கோபாலு…கோ…கோபாலு… (பூலாவ் பெசாரில்)

பூலாவ் பெசார் (Pulau Besar) குறித்த துல்லியமான விளக்கங்களை நான் கூறுவதைவிட அண்ணன் ‘விக்கி’ இன்னும் சிறப்பாகக் கூறுவார். அண்ணன் விக்கி என நான் இங்குச் சொல்வது ‘விக்கிபீடியாவைதான்’. மலாக்காவிலிருந்து (Jeti Anjung Batu)ஓர் இயந்திர படகு சேவையில் பயணம் செய்தால் 15 நிமிடத்தில் பூலாவ் பெசார்.  நுழைந்தவுடனேயே மூடுந்து (Van) சேவை உண்டு. அவற்றுக்குக் கதவுகள் இருக்காது. மேடுபள்ளமான பாதையில் உருளும் அதை நாம்தான் கவனமாகப் பிடித்துக்கொள்ள வேண்டும். நேராக மூடுந்து நம்மை Syarifah Rodziah கல்லறை முன் நிறுத்தும். கொஞ்சம் வேகமாக பிரேக் பிடித்தால் கதவு இல்லாத மூடுந்திலிருந்து குபீர் என வெளியே வந்து விழுந்து சமாதி பக்கத்தில் படுத்துக்கொள்ளும் சிறப்பு வசதி  உண்டு.

கல்லறைகள் ஒவ்வொன்றும் நீளமானவை. 12 அடிக்கு மேல் இருந்த அவற்றைப் பார்க்க முதலில் குழப்பம் ஏற்படும். அங்கிருந்த சிலர் அடக்கம் செய்யப்பட்ட மனிதர்கள் உயரமானவர்கள் என்றார்கள். விடுதியில் பொருள்களை வைத்துவிட்டு மீண்டும் விலாவரியாக விசாரிக்கலாம் என கிழம்பிவிட்டேன். பூலாவ் பெசாரில் விடுதியில்தான் தங்க வேண்டும் என்று இல்லை. இலவசமாகத் தங்க ஏற்பாடுகள் உண்டு. அதே போல இலவசமாக நான்கு வேளையும் உணவு கொடுப்பார்கள். முகாமிட திட்டம் இருந்தாலும் வாடகைக்கு முகாமிடும் சாதனங்கள் கிடைக்கின்றன. ஆனாலும் உடன் சில பொருள்களைக் கொண்டுச் சென்றிருந்ததால் விடுதி எடுப்பதே சிறந்ததெனப்பட்டது. விசாரித்ததில் D’Puteri Kurnia Resort ஒன்றுதான் எல்லாவற்றுக்கும் வசதியான ஒரே தங்கும் விடுதி எனச் சொன்னார்கள். தீவு முழுக்கவே அதிகபட்சம் 50 பேருக்கு மேல் இல்லாத சூழலில் பல அறைகள் காலியாகவே இருந்தன.

அறையை விட்டு வந்தால் கடல். கடல் பக்கம் வசதியாக தடுப்புச் சுவர்  கற்களால் அமைக்கப்பட்டிருந்தன. அவை சமமானவை. அங்குக் கூட முழு இரவையும் கழிக்கலாம். முதல் நாள் இரவு பெரும்பாலும் அந்தக் கல்லில்தான் கழிந்தது. கடலை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அப்படியே கல்லில் படுத்தால் வானம். அன்று பௌர்ணமி. நண்பர்களோடு சென்றிருந்தாலும் பேசுவது குறைந்திருந்தது. இரவு உணவின்போது அங்கு வந்திருந்த சில சுற்றுப்பயணிகளிடம் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. பலவிதமானக் கதைகளைக் கூறினர். அவற்றில் சுவாரசியமானவை சில:

1. சமாதியில் உள்ளவர்கள் உயரமானவர்கள்.

2. Batu Belah எனும் உடைந்த கல்லுக்குள் தங்கியிருக்கும் கறுப்பு உடை அணிந்த சக்தி படைத்த சிறுவன்.

3. எங்குமே இருப்பது போல  இங்கும் ஓர் அனுமார் பாதம்.

4. அருவ மனிதர்களின் கம்பமும் பாழடைந்த தங்கும் விடுதியும்.

நான் எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். தர்க்கம் செய்வதற்கான இடம் அதுவல்ல. இது புனைவு சேகரிப்புக்கான இடம். இங்கே எந்த தர்க்கமும் புனைவுக்கான சாத்தியங்களைக் கெடுத்துவிடும். வேறெந்த புனைவுகளைவிடவும் எளிய மனிதர்களின் பயங்களிலும் அதீத பக்தியிலும் தோன்றும் புனைவுகள் சுவாரசியமானவை. உண்மையில் மனிதன் புனைவுகளைதான் அதிகம் விரும்புகிறான். புனைவுகள் இல்லாமல் அவனால் வாழ முடிவதில்லை. தன்னைச் சுற்றி அவன் தினமும் புனைவுகளை உருவாக்கி உருவாக்கி அதை அவனும் உண்மை என நம்பத் தொடங்குகின்றான். இறுதியில் தான் உருவாக்கும் புனைவை தானே மீறி வர முடியாமல் தவிக்கிறான். அதற்காக வாதாடுகிறான். அதற்காகச் சண்டையிடுகிறான். அதனுடே மறைந்தும் போகிறான். பூலாவ் பெசார் முழுக்க இப்படி கொத்துக்கொத்தாய் புனைவுகள் நம்மை விரட்டிக்கொண்டே இருக்கும்.

நான் சிலவற்றுக்கு விளக்கம் தேட முற்பட்டேன். அதன்படி நீளமான சமாதிகள் சமாதிக்குறியவரின் ஞானத்தின் அடையாளம் என அங்குள்ள வழிக்காட்டி ஒருவர் விளக்கினார். அவர்களின் ஆன்மிக, புனித நூல் அறிவு ஆகியவை அவர்களின் கல்லறை நீளத்தைக் காட்டுவதாகத் தெளிவு படுத்தினார். Batu Belah எனும் குறுகலான கல்பகுதியில் வாழும் சிறுவன் குறித்து கேட்டேன். அச்சிறுவன் அந்தத் தீவில் வாழ்பவனென்றும் அவன் பயணிகளிடம் பணம் பெற அவ்வாறான அதிர்ச்சி தரும் முயற்சிகள் செய்வானென்றும் விளக்கம் கிடைத்தது. சிறிய அளவில் பிளந்திருக்கும் அந்தப் பாறையில் நுழைவது முக்கிய சடங்காக அங்குக் கருதப்படுகிறது. என் உருவம் உள்ளே நுழையாது என்றே நினைத்தேன். எளிதாகவே நுழைந்தது.  அப்படியே  அனுமன் பாதம் உள்ள பகுதிக்குச் சென்றோம். ஏறக்குறைய 2 மணி நேர மலை பயணம்.  பெரிய பாறை. ஏறக்குறைய 18 அல்லது 20 அடி உயரம் இருக்கலாம். அதில் ஏற வேண்டும் என்றால் கயிற்றைப் பிடித்துதான் ஏற வேண்டும். கயிறை விட்டால் கீழே விழுந்து கால் எலும்பு முறியலாம். ஏறினேன். இலக்கிய விவாதங்களைவிட அது ஒன்றும் அவ்வளவு சிரமமாக இல்லை. பாறை உச்சியில் அகலமான பாறையில் சாதாரண உடைப்பு பாத வடிவில் இருந்தது. அதில் கொஞ்சம் நீர் தேங்கியிருந்தது. “எங்கெல்லாம் கல் உடைப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் அனுமன் வந்துவிடுகிறார்” என்றேன் வழிக்காட்டியிடம். அவரும் சிரித்துக்கொண்டே , “நான் சொன்னால் எங்கே கேட்கிறார்கள்” என்றார். கொஞ்ச நேரம் அந்தப் பாறையில் அமர்ந்தேன். கண்ணுக்கெட்டியவரை கடல் சூழ்ந்திருந்தது. முழுக்க முழுக்க இயற்கையோடு இருக்கிறேன். விழுந்தால் கடல். மேலே வானம். வனத்தில் ஈர வாசம். பெரும் பாறை. ஏகாந்தம்.

அதெல்லாம் கொஞ்ச நேரம்தான். மீண்டும் நான் இறங்க வேண்டும் என்ற பயம் வந்தது. ஏறுவதைவிட இறங்குவது சிக்கலானது. எப்படியோ இறங்கி முடித்தேன். இயற்கை நமக்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. ஆனால் அது வாழ்விலிருந்து தப்பிக்க நம்மை அழைப்பதில்லை. காடு மலைகளில் தனித்துச் சுற்றும் மனதல்ல என்னது. முழுக்க முழுக்க சமகால வாழ்வில் உளல்வது மட்டுமே எனக்கு இன்பம். வாழ்வின் அத்தனைச் சவால்களையும் எதிர்க்கொள்வது மட்டுமே எனக்கு உவப்பும் ஒப்பும். ஒரு வாழ்வின் அடர்த்தி போதவில்லை என்றுதானே வாசிப்பின் மூலமும் எழுத்தின் மூலமும் வெவ்வேறு வாழ்வை வாழ்ந்து பார்க்கிறோம். அதன் வெற்றி தோல்விகளில் குதூகளிப்பதுமே பாதிப்படைவதுமே அதன் சுவாரசியம். சிரிப்பது போல அழுவதும் மனித வாழ்வின் பகுதிதானே… ஒன்றை மட்டுமே செய்வேனென்றால் எப்படி? கசப்பறியா நாக்கு ஒரு நாக்கா என்ன? பாறையைப் போலவே வாழ்விலும் ஏறுவதைவிட இறங்குவது சிரமம்தான் போல.

கீழே இறங்கினால் Yunus குகை. அங்கு பல யோகிகள் தவம் செய்ததாகச் சொல்லப்பட்டது. நான் கொஞ்ச நேரம் அந்தக் கல்லில் அமர்ந்து பார்த்தேன். அப்போதும் கடல் மட்டுமே தெரிந்தது. அங்கிருந்து அருவ மனிதர்கள் வாழும் பகுதிக்குச் சென்றோம். மிகப் பிரமாண்டமான தங்கும்விடுதி ஒன்று இருந்தது. மரினா மகாதீர் அவர்களுக்குச் சொந்தமான அந்தத் தங்கும் விடுதி பாழடைந்து கிடந்ததைப் பார்க்க குழப்பமாக இருந்தது. பொதுவாக இந்த விடுதி குறித்தே அதிக அமானுஷ்ய கதைகள் உள்ளன. அதாவது, இது அருவ மனிதர்களின் கம்பத்தில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட விடுதி என்றும் , அனுமதி இல்லாமல் கட்டியதால் இங்கு யாரையும் அந்த அருவ மனிதர்கள் தங்கவிடவில்லை எனவும் அப்படி யாராவது தங்கினால் அவர் அந்த விடுதியிலிருந்து தூக்கி எறியப்படுவார் என்பதும் அங்கு புழக்கத்தில் உள்ள கதையாக இருந்தது.

கொஞ்ச நேரம் அவ்விடத்தைச் சுற்றினோம். ‘உள்ளே நுழைந்தால் சுடப்படுவாய்’ என போர்ட் இருந்தது. ‘இவய்ங்க துப்பாக்கியெல்லாம் நாங்க பார்க்காததா’ என வழிக்காட்டி துணையுடன் நுழைந்தோம். கொஞ்ச நேரம் அங்கே உட்கார்ந்தோம். உள்ளே இருந்து ஒரு பாதுகாவலர் வந்தார். அங்கே நுழைவது தவறு என்றார். பலவருடமாக அவர் அங்குதான் காவல் இருக்கிறாராம். அருவ மனிதர்கள் அவரை ஒன்றும் செய்வதில்லை போல. சந்திரமுகி படத்தில் பாழடைந்த பங்களாவில் ரொம்ப வருடமாகத் தனியாக சாயம் அடித்துக்கொண்டிருந்த கோபாலின் ஞாபகம் வந்தது. அதனால் அந்த மலாய்க்காரருக்கும் ‘கோபால்’ என தற்காலிகமாகப் பெயரிட்டு அனுமதி இன்றி உள்ளே நுழைந்ததற்காக ‘சரிகட்டி’ அனுப்பினோம்.

விடுதியின் உண்மை கதை அதன் பிறகுதான் தெரியவந்தது. பொதுவாக இதுபோன்ற விடுதிகள் ஆங்கிலேயர்களை நம்பியே நடத்தப்படுகிறது.  ஆங்கிலேயர்களை தூய்மையான கடல் சூழ்ந்த இந்தத் தீவு நிச்சயம் கவரும். ஆனால், ஆங்கிலேயர்கள் வந்தால்   விடுதியில் மதுபானம் அவசியம். முஸ்லிம்களின் புனித இடமாகக் கருதப்படும் இத்தீவில்  மதுபானத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆக, உள்ளூர் வாசிகள் பெரிதும் வராத, வந்தாலும் இலவச தங்கும் சூழல் கொண்டுள்ள தீவில்  ஆங்கிலேயார்களால் கிடைக்கும் வருமானம் மட்டுமே சாத்தியம். ஆங்கிலேயர்கள் வருகை சாத்தியப்படாத விடுதியை நடத்துவது பெரிய நட்டத்தைக் கொடுக்கலாம். எனவே இவ்விடுதி பயன்பாட்டில் இல்லை என்பது கொஞ்சம் ஆராய்ந்த போது தெரியவந்தது.

பெரும்பாலும் மனித புழக்கம் இல்லாத கடல் பகுதியில் குளித்தோம். பச்சை வண்ணத்தில் நீர். தொலைவில் விடுதி கம்பீரமாகத் தெரிந்தது. நிச்சயம் அது இலக்கியச் சந்திப்பு நடத்த நல்ல இடம்தான். அங்கிருந்து சில மீட்டர் தூரத்தில் கோல்ப் திடல் இருந்தது. பயன்படுத்தப்படாத திடல். அங்கு யாரோ ஒருவர் கோல்ப் அடிக்க பந்து மீண்டும் பறந்து வந்து அவரையே தாக்கியதாக ஒரு கதை சொன்னார்கள். இப்படி நிறைய கதைகள் ஆங்காங்கு கேட்டுக்கொண்டே இருந்தன. இரவில் சமாதிகள் இருக்கும் பகுதிக்குச் சென்றோம். அங்குச் செல்வதென்றால் முழுகால் சட்டை அல்லது லுங்கி அணியலாம் என்றார்கள். ஒரு லுங்கி வாங்கி அணிந்தவுடன் ‘ஒத்தக்கண்ணால’ எனும் பாடல் மனதில் ஓடத்தொடங்கிவிட்டது. லுங்கியும் வாய்க்கு வந்துவிட்டது.

பூலாவ் பெசாரில் அற்புதமே சமாதிகள் சங்கமித்திருக்கும் இடம்தான். அற்புதமான சூழல். மணிக்கணக்கில் அமரலாம். ஒன்றும் செய்யாமல் பேசாமல் மௌனித்திருக்கலாம். நான் எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தேன் என நினைவில்லை. ஆனால் என்னால் அவ்வாறு அமர முடியும் என்பது எனக்கே வியப்பாக இருந்தது. உடலில் ஒரு இடத்திலும் துளி வலியில்லை. இத்தனைக்கும் மூன்று மணி நேர மலைப் பிரயாணம் வேறு. இடத்தை விட்டு அகலவும் மனது வரவில்லை. கடல் அலையில் ஓசை ஒரு பக்கமும் ஓசையுடன் முகத்தில் தவழும் காற்று ஒரு பக்கமும் என மனதை எங்கும் அசையவிடாமல் செய்தது. இந்தக் கல்லறைகளில் உள்ளவர்கள் சூஃபி குருமார்கள் என வாசித்த நினைவு உண்டு. ஆனால் அது குறித்து யாரும் அங்கு பேசவில்லை; விளக்கவும் இல்லை. நான் ஓஷோ வழியே ஓரளவு சூஃபி மார்க்கத்தை அறிய முயன்றுள்ளேன். ஓஷோ சொல்வார், ‘ஒரு சூஃபி எந்த மதத்தை சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம். விழித்துக்கொண்ட எந்த மனிதனும் சூஃபிதான்.’

பூலாவ் பெசார் நம் நாட்டில் பெரிதும் கண்டுக்கொள்ளப்படாமல் இருக்க வேறொரு காரணமும் உண்டு. பொதுவாக இஸ்லாம் பல பிரிவுகளால் ஆனது.  சுனி இஸ்லாம் (Suni Islam)  இஸ்லாமிய பிரிவுகளில் ஒரு முக்கியமான உட்பிரிவாகும். இதுவே மிகப் பெரிய பிரிவும் ஆகும். சுனி என்ற வார்த்தை சுன்னா என்ற அரபு வார்த்தையில் இருந்து வந்தது. இதற்கு முகமது நபியின் வழிமுறை என்பது அர்த்தம். மலேசியாவில் சுனி பிரிவுக்கே அனுமதி. ஷியா இஸ்லாம் (Shi’a) இஸ்லாம் மதத்தின் முக்கியமான உட்பிரிவு. இது இஸ்லாமிய மதப்பிரிவுகளுள் சுனி இஸ்லாமுக்கு அடுத்தபடியாக அதிகமானோர் பின்பற்றும் பிரிவாகும். ஷியா என்ற சொல் “அலியை பின்பற்றுவோர்” என்ற பொருள் படும் என்கின்றனர். ஷியாக்கள் முகமது நபியின் மருமகன்களில் ஒருவரான அலியே அவரின் உண்மையான வாரிசு என்று நம்புகிறார்கள். ஷியாவைப் பின்பற்ற மலேசியாவில் தடையுண்டு. பூலாவ் பெசார் ஷியாக்களுடைய தீவு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

எவ்வித பெரிய தத்துவ பின்புலமும் இல்லாத மனிதர்களுக்கு பூலாவ் பெசார் மகத்தானதாகத் தெரியும் காரணம் என்னவென்று யோசித்துக்கொண்டிருந்தேன். தீவில் பல பகுதிகளில் உலாவியபோது அதன் பதில் கிடைத்தது. தீவு முழுக்கவும் விரவி கிடக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட சமாதிகளைப் பார்க்கும் மனம் முதலில் கோபத்தையும் வெறுப்பையும் தணிக்கிறது. ‘நமக்கும் மரணம் நிகழும்’ என்ற நினைவூட்டல் மட்டுமே மனதை சமநிலைப் படுத்தக்கூடியது. சமாதிகள் மரணத்தை நினைவூட்டுகின்றன. மரணம் வாழ்க்கையை நினைவூட்டுகிறது என நினைக்கிறேன்.

 

(Visited 260 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *