உங்கள் விளக்கத்துக்கு நன்றி நவீன். ஓரளவு தெளிவு பெற்றேன். ஆனாலும் சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. என்ன செய்யலாம் என இருக்கிறீர்கள். தனிப்பட்ட தாக்குதல்களும் தொடர்கின்றனவே. நாளிதல்களிலும். எதிரிகள் வண்டவாளங்களை நான் உங்களுக்குப் பட்டியல் இட்டிருந்தேன். தாராளமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். கலாசாரம் குறித்து பேசுபவர்களின் படங்களைப் பார்த்தீர்களா?
santhalsanthal@gmail.com
தோழர், (மன்னிக்கவும் உங்கள் கடிதத்தை எடிட் செய்து விட்டேன்)’எதிரி’ என நான் அவர்களைக் கருதவில்லை. அதாவது நீங்கள் சொல்லும் அர்த்தத்தில் கருதவில்லை. மாற்று கருத்து உள்ளவர்கள் எதிரியா என்ன? எதிர்த்தரப்பினர் என கொள்ளலாம். அந்த அர்த்தத்தில் ‘எதிரி’ என அர்த்தம் கொள்ளலாம். ஒருவகையில் எதிர்க்கருத்துள்ளவர்களால் மட்டுமே நாம் உற்சாகமாகச் செயல்ப்படுவதும் சாத்தியமாகியுள்ளது. சட்டென யூதர்களின் நிலை நினைவுக்கு வருகிறது.
ஆனால், நமக்கான பொது எதிரிகள் உண்டு. அவர்களில் முக்கியமானவர்கள் ‘தமிழ் தமிழ்’ எனப் பேசிக்கொண்டு குழந்தைகளைத் தமிழ்ப்பள்ளிக்குப் போடாதவர்கள், தமிழ் ஆசிரியராக இருந்துகொண்டு தமிழ்ப்பள்ளிக்குத் தம் பிள்ளைகளை அனுப்பாதவர்கள், சங்கத்தின் உறுப்பினர் பட்டியலை அரசிடம் காட்டி பணம் பெற்றுக்கொண்டு அயலக தமிழ் இலக்கிய வாதிகளுக்கு சம்பாதித்துக்கொடுப்பவர்கள், ஒரு சமுதாயப் போராட்டத்தை அதிகாரத்துக்குத் தாரை வார்ப்பவர்கள்… இப்படி எதிர்கள் பட்டியல் நீளும். உற்று கவனித்தால் வெளியில் கோபப்படும் அனைவருமே கோபப் படுகின்றனரே தவிர நாளை மொழிக்கும் இனத்துக்கும் பிரச்னை என வந்துவிட்டால் போராட நிற்கப்போவதும் இவர்கள்தான். எனவே இவர்களின் எதிர்நிலை, இலக்கியம் எனும் புரிதல் குறித்து மட்டுமே உள்ளது.
இலக்கியம் என்பது அடிப்படை விழுமியங்களை கேள்வி கேட்கக்கூடாது என ஒரு தரப்பும், படைப்பிலக்கியம் எதையும் கேள்வி கேட்கும் சுதந்திரம் படைத்தது என ஒருதரப்பும் வாதிட்டுக்கொண்டிருக்கிறது. இது சமுதாயத்தில் கலை என்ற ஒரு பகுதியில் நடக்கும் ஒரு விவாதம். இந்த விவாதம் தொடங்கியதிலிருந்தே எதிரணியினர் சுயதன்மைகளின் பலவீனம் குறித்து வரலாறுகளே அதிகம் மின்னஞ்சலில் வந்து சேர்ந்தன. கல்லூரி காலங்களின் செய்த தவறுகள், பழக்கங்கள், காதல்- கலவி தொடர்பான கதைகள், கல்வி நிலை, என அவை தொடர்ந்தன. என் தரப்பை நியாயப்படுத்த அடுத்தவர்களின் தனிபட்ட வாழ்வை விமர்சிப்பதை நான் ஒருபோதுமே அனுமதிப்பது கிடையாது. இதை எனது விவாதம் முழுதுமே நீங்கள் பார்த்திருக்கலாம்.
ஒன்றாவது, எனது புளோக்கிலோ தனிப்பட்ட மின்னஞ்சலிலோ நியாயமான கேள்வி எழுப்பாமல் , அவரவர் முக நூலில் எழுதும் எதற்கும் நான் இன்றுவரை பதிலளிக்கவில்லை. அது என் வேலை இல்லை. இரண்டாவது, ஒரு கேள்விக்கு பதில் எழுதியப்பின் அதுகுறித்து மீண்டும் மீண்டும் எழும் எந்தக் கேள்விக்கும் நான் பதில் சொல்வதில்லை. இதே வேலையை சில நாளிதழ்களும் செய்கின்றன. எனது முகநூல் எழுத்தைக் கூட ஏதோ இலக்கியப் பிரதிபோல பிரசுரித்துள்ளார்கள். அவை ஒன்றுக்கும் நாம் பதில் சொல்ல வேண்டியதில்லை. தனிப்பட்ட முறையில் கிண்டல் செய்கிறார்கள் எனவும் நண்பர்கள் சொன்னார்கள், சில கண்ணிலும் பட்டன. என்ன செய்ய முடியும், கருத்து ரீதியாக வாதாட முடியாதவர்களால் அதைதான் செய்ய முடியும். நாம் அதையெல்லாம் கருத்தில் கொண்டால் வாசிப்புக்கும் எழுத்துக்கும் கேடாகிவிடும்.
ஆனால், அதே சமயத்தில் வல்லினம் அகப்பக்கமும் ஹேக் செய்யப்பட்டுள்ளது. (கவலை வேண்டாம். ஏற்கனவே பலமுறை அவ்வாறு செய்யப்பட்டு மீட்கப்பட்டுள்ளது)வல்லினமோ, அதன் சிறுகதையோ ஜடப்பொருள். அதை அழிக்கலாம். சிந்தனை என்பது ஜடப்பொருள் அல்ல. அது தீ போல. பரவிக்கொண்டே இருக்கும். அந்தத் தீயே உங்களையும் தொற்றியுள்ளது. இன்னும் பரவும். ஒரு படைப்பிலக்கியத்தின் வெற்றி அதுதானே.