ஒழுக்கமானவர்கள் போல உங்களையும் வல்லினத்தாரையும் ஏசிக்கொண்டிருக்கும் சிலரின் உண்மை முகத்தை காட்ட வேண்டும் போல. என் தோழியிடம் முக நூலில் எப்படிப் பேசினார்கள் என இந்த ஒழுக்கச்சீலர்களின் உண்மை முகத்தை வல்லினத்தில் காட்டுகிறேன். (எல்லாவற்றையும் சேகரித்து அனுப்பினால் வல்லினம் பிரசுரிக்குமா?)அதேபோல எனக்கு ஒரு விளக்கம் வேண்டும். தயாஜியின் சிறுகதையில் காளி என்ற பெண் தெய்வத்தின் மீது காமம் கொள்வது போல உள்ளது. இது முறையா? நீங்கள் என்ன செய்ய நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்தை எதிர்ப்பார்க்கிறேன். கடவுளின் மேல் காமம் கொள்வதுதான் நவீன இலக்கியமா ? அல்லது பின் நவீன இலக்கியமா?
santhalsanthal@gmail.com
தோழர், உங்கள் பெயரை நீங்கள் குறிப்பிட்டிருக்கலாம். நீங்கள் அனுப்பிய இணைப்புக் கிடைத்தது. இவ்வளவு ‘ஜொல்’ விடும் ஒழுக்கச் சீலர்கள்தான் இப்படி எம்பிக்குதிப்பார்கள் என எனக்கு அப்போதே தெரியும். உங்களின் சுய விபரம் இல்லை. உங்கள் தோழியின் விபரம் மட்டும் இருக்கிறது. அவர் இதை பொதுவில் பிரசுரிக்கச் சம்மதிப்பாரா என அறிய வேண்டும். ஒழுக்கம் குறித்து கூத்தடிப்பவர்களின் நாற்றம் இப்படிப் பொதுவில் சந்தி சிரிக்க வேண்டுமா என மட்டுமே யோசிக்கிறேன். இருக்கட்டும் அது குறித்து பிறகு யோசிப்போம்.
உங்கள் கேள்விக்கு வருகிறேன், அதற்கு முன் இந்தப் படத்தைப் பாருங்கள்.
இதைக் கண்டவுடன் நான் ஒரு வக்கிர புத்தியுள்ளவன் என நீங்கள் என்னைத் திட்டலாம். ஆனால், இது போன்ற சிற்பங்கள் கஜுராஹோ,கோனார்க் போன்ற இந்து கோயில்களில் காணக் கிடைக்கின்றன. அது மத்திய பிரதேசத்தில்தானே என நீங்கள் சொல்லலாம். ஆனால், இது மிக முக்கியச் சுற்றுலா தளமாகவும் இந்தியாவில் ஏழு அதிசயங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. கடவுளை வணங்கச் செல்லும் கோயிலுக்கு வெளிப்புறம் இப்படிப் பல சிற்பங்கள் இருக்கும் போது அதைப் பார்க்கும் இளைஞர்களின் மனம் கெட்டுப்போகாதா என ஏன் யாரும் கேட்பதில்லை. சிற்பத்தில் இருந்தால் அது கலை , எழுத்தில் இருந்தால் அது கொலையோ!
சரி, காளி கதைக்கே வருவோமே… ஆபாசம் அசிங்கம் எனப்பேசும் நாம் ஏன் காளிக்கு ஒரு சட்டை வாங்கி போட முயல்வதில்லை. நமது தொலைக்காட்சியில் ஒரு பெண் தனது திரட்சியான மார்பை வெறும் எலுமிச்சை மாலையில் மறைத்துக்கொண்டு வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? ஒன்று தொலைக்காட்சியை அடைப்பீர்கள் அல்லது மகனின் கண்களை மூடுவீர்கள் இல்லையா? ஆனால், கோயிலில் நாம் அது போல பார்க்கும் சிற்பங்களை ஏன் நம் குழந்தைகளுக்குத் தணிகைச் செய்ய மறுக்கிறோம்.
உங்களுக்கும் எனக்கும் தெரிந்து எல்லா கோயில்களிலும் பல பெண் சிலைகள் அரை நிர்வாணத்தோடுதான் நிர்க்கின்றன. ஏன் அவை ஆபாசம் என்று நாம் யாருமே போர் கொடி பிடிக்கவில்லை. மாறாக மதத்தைப் பற்றி பேசினால் கோபம் மட்டும் பொத்துக்கொண்டு வருகிறது. உடனே அவற்றுக்கு அறிவியல் காரணங்கள் கூற தொடங்கிவிடுகிறோம்.
இப்படி நம் முன் கோயில்களில் இருக்கும் அரை நிர்வாணச் சிலைகளைப் பார்த்து குழந்தைகளுக்கு ஒரு திகைப்பு வராது என நம்மால் உறுதி கூற முடியுமா? வீட்டில் எதை மறைக்கிறோமோ அதை கோயில்களில் தடையில்லாமல் காட்டுவது நமக்கே முரண்நகையாக இல்லையா? அப்படியானால் நாம் எதை மறைத்து எதை காட்ட நினைக்கிறோம். ஏன் இந்த நடிப்பு? யாருக்காக இந்த வேடம் ?
கடவுள் சிற்பங்களுக்கு நமது கோயில் ஆடை அணிவிக்காமல் கலை என வைத்திருப்பது சரியென்றால், அதைக் கண்டு முதிர்ச்சியடையாத மனம் காமம் கொள்வதும் சரிதான். அவளைக் காதலிப்பதும் சரிதான். ஒருவேளை தயாஜி தன் கதையில் அம்மனுக்குச் சாற்றிய சேலையை நீக்கிப்பார்த்து காமம் கொண்டான் எனச் சொல்லியிருந்தால் மதவாதிகள் கோபப்படலாம். இங்கு அப்படி ஒன்றுமே இல்லை. திறந்த மார்புடன் இருக்கும் காளியின் கவர்ச்சி முதிரா மனம் கொண்ட ஒரு இளைஞனை காமத்தில் குழப்புகிறது. காளி என்ற தெய்வம் குறித்த வரலாறைக் கேட்டதற்கு ஒரு நாள் கழித்து விக்கிப்பீடியாவில் குறிப்பெடுத்து தவறாகச் சொன்ன மேதைகளின் உளரலைக் கேட்டு குழம்பாதீர்கள் தோழர்.
அதோடு, கடவுளின் உடலை வர்ணிப்பது அவ்வளவு பெரிய குற்றமா என்ன? அப்படியானால் அந்தக் குற்றத்தை சௌந்தர லஹரியில் ஆதிசங்கரரும் செய்துள்ளார்.
‘மேகலை பொங்க மதாசல கும்பமெ னாமுலை கண்டு இடை சோரா ‘ என்கிறார்.
பொருள் : யானையின் மத்தகத்தைப் போன்ற பெரிய தனங்களைக் (மார்பு)கொண்டு சற்று வணங்கிய வடிவுடையவள்; மெலிந்த இடையையுடையவள்.
காம சக்தியை வசமாக்கிக்கொள்ள ஆதி சங்கரர் அம்மையை வணங்கச் சொல்லும் பாடலெல்லாம் உண்டு. அதற்கான மந்திரங்களும் உண்டு. சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும். கடவுளின் மேல் காமம் கொள்ளுதல் தமிழ் இலக்கியத்திலும் புதிதில்லை. ஆண்டாளின் பாடல்களை எடுத்துக்கொள்ளலாம்.
அதாவது ஆண்டால் கண்ணனைப் பார்த்து பாடும் பாடல்கள்.
‘அவரைப் பிராயம் தொடங்கி
ஆதரித் தெழுந்த என் தடமுலைகள்
துவரை பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுதேன்…’ என்கிறாள். பெரிய மார்பகங்கள் அவனுக்கே என உறுதிபடக் கூறுகிறாள் ஆண்டாள். அப்படியானால், இது ஆபாசம் இல்லையா? மேலும் ஒரு வரியைப் பார்க்கலாம்,
‘சாயுடைவயிறும் என் தடமுலையும்
திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்
தரணியில் தலை புகழ் தரக்கற்றியே’
ஆண்டாளுக்குதான் என்ன ஆசை . மேலேயும் கீழேயும் அவன் தடவிக் கொடுக்க வேண்டுமாம்!
உடனே நம்ம ஒழுக்க வாதிகள்..”அட..அவுய்ங்க பக்தியால தடவ சொல்றாங்கப்பா” என இழுக்கலாம். அப்படியானால் இன்னும் கொஞ்சம் பார்க்கலாம்.
‘பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப்
புணர்வதோர் ஆசையினால்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதூகலித்து
ஆவியை ஆகுலம் செய்யும்…
என் அகத்து இளம் கொங்கை விரும்பித்தாம் நாள்தோறும்
பொன்னாகப் புல்குவதற்கு என்புரிவுடமை செய்யுமினோ’
கடவுளுடன் உடல் உறவு கொள்ள வேண்டுமாம் ஆண்டாளுக்கு. அந்த ஆசை மனதில் மேலோங்கி வளர்ந்துவிட்டதால், மார்பகம் வருந்துகிறதாம், குதூகலிக்கிறதாம், உயிரை எடுக்கிறதாம், ஆகவே எதையாவது செய்து நாள்தோறும் நாராயணனைப் புணர்வதற்கு உத்தரவாதம் கொடுங்களேன் என்று ஆண்டாள் கேட்கிறாள்.
தயாஜி, இந்த அளவுக்கெல்லாம் போகவில்லை. பெண் கவி ஆண் கடவுளைப் புணர நினைப்பதை எட்டாம் நூற்றாண்டிலிருந்து பொறுத்துக்கொள்ளும் நாம், ஒரு நவீன எழுத்தாளன் காளியின் மீது காமம் கொள்வதைப் பொறுத்துக்கொள்ள மறுக்கிறோம். துடிக்கிறோம். இது நல்ல நடிப்பு இல்லையா? இப்படித்தானே தான் அறச்சீற்றம் உள்ளவன் என காட்டிக்கொள்ள வசதியாகும். ஆக, ஏற்கனவே உள்ள ஆபசங்களைப் பொறுத்துக்கொண்டு தொழுகிறோம். ஏற்கனவே உள்ள ஆபசங்களை பக்தி என பாடுகிறோம். ஆனால் ஒரு இளம் எழுத்தாளன் எழுதினால் கலாச்சாரம் கெட்டுவிட்டது இல்லையா?
நண்பர்களே கொஞ்சம் யோசிப்போம். அறிவீனமாகப் பேசுபவர்களை விடுங்கள். உங்கள் சுய அறிவைக்கொண்டு யோசித்துப்பாருங்கள். கடைசியாக ஆதவன் தீட்சண்யா கூறிய கருத்தொன்றை பதிவிடுகிறேன். குழப்பங்கள் கொண்ட உறவுமுறையை போதிக்கும் வேதத்தையும் மகாபாரதத்தையும்தானே நாம் இன்னமும் மதம் என்ற அடிப்படையில் கொண்டாடுகிறோம்.
1.”ரிக்வேதத்தில் அண்ணன் தங்கையரான யமன், யமி ஆகியோரைப் பற்றிய கதை ஒன்று உள்ளது. அந்தக் கதையின் படி யமி தன் அண்ணன் யமனைத் தன்னுடன் வருமாறு அழைக்கின்றாள். இதற்கு மறுக்கும் யமன்மீது அவள் கோபம் கொள்கிறாள். .. அக்காலத்தில் தந்தை மகளை மணப்பதும் வழக்கமாக இருந்துள்ளது. வசிட்டர் தன் மகள் சத்ரூபை பருவமெய்திய போது அவளை மணந்தார். மனு தன் மகள் இளையை மணந்தார். ஜானு தன் மகள் ஜானவியை மணந்தார். சூரியன் தன் மகள் உஷையை மணந்தான். …. தஹா பிரசெத்னியும் அவனுடைய மகன் சோமனும் சோமனின் மகள் மரீஷையைக் கூடினர். … தஷன் தம் மகளைத் தனது தந்தை பிரமனுக்கு மணம் முடித்தான்….” (ரிக்வேதம், மகாபாரதம் போன்றவற்றிலிருந்து)
2. “தாய், மகள், சகோதரி – எப்பெண்ணுடனும் தனியிடத்தில் அமர்தல் கூடாது. புலன்கள் ஆற்றல் வாய்ந்தவை அறிவாளியையும் வெற்றிகொள்ளும்” என்கிற மனுஸ்மிருதியின் உத்தரவு அன்றிருந்த நிலைமையை விளக்கப் போதுமானது.
– பண்டைய அமைப்புமுறை: ஆரிய சமூகத்தின் நிலை, டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும், தொகுதி 7 பக்கம் 12 மற்றும் 389
நன்றி : ஆதவன் தீட்சண்யா