இறுதியாக -தாய்மை என்பது புனிதமா? (கடிதமும் விளக்கமும்) – 5

வணக்கம் ஐயா. தங்களின் விரிவான நான்கு பதில்களையும் படித்தேன். மிகுந்த விரிவான பதில்கள். எனக்கு தெளிவு ஏற்பட்டுள்ளது. பொறுமையாக விளக்கம் கொடுத்ததற்கு மிக்க நன்றி. ஆனால், உங்களையும் வல்லினத்தையும் தயாஜியையும் திட்டிக்கொண்டிருப்பவர்களை என்ன செய்ய முடியும்? என் அண்ணன் வழக்கறிஞர் என்பதால் அதில் உள்ள சில வரிகளை வைத்து வழக்குப் போடமுடியும் என்றார். இன்னும் ஒரு விளக்கம் மட்டும் கொடுத்தால் போதும். இந்தக் கதையைப் படிக்கும் போது எளிய வாசகம் குழம்ப மாட்டானா? அவன் இதை பின்பற்ற மாட்டானா? அப்புறம் கடவுள் என்பது எப்படி இருந்தாலும் கடவுள்தானே. அதை கடவுளாக பார்க்கிறோம். அதனால் அதில் ஆபாசம் இருக்குமா? இது என் தோழியின் கேள்வி. தங்கள் அக்கறைக்கு நன்றி. இனி தொடர்ந்து வல்லினத்தை வாசிப்பேன்.
durga6776@gmail.com


தோழர், எளிய வாசகன் என்பதற்கான எல்லை எது? ஒரு விஞ்ஞானிக்கு ஒரு ஆசிரியர் எளியவர். ஓர் ஆசிரியருக்கு ஒரு ஐந்தாம் படிவ மாணவன் எளியவன். ஒரு ஐந்தாம் படிவ மாணவனுக்கு கல்வி அறிவில்லாதவன் எளியவன் இல்லையா. அப்படியிருக்க நாம் எளிய வாசகன் எனச் சொல்வது யாரை? இருவகையான வாசகர்கள் மட்டுமே உண்டு. ஒன்று, தீவிர வாசகர். இவர்கள் சவால் மிக்க படைப்புகளை தொடர்ந்து தேடி வாசித்து புதிய அனுபவங்களைப் பெருவர். ஒரு படைப்பை பல்வேறு நிலைகளில் ஆராய்வர். மற்றொரு பிரிவினர் பொழுதுபோக்குக்காக வாசிப்பவர்கள். இவர்களுக்கு பொழுது ஓடினால் போதும். இது போன்றவர்கள் பெரும்பாலும் அறிவுக்கு வேலை தேவைப்படாதவற்றைத் தேடி வாசிப்பர்.

நீங்கள் குறிப்பிடுவது இந்த இரண்டாம் நிலையினரைதான். இந்தக் கேள்வியை நாம் குறைந்தபட்சம் வள்ளுவரிலிருந்து தொடங்கலாம்.

– “ஏன் வள்ளுவரே உங்கள் செய்யுள் முறை வாசிப்புக்குப் புரியவில்லையே ஏன் எளிய வாசகனுக்கு ஏற்றது போல எழுதவில்லை?” அல்லது ஆண்டாளிலிடமிருந்து தொடங்கலாமா?

-“ஏன் ஆண்டாளே… ஒரு ஞானியாகக் கருதப்படும் நீ இப்படிக் காமம் சொட்டச் சொட்ட பாடல் பாடலாமா?” அடுத்து ஔவையிடம் கேட்கலாமா?

-“ஔவயே …கள்ளின் சுவையைப் பற்றி எழுதியுள்ளாயே… சாமானிய மக்கள் இதனால் கள் அருந்த ஆவல் கொள்ள மாட்டாரகளா?” முடிந்தால் கடவுளாக வணங்கப்படும் கண்ணனிடம் கேட்கலாம்.

– “கண்ணனே…கோபியர்களை இப்படி நிர்வாணமாக ஆக்கி ரசிக்கிறாயே , இதனால் சாமான்ய மக்களும் இது போல செய்ய மாட்டார்களா?” சரி சராசரி எளிய மனிதர்களான சிற்பிகளிடமே கேட்போமே…

– “சிற்பிகளே… குழந்தைகள் வரும் கோயிலில் சிலையை நிர்வாணமாகச் செதுக்குகிறீர்களே… சாமன்ய மக்களுக்குக் காமம் வராதா?”

இன்னும் நாம் எந்தப் படைப்பாளியிடமும் கேட்டுப்பார்க்கலாம் தோழர். யாரிடமும் பதில் இருக்காது. காரணம் சாமானியன் என்பதற்கான எல்லை நம்மிடம் இல்லை. ஓர் எடுத்துக்காட்டாக பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் அவர்கள் செய்த ஆய்வின்றைச் சொல்லலாம்.

பாரதியின் ‘அச்சமில்லை’ எனும் கவிதையை பல்கலைகழக மாணவர்களிடம் கொடுத்து அர்த்தம் கேட்கும் போது பல்வேறு பதில்கள் வந்தன என அவர் மொழியியல் நூலில் கூறியுள்ளார். ஏன் ஒரு கவிதை பலருக்கு பல அர்த்ததைக் கொடுக்கிறது. அதே போல மனுஷ்ய புத்திரன் ஒரு கட்டுரையில் சொல்கிறார், மிக எளிய பத்திரிகையின் தலைப்புச் செய்தி கூட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அர்த்தம் கொடுக்கும். ஆக, வாசிப்பு என்பது பல்வகைப்பட்டது. யாரையும் மனதில் நிறுத்தி நாம் இலக்கியம் வடிக்க முடியாது. மிக எளிதாகச் சொல்வதென்றால் , கோவிலில் உள்ள ஒரு நிர்வாணச் சிலை ஒருவனுக்கு கலையாகவும் ஒருவனுக்கு காமப்பொருளாகவும் தெரிகிறது இல்லையா? ஆனால், சிற்பியின் வேலை செதுக்குவது. அதற்கான சுதந்திரம் அவனுக்கு முழுக்க உண்டு. யார் ஒரு பிரிவினரையும் மனதில் வைத்துக்கொண்டு அவன் அக்கலையைச் செய்வதில்லை. காரணம் மனிதப் பிரிவுகளும் அவர்களின் சிந்தனைப் போக்கும் பூடகமானது.

அடுத்தது முக நூலில் நடக்கும் கூத்து பற்றி. ஒரு சிங்கத்தையும் ஒரு நாயையும் கற்பனை செய்யுங்கள். சிங்கம் தன் எதிராலியைப் பார்த்து ஓடுவதில்லை. முதலில் மெல்லியதாக ஒரு கர்ஜனை செய்யும். அது நீ போய்விடு என்பதற்கான அர்த்தம். அருகில் நிர்க்கும் மிருகம் தன் பலத்துக்கு ஒரு பொருட்டு இல்லை என்றால் பேசாமல் ஓய்வெடுக்கும். சிங்கத்தின் அருகில் நிற்கும் ஓநாய்கள் தயங்கி தயங்கி அது வைத்திருக்கும் இரையைப் பிடுங்க ஆர்ப்பாட்டம் காட்டும். சிங்கத்துக்கு அது குறித்து கவலை இருக்காது. அது தன் பலத்தை முழுமையாக நம்புகிறது. பொதுவாகவே எதிராளியைக் கண்டு துணுக்குறும் நாய்கள் குரைத்துக்கொண்டே இருக்கும். குரைப்பதன் மூலம் தன் பலத்தை நிரூபிக்க முயலும். அது ஓயாமல் குரைப்பதால் அக்கம்பக்கத்தாருக்குதான் தொல்லை. ஆனால் நாயைப் பொறுத்தவரை தான் ஒரு வீரன் என தன் எஜமானனுக்குக் காட்டிவிட்டது போன்ற ஒரு நினைப்பு இருக்கும். முக நூல் குரைச்சலும் அப்படித்தான். கருத்து இல்லாதவர்களிடம் மட்டுமே வெற்று கூச்சலும் அடாவடிப் பேச்சும் இருக்கும். அவர்கள் தங்கள் சத்தங்கள் மூலமாகவும், கிண்டல்கள் மூலமாகவும், வசைகள் மூலமாகவும் தங்கள் பலவீனத்தை மறைக்க நினைப்பர். அதற்காக நாம் பாவப்படுவோம். இதற்குப் பின்பும் அந்த வசைகள் தொடரும். தயவு செய்து அவர்கள் பலவீனத்தைப் பார்த்து கிண்டல் செய்ய வேண்டாம். பரிதாபப்பட்டு நமது வேலையைச் செய்வோம்.

கவனித்தீர்கள் என்றால், இப்போதுவரை நான் எந்த வசைக்கான பதிலையும் சொல்லவில்லை. நியாயமான முறையில் அணுகியவர்களுக்கு மட்டுமே விளக்கம் கொடுத்துள்ளேன். அதோடு இந்தச் சர்ச்சையால் எப்போதையும் விட வல்லினத்தை வாசிப்போரின் விகிதம் பல மடங்கு கூடியுள்ளது. இரண்டே நாளில் 3000 பேர். மகிழ்ச்சிதானே. அதேபோல புளோக்கிலும் வாசிப்போர் எண்ணிக்கைக் கூடியுள்ளது. புதிதாக முகநூலில் நண்பர்கள் வேறு இணைகிறார்கள். சர்ச்சைகள் நன்மைதான் செய்கிறது. ஆனால் நீங்கள் அறிவு தளத்தில் நிர்க்க வேண்டும். உங்கள் வாதங்களை மக்கள் கவனித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் உங்கள் அறிவை சர்வசாதாரணமாக எடை போட்டு விடுவார்கள். ஆக, ஒருபக்கம் நாம் நமது கருத்தை சொல்லிக்கொண்டே இருக்க, எந்தக் கட்டணமும் இல்லாமல் வல்லினம் ஒருசிலரால் பிரபலப்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது. எந்த விளம்பரமும் செய்யாத வேலையை ஒரு சர்ச்சை செய்யும்.என்னைத் திட்டுவதால் , என்ன நடக்கிறது என புளோக்கில் இணைந்த பலர் எனது வாசகர்களாகியிருப்பது இன்றுவரை நடந்துகொண்டே இருக்கிறது. எனது நூல்களையும் அவ்வாறு இணைந்தவர்கள்தான் அதிகம் வாங்குகிறார்கள். நண்பர்களாகவும் இருக்கிறார்கள். லாபம்தானே!

இதுதவிர வேறு என்ன செய்ய முடியும் குரைப்பவர்களால். அரசாங்கத்துக்குப் பெட்டிஷன் போடலாம். பொது அமைப்புகளிடம் முறையிடலாம். 2007லிருந்து இதையெல்லாம் சந்தித்துப் பழகிவிட்டது. அதுகுறித்தெல்லாம் நீங்கள் கவலை படாதீர்கள் தோழர். அடுத்த சில மாதங்களுக்கு இதுபோன்ற கதைகளைத் தொடர்ந்து பிரசுரிக்க முடிவு செய்துள்ளேன். உங்களால் முடிந்தாலும் தயங்காமல் எழுதி அனுப்புங்கள்.

 

எப்போதுமே எனக்கும் எனது நண்பர்களுக்கும் இருக்கும் கவலை இளம் தலைமுறையினர் இலக்கியம் என்பது ஏற்கனவே சொன்னதை மீண்டும் சொல்லிப்பார்த்தல் என்ற முறையோடு நின்றுவிடுவார்களோ என்பது  மட்டும்தான். உங்கள் கடிதங்களால் அந்தக் கவலையும் தீர்கிறது. எனக்கு இதனால் கவலை இல்லை .நீங்கள் வல்லினத்தை வாசிக்கிறீர்கள். கேள்வி கேட்கிறீர்கள். விளக்கம் பெருகிறீர்கள். விளக்கம் போதாவிட்டால் மீண்டும் கேட்கிறீர்கள். இதுதான் ஒரு இதழில் நடக்க வேண்டிய முக்கியமான பணி. இதற்காகவாவது வெளியில் குரைப்பவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். காரணம் அவர்கள் மூலமே நீங்கள் இங்கு வந்தடைகிறீர்கள். மற்றபடி இலக்கியச் சர்ச்சையில் வழக்கு – சட்டம் எனச் செல்வதில் எனக்கு எப்போதுமே உடன்பாடு இல்லை.

இறுதியாக ஆபாசமாக இருந்தாலும் கடவுளைக் கடவுளாகப் பார்க்கத் தெரிந்த உங்கள் தோழிக்கு இலக்கியப் பிரதியை இலக்கியப் பிரதியாகவே பார்க்க பழக்கப்படுத்தலாம் எனச் சொல்லுங்கள்.

தங்கள் நம்பிக்கைக்கு என் நன்றி.

(Visited 164 times, 1 visits today)

One thought on “இறுதியாக -தாய்மை என்பது புனிதமா? (கடிதமும் விளக்கமும்) – 5

  1. அடுத்த சில மாதங்களுக்கு இதுபோன்ற கதைகளைத் தொடர்ந்து பிரசுரிக்க முடிவு செய்துள்ளேன். உங்களால் முடிந்தாலும் தயங்காமல் எழுதி அனுப்புங்கள்.// 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *