பதிவை ஒட்டி முகநூலில் பதில் எழுதியுள்ளனர்.  என் கருத்துடன் ஒத்துப்போகும் நிலையில் அவர்கள் அங்கு தங்கள் கருத்துகளைப் பதிவிட்டனர். என் கருத்துக்கு மாற்று கருத்து உள்ள நண்பர்களும் வல்லினத்தில் இருக்கலாம். நாளை அவர்களும் என் கருத்துக்கு எதிராக தங்கள் கருத்தைக் கூறலாம். அந்தச் சுதந்திரம் வல்லினத்தில் உண்டு.

முதலில் மாற்றுக்கருத்தைச் சொல்பவர்கள் எதிரியல்ல. அவர்கள் வேறொரு கருத்தை வேறொரு சிந்தனை மூலமாக உருவாக்கி வைத்துள்ளவர்கள். நான் அவர்கள் கருத்தை மறுப்பேனே தவிர அவர்களையல்ல. அவர்களும் என் கருத்தை மறுப்பார்களே தவிர என்னையல்ல. இந்தக் கட்டுரையை எழுதும் முன் நான் யாருடைய ஆதரவையோ ஆலோசனையையோ கேட்கவில்லை. தொடர்ச்சியாக நிகழும் வசைகளுக்கு எதிராக எனக்குக் குரல் கொடுக்கவும் அழைக்கவில்லை. நடப்புச் சூழலை அவர்களிடம் அவ்வப்போது விளக்கியுள்ளேன். காரணம் என் மனதுக்கு அணுக்கமானவர்கள் அவர்கள். எனவே இனி தங்கள் கருத்தையோ வசையையோ பன்மையாக்க வேண்டாம்.

விசயத்துக்கு வருவோம். இவ்வாறு இன்னும் நிறைய கடிதங்களும் அழைப்புகளும் வந்தன. அதிகமான மிரட்டல் அழைப்புகள். எல்லா அழைப்புகளுக்கும் பதில் கூறினேன். அதிக பட்ச மிரட்டல் அழைப்புகள் குறித்து போலிஸில் புகார் செய்தேன். தனி மனிதனால் செய்ய முடிந்தது அவ்வளவே.   அவர்கள் அனைவரும் என் மீது கோபப்பட எல்லா நியாயங்களும் உள்ளது. தாங்கள் சார்ந்த ஓர் இயக்கத்தை எப்படி அவமதிக்கலாம் என்ற அடிப்படையான கேள்வியிலிருந்து எழும் கோபம். அழைத்தவர்களிடம் நான் அவர்களுக்கும் சேர்த்தே பேசுகிறேன் எனப் புரியவைக்க முயன்றேன். நான் அவர்கள் எதிரி அல்ல என விளக்கப்படுத்த நேரம் எடுத்துக்கொண்டேன். நீங்கள் குறிப்பிட்டதுபோல நான் மணிமன்றத்தை அவதூறு செய்யவில்லை. அவர்களைக் குறையும் சொல்லவில்லை. ஆனால் அவர்கள் செயல்பாடுகள் என்ன என்று அறிய மட்டுமே ஆவல் கொண்டவனாக என்னை முன் நிறுத்தினேன். ஆரோக்கியமான திட்டங்கள் இருந்தால் எனக்கு எடுத்துக்கூறும்படியும் கேட்டேன். எல்லோரிடமும் கோபம் இருந்தது. வசை இருந்தது. ஆனால் பதில் மட்டும் இல்லை. இந்நிலையில் இந்தக் கடிதம் இதற்கு முன்பு வந்த பல கடிதங்களில் பலரின் கேள்விகளையும் தொகுத்துள்ளபடியால் இதற்கு மட்டும் பதிலளிக்கலாம் என நினைக்கிறேன். பாராட்டுக்கடிதங்கள், ஆதரவுக்கடிதங்கள் வந்தன. அவற்றிற்கு இங்கே அவசியம் இல்லை. அவர்களுக்கு நன்றி.

நீ சமுதாயத்துக்கு என்ன செய்தாய்?

உங்கள் முதல் கேள்வி இது. இந்தக் கேள்வி விவாதம் தொடங்கியது முதலே என்னைத் தொடர்ந்து வருகிறது இந்தக் கேள்வி. இந்தக் கேள்வியை ஒவ்வொருவரையும் நோக்கி கேட்க முடியும். ஆனால் நான் மணிமன்றத்தை நோக்கி கேட்கக் காரணம் அது நீண்ட பாரம்பரியம் கொண்ட ஒரு மாபெரும் இயக்கம். கோ.சாரங்கபாணி, சா.அ.அன்பானந்தன் என பெரும் ஆளுமைகள் முன்நின்று அமைத்த இயக்கம். இன்னும் சொல்லப்போனால் சமுதாய நலனுக்காகப் போராடிய இயக்கம். அந்த இயக்கத்தின் மேல் எனக்குப் பெரும் மரியாதை உண்டு. மரியாதை உள்ள ஓர் இயக்கம் நம் கண்முன் செயலிழந்து அல்லது செய்ய வேண்டியதை செய்யாமல் இருந்தால் அக்கறை உள்ள ஒருவன் அதை கேள்வி எழுப்புவான் அல்லவா? அப்படியான கேள்விதான் என்னுடையது. 10000 பேருக்கு மேல் உறுப்பினர்களும், நீண்ட பாரம்பரியமும் , வலுவான கட்டமைப்பும் உள்ள ஓர் இயக்கம் ஒரு தனி நபருடனோ அண்மையில் உதயமான ஒரு அமைப்புடனோ தன்னை இணைத்துப்பார்ப்பது/ ஒப்பிடுவது எத்தனை பெரிய அபத்தம்? ஒருவேளை என் கவனத்துக்கு மணிமன்ற செயல்பாடுகள் வராமல் இருக்கலாம். அதை அறிய மணிமன்ற இணையத்தை ஆராய்ந்தபோது அதுவும் புதுப்பிக்கப்படாமல் உள்ளது. ஆனால் சமூகத்தின் மீது அக்கறை உள்ள ஒருவன் கேள்வி எழுப்பும் போது நீ என்ன செய்தாய் எனக்கேட்பது முறையாகுமா? ஒருவேளை ஒரு மாற்றுத்திறனாளி இந்தக் கேள்வியைக் கேட்டால் அவர்களை நோக்கியும் இதே கேள்வி பாயுமா?

ஓர் இயக்கத்தைப் பார்த்து இக்கேள்வியைக் கேட்க அவ்வியக்கம் சமூகத்தைக் காட்டி அரசிடம் பணம் பெறுவதே காரணமாகிறது. ஆனால் தனி மனிதன் சமூகத்தைக் காட்டி அரசிடம் பணம் வாங்காதபோது அவனை நோக்கி இக்கேள்வி எழ நியாயம் என்ன என்று புரியவில்லை. இயக்கத்தில் உள்ளது பொதுப்பணம். மக்களிடம் இருந்து பெறப்பட்ட வரிப்பணத்தின் ஒரு பகுதி. அதை மக்களுக்குச் செலவிட வேண்டும். தனி மனிதன் பெறுவது நன்கொடை அல்ல. அது ஊதியம் அல்லவா?

ஏன் உன்னால் மற்ற இயக்கங்கள் குறித்து பேச முடியவில்லை?

மேலே நான் சொன்னதுபோல இந்நாட்டின் தமிழ், இலக்கிய வளர்ச்சிக்கு ஆதாரமாக இருந்தது மணி மன்றம். அதன் நலனை விரும்பும் நான் அது குறித்தே கேள்வி எழுப்ப முடியும். காரணம் அதன் வளர்ச்சியில் அக்கறை உண்டு. மற்றுமொன்று நான் மொழி, இலக்கியம், கலை சார்ந்து இயங்குபவன். மணி மன்றத்தின் தொடக்கம் அவற்றை ஊக்குவிக்கும் பொருட்டே இருந்தது. ஆக, இயல்பாக என் கவனம் மணி மன்றம் மேல் குவிகிறது. அது சரியாக இயங்குகிறதா என அறிய அனைவர் போலவும் நானும் ஆவலாய் இருக்கிறேன். மேலும் ‘ஏன் மற்றவை குறித்து கேள்வி எழுப்பவில்லை’ என்ற வாசகத்தைப் பிற சூழலில் பொறுத்திப்பார்த்தால் அபத்தமாக இருக்கும். இதை ஒவ்வொரு இயக்கமும் கேட்க ஆரம்பித்தால் யாரிடமும் எதையும் பேச முடியாது. என்னை நோக்கி இந்தக் கேள்வி எழ அடிப்படைக் காரணம் எனக்குப் பின்னால் ஏதோ ஒரு சமூக விரோத சக்தி, அல்லது அரசியல் கட்சி அவ்வாறு எழுதத்தூண்டுகிறது என நம்புவதால்தான். அப்படி இல்லை. எழுத்துக்கூலிகள் மேல் எனக்கு எப்போதும் மரியாதை இல்லை. நான் என் எழுத்துக்கு அவ்விழுக்கை ஏற்படுத்துவம் இல்லை.

பொங்கல் கொண்டாடுவதில் என்ன சிக்கல்? நான் பண்பாட்டு எதிரியா?

மரபிலிருந்து முற்றிலுமாக அறுத்துக்கொண்டு நவீனத்தைக் கொண்டாடுவதில் எனக்கு எப்போதும் விருப்பம் இல்லை. நான் என்னை எப்போதுமே பின் நவீனத்துவவாதி என்றெல்லாம் அடையாளப்படுத்திக்கொண்டதும் இல்லை. உலக இலக்கியங்களை வாசிக்க முயல்வதுபோலவே பழந்தமிழ் இலக்கியங்களையும் பயில ஆர்வம் கொண்டுள்ளேன். ஆனால் சாதியம் போன்ற பிற்போக்கான அடையாளங்களில் எனக்கு உடன்பாடில்லை. மத பண்டிகைகளை அதன் சடங்குகளை நான் பின்பற்றுவதும் இல்லை. ஆனால் தமிழர் விழுமியங்களைத் தேடி அறிய ஆவல் கொண்டிருக்கும் எளிய மனிதன். அதன் அடிப்படையில் பொங்கல் கொண்டாடுவதில் எனக்கு முரண்பட்ட கருத்தே இல்லை. ஆனால் அதை பிரமாண்டமாகக் கொண்டாடுவதன் வழி இளைஞர்களுக்கு அதை ஒரு சடங்காக மட்டுமே அறிமுகம் செய்கிறோம்.  பொங்கல் தமிழர் வாழ்வில் எப்படி புகுந்தது? பழங்கால தமிழர்கள் பொங்கலை எப்படிக் கொண்டாடினர்? என்னென்ன தானியங்கள் பயன்படுத்தப்பட்டன? இப்படி வேர் நோக்கி நமது பயணம் இல்லை. சரி! அது சாத்தியப்படாவிட்டால் பொங்கல் விழாவை எளிமையாக்கி மலேசியாவில் சமீப காலத்தில் தமிழ் இளைஞர்களின் சாதனைகளை முன்னெடுத்து நவீனப்படுத்தலாம். உதாரணமாக ‘ஜகாட்’ திரைப்படம் மூலம் தேசிய அளவில் சிறந்த இயக்குனராக அறிமுகம் கண்ட சஞ்சை குமார் ஒரு தமிழ் இளைஞன்தான். இதுநாள்வரை நடக்காத ஓர் அதிசயத்தை இந்நாட்டில் நிகழ்த்திக்காட்டியுள்ளார். அவரை இந்த இளைஞர் அமைப்பு கொண்டாட வேண்டாமா? கராத்தே, தெ குவாண்டோ போட்டிகளில் சாதித்த நம் இளைஞர்களை அங்கீகரிக்க வேண்டாமா? தமிழ்ச்சமூகத்தில் புதுமையான வணிகத்தில் ஈடுபட்டு வெற்றியடைந்த இளைஞர்களை கௌரவிக்க வேண்டாமா? இந்த செயல் அடுத்த இளைஞனுக்கு நம்பிக்கை கொடுக்கும். அவர்கள் மூலமே ஓர் இளைஞன் தன்னூக்கம் அடைவான். மணி மன்ற விழாவில் இரண்டும் நடைபெறவில்லை என்பதே என் வருத்தம். நாம் நமது வரலாற்றையும் அறிய மெனக்கெடாமல் சமகால சாதனைகளையும் அங்கீகரிக்காமல் சடங்குகளை மட்டுமே பிரமாண்டமாக்குவதால் எதையோ சாதித்துவிட்டதாக நினைக்கலாம். ஆனால் சொற்ப நேரத்தில் அதிக பணத்தை ஊடக கவனத்துக்காகச் செலவளிப்பதில் சமுதாயத்துக்கு என்ன நன்மை என என்னைப்போன்ற ஒருவனுக்குக் கேள்வி எழுவதில் தவறு ஏதும் உள்ளதா?

மானியம் வாங்குவது தவறா?

எவ்விடத்திலும் நான் அவ்வாறான கருத்தைக் கூறவே இல்லை. மானியம் வாங்குவது எப்படித்தவறாகும். ஆனால் மானியம் எப்படி வாங்கப்படுகிறது. அதில் உள்ள உறுப்பினர்களின் அங்கத்துவத்தைக் காட்டி அல்லவா. அதற்காகவே அரசாங்கம் பணம் தருகிறது. இப்போது இந்தப் பணம் அங்கத்தினருக்கு பயன் தர வேண்டாமா? அங்கத்தினருக்கு எப்படி பலன் கொடுக்கும். ஆரோக்கியமான திட்டங்கள் வழி. ஆரோக்கியமான திட்டம் என்பது என்ன? ஒருநாள் கூடி களையும் கூட்டங்களையோ குறிப்பிட்ட காலம் மட்டுமே பலன்தரும் திட்டங்களையோ  உருவாக்காமல் நீண்டநாள் பலன் தரும் திட்டங்களை உருவாக்குவது அல்லவா? நீண்ட நாள் திட்டங்கள் என்பது என்னவாக இருக்கலாம். சில உதாரணங்கள் மட்டும்:

  • ஒரு கலைத்துறையில் (நாடகம், சினிமா சார்ந்த தொழில்நுட்ப வேலைகள், இசை)ஆர்வம் உள்ள இளைஞனை / அதில் சில முயற்சிகள் செய்தவனை அத்துறையில் உள்நாட்டிலோ /வெளிநாட்டிற்கோ அனுப்பி பயில வைக்கலாம். அவ்விளைஞன் மூலம் இந்நாட்டில் பிற இளைஞர்களுக்கு ஒப்புதல் (Contract) அடிப்படையில் இலவச பயிற்சி வழங்கலாம்.
  • முன்பு மாணவர் மணிமன்றம் செயல்பட்டதுபோல , மலேசியா முழுக்க இருக்கும் மாணவர்களின் படைப்பாற்றல் வெளிபட இலவச இதழியல் முயற்சிகள் செய்யலாம். அல்லது இருக்கும் பத்திரிகைகளுடன் இணைந்து அக்காலத் தமிழ் முரசு போல இலவச பகுதி ஒன்றை உருவாக்கு மாணவர்களை அதில் எழுதவைத்து பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கலாம்.
  • தமிழில் உள்ள முக்கியமான ஆளுமைகளை (எழுத்து, நாடகம், இசை, ஓவியம்)கண்டடைந்து அவர்கள் ஆற்றல் மலேசிய இளைஞர்களுக்குச் சென்று சேரும் வகையில் திட்டங்கள் அமைக்கலாம்.
  • சிறைச்சாலையிலிருந்து வெளியேறி சரியான வேலைவாய்ப்பில்லாமல் தவிக்கும் இளைஞர்களைக் கண்டடைந்து அவர்களும் வாழ்வில் முன்னேற்றம் காண சிறு தொழில்களை ஏற்படுத்தவும் , சுய தொழில் செய்யும் திறன் பெறவும் பயிற்சி வழங்கலாம். எல்லா வாய்ப்புள்ள இளைஞர்களுக்குப் பட்டறைகள் நடத்துவதைவிட சிறையிலிருந்து வந்து தவிக்கும் இளைஞர்களை நோக்கி கவனத்தைக் குவிக்கலாம்.
  • மலேசியத் தமிழர்கள் மத்தியில் நிகழவேண்டிய பொறுத்தமான ஆய்வுகளைச் செய்ய ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கு தேவையான பண உதவிகளையும் வசதிகளையும் வழங்கி அவர்களை ஆய்வுத்துறையில் ஊக்குவிக்கலாம். பூஜாங் பள்ளத்தாக்கு தொடங்கி பரமேஸ்வரர் வரலாறு வரை உள்ள தொன்மங்களையோ சமகால வாழ்வில் உள்ள சிக்கல்களையோ ஆராய்வதன் வழி மிகப்பெரிய பங்களிப்பை இச்சமூகத்துக்குச் செய்ய இயலும்.

இவை சில உதாரணங்கள் மட்டுமே. நல்ல சிந்தனையாளர்களைக் கொண்டு இன்னும் சிறப்பான திட்டங்களை வகுத்து அமுல்படுத்த நல்ல கட்டமைப்பும் சமூகத்தில் நன்கு பரிட்சயமான ஓர் இயக்கத்தால் மட்டுமே செய்ய சாத்தியம். மணி மன்றம் தோன்றும்போதே இவ்வாறான கலை இலக்கியம் மற்றும் மொழி வளர்ச்சிக்குப் பங்காற்றியது. அவ்வகையில் ஒருநாளில் 1000 பானைகளில் பொங்கல் வைப்பதைவிட இதுபோன்ற திட்டங்களால் ஆரோக்கியமான இளைஞர் சமூகத்தை உருவாக்க முடியும் என நம்புகிறேன். உறுப்பினர்களின் நன்மைக்காக வழங்கப்படும் மானியம் கொண்டாட்டத்துக்காக பயன்படக்கூடாது அது நேரடியாக இளைஞர்களுக்குப் பயன்பட வேண்டும் என நினைப்பதில் தவறேதும் உண்டா என்ன?

நண்பரே, வல்லினம் இயக்கமோ சங்கமோ அல்ல. அது ஓர் இதழியல் குழு. நாங்கள் ஒரு நிறுவனம். நிறுவனத்திற்கும் அமைப்பிற்கும் அடிப்படையில் சில வித்தியாசங்கள் உண்டு. அமைப்பு சமூக செயல்பாட்டுக்காக அரசிடம் பணம் பெற்று செயலாற்றுவது. அதன் அத்தனை விபரங்களும் பொதுப்படையில் இருப்பது அவசியம். நிறுவனம் தனி நபருடையது. அதை பொதுவில் விளக்க வேண்டிய அவசியமே இல்லை. நாங்கள் வல்லினம் எனும் பதிப்பக நிறுவனம் மூலம் ஒன்றிணைந்து செயலாற்றும் இளைஞர்கள். எனவே நாங்கள் அரசிடம் நிதியுதவி பெறுவதில்லை. எங்கள் செயலுக்கான பணத்தை நாங்களே திரட்டுகிறோம்.

மணிமன்றம் எதையுமே செய்யவில்லை என உன்னால் நிரூபிக்க இயலுமா?

இல்லை. என்னால் நிரூபிக்க முடியாது. நான் முன்பே சொன்னதுபோல அவ்வியக்கத்தைக் குறை கூறும் எண்ணம் எனக்கில்லை. ஆனால் நீண்ட நாள் பயன் தரும் செயல்பாடுகள் குறித்தே என் அக்கறை. தீபாவளிக்காக மட்டும் வியாபாரிகளுக்கு உதவுதல், பொங்கலுக்கு மட்டும் ஒன்றிணைதல், கொண்டாடங்களை முன்னெடுத்தல், சிறு சிறு பட்டறைகளை நடத்துதல் ஆகியவை சிறந்ததுதான். ஆனால் அதைவிட வலுவான , பெரிய முயற்சிகளை மணி மன்றம் போன்ற பெரிய இயக்கத்தால் செய்ய முடியும் என நம்புவதால்  ஏற்படும் எண்ணம் இது. இவ்வேளையில் வெறும் 10 பேர் மட்டுமே கொண்ட வல்லினம் குழுவினர் எவ்வித அரசு மானியமும் இல்லாமல் செய்த பணிகள் சிலவற்றை பட்டியலிடலாம் என நினைக்கிறேன். இதில் கர்வமோ, ஒப்பிட்டு அவமதிக்கும் எண்ணமோ இல்லை என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன். தொடர்ந்து நானும் இதுகுறித்து கேள்வி எழுப்பும் என் நண்பர்களும் ‘என்ன செய்தோம்’ என்ற கேள்வி எழுவதால் அது குறித்தும் கொஞ்சம் பேச வேண்டியுள்ளது.

பதிப்பு முயற்சிகள்:

இதுவரை வல்லினம் குழு , ‘வல்லினம்’ எனும் இலக்கிய இதழையும் ‘பறை’ எனும் ஆய்விதழையும் அச்சு இதழ்களாக வெளியிட்டுள்ளது. ‘பறை’ இதழ் பத்தாயிரம் இதழ்கள் அச்சாகின. சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு இவ்விதழ் 3000 பிரதிகள் இலவசமாகவே வழங்கப்பட்டது. மேலும் இதுவரை 20க்கும் மேற்பட்ட நூல்களை வல்லினம் குழு பதிப்பித்துள்ளது. அதில் 7 நூல்கள் இளம் எழுத்தாளர்களின் முதல் நூல். இந்த நூல் அச்சுக்கு நாங்கள் எழுத்தாளர்களிடம் பணம் எதுவும் பெறுவதில்லை. அதேபோல நூல் விற்பனையாகும் முன்பே 20% ராயல்டி எழுத்தாளர்களுக்கு வழங்கிவிடுகிறோம்.
சான்று : https://www.youtube.com/watch?v=fRfNwkziYxw

இலக்கிய முயற்சி :

இலக்கியத்துறையில் ஆளுமை மிக்க தமிழக, ஈழ மற்றும் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களை வரவழைத்து பட்டறைகள் நடத்தியுள்ளோம். ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி மாணவர்களிடம் பணம் வாங்காமல் இலவச பட்டறையே நடத்தப்பட்டது. மேலும் 10க்கும் மேற்பட்ட இலக்கியச் சந்திப்புகளை ஒருங்கிணைத்து நடத்தியுள்ளோம்.

பிற கலை முயற்சிகள்:

இதுவரை இருமுறை ஓவியக் கண்காட்சி செய்துள்ளோம். நிழல்பட கண்காட்சியும் வைத்துள்ளோம். தமிழகத்தின் வீதி நாடக கலைஞர் பிரளயனை வரவழைத்து மை ஸ்கில்ஸ் அறவாரிய மாணவர்களுக்குப் பயிற்சி கொடுத்து அந்த நாடகத்தை பத்து மலையில் அரங்கேற்றியுள்ளோம். ‘ஜகாட்’ திரைப்பட முன்னோட்டத்தை மையப்படுத்தி உரையாடல்களை ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் ஏற்பாடு செய்துள்ளோம்.
சான்று : http://vallinam.com.my/version2/?p=724

வல்லினம் விருது :
மூத்தப்படைப்பிலக்கியவாதிகளையும் அங்கீகரிக்க வேண்டும் என்ற நோக்கில் ‘வல்லினம் விருது’ என ஆரம்பித்து அதன் மூலம் 5000.00 ரிங்கிட் தொகையுடன் விருது பெறுபவரின் நூலையும் வெளியிடுகிறோம்.
சான்று : http://vallinam.com.my/version2/?p=1635

ஆவணப்பட முயற்சி :

இதுவரை மலேசியாவில் உள்ள 5 முக்கியமான ஆளுமைகளை ஆவணப்படம் செய்து சி.டிகளாக வெளியிட்டுள்ளோம். மேலும் பலரை ஆவணப்படம் எடுத்து வருகிறோம்.
சான்று :   http://vallinam.com.my/version2/?p=3507

மொழிப்பெயர்ப்பு முயற்சி :

மலேசிய இலக்கியவாதிகளின் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து நூலாக்கியுள்ளோம். இதுவரை அப்படி 3 நூல்கள் வந்துள்ளன.
சான்று  http://vallinam.com.my/version2/?p=3350

புதியவர்களை அடையாளம் காணும் முயற்சிகள் :

புதிய படைப்பாளிகளை அடையாளம் காணவும் அவர்களை எழுத ஊக்குவிக்கவும் முதல் பரிசு 3000 எனும் தொகையுடன் சிறுகதைப் போட்டி நடத்தியுள்ளோம். இவ்வருடமும் அது கட்டுரைப்போட்டி பத்தி எழுதும் போட்டி என விரிவாக்கம் கண்டுள்ளது.
சான்று : http://vallinam.com.my/version2/?p=3487

வல்லினத்தின் சமூகப் பொறுப்பு :

சமூகத்துக்கு எங்களின் பங்களிப்பு நேரடியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ‘பேய் வீடு’ ஒன்று அமைத்து அதில் திரட்டப்பட்ட 3000 ரிங்கிட்டை மெலாவாத்தி தமிழ்ப்பள்ளிக்கு வழங்கினோம். நான் எழுதிய ‘வகுப்பறையின் கடைசி நாற்காலி’ எனும் நூலை வெளியீடு செய்து 5000 ரிங்கிட்டை மை ஸ்கில்ஸ் அறவாரியத்துக்கு வழங்கினோம்.
சான்று  http://vallinam.com.my/version2/?p=1563
சான்று : http://vallinam.com.my/version2/?p=2494

மாணவர்களுக்கு:

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் கடந்த இரு ஆண்டுகளாக வல்லினத்தின் இணை நிறுவனமான யாழின் மூலம் இலவசப்பட்டறைகளை நாடு முழுவதும் நடத்தியுள்ளோம். அதற்கான சான்றுகள் ‘வெற்றி யாழ்’ எனும் முகநூலில் உண்டு.

உலக வாசகர்களிடம் மலேசிய இலக்கியம்:

இவ்வருடம் தொடக்கத்திலேயே சென்னை புத்தகக் கண்காட்சியில் வல்லினம் பதிப்பக நூல்களைக் கொண்டுச்சென்று அங்குள்ள வாசகர்களிடமும் மலேசியப்படைப்புகள் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தப் பட்டியலை நான் கூற ஒரே காரணம் வெறும் 10 பேர் கொண்ட பத்து வருடம் மட்டுமே இயங்கும் ஒரு பதிப்பகம் எவ்வித மானியமும் இல்லாமல் தன்னால் ஆனதைச் செய்யமுடிகிறது. இதன் மூலம் எங்கள் வெளிபாடு (OUTPUT) என்பது இம்முயற்சிகளால் தொடர்ந்து வெளியாகும் எங்கள் நூல்களும் ஆவணப்படங்களும் மொழிப்பெயர்ப்புகளும் ஆகும். அதோடு பல இளம் புதிய எழுத்தாளர்களையும் உருவாக்கியுள்ளோம். எங்களிடம் பணப்போதாமை உள்ளதால் செம்பருத்தி போன்ற ஒத்த சிந்தனை உள்ள இயக்கங்களுடன் இணைந்து இதுபோன்ற முயற்சிகளை முன்னெடுக்கிறோம். கடந்த ஆண்டு முதல் யாழ் நிறுவனத்தின் துணையுடன் எங்கள் செயல்பாடுகள் நகர்கின்றன.

எந்த தலைவர் மாறி வந்தாலும் நீண்டநாள் பலன்தரும் திட்டங்கள் ஏதும் மணி மன்றத்தில் உருவாக்கப்பட்டதா என்ற என் கேள்விக்கு பதிலாக கொச்சை மொழியில் திட்டினால் தொடர்ந்து பேச ஒன்றுமே இல்லை.

அரசியலில் இயங்கக்கூடாதா?

மிக முக்கியமான கேள்வி இது நண்பரே. தாராளமாக இயங்கலாம் . ஆனால் மணி மன்றம் தனது வரலாற்றில் ஓர் அழுத்தம் கொடுக்கக் கூடிய மாபெரும் அமைப்பாக இருந்துள்ளது. ம.இ.கா உள்ளிட்ட கட்சிகள் மணி மன்றத்தைப் பார்த்து மிரண்டுள்ளன. சமுதாயத்துக்கு அத்தியாவசியமற்ற திட்டங்களை அரசு அமைக்கும்போது அதற்கு மாற்றுக்குரல் கொடுக்க மணி மன்றம் போன்ற வரலாற்று பெருமை மிக்க அமைப்புகளால்தான் சாத்தியம். பெரிய எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்டுள்ள அவ்வமைப்பின் குரலால் அரசு தன் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய முடியும். உதாரணமாக DLP போன்ற திட்டங்களால் தமிழ்ப்பள்ளியின் இருப்பு அபாயத்துக்குள்ளாகி இருக்கும் சூழலில் மணி மன்றத்தின் குரல் ஒலிக்க வேண்டும் என நினைப்பதில் தவறு உண்டா? ஒருவேளை அரசிடம் பதவிகளைப் பெற்றப்பின் மணி மன்றத்தால் எளிய மக்களுக்கும் மொழிக்கும் சமுதாயத்துக்கும் ஊறு விளையும் போது எதிர்ப்புக்குரல் வழங்க இயலுமா? இந்நாட்டில் நமது நிலையும் மலாய்க்காரர்களின் நிலையும் ஒன்றல்லவே. அவர்கள் பதவி வகித்தால் பலன் உண்டு. நாம் பதவியைப் பெற்றால் அடிமையாகத்தான் இருக்க வேண்டும். வேதமூர்த்திக்குத் துணையமைச்சர் பதவி கொடுத்து அவர் வாயை அடைத்த வரலாறு நம் கண் முன்நடந்து இன்னும் மூன்று ஆண்டுகள் கூட கடக்கவில்லை. இந்நிலையில் எளிய மக்களுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு எளிய மக்களுக்காகக் குரல் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும் என நினைப்பதும்; அதன் வாயை அடைக்கும் எவ்வித பதவிகளும் ஆபத்தானவை என்ற முன் அனுபவத்தின் குரலும் அவதூறு விளைவிக்க எழுந்தவை அல்ல நண்பரே. உங்களைப் போலவே சமூகத்தின் மீதான அக்கறையில் உதித்தது.

கோ.சா தொடங்கிய தமிழ் நூலகத்தை முடக்க வேலைகள் நடந்தபோது அதை பி.பி.சியில் எடுத்துச்சென்று ஓரளவு சரிகட்டினோம். ஆனால் கோ.சா ஆரம்பித்த இயக்கம் இவ்வாறான தமிழ் உணர்வுடன் இருக்க வேண்டும் என நினைப்பது பேராசையா என்ன?

சான்று : http://vallinam.com.my/navin/?p=2402

இறுதியாக

நாம் அறிவுத்தளத்தில் இயங்குகிறோம். அவ்வாறு நினைத்தே நான் என் கருத்துகளை வெளியிடுகிறேன். கோ.சாரங்கபாணி உள்ளிட்ட ஆளுமைகள் இளைஞர்கள் சிந்திக்க வேண்டும் என்றே இவ்வமைப்பை உருவாக்கினர். ஆனால் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. கேள்வி எழுப்பக்கூடாது. எழுப்பும் நபரை வசைப்பாடுவோம். அவரை தண்டிப்போம் என முடிவெடுத்து செயல்பட்டால் கோ.சாவின் கொள்கைகள் தோல்வி அடைந்தன என்றே பொருள். கருத்துச் சுதந்திரம் இல்லாத சமுதாயமாக மாற மணி மன்றம் காரணமாக இல்லாமல் இருக்கட்டும். திறந்த மனதுடனான கலந்துரையாடல்களே ஆக்கத்திற்கு வழி.  நன்றி.

(Visited 403 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *