நவரசங்களில் அருவருப்பும் ஒரு ரசம்தான் (பீபல்சம்)

நீங்கள் என்ன சொன்னாலும் என்னால் கதையை அருவருப்பில்லாமல் வாசிக்க முடியவில்லை. எத்தனையோ நல்லவிசயம் இருக்க அருவருப்பு எதற்கு? திருக்குறளில் இல்லாத ஞானமா மற்ற நாட்டு தத்துவ ஆசிரியர்கள் சொல்லிவிட்டார்கள்? தமிழில் இல்லாததா? தொல்காப்பியத்தில் இல்லாததா? நீங்கள் எதையும் எழுதலாம் . ஆனால் அதை பிரசுரிக்கக் கட்டுப்பாடுகள் உண்டு என மறக்காதே. எழுத்தாளன் வாசகனுக்கு வழிகாட்டனும் இப்படி புதைகுழி காட்டக்கூடாது. கவனம்!

நண்பரே, உங்களின் பின்புலம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் நீங்களே உங்களைச் சில கேள்விகள் கேட்டுக்கொள்ளுங்கள். உங்களின் வாசிப்பு எங்கிருந்து தொடங்கியது? பள்ளி வாழ்வில் நீங்கள் இலக்கியம் வாசித்ததைத் தவிர வேறெங்கேனும் வாசித்துள்ளீர்களா? அதற்காக மெனக்கெட்டுள்ளீர்களா? ஆம்! என்றால் உங்களிடம் இந்தக் கேள்வி வந்திருக்க வாய்ப்பே இல்லை. ‘இல்லை’ என்பதே உண்மை பதிலாக இருக்கும். முதலில் உங்கள் அடிப்படையான கேள்விக்கு ஒரு பதில் சொல்லிவிடுகிறேன். உங்களுக்கு சிறுகதை அருவருப்பாக இருந்தது என்றீர்கள். நவ ரசங்களில் அருவருப்பும் ஒரு ரசம்தான். எப்படி… பரதத்தில் அதை நீக்கிவிடுவோமா?

உங்களைப் போலவே நானும் பள்ளியில்தான் இலக்கிய வாசிப்பைத் தொடங்கினேன். அவை அனைத்தும் அறம் சார்ந்தவை. வாழ்வை கேள்வி கேட்க விடாமல் ‘இப்படி நட அப்படிப் பழகு’ என ஆலோசனைச் சொல்லக்கூடியவை. இன்னும் சொல்லப்போனால் அவை மிக கவனத்துடன் தேர்வு செய்யப்பட்டு நமக்கு தரப்படுகின்றன. ஏன் அவை தேர்வு செய்யப்பட வேண்டும் என நாம் யோசிக்க வேண்டியதுள்ளது. மாணவர்களுக்கு நாம் முதலில் கேள்வி கேட்கப் பழகக் கூடாது என்பதே அடிப்படை எண்ணமாக இருக்கிறது. இது ஒருவகை முதலாளியச் சிந்தனை. ஆக! எந்த இலக்கியப் பிரதியும் கட்டுப்படுத்தப்பட்டு பகிரப்படுகிறது.

ஓர் உதாரணத்தைச் சொல்லலாம். திருக்குறளில் காமத்துப்பால் ஏன் மாணவர்களுக்குப் போதிக்கப்படுவதில்லை. ஆரம்ப பள்ளி மாணவர்கள் இருக்கட்டும். இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கும் இவை கண்ணில் காட்டப்படுகிறதா எனத் தெரியவில்லை. காமத்துப்பாலை வாசித்தால் மாணவர்கள் எல்லாம் கெட்டொழிந்துவிடுவார்களா? அப்படியானால் அதைவிட விளக்கமாக நமது தமிழ்ப்படங்கள் சொல்லிக்கொடுக்கின்றனவே அதை ஏன் நம்மால் மாணவர்கள் கண்ணிலிருந்து மறைக்க முடியவில்லை. சரி, கோயிலுக்குச் சென்றாலும் சிலைகள் அறைகுறை நிலையில் உள்ளனவே… அதை ஏன் நாம் மறைக்க முன் வரவில்லை.

உங்களுக்கு ஒரு பதில் இருக்கலாம். ‘சிலையை பக்தியோடு பார்க்க மாணவனிடம் பழகியிருக்கிறோம். அதனால் அதில் காமம் வராது’ எனலாம். சரி !அப்படியென்றால் இலக்கியத்தை ஏன் இலக்கியமாகப் பார்க்கச் சொல்லிக்கொடுக்கவில்லை என்று நான் அடுத்தக் கேள்வியைக் கேட்பேன். உடனே இலக்கியம் என்பது மனித மனதை மாற்றும் எனக் கோபப்படுவீர்கள் இல்லையா? சரி அப்படியானால், சினிமாவும் சிலையும் மனித மனதில் காமத்தைத் தூண்டாது என யார் உங்களுக்குச் சொன்னது? அதற்கான திட்டவட்டமான உளவியல் ஆய்வுகள் உண்டா? உங்கள் பதில் “நான் நல்லக் குடும்பத்தில் பிறந்தவன் . எனக்கு அப்படி இல்லை.” எனலாம். சரி ! உலகில் உள்ள எல்லோரும் அப்படித்தான் என உங்களால் கூற முடியுமா? ஒரு மனநிலை பிறழ்ந்தவன் நீங்கள் சிந்திப்பது போல சிந்திப்பான் எனக்கூற முடியுமா? அல்லது குறிப்பிட்ட வயதில் காம இச்சைகளால் தூண்டப்பட்டவன் நீங்கள் சிந்திப்பது போல சிந்திப்பான் எனக்கூற முடியுமா? மனித சிந்தனைகள் அனைத்தும் ஒன்றாவதில்லை என்பதை உங்களால் ஒப்புக்கொள்ள முடியும் என நினைக்கிறேன். அப்படியிருக்க வாழ்வைச் சொல்லும் எழுத்துப்பிரதிகள் மட்டும் எப்படி ஒழுக்கம் சார்ந்தே இருக்க வேண்டும் என எண்ணுகிறீர்கள்?

இந்த வாழ்க்கை ஒழுக்கமானதாகவா இருக்கிறது? உங்களால் நகரங்களில் வெகு சுதந்திரமாக நடமாட முடிகிறதா? வீட்டைப் பூட்டாமல் வெளியேற முடிகிறதா? உங்களுக்குக் குழந்தை இருந்தால் அவன் தன்னந்தனியாக அறையில் இணையம் பயன்படுத்துவதை குறுகுறுக்காத மனதுடன் ஏற்றுக்கொள்ள முடிகிறதா? வாழ்க்கையின் இரக்கமற்ற தன்மையால் நீங்கள் துவண்டதே இல்லையா? இந்த வாழ்க்கை நீங்களும் நானும் நினைப்பது போல இல்லை. ஆனால் வாழ்வை சொல்லும் இலக்கியம் மட்டும் சமூக மதிப்பீட்டுக்கு ஏற்ப இருக்க வேண்டுமென்றால் எப்படி ? நாம் பள்ளியிலும் கல்லூரியிலும் இலக்கியத்தில் காணத ஒரு வாழ்வை அனுபவிக்கும் போது அந்தத் தவறை அறிய முயலும் இலக்கியம் உருவாவதை எப்படித் தவறு என்கிறீர்கள்?

 

என்னோடு வாதிடும் நண்பர்களைப் பாருங்கள். எந்த இடத்திலாவது ஒரு இலக்கியப் பிரதி குறித்துக் கூறியுள்ளார்களா? செம்பகவள்ளி என்பவர் தனது கட்டுரையில் இப்படிக் கூறியுள்ளார். /நாகரீகமாக வாழ வேண்டும் என்பதற்காகதான் வள்ளுவர்  திருக்குறளை 5000 ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்து விட்டார். /. உங்களுக்குச் சிரிப்பு வரவில்லையா? வள்ளுவர் 5000 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறள் எழுதினாராம். ஆறாம் ஆண்டு மாணவிக்குத் தெரிந்து சொல்லும் மிக எளிய விடயம் கூட சரிபார்த்துச் சொல்லாத இவர்களைப் போன்றவர்கள்தான் தங்களை எழுத்தாளர்கள் என்றால் நீங்களும் அதை ஆதரிப்பீர்கள் என்றால் நான் சொல்ல என்ன உள்ளது? அதிக பட்சம் எல்லோரும் அறநெறி நூல்களைக் குறிப்பிடுகின்றனர். அவை மட்டும் இவ்வுலகிற்கு போதுமெனில், ஏன் இத்தனை இலக்கிய முயற்சிகள்? ஏன் இத்தனை நூல்கள்? ஏன் புதிய புதிய நாவல்கள்? அதை விடுங்கள்…பத்திரிகைகள் கூட ஒவ்வொரு நாளும் திருக்குறளையும் ஆத்திச்சூடியையும் மட்டுமே நிரப்பி வெளியிடலாமே. ஏன் அதை யாரும் செய்வதில்லை? அல்லது மு.வ போன்றோரின் அறக்கருத்துகளை மட்டுமே நிரப்பி வெளியிடலாமே. உலகில் இனி புதிதாகச் சொல்ல ஒரு கருத்தும் ஒரு தத்துவமும் இல்லை என்றால் புதிய இலக்கிய முயற்சிகளும் தத்துவங்களும் தேவையே இல்லையே. வாழ்க்கை சூழல் மாறிக்கொண்டே இருக்கிறது தோழர். நேற்றைய வாழ்க்கை இன்றில்லை. நேற்றைய சவால்கள் இன்றில்லை. புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் முதலாம் ஆண்டில் படித்துக்கொண்டு ஆறாம் ஆண்டு பாடம் தவறாக உள்ளது என்றால் நான் என்ன சொல்லி உங்களிடம் விளக்குவது?

“இலக்கியம் வாழ்க்கையை ஆராய்ந்து அதன் சாரம் நோக்கிச் செல்லக்கூடியது. ஆகவே வாழ்க்கைக்குள் நிகழக்கூடிய அனைத்துமே அதற்கு முக்கியமானதுதான். அது ஆராயக்கூடாத விஷயம் என எதுவுமே இல்லை. வாழ்க்கையின் குரூரமும் அபத்தமும் அசிங்கமும் இலக்கியத்தின் ஆழ்ந்த கவனத்துக்குரியனவாக எப்போதுமே இருந்து வந்துள்ளன.” என ஜெயமோகன் சொல்கிறார். எத்தனை விதமான மனிதர்கள் இருக்கிறார்களோ அத்தனை விதமான இலக்கியங்கள் வந்தே தீரும். அதை நாம் எல்லோருமே விமர்சிக்கலாம். அதற்கான எல்லா உரிமையும் உண்டு. ஆனால், எழுத்தாளனை இதுதான் எழுத வேண்டும் எனக்கூற நம் யாருக்கு உரிமை உள்ளது? ஆனால், ஒரு காலத்தில் புறக்கணிக்கப்படும் இலக்கியம் இன்னொரு காலத்தில் வாசகர்களால் கொண்டாடப்படுவதும் ; கொண்டாடப்படும் இலக்கியம் புறக்கணிக்கப்படுவதும் இயல்பு. காட்டில் தனது இடத்தை பிடிவாதமாக திடப்படுத்தும் மரம் போல இலக்கியப் பிரதிகள் ஒன்றோடொன்று முட்டி மோதி வளர்கின்றன. அதை வளரவேண்டாம் எனச் சொல்ல நாம் யார்?

எழுதுவதற்குச் சுதந்திரம் உண்டு பொதுபார்வைக்குக் கொண்டுச் செல்வதில் கட்டுப்பாடுகள் உள்ளன என்கிறீர்கள். சரி அப்படியானால் முதலில் நாட்டில் உள்ள நூலகங்களை போய் முதலில் எரியுங்கள். புத்தகக் கடைகளைத் தடை செய்யுங்கள். அதில் பெரும்பாலான நூல்கள் காமத்தையும் , வன்முறையையும் மிகத்துள்ளியமாக ஒப்புவிக்கின்றன. உடனே நீங்கள் அறிவாளித்தனமாக அவை ஆங்கிலத்தில் உள்ளன தமிழில் இல்லையே என்பீர்கள். சரி அப்படியானால் தமிழ்ப்பள்ளிக்குப் போகாமல் ஆங்கிலம் மட்டுமே வாசிக்கும் தமிழ் மாணவர்கள் வாசித்தால் ஏற்றுக்கொள்வீர்களா? உங்கள் கூற்றுப்படி தமிழ் மட்டுமே வாசிக்கும் ஒருவன் கண்ணில்  தமிழ்க் கதைகளில் காமம் கலக்கக்கூடாது என்கிறீர்களா? உண்மையில் எனக்குப் புரியவில்லை. அல்லது நீங்கள் இப்படிச் சொல்லலாம்… ‘ஒரு இணையப் பத்திரிகையில் இதை வெளியிடவேண்டாம். நூல்களில் இருப்பது பரவாயில்லை’ எனலாம். சரி , அப்படியானால் தமிழில் இதைவிட மிகத்துள்ளியமாக காமத்தையும் வன்முறையயும் சொல்லும் கதைகள் இணைய இதழ்களில் வாசிக்கக் கிடைக்கின்றன. அவை இலக்கியமாகவும் கருதப்படுகின்றன. சில மேலை நாட்டு இலக்கியங்கள் தமிழில் மொழிப்பெயர்த்தும் கிடைக்கிறது. இப்போது நீங்கள் என்ன சொல்வீர்கள் தெரியுமா… மற்ற நாட்டில் இணையத்தளங்கள் பரவாயில்லை… மலேசியாவில் வரும் இணைய இதழில் இப்படி வரக்கூடாது என்பீர்கள்.

ஆக, உங்கள் குற்றச்சாட்டை இப்படிச் சுருக்கமாகக் கூறலாம், ‘மலேசியாவில் மட்டும் தயாராகும் இணைய இதழில் இருண்மை இலக்கியங்கள் வெளிவரக்கூடாது. காரணம் அதை இந்த நாட்டில் தமிழ்ப்பள்ளியில் படித்து தமிழ் வாசிப்பவர்கள் வாசித்துவிடுவார்கள். வேறு நாட்டில் தயாராகி வெளிவரும் இணைய இதழிழோ… நூலிலோ இருண்மை இலக்கியத்தை தமிழ்வாசிப்பாளர்களோ அல்லது ஆங்கில வாசகர்களோ வாசித்தால் பிரச்னை இல்லை’ இதுதான் உங்கள் குற்றச்சாட்டென்றால் ஒருதரம் உங்கள் அறிவின் விசாலத்தை நீங்களே யோசித்துப் பாருங்கள்.

ஒருவேளை நான் வல்லினத்தை தமிழகத்திலிருந்து ஆள்வைத்து நடத்தினால் உங்களுக்கு இந்தப் பிரச்னை இருக்காது இல்லையா? நீங்கள் குதிக்க மாட்டீர்கள். காரணம் இப்போது அது வேற்று நாட்டு வலைத்தளம். அதனால் உங்களுக்குச் சிக்கல் இல்லை. அதாவது ஒரே கணினி. ஒரே நபர் . உருவாகும் நாடு வேறாக இருந்தால் சிக்கல் இல்லை. அறிவு கொழுந்து.

எழுத்தாளனும் வாசகனும் ஒரு சந்தர்ப்பத்தில் உரையாடுபவர்கள். உரையாடலில் விருப்பம் இல்லாதவர்கள் இடத்தை விட்டு அகலலாம். ஆனால், பழமைவாதிகள் இலக்கியவாதிகளை வாசகனை கைப்பிடித்து அழைத்துச்செல்லும் வழிக்காட்டியாக எண்ணுவது ஆச்சரியமில்லாதது. ஒருவேளை வாசகனை தவறான பாதைக்கு எழுத்தாளன் அழைத்துச் சென்றுவிடுவானோ என பயப்படுகிறார்கள். அது ஒரு உரையாடலே என நினைப்பவர்களுக்கு இந்தப் பதற்றம் இருப்பதில்லை. அவனே இலக்கியத்தை புரிந்தவன்.

இன்றையச் சிக்கல் என்னவென்றால் நாங்கள் உரையாடுவது அடிப்படை இலக்கியம் கூட தெரியாத ஒரு கூட்டத்திடம். காவல் நிலையத்திலும் இலக்கியப் புரிதல் இல்லாத ஒரு காவலனிடம்தான் இலக்கியம் குறித்து விளக்க முயன்று அமைதியாகிவிட்டேன். அது நடவாத காரியம். எங்குமே தட்டையான உணர்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவமுண்டு. நான்கு நம்பர் பார்க்க மட்டுமே நாளிதழ் வாங்கும் ஒருவரிடம், அவர் நாளிதழ் வாங்கும் ஒரே காரணத்துக்காக நான் இலக்கியம் பற்றி விளக்கினால் என்ன நடக்குமோ அதுதான் இங்கு நடக்கிறது.

Sigmund Freud குறித்து பேசியதற்கு நீங்கள் வள்ளுவரைக்கேள் என்கிறீர்கள். நல்லது ஆனால், ஆங்கிலேயன் கொடுத்த மருத்துவம், விஞ்ஞானம் எல்லாவற்றையும் அனுபவிக்கும் நீங்கள் வள்ளுவரையோ அல்லது நமது சங்கத்தமிழர் உணவுகளையோ உண்ணலாமே. பாரம்பரிய மருத்துவம் மட்டும் பார்க்கலாம். Oedipal Complex தமிழில் , நீங்கள் சொல்லும் தத்துவ ஞானிகள் யாரேனும் எழுதியிருந்தால் காட்டுங்கள் . நானும் வாசிக்கிறேன். அல்லது தமிழர்கள் மத்தியில் இதுபோன்ற சிக்கல்கள் இல்லை என நிறுவ முயல்கிறீர்களா? அதில் நீங்கள் தோல்வி அடைவீர்கள். காரணம் நமது பத்திரிகைகளே அதற்கு சான்றுகளைத் தருகின்றன. ஆக, தமிழ்ச் சமூகத்தில் இருக்கும் ஒரு சிக்கலுக்கு தமிழில் அதுகுறித்த மனோவியல் நூல்கள் இல்லாத பட்சத்தில் (என் கண்ணில் படாதவரை. இருந்தால் காட்டுங்கள். தாழ்மையுடன் வாங்கி வாசிக்கிறேன்) Sigmund Freud குறித்து வாசிப்பதும் அதன் அடிப்படையில் எழுதுவதும் தவறென்று நினைக்கிறீர்களா? அப்படித்தான் நினைப்பேன் என்றால் நான் சொல்ல ஒன்றும் இல்லை.

இந்த நேரத்தில் (அதிகாலை 1.30) இலக்கியம் குறித்த உங்கள் அறியாமையை ஓரளவேனும் களைய நினைத்தே நான் இதை எழுதுகிறேன். எழுத்துப்பிழைகள் இருக்கலாம். மன்னிக்கவும். கடும் உறக்கத்தில் இதை எழுதுகிறேன். முழுமையாகச் சிந்திக்க முடியவில்லை. ஆனால், இலக்கியம் குறித்த தெளிவை பெருவதும் தருவதும் மட்டுமே என் வாழ்வின் மிக முக்கியப்பணியாகக் கருதுவதால் மட்டுமே நிறைவடையமுடிகிறது. நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க உங்கள் அடையாளத்தை வெளியிடவில்லை. நன்றி

(Visited 137 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *