முப்பத்தைந்தாவது மது புட்டியைக் காலியாக்கிய களிப்பில் நண்பன் கேட்டான். “பிரபாகரன் இன்னும் இருக்காராடா?” சுற்றியிருந்த நண்பர்கள் என் பதிலுக்கு ஆவலாகக் காத்திருந்தனர். கோலாலம்பூரில் வசிப்பதாலும் இதழ் நடத்துவதாலும் உலகின் அத்தனை மர்மங்களுக்கும் என்னிடம் விடை உண்டு என்பது அவர்கள் கணிப்பு. என் பதிலுக்குக் காத்திருக்காமல் இன்னொரு நண்பன் “அவரு எப்படிடா சாவாறு… திரும்ப வருவாருலா ஜோ. பெரச்சன கொடுப்பாரு. தமுலன்னா சும்மாவா” என குரலை உயர்த்தினான். அழுத்தம் திருத்தமான நண்பனின் பேச்சு நெடுநாளைக்குப் பின் ஒட்டுமொத்தமான வெற்றிக்கூச்சலை நண்பர்களிடமிருந்து கேட்க உதவிசெய்தது. முன்பு கேள்வி எழுப்பிய நண்பன் என்னையே கூர்ந்து பார்த்தபடி இருந்தான். அவனுக்கு என் பதில் தேவைப்பட்டது. “அவர் இருந்தா என்ன… இல்லனா என்ன… உங்களுக்கு இப்ப பிரபாகரனோட தேவை என்ன?” என் பதில் பல நாட்களுக்குப் பிறகு தீபாவளிக்குக் கெடாவில் குழுமியிருந்த பல நண்பர்களையும் கோபமடைய வைத்தது. அடுத்த நிமிடமே நான் ஒரு தமிழின துரோகியின் மதிப்பீட்டோடு நண்பர்கள் முன் வீற்றிருந்தேன்.
பத்து வருடங்களுக்கு முன் ஏற்பட்ட தகராறுக்குப் பின் என் திருமண அழைப்பிதழை கொடுத்துவர மீண்டும் காலடி எடுத்துவைத்த லுனாஸின் அப்பகுதியில் மீண்டும் இரத்தம் சிவக்குமோ எனும் அச்சம் எங்கள் எல்லோருக்குள்ளும் பரவியது. நண்பர்களில் அதிக போதையில் இருந்த இருவர் ஆரவாரத்துடனும் இனப்பற்றுடனும் பேசத்தொடங்கினர். மீண்டும் பிரபாகரன் வரவேண்டும் என்றும் போர் நடக்க வேண்டும் எனவும் அதன் மூலம் தமிழீழம் கிடைக்கப்பெற்று தமிழர்கள் அனைவரும் இலங்கை சென்றுவிடலாம் என்றனர்.
ஏறக்குறைய போதையில் இருந்த நண்பனின் கருத்தைதான் நான் திருமண அழைப்பிதழைக் கொடுக்கச்சென்ற பல்வேறு துறையில் உள்ளவர்களும் வெவ்வேறு வகையான தொனியில் கூறினர். எல்லா தமிழர்களும் ஏதோ ஒரு புள்ளியில் ஈழத்தமிழர் துயருடன் தம்மை இணைத்துக்கொள்ளவே செய்தனர். அப்படி பேசும் நண்பர்களிடமெல்லாம் அலுவலகத்திலும் வேலையிடத்திலும் அவர்களுக்கு நிகழும் சுரண்டல்கள் பற்றி விசாரித்து வைத்தேன். அண்மையில் மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறைக்கு நிகழ்ந்த நெருக்கடி தொடர்பாக அவர்களின் பார்வையை உள்வாங்கிக்கொண்டேன். அரசாங்கத்துறையில் இருந்தவர்களிடம் மலாய்காரர்களின் மேலாதிக்கம் தொடர்பாக கருத்துகள் சேகரித்தேன். ஆக மொத்தத்தில் திருமண அழைப்பிதழ் ஒழுங்காகக் கொடுத்தேனோ இல்லையோ சமூகத்தின் பல்வேறு துறைகளில் தங்களைப் பிணைத்திருக்கும் தமிழ் மக்களின் சமூக அரசியல் விழிப்புணர்வை!? ஓரளவு உள்வாங்க முடிந்தது.
ஈழத்தில் மீண்டும் போர் நிகழ வேண்டும் என விரும்பும் நண்பர்களிடம் ஏறக்குறைய ஒரே வகையான கேள்விகளைக் கேட்டு வைத்தேன். ஒரு வசதிக்காக அவற்றை பின் வருமாறு தொகுத்துப் பட்டியலிடுகிறேன். எனது தொடர் கேள்விகள் வழி நண்பர்களின் பதில்களையும் உங்களால் ஊகிக்க முடியும்.
அ. உங்கள் வேலையிடத்தில் உங்களுக்கு நடக்கும் சுரண்டலைத் தட்டிக்கேட்கத் திரணியில்லாத நீங்கள் இன்னொரு தேசத்தில் இருக்கும் தமிழன் போரால் அழிய வேண்டும் என நினைப்பது எந்த தார்மீகத்தில்?
ஆ. வருடத்திற்கு ஒருமுறை ஈழத்துக்காக நீங்கள் கொடுத்ததாகக் கூறும் பணம் இன்று ஈழத்துச் சகோதரிகள் பாலியல் வல்லுறவால் இறக்கும் போதும், குழந்தைகள் கொடுமையால் சாகும் போதும், போராளிகளின் கண்கள் தோண்டப்பட்டப்போதும் எள்ளலவாவது உதவியதா?
இ. இந்த நாட்டில் (மலேசியாவில்) உங்கள் கண் முன் தமிழ்மொழி அழிப்புக்கான எல்லா திட்டங்களும் சூட்சுமமாக நடந்து கொண்டிருக்கும் போது (எஸ்.பி.எம் சோதனையில் தமிழ் இலக்கியத்தின் நிலை, இந்திய ஆய்வியல் துறையில் ஊடுறுவியுள்ள அரசியல், தமிழ்ப் பள்ளிகளின் நிலை…) குரல் எழுப்பவோ குறைந்த பட்சம் அதைப்பற்றி அறிந்து கொள்ளவோ நேரம் இல்லாத நீங்கள் ஈழத்தில் இன்னொரு தமிழன் போராட வேண்டும் என நினைப்பது உங்கள் இயலாமையைச் சரிகட்டவா?
ஈ. ‘சோரி…நான் அரசாங்க வேலையில் இருக்கிறேன்’ எனக்கூறி உங்களை நீங்கள் ஒரு பாதுகாப்பான வளையத்தில் சுருட்டி வைத்து, அதிகாரத்திடம் எல்லா சமரசங்களையும் செய்து கொண்டு, உங்கள் குரலை கேட்க முடியாத மகிந்த ராஜபக்சே மீது மலம் கழிக்கப்போகிறேன் என்பதும், அறம் பாடுவதும், அரைக்கூவல் விடுவதும் அற்பமான நாடகமில்லையா?
உ. தமிழ், இனப்பற்றாளரான நீங்கள், உங்கள் பிள்ளைகளை இந்நாட்டின் தமிழ்ப்பள்ளிகளில் சேர்க்காதது ஏன்? வீட்டில் சொல்லிக்கொடுப்போம், டியூஷனுக்கு அனுப்புவோம், எனும் உங்களின் சாக்குப்போக்குகளால், ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் போதாமையின் காரணம் சொல்லி பல பள்ளிகள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியிருப்பது உங்களைப் போன்ற மேட்டுக்குடி மனப்பான்மையினால்தானே. இந்நாட்டில் நீங்களும் ஒரு மகிந்த ராஜபக்சே என்பதை அறிகிறீர்களா?
ஊ. உங்களால் (மலேசியர்களால்) உங்கள் தேசத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியவில்லை என்பதற்காக… உங்களை நோக்கி வரும் அதிகாரத்தை எதிர்க்க முடியவில்லை என்பதற்காக… எதிர்க்கும் பட்சத்தில் வேலை பறிபோய்விடலாம், பதவியிறக்கப்படலாம், சிறையில் அடைக்கப்படலாம் என்பதற்காக… இன்னொரு தேசத்தில் தமிழன் போரிட்டுக்கொண்டே நித்தம் நித்தம் உடமைகளையும் உயிரையும் இழக்க வேண்டும் என்பதும் அதன் காத்திரத்தில் இழந்து போன உங்கள் மானத்தை சமன் செய்து கொள்ள முயல்வது சுயநலம் இல்லையா?
எனது கேள்விகளுக்குப் பல நண்பர்களிடம் பதில் இல்லை. எனக்குச் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் எனது திருமணம் குறித்து விசாரிக்கத் தொடங்கிவிட்டனர். ஒவ்வொருவரும் அந்தப் பேச்சைவிட்டு நகர்ந்து செல்லவே விரும்பினர். தமிழீழம் குறித்தான பேச்சு இப்போது ஒருவகை அசூசையை அவர்களுக்கு ஏற்படுத்தியது. உண்மையில் எனது கேள்விகள் ஒரு பக்கம் சார்ந்தவைதான். எல்லாத் தர்க்கங்களைப் போலவே ஈழப்போருக்கும் பல்வேறு வகையான பக்கங்கள் உண்டு. எனது கேள்விகளுக்கு நேர் எதிரான கேள்விகள் என்னிடமே கூட உண்டு. ஆனால் அரைவேக்காட்டுத்தனமாய் ஈழம் குறித்து பேசுபவர்கள் அவற்றை கருத்தில் எடுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள். அவர்களின் வாழ்வு பற்றி மட்டுமே கவலைப்பட அவர்களுக்கு நேரமுண்டு.
தமிழர்களுக்குத் தனிநாடு இருக்க வேண்டும் என்பதும் அதன் விஸ்தாரமான வெளியில் தமிழ்மொழி ஆட்சி செலுத்த வேண்டும் என்பதும் தமிழர்களின் தொன்மையான மரபு அதில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும் உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனின் எதிர்ப்பார்ப்பு. அதிலும் குறிப்பாக தான் வாழ்ந்த மண்ணையும் அதன் பாரம்பரியத்தையும் மீட்டெடுக்க நடத்தப்படும் போராட்டம் அறம் சார்ந்ததுதான். இந்த நியதியின் படி இந்நாட்டில் தமிழின் வேர் அசைக்கப்படும் போதெல்லாம் அதிகபட்சம் அறிக்கை விடுவதைத் தவிர வேறென்ன செய்தோம். அரசால் வெளியிடப்படும் சுற்றுச்சூழல் குறுந்தட்டில் ஆங்கிலம், மாண்டரின், ஜப்பான், கொரியா, அரபி, ரஷ்ய மொழி இருக்க தமிழுக்கு இடமில்லாமல் போனதைத் தட்டிக்கேட்க இறுதியாய் புக்கிட் பிந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் குய் லூன் வர வேண்டியுள்ளது. (மலேசிய நண்பன், 27.10.09)
பிற நாடுகளைப் போலல்லாமல் மலேசியா, சிங்கப்பூரில் தமிழ் வளர்வதற்கும் வாழ்வதற்கும் உறுதியான சட்டங்களும் அமுலாக்கங்களும் உள்ளன. ஒன்றிணைந்து அவற்றை தொடர்ந்து நிலை நிறுத்த மலேசியத் தமிழர்களுக்குத் மனவலிமையும் பொதுநல சிந்தனையும் ஆக்ககரமான செயல்திட்டங்களும் தேவைப்படுகிறது. மற்றபடி மொழிக்கும் இனத்துக்கும் துரோகம் செய்துவிட்டு மற்றுமொரு போர் மூலம் தமிழீழம் கிடைக்க வேண்டுமென, உணர்ச்சிப்பொங்கும் தமிழக அரசியல்வாதிகளின் தோரணையில் பேசுபவர்களுக்குக் காட்ட என் கரங்களில் ஒரு விரல் மட்டும்தான் உள்ளது.