தன் தாயையே காம நோக்கோடு பார்த்ததற்காக தன் தவறை உணர்ந்து தொடக்கத்திலேயே தாயிடம் மன்னிப்பு கேட்கிறான். அப்படி மன்னிப்பு கேட்கும் போது தான் எப்படி இந்த காரியத்தை செய்யத் துணிந்தேன் என்பதை அன்றைய நாளில் தான் பார்த்த புளூ பிலிமை காரணம் காட்டுகிறான். மனசாட்சியின் கோரப்பிடியில் சிக்கி, சித்திரவதை அனுபவிக்கும் அவன் தான் பார்த்த புளூ பிலிமில் கண்ட காட்சிகளை அணு அணுவாக ரசித்து தாயிடம் விளக்குவது ஏன்?
//அவளை தூக்கி தன் இடுப்பில் வைத்துக் கொண்டு அவள் நேரே நீண்ட நாற்காலியில் வைக்கிறான். இருவரும் சட்டைகளை அவிழ்க்கிறார்கள். நினைத்தது போலவே அவளின் இடது வலது ரிப்பனை அவள் அவிழ்க்கிறாள்// படிக்கும் வாசகர்களுக்கு கிளர்சியூட்டுவது போன்ற இந்த வரிகள் இந்த இடத்தில் அவசியம் தானா?
//கணவனை விட காதலனுக்குத்தானே பெண்ணுடம்பில் உரிமை அதிகம். என் உரிமை// இந்த வரி அவனின் தனிப்பட்ட ‘statement’ என்று வைத்துக்கொண்டாலும், அது தவறா? சரியா? என்று அவன் உணர்வது போல் கதையின் முடிவு வரை எங்கும் கூறப்படவில்லை. இந்த வரியைப் படிக்கும் வாசகர்களுக்கு வல்லினம் கூறவரும் வருவது என்ன? இந்த வரி குறித்த உங்களது நிலைப்பாட்டை தெரிவிக்கவும்.
இந்தக் கதையில் ஆங்காங்கே “மூத்திரம் வருகிறது” என்று கூறப்படுவதற்கு காரணம் அவன் பயப்படுகிறானா?
//காதலனை இப்படி பழிவாங்குதல் முறையோ சொல்லு. இத்தனை காலம் உன்னை மறந்திருந்தது தவறுதான். இனி நீதான் எனக்கு எல்லாம் வாயேன் காளி. சீக்கிரம் வாயேன். உன் மார்பில் சூழ்ந்திருக்கும் மண்டையோடுகளை கழட்டு. என் முகத்தினை அதில் பதிக்கிறேன். உன் திறந்த மார்புகளை என் தோளால் போர்த்துகிறேன். கையில் இருப்பதையெல்லாம் தூக்கியெறிந்துவிடு. காதலை தாங்கிப்பிடி. கண்ணில் இருக்கும் குரோதங்களை தூக்கியெறியலாம். காமத்தை விதைக்களாம்./ பயந்தவன் இப்படி கூறுவானா? பின் காளி வருகிறாள் என்ற போது எதற்கு மூத்திரம் வருகிறது?
பயத்தினாலா?
மொத்தத்தில் அந்தக் கதாப்பாத்திரம் தன் தவறை உணர்ந்தானா இல்லையா என்று எனக்கு புரியவில்லை. உணர்ந்தான் என்றால் எந்த இடத்தில் உணர்ந்தான்?
விளக்கமளிக்க வேண்டும்…
இன்றைய காலத்தில் பேஸ்புக் போன்றவற்றை சர்வ சாதாரணமாக 18 வயதிற்குக் குறைவானவர்கள் கூடப் பயன்படுத்துகிறார்கள்… இந்தக் கதையை வல்லினம் தவிர பொதுவில் (பேஸ்புக்கில்) வெளியிட்டுள்ளதால் அவர்களும் படிக்கும் வாய்ப்பு இருக்கின்றது. இந்த கதையிலுள்ள காம ரசனைகளைத் தாண்டி, மையக்கருத்தை புரிந்து கொள்ளும் அளவிற்கு அவர்களுக்கு பக்குவம் இருக்குமா? – நன்றி
Phoenix Dassan
உங்கள் நீண்ட கடிதத்தைச் சுருக்கியுள்ளேன்.
ஒரு சிறுகதை என்பது, நீங்கள் வாசித்துப் புரிந்துகொள்ள வேண்டியது. ஒரு கதை உங்களுக்கு ஒன்றாகவும் எனக்கு ஒன்றாகவும் காட்சி கொடுக்கலாம். கதை மட்டுமல்ல தோழர், எந்தக் கலை வடிவமும் அப்படித்தான். நீங்கள் என்னிடம் நேரடி விவரங்களைக் கேட்டால் அதை நீங்கள்தான் வாசிப்பின் மூலம் அடைய வேண்டும் என்பதுதான் பதில்.
முதலில் கழிவறையில் ஒருவன் மாட்டிக்கொள்ள முடியுமா? மாட்டிக்கொண்டதாகதான் கதை தொடங்குகிறது. அதுவும் மலக்குழியில் தலை மாட்டிக்கொண்டதாக. இது சாத்தியமா? இல்லை என்பது குழந்தைக்குக் கூடத் தெரியுமே. இது ஒருவகை மனப்பிறழ்வு நிலை என வாசிக்கும் போதே உங்களுக்குப் புரியவில்லையா? ஒரு மனம் பிறழ்ந்த நிலையில் நீங்கள் எந்த நியாயத்தைத் தேடப்போகிறீர்கள். களைந்து கிடக்கும் மனம் எதை வேண்டுமானாலும் யோசிக்கும், பேசும் என்பது மட்டுமே நிதர்சனம். அப்படியிருக்க கதையில் அதன் நியாயம் என்ன? இதன் நியாயம் என்ன என்றுக்கேட்டால் அதை உங்கள் வாசிப்பின் மூலம் அறிந்துகொள்ளுங்கள் என்பதே பதில்.
மற்றபடி என் வாசிப்பில் எந்தக் கிளர்ச்சியும் இந்தக் கதை ஏற்படுத்தவில்லை. உங்களுக்கு ஏற்படுவதால் நான் என்ன செய்ய முடியும்? சிலர் ஆடுகளைக் காமம் கொண்டு புணர்ந்தனர் எனக்கூட கேள்விப்படுகிறேன். அதற்காக அவற்றுக்கு சட்டையா தைத்து போட்டு சுற்றி உள்ளவர்களின் காமத்தை அடக்க முடியும்? உணர்வுகள் அவரவர் மனநிலையைச் சார்ந்தது. நீலப்படங்களைப் பார்த்து வாந்தியெடுப்போறும் நம்மில் உண்டுதானே. ரம்பாவின் தொடையைப் பார்த்ததும் கிளர்ச்சி வருவதாக என் நண்பன் ஒருவன் கூறுவான். ஆனால் அவன் வாழ்ந்த சீனக் கம்பத்தில் அதை விட குறைவான உடையில்தான் சீன சகோதரிகள் வாழ்வார்கள். அவருக்கு ஏன் அது கிளர்ச்சியை ஏற்படுத்தவில்லை என கடைசிவரை அவருக்கே தெரியவில்லை. அத்தனையும் மனதின் பலவீனம் சார்ந்தது தோழர்.
அடுத்ததாக, உங்கள் கவலை விசித்திரமாக உள்ளது. ஃபேஸ் புக்கில் இந்தக் கதையைச் சிறுவர் படித்துவிடுவார்கள் என பயப்படும் நீங்கள், பேஸ் புக்கில் பகிரப்படும் ஆபாசப்படங்கள் குறித்து ஏன் கவலை படவில்லை, ஆபாசப்படத்தைவிட அருவருப்பான ஆசைவுகள் கொண்ட நடிகைகளின் படங்கள் பதிவேற்றம் செய்யப்படுவது குறித்து ஏன் கவலைப்படவில்லை? மிக எளிதாக ஆபாசப் படங்களைப் பார்க்க முடியும் கட்டற்ற இணைய பயன்பாடு குறித்து ஏன் கவலைப்படவில்லை? முதலில் இதற்கான பதிலைத் தேடுங்கள். ஒரு இலக்கியப்பிரதி மட்டும் புனிதமாக இருக்க வேண்டும். மற்ற எல்லாமும் எப்படியும் இருக்கலாம் என நினைக்கிறீர்களா? நான் உங்களிடம் கோபப்படவில்லை தோழர். இது குறித்து கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் என்கிறேன்.
முகநூலில் உலாவ சுதந்திரம் பெற்ற ஒரு சிறுவனுக்கு ஆபாசப்படங்களை பதிவிறக்கி பார்ப்பதெல்லாம் சாதாரண காரியம் இல்லையா? அதோடு முக நூலில் குவிந்திருக்கும் செக்ஸ் சார்ந்த ஏராளமான குழுவுடன் தன்னை இணைத்துக்கொள்வதும் எளிது இல்லையா? கொஞ்சம் யோசிப்போம் தோழர்.
தயவு செய்து அடுத்தமுறை கேள்வி கேட்கும் முன் உங்களிடமே பதிலைத் தேடிப்பாருங்கள். நிச்சயம் கிடைக்கும்.