வருடத்துவக்கத்தில் ‘பூலாவ் பெசார்’ செல்வதென்பது உற்சாகமானது. ஏற்கனவே அத்தீவு குறித்து விரிவாக எழுதியுள்ளேன். இப்பயணத்தில் என்னுடன் தயாஜி, மற்றும் உடன் பணியாற்றும் ஆசிரியர்கள் சரவணன் மற்றும் முருகன் ஆகியோர் வந்தனர். இம்முறை ‘பூலாவ் பெசார்’ செல்ல எனக்கு அடிப்படையான வேறொரு காரணம் இருந்தது. கடந்த ஆண்டும் நாங்கள் நான்கு பேர்தான் சென்றிருந்தோம். ஒருமுதியவர் எங்களிடம் பேச்சுக்கொடுத்தார். கருமை நிறம். மலாய்க்காரர். மெலிந்த ஆனால் திடமான தேகம். திடீரென என் கையில் நான்கு எண்களைத் திணித்து அந்த எண்களை லாட்டரியில் எடுக்கச் சொன்னார். “ஏறினால் எனக்கும் கொஞ்சம் கொடு” என்றார். நான் அதுநாள்வரையில் நான்கு நம்பர்களை எடுத்ததில்லை. அதுபோன்ற கடைகள் பக்கம் கூட போவதில்லை. உறவினர்கள் நண்பர்கள் பலர் எண்களுக்கு அடிமையாக இருப்பதைப் பார்த்ததுண்டு. எனக்கு அவ்வாறு எதாவது ஒன்றிடம் அடிமையாக இருப்பதில் உடன்பாடில்லை. அதிஷ்டம் போன்ற விடயங்களையும் நம்புவதில்லை.
எப்படி நம்பர் எடுப்பது என்ற குழப்பம் இருந்தது. வைராக்கியம் வேறு தடுத்தது. நண்பர்களிடம் ஆலோசனைப் பெற்று எடுத்தேன். முதல் முறை. ஆச்சரியமாக இரண்டாவது பரிசில் நம்பர் ஏறியிருந்தது. மீண்டும் மறுநாள் எடுத்தேன். ஏறியது. அவ்வளவுதான் போதுமென அந்த எண்களைக் கிழித்தெறிந்தேன். மனதிலிருந்து அந்த எண்களை வலுக்கட்டாயமாக விரட்டினேன். ஆனால் முதியவரைப் பார்க்கும் எண்ணம் தோன்றிக்கொண்டே இருந்தது. வேலைப்பலுவால் பயணிக்க முடியாமல் போகவே முதியவரைச் சந்திப்பதும் தாமப்பட்டது. இவ்வருடம் அவருக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டுமென புறப்பட்டேன்.
காலை 11 மணிக்கெல்லாம் அங்கு இருந்தோம். சென்றதிலிருந்து கண்கள் அவரைத் தேடின. பலமுறை சென்றுள்ளதால் பலரும் பரிட்சயமானவர்கள். அதில் ஒரு மலாய்க்காரரிடம் நான் தேடிவந்தவர் குறித்து விசாரித்தேன். அவர் இறந்து 8 மாதங்களாகிவிட்டது என்றார். அதிர்ச்சியாக இருந்தது. தாமதித்துவிட்டோமோ என குற்ற உணர்ச்சி. இறந்தவர் உலகில் பணம் என்னவாக இருக்கிறது என்ற குழப்பம். ஃபிர்டவுஸ் எனும் நண்பர் அங்கு கொஞ்சம் நெருக்கமானவர். நடந்ததைச் சொன்னேன். பணம் தனி ஒருவருக்குச் செல்வதைவிட நான்கு வேளையும் அன்னதானம் வழங்கும் அங்குள்ள அமைப்புக்குக் கொடுப்பதே சிறப்பென்றார். பணம் செலுத்தினோம். பூலாவ் பெசாரில் நான்கு வேலை உணவும் இலவசம்தான். அன்று நாட்டு ஆடு குழம்பு. உணவு முடிந்ததும் எப்போதும் போல கடலுக்கு முன் இருக்கும் பெரிய சம அளவான பாறைகளில் தூக்கம். புறப்பட்டபோது நான் சொன்ன அங்க அடையாளங்களை வைத்து அந்த முதியவர் இறக்கவில்லை என்றும், இறந்தது அத்தீவில் ‘அப்பா’ என அழைப்படும் மற்றொருவர் என்றனர். நிம்மதியாக இருந்தது. நேரமாகிக்கொண்டிருந்தது. 3.30க்கு வரும் ஃபேரியைவிட்டால் அதோடு ஐந்து மணிக்குதான் கடலைத் தாண்டமுடியும். புறப்பட்டோம். மீண்டும் எப்போது இத்தீவுக்கு வருவேன் எனத்தெரியாது. ஆனால் அந்த முதியவரிடம் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றிவிடவேண்டும் என்று மட்டும் முடிவெடுத்துக்கொண்டேன்.
மலாக்காவில் சென்று சேரும்போது மாலையாகிவிட்டிருந்தது. சரவணதீர்த்தாவை அழைத்தோம். அவருக்கு சீனப்பெருநாள் விடுமுறை கிடைத்து நிம்மதியாக வீட்டில் இருந்தார். அது எங்களுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. வந்தார். jonker street வெள்ளி , சனி, ஞாயிறு மட்டுமே திறந்திருக்கும் எனத்தெரியாது. நாங்கள் சென்றது வியாழக்கிழமை. எனவே எங்காவது அழைத்துச்செல்லக்கூறினோம். கொஞ்சம் யோசித்தவர் Agnes Wong என்பவரை அழைத்தார். எழுத்தாளர்களையும் ஆசிரியர்களையும் அழைத்துவருவதாகக் கூறினார். நாங்கள் எங்கே செல்லப்போகிறோம் என முழுமையாகத் தெரியாமல் ஆர்வமானோம்.
வரலாற்றுச் சுவடுகளில் இருந்து தன்னை முழுவதுமாய் பெயர்த்து எடுத்துவிட்டு மலாக்காவில் உருவாகியிருக்கும் நவீன கட்டடம் The Shore Shopping Gallery. இதில் இரண்டாவது மாடியில் அமைந்துள்ள சுற்றுலா மையம் The Shore Oceanarium. எங்கள் வருகையை அறிந்ததும் அந்த மையத்தின் விற்பனை பிரிவு பொறுப்பாளர் Agnes Wong மகிழ்ச்சியுடன் வந்து வரவேற்றார். அது அவர் வேலை முடிந்து போகும் நேரம். சீனப்புத்தாண்டுக்கான வேலைகளுக்கு மத்தியில் அவர் எங்களுக்காகக் காத்திருந்தது ஆச்சரியத்தைக் கொடுத்தது. சரவணதீர்த்தாவின் நெருக்கமான நண்பர் என பேச்சில் தெரிந்தது. “ஏன் இவ்வளவு தாமதமாக வந்தீர்கள். அவசரமாகப் பார்த்தால் எதையும் ஒழுங்காக ரசிக்க முடியாது.” என எங்களை உரிமையுடன் செல்லமாகக் கடிந்துகொண்டார். The Shore Oceanarium சுற்றுலா மையத்தில் நான்கு முக்கியமான அங்கங்கள் உள்ளன. அவை The Shore Oceanarium , 3D Interactive Park , The Shore sky Tower மற்றும் The Shore Toy Museum.
நாங்கள் சென்றபோது இரவு மணி 8.00. வழக்கமாக இறுதி வருகையாளர் பதிவு 8.00 மணியுடன் முடிந்துவிடும் என்பதாலும் 9.30க்குள் வெளியேறிவிட வேண்டும் என்பதாலும் ஏதாவது இரு இடங்களைப் பார்க்கலாம் என முடிவு செய்தோம். Agnes Wong , The Shore Oceanarium மற்றும் The Shore sky Tower ஆகிய இடங்களுக்குச் செல்லச்சொன்னார். gong xi fa cai கூறிவிட்டு விடைபெற்றோம்.
The Shore Oceanarium கடல்வாழ் உயிரினங்கள் நீந்தி விளையாடும் பகுதி. அங்கு சில மீன்களைக் கைகளில் ஏந்த முடியும் என்பதே அதன் சிறப்பு. ஆமைகளுக்கு உணவு வழங்கவும் மீன்களுக்கு உணவு கொடுக்கவும் தக்க ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். பெரிய தொட்டியில் இருந்து மீன்கள் வெளியே வந்து வெட்கத்துடன் எட்டிப்பார்த்து கைகளைக் கொத்திவிட்டு மீண்டும் உள்ளே ஓடிவிடுகின்றன. தூய்மையான பராமரிப்பு , பொறுத்தமான சூழல், புதுமையான வடிவமைப்பு, இசை ஆகியவவை அவ்விடத்தை சுற்றிவர தகுந்த மனநிலையைக் கொடுத்தன.
கடல் உயிரினங்கள் காலுக்குக் கீழே வாழும் இன்னொரு பறவையினம் எனத்தோன்றுவதுண்டு. அவை பறவைகள் போல வண்ணமயமானவை. பறவைகள் பிரபஞ்சம் முழுவதையும் சொந்தம் கொண்டாடுவதுபோல மீன்கள் கடல் முழுமையையும் தன் வசத்துக்குள் கொண்டு வருகின்றன. ஒவ்வொரு மீன்களாகப் பார்த்துக்கொண்டுச் சென்றோம். எந்த மீனுக்கும் பொறுத்தமற்ற வண்ணக்கலவை இல்லை. சில பாறைகள் போல சிதைந்த உருவமைப்பில் பதுங்கி இருந்தன என்றால் சில அத்தனை உற்சாகமாய் நீந்தி திளைத்தன. மீன்களைப் பார்த்துக்கொண்டிருப்பது ஒரு பேரனுபவம். நான் லங்காவி, கெ.எல்.சி.சி ஆகிய இடங்களில் இவ்வாறான மீன் வளர்ப்பிடங்களைப் பார்த்ததுண்டு. பங்கோர் தீவில் ‘ஸ்னோகலிங்’ மூலம் கடலில் நீந்தும் மீன்களைப் பார்த்துள்ளேன். அவைகளுக்கு கர்வம் அதிகம். கைக்கெட்டும் தூரம்வரை வரும். ஆனால் அவை விருப்பம் இன்றி தொட இயலாது. மீன்களைப் பார்த்து முடிந்ததும் The Shore sky Tower சென்றோம்.
43ஆவது மாடியில் 50 கிலோ மீட்டர் உயரத்தில் முழுவதும் கண்ணாடியால் ஆன கட்டடத்தில் நாங்கள் ஐவரும் நின்றுக்கொண்டிருந்தோம். காற்று அழுத்தியது. நண்பர்களுக்கு கொஞ்சம் பயம் இருந்தது. எனக்கு உயரம் பயம் கொடுப்பதில். ஆனால் உடலை அசைக்கமுடியாத நெருக்கமான இடம் என்னைப் பதற்றமடைய வைக்கும். 11 டிசம்பர் 1993, உலு கிள்ளானிலுள்ள 12 மாடி கொண்ட மூன்று அடுக்குமாடி கட்டிடங்களில் ஒன்றான ‘highland tower’ இடிந்து அதனுள் சிலர் மாட்டிக்கொண்டு இரவு பகலெல்லாம் பூமிக்கு அடியில் கதவைத் தட்டிக்கொண்டிருந்த சம்பவம் இப்போது நினைத்தாலும் என்னை உலுக்கி எடுத்துவிடும். திறந்த வெளி என்னை வசீகரிக்கக் கூடியது. The Shore sky Tower என்னை உற்சாகப்படுத்தியது. நான் அவ்விடத்தை சுற்றி வந்தேன். கட்டடத்தில் தள்ளி சென்று நீண்டிருக்கும் கண்ணாடிப்பாலத்தில் நின்று கீழே பார்த்தபோது மலாக்கா அத்தனை அற்புத நகரமாகத் தெரிந்தது. மலாக்கா நதியின் அழகு இரவு வேறொன்றாகக் காட்சி கொடுத்தது. நாங்கள் எங்களை அறியாமல் குழந்தைகளாகி இருந்தோம்.
Agnes Wong எங்களுக்கு இத்தருணத்தை இலவசமாகவே ஏற்படுத்திக்கொடுத்திருந்தார். மேகங்களுக்கு மிக அருகில் Agnes Wong-க்கு gong xi fa cai கூறினோம். இன்னொரு சமயம் வந்து விரிவாகப் பார்க்கலாம் எனப் புறப்பட்டோம். சரவணதீர்த்தா மறுநாள் இன்னும் எங்களுக்கு ஏற்படுத்தப்போகும் அற்புதம் குறித்து யோசித்தபடி அந்த இரவு கடந்தது. அவரது மறுநாள் விடுமுறையும் எங்களால் நிறைவடையும் என நாங்களே நம்பிக்கொண்டோம். அப்படி நினைத்துக்கொண்டால்தான் அடுத்தவரை தொந்தரவு கொடுப்பது சுகமாக இருக்கும்.
Samkkya Healthcare குறித்து சரவணதீர்த்தா ஏற்கனவே கூறியுள்ளார். அவர் அவ்வளவு எளிதில் எதையும் நம்புபவர் இல்லை என்பதாலும் அவரது பரிந்துரை மிக உறுதியாக இருந்ததாலும் சென்று பார்க்கலாம் எனப்புறப்பட்டோம். மேலும் மசாஜ் செய்வதில் எனக்கு ஈடுபாடு அதிகம். கசகசப்பான வாழ்க்கையில் அது என்னை உற்சாகப்படுத்துகிறது. மன இறுக்கத்தைத் தளர்த்துகிறது. ஆனால் நேர்மையான மசாஜ் நிலையங்களைத் தேடிக்கண்டடைவதே சவாலானது. Samkkya Healthcare பொறுப்பாளர் விஜயலட்சுமி அன்புடன் வரவேற்றார். அவர்கள் செயல்பாடுகள் குறித்து விளக்க ஆரம்பித்தார். அவர்கள் நிலையம் உடல் , மனம் என அனைத்திற்கும் கவனம் செலுத்துவது குறித்து கூறினார். சில கேள்விகளைக் கேட்டு எங்கள் உடல் எத்தகையத் தன்மை கொண்டதாக இருக்கலாம் என யூகித்துக்கூறினார். உணவு கட்டுப்பாடு குறித்தும் மனம் அமைதி குறித்தும் அதன் நிர்வாகி விளக்கினார்.
அந்த நிலையம் நீச்சல் குளத்துடன் இயற்கை சூழ்ந்து உருவாக்கப்பட்டிருந்தது. விரும்பினால் அங்கேயே தங்கி உடலுக்கும் மனதுக்கும் மருத்துவம் பார்க்க ஏற்பாடுகள் இருந்தன. நானும் ஆசிரியர் முருகனும் ஆயுர்வேத உடம்புப்பிடி செய்தோம். கேரளாவில் பயிற்சி பெற்ற அவர்கள் (ஆண்கள்தான்)உடலில் எங்கெங்கே தசை பிடித்துள்ளது என விளக்கியபடி செய்தனர். நான் தகழி சிவசங்கரன்பிள்ளை, வைக்கம் முகம்மது பஷீர் குறித்துப் பேசிக்கொண்டிருந்தேன். கேரளாவில் வாசிப்புப் பழக்கம் அதிகம் என கேள்விப்பட்டதுண்டு. எனவே எனக்கு மசாஜ் செய்தவர் மலையாள இலக்கியவாதிகளை அறிந்துவைத்திருந்தார். இலக்கியம் கலந்த சுவாரசிய மசாஜ் அது. வெளியே வருவதற்குள் தயாஜியும் ஆசிரியர் சரவணனும் நன்கு அறிமுகமாகியிருந்தனர். தயாஜி பலகுரலில் அந்த நிலையத்துக்காக ஒரு அறிவிப்பு செய்தார். எளிய முறையில் ஒரு படப்பிடிப்பு நடந்து முடிந்தது. விஜயலட்சுமி உற்சாகமானவர். தொடர்ந்து உடல் நலம் குறித்து பேசிக்கொண்டிருந்தார். பல காலமாய் உடம்பு பிடி நிலையங்கள் (அதை களமாக வைத்து கதையும் எழுதியுள்ளேன்)செல்லும் என்னால் இந்த நிலையத்தை மிகச்சிறந்தது என உறுதியாகக் கூற முடியும். அதற்குக் காரணம் உடல் மனம் குறித்த அவர்களின் அறிதலே காரணம்.
நிலையத்துக்கு வெளியே அவர்களே தயாரிக்கும் உணவுகளை விற்பனை செய்கிறார்கள். ஆனாலும் கிட்டங்கியில் சென்று சப்பளம் போட்டு சாப்பிட்டுவிட்டு மலாக்காவை விட்டு புறப்பட்டோம். இவ்வருடத்தின் இரண்டாவது பயணம். சரியான நட்பு வட்டம் அமையும்போதுதான் பயணங்கள் கூடுதல் உற்சாகம் அடைகின்றன. திட்டமிடாத பல சுவாரசியங்கள் அதில் கூடிவிடுகின்றன. இப்படியே போனால் இனிது வாழ்க்கை .